காலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் கொஞ்சமும் குறையாமல் இருக்க, கல்லூரிக்குச் செல்லும் எண்ணம் இல்லாமல் சுற்றி வந்த வினோத், அக்காவின் வேலை முடியும் நேரத்தை கணக்கிட்டுத் தான் அவளை அழைக்க வந்திருந்தான்.
அவன் வந்த நேரம் தான் புகழ் காளியின் கையைப் பிடித்ததும். தூரத்தில் இருந்தே அவர்களைப் பார்த்து விட்டவன், சற்று பதட்டம் கொண்டவனாகவே அவர்களை நெருங்க, அவன் அளவுக்கு பதறவில்லை காளி.
அவள் இயல்பு மாறாமல் கையை உதறிக் கொண்டு புகழிடம் பேசிக் கொண்டிருக்க, சற்றே நிதானித்து கொண்டவன், “என்னக்கா” என்றான் அமைதியாக.
காளி ஒன்றுமில்லை என்று அவனை அழைத்து வந்துவிட, இப்போது பேருந்தில் ஏறி அமரவும், “யாருக்கா அவரு” என்றான் ஆர்வம் தாங்காமல்.
“காலேஜ் படிக்கிறேன். நீ ஒன்னாம் கிளாஸ் பையனை மாதிரி சொல்லிட்டு இருக்க. என்னன்னு சொல்லுக்கா”
“காலேஜ் படிச்சா நீ பெரியவனாடா”
“நான் பெரியவனா சின்னவனா அதெல்லாம் இப்போ பிரச்சனை இல்ல. நீ என்ன விஷயம்னு சொல்லு. எதையும் வெளியே சொல்லாம பூட்டி பூட்டி வச்சுதான் காலையில அந்த நாய் அவ்ளோ தைரியமா மேல கையை வைக்க பார்த்து இருக்கான்” என்று வினோத் கத்த, முகம் மாறியவளாக அவனை வெறித்தாள் காளி.
“பின்ன என்னக்கா… எனக்கு புரிஞ்ச வரைக்கும் இது முதல் முறை இல்ல. சரியா?” என்றான் வினோத். அதற்கும் காளி அமைதியாக தலையசைக்க,
“அந்தாள் வீட்டுக்கு வந்தாலே உன் முகம் மாறிடும். பலமுறை நான் கவனிச்சு இருக்கேன். சரி உனக்கு அவங்களை பிடிக்காது, அதனால அப்படி இருக்கன்னு நினைச்சுட்டு போய்டுவேன். ஒருமுறை என்கிட்ட சொல்லி இருந்தா இந்த அளவுக்கு வந்து இருக்குமாக்கா” என்றவன் பேச்சில் நியாயம் இருப்பதாக தான் தோன்றியது.
“என்னடா சொல்ல சொல்ற. சொந்த தங்கச்சி வீட்டுக்காரன். என்கிட்ட தப்பா பேசுறான். தப்பா பார்க்கிறான். என்னால எதுவும் செய்ய முடியல. இதை என்னன்னு நான் வெளியே சொல்றது. சொல்லி மட்டும் என்ன ஆகிடுச்சு இப்போ? மொத்த பழியையும் நம்ம மேல போட்டுட்டாங்க இல்ல. இந்த வார்த்தைகளை எல்லாம் கேட்க பிடிக்காம தான் அமைதியா இருந்தேன். போடா” என்றவள் கண்மூடி பேருந்தின் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கொள்ள,
“அந்த நாயை நான் வேற விதமா பார்த்துக்கறேன். நீ இப்போ உன்கிட்ட பேசிட்டு இருந்தவரை பத்தி சொல்லு”
“என்னடா சொல்ல சொல்ற”
“அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு.”
“சொன்னாரு. சோத்துல உப்பு இல்லன்னு. அந்தாளு என்னை லவ் பண்றானாம். கல்யாணம் பண்ணிக்கிறாயான்னு கேட்கிறான். என்ன சொல்ல சொல்ற”
“பிடிச்சு இருந்தா பண்ணிக்கிறேன்னு சொல்லு”
“இதுக்கு தான் சின்ன பையன்னு சொன்னேன்”
“ஏன் என்ன தப்பா சொல்லிட்டேன். நல்லவர் தானே, இல்லன்னா நீ நின்னு பேசமாட்டியே”
“நல்லவனா இருந்தா கல்யாணம் பண்ணிக்கணுமா. ஏன்டா…”
“வேற என்ன வேணும்?”
“ஒன்னும் வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நம்ம நிலைமை இருக்கணும் இல்ல.”
