அறைக்கு சென்ற ரிசாத்பவன் படுக்கையில் படுத்தான். அவன் எண்ணத்தில் வந்த பவிதா, ஸ்ரீநிதி காதலை பற்றி கூறியதே நினைவில் வந்து அவனை பாடாய் படுத்தியது.
நான் உன்னை காதலிக்கிறேன். நீ உன்னோட ப்ரெண்டு என்னை காதலிக்கிறா. நான் அவள் காதல் தெரியாமல் இருக்கிறேன்னு கோபப்படுற. உனக்கு கொஞ்சம் கூட என் மீது ஈர்ப்பு வரலையா? அவன் கண்கள் கலங்கியது.
ஸ்ரீநிதி.
நான் அவளை பார்த்ததேயில்லை. ஜெகா அவளிடம் வம்பு செய்தானா? பவி, நான் படித்த கல்லூரியில் தான் நீ படித்தாயா? எனக்கு மட்டும் எதுவுமே தெரியல..
ஒருவேளை பவியையும் என்னோட ப்ரெண்ட்ஸ் வம்பு செஞ்சிருப்பாங்களோ? அதனால் தான் என்னிடம் கோபமாகவே பேசுறாளோ? சிந்தனையுடன் இருந்தான்.
கண்ணை மூடி உறங்க அவன் முற்பட, அழுத ஸ்ரீநிதியின் உருவம் வரவும் விரைந்து எழுந்து அமர்ந்தான்.
அந்த பொண்ணு சொன்னது போல ஷாலினி பொண்ணை நான் எதுவும் செய்யலைன்னு தான் எனக்கும் தோணுது. அதை டாட் ப்ரூப் பண்ணுவாரா? எண்ணியவாறு அவனறைக்குள் இருந்த மியூசிஸ் பொருட்கள் வைத்திருந்த இடத்திற்கு சென்றான்.
காரை எடுத்த ஜோ நேராக மனநல காப்பகம் சென்றான். அவர்கள் பின்னே ஆட்டோவில் ஸ்ரீநிதியை இந்த ஒரு வருடமாக பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி அவளுடன் வந்தார்.
மருத்துவரிடம் ஸ்ரீநிதியை அழைத்து சென்றனர். அவள் புகழ் இறந்ததை எண்ணி அழுது அழுது சோர்வுடன் இருந்தாள். அவளிடம் மருத்துவர் பேசிய பின், நீங்க வீட்டுக்கு கிளம்பலாம். இன்று ரொம்ப சோர்வா இருக்காங்க. அவங்களை முழுதாக பரிசோதிக்கணும். நாளை காலையே வந்துருங்க என்று சொல்லி பவிதாவை பார்த்து, “நீங்க வெளிய இருங்க” பவிதாவையும் ஸ்ரீநிதியையும் அனுப்பி விட்டு, ஜோ, பனிமலரை பார்த்தார்.
பெரிய பிரச்சனையா டாக்டர்? ஜோ பதட்டமுடன் கேட்டான்.
நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அவங்க மனம் சோர்ந்து இருக்கு. அவங்க தோழன் இறப்புக்கு அவங்க தான் காரணம்ன்னு இப்ப யோசிக்கிறாங்க. அதுமட்டுமல்லாமல் இப்பொழுதும் ரிஷி சார் பற்றி தான் பேசுனாங்க. நீங்க அவருக்கு இவங்கள கல்யாணம் பண்ணுங்களேன். அவங்க மனசு மாறும்ன்னு தோணுது..
டாக்டர், “அவன் பொறுப்பே இல்லாதவன். என் அக்காவை யாருன்னே தெரியாதுன்னு சொன்னவன்” ஜோ சினமுடன் சொல்ல, அவங்க மனநிலையை மாற்ற அவரால் தான் முடியும்ன்னு தோணுச்சு. ஜஸ்ட் ஐடியா தான் சொன்னேன். உங்கள் விருப்பம்..
வேற ஏதாவது பண்ணலாமா டாக்டர்?
அவங்க மனநிலை மாறணும் மேம். அவங்களோட இறந்த தோழனை மறந்து ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தணும். பார்த்துக்கோங்க..
