அத்தியாயம் – 28

“நீ ரிஸ்க் எடுக்குற பையு.. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு…” என்று தினேஷ் தீவிரமான முக பாவனையுடன் பேச,

“முடிவு பண்ணதுதான் தினு. உன்னால முடிஞ்சா நீ ஹெல்ப் பண்ணு. இல்லையா விடு பார்த்துக்கலாம்…” என்றாள் பைரவி உறுதியான பாவனையுடன்.

இவர்கள் இருவரும் பேசுவதை சந்தோஷி, அகிலா, ஜான் மூவரும் பார்த்துக்கொண்டு இருக்க, பைரவியின் குரலில் இருந்தே, அவள் எத்தனை உறுதியாய் இதில் இருக்கிறாள் என்பது அனைவருக்கும் புரிந்தது.

ஆனாலும் அவளுக்கு அங்கே பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்தும் அவளை எப்படி அங்கே அனுப்ப முடியும்?

இவள் அங்கே சென்று, அது மேலும் பைரவிக்கும் சிவாவிற்கும் பிரச்சனையை உண்டு செய்தால், என்ன செய்வது என்று அதுவேறு யோசனையாய் இருந்தது. 

யாரேனும் உடன் போய் இருக்கலாம் என்றால், அகிலா திருமணம் முடிந்து, இதோ இப்போது தான் கருவுற்று இருக்கிறாள். சந்தோஷிக்கு திருமணம் பேசியாகிவிட்டது. ஜானும் தினேஷும் அவளோடு சென்று தங்குவது அத்தனை ஏற்புடையதாய் இருக்காது. அவள் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தாலும், யாருக்குமே பைரவியை மீண்டும் அங்கே தனியாய் அனுப்ப மனதில்லை.

தினேஷோ “நீ அங்க போய் இருந்துட்டு தான் ஹெல்ப் பண்ணனுமா பைரவி? நீ யாருன்னு சொல்லாம கூட இதெல்லாம் செய்யலாம். அதுவுமில்லாம சிவா…” என்று எதையோ பேசவர,

“நான் திரும்ப அங்க போறது சிவாக்காக இல்லை. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க. என் அம்மாக்காக போறேன். அவங்க பக்கம் தப்பே இல்லைன்னாலும், அவங்க பேச்சு கேட்டு, பணம் போட்டு உயிர் விட்டவங்க, வாழ்கையை தொலைச்சவங்களுக்கு யார் பதில் சொல்றது. எல்லாத்தையும் நான் சரி பண்ண முடியாது.

கூடியமட்டும் என் அம்மா மேல இருக்க தப்பான ஒரு அபிப்ராயத்தை மாத்தலாம் இல்லையா. முடிஞ்ச அளவுக்கு அங்க இருக்கவங்களுக்கு உதவிகள் பண்ணலாம் இல்லையா. ஒரு பொண்ணா என்னோட கடமை இது தானே. கோடி கணக்குல பணம் இருக்கு. ஆனா அம்மா இல்லை. ஒருவேளை அம்மா இருந்திருந்தா கூட இதை தான் செய்யச் சொல்லி இருப்பாங்க. அதனால தான் என்னை அங்க போய் ஸ்டே பண்ண சொல்லிருக்காங்க. சோ ப்ளீஸ், இதுல எந்தவித மாற்று கருத்தும் இல்லை…” என்று பைரவி பேசி முடிக்க,

“முன்னாடின்னா கூட, அங்க யாருக்கும் எதுவும் தெரியாது பைரவி. ஆனா இப்போ நீயே, நீ இன்னாரோட பொண்ணுன்னு சொல்லப் போறேன்னு சொல்ற. அதான் பயமா இருக்கு…” என்றாள் சந்தோஷி.

“வேற வழி இல்லை சந்து. ஹேண்டில் பண்ணித்தான் ஆகனும். இன்னும் எத்தனை வருசத்துக்கு நான் இப்படியே இருக்க முடியும். ரூப்பாவோட அப்பாக்கிட்ட இதைப்பத்தி பேசினேன். அந்த ஏரியால பிரச்சனைகள் போயிட்டு இருந்தப்போ தான், ரூப்பாவோட அப்பா, அங்க பக்கத்து ஏரியால இன்ஸ்பெக்டரா சார்ஜ் எடுத்திருக்கார். சோ அவருக்கு இந்த கேஸ் பத்தி நிறையவே தெரிஞ்சிருக்கு. அவருக்கு தெரிஞ்ச விபரங்கள் எல்லாம் சொன்னார்.