“ஏன் உன் நிலைமைக்கு என்ன”
“என் நிலைமையா? இன்னும் ரெண்டு பேர் படிப்பு இருக்கு. ஏற்கனவே வாங்கின 5 லட்சம் கடன் இருக்கு. நம்ம நாலு பேரோட வயித்து பொழைப்பு இருக்கு.”
“இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் மனசாட்சி இருக்குடா.”
“புரியல”
“டேய். அந்தாளுக்கு கோர்ட்ல ரொம்ப நல்ல பேருடா. நல்ல மனுஷனும் கூட. அவன் ஏதோ புத்தி கெட்டு பின்னாடி வந்தா, இதுதான் சாக்குன்னு ஒட்டிக்க சொல்றியா. அந்தாளு குடும்பம், நட்புன்னு எத்தனை இருக்கு.”
“அதோட என் நிலைமை என்னன்னு எனக்கே தெரியும் இல்ல. 28 வயசாகுது. வெறும் ஒன்பதாம் கிளாஸ் தான் படிச்சு இருக்கேன். இதோ, ஹோட்டல்ல தட்டு கழுவுறேன். எதுக்கு, வெறும் நானூறு ஓவாக்கு. இதெல்லாம் எப்படிடா சரியா வரும்?”
“இன்னைக்கு இனிப்பா இருந்தாலும், நாளைக்கு வாழ்க்கைன்னு வரும்போது கசக்கும். எல்லாம் பெருசா தெரியும். அந்தாள் வார்த்தையை விட்டாலும் போச்சு. அவன் சாதாரணமா சொல்றத நான் பெருசா எடுத்துக்கிட்டாலும் போச்சு” என்று நிதர்சனத்தை தெளிவாக அவள் பிட்டு வைக்க,
“உனக்கு கண்ணகி சிலை பக்கத்துல சிலைதான். போ” என்றான் தம்பி.
“டேய்”
“பின்ன என்னக்கா. நல்லவரா இருந்தா கட்டிக்கிட்டு குடும்பம் பண்ணாம, சும்மா ஞானி மாதிரி பேசிட்டு இருக்க. ஏன் நீ தட்டு கழுவூறது, ஒன்பதாம் கிளாஸ் படிச்சதெல்லாம் அவருக்கு தெரிஞ்சு இருக்காதா. போக்கா”
“இது சரியா வராது வினோ. நீ உன் வேலையை பாரு”
“அதுவா வந்தாலும் நீ வர விடமாட்டா”
“ஆமாடா. எனக்கு வேண்டாம். மூடிட்டு உட்காரு” என்று சத்தமாக வினோத்தை அதட்டிவிட்டாள் காளி. அதில் கோபம் கொண்டவனும் மேற்கொண்டு எதையும் பேசாமல் வாயை மூடிக் கொண்டான்.
ஆனால், மனமெங்கும் வேண்டுதல் தான். ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களையும் அழைத்திருப்பான் அந்த ஒரு நிமிடத்தில். “எப்படியாவது என் அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுங்க கடவுளே” என்று வேகமாக அவன் வேண்டிக் கொள்ள, அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் சட்டென பிரேக்கிட்டு நின்றது பேருந்து.
“டேய். எழுந்து தொலைடா. அவன்கிட்ட வேற பேச்சு வாங்க வைப்பான் போல. ஒரு நிமிஷத்துல ஒரு தூக்கம்” என்று திட்டியபடியே எழுந்தாள் காளி.
“நான் எப்போ தூங்கினேன்” என்று புலம்பிக்கொண்டே வினோத் பேருந்தில் இருந்து இறங்க, அவர்களுக்கு சற்று தள்ளி சாலையோரம் நின்றிருந்த புகழேந்தியை கவனித்து விட்டான் அவன்.
“ஏய் அக்கா. உன் ஆளு அங்க நிற்கிராரு” என்று அவன் காளியை இழுக்க,
“செருப்பு பிஞ்சிடும் வினோ. தம்பின்னு கூட பார்க்கமாட்டேன்” என்று விரல் நீட்டி மிரட்டிய காளி, “வந்து தொலை” என்று அவனை இழுத்துக்கொண்டு நடந்தாள்.
அவள் திட்டியதை காதில் வாங்காமல், “அவர் ஏன் இங்கே நிற்கிராரு” என்று வினோத் புகழை தொடர,
“டெய்லி தான் நிற்கிராரு. ரொம்ப அக்கறையா இருந்தா போய் கேட்டுட்டு வா. நான் வீட்டுக்கு போறேன்” என்றபடி அவன் கையை விட்டு வேகமாக நடந்தாள் காளி.