“அவங்க உடல்நலத்திற்காக இதை கொடுங்க” மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு, அவங்க நல்லா தூங்கணும். அப்ப தான் சோர்வு குறையும்..
அவர் எழுதி கொடுத்ததை வாங்கி விட்டு ஜோவும் அவன் அம்மாவும் வெளியே வந்தனர். பவிதா பேசிக் கொண்டிருக்க ஸ்ரீநிதி ஓரிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா வா நாம வீட்டுக்கு போகலாம்” ஜோ அழைக்க, பனிமலரை பார்த்து, “ம்மா..அத்தை, மாமாவை பார்க்க போகலாமா?” கேட்டாள்.
அத்தை, மாமாவா? பவிதா சிந்திக்க, முதல்ல ரெஸ்ட் எடும்மா. புகழ் வீட்டுக்கு போகலாம்.
இப்ப அதுல என்ன இருக்கு? ஜோ பவிதாவை முறைத்து, அக்கா இன்று நம்ம வீட்ல ஓய்வெடுக்கிறோம். நாளை அத்தை, மாமாவை பார்க்க போகலாம்.
ம்ம்!
வீட்டிற்கு அவளை அழைத்து சென்றனர். வீட்டிலும் அவனுடைய நினைவுகள் ஸ்ரீநிதியை மிகவும் வாட்டியது. மாலை எழுந்த ஸ்ரீநிதி புகழுடன் எடுத்த புகைப்படம், அவனும் அவளும் சேர்ந்து படித்த புத்தகங்கள், அவனுடைய ஆடை எல்லாவற்றையும் பார்த்து அழுது கொண்டே இருந்தாள்.
ஜோவும் அவனுடைய அம்மாவும் தங்களது கார்மென்ட்ஸிற்கு விடுப்பு எடுத்திருந்தனர். ஜோ கல்லூரி முடிந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அம்மாவுடன் சேர்ந்து சிறிய அளவிலான “மலர் கார்மென்ட்ஸை” நிர்வகித்துக் கொண்டிருக்கிறான்.
அவர்களாலும் ஸ்ரீநிதியை சமாதானப்படுத்த முடியவில்லை. புகழ் அதிகம் செல்லாத இடம் பவிதாவின் வீடு தான். தாத்தாவிற்கு ஸ்ரீநிதியை பிடிக்காது என்பதால் அவளையும் அங்கே செல்ல விடமாட்டான். அவனும் செல்ல மாட்டான். பவிக்காக சென்றாலும் தங்க மாட்டார்கள்.
ஆனால் தாத்தாவிற்கு புகழ், ஜோவையும் ரொம்ப பிடிக்கும். புகழின் இழப்பு அவருக்கும் பெரிய வலி தான்.
அம்மா, “அக்காவை வீ வீட்டுக்கு அழைத்து செல்லலாம். இரு நாட்கள் மட்டும் நன்றாக ஓய்வெடுத்துட்டு வரட்டும்” ஜோ கூற, அவன் அம்மாவின் முகம் மாறியது.
“சரி” அவர் அரைமனதாக ஒத்துக் கொண்டு, “நான் பவி தாத்தாவிடம் பேசிட்டு சொல்றேன். அழைச்சிட்டு போ” அலைபேசியை எடுத்து பேசி, ஸ்ரீநிதி இரு நாட்கள் பவி வீட்டில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கியமாக அவளுக்கு புகழின் எண்ணம் வரக் கூடாது என்று பார்த்து பார்த்து செய்தனர்.
மதிய உணவுக்காக மியூசிக் அறையிலிருந்து வெளியே வந்த பவன் சாரி சாரி..இனி அவன் பவன் இல்லை ரிஷி..மக்களே!
அலைபேசியுடன் உணவுண்ண கீழே வந்தான் ரிஷி. மான்விழி தன் கணவன் மற்றும் பாட்டிக்கு உணவை பரிமாறியவாறு பேசிக் கொண்டிருந்தார்.
ரிஷியை பார்த்து அவர் பேச்சை நிறுத்த, பாட்டி அவனை பார்த்து விட்டு பார்க்காதது போல, “ஐய்யோ..என்னம்மா இப்படி சொல்ற? அந்த புள்ளைக்கே இன்னும் பைத்தியம் தெளியாமல் இருக்கு”.
“அத்தை” அவர் அழைக்க, “நானா சொன்னேன்? உன்னோட தங்கச்சி நள்ளூ தான சொன்னா?” தன் மகனை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்தார்.
ரிஷி அமரவும் உணவை அவனுக்கு எடுத்து வைத்துக் கொண்டே, “அத்த உங்களுக்கு நள்ளூவை பத்தி தெரியும் தான? அப்புறம் அவ சொல்றதை எதுக்கு பெருசா எடுத்துக்கணும்?”
“டாட்” ரிஷி உணவை பிசைந்து கொண்டே சந்திரமுகனை பார்த்தான். அவரும் மற்றவர்களும் பேச்சை நிறுத்தி அவனை பார்த்தனர்.
“டாட்” பவிதா மேம் வீட்ல டிரைவர் வேலை பார்த்துட்டு அவங்க தாத்தாவையும் பார்த்துட்டு இருந்தேன். நான் போகவா? கேட்டான்.
டிரைவர் வேலையா? மான்விழி கண்கலங்கி தன் மகனையும் கணவரையும் பார்த்தார்.
டிரைவர் வேலை என்ன கொலைகுத்தம் பண்றவேலையா விழி? சந்திரமுகன் மனைவியை ஏறிட்டார்.
இவனுக்கு இவனையே பார்த்துக்க தெரியாது.
மாம், நான் சின்னப் பையன் இல்லை. கிளம்பணும்..
இனி நீ போக வேண்டாம். உனக்கு பதிலாக நம்ம நம்பிக்கைக்குரிய ஆள் போவாங்க.
வொய் டாட்?
சிசிடிவி கிடைக்கலை. ஸ்ரீநிதி சொல்றது உண்மையாக தான் இருக்கும்ன்னு என் மனசு சொல்லுது.
டாட், நான் சொன்ன போது நீங்க நம்பலை. ஒரு பொண்ணு அழுதுகிட்டு சொல்றா நம்புறீங்க…
“அவ அழுததால நான் நம்பினேன்னு சொல்றீயா? இல்லை அவளுக்கு உன் மீதான காதல் தான் சொன்னது நீ தவறு செய்யவில்லை என்று. நான் காதலை மதிப்பவன். நம்புபவன்”.
எனக்கு அந்த பொண்ணே யாருன்னு தெரியாது..
“அதான் இப்ப தெரிஞ்சிருச்சுல்லப்பா” பாட்டி கேட்க, “தெரிஞ்சு ஒன்றுமில்லை பாட்டி. எனக்கு அந்த பொண்ணை பிடிக்கலை” சத்தமிட்டான் ரிஷி.
பவன் சென்று அவனுள் ஒரு வருடமாக உறங்கிக் கொண்டிருந்த ரிஷி வெளியே வந்தான்.
“பிடிக்கலையா? ஏன் பிடிக்கலை ரிஷி? எனக்கு நிதியை ரொம்ப பிடிச்சிருக்கு” மான்விழி அவர் கனவில் சென்று அவனிடம் பேசத் தொடங்கினார்.
“உன் மேல எவ்வளவு அக்கறை? உன்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்கிற பொண்ணு. உன்னை நல்லா பார்த்துப்பா. நீ சந்தோசமா இருப்ப” சொல்லிக் கொண்டே இருவரும் சேர்ந்து வாழ்வது போல கற்பனையை உருவாக்கி அவர் பேசிக் கொண்டே சென்றார்.
“மாம்” முதலில் மெதுவாக அழைத்தவன். “ஸ்டாப் இட்” கத்தினான். மான்விழி மிரண்டு கற்பனை கலைந்து சிலையாகி நின்றார். உறக்கத்திலிருந்து விழித்த தன்வி கீழே வந்து கொண்டிருந்தாள்.
“என்ன பேசுறீங்க? அந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. இன்னும் சரியாக கூட இல்லை. என் அளவிற்கு கலரும் இல்லை. அவளால எல்லாரும் கஷ்டம் தான் படணும்” சொல்லி அவன் முடித்து..”ஆ..”கத்தினான்.
ஸ்ரீநிதியை பற்றி ரிஷி தவறாக பேசவும் வேகமாக ஓடி வந்து அவள் கையை இறுக்கி அவன் வயிற்றில் ஓங்கிக் குத்தினாள் தன்வி.
“தனும்மா” எல்லாரும் அதிர, அவள் அம்மா நளினியும் வந்தார்.
இதுக்கு மேல நிதுவை பத்தி ஏதாவது பேசின. கத்தியால உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன்..
உன் கலர் இல்லை..ம்ம்ம்..இது தான் நிதுவோட முதல் பிரச்சனை. இதனால் தான் உன் பக்கம் கூட வராமல் இருந்தாங்க.
அப்புறம் என்ன பைத்தியக்காரியா? கண்ணீருடன்…பைத்தியம் தான்டா…உன் மேல..
உனக்காக ஒருத்தி வாழணும்ன்னா அது நிதுவால மட்டும் தான் முடியும்..
பிக்ம்மா, உங்க சீமந்த புத்திரனுக்கு இன்னும் அந்த திமிறு குறையவே இல்லை. இப்படியே இருந்தான்னா இவன் வாழ்க்கை மட்டுமல்ல அவனை கட்டிக்கப் போற பொண்ணு வாழ்க்கையும் மொத்தமா அழிஞ்சிரும்.
எல்லாரும் கேட்டுக்கோங்க. நான் ஏற்கனவே செய்த தவறை இனி யார் செய்தாலும் செய்ய விட மாட்டேன்.
இவனோட நிதுவை சேர்த்து வைக்க, போடும் எல்லா திட்டமும் மண்ணா தான் போனது. அப்பொழுதுதாவது என் புத்திக்கு உரச்சிருக்கணும். மேலும் அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது நான் தான்..
சொடக்கிட்டு இப்ப சொல்றேன். நீ என்னடா நிதுவை வேண்டாம்ன்னு சொல்றது? நான் சொல்றேன். இனி நிது உன் பக்கம் வரவே மாட்டாங்க. இவனுக்கு போய் நிதுவை கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு பேசுறீங்க..
என்னோட நிது முழுவதும் சரியாகி உன்னை விட பெட்டரான ஒருவனை தேடி நான் பார்த்து கல்யாணம் செய்து வைப்பேன்.
என்னோட நிதுவுக்கு உன்னிடம் தேவையானது அன்பு தான். அதை கூட உன்னால கொடுக்க முடியல. ஆனால் அவளை கல்யாணம் பண்ணிக்கப் போறவன் அன்பு மட்டுமல்ல அவள் தான் வாழ்க்கைன்னு வாழ்வான்… பாரு… சவால் விட,
ஏளனமாக ரிஷி சிரிக்க, என்னோட புகழ் அண்ணாவை நீ நேரில் பார்த்ததில்லையே! நிதுவை நம்ம காலேஜ்ல்ல நிறைய பேருக்கு பிடிக்கும். ஆனால் புகழ் அண்ணா யாரையும் நிது அருகே வர விடமாட்டாங்க. அவரை போலவே ஒருவன் வருவான் என்னோட நிதுவுக்காக..
“வரட்டும். எனக்கென்ன? கல்யாணம் செய்து வைத்து ஆசிர்வாதம் பண்ணு” ரிஷி சிரிக்க, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மான்விழி.
தன் மகனை ஒரு பேச்சு கூட பேச விடாதவர் இன்று அடிக்கவும் திகைத்து அவரை எல்லாரும் பார்த்தனர்.
உங்க இருவருக்கும் காதல் என்ன போட்டின்னு நினைப்பா? அவ என்னமோ சவால் விடுறா. நீ ஏளனமா சிரிக்கிற? இருவரையும் முறைத்து..சினமுடன் சந்திரமுகனிடம் திரும்பி..
சந்தூ, “எனக்கு என்ன செய்வீங்கன்னு தெரியாது நிதி தான் என்னோட சின்ன மருமக” உறுதியிடனும் கண்டிப்புடனும் கூறினார்.