அம்மா அந்த பைனான்ஸ் கம்பனிக்கு விளம்பரம் செஞ்சதுக்காக, அந்த வீட்டை அவங்க கொடுக்கல. விளம்பரம் பண்ணதுக்கு சம்பளமா, அந்த இடம் வாங்க அந்த கம்பனிக்காரங்க, கால்வாசி பணம் கொடுத்து இருக்காங்க. அவ்வளவு தான். ஆனா அதுவே அம்மாக்கு அவங்க கமிசன் கொடுத்தது போல ஆகிருச்சு.

அங்க நான் வாழ்ந்திருக்கேன் தானே. பாதி குடும்பத்துக்கும் மேல, அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டு சம்பாரிச்சு வாழ்ற குடும்பம் தான். அதுல எத்தனை பேர், அந்த கமபனில பணம் போட்டு ஏமாந்து போனாங்களோ. அத்தனை ஏன், சிவாவையே எடுத்துக்கோங்க, நல்லவிதமா வளர்ந்ததுனால ஆச்சு. இல்லைன்னா என்னாகி இருக்கும்…” என்று பேச, அங்கே கனத்த மௌனமே.

பைரவிக்குமே உள்ளூர சிறு பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் என்ன நடந்தாலும் தன் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். தான் அங்கே மீண்டும் வருவது, அதுவும் இன்னாரின் மகள் என்ற அடையாளத்தோடு வருவது சிவாவிற்கு தெரிந்தாலும், நிச்சயம் ருத்ர தாண்டவம் தான் ஆடுவான்.

ஆனால் அதை எல்லாம் இப்போது அவள் பெரிதாய் எண்ண முடியாது.

அவனுக்கு செய்து கொடுத்த சத்தியம் என்று எல்லாரும் கேட்கலாம். அதற்கும் பைரவி ஒரு பதில் வைத்திருக்கிறாள். அதை சிவாவிடம் தானே சொல்ல முடியும்.

என்ன பேசினாலும் பைரவி அதற்கு ஒரு பதில் வைத்திருக்க, அவளின் முடிவில் இருக்கும் நியாயம் புரிந்து, தினேஷ் “ஓகே பையு.. நான் என்னால முடிஞ்ச லீகல் ஹெல்ப் எல்லாம் பண்றேன். அதுக்கும் மேல,  உன்னோட பிரண்டா எப்பவும் உனக்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன். மேற்கொண்டு கமிஷனர் கிட்டயும் பேசுறேன். உன்னோட ஸ்டே பண்றதுக்கு ரெண்டு லேடி கான்ஸ்டபிள் கேட்கலாம்…” என,

“அத்தனை தூரமெல்லாம் போகனுமா?” என்றாள் பைரவி.

“இது எங்களோட மன நிம்மதிக்காக பையு…” என்றான் ஜான்.

நண்பர்கள் இந்த அளவிற்கு இறங்கி வந்ததே பெரிது என்று எண்ணியவள் “ஓகே.. செல்விம்மாவ வீடெல்லாம் கிளீன் பண்ணி வைக்கச் சொல்லிட்டேன்..” என்றபடி செல்விக்கு அழைத்துப் பேச,

“எல்லாம் ரெடி பண்ணியாச்சு பாப்பா… நாலு பேரு விட்டு சுத்தம் பண்ணேன். நிறைய தூசி…” என,

“அவங்களுக்கு என்ன வேணுமோ கொடுத்துடலாம் செல்விம்மா…” என்றவள், “அப்புறம் தாமஸ் ஒரு அட்டை பெட்டி.  கொண்டு வருவான். வாங்கி உள்ள பூஜை ரூம்ல வைங்க.. நான் வந்துடுவேன்…” என்றவள்

“நான் கிளம்புறேன்…” என்று நண்பர்களிடம் சொல்ல, சந்தோஷியும், அகிலாவும் வந்து அவளை கட்டிக்கொண்டனர்.

“ப்ளீஸ்.. நான் ரொம்பவே ஸ்போர்டீவா கிளம்புறேன்… நீங்க ரெண்டு பேருமே சந்தோசமா இருக்க வேண்டிய டைம் இது. சோ, என்னைப் பத்தி நிறைய யோசிச்சு குழப்பிக்க வேண்டாம்…” என்றவள் ஜானைப் பார்க்க

“நான் தினமும் வருவேன் பையு…” என்றான்.

“வா.. ஆனா வந்து யாரோடவும் வம்பிழுக்காம இருந்தா சரி…” என்றவள் “ஓகே தினு…” என்று தலையை ஆட்ட,

“நான் கமிஷனர் கிட்ட பேசிட்டு வர்றேன். அங்க லோக்கல் ஆளுங்கல்ல, கொஞ்சம் முக்கியஸ்தர்கள் கிட்ட பேசணும். கவுன்சிலர் யாருன்னு பார்த்து அவர்கிட்ட பேசணும்…” என்று தினேஷ் பேசிக்கொண்டே போக,

“அதெல்லாம் உன்னோட வேலை. பேசுறப்போ நான் கூட இருக்கேன். சில விஷயங்கள் என்னோட தரப்புல இருந்து நானே சொல்றேன்…” என்று முடித்துவிட்டாள் பைரவி. நண்பர்கள் அனைவருமே ஒருவித கலவையான உணர்வுடன்  அவளை ஜானோடு மீண்டும் அங்கே அனுப்பி வைத்தனர்.

காரில் ஏறியதில் இருந்து, பைரவிக்கு மனது கனத்துப் போனது. அங்கிருப்பவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று மனதினில் தெளிவான திட்டம் இருந்தாலும், சிவாவை எப்படி எதிர்கொள்வது என்பதில் மனது தொய்ந்து போனது.                       

“நோ.. நோ பைரவி… பீ போல்ட்…” என்று தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.

ஜான் காரை செலுத்த, அவன் வேறெதுவும் பேசவில்லை. அவள் அங்கே போகிறேன் என்று சொன்னதுமே, அது அவளின் அம்மாக்காக என்பது அனைவருக்கும் புரிந்து போனது.

சந்தோஷியின் அம்மா மேகலா அத்தனை எடுத்துச் சொல்லியும், இளையவர்கள் இம்முறை பைரவி பக்கம் நிற்க, யாராலும் எதுவும் பேசமுடியவில்லை. பைரவி வருவது தெரியாமல், சிவா, எப்போதும் போல ஒரு காரை கை மாத்தி விட்டவன், வந்த லாபத்தில் மணிக்கும், சிண்டுவிற்கும் அன்றைய தின சம்பளத்தை கொடுத்துவிட்டு, செல்வியின் கடைக்கு வர, அங்கே அவரில்லை.

கடையில் வேலை செய்பவரிடம் “செல்வியக்கா எங்க?” என்று கேட்க,

“தெரியல தம்பி.. காலைல இருந்து நான்தான் இருக்கேன்…” என்றுவிட்டார் அந்த பெண்மணி.

செல்வி சொல்லிவிட்டே சென்று இருந்தார், சிவா வந்து கேட்டால் தெரியாது என்றே சொல் என்று.

‘என்னடா இது இத்தினி காலைல இந்தக்கா கடை நடத்தாம எங்கன போச்சு?’ என்று யோசித்தபடி இருக்க “ண்ணா…” என்று மூச்சிரைக்க ஓடி வந்தான் சிண்டு.

“இன்னாடா?!” என்றவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

“ண்ணா.. பை.. பைரவி.. யக்கா வந்துடுச்சு…” என்று சிண்டு, சந்தோசமாய் சொல்ல,

“என்ன?!” என்று அதிர்ந்து போய் கேட்டான் சிவா.

என்னவோ தன்னை தேடி கடைக்கு வந்திருக்கிறாளோ என்று அவன் பார்வை வேகமாய் சுற்றிலும் அலச “அட அண்ணாத்த… பைரவியக்கா அது வூட்டுக்கு வந்திருக்கு…” என்று சிண்டு சொல்ல,

“வீட்டுக்கு வந்திருக்காளா?!” என்றான் மீண்டும் திகைத்து.

“ஆமாண்ணா… இப்போதான் பசங்க வந்து சொல்லிட்டு ஓடுனானுங்க.. செல்வியக்கா அங்கதான் போயிருக்கு..” என்று சிண்டு பேச, வேகமாய் தன் கேசத்தை அழுந்த கோதியவன், தினேஷிற்கு அழைத்தான்.

தினேஷ் யூகித்திருந்தான், பைரவி அங்கே வந்த சங்கதி தெரிந்ததுமே எப்படியும் சிவா, தனக்கு அழைப்பான் என்று.

அழைப்பு வந்ததுமே ஏற்றவன் ”சொல்லுங்க சிவா…” என,

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க எல்லாரும்? இப்போ இன்னாத்துக்கு இங்க வந்திருக்கா? எத்தனை சொல்லி அனுப்பினேன்..” என்று பேச,

“நாங்க பேசுறதை எல்லாம் இப்போ பைரவி கேட்கிற நிலைல இல்ல சிவா. வேணும்னா நீங்க பேசி பாருங்க.. அதுபோக, அவ அவங்க அம்மாக்காக வந்திருக்கா…” என,

“என்ன சொல்றீங்க தினேஷ்…” என்றான் மேலும் அதிர்ந்து.

“ம்ம்ம் அவ இன்னாரோட மகள்னு சொல்லித்தான் அங்க வர்றா…” என

“நோ…” என்றான் சிவா.

“நீங்க பேசி பாருங்க சிவா… நான் அங்கதான் வந்துட்டு இருக்கேன்…” என்று சொல்லி தினேஷ் வைத்துவிட

“இவள…” என்று பல்லைக் கடித்தவனுக்கு, கால்கள் வேகமாய் பைரவியின் வீடு நோக்கிப் போக,

அதே நேரம் பைரவி வந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு, ரஞ்சிதமும் ‘இதோ வர்றேன்.. எத்தினி நாளிக்கு இப்படி கண்ணா மூச்சி ஆடுவீங்க…’ என்று சொல்லியபடி, அவரும் பைரவியின் வீடு நோக்கி நடை போட,

“என்ன பாப்பா சொல்ற?” என்று அதிர்ந்து போய் நின்றிருந்தார் செல்வி.

ஆம் வந்ததுமே செல்வியிடம் முதலில் சொல்லிவிட்டாள் பைரவி. தாமஸ் கொண்டு வந்து கொடுத்த அட்டை பெட்டியில் “கிருஷ்ணா இல்லம்…” என்று பெரியதாய், அழகாய் பெயர் பலகை இருக்க,

அதனை வெளியே பொருத்துவதற்கு ஆட்களும் வந்திருக்க, பைரவி செல்வியிடம் சொல்லிவிட்டாள் தான் இன்னாரென்று.

செல்விக்கு கேட்டதுமே பெறும் அதிர்ச்சி.

“பாப்பா..!” என்று வாய் மட்டுமே அசைய,

“ம்ம் ஆமா செல்விம்மா… எனக்குமே என்ன நடந்ததுன்னு முதல்ல தெரியாது…” என்று சொல்ல,

“நீ.. நீ இங்கிருந்து போயிடு பாப்பா…” என்றார் செல்வி பதறி.

“போறதுக்காக நான் வரல செல்விம்மா…” என்றாள் பைரவி.

“வேணாம் பாப்பா… வேணாம்… இதெல்லாம் வெளிய தெரிஞ்சா, எல்லாரும் என்ன செய்வாங்கன்னு தெரியாது. பெரிய பிரச்சனை ஆகலாம் பாப்பா.. அந்த பைனான்ஸ் கம்பனினால வாழ்கையை தொலைச்சவங்க நிறைய. அந்த கோபமெல்லாம் இப்போ உன்மேல ஏறிடும்…” என்று செல்வி நிஜ அக்கறையில் பேச,

அவரின் உளமார்ந்த அன்பில் பைரவிக்கு மனதுருகி போனது.

“செல்விம்மா…” என்று சொல்லி அவரை இறுக அணைத்துக்கொள்ள

“போயிடு பாப்பா…” என்றார் கலங்கி.

“ம்ம்ஹ்ஹும்… போக மாட்டேன்.. எங்கம்மா கடைசி நேரத்துல கூட, அங்க இருக்கவங்களுக்கு ஏதாவது செய்னு சொன்னாங்க. நான் முன்னாடி வந்தப்போ, அதுக்கான ரீசன் எனக்கு தெரியலை. இப்போ தெரிஞ்சிடுச்சு. அப்போ எப்படி நான் விலகிப் போவேன்.. ரெண்டுல ஒன்னு பார்த்துடலாம். எங்கம்மா மேல எந்த தப்பும் இல்லைன்னு நான் புரிய வைக்காம போகவே மாட்டேன் செல்விம்மா…” என்று பைரவி உறுதியாய் சொல்ல,

“இதெல்லாம் சிவாக்கு தெரிஞ்சா…” என்றார் அஞ்சி..

அதற்கு பைரவி பதில் சொல்லாமல், வறட்சியாய் ஒரு புன்னகை சிந்தியவள் “வெளிய போர்ட் மாட்டுறாங்க.. நான் போய் பாக்குறேன்…” என்றவள் வெளியே வந்து நிற்க,

‘கிருஷ்ணா இல்லம்…’ என்ற பெரிதான பெயர் பலகை, அங்கே பொருத்தப்பட்டுக் கொண்டு இருக்க, கண்ணிமைக்காது அதனையே நின்று பார்த்தவள்

‘ம்மா… நீங்க தான் எனக்கு பக்கபலமா இருக்கனும்…’ என்று மானசீகமாய் அவளின் அம்மாவோடு பேசிக்கொண்டு இருக்க, அவளின் வீட்டு காம்பவுண்ட் கேட்டில் அதிர்ந்து போய் நின்றிருந்தார் ரஞ்சிதம்.

வேகமாய் உள்ளே வந்தவர் கண்ணில், ஆட்கள் பொருத்திக்கொண்டு இருக்கும் பெயர் பலகை கண்ணில் பட ‘கிருஷ்ணா…’ என்ற பெயரை பார்த்ததுமே, மின்சாரம் தாக்கியது போல் உறைந்து நிற்க,

வேகமாய் வந்த சிவா, அந்த பெயர் பலகையையும், அதனை கண்டு அதிர்ந்து போய் நின்ற அம்மாவையும் பார்த்து பேச்சற்று நின்றுவிட்டான்.