சஞ்சனா…   கதைத்திரி-9

அத்தியாயம்  20

ஏன் மஞ்சுளா?  நீ வங்கிக்குப் போனாய் ?  இப்போது சில மாதங்களாய் உனக்கு மாதந்திரத் தொந்தரவு அதிகமாக உள்ளது, உதிரப் போக்கும் அதிகமாக இருக்கிறது , டாக்டரிடம் போகலாம் என்றால் கொரோனாவை காரணம் காட்டித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விட்டாய். இப்போது ரொம்பவும் வெளுத்துத் தெரிகிறாய், நானும் , ராஜியும் ரத்த சோகை எதுவும் இருக்குமோ என்று பயந்து கொண்டிருக்கிறோம் , இப்போது போய் கூட்டத்திற்குப் போயிருக்கிறாய்..”  என்று மாலை ராதா போன் செய்து சரமாரியாகத் திட்ட ,

சஞ்சு சொன்னாளா ?

ஆமாம் ,  கீத்துவிடம் புலம்பித் தீர்த்திருக்கிறாள்.”

சூழ்நிலை அப்படி ராதா , என்ன செய்ய ? என்று சமாளிக்க,

என்ன சூழ்நிலை ? , உன்னைக் கேட்டு தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று பேசாமல் இருந்தேன், மனுசன் கை ஓங்கி விட்டாராமே ?ஏன் இப்படி இருக்கிறாய் ? திருப்பிக் கொடுக்க வேண்டியது தானே. சரி , உனக்குத் தான் தைரியம் இல்லை. கேட்க வந்த விவேக்கையும் ஏன் தடுத்தாய்? என்று பொரிந்து தள்ளினார் ராதா .

ச்சு…  விடு ராதா , எல்லாம் என் தலைவிதி.”

அது போகட்டும் , சஞ்சுவை அனுப்பியிருக்க வேண்டியது தானே?” என்று வருத்தப்பட ,

இல்லை ராதா , சொல்ல கூடாத வார்த்தை வந்த பிறகு (ஏற்கனவே கீத்து மூலம் விஜயன் பேசியதை ராதா அறிந்திருந்தாள் ) ஈரக்குலையே நடுங்கி விட்டது. தாங்க முடியவில்லை ராதா. என்னை அறியாமல்  கத்தி விட்டேன், அதற்குத் தான் கையை நீட்டிவிட்டார் . இத்தனை வருடங்களாக இது மட்டும் தான் இல்லாது இருந்தது . இப்போது அதுவும் நடந்து விட்து , இனி இது பழக்கமாகும்…” என்று குலுங்கினார் . 

 மனசைத் தளர விடாதே மஞ்சு , பசங்க பெரிசாகி விட்டார்கள் , பார்த்துக்கலாம்…” என்று தேற்ற ,

அவருக்குப் பிடிக்காத விசயம் நடந்து விட்டால் , சாமானியத்தில் விடமாட்டார்.  உனக்கு சஞ்சு விசயத்திலே புரிந்திருக்கும்.  வஞ்சம் வைத்துப் பழி தீர்ப்பார் . இன்று வரை சஞ்சு படாதபாடு படுகிறாள். அதான் என்னால் ஆன மட்டும் காப்பாற்றப் பார்க்கிறேன்..” என்று பெருமூச்சு விட்டார் ,

அதனால் தான் ராஜாவையும் தடுத்தேன் . இதில் ராஜாவும் சேர வேண்டுமா ?  இவன் பேசுவதால் எதுவும் மாறிவிடப் போகிறதா ? என்றார் விரக்தியாக

என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஈகோயிஸ்ட்டை பார்த்ததே இல்லை என்று ராதா ஆதங்கப்பட ,

மஞ்சு ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு , அப்படிபட்ட  வார்த்தைகளைக் கேட்ட பிறகு , பசங்களை வெளியே அனுப்ப பயமாக இருந்தது ராதா , மனசு தாறுமாறாக யோசிக்க ஆரம்பித்து விட்டது . அவர்களை வெளியே அனுப்பி விட்டு ஒரு வினாடி கூட நிம்மதியாக இருக்க முடியாது . அவர்கள் தான் என் வாழ்க்கையே , அவர்களுக்கு ஒன்று என்றால்   தாங்க முடியாது ராதா…” என்று படபடத்தார் .

மேலும், அவர் சின்னப் பிள்ளை என்று இழுத்ததிற்குக் காரணம் , சஞ்சுவை அனுப்பித் தப்பாகி விட்டால் , நான் தான் பொறுப்பு என்று உணர்த்தத்தான் . ஏற்கனவே நேரம் சரியில்லை  , ஏதேனும் தப்பாகிவிட்டால்  வீடு இரண்டாகி விடும் . சஞ்சு தாங்க மாட்டாள்…”

ராதாவும் அதிலிருந்த உண்மையை உணர்ந்தார். சரி , உடம்பைப்  பார்த்துக் கொள் , தைரியமாக இரு.” என்று போனை வைத்தார் .

போனை வைத்த ராதா , உடனே, ரமேஷிடமும் , ராஜியிடமும் புலம்பித் தீர்த்தார் . ஆனாலும் மனசு ஆறாமல் மஞ்சுவை நினைத்து வருத்தப்பட்டார் , ரமேஷ் தேற்ற முயன்றார் .

அத்தியாயம் 21

 மஞ்சுவிற்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. பிள்ளைகளுக்காக என்று இதுவரை மனதைச் சமாதனப்படுத்தியவரால் , அந்த அடி நாதமே ஆட்டம் காணும் போது , விரக்தி ஆட்கொள்ள , கணவனை கண்டால் ஒரு ஒவ்வாமை வந்தது . தங்கள் அறைக்குச் செல்லாமல் , ஹாலில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டார் . அமைதியாக ஒதுங்கிக் கொண்டார் .

எத்தனை நாளைக்கு என்பது போல் மஞ்சுவை இளக்காரமாகப் பார்த்து விட்டு , மறுநாள் பலகாரத்திற்கு இதைச் செய் என்று அதிகாரம் செய்து விட்டு  நகர்ந்தார் விஜயன் . வீட்டில் அமைதியே நிலவியது .

 முதல் நாள் பெரிதாக ஒன்றும் தெரியாத போது , மறுநாள் மஞ்சுவிற்குத் தலைவலி மற்றும் காய்ச்சல் வரத் தொடங்கியது . முதலில் இதைப் பெரிதாக நினைக்காது வேலைகளை தொடர்ந்தார் . காய்ச்சல் அதிகமாக , இரண்டு , மூன்று நாட்களுக்குக் குடும்பத்தினருக்குத் தேவையானதைச் செய்து விட்டு , விவேக் அறையில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார் . 

 விவேக் சஞ்சு அறையில் தங்கிக் கொண்டான் . பிள்ளைகள் இருவரும் கவலையில் ஆழ்ந்தனர் .

காய்ச்சல் என்பதை அறிந்த விஜயன் , “நீ ஏன் போனாய் ? பிள்ளைகளுக்கு எதையும் பழக்காதே , கவனமாகப் போகத் தெரியாதா? இப்போது பிரச்சனையை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறாய்..” என்று விஜயன் வழக்கம் போல் பூட்டியிருந்த கதவின் பின் இருந்து கத்தினார் . 

இந்தப் பேச்சைக் கேட்ட பிள்ளைகள் ,  உடம்பு முடியாத நிலையிலும் , இந்த அசாதாரண சூழ்நிலையிலும் ஒருவரால் இப்படிக் கூட நடக்க முடியுமா? என்று அதிர்ந்தனர் .

மஞ்சுவின் நிலையோ , அந்தோ பரிதாபம்..! காய்ச்சலின் வேதனையில் அனத்திக் கொண்டிருந்தவர் காதுகளில் நாரசமாய் விஜயனின் வார்த்தைகள் விழுந்தது .தன் தேவைக்காக , தன்னை யாரும் குற்றம் சொல்லி விடக்கூடாது என்பதற்காக பேச்சை மாற்றும் , இவரின் அயோக்கியத்தனத்தைக் கண்டு விரக்தி அடைந்தார் .

விஜயன் கத்தி விட்டு ஒதுங்கிக் கொண்டார். பிள்ளைகளுக்குப் பயம் பிடிக்க , விவேக் ஆன்லைன் டாக்டரை அழைத்துப் பேசி , மருந்து மாத்திரை வாங்கித் தந்தான் .

விசயத்தைச் சஞ்சு கீத்துவிடம் பகிர , தோழிகள் பயந்து போனார்கள் . தன் தோழியைப் பார்க்க முடியாத சூழ்நிலை கண்டு தவித்தனர் . விவேக்கை அழைத்து , சமைத்துத் தர வா என்று கேட்டனர் . 

“இல்லை ஆன்ட்டி , அம்மா இரண்டு , மூன்று நாட்களுக்குத் தேவையானதைச் செய்து விட்டார்கள்” என்று மறுத்தான் .

“சரிப்பா , எதுவும் உதவி என்றால் கேள்” என்று போனை வைத்தனர் . பின் மஞ்சுவிடம் பேசித் தைரியமூட்டினர்.

 மஞ்சுவோ மனம் வெறுத்த நிலையாலும் ,  காய்ச்சலால் ஆன பலவீனத்தாலும் , தன் தோழிகளிடம் எனக்கு ஏதாவது ஆகி விட்டால் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருங்கள் என்று வேண்டிக் கொண்டார் .  

“என்ன பேச்சு இது ?” என்று தோழிகள் சத்தம் போட ,

“வாழவே ஆசையில்லை ராஜி , இன்னும் இந்த அசிங்கமான வாழ்க்கையில் தொங்க வேண்டும? என்று தோன்றுகிறது” என்று ஏதேதோ புலம்ப , தோழிகள் பயந்தனர் .தோழியின் மனநிலையும் , உடல் நிலையும் கவலை அளித்தது . மிகவும் பயந்தனர் . கடவுளை விடாது தொழுதனர் .

விவேக்கும் , சஞ்சுவும் ஏதோ செய்து சமாளித்தனர் . விஜயன் வழக்கம் போல் இருந்தார் .

பிள்ளைகள் அம்மாவிடம் போனில் பேசுவதும் அவரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்து கவனிப்பதிலும் இருந்தனர். அதே வேலையில் என் அம்மாவை நல்ல படியாகத் திருப்பிக் கொடுத்து விடு என்று கடவுளிடம் கோரிக்கையும் வைத்துக் கொண்டே இருந்தனர்  .

அத்தியாயம் 22

மேலும் இரண்டு நாட்கள் செல்ல , மஞ்சுவிறகுக் காய்ச்சல் குறையவில்லை. மேலும் உணவு உட் கொள்வதும் குறைந்தது . முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட விஜயன் , காய்ச்சல் குறையாமல் இருப்பதைக் கண்டு சற்று பயந்து போனார் . 

மீண்டும் விவேக் மருத்துவரிடம் பேசி ,வேறு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தான் .நான்கு நாட்கள் செல்ல , மஞ்சுவிற்கு லேசான மூச்சு திணறல் வர , மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தனர் .

மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்தனர் , விவேக் மற்றும் மஞ்சுவின் தோழிகள் , நண்பர்கள் , தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள் , ஹெல்ப் லைன்கள் என எல்லா முயற்சியும் செய்தனர் . இறுதியில் ராதாவின் கணவர் மூலம் அவர் வகுப்பில் படிக்கும் மாணவனின் தந்தை அரசு மருத்துவராக இருக்க , அவரைப் பிடித்து இடம் வாங்கினர் .

 அடுத்து ஆம்புலன்ஸ் கிடைக்கப் பெரிய போராட்டமாக இருக்க , நேரம் போகப் போக விஜயனுக்குப் பயம் பிடித்துக் கொள்ள , அடுத்து என்ன செய்வது ?  என்று தெரியாமல் திகைத்து நின்றார் . 

ஒருவழியாக ஆம்புலன்ஸ் வர , மஞ்சு ஆம்புலன்ஸில் ஏற , விஜயன் ஏதோ சொல்ல வர ,  அவரை திரும்பியும் பாராது , ஆம்புலன்ஸில் ஏறினார் மஞ்சு . 

விவேக்கிற்கு அப்பாவிடம் பொறுப்பைத்  தர விருப்பமில்லை. அம்மாவ அதில் விருப்பமில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டான் .

கிளம்பும் முன், “பேசிப்பேசியே அம்மாவை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டீர்கள் ,  சஞ்சுவை வீட்டில் விட்டுச்  செல்லுகிறேன் , தயவுசெய்து எதுவும் சொல்லி விடாதீர்கள்” என்று கோபமாகப் பேசி விட்டு , சஞ்சுவிடம் தைரியம் சொல்லி விட்டு , ஆம்புலன்ஸில் அம்மாவுடன் சென்றான் .

ஆம்புலன்ஸில் சற்றுத் திணறலுடன்,  “ராஜா..” என்று மஞ்சு அழைக்க , 

“அம்மா…” என்று கண் கலங்கினான் .

“தைரியமாக இருடா ராஜா . சஞ்சுவைப் பார்த்துக்கோடா …” எனும் போதே மஞ்சுவிற்கு மூச்சு மிகவும் வாங்க , பிராணவாய்வு பொருத்தப்பட்டது .

“அம்மா…. , அம்மா….”  என்று அரற்றியபடி , கண்ணீர் வடிய அம்மாவைப் பார்த்திருந்தான் .

மிக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு படுக்கை கிடைக்க , மஞ்சுவிற்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது . நிமிடங்கள் யுகங்களாக , விவேக் தனியாக தவித்து நின்றான் .

 சஞ்சு போன் செய்து அழ , அவளைச் சமாதானப்படுத்தி விட்டு , மனம் முழுவதும் அம்மா நல்லபடியாகத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று வேண்டுதலோடு காத்திருந்தான் .

 ராதா ,  ராஜி ஆன்ட்டி என்று அனைவரும் போன் மூலம் நலம் விசாரித்தபடி தைரியம் ஊட்டினர் . 

விஜயனும் அழைத்துப் பேசினார் . வேண்டா வெறுப்பாகப் பதில் சொன்னான் . மனதில் இனம் புரியாத கோபம் சுழன்று கொண்டே இருந்தது .

விவேக் கீத்துவிற்குப் போன் செய்து , சஞ்சுவுடன் அடிக்கடி பேசி தைரியம் ஊட்டச் சொன்னான் , பார்த்துக் கொள்ளும் படி வேண்டினான் .

“சஞ்சுவை நான் பார்த்துக் கொள்கிறேன் , நீங்கள் தைரியமாக இருங்கள் குரு…” என்றாள் கீத்து .

“தாங்கஸ்” எனப் போனை வைக்கப் போனவனிடம் , “சாப்பிட்டீங்களா ?” எனக் கேட்க ,

“இனிமேல் தான்….”

“உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் , கவனம்…” என்று போனை வைத்தாள் .

ஒரு மணி நேரத்திற்குப் பின் , “சாப்பிட்டீங்களா ?” என்ற கேள்வியோடு  பதிவு வர , 

“ஆம்” என்று அனுப்பி விட்டு கண்களை மூடிக் கொண்டான் . 

தொடரும்……