“உன்னோட பிள்ள விருப்பம் தானம்மா உனக்கு முக்கியம்” பாட்டி புன்னகையுடன் கேட்க, “அவன் விருப்பத்தை விட அவன் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்” என்றார்.
சந்திரமுகன் சத்தமாக சிரித்தார். அவன் முகம் கடுகடுத்தது.
“சிரிக்காதீங்க சந்தூ” அதட்டிய மான்விழி, ஏய்..இங்க பாருடி தனு. நீயும் அவ இந்த வீட்டுக்கு வரணும்ன்னு தான ஆசப்பட்ட? அவ வருவா. அவள் காதலித்த ரிஷி தான் அவ கழுத்துல்ல தாலி கட்டுவான்..
பிக்ம்மா, இவனை நம்பி நிது வாழ்க்கையை விடுவதா? சினமுடன் கேட்டாள்.
இங்க பாருடி. பொண்ணுங்க காதலிச்சா கட்டையில போற வரைக்கும் அவன் நினைவோட வாழ்வாங்களே தவிர மறக்கமாட்டாங்க
“மனநிலை பாதிக்கப்பட்டும் நிதி ரிஷியை மட்டுமே நினைச்சிட்டு இருந்தான்னா அவ எப்படிடி வேறவனுக்கு கழுத்தை நீட்டுவா? சொல்லு? என்னை விட நிதியை உனக்கு தெரியும் தான?” மறுகேள்வி தனுவை தொடுத்தார்.
கண்ணீருடன்..ம்ம்..ஆனால் பிக்ம்மா..ஜோ, பவி, மலர் ஆன்ட்டி ஒத்துக்க மாட்டாங்க. அப்புறம் இவனும் சும்மா இருக்க மாட்டான் தனு ரிஷியை பார்த்தாள்.
“அவங்களிடம் நான் பேசுறேன்” என்ற பாட்டி தன் மருமகளையும் பேரனையும் பார்த்தார்.
உணவு மேசையில் பழத்தட்டை பார்த்து தன் மகனை பார்த்தவர், யாரும் எதிர்பாராத நேரம் கத்தியை எடுத்து அவர் கையை வெட்டிக் கொண்டு, “நிதி தான் எனக்கு சின்ன மருமகள். இதுக்கு மேல இவன் முடியாதுன்னு சொன்னால் கத்தி கையில் இருக்காது கழுத்துக்கு போயிடும்” சொல்லிக் கொண்டே மயங்கினார்.
சந்திரமுகன் கண்ணீருடன் தன் மனைவியை பிடித்து தூக்கி, “டாக்டருக்கு கால் பண்ணுங்க” கத்தினார். ரிசாத் பவனால் தன் அம்மாவின் செயலை நம்ப முடியவில்லை.
மா…ம்ம்ம்ம்….அவன் தந்தையின் பின் ஓடினான்.
தன்வி மருத்துவரை வரவைக்க, “இதுக்காக இப்படியா கையை வெட்டிக்கிறது? கொஞ்சம் தள்ளி வெட்டி இருந்தால் உயிரே போயிருக்கும்” அவர்களின் குடும்ப மருத்துவர் தயாளன் திட்டினார். சந்திரமுகன் கண்ணீருடன் தன் மனைவியை பார்த்தார்.
மாம்..பிக்ம்மாவ எதுக்கு உத்து பார்த்துட்டு இருக்க? ஜூஸ் போட்டு எடுத்து வா. டாக்டர் அப்பொழுதே போயிட்டார்.
ஜெய் வந்ததும் வராததுமாக தன் அம்மாவின் நிலையை பார்த்து யாரையும் கண்டு கொள்ளாமல் ரிஷி கன்னத்தில் மாறி மாறி அறைந்து அவனை திட்டி அவர் அருகே அமர்ந்து கொண்டான்.
ரிஷி தலையை பிடித்துக் கொண்டு அறைக்கு செல்ல, பாட்டி அவன் பின்னாலேயே சென்றார்.
ரிஷி கண்ணா, “அந்த பொண்ணுக்கு என்னப்பா? நல்ல பொண்ணா தான இருக்கா? உனக்கு ஏன் பிடிக்கலை?” ஆதூறமாக ரிஷி தலையை வருடினார்.