“பாவம்க்கா” என்றபடி அவள் பின்னால் நடந்தான் வினோத்.
“வாயை மூடுடா” என்று அவனை அதட்டியபடியே நடந்தவள் ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைய, அதன்பிறகு அவளது வேலைகள் எப்போதும் போல சூழ்ந்து கொண்டது அவளை.
————
புயல் அடித்து ஓய்ந்த இடத்தைப் போல, மயான அமைதியுடன் காட்சி கொடுத்தது கண்மணியின் வீடு. அன்று காலையில் தான் பிள்ளைக்கு காது குத்தி முடித்திருக்க, அந்த சுபகாரியத்தின் நிழல் கூட இல்லை அந்த வீட்டில்.
கண்மணியின் மாமியார்- மாமனாரும் விழா முடிந்து அப்படியே அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்க, கண்மணி அவள் கணவன் ஜெய் மற்றும் அருண் மட்டும்தான் வீட்டில் இருந்தது.
அதுவும் அருண் காலையில் இருந்து ஆடிய களைப்பில் அலுத்துப் போய் உறங்கி கொண்டிருக்க, விழித்திருந்தது கணவன் மனைவி இருவர் மட்டுமே.
கண்மணியின் அறை முழுவதும் பொருட்கள் இறைந்து கிடக்க, எதை குறித்தும் கவலையற்றவனாக நாற்காலியில் அமர்ந்திருந்தான் ஜெய். கட்டிலின் காலில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் கண்களில் தான் ஜீவனற்றுப் போயிருந்தது.
வெகுநேரம் அழுததில் முகம் சிவந்து வீங்கி இருக்க, அதற்கும் மேலான வலி அவள் கண்களில். யாரை நம்பி உறவுகள் அத்தனையையும் தூக்கி எறிந்தாளோ, அவன் மொத்தமாய் பொய்த்து போயிருக்க அதை நம்ப முடியாமல் தான் அமர்ந்து கொண்டிருக்கிறாள் அவள்.
மதியம் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்குள் வந்த நிமிடமே ஜெய்யின் சட்டையைப் பிடித்து விட்டாள் கண்மணி.
“கண்மணி என்ன பண்ற” என்று அவன் பதற,
“என்ன நடந்தது கோவில்ல. என்ன செஞ்ச என் அக்காவை” என்று ஏகத்திற்கும் கத்தினாள் மனைவி.
“நான் எதுவுமே பண்ணலம்மா. உன் அக்காதான் என்கிட்ட” என்றவனை தடுத்து,
“அவளைப் பத்தி நீ சொல்லாத. எனக்கு தெரியும். உயிரே போனாலும் அப்படி ஒரு காரியத்தை அவ பண்ணி இருக்க மாட்டா. அங்கே நடந்த அத்தனைக்கும் நீ தான் காரணம். எனக்கு தெரியும். உண்மையை சொல்லு” என்று கண்மணி ஜெய்யை கிடுக்கிப் பிடிக்க,
“ஓ… அப்போ என்னோட வேலையும் சுலபமா முடிஞ்சிடும்” என்று ஆசுவாசம் கொண்டான் ஜெய்.
“என்ன… என்ன வேலை”
“நீ நினைக்கிறது தான் கண்மணி. முதல்ல உன்னை காதலிச்சு இருந்தாலும் கூட, என்னவோ உன் அக்காவை பார்க்கிறப்போ ஒரு மயக்கம் தான். கருப்பா இருந்தாலும், ஆள் நல்லா களையா தான் இருக்கா.” என்றவனை கண்மணி வெறிக்க, அவள் பார்வையை கண்டுகொள்ளாமல் மேற்கொண்டு பேசினான் அவன்.
“என்ன இப்போ. ஊர்ல நடக்காததா. உன் அக்காவை எல்லாம் இதுக்கு மேல எவன் கட்டிப்பான். உன் அம்மாவுக்கும் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வக்கில்ல. அந்த வீடு ஒன்னு தான் சொத்து. உன் தங்கச்சிக்கு கூட ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் கண்மணி. ஆனா, உன் அக்காவை மட்டும் எனக்கு கொடுத்திட சொல்லு.”
“ச்சீ… மனுஷனா நீ. வெட்கமாயில்லையா இப்படி பேச” என்று கட்டிக் கொண்டவள் கொதிக்க,
“நான் ஏன் வெட்கப்படணும். இதுல வெட்கபட எல்லாம் ஒண்ணுமே இல்ல செல்லம். நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். இப்போ உன் அக்கா இல்லன்னா கூட நான் வேற ஒருத்தியை கூட்டிட்டு வருவேன்.”
