பூத்தது ஆனந்த முல்லை -5

அத்தியாயம் -5

உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை

இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம் எடுத்த? போலீஸ் கேஸ் எதுவும் ஆகிடாதே?” பயத்தோடு கேட்டார் வேதாச்சலம்

அதெப்படி ஆகாம இருக்கும்? ஆஃபீஸ்ல உள்ள கடனை எல்லாம் அடைக்க ஒரு மாசம் டைம் தந்திருக்காங்கன்னு சொன்னாரே, அதுக்குள்ள அடைக்கலைனா கம்பி எண்ண வேண்டியதுதான்என்றான் சுபர்ணாவின் கணவன் பாஸ்கர்

கொஞ்ச நேரம் சும்மா இருக்குறீங்களா?” கடுப்பாக கேட்டான் ஆனந்த்

பாஸ்கர் ஆனந்தை முறைக்க, சுபர்ணா அவளின் அம்மாவை முறைத்தாள்

வீட்டு மாப்பிள்ளைய மரியாதை குறைவா பேசக்கூடாதுடா ஆனந்தாஎன அறிவுரை வழங்கிய சுந்தரி, மாப்பிள்ளையை பார்த்து சமாதானமாக, “இவனோட பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டால்ல, அவ மேல உள்ள கோவத்துல ஏதோ தெரியாம பேசிட்டான், மன்னிச்சிடுங்க மாப்ளஎன்றார்

அதானே, எப்படி போயிட்டா பாரும்மா அவ? கல்யாணம் ஆன புதுசுல கூட இப்படிதானேம்மா ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு அவ வீட்டுக்கு போனா. அப்பவே  இவன் ஓடிப் போய் கூப்பிடாம இருந்திருந்தா அவ மனசுல பயம் இருந்திருக்கும். இப்பவும் இவன் போய் கூப்பிடுவாங்கிற தைரியத்துலதான் போயிட்டாஎன்றாள் சுபர்ணா

தயவுசெஞ்சு எல்லாரும் கிளம்புங்கஎன்ற ஆனந்த் அறைக்கு சென்று விட்டான்

இப்போதும் மரியாதை குறைவாக நடந்து கொள்கிறான் என பாஸ்கர் துள்ள, அதுதான் பெரிய விஷயம் என்பது போல மாப்பிள்ளையை சமரசம் செய்து கொண்டிருந்தார் சுந்தரி

வேதாச்சலம் சின்ன மகனுக்கு அழைத்து எங்கிருக்கிறாய் என கேட்டார். அவனுக்கு ஊரில் முக்கிய வேலை இருக்கிறதாம், ஆகவே அவசரமாக ஊருக்கு பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல் சொன்னான்

இவனாலதான் எல்லாம், இங்க என்ன நடந்திட்டு இருக்கு, ஊருக்கு போறானாம் உன் சின்ன பயஎன்றார் வேதாச்சலம்.

எதுக்கு அவனை திட்டுறீங்க, அண்ணனுக்கு பிரச்சனைங்கவும் பணம் புரட்டறதுக்காக ஊருக்கு போறானா இருக்கும்என அகிலனுக்கு வக்காலத்து வாங்கினார் சுந்தரி

யாரு அவனா?” வேதாச்சலம் கேட்க, “ஏன் நீங்கதான் ஏற்பாடு பண்ணுங்களேன், யாரு வேணாம்னது?” என தோளில் இடித்து கூறினார் சுந்தரி

வேதாச்சலத்துக்கு அந்த திறமை இருந்திருந்தால் எல்லா சுமையும் ஏன் ஆனந்தே சுமக்க வேண்டும்? பிளாஸ்டிக் கடை வைப்பது, தண்ணீர் கேன் போடுவது, இடம் வாங்கி விற்கும் தரகர் வேலை பார்ப்பது என முன்னேற்றத்துக்காக அவர் முயற்சி செய்த வேலைகள் ஒரு பட்டியல் நீளும்.

சாமர்த்தியம் இல்லாத காரணத்தால் அனைத்தும் நட்டம்தான்

வேதாச்சலத்தின் தந்தையின் காலத்தில் ஊரில் சிறப்பாக வாழ்ந்த குடும்பம் அவரது காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டது. பூர்வீக சொத்திலும் ஏதோ தகராறு. ஆனந்தின் கல்லூரி படிப்பு கூட வங்கிக் கடனில்தான். 