“நீயும் என்னை நம்பலைல்ல பாட்டி. எனக்கே நான் தவறு செய்ததது போல பிம்பத்தை உருவாக்கிட்டீங்க? அவ சொன்னதில் எனக்கு நான் தவறு செய்திருக்க மாட்டேன்னு தெரியுது. இப்ப எதுக்கு நீ பேச வர்ற?” சீறினான்.
அதான் கண்ணா…உன்னை இவ்வளவு புரிஞ்சு வச்சிருக்கும் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கலாமே!
நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லவில்லை.
நான் எப்படி உன்னை நம்புறதுப்பா. பாட்டு பாடுறேன்னு போக கூடாத இடத்திற்கெல்லாம் சென்று குடிச்சிட்டு வருவ. அப்படி இருக்கும் போது இதை உனக்கு தெரியாமல் போதையில் செய்ய வாய்ப்புள்ள தானே!
பாட்டி, போதையில் இருந்தாலும் நான் செய்வேன்னு நீ எப்படி நம்பலாம்?
நம்பிக்கை வர்றது போல நீ நடந்துக்கலை..
ஓ! அந்த பொண்ணு கூட என்னை காதலிக்கிறேன்னு ஏமாத்தி உங்களை கவர கூட வந்திருக்கலாமே!
விரக்தியுடன் பாட்டி அவனை பார்த்து, சந்தேகப் பட வேண்டியவங்கள நீ படலை. படக்கூடாதவங்கல பண்ற?
நம்ம தனு எதுக்காக அவளுக்காக பேசணும்? ஜெய்யை விட உன்னிடம் நெருக்கமான உன்னோட தங்கை அந்த பொண்ணுக்காக உன்னையே கொல்ல தயங்க மாட்டேன்னு சொல்றான்னா அந்த பொண்ணு உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருப்பா..
சரி..உனக்கு இப்ப கூட உன்னோட ப்ரெண்ட்ஸ் தான் முக்கியம்ன்னா நான் சொல்றதை செய்து பாரு.
ஒரே ஒரு முறை உன்னோட நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு நீ தான் என்று அடையாளம் தெரியாதவாறு சென்று அவங்களிடமே உன்னை பற்றி அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கேட்டு பாரு…தெரியும்..
அந்த ஆருத்ரா பொண்ணு முன்னாடி குடிக்காத..
உன்னோட அம்மாவுக்காக ஸ்ரீநிதியை திருமணம் செய்ய ஒத்துப்பன்னு நினைக்கிறேன் இல்லைன்னா அவ என்ன செய்யப் போறாளோ? கண்ணீரை முந்தானையால் துடைத்து, “உன் அம்மா அப்பா பேச்சை இதுவரை நீ கேட்டதில்லை. ஒரே ஒரு முறை கேட்டுப் பாரு” சொல்லி சென்றார்.
ரிஷிக்கு அவரின் வார்த்தையில் சினம் தான் ஏறியது. என்னோட ப்ரெண்ட்ஸ் எதுவும் செஞ்சிருக்க மாட்டாங்க மனம் எண்ணினாலும் ஸ்ரீநிதி கூறிய ஜெகா காரை ஓட்டியதும் ஜானி அருகே இருந்ததும் அவன் நெஞ்சை குறுகுறுக்க செய்ததது. ஆனால் அவனால் அவன் நண்பர்களை விட்டுக் கொடுக்க முடியவில்லை.
அலைபேசியில் பவிதாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவளை பார்க்க வேண்டும் எண்ணம் தோன்றியது. வேகமான கீழே வந்தான்.
ஜெய் புன்னகையுடன் தன் தந்தையை அணைத்தான். அவர்களை பார்த்துக் கொண்டே ரிஷி செல்ல, “ரிஷி உன்னோட அண்ணாவுக்கு வாழ்த்து சொல்லு” நளினி கூற, நின்று தன் அண்ணனை பார்த்தான்.
