அகிலாவின் பேச்சு சிவமூர்த்தியிடம் அசூயை ஏற்படுத்தியிருந்தது. உடல் நிலை சரியில்லாத நிலையிலும் அவர் வரவேண்டும், உத்தமும் வந்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்தியவள் இப்போது ஏன் வந்தோமென்று அவர்களை நினைக்க வைக்க, மனைவியை விட மகனை நினைத்து தான் அவருக்கு அச்சம் ஏற்பட்டது. இப்படியே நடந்து கொண்டால் மகனின் எதிர்வினை என்னவாக இருக்குமென்று அவரால் கணிக்க முடிந்தது. இன்றைய தினத்தின் முடிவு அவர் கையில் இல்லை என்று சிவமூர்த்திக்குப் புரிந்து போக, நெஞ்சம் தடதடவென்று பயணப்பட, அவரருகில் நின்றிருந்த இந்திராவிடம்,”ஒரு சேரை எடுத்துப் போடு இந்திரா..எனக்கு என்னவோ போல இருக்கு.” என்று சொல்ல, குழந்தைகள் இருவரும் எழுந்து விட்டால் எப்படிச் சமாளிப்பதென்ற யோசனையில் இருந்தவள், சற்று தூரத்தில் நின்றபடி அவனது கைப்பேசியில் பிஸியாக பேசிக் கொண்டிருந்த உத்தமை,”டேய், அப்பாக்கு நிற்க முடியலையாம்..நாற்காலியை இழுத்துப் போடு டா உத்தம்.” என்று உத்தரவு இட்டாள்.
அதைக் கேட்டு பதற்றத்தோடு கணவர் அருகே காவேரி வர, அவள் இருந்த இடத்தை விட்டு அகிலா அசையவில்லை. உரத்த குரலில் யாரையோ பெயர் சொல்லி அழைத்தாள். அப்பாவிற்கு நாற்காலி போட தான் அழைக்கிறாளென்று உத்தம், இந்திரா, காவேரி மூவரும் நினைக்க, அந்த நபர் அளருகே ஓடோடி வந்தவுடன் அவளது கைப்பேசியை அவரிடம் காட்டி அப்படியே மேடையைச் சுட்டிக் காட்டி பேச ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்து,”இங்கே உட்கார எல்லாம் வேணாம் ப்பா..கிளம்பலாம்.” என்று உத்தம் சொல்ல, ஒரு செவியை இவர்களிடம் கொடுத்திருந்த அகிலா,”என்ன டா..இப்போ தானே வந்தீங்க..உடனே எங்கே டா போகப் போறீங்க?” என்று கேட்டாள்.
“என்னோட ஃபிரண்ட் வீட்டுக்கு..எத்தனை மணிக்கு நாங்க இருக்கணும்னு மெஸேஜ் அனுப்பு அந்த நேரத்திற்கு வரோம்.” என்றவன் அகிலாவின் பதிலை எதிர்பார்க்காமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
‘இந்த ஊர்லே இவனுக்கு எங்கேயிருந்து ஃபிரண்டு?’ என்று சிவமூர்த்தி, காவேரி இருவரும் யோசித்துக் கொண்டிருக்க, தூக்கத்திலிருந்து விழித்த குழந்தைகள் இந்திராவைப் பாடுபடுத்திக் கொண்டிருக்க, அந்த வீட்டிற்குப் போனால் போதும் என்ற மனநிலையை அடைந்திருந்தாள் இந்திரா. சித்தூரிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் சில நிமிடங்கள் பயணம் செய்து ஒரு பண்ணை வீட்டை அடைந்தார்கள். பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவனுக்கு தாய்நாட்டில் மட்டுமில்லை பல தேசங்களிலும் நண்பர்கள் இருந்தார்கள். விழா நிகழவிருக்கும் இடத்திலிருந்து இந்த நண்பனுக்கு அழைப்பு விடுத்து சில மணி நேரங்கள் தங்குவதற்கு இடம் வேண்டுமென்று கேட்க, அவனது வீட்டு முகவரியைக் கொடுத்து விட்டான் அந்த நண்பன்.
கேர்டேக்கரை தவிர்த்து வீட்டில் யாருமில்லை. ஒரு ஏசி படுக்கையறையில் குழந்தைகளைப் படுக்க வைத்து விட்டு வந்த இந்திராவிடம்,”மாமாக்கு ஃபோன் செய்து இங்கே வரச் சொல்லிட்டேன்..சாப்பிட என்ன வேணும்னு சொல்லு அவங்க செய்து கொடுப்பாங்க..எல்லோரும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க..அம்மாவை அழைச்சிட்டு வெளியே போயிட்டு வரேன்.” என்றான்.
