காலையில் எழுந்த பின்னும் விஜயன் தோள்களில் தொங்கிக் கொண்டே திரிந்தாள்.
“என்ன தான் ஆச்சு உனக்கு?” என்று விஜயன் கேட்கவே செய்தான்.
“ரியல்லி எனக்கு ஏதோ பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு. ஐ வாஸ் ரியல்லி வொரீட் அபவுட் ப்ரித்வி, என்னால அவனோட வாழ்க்கையை அப்பா நாசமாக்கிட்டார்ன்னு ஒரு கில்ட் கான்ஷியஸ். நேத்து தான் கொஞ்சம் தெம்பா ஃபீல் பண்ணினேன். காஞ்சனா ப்ரித்விக்காக தான் வந்தா, என்னால ஃபீல் பண்ண முடியுது”
“இப்படின்னு தெரிஞ்சிருந்தா அவங்களுக்குள்ள முன்னமே எல்லாம் சரியாக்கி இருப்பேன்” என்று அவளை கொஞ்சிக் கொண்டே சொல்ல…
“பாருடா அவ்ளோ பெரிய ஆளா நீங்க?”
“பின்ன இல்லையா?” என்று சரசங்கள் மீண்டும் தொடர்ந்தது.
சைந்தவி நிறுத்தாமல் பேசிக் கொண்டே சென்றாள், எதை பேசினாலும் பேசினாள். விஜயன் நிறுத்தினால் அதற்கும் விடவில்லை.
அவளை நிறுத்தும் விதமாக “ம்ம் அப்புறம்” என்றவன் உதடுகள் அவளின் உதடுகளை மீண்டும் உரசியது.
“நான் என்ன கதையா சொல்றேன்” என்று முறைத்தாள்.
“நீ என்ன வேணா சொல்லு, கேட்க தான் நான் இருக்கேனே” என்றான் இதழ்பிரியா வசீகரப் புன்னகையுடன்.
அவனின் முகத்தை பார்வையால் பருகிக் கொண்டே “ஐ அம் ஹேப்பி ஃபார் ப்ரித்வி. அவனோட வாழ்க்கை சரியாகணும்” இப்படி பேசிக் கொண்டேயிருந்தாள்.
“அவனை விடு, அவன் பார்த்துக்குவான். நீ என்ன முடிவு பண்ணியிருக்க” என்றான் ஆழ்ந்த குரலில்.
பின்னே இரண்டு நாட்களாக கேட்கிறான் “பார்த்துக்கலாம்” என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
இப்போது அவன் கேட்கவும், அவன் மேலே தொங்கிக் கொண்டே “எனக்குத் தெரியலை. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா” என்று அவன் மேல் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
சில நொடி விட்டு “எனக்கு உங்களை விட்டுட்டு இருக்க வேண்டாம்” என்று சொல்ல, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
அணைப்பிலேயே எவ்வளவு நேரம் நின்றனர் என்று தெரியவில்லை. என்னவோ அவள் மனதில் உளப்பிக் கொள்கிறாள் என்று புரிந்தது. அமைதியாகவே இருந்தான்.
“ரொம்ப கஷ்டமா இருக்கும் தனியா இருக்க, எனக்கு இருக்க முடியும்னு தோணலை” என்றாள் மெதுவாக.
“அப்புறம் எதுக்கு அப்ளை பண்ணின?”
“அது அப்போ நாம சேர்ந்து இல்லை”
எல்லாம் அவன் மேல் முகம் புதைத்தே. சில நிமிடங்களில் ஈரம் உணர்ந்தான். பதறி அவள் முகம் பார்க்க விழைய, அவள் விட்டால் தானே, இன்னும் இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
“என்ன சவீ, சொன்னா தானே தெரியும்”
“எனக்கு சொல்லத் தெரியலையே” என்றவள் அழ…
“ப்ச், என்னைப் பாரு”
பார்க்கவே விடவில்லை இன்னும் இன்னும் இறுக்கினாள்.