“உன்னோட அண்ணா ஜெய்க்கு பவிதாவையும், உனக்கு ஸ்ரீநிதியையும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கோம்” சந்திரமுகன் சொல்லவும், ரிஷி தலையில் இடி இறங்கியது போல இருந்தது.
“டாட் பவி ஒத்துப்பா. அவளுக்கும் என் மேல லேசான விருப்பம் இருக்கு” ஜெய் தன் தமையனை முறைத்து விட்டு, “நானே அவளிடம் பேசுகிறேன்” என்றான்.
உனக்கு பவி தான்னு முடிவெடுத்துட்டோம். ஏன்னா..காலை உன் பார்வையிலும் அந்த பொண்ணு உன்னை பார்த்ததிலும் ஒருவருக்கு ஒருவர் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டோம் என்ற பாட்டி..அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்காமல் இல்லை என்று சொல்ல, மேலும் அதிர்ந்தான் ரிசாத்பவன்.
“பவிதாவிடம் முதலில் நம் காதலை கூறவேண்டும்” மனதில் எண்ணியவாறு, “டாட் நான் அமரேசன் சாரை பார்த்துட்டு அவரோட இரு நாட்கள் இருந்துட்டு வாரேன்”.
ரெண்டு நாளா? அறையிலிருந்து வெளியே வந்த அவன் அம்மா மான்விழி “பார்த்துட்டு உடனே கிளம்பி வரணும். புரியுதா?”
“முடியாதும்மா” அவன் சொல்ல, முடியாதா? அவனை மான்விழி முறைத்தார்.
இன்று மட்டுமாவது தங்கிட்டு வாரேன்ம்மா.
சரி, நாளை காலையில் இங்க இருக்கணும்.
ம்ம்! வெளியேறினான்.
பவிதா வீட்டிற்கு முதலில் வந்தது ரிஷி தான். பவியை அவன் தேடினான். அவள் வீட்டில் இல்லை.
அமரேசனிடம் கேட்க தயங்கி ஏதும் பேசாமல் அவரை பார்த்தான். அவர் சோர்வாக இருந்தார்.
“எதுவும் செய்யுதா சார்? உதவவா?” ரிஷி கேட்க, “வேண்டாம்” தலையசைத்து, அந்த சின்ன ட்ரைவை திறந்து அதிலிருக்கும் புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொடுக்க முடியுமா? கேட்டார்.
புகைப்படமா? மனதில் எண்ணியவாறு எடுத்து பார்த்துக் கொண்டே அதை கொடுத்தான். புகைப்படத்தில் கணவன் மனைவியும் கைக்குழந்தையுடன் இருந்தனர்.
அதை வாங்கிய அமரேசன், “என்னை மன்னிச்சிரும்மா. சரியா செய்கிறேன்னு நான் செய்த அனைத்தும் தவறாகி விட்டது” கண்ணீருடன் அப்புகைப்படத்திலிருந்த குழந்தையை கண்ணீருடன் வருடினார்.
யார் சார் இவங்க? எதுக்கு அழுறீங்க?
“என்னிடம் எதுவும் கேட்காத. என்னால எதையும் யாரிடமும் சொல்ல முடியாது” அதனை அணைத்து படுத்துக் கொண்டார்.
சிந்தனையுடன் வெளியே வந்தான் ரிசாத்பவன்.
சமையலறையில் வீடே மணக்கும் பிரியாணி வாசனையுடன் பாகு வாசனையும் வந்தது.
பவிதாவின் கார் சத்தம் கேட்டு, “இவ்வளவு வேகமா வந்துட்டா?” சிந்தனையுடன் சமையலறையை பார்த்துக் கொண்டே வந்தான்.
ராகவன் சமையலறையிலிருந்து ரிஷியை இடித்து தள்ளி விட்டு வேகமாக ஓடினான்.
“இவனுக்கு என்னாச்சு?” ரிஷி ஆர்வமுடன் அவர்களை பார்க்க, ஜோ கையில் பையுடன் உள்ளே வந்தான். ராகவன் அவனை அணைத்து அவனிடமிருந்து பொருட்களை வாங்கினான்.
பவிதா ஸ்ரீநிதி தோளில் கையை போட்டு அழைத்து வந்தாள்.