அதற்கு,”நான் வரலை டா..கால் இரண்டும் ஏற்கனவே வீங்க ஆரம்பிச்சிடுச்சு..இரண்டு மணி நேரம் தொங்கப் போட்டுக்கிட்டு வந்தாலே இப்படி ஆகுது..மணியை அழைச்சிட்டு வந்திருந்தா வெந்நீர் வைச்சுக் கொடுத்திருப்பா.” என்றார் காவேரி.
“கொஞ்ச நேரம் தான்..போயிட்டு வந்திடலாம்..உங்க கால் என்னோட பொறுப்பு..கீஸர்லேர்ந்து வெந்நீர் பிடிச்சுக் கொடுக்கறேன்..கிளம்புங்க.” என்று வலுக்காட்டாயமாக அவனோடு அழைத்துச் சென்றான்காவேரியோடு கடைவீதிக்கு சென்றான் உத்தம்.
இந்திரா இளைப்பாற சென்று விட, சின்ன மாப்பிள்ளை வரும் வரை வரவேற்பறையில் அமர்ந்து டீ வி பார்த்துக் கொண்டிருந்தார் சிவமூர்த்தி. சில நிமிடங்கள் கழித்து அகிலாவிடமிருந்து சிவமூரத்திக்கு அழைப்பு வந்தது. “என்ன ப்பா அம்மா, இந்திரா இரண்டு பேரும் ஃபோன் எடுக்க மாட்டீங்கறாங்க?” என்று விசாரித்தாள்.
“இந்திராவும் குழந்தைங்களும் தூங்கிட்டு இருக்காங்க ம்மா…சின்ன மாப்பிள்ளை வந்திட்டு இருக்கார்..அவருக்காக நான் காத்திட்டு இருக்கேன்..உங்கம்மா, உத்தம் வெளியே போயிருக்காங்க.” என்றார்.
“எங்கே போயிருக்காங்க..நீங்க எல்லோரும் எங்கே இருக்கீங்க.” என்று கேட்டாள்.
“உத்தம் அவனோடஃபிரண்ட் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கான்..அங்கே தான் ஓய்வு எடுத்திட்டு இருக்கோம்.”என்றவுடன்,
“எங்கே இருக்குது ப்பா?” என்று அகிலா கேட்க,
“திருப்பதி ரூட்லே இருக்குது ம்மா.” என்றார்.
என்னமோ காவேரி தான் முக்கிய விருந்தினர் போல்,”ஒரு மணி நேரத்திலே விழா ஆரம்பிச்சிடும் ப்பா இந்த நேரத்திலே அம்மா எங்கே போயிருக்காங்க?” என்று அகிலா கேட்க,
“நீ ஆரம்பிச்சிடு ம்மா..நாங்க மெதுவா வரோம்.” என்று சிவமூர்த்தி பதில் கொடுக்க,
“என்ன ப்பா இப்படி சொல்றீங்க? சபைலே எதை எங்கே வைக்கணும், எப்படி வைக்கணும் என்ன செய்யணும்னு அம்மா தானே சொல்லணும்.” என்று தேனொழுக பேச,
“உங்கம்மா எதுக்கு? உன் மாமியார் வீட்டு ஆளுங்களே நிறைஞ்சு இருக்காங்க..அவங்க வீட்டுப் பொண்ணோட நிச்சயம்..அவங்க சொல்றபடி செய்யறது தான் முறை.” என்று மகளுக்கு கொட்டு வைக்க,
“உங்க பேத்திக்காக நீங்க கொண்டு வந்திருக்கறதை என்கிட்டே கொடுத்திட்டு போயிருந்தா நான் சபைலே வைச்சிடுவேன்..அம்மாவை எதுக்கு எதிர்பார்க்கப் போறேன்.” என்று அகிலா விஷயத்திற்கு வந்தவுடன்,
“திடீர்னு நிச்சயம் வைச்சிட்டே..திவ்யாக்கு பரிசு வாங்க எங்கே நேரமிருந்திச்சு? சுப நிகழ்ச்சி வெறும் கையாப் போகக் கூடாதுன்னு நம்ம தோட்டத்து பழம், பூ, வெத்திலைப் பாக்கு, குங்குமம், கல்கண்டு, சர்க்கரை, இனிப்பு கொண்டிட்டு வந்திருக்கோம்..இந்திராவோட மாமியார் கல்யாணத்துக்குப் பரிசு கொடுத்திக்கலாம்னு சொல்லிட்டாங்களாம்..அதனாலே அவளும் எதுவும் வாங்கிட்டு வரலை.” என்றார்.
“என்ன ப்பா நீங்க..மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எவ்வளவு பெரிய இடம்னு உங்களுக்கு இன்னும் புரியலையா..வீதி பூரா பேனர் வைச்சது அவங்க தான்..வீட்லேர்ந்து மைதானத்திற்கு விழாவை மாத்தினதும் அவங்க தான்..என் மாமியார், மாமனார் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே..திவ்யாக்கு அவங்க ஏதாவது செய்தா மற்றப் பிள்ளைங்களுக்கும் அதே மாதிரி செய்யணும்னு அவங்க யாருக்கும் எக்ஸ்ட் ரா செய்யறதில்லை….நீங்களும் இப்படி வெறும் கையாப் புறப்பட்டு வந்திருக்கீங்க..மணியையும் அழைச்சிட்டு வரலை..இதையெல்லாம் என்கிட்டே சொல்லணும்னு உங்களுக்கு கூடவா தோணலை. ” என்று கேட்டு விட்டு பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள் அகிலா.
இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார். திருமண நிச்சயத்திற்கு பூ, பழம், இனிப்பு மிஞ்சி மிஞ்சி போனால் பட்டுப்புடவை வாங்கிச் செல்வது தான் வழக்கம். அகிலாவின் நிச்சயம் கூட அப்படித் தான் நடந்தது. இப்போது அவள் பேசியதைப் பார்த்தால் பிறந்த வீட்டிலிருந்து பெரிய பரிசாக எதிர்பார்ப்பது போல் இருந்தது. திவ்யா மட்டும் அவருக்குப் பேத்தியில்லை. இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் திருமண வயதை அடையும் போது அவர் இருக்கப் போவதில்லை. இப்போது திவ்யாவிற்கு பெரிதாக செய்தால் மற்ற இரண்டு பேத்திகளுக்கும் இப்போதே அதைப் போல் ஏற்பாடு செய்து வைத்தால் தான் இந்திரா அமைதியாக இருப்பாள் இல்லையென்றால் வீடு போர்க்களமாக மாறி விடும். இதை எப்படிச் சரி செய்வதென்ற யோசனையோடு சிவமூர்த்தி அமர்ந்திருக்க, இந்திராவின் கணவன் கஜபதி வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் சிவமூர்த்தியோடு பேசி விட்டு ஓயவு எடுக்க அவர் சென்று விட, அடுத்த சில நிமிடங்களில் ஜவுளிக் கடை பையோடு வீட்டினுள் நுழைந்தனர் காவேரி, உத்தம்.
நல்லவேளை புடவை வாங்கிக் கொண்டு வந்து விட்டனர் என்று நிம்மதியடைந்தவர்,”அகிலா ஃபோனை நீ ஏன் எடுக்கலை?” என்று மனைவியிடம் கேட்க,
ஜவுளிக் கடை பையினுள் கை விட்டு நகைப் பெட்டி ஒன்றை வெளியே எடுத்து கணவனிடம் நீட்டியவர்,”முக்கியமான பொருள் வாங்கிட்டு இருக்கும் போது எப்படி ஃபோன்லே பேச முடியும்? திவ்யாக்கு உத்தம் வாங்கியிருக்கான்..திறந்து பாருங்க.” என்றார்.
நகைப் பெட்டியை திறந்து பார்த்த சிவமூர்த்தியின் விழிகள் ஆச்சரியத்தின் விரிய,”பட்டுப்புடவை மட்டும் போதும் டான்னு சொன்னேன்..என் பேச்சைக் கேட்கலை..பத்து சவரன்லே ஹாரம் வாங்குங்கண்ணு கழுத்திலே கத்தி வைச்சிட்டான்..இங்கேயெல்லாம் நகையோட தரம் எப்படி இருக்குமோ தெரியலை..சென்னைலே வாங்கி கல்யாணத்துக்கு கொடுத்துக்கலாம்னா காது கொடுத்துக் கேட்கலை..அவன் ஃபிரண்டோட அம்மாக்கு ஃபோன் போட்டு அந்தக் கடைக்காரரோட பேச வைச்சு எல்லாத்தையும் இவனே முடிவு செய்திட்டான்..இங்கேயிருந்து முதல்லே பட்டுப்புடவை கடைக்குப் போனோம் அப்புறம்.” என்று நடந்ததை கதையாக சொல்ல காவேரி ஆரம்பிக்க.
“நீங்க ஏன் ப்பா தூங்காம உட்கார்ந்திட்டு இருக்கீங்க? ரெஸ்ட் எடுத்துக்க சொன்னேனே.” என்று அவரை இடைமறித்தான் உத்தம்.
உடனே, “சின்ன மாப்பிள்ளை வர்றத்துக்கு காத்திட்டு இருந்தேன்..அப்போ அகிலா ஃபோன் செய்தா.” என்று சொன்னவர் அகிலாவின் எதிர்பார்ப்பை பற்றி அவர்களிடம் கூறினார். அதற்கு,
”அவங்க சீரோட சேர்த்து சபைலே வைக்கப் போகறதில்லை..தாய்மாமன் பரிசுன்னு நானும் நீங்களும் தான் திவ்யா கைலே கொடுக்கப் போறோம்.” என்றார் காவேரி. அதைக் கேட்டபடி அங்கே வந்த இந்திரா,”தாய்மாமன் சீரா? அதை வாங்கத் தான் உங்களை அழைச்சிட்டுப் போனானா? என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்று பட்டுப்புடவையையும் நகையையும் எடுத்துப் பார்த்தவள்,”பாரு ம்மா..எல்லாம் சரியான நேரத்திலே நடந்ததுனாலே அக்கா அவளோட மகளுக்கு உங்ககிட்டேயிருந்து வசூலிக்கறா..என்னோட முறை வரும் போது நீங்கெல்லாம்..” என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டாள் இந்திரா.
அவனுடைய அக்காவின் பேச்சு உத்தமிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உண்மையில் அவன் கொடுக்க நினைத்த பரிசு வேறு. புதுமணத் தம்பதிக்கு புது அனுபவத்தை பரிசாக கொடுக்க நினைத்தான். ஆனால் வழி முழுக்க நிறைந்து கிடந்த அவர்களின் பேனர்களும் அகிலா அக்காவின் செயல்களும் அவர்கள் அதற்கு லாயக்கு இல்லை என்று சொல்ல, அம்மாவை அழைத்துக் கொண்டு கடைவீதிக்கு சென்று விட்டான். இப்போது இந்திராவும் அகிலாவுக்கு சளைத்தவள் இல்லை என்று நிரூபிக்க,”இப்போ என்ன வேணும் உனக்கு? திவ்யாக்கு பத்து லட்சம் செலவு செய்திருக்கேன்..உன்னோட இரண்டு பொண்ணுங்க பெயர்லே அஞ்சு லட்சம் போட்டு அந்த அத்தாட்சியை உன் கைலே கொடுக்கணுமா?” என்று நிதானமானக் குரலில் கேட்க, இந்திராவிற்கு பகீரென்றானது.
“இல்லை டா..சும்மா தான் கேட்டேன்..சொல்லுங்க ம்மா..அவன் என்னைத் தப்பா நினைச்சுக்கப் போறான்.” என்று காவேரியிடம் முறையிட்டாள் இந்திரா.
“நேத்திலிருந்து வாயைத் திறக்காதேன்னு உனக்கு புத்தி சொல்லி சொல்லி என் வாய் வலிக்குது.” என்றார் காவேரி. அந்த நேரம் அங்கே இந்திராவின் கணவன் கஜபதி வர அந்த உரையாடல் அரைகுறையாக முடிந்து போனது.
நிச்சயதார்த்த விழாவில், உத்தமின் பரிசான பத்து சவரன் ஹாரம் கழுத்தை அலங்கரிக்க, அவளது வருங்காலக் கணவன் திலக்குடன் நின்றிருந்த மகள் திவ்யாவைப் பார்த்த அகிலா,’தம்பிக்கும் திவ்யாக்கும் வயசு வித்தியாசம் அதிகமா இல்லைன்னா..’ என்று ஆதங்கப் பெருமூச்சு விட, அதே நேரம் பெற்றோர், கணவன், குழந்தைகள், தம்பி என்று குடும்பத்தோடு அமர்ந்து மேடையின் நின்றிருந்த ஜோடியைப் பார்த்த இந்திரா,’நல்லவேளை தம்பிக்கும் திவ்யாக்கும் நடுவுலே வயசு வித்தியாசம் வந்து நின்னுடுச்சு.’என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.