பக்கவாட்டு மேஜையில் இருந்த அவளுடைய கைப்பேசியை எடுப்பதும் சில நொடிகள் கழித்து மறுபடியும் மேஜை மீது வைப்பதுமாக ஒரு முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் வசந்தி. இரவு பதினொரு மணியாகி இருந்தது. இத்தனை நேரமாக அவளோட பேசிக் கொண்டிருந்த விஜயா இப்போது தான் கண்ணயர்ந்திருந்தார். அவரை எழுப்பாமல் மிக நிதானமாக படுக்கையிலிருந்து எழுந்து கொண்டவள், சத்தம் செய்யாமல் கதவைத் திறந்து கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள். படபடத்துக் கொண்டிருந்த இதயத்தை நிதானத்திற்கு கொண்டு வந்து மதனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள். அந்த நேரம் மதன் அவரது இல்லத்தில் தான் இருந்தார். தொலைக்காட்சியில் உலக நடப்பு செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது அருகே ஒலித்துக் கொண்டிருந்த கைப்பேசியைக் கையில் எடுத்தவர் அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் லேசான புன்னகை மலர்ந்தது.
“சொல்லுங்க.’ என்றார்.
வசந்திக்கு வார்த்தைகள் வரவில்லை. அவள் என்று எப்படித் தெரிந்தது என்று யோசனையாவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளது மௌனத்திற்குக் காரணம் தெரிந்ததால்,”நானே உங்களுக்கு ஃபோன் செய்து பேசணும்னு நினைச்சிருந்தேன்..நீங்களே ஃபோன் செய்திட்டீங்க,” என்றார்.
“அதையே தான் உங்ககிட்டே கேட்கணும்னு நினைச்சேன்..எதுக்கு அண்ணிகிட்டேயிருந்து என்னோட ஃபோன் நம்பர் வாங்கினீங்க?” என்று கேட்டார் மதன்.
அவள் நம்பர் வாங்கியதை மதனிடம் சொல்லியிருப்பார் அனிதா என்று அவள் நினைக்கவில்லை. திடீரென்று தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் பெரும்பாலும் அதை நிராகரிப்பது தான் வழக்கம் என்பதால் அவள் நம்பர் பெற்றதைப் பற்றி மதனிடம் சொன்னது நல்லது தான் என்று வசந்திக்கு தோன்றியது. எதற்காக என்று பதில் சொல்லுமுன் அவருக்கு நன்றி சொல்லி விடலாமென்று நினைத்தபோது,
“உங்க கேஸ் ஸ்ட் ராங்க் தான்..பிரச்சனை இல்லாம விவாகரத்து கிடைச்சிடும்..கவலைப்பட வேணாம்.” என்று ஆறுதல் சொன்ன மதன் வெங்கடேஷிற்கும் அவனது குடும்பத்தினர்க்கும் மறைமுகமாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை. வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு அடிக்கடி சென்று வந்த வெங்கடேஷின் தங்கை கணவன் இப்போது இந்தத் துறை அந்தத் துறை என்று அலைக்கழிப்படுகிறான். சென்னை ஃபிளாட்டை விற்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் வெங்கடேஷின் தந்தை. பெங்களூரில் வீடு தேடிக் கொண்டிருந்த வெங்கடேஷ் இப்போது அங்கே வேலை தேடிக் கொண்டிருக்கிறான். திடீரென்று அவனுடைய வாழ்க்கையில் இத்தனை இன்னல்கள் எப்படி என்ற கேள்விக்கு, வசந்தியின் தம்பி தான் காரணம் என்று அவனுடைய தங்கையும் அம்மாவும் அடித்து சொல்ல, ‘அவளை விடக் கூடாது.’ என்று வஞ்சம் வைத்துக் கொண்டவன் அறியவில்லை ‘விட்டால் போதும்’ என்று வசந்தியின் அனைத்திற்கும் ‘ஆமாம்’ போட்டு விவாகரத்து அளிக்கப் போகிறானென்று.
விவாகரத்தைப் பற்றி மதன் பேசியவுடன் தான் வசந்திக்கு அது நினைவிற்கு வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக அதைப் பற்றி யோசிக்க கூட இல்லை. தற்போது நிலவும் சூழ்நிலையில் அவளுடைய பிரச்சனைகளை அனைத்தும் மாயமாகி விட்டன.
விவாகரத்தைப் பற்றி வசந்திக்கு கவலை இருந்தாலும் வெங்கடேஷினால் பிரச்சனை வராது அப்படி வந்தாலும் பார்த்துக் கொள்வதாக அக்காக்கு வாக்கு அளித்திருந்தான் தம்பி. ‘அந்த ஆளை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்..விவாகரத்து கொடுக்கறேன் விட்டிடுங்கண்ணு கதறப் போறான்..உனக்கு எவ்வளவு வேணும்னு மட்டும் நீ முடிவு செய்..மற்றதை நான் பார்த்துக்கறேன்.’ என்று உறுதி அளித்திருந்தான். ‘எனக்கு என்ன டா தெரியும்? நீயே முடிவு செய்’ என்று சொல்ல,’நீ தான் முடிவு செய்யணும்..இங்கே எங்களோட இருந்தாலும் சரி இல்லை தனியா வேற ஊர்லே இருக்கணும்னாலும் சரி..எதுவா இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு போடு..அதை சரிப் பார்த்து நீ கேட்கறதை விட அதிகமா வாங்கித் தரேன்.’ என்று சொல்லியிருந்தான்
விஜயா சித்தியுடன் கலந்து ஆலோசித்து அவளது எதிர்பார்ப்பை ஷண்முகத்திடம் தெரியப்படுத்தினாள் வசந்தி. இதற்கிடையே அவனிடமிருந்து பெற்றுக் கொண்ட தொகையை சபாபதி திருப்பிக் கொடுக்க, வசந்தி பெயரில் வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து பாதியை வைப்பு நிதியில் போட்டு மீதியை அவளின் செலவுகளுக்காக ஒதுக்கினான் ஷண்முகம்.
“எதுக்கு எனக்கு கொடுக்கற டா? உங்களோட பணம் டா அது.” என்று வசந்தி மறுப்பு தெரிவிக்க,
“அப்படிப் பிரிச்சு பேசாதே வசந்தி.” என்று விஜயா அவளைக் கடிந்து கொண்டார்.
“உன் வாழ்க்கையைச் சீர்ப்படுத்த வாங்கின பணம்..அந்த வேலை இன்னும் முடியலை..இன்னும் ஆரம்பிக்கவேயில்லை..அது உன்னோடது, உனக்கானது..தொழில், படிப்பு, ஊரைச் சுத்திப் பார்க்கன்னு உன் விருப்பம் போல அதை உபயோகிச்சுக்கோ.” என்று தம்பி சொன்னதும் அவள் மீது அவன் கொண்டிருந்த அன்பு, நம்பிக்கை அவளுக்கு அழுகையை கொடுக்க, தம்பியைக் கட்டிக் கொண்டு அழுதாள் அக்கா.
அந்த நிகழ்வு நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. அவளுடைய பெற்றோரும் உடன்பிறப்புக்களும் அவளுடன் உறவை அறுத்துக் கொண்ட சில வாரங்களிலேயே அவளது விவாகரத்து வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. பெங்களூரில் நடந்தவைகளுக்கான ஆதாரங்கள் அனைத்தும் மதன் மூலமாக தான் சேகரித்தான் தம்பி என்று அவளுக்குத் தெரியும். இப்போதுவரை அனிதா தான் அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இரண்டு முறை அவர்கள் வீட்டிற்கு மதன் வந்திருந்த போது அவரைப் பார்த்து சிறு புன்னகை. அவ்வளவு தான் அவர்களுக்கிடையே இருந்த தொடர்பு. இதுவரை ஒரு வார்த்தை கூட மதனிடம் நேரடியாக பேசியதில்லை. அவளிடம் நலம் கூட விசாரித்ததில்லை மதன். அவருடைய வீட்டில் கழித்த அந்த நாள்களை எண்ணிப் பார்க்க வசந்தி விரும்பவில்லை என்றாலும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் அந்த நேரத்தில் அவளுக்கு உதவி செய்யவில்லை என்றால் அதைக் கடந்து வந்திருக்க முடியாது என்று புத்திக்கு புரிந்தாலும் இன்றுவரை அதற்காக அவரிடம் ஒரு நன்றி கூட உரைத்ததில்லை. மதனின் கைப்பேசி இலக்கை பெற்றதிலிருந்து அது பெரும் தவறாக தோன்றியது. முதலில் நன்றி சொல்லி விட்டு அதற்கு பின் அவளுக்கு தேவையானதை தகவலை விசாரிக்கலாம் என்று அவள் எண்ணிய போது தான் அவளது விவாகரத்தைப் பற்றிய பேச்சு வந்தது.
“இல்லை..இல்லை..அதைப் பற்றி கேட்க நம்பர் வாங்கலை.” என்று சொன்ன வசந்தி அதே கதியில்,”தம்பிகிட்டேயிருந்து இரண்டு வாரமாத் தகவல் இல்லை..அதான்.” என்றாள்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று மதனிற்குத் தெரியவில்லை. இரண்டு வாரங்களாக ஷண்முகத்திடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்பது அவருக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. அவன் சென்றிருக்கும் அசைன்மெண்ட மிகவும் முக்கியமானது, அபாயகரமானது. தகவல் வரவில்லை என்றால் பிரச்சனை எதுவுமில்லை என்று தான் அவர்களின் கருத்து.அதற்கு நேர்மாறாக தான் வீட்ட்னர்கள் யோசிப்பார்கள். ஷண்முகத்திற்கு அவருக்கும் அலுவலகத்தைத் தாண்டி ஒரு நட்புறவு இருப்பதால் தான் அவனைப் பற்றி அறிய அழைத்திருக்கிறாள் என்று புரிந்தாலும்,
“அதுகென்ன?” என்று உயர் அதிகாரி அவதாரம் எடுத்தார் மதன்.
‘அப்படியா, நான் பேசிட்டு தான் இருக்கேன்..உங்களோட பேச அவனுக்கு நேரம் கிடைக்கலை போல.’ என்று சமாதானமாக பேசுவார் என்ற எதிர்பார்பு தகர்ந்து போன பிறகு அந்த உரையாடலை எப்படி எடுத்துச் செல்வது என்று வசந்திக்குத் தெரியவில்லை.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு,”இந்த மாதிரி முன்னே நடந்ததில்லைன்னு சித்தி சொல்றாங்க.” என்று வசந்தி சொன்னவுடன்,
“அவங்க அப்படிச் சொன்னா அவன் பிஸியா இருப்பான்னு நீங்களே சமாதானம் சொல்ல வேண்டியது தானே.” என்றார்.
அப்படிச் சமாதானம் சொல்லும் சூழ்நிலை வீட்டில் இல்லை. இந்த நேரத்தில் மனைவியோடு இருக்க முடியாவிட்டாலும் அவளோடு தொடர்பிலாவது இருக்க வேண்டுமென்ற சித்தியின் எண்ணம் சரியென்று தான் தோன்றியது. சினேகாவினுள் என்ன ஓடுகிறது என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் போல் அவளது வேலைகளைச் செய்தபடி சாதாரணமாக அவள் வளைய வர அது அவள் இருக்கும் நிலைக்கு மாறாக இருக்க, அதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாமல் அவள் போக்கு போல் அவர்களும் நடந்து கொண்டனர். இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த நிலை நீடிக்குமோ? ஏதாவது விபரீதமாக நடந்திருக்குமோ? என்ற சஞ்சலத்திற்கு விடை கண்டுபிடிக்க தான் மதனின் கைப்பேசி இலக்கை வாங்கி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தாள். அவருடன் நடந்த உரையாடல் அவளுள் கலவரத்தை ஏற்படுத்த, விஷயத்தை சொன்னால் சரியான பதில் கிடைக்கலாம் என்று முடிவு செய்து,
அதைக் கேட்டு லேசாக மிக லேசாக திடுக்கிட்டுப் போன மதன் சட்டென்று அவரைச் சுதாரித்துக் கொண்டு,”அத்தை ஆனதற்கு என்னோட வாழ்த்துக்கள்..ஷண்முகத்தோட இடத்திலிருந்து நீங்க தான் எல்லோரையும் ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும்..உங்க வருங்கால மருமகன், மருமகள் உள்பட.” என்றார்.
சில நொடிகள் கழித்து,”எனக்குப் பயமா இருக்கு.” என்று மறைக்காமல் அவளது மனநிலையை வெளியிட்டாள் வசந்தி.
“எதுக்கு?” என்று மதன் கேட்க,
வசந்தியிடமிருந்து அதற்கு பதில் வரவில்லை. சில நொடிகள் காத்திருந்த பின்,”நான் கேட்கப் போறத்துக்கு உண்மையா பதில் கொடுப்பீங்களா?” என்று அவளிடம் கேட்டார்.
அதற்கும் வசந்தியிடமிருந்து பதில் வரவில்லை. அதற்காக காத்திருக்காமல்,
“போன வருஷம் இதே நேரம் உங்க வாழ்க்கை இப்படி மாறிப் போகும்னு நினைச்சீங்களா?” என்று கேட்க,
நொடி கூட தாமதிக்காமல்,”இல்லைங்க..இல்லவேயில்லை.” என்று பதிலுரைத்தாள் வசந்தி.
“வாழ்க்கை என்ன வைச்சிருக்குன்னு தெரியாம தான் எல்லோரும் வாழ்ந்திட்டு இருக்கோம்..சாயங்காலம் இங்கே போகணும், நாளைக்குஅங்கே போகணும், இந்த வாரத்திலே இதை முடிக்கணும், அடுத்த வருஷத்துக்குள்ளே அதை முடிச்சிடணும்னு கெடு வைச்சு, (இது எனக்கும் பொருந்தும் வாசர்கர்களே..கதையை இப்போ முடிக்கணும்..அப்போ முடிக்கணும்னு பயங்கரமாத் திட்டம் போடுவேன்..அப்புறம் வேற வழியில்லாம எப்படிப் போகுதோ அந்த வழிலே போயிடுவேன்) திட்டம் போட்டு வாழ்ந்தாலும் சில சமயங்கள்லே திட்டம் போட்டதை விட நல்ல விதமா நடக்கும் இல்லை மோசமாவும் போகும்..எது எப்படி நடந்தாலும் அதைக் கடந்து போயிடணும்.” என்றவுடன்,
“என்ன சொல்ல வர்றீங்க? தம்பிக்கு..” என்ற வசந்தியின் வாக்கியத்தை முடிக்க விடாமல்,
“இப்போ அவன் உங்க எல்லோரோட இல்லைன்னாலும் அவன் குழந்தைக்கு அம்மா, பாட்டி, அத்தைன்னு நீங்க எல்லோரும் இருக்கீங்க தானே..” என்றவரை மீண்டும் இடைமறித்து,
“நாங்க எல்லோரும் இருந்தாலும் அப்பா அவன் தானே..அந்த இடத்தை..” என்று வாக்கியத்தை முடிக்காமல் மௌனமாகிப் போனவளிடம்,
“எல்லாக் குழந்தைங்களுக்கும் அப்பா, அம்மா இரண்டு பேரும் அவசியம் தான்..சுதனுக்கு ரொம்பவே அவசியம்..என்னோட அண்ணி, அண்ணன் இரண்டு பேருக்கும் தினமும் சுதனோடு இருக்க தான் விருப்பம்..நடைமுறைலே அது சாத்தியமில்லை..சுதன் அதை உணராத விதத்திலே அவங்க இரண்டு பேரும் அவனைச் சமாளிக்கக் கத்துக்கிட்டாங்க..அது போல ஷண்முகம் இருந்தாலும் இல்லைன்னாலும் நீங்க எல்லோரும் அவனுக்கும் சேர்த்து அவனோட குழந்தையைக் கவனிச்சுக்கணும்..புரிஞ்சுதா?” என்று மதன் கேட்க, வசந்தியிடமிருந்து பதில் வரவில்லை.
சில நொடிகள் கழித்து,”வசந்தி, நீங்க இருக்கற மனநிலைலே உங்களாலே இதைக் கையாள முடியாது….விபரீதமான சிந்தனைகள் வர்றத்துக்கு முன்னாடி சினேகாவையும் உங்க சித்தியையும் கௌன்சல் பண்ணனும் நினைக்கறேன்..சினேகாவோட அண்ணியை பேசச் சொல்றேன்..இந்த மாதிரி நேரத்திலே தாயும் சேயும் நல்ல ஆரோக்கியதோட இருக்கறது ரொம்ப முக்கியம்.” என்றார்.
அவளால் முடியாது என்று மதன் சொன்னவுடன் தம்பியின் குழந்தையை நல்ல விதமாக இந்த உலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்று வைராக்கியம் பூண்டாள் வசந்தி. எனவே,”அத்தை நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும்..அப்பா வர்றபடி வரட்டும்.” என்று மதனிற்கு வாக்கு கொடுத்தாள்.