“ஆனா, அது உனக்கு தான் வம்பா போகும். அதனால தான் சொல்றேன். உன் அக்காவை வர சொல்லு” என்றான் ஜெய்.
“செத்தாலும் நீ நினைக்கிறது எல்லாம் நடக்காது.”
“அப்போ நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன். நீயும் என்னை எதுவும் கேட்காத. நான் எவளை வச்சுகிட்டாலும் நீ வாயை திறக்கக்கூடாது” என்று கூறியவனை எதுவுமே செய்ய முடியாத தனது நிலையை அறவே வெறுத்தவளாக அவள் அமர்ந்துவிட, அவளைக் குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அமர்ந்திருந்தான் ஜெய்.
மாலை வேளையில், “யோசி கண்மணி. நீ யோசிக்கிறதுல தான் இருக்கு. உன் அக்காகிட்ட பேசி நல்ல முடிவா எடுங்க. இல்ல, நீயும் உன் அம்மா வீட்டுக்கு கிளம்பிடு” என்று கூறிவிட்டு எழுந்து அவன் வெளியே சென்றுவிட, வாழ்க்கை தன்னை வஞ்சித்து விட்டதில் இடிந்து போனவளாக அமர்ந்துவிட்டாள் கண்மணி.
இதுவரை ஜெய்யை நம்பி அவனுக்காக மற்ற அனைவரையும் பகைத்துக் கொண்டு அவனது முகம் பார்த்து குடும்பம் நடத்தியது மொத்தமும் ஒன்றன் பின் ஒன்றாக நிழலாட, அவனது இந்த கீழ்த்தரமான குணத்தை அறியாமல் போனது அவளது தவறுதான் என்பது தாமதமாகவே புரிகிறது அவளுக்கு.
இனி புரிந்து மட்டும் என்ன செய்துவிட முடியும் அவளால். இன்று காலை வரையும் கூட கணவன் தன் கைப்பிடியில் இருப்பதாக தான் நினைத்துக் கொண்டிருந்தாள் கண்மணி.
அவனும் அப்படித்தானே நடந்து கொண்டான் இதுநாள் வரை. திருமணம் ஆனது முதலாக நடந்த அத்தனையும் அவள் விருப்பம் தான். அவனது வேலை, அவளுக்கான உடை, நகைகள், அவளது ஆடம்பர வாழ்க்கை என்று அத்தனையும் நிறைவேற்றிக் கொடுத்தது ஜெய் தான். ஏன்… அவளுக்காக தானே பெற்றவர்களை கூட விட்டு அவளுடன் தனியாக வீடு வந்தான். அப்படிபட்டவன் எப்படி இப்படி பொய்த்து போனான் என்று நம்ப முடியாமல் தான் அமர்ந்திருந்தாள் கண்மணி.
இதில் இவன் செய்த தவறுக்காக மனம் அவளது அக்காவை வேறு குற்றம் சாட்டியது. பாவி… எல்லாம் அவளால் வந்தது என்று மனதார சபித்தவளின் மனமே, “உன் கணவன் ஊர் மேய தயாரானால் அவள் என்ன செய்வாள்” என்று குட்ட, ஜெய்யை தாண்டி ஒரு வாழ்வை யோசிக்கவே முடியவில்லை அவளால்.
அவனை மட்டும் இனி யோசித்து என்ன பயன். அதுதான் தீர்த்து சொல்லிவிட்டானே. “உன் அக்கா இல்லையென்றால் இன்னொருத்தி என்று” என்று அவன் வார்த்தைகளை எண்ணி எண்ணி துடித்தவள் இறுதியில் நிலையாக ஒரு முடிவை எடுத்துவிட்டாள்.
தனித்து வாழ்வதெல்லாம் தன்னால் முடியாத காரியம் என்று தோன்றிவிட, எப்படியும் ஜெய்யை கைக்குள் அடக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அப்போதும்.
என்ன செய்வது? என்ன செய்வது? என்று யோசித்தவளுக்கு உடனடியாக தோன்றியது தற்கொலை எண்ணம் தான். தற்கொலை என்றால் சாவது அல்ல. தற்கொலை செய்வேன் என்ற மிரட்டல் மட்டுமே விடுக்க நினைத்தாள் அவள்.
