“தாரா பதில் சொல்லேன்…” என்றவனின் குரலில் குழைவு! இப்பொழுது அவனது மூச்சுக்காற்று அவளின் செவியில் தாராளமாக உரசியது. அதை தாளமாட்டாதவள் போல அவளின் நெஞ்சு வெளிப்படையாகவே ஏறி இறங்கி, தன் உச்சபட்ச பதற்றத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தது.
அதை உணர்ந்தவன், “நான் கிட்ட மட்டும் தான்டி இருக்கேன். இன்னும் தொடக்கூட இல்லை. நீ இப்படி மிரண்டா பேசக்கூட தோணாது போல” என்றான் கிசுகிசுப்பாக.
அவள் பக்கென்று பதறி அவனை ஏறிட்டுப் பார்க்க, அவளின் முகத்தை மொய்ப்பது போல பார்த்தவன், “ரொம்ப அழகா இருக்கடி” என்று தாபத்துடன் சொன்னபடி அவளின் கன்னத்தை வருடினான்.
அவள் தேகம் அவன் தொடுகைக்கா இல்லை வெளிக்காற்றுக்கா என்று தெரியாமல் மெலிதாக நடுங்கியது. அவளது நடுக்கத்தை ரசனையுடன் அவதானித்தபடியே ஆதி அவளின் கன்னத்துத் தாடையிலிருக்கும் சிவப்பு மச்சத்தை தன் பெருவிரல் கொண்டு கொஞ்சம் அழுத்தி வருட, அவன் பார்வை அவளைத் தடுமாறச் செய்ததில் அச்சமும் தவிப்புமாகக் கண்களை மூடிக் கொண்டாள். இப்பொழுது விரல் தீண்டிய மச்சத்தை அழுத்தமாக அவனது இதழ்கள் தீண்டியது. அங்கிருந்து மீள முடியாதவன் போல அங்கேயே தன் இதழ்களை ஆழ ஆழ பதித்துக் கொண்டிருந்தான்.
பெண்ணவளின் நடுங்கிய கரம் உயர்ந்து அவனின் சட்டையை இறுகிப் பற்றிக் கொண்டது. சொற்பமான நேரங்களில் உச்சியில் இதழ் பதித்திருக்கிறான். பதித்த வேகத்தில் விலகியும் கொள்வான். அன்று திரிபுரா செல்லும் நாளில் தான் முகம் முழுக்க ஆவேச முத்தம் பதித்ததே! அன்று ஒரு முத்தத்தைக் கூட அனுபவித்துக் கொடுக்காதவன், இன்று ஒற்றை முத்தத்தில் அவளைத் திணறச் செய்து கொண்டிருந்தான்.
கழுத்தை அவனுக்கு ஏதுவாக சாய்க்க முடியாமல் தாரா தளர்ந்து போய் அவன் தோளிலேயே சரிய, “இந்த மச்சம் இல்லாட்டி உன்னை என்னால கண்டுபிடிச்சிருக்கவே முடியாது தெரியுமா? உன்னைத்தேடி வர தைரியம் என்கிட்ட இல்லை, ஆனா நீயே என்கிட்ட வந்திருக்கவும் என்னால உன்னைத்தாண்டி எதுவும் யோசிக்க முடியலை தெரியுமா?” என்று சொன்னவனின் சொற்களிலிருந்த அர்த்தம் புரிய அவள் அதிர்ந்து விழி விரித்தாள்.
அதில் அவனிடமிருந்து வேகமாக விலகி, அவனை கேள்வியாகப் பார்க்க, மந்தகாச புன்னகையுடன் தன் நேசத்தை முதன்முதலாக மனையாளிடம் சொன்னான். எப்பொழுதிருந்து என்று அவனே அறியாத அந்த மாய மயக்கத்தை அவளை அணைத்தபடி கன்னத்தையும் காதையும் இதழ்களால் உரசியபடி சொல்ல, அவன் தீண்டல் தந்த சுக மயக்கத்தில் பாதிக் கதை அவளின் கருத்தில் பதியவே இல்லை. மீதிக்கதையை அவளின் கன்னம் உரசிய இதழ்கள் சரியாக உதிர்க்கவில்லை.
அவளின் திணறல் நொடிக்கு நொடி அதிகரிக்க, எப்பொழுது கதையை நிறுத்தினான், எப்பொழுது அவளை கைகளில் அள்ளி அறைக்கு அழைத்துச் சென்று, தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான் என்று பெண்ணவளே உணரவில்லை. மொத்தத்தில் அந்த இரவு அவர்களின் விழிகளுக்கு ஓய்வு கிடைத்ததா என்று தான் தெரியவில்லை. அவள் ரசித்த நிலவு வெகு நேரமாக அவளை ரசிக்கத் தேடிச் சலித்து தன் பயணத்தைத் தனிமையில் கழித்துக் கொண்டிருந்தது.