“உனக்குத் தான் வலிக்கும். என்னைப் பார்க்க வேண்டாம் ரிலாக்ஸ்” என்று தட்டிக் கொடுத்தான்.
கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை. சகிக்க முடியாமல் “என்னடி உனக்கு” என்று அதட்டலிட, அது சற்று வேலை செய்தது.
“எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை, நான் யோசிக்கறது எல்லாம் தப்பாகுது, உன்னைக் கல்யாணம் பண்ண நினைச்சேன், பண்ணிட்டேன் ஆனா உன்னை விட்டு வந்துட்டேன், இது எல்லாம் என்னோட முடிவு தானே”
“இப்போ தான் நாம சேர்ந்து இருக்கோம், எனக்கு படிக்கப் போகவா வேண்டாமா தெரியலை. எனக்குப் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை”
“வேற எதுல இன்ட்ரெஸ்ட்”
“குழந்தை பெத்துக்கணும்” என்று அப்போது தான் நிமிர்ந்து அவன் முகம் பார்த்துச் சொன்னாள்.
அவளின் பதிலில் சிறு சிலிர்ப்பு அவனுள். அவளின் அழுத முகத்தை பார்த்து புன்னகையோடு “அதுக்கும் நீ படிக்கறதுக்கும் என்ன சம்மந்தம்?”
அவனை முறைத்துப் பார்த்தாள்.
“யாரு பேபியைப் பார்த்துக்குவா?”
“நான் இருக்கேன் தானே”
கண்கள் இடுங்க அவனை பார்த்தவள் “நான் படிக்கப் போயிட்டா பேபி எப்படி வரும், இங்க இங்க நடந்ததுக்கு வந்துட்டாலும் அங்கே வந்து நீங்க எப்படி பார்த்துக்குவீங்க”
“அமெரிக்காக்காரன் எங்கப்பா மாதிரி உங்களை எப்படி விடுவான்” என்று நக்கலாகக் கேட்டாள்.
அவள் கேட்ட விதமே அத்தனை அழகாய் இருந்தது.
கேட்டதை விட்டு அவளின் இதழ்களை வருடியவன் “யோசிப்போம், நீ அக்சப்டன்ஸ் குடுத்துடு” என்றான் மயக்கும் குரலில்.
அப்போதும் அவனையேப் பார்த்திருக்க “குடு சவீ பார்த்துக்கலாம், இப்போ நம்மை பார்க்கலாம். அநியாயத்துக்கு என்னை நீ கெட்ட பையன் ஆக்குற காலையில”
“என்னை கட்டிப் பிடிச்சா கெட்ட பையனா?”
“காலையில இதெல்லாம் பண்ணினா கெட்ட பையனாம்”
“யார் சொன்னா?” என்றவள் வீம்பாக முகத்தை அவனுக்கு அருகில் கொண்டு சென்று “சரி, கெட்ட பையனாகிட்ட இன்னும் கெட்ட பையனாகிடு” என்க.
“நோ, நோ, நான் நல்ல பையன்” என்றான் சிறு சிரிப்போடு.
“சரி, நான் கெட்ட பொண்ணாகிடறேன்” என்று அவனின் இதழ்களைத் தீண்ட, மெல்லிய இதழ் பரிமாற்றம்.
“உப்புக் கரிக்குதுடி, என் அழு மூஞ்சி”
“அப்போ வேண்டாமா?”
“கரிக்கட்டுமே, என்ன இப்போ? என்றவன் அவளை அணைப்பிலேயே வைத்திருந்தான்.
“அதுக்குத் தான் என்னைக் கொஞ்சிக்கிட்டே இருக்கியா, எனக்காகவோ உனக்காகவோ இல்லையா?”
அவனின் கேள்வியில் விழித்தவள், “ஆங்” என்றாள் வாய் பிளந்து.