இரவு ஜெய் வரும் வரை காத்திருந்தவள் வீட்டில் வைத்திருந்த பழைய மாத்திரைகளை எல்லாம் சேகரித்து வைத்திருந்தாள். சரியாக ஜெய் வீட்டிற்குள் நுழையும் முன் அந்த மாத்திரைகளை வாயில் கொட்டி தண்ணீர் குடித்து விழுங்கி விட்டாள்.
ஜெய் வீட்டில் நுழைந்த நிமிடம், “நீங்க நல்லா இருங்க ஜெய். நான் போறேன். மொத்தமா போயிடுறேன்.” என்று அவள் வசனம் பேச, கண்டுகொள்ளவே இல்லை அவள் கணவன்.
மூச்சு முட்டும் அளவுக்கு குடித்துவிட்டு நிற்கவே முடியாமல் தள்ளாடியபடி வந்திருப்பவன் அவளை எங்கே மருத்துவமனைக்கு அழைத்து செல்வான்.
அவள் கூறியது கேட்டது என்பதற்கு அறிகுறியாக, “காளியை வர சொல்லு” என்று குழறலாக கூறியவன் கண்மணியின் முன்பே நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிட, உண்மைக்கும் அப்போது தான் பயம் பிடித்தது கண்மணிக்கு.
“ஐயோ கடவுளே… இவனை நம்பி என்ன காரியம் செய்து விட்டோம்?”என்று துடித்தவளுக்கு உண்மையில் அப்போதுதான் மயக்கம் வந்துவிடும் போல இருந்தது.
உட்கொண்ட மாத்திரைகளின் விளைவா அல்லது அவள் கொண்ட பயத்தின் விளைவா என்று புரியாமல் கண்கள் சொருக ஆரம்பிக்க, அப்போதுதான் உறங்கி கொண்டிருந்த பிள்ளையின் நினைவு வந்தது.
“அருண்” என்று கதறியவளுக்கு தாயின் நினைவு வர, சட்டென அலைபேசியைத் தேடி எடுத்து மரகதத்தை அழைத்தாள்.
ஏற்கனவே அவள் மீது கோபத்தில் இருந்த மரகதம், “என்னதான்டி வேணும் உனக்கு” என்று எடுத்த எடுப்பில் கத்த,
“அம்மா நான் சாகப் போறேன்மா.” என்று அழுதாள் மகள்.
“பாவி. என்னடி சொல்ற. உன் வாயில நல்லதே வராதா” என்று மரகதம் மீண்டும் கோபம் கொள்ள,
“அய்யோ அம்மா… நான் மாத்திரை போட்டுகிட்டேன். கண்ணெல்லாம் இருட்டுதுமா. பயமா இருக்கு. நான் செத்துட்டா அருணை மட்டும் பார்த்துக்கோம்மா.”என்றாள் அழுகையுடன்.
மரகதத்திற்கும் அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிய, “அடிப்பாவி. என் குலத்தை கெடுத்தியே.” என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஆழ ஆரம்பித்தார் அவர்.
அவர் சத்தமாக அழுத்தத்தில் பதறியடித்து பிள்ளைகள் மூவரும் ஓடிவர, “காளி… உன் தங்கச்சி விஷத்தை சாப்பிட்டுட்டாடி.” என்று மரகதம் தலையில் அடித்துக் கொண்டு அழ, காளிக்கு ஒன்றும் புரியவில்லை.
வினோத் மரகதத்தின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி காதில் வைக்க, எதிர்முனையில் ஈனஸ்வரத்தில் மெல்ல தேய்ந்து கொண்டே போனது கண்மணியின் குரல்.
“ஏய் கண்மணி” என்று அலைபேசியில் அவன் கத்த, “ம்மா” என்பது மட்டுமே பதிலாக வந்தது எதிர்முனையில்.
“அவதான்க்கா” என்றவன், “ என்ன பண்றதுக்கா” என்று காளியிடமே கேட்க, அவளுக்கும் உண்மையில் என்ன செய்வது என்று தெரியவில்லை தான். ஆனால், அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதே.
“கிளம்புடா. நேர்ல போய் பார்ப்போம்” என்று தம்பியையும், தாயையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள் அவள். நித்யாவை மட்டும் வீட்டில் விட்டு அவர்கள் கிளம்ப, அவர்கள் அளவுக்கு எல்லாம் பதறவில்லை நித்யா.
அவளுக்கு உண்மையில் கண்மணி விஷயம் குடித்து இருப்பாளா என்பதே சந்தேகமாகத் தான் இருந்தது. ‘சரி பார்க்கலாம்’ என்று எப்போதும் போல அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் சென்று படுக்கையில் விழுந்துவிட்டாள்.