அவன் மீது பெரிதாக என்ன கோபங்கள் அவளுக்கு இருக்கப் போகிறது? அப்படியே அவள் தேக்கி வைத்திருந்தாலும், அவளின் கோபங்களையும் மனக்குறைகளையும் இந்த மாயவன் போக்கி விடமாட்டானா என்ன? கோபங்கள் குறையும் முன்பே அவனில் மயங்கித் தொலைத்தவள், அந்த காவியத்தலைவனுக்கு ஏற்ற சரிபாதி ஆயிற்றே!
இரவில் உறங்கினாளா இல்லையா என்றே தாராவுக்கு தெரியவில்லை. இரவு முழுக்க ஏதோ ஒருவித மயக்கத்தில் சுருண்டு கிடந்தது போன்ற எண்ணம். எழக்கூட மனமில்லை, பதற்றத்தில் முந்தைய நாள் இரவு சரியாக உண்ணாமல் விட்டதன் விளைவு வயிறு அநியாயத்திற்கு ஏதேதோ கோஷங்களை எழுப்ப, கஷ்டப்பட்டு எழுந்து குளித்துக் கொண்டிருந்தாள்.
குளித்து உடைமாற்றி வெளியே வரும்போது மெத்தையில் கால் நீட்டி அமர்ந்தபடி கணவன் எதையோ பார்த்து அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தது பார்வையில் விழுந்தது.
அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டபடி உருண்டபோதே அவனுக்கும் உறக்கம் கலைந்து விட்டது. அவள் எழுந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க செல்லவும் பசி போல என்று எண்ணியவன், அப்பொழுதே உணவை அறைக்கு வரவழைத்து விட்டான்.
அவன் வாழ்வில் தாரா வந்தது கனவு போல இருந்தது. மனம் நிறைந்து போயிருந்தது! இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டது என்று இப்போது யோசித்தாலும் அவனுக்கு புரியவில்லை. ஆசையாகத் தனது கப்போர்டை திறந்து தாராவின் எட்டு வயது புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த போது தான் தாரா குளித்து விட்டு வந்திருந்தாள்.
இவன் விழித்திருப்பதைப் பார்த்ததும் வேகமாக தலையைக் குனிந்து கொண்டவள், ‘ம்ப்ச் இவரை யாரு இப்பவே எழுந்துக்க சொன்னது?’ என்று கூச்சத்துடன் அவனை ஏறிட்டும் பார்க்காமல் டிரெஸிங் டேபிள் முன்பு சென்று தலைவாரினாள்.
“கு… குட் மா… மார்னிங்…” அவளுக்கு குரல் தடுமாறியது. மீண்டும் எதுவும் இவன் தொடங்கி விட்டால் ஐயோ பசி வேறு எடுக்கிறதே என்கிற மனநிலையில் அவள்!
அவளின் பதற்றம் எதற்கென்று புரிந்து ஆதிக்கு இன்னும் சிரிப்பு பொங்கியது. ‘ஒரே நாளில் இப்படி மிரண்டு போக வெச்சுட்டியேடா?’ என தன்னை எண்ணி தானே லேசாக நெற்றியைத் தட்டி வெட்கப்பட்டுக் கொண்டான்.
சிரிப்புடன் எழுந்து சென்று அவனும் ரெப்ரெஷ் ஆகி வர, அவள் அறையை விட்டு வெளியேறும் நிலையில் இருந்தாள். வேகமாக அவளை நிறுத்தி, “இரு அதுக்குள்ள எங்கே போற?” என்று கேட்டதும் தாரா மிரண்டு விழித்தாள்.
“ஐயோ! என் செல்ல கரகாட்டக்காரி, நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. மணி பதினொன்னு. இப்ப கீழே போயி நீ சாப்பிட்டா உனக்கு கொஞ்சம் எம்பாரஷிங்கா இருக்கும்ன்னு நீ குளிக்கும்போது மேலேயே டிபன் கொண்டு வர சொல்லிட்டேன், இங்கேயே சாப்பிடு…” என்று சொல்லி உணவை காட்ட, “என்ன மணி பதினொன்னா?” என்று அதிர்ந்து விழித்து வேகமாக மணியைப் பார்த்துவிட்டு கணவனை பாவமாகப் பார்த்து வைத்தாள்.
அவள் பாவனைக்கும் ஆதி சிரித்தபடியே, “அடியே! கொஞ்சம் சாப்பிடேன், ரொம்ப பாவமா இருக்க” என்றவன் அவளுக்கும் தனக்கும் பரிமாறி அவளோடு அமர்ந்து உண்டான்.
நேற்று சுக மயக்கத்தில் பதியாது போன அவன் காதல் கதையை இன்று அவள் உண்டு தெளிந்த பிறகு தன் கைகளுக்குள் பொத்தி வைத்துச் சொல்ல, ‘அதெப்படி இவன் என்னை கடைசியா பார்த்தபோது எனக்கு எட்டு வயசு தானே’ என அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
“அதுக்கெல்லாம் எனக்கும் சரியா காரணம் தெரியலை. உனக்கு அப்ப எட்டு வயசு தான்… ஆனா நீ கூடத்தான் உனனைத்தவிர நான் வேற யாரையும் கல்யாணம் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டு போன…” என்று அவளின் பார்வையை புரிந்து அறிவாளியாக விளக்கம் சொன்னான்.
‘அப்படி கேட்டதுக்கு எனக்கு அர்த்தமாச்சும் முழுசா தெரியுமா?’ என்று அவனை தாரா முறைத்துப் பார்க்க,
“ஹே நானாச்சும் பாட்டி எனக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாமான்னு கேட்டப்ப தான் மறுபடி உன்னை மனசு முழுக்க நினைச்சேன். அதுவரை உன்னை நினைக்காம இருந்ததில்லை தான், என்ன அப்பப்ப உன்னைப்பத்தி நினைச்சுட்டு மறந்தும் போயிடுவேன், ஆனா கல்யாண பேச்சு எடுத்ததும் உன் முகம் மட்டும் தான் எனக்குள்ள நிறைஞ்சு இருந்தது… என்ன காரணம்ன்னு எனக்கும் பெருசா தெரியலை” என்று சொன்னவன், “கரகாட்டகக்காரி…” என்று ஆசையாக சொல்லி பெண்ணவளின் நெற்றி முட்டினான்.
இத்தனை நேரமும் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று புரியாதளவுக்கு கதை கேட்டுக் கொண்டிருந்தவள், அவனின் அழைப்பில் ஆத்திரப்பட்டு பலமாகக் கிள்ளி வைத்தாள்.
அதற்கெல்லாம் அசராமல் தூசு போல தட்டிவிட்டு, மெல்ல சரிந்து அவளின் மச்சத்தைக் கடித்து வைத்தான்.
“ஐயோ! ச்சீ விடுங்க…” என சிணுங்கலுடன் அவனைத் தள்ளி விட்டவளைப் பார்த்து அட்டகாசமாக சிரித்தவன், தன் தலையணையின் அடியிலிருந்து ஒரு புகைப்படத்தைக் காட்டி, “பாரு கரகாட்டக்காரி மாதிரி தானே இருக்க… இதை பெருசு பண்ணி ஹால்ல மாட்ட போறேன்” என்று சொன்னான்.
அவளோ அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போனாள்.
“இதைத்தான் நான் குளிச்சுட்டு வரும்போது பார்த்துட்டு இருந்தீங்களா? இவ்வளவு வருஷமா இந்த போட்டோ நீங்களே வெச்சுட்டு இருக்கீங்களா என்ன?” என நம்பமுடியாத திகைப்பில் விழி விரித்துக் கேட்டவள் அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை!
அதை விட்டுவிட்டு, “அப்ப இத்தனை நேரமும் நீங்க சொன்ன கதையெல்லாம் நிஜம் தானா?” என்று சந்தேகம் கேட்டவளைப் பார்த்து, “அடிப்பாவி அப்பா என்னை நீ நம்பலையா? நான் என்ன சினிமா கதையா சொல்லிட்டு இருக்கேன், ஒரு பையன் மனசை சின்ன வயசுலயே அநியாயத்துக்கு கெடுத்து வெச்சுட்டு போயிட்டு இப்ப உனக்கு சந்தேகம் வேற வருதா?” என்று அவளைப் போட்டு உருட்டியவன், மீண்டும் அந்த சிவப்பு முத்தத்திற்குள் புதையலைத் தேடி அலையத் தொடங்கி விட்டான்.
தன்மை (ஒரே நிலைப்பாட்டுடன் இருப்பது), நிறை (தொடங்கிய செயல்களை வெற்றிகரமாக முடிப்பது), ஓர்ப்பு (செய்யும் செயலில் ஈடுபாட்டுடன் இருப்பது), கடைப்பிடி (ஒரு நெறியையோ, ஒழுக்கத்தையோ தொடர்ந்து கடைப்பிடிப்பது) என ஆண்மகனுக்கு இலக்கணமான அத்தனை குணங்களையும் நிறைவாகப் பெற்று நாட்டின் நலனுக்காகவும் வீட்டின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணிக்கும் ஆதீஸ்வரன் காவியத் தலைவன் தானே!
இவர்கள் வாழ்வில் இனி என்றென்றும் வசந்தமும் மகிழ்ச்சியும் பொங்கும் என்று நம்பிக்கையில் நாமும் இவர்களிடமிருந்து விடைபெறுவோம். நன்றி!