அவன் இருபுருவம் உயர்த்தி கேலி செய்தான்.
“ஏன்? என்னைக் கொஞ்ச வைக்கிற அளவுக்கு உனக்குத் திறமை இல்லையா?” என்று அவனை விட்டு தள்ளி நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“யாருக்குத் தெரியும், நீ தான் சொல்லணும்”
“பின்னையே சுத்தறேன்” என்றவள் பச்சையாக சில வார்த்தைகளை உதிர்த்தாள்.
கேட்டவன் “அம்மாடி” என்று வாயில் கை வைத்தான்.
“இன்னுமா உங்களுக்கு சந்தேகம்”
“அம்மா தாயே தெரியாம பேசிட்டேன், இனி நோ டாக்கிங்” என்று பாவமாய் சொல்ல…
“அது” என்று இன்னுமே முறைத்து நிற்க, அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“உனக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிச்சது, பிடிக்குது” என்று எப்போதும் கேட்கும் கேள்வியை கேட்டவன்…
“அக்சப்டன்ஸ் குடு, அப்போ தான் ஆஃபிஸ்ல நோட்டீஸ் குடுக்க முடியும். எப்போ போகணும்னு தெரியலை, மூணு மாசம் செர்வ் பண்ண முடியுமான்னு தெரியலை, நீ போக பணம் வேணும், அங்கே பீஸ் க்கு ஸ்காலர்ஷிப் வந்தாலும் சில லட்சங்கள் நம்மகிட்ட கண்டிப்பா வேணும்”
அவனின் திட்டமிடலை பார்த்திருந்தாள்.
“சாரி, கைல கொஞ்சமும் பணம் வெச்சிக்காததுக்கு” என்றான் தடுமாறியபடி.
“பணமெல்லாம் பிரச்சனை இல்லை ப்ரித்வி இருக்கான் பார்த்துக்குவான், நாம அப்புறம் குடுத்துக்கலாம். அதுகெல்லாம் ஸ்ட்ரெஸ் ஆக வேண்டாம். என்கிட்டயும் இப்போ நான் சம்பாரிச்சது கொஞ்சம் இருக்கு” என்றாள் அவசரமாக.
அவளுக்குப் போகவேண்டும் வேண்டாம் என்பதை விட, அவனின் பணமில்லை என்ற வருத்தமான வார்த்தைகள் கவலையைக் கொடுக்க, உடனே பேசினாள்.
“இல்லை நான் நம்பலை” என்ற குரலே நீ சொல்லியே ஆகவேண்டும் என்ற வற்புறுத்தலைக் கொடுத்தது.
“அது, அப்பா அம்மாவை மீறி வந்தேன். அவங்களோட நம்பிக்கையை உடைச்சிட்டு. உங்களோடவும் இருக்கலை. பின்ன நான் அங்கே போனப்போ அவங்க என்னை அனுப்பிட்டாங்க, இன்னொரு வார்த்தைல சொல்லப் போனா என்னை துரத்திட்டாங்க. ரொம்ப மோசமா ஹர்ட் ஆனேன்” சொன்னவளுக்கு கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது.
“நமக்கு பிடிச்ச மாதிரி இருந்தா தான் பிள்ளைங்க இல்லைனா பிள்ளைங்க இல்லைன்னு சொல்லிடுவாங்களா? நான் பண்ணினது தப்பாவே இருக்கட்டும், ஆனா அவங்கக்கிட்ட தானே போனேன். இனி உன்னோட போகக் கூடாதுன்னு சொல்லியிருந்தா வேற. ஆனா என்னை வேண்டாம்னு துரத்தி விட்டாங்க”
“ப்ரித்வி இல்லைன்னா என்னாகியிருப்பேன்னு சொல்ல முடியாது” என்றவளுக்கு மீண்டும் அழுகை பொங்க, அவனை அணைத்துக் கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள்.