குடும்பத்தின் பொருளாதார நிலை கீழ் நோக்கி செல்வதை கண்ட போது வேதனையையும் மற்றவர்கள் தன் காது படவே தன் தந்தையை இகழ்ச்சியாக பேசும் போது அவமானத்தையும் விழுங்கிக் கொண்டே வளர்ந்தவன் ஆனந்த்

ஆகையால்தான் ஊரில் வீடு கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செய்து கொண்டவன். தன் குடும்பம் மற்றவர்கள் முன்னிலையில் நன்றாக வாழ வேண்டும் என ஆசை பட்டவன்

அதற்காக மாடு போல உழைத்தான், உழைப்பவனுக்கு அந்த பணத்தின் அருமை தெரியாமல் இருக்குமா? தெரிந்தேதான் வாரி இறைத்தான், அதற்கான பலன் இன்று கிடைத்து விட்டது.

பிறந்தநாள் விழாவில் மற்றவர்கள் சாப்பிட்டிருந்தனர். ஆனந்த் பட்டினியாகத்தான் இருந்தான். ஏதாவது சாப்பிடுகிறாயா என கேட்பதற்காக  அவனது அம்மா அவனிடம் வந்தார்

தொந்தரவு பண்ணாதம்மாஎன அவன் சொன்ன விதத்தில் எதுவும் பேசாமல் வெளியேறி விட்டார் சுந்தரி

சிறிது நேரத்தில் சுபர்ணாவும் அவளது கணவனும் அவர்களின் ஊருக்கு புறப்பட்டு விட்டனர். சில நாட்கள் ஆனந்தோடு தங்கியிருப்பது என முடிவு செய்திருந்தனர் அவனது பெற்றோர்

அறவே தைரியம் இல்லைதான், ஆனாலும் தேனுக்கு அழைத்தான் ஆனந்த். முதல்முறை அழைப்பு துண்டிக்க பட்டது, அடுத்து சுவிட்ச் ஆஃப் என செய்தி வந்தது.

வேலையை விட மனைவி விட்டு சென்றதுதான் அதிக பாதிப்பை கொடுத்தது அவனுக்கு. வெகு நேரத்துக்கு பின் வேறு வேலை வாங்கிக் கொண்டு மனைவியை அழைக்க சென்றால் தன்னோடு வந்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் கண்களை மூடினான்

காலையில் மகனுக்கு காபி கொடுத்த சுந்தரி இன்னொரு முறை அலுவலகம் சென்று பேசிப் பார் என அறிவுறுத்தினார். பயனே இல்லை என தெரிந்த போதும் செல்ல தயாரானான் ஆனந்த்

அப்பாவையும் கூட அழைச்சிட்டு போடாஎன அம்மா சொன்னதற்கு மறுத்து விட்டான்

உன் மாமனாருக்கு செயின் போட பணம் வேணும்னா என்கிட்ட கேட்கிறதுக்கு என்ன? கடன் வாங்கி கொடுத்திருப்பேன், இப்படியா பைக்க விப்பாங்க?” எனக் கேட்டார் சுந்தரி

இனிமே எனக்கு தெரியாம யாரும் எங்கேயும் கடன் வாங்கினதா தெரிஞ்சுது அப்புறம் இருக்குஎன்றான் ஆனந்த்

கடன் வாங்காம எந்த மிடில் கிளாஸ் குடும்பமும் வண்டி ஓட்ட முடியாது. முடிஞ்சது முடிஞ்சு போச்சு, அடுத்து ஆகுறத பார்ப்பியா, அத வுட்டுட்டு என்கிட்ட மூஞ்சு காட்டுறஎன்ற அம்மாவை எதுவும் சொல்லாமல் குளிக்க சென்று விட்டான்

உப்புமா செய்து வைத்திருந்தார் சுந்தரி. தருண் விரும்பி சாப்பிடுவான். மகனின் நினைவில் அவனுக்கு கண்களை கரித்தது. அவனுக்கு பிறந்த நாள் பரிசாக பெரிய டெடி பொம்மை வாங்கி வைத்திருந்தான். கொடுக்கப் படாமலேயே இருந்தது

என்னடா, புள்ள நினைப்பா?” எனக் கேட்ட சுந்தரி, உன் மீது உன் மனைவிக்கு பாசமே இல்லை, அவளுக்கு திமிர் என்றெல்லாம் பேசத் தொடங்கி விட்டார்

வேணாம் மா, அவளை பத்தி தப்பா பேசாத. நீ எப்போ ஊருக்கு போற?”

அவளை மாதிரியே நானும் உன்னை விட்டுட்டு போறதா? உனக்கு திரும்ப வேலை கிடைக்கிற வரை உன் கூடத்தான் இருக்க போறோம்என்றார் சுந்தரி

வேறெதுவும் பேசாமல் அலுவலகம் புறப்பட்டு சென்றவன் தொங்கிப் போன முகத்துடன்தான் வீடு வந்து சேர்ந்தான். வேறு வேலை தேடுவதோடு அலுவலகத்திலும் பணம் செலுத்தியாக வேண்டும்

வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் புரட்டி விடலாம் என யோசனை சொன்னார் சுந்தரி. கையில் வேறு வேலை இல்லாமல் கடன் வாங்கினால் வட்டியை எப்படி கொடுப்பது, இங்கு சென்னையில் வீட்டு வாடகையெல்லாம் எப்படி சமாளிப்பது என அவனுக்கு ஐயம் ஏற்பட்டது. ஆகவே வேறு வழி இருக்கிறதா என கேட்டான்

வேறன்னாவேற என்னடா செய்றது? நீயே சொல்லுஎன்றார் சுந்தரி

ஆனந்த் தன் அப்பாவின் முகத்தை பார்க்க, “என்னன்னு உடைச்சு சொல்லுப்பாஎன்றார் வேதாச்சலம்

வேதாச்சலம் பெயரில் பூர்வீக இடமொன்று இருக்கிறது. பங்காளி சொத்து தகராறு உள்ள இடம்ஆனந்த் பள்ளி படிக்கும் சமயத்திலிருந்தே கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் முடிவு எட்டப் படவில்லை

ஏதாவது தொகை கேட்டு பெற்றுக் கொண்டு அந்த இடத்தை வேதாச்சலத்தின் பங்காளிக்கே விட்டுக் கொடுத்து விடலாம் என்றான் ஆனந்த்

நல்ல யோசனை என வேதாச்சலம் சொல்ல, மகள் மற்றும் சின்ன மகனிடம் கேட்க வேண்டும் என்றார் சுந்தரி

உடனடியாக சரி என சொல்லாத அம்மாவின் செயலில் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தாலும் கேளுங்கள் என்றான் ஆனந்த். அலைபேசியோடு அறைக்கு சென்ற சுந்தரி அரை மணி நேரம் கழித்துதான் வந்தார்

அந்த இடம் நல்ல மதிப்பு உடையதாம். நம் பக்கம் தீர்ப்பானால் அந்த இடம் நமக்கே சொந்தமாகி விடும், இப்போது அவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் பெரிய நட்டம்தான், ஆகவே அந்த யோசனை வேண்டாம் என்றார் சுந்தரி

இருபது வருஷதத்துக்கு மேல நடக்கிற கேஸ் எப்ப நம்ம பக்கம் தீர்ப்பாகுமோ? தவிச்ச வாயிக்கு தண்ணி இல்லாம செத்து சுண்ணாம்பா போனதுக்கு அப்புறம் அமுதமே கிடைச்சாலும் என்ன புண்ணியம்? இவன் பிரச்சனை தீர்ந்து போனா அது போல பத்து இடம் வாங்குவான்என்றார் வேதாச்சலம்

நமக்கு இவன் மட்டும் புள்ள இல்லையேங்க, இவனாவது திறமைசாலி, நம்ம அப்புனுக்கு சாமர்த்தியம் பத்தாது. மயிலோட புருஷனுக்கு பெருசா சம்பாத்தியம் பத்தல, ரெண்டு பொம்பள புள்ளைங்க வச்சுகிட்டு சிரம படுறா, அவ பொண்ணுங்க பெரிய மனுஷி ஆனா சீர் செய்யணும், நம்ம கடைசி காலத்துக்கும் ஆதாரமா ஏதாவது வேணும்…” சுந்தரி பேசிக் கொண்டே போக, எழுந்து வெளியே சென்று விட்டான் ஆனந்த்

தான் தன் வீட்டில் வெறும் பணம் காய்க்கும் மரம் மட்டும்தானா? தம்பிக்கும் அக்காவுக்கும் இருக்கும் செல்லப் பெயர் கூட எனக்கு இல்லை, அவ்வளவு பாகுபாடு பார்க்கிறாரா அம்மா? ஆனந்திற்கு மனம் விட்டு போய் விட்டது.

மனம் மனைவியை தேட அவளுக்கு அழைப்பு விடுத்தான். எதிர் முனையில் துண்டிக்க பட்டு விட்டது. அவளுக்கு அழைத்து அழைத்தே சோர்ந்து போனான் ஆனந்த்