அத்தியாயம் – 27

“இதயத்தை கொடுத்ததற்கா

என் ஜீவன் எடுக்கிறாய்…

முதற் கனவே முதற் கனவே…” என்று பைரவி பாடி பதிவிட்டிருந்த அந்த ரீல்ஸ், சிவா எத்தனை முறை பார்த்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது.

அன்றைய புது வீடு விழா முடிந்த இரவும், அந்த ரீல்ஸ் தான் பார்த்தபடி படுத்திருந்தான் சிவா. இந்த புதிய வீடு அவனுக்காக என்று அவன் கட்டியது. அதாவது திருமணம் முடிந்து அவனும் பைரவியும் வாழப் போகும் வீடு என்று ஆசையாய் கட்டியது.

அதில் இருவரும் சேர்ந்து பேசியதும், கண்ட கனவுகளும் ஏராளம்.

இன்று வீடு இருக்கிறது புத்தம் புதிதாய். ஆனால் அவள் இல்லை. அவளோடு வாழப் போகிறோம் என்று அவன் கொண்டிருந்த ஆசைகள் எல்லாம் அவன் நெஞ்சில் இன்னும் அப்படியே அடைத்துக் கிடக்க,

“பைரவி…” என்று அவனது இதழ்கள் தானாய் முணுமுணுத்தது.

தினேஷ் பைரவியை தாங்கள் பார்த்துக்கொள்வோம். நீ பேசவேண்டுமெனில் அவளிடமே பேசிக்கொள்ள என்றுவிட, அதன்பின் அவனை அழைத்துப் பேசவும் அவனுக்கு இஷ்டமில்லை. என்னவோ அதன்பின் ஜானிற்கு அழைத்தும் அவன் பேசவில்லை.

தாமஸிடம் ஏதேனும் கேட்கலாம் என்றாலும், தன்னை விட வயதில் சிறியவன் அவனிடம் என்ன கேட்பது என்று ஒரு சிறு ஈகோ இருக்கவே செய்தது.

கேட்கவேண்டும் என்று வாய் திறப்பான் ஆனால், என்னவோ அவனால் அது முடியவில்லை. பதிலுக்கு ஏதேனும் சுறுக்கென்று பதில் வந்துவிட்டால் என்ன செய்வது. அவனது அவஸ்தையை கண்ட மணி  ஒருநாள் தாமஸிடம் கேட்டுவிட்டான் “பைரவி இப்போ எங்க டா?” என்று.

“பைரவியக்கா, அவங்க பிளாட் ஒன்னு இருக்கு. அங்க போயிட்டாங்க… பாடவே மாட்டேன்னு அடம்… வீட்ட விட்டு வெளியவே வர்றது இல்லை போல.. ஆனாலும் இந்த சிவா ண்ணா இப்படி அனுப்பி இருக்கக் கூடாது. என்ன சண்டையா இருந்தாலும் பேசி இருக்கணும்…” என்று தாமஸ் சிவா இல்லை என்று எண்ணி பேச,

‘அவள் பாட மாட்டேன்…’ என்று சொன்ன செய்தி சிவாவிற்கு முள்ளாய் குத்தியது.

பாட்டு என்றால் பைரவிக்கு எத்தனை ப்ரியம் என்று அவன் அறிவானே. இசை துறையில் அவள் முன்னேறி வரவேண்டும். அவளுக்கென்று ஒரு அடையாளம் உருவாக்க வேண்டும். அதன்பின்னே தான், தான் யார் மகள் என்று சொல்வேன் என்று எத்தனை உறுதியாய் இருந்தாள்.

அப்படிப்பட்டவள், இன்று பாடமாட்டேன் என்று வீட்டினில் அடைந்து கிடப்பது கண்டு, அவனுக்கு மிக மிக சங்கடமாய் இருக்க, அவளிடம் பேசுவோமா என்றுகூட தோன்றி, அலைபேசியை எடுத்துவிட்டான்.

ஆனால் நொடியில் சுதாரித்து “வேணாம் சிவா.. வேணாம்.. கொஞ்ச நாள்ல அவளே சரியாகிடுவா.. வேணாம். நீ பேசி அவ மறுபடியும் மனசை போட்டு குழப்பிடுவா…” என்று மனதை கல்லாகிக்கொள்ள, ஒருமுறை எதேர்ச்சையாய் ஜானை காண நேர்ந்தது சிவாவிற்கு.

சிவாவை பார்த்ததுமே ஜான் முறைக்க, சிவாவிற்கு இம்முறை கோபம் வரவில்லை. சிவாவிற்கும் நன்கு தெரியும், அவள் எப்படி துடிப்பாள் என்று. தன்னை விட, அவளுக்குத்தான் இந்த பிரிவு அதிக பாதிப்பையும், வலியையும் கொடுக்கும் என்று அவன் அறிவான். ஆனால் இந்த காதலே அவளுக்கு பாதகமாய் போய்விடக் கூடாது என்பதில் அவன் மிக மிக உறுதியாய் இருக்க, இப்போது ஜானைக் கண்டதும் யாரோ போல் அவனால் கடந்து போக முடியவில்லை.

ஜானுக்கும் இந்த வாய்ப்பை விடக் கூடாது என்றெண்ணி “இப்போ சந்தோசமா?” என்றான் கடுப்பாய்.

“ம்ம்ச் ஜான்…” என,

“என்ன ஜான்? நல்ல இருந்தவள, லவ் பண்றேங்கிற பேர்ல ஒரேதா முடக்கி அனுப்பிட்ட நீ…” என்று ஜான் குற்றம் சாட்ட,

“நான் அவளுக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்…” என்றான் சிவா அப்போதும் உறுதியாய்.

“நல்லதா? எது நல்லது? நீ பண்ணது நல்லதா? முதல்ல நீ பைரவியை லவ்வே பண்ணிருக்கக் கூடாது. சரி அவளும் யார் பேச்சையும் கேட்கல. ஆனா என்ன நடந்தாலும் நான் அவனை லவ் பண்ணித்தான் ஆவேன், என்னோட வாழ்க்கை சிவாக்கூடத்தான்னு அவ உறுதியா இருந்தா தானே. அந்த உறுதி உனக்கு எங்க போச்சு..?” என்று கேட்க,

சிவாவிற்கு சுருக்கென்று கோபம் வந்துவிட்டது. இப்படியெல்லாம் அவனை நிற்க வைத்து யாரும் இதுவரையிலும் கேள்வி கேட்டதில்லை. ஜான் கேட்பதில் நியாயம் இருந்தாலும் கூட, சிவாவிற்கு பொறுமை தேய “எங்களுக்குள்ள ஒத்து வராது ஜான்…” என்றான் பல்லைக் கடித்து.

“அடடா.. ஒத்துவராதா? எப்படி? எதனால? இதே வார்த்தையை நாங்க சொன்னப்போ கூட அவ கேட்கல. இதோ இப்போ தனியா போய் உக்கார்ந்துட்டு வர்ற வாய்ப்பு எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டு, பைத்தியம் போல இருக்கா..” என்று ஜான் கோபத்திலும், ஆற்றாமையிலும் கத்த, சிவா கண்களை இறுக மூடிக்கொண்டான்.

பைரவியின் இந்த நிலைக்கு முழுக்க முழுக்க தான் தானே காரணாம் என்று அவனுக்கு நன்கு புரிய, அவளது இப்போதைய கோலம் கண்முன்னே வந்து போனது. சும்மாவே இருவருக்கும் ஏதேனும் சண்டை வந்து, சிவா வேண்டுமென்றே ஒருநாள் பேசாமல் இருந்தால் கூட, குளிக்காமல், உண்ணாமல் ஒரு பழைய உடையை அணிந்துகொண்டு வேண்டுமென்றே அவளும் பிடிவாதம் செய்துகொண்டு இருப்பாள்.

இப்போது கேட்கவும் வேண்டுமா?!

பைரவி தன்னை எண்ணி எண்ணி சோகமாய் இருப்பது போல் காட்சி தோன்றவும், சிவா கண்களை இறுக மூடிக்கொள்ள, ஜான் சிவாவின் ஒவ்வொரு முக மாற்றத்தையும் கண்டுகொண்டு தான் இருந்தான்.

‘மனசுக்குள்ள இத்தனை லவ் வச்சுக்கிட்டு எப்படி இவனால இப்படி இருக்க முடியுது?!’ என்று மனதினுள்ளே கடிந்துகொண்டவன்

“உன்னை பாக்குறதுக்கு முன்ன வர, தனியா இருந்தாலும் எங்க பைரவி சந்தோசமா இருந்தா. ஆனா நீ, காதல்ங்கற பேர்ல அவளோட மொத்த உற்சாகத்தையும் கெடுத்துட்ட. இப்போ பாடவும் போறதில்லைன்னு சொல்லிட்டு இருக்கா.  எங்க எல்லாருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. ஆனா பைரவிக்கு எதிர்காலம் என்னன்னு எங்களுக்கு யோசிக்கவே பயமா இருக்கு…” என்று ஜான் மேற்கொண்டு பேசிக்கொண்டே போக,

போதும் என்பதுபோல் கையை காட்டியவன் “அவ பாடுவா…” என்றான் உறுதியாய்.

“எப்படி பாடுவா?! நீ வந்து பேசினா ஒருவேளை அவ கொஞ்சம் சரியாகலாம்…” என,

மறுப்பாய் தலையை ஆட்டியவன் “என்னை விட, பைரவிக்கு அவங்கம்மான்னா உயிர்…” என்று சொல்லி நிறுத்த,

“என்ன சொல்ற?” என்றான் ஜான்.

“நான் சொல்ற மாதிரி சொல்லுங்க.. நீ மட்டும் இல்லை. உன்னோட பிரண்ட்ஸ் எல்லாம் சேர்த்து பேசுங்க..” என்றவன் தான் பைரவி அம்மா மீது தவறு என்று எண்ணினால் பாடவேண்டாம் என்று சொல்லியது.

ஜானிற்கும் இந்த யோசனை சரியாய் பட “ம்ம்…” என்று தலையை ஆட்டிவிட்டு சென்றவன் நேராய் தினேஷ் மற்றும் சந்தோஷியிடம் பேச “இதுக்கு சரியான ஆள் நம்ம அகிலா தான்.. நான் எல்லாம் உளறி கொட்டிடுவேன்…” என்று சந்தோஷி, அகிலாவிடம் பேசி வரவைக்க, அவர்களின் திட்டம் நல்ல பலனையே கொடுத்தது.

‘அம்மாவின் மீது தவறா?!’

‘நான் அப்படி நினைப்பேனா?’என்று யோசித்தவள், கொஞ்சமாய் இறங்கிவந்தாள்.

இறங்கி வந்தவளை, இத்தனை தூரம் அவளின் நண்பர்கள் கை பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

இடையில் புதிய நட்பாய் ரூப்பாவும்.

முன்னை போல் இல்லையெனிலும், இப்போதும் அவ்வப்போது ஏதேனும் ரீல்ஸ் பைரவி போட, அதுபோலக சில பல சினிமா பாடல்கள் வாய்ப்பு, விளம்பரங்கள் பின்னணி வாய்ப்பு என்று வந்துகொண்டே இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவளது கவலைகளை பின்னுக்குத் தள்ளி, கடமைகளை செய்யத் தொடங்கினாள்.

அவள் ஒருத்திக்கு இத்தனை பணம் எதற்கு என்று அவளுக்கே யோசனை வரும்.

“இத்தனை வச்சு நான் என்ன பண்றது? பேசாம ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணிக்கவா?” என்று ஒருமுறை ரூப்பாவிடம் கேட்க,

“ஹா ஹா…” என்று சிரித்தாள்.

“என்ன ரூப்பா?!” என,

“ஒரு பேபி வேணும்னு நீ நினைக்கிறது, உன்னோட தனிமைய போக்க. நல்லது பண்ணனும்னு நினைச்சா, எத்தனையோ ஆஸ்ரமங்கள் இருக்கு. அங்க ஹெல்ப் பண்ணு…” என, அவளுக்கு இந்த யோசனை மனதினுள்ளே ஓடிக்கொண்டே இருந்தது.

தினேஷிடம் இது பற்றி பேச “ஆஸ்ரமங்களுக்கு எல்லாம் நிறைய டொனேசன் பண்றவங்க இருக்காங்க பைரவி. நீ ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சா, படிக்க முடியாதவங்களுக்கு படிக்க ஹெல்ப் பண்ணு. நான் டீடெய்ல்ஸ் கலக்ட் பண்ணிட்டு சொல்றேன்…” என்றுவிட்டான்.

அதற்குள் சந்தோஷிக்கு வரன் பார்த்து முடிவாகிவிட, மேகலாவிற்கு ஏக வருத்தம், பைரவி சரி என்று சொன்னால், அவளுக்கும் தினேஷிற்கும் முடிக்கலாம் என்று. ஆனால் சந்தோஷியும் சரி, தினேஷும் சரி ஒரேதாய் இதனை அவரிடம் மறுத்துவிட்டனர்.

தினேஷே “ஆன்ட்டி வேணாம். பைரவி மனசுல நான் இல்லை. இப்பவும் அவங்க லவ் ஸ்ட்ராங்கா இருக்கு.. சிவா அவளை வேணாம்னு சொல்றதே அவளோட நல்லதுக்கு தான். இன்னிக்கு இல்லைன்னாலும் கண்டிப்பா இந்த சூழல் மாறும்…” என்றுவிட்டான்.

சந்தோஷிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்திருக்க, பைரவி இந்த ஆஸ்திரேலியா ட்ரிப் முடித்து வரவும் தான் நிச்சயம் என்று முடிவு செய்திருந்தனர்.

எல்லாமே மாறிக்கொண்டே இருந்தது. அவரவர் வாழ்வி ஒவ்வொரு வகையில் முன்னேற்றங்கள் இருக்க, பைரவியும் சிவாவும் கூட தங்களின் தொழில் ரீதியாய் முன்னேறிக்கொண்டு இருந்தாலும், காதல் அதே நிலையில் தேங்கி தான் நின்று இருந்தது.

“நெக்ஸ்ட் என்ன செய்யப் போற பையு?” என்று ரூப்பா கேட்க,

“ம்ம் சந்தோஷி எங்கேஜ்மென்ட் இருக்கு ரூப்பா. கல்யாணம் அடுத்த மாசமே. ஷாப்பிங் எல்லாம் போகணும்.. அங்க ஆன்ட்டிக்கு ஹெல்ப் பண்ணனும். எப்படியும் அவளோட கல்யாண வேலையே அடுத்த ஒரு மாசம் சரியா போயிடும்..” என,

“நான் இதைக் கேட்கல.. நீ என்ன செய்யப் போற?” என்று ரூப்பா கேட்க,

“நானா?!” என்று பைரவி திகைத்துப் பார்க்க,

“ம்ம் நீயும் தினமும் உன்னோட சிவாவை நினைக்காம இருக்கிறது இல்லை. எனக்கு தெரிஞ்சு அவரும் ஒன்னும் உன்னை மறந்த மாதிரியும் தெரியலை.. ஒரு முறை ஏன் நீ பேசி பார்க்கக் கூடாது…” என்றாள்.

“ம்ம்ஹூம்…” என்று பைரவி வேகமாய் மறுக்க,

“யோசி பையு.. இதேபோல எப்பவும் இருக்க முடியுமா? பெர்சனலா நீ அடுத்த ஸ்டேஜுக்கு போகவேணாமா?” என

“எனக்கு மனசுக்குள்ள ஒரு யோசனை ஓடிட்டே தான் இருக்கு ரூப்பா.. பார்க்கலாம் அது எப்படி வொர்க் அவுட் ஆகுதுன்னு. ஆனா அது கண்டிப்பா எங்க லவ்வுக்காக இல்லை. என் அம்மாவுக்காக…” என,

“என்ன பைரவி?” என்றாள் புரியாமல்.

“சென்னை போகவும் சொல்றேன்…” என்றவள் உறங்கிவிட, சிவாவோ இங்கே புது வீட்டினில் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டு இருந்தான்.

எத்தனை முயன்றும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. உறங்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை. தொழில் அவன் எண்ணியதைவிட நன்றாகவே செல்கிறது. ஷாலினிக்கு நல்லத்தாய் ஒரு வரன் பார்த்து முடிக்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பைரவியின் நினைவு அவனை குடைந்து கொண்டு இருந்தது.

சந்தோஷியின் திருமண விஷயம் கேட்டதுமே, அவனுக்கு பைரவியின் எண்ணம் தான் அதிகம்.

அவள் என்ன செய்வாள்?!

இந்த கேள்வி அவனை நிம்மதியாய் இருக்க விடவில்லை.

புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தான். ரஞ்சிதா மகனை கவனித்துக்கொண்டு தான் இருந்தார். பைரவி பாடிய பாடல்களை கேட்பதும், அவன் படும் அவஸ்தையும் என்று எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க, மறுநாள் செல்வியை பிடித்துக்கொண்டார்.

“இதப்பாரு செலுவி.. உண்மைய சொல்லு, அந்த பைரவிக்கும் இவனுக்கும் என்னாச்சு?” என,

“ஐயோ, யக்கோவ் எனக்கு ஒன்னும் தெரியாது..” என்றார் நிஜமாகவே.

“நம்புற மாதிரி இல்லியே. அவன் தினமும் தூங்கவே மாட்டேங்கிறான் டி. நீயே பார்த்தல்ல, புதுவீடு கட்டுனவன் மாதிரியா இருக்கான். அவன் படுறபாடு என்னால தாங்க முடியல.. அவ போட்டவ பார்த்துட்டே இருக்கான் செல்வி…” என்றார் மகனது அவஸ்தை தாளாமல்.

“யக்கோவ்.. எனக்கு நிஜமாவே எதுவும் தெரியாதுக்கா. அந்த பொண்ணு போனது எனக்குமே அத்தனை சங்கடம் தான். எப்போவாது போன் போடும். பொதுவா பேசும்.. ஆனா சிவா பத்தி பேசுறது இல்லை…” என,

“சரி இப்போ என்முன்னாடி போன் போடு…” என்றார் ரஞ்சிதம்.

“யக்கா அதான், அந்த பொண்ணு பாரின் போயிருக்குள்ள..” என்றார் செல்வி.

“அந்த கதையெல்லாம் எனக்கும் தெரியும். நெட்ல போன் போடலாம்ல.. மணி சொன்னான். நீ போடு. என் முன்னாடி பேசு…” என்று ரஞ்சிதம் பிடிவாதமாய் சொல்ல,

‘ஐயோ..! கடவுளே…’ என்று செல்விக்கு பயமாய் இருந்தது.

சிவா ஏற்கனவே சொல்லித்தானே வைத்திருந்தான் “எங்கம்மா வந்து பைரவிக்கு போன் போட்டு கொடுன்னு சொன்னா கொடுக்கக் கூடாதுக்கா. என்னிய மீறி எதுன்னா செஞ்ச பார்த்துக்கோ…” என்று சொல்லியிருந்தான்.

யாருக்கு நல்லவராவது.

“யக்கா அங்க என்ன நேரமோ என்னமோ?!” என்று தயங்க,

“ம்ம்ச் அப்போ உனக்கு என் மகன் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்ல அப்படித்தானே. வீடு கட்டுறது இருக்கட்டும், முதல்ல செல்வியக்காக்கு கடை குடுக்கனும்னு உனுக்குத்தானே முதல்ல முடிச்சிக் குடுத்தான்…” என்று ரஞ்சிதம் பேச, செல்விக்குமே, பைரவியும் சிவாவும் பிரிந்து இருப்பது கவலையாய் தான் இருந்தது.

இத்தனை நாட்களாய் ரஞ்சிதம் ஏதாவது கேட்டால் கூட, வேறு ஏதாவது பேசி தப்பித்து விடுவார் செல்வி. ஆனால் இன்றோ, தப்பிக்கவே முடியாது என்பதுபோல் தோன்ற, செல்வியின் மகள் தேன்மொழியின் படிப்பிற்காக என்று பைரவி வாங்கி கொடுத்திருந்த, தொடுதிரை அலைபேசியில் இருந்து வாட்ஸ் அப்பில் அழைப்பு விடுத்தார் செல்வி.

இதெல்லாம் பைரவி ஏற்கனவே சொல்லி கொடுத்திருக்க, ரஞ்சிதமோ “எல்லா தெரிஞ்சு வச்சுக்கிட்டே, ஒன்னும் தெரியாதவ மாதிரி இருக்க நீ…” என்று அதற்கும் கடிய,

“ஹலோ செல்விம்மா…” என்ற பைரவியின் உற்சாகக் குரல் இரு பெண்மணிகளை ஒருநிலைக்கு கொண்டு வந்தது.

‘பேசு…’ என்பதுபோல் ரஞ்சிதம் சைகை செய்ய,

“பா.. பாப்பா.. எப்படிக்கீற?” என்று செல்வி திணறிக் கேட்க,

“நான் நல்லாருக்கேன் செல்விம்மா. நீங்க தேனு எல்லாம் எப்படி இருக்கீங்க? என்ன திடீர்னு கால் பண்ணிருக்கீங்க? எதுவும் ஹெல்ப் வேணுமா?” என்றாள் பைரவி அக்கறையாய்.

“அ… அதில்ல பாப்பா.. உன்னிய டீவில பார்த்தோம்…” என்று இழுக்க,

“ஓ!” என்றவள் “ஆஸ்திரேலியா வந்திருக்கேன் செல்விம்மா, அடுத்த சென்னை வந்திடுவேன்…” என்றவள் “நானே அங்க வந்துட்டு உங்களுக்கு போன் போடணும்னு இருந்தேன்…” என்றாள்.

“அ.. அப்படியா?! எ.. என்ன விஷயம் பாப்பா?” என்று செல்வி, ரஞ்சிதம் முகத்தை பார்த்துக்கொண்டே பேச,

“செல்விம்மா, என்ன ஒருமாதிரி பேசுறீங்க? பக்கத்துல யார் இருக்கா?” என்றாள் பட்டென்று.

ஒருவேளை சிவா எதுவும் பேச சொல்லி இருப்பானோ என்று ஒரு சிறு நப்பாசை எட்டிப்பார்க்க, அதெல்லாம் இல்லை என்பதுபோல “யா… யாருமில்ல பாப்பா.. எப்பவும் தேனு தான் போன் இதுல போட்டு குடுப்பா. இப்போ நானா போட்டு பேசினேனா, அதான் தப்பா போட்டுட்டா என்னாகும்னு யோசிக்கின்னே இருந்தேன்…” என,

“ஹா ஹா…” என்று சிரித்த பைரவி “சரி என்ன வேணும் உங்களுக்கு இங்க இருந்து?” என்று கேட்க,

“எனக்கென்ன வேணும்.. ஒன்னும் வேணாம்.. உன்னிய நேர்ல பார்த்தே வருஷம் ஆச்சு.. போன்ல மட்டும் தான் பேசிக்கிற…” என்றார் குறைபட்டு.

“ம்ம்ம்…” என்று இழுத்தவள் “எனக்கொரு ஹெல்ப் வேணுமே…” என,

“சொல்லு பாப்பா.. நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா?” என்றார் செல்வியும்.

“வீட்டு சாவி உங்கட்ட ஒன்னு இருக்குதானே, அடுத்த வாரம் போல கூட ரெண்டு பேர் கூட்டிட்டு போய் வீடெல்லாம் கிளீன் பண்ணி வைக்கிறீங்களா?” என்று கேட்க, இரு பெண்களுக்குமே அப்படியே முகம் அதிர்ச்சிக்கு மாற,

“ஏ.. ஏன் பாப்பா.. நீ இங்க வர்றியா?” என்றார் செல்வி ஆவலாய்.

“அப்படித்தான் தோணுது.. உங்க தம்பி.. தங்க கம்பி சிவா கூட சண்டைன்னா, நான் ஏன் இப்படி தனியா இருக்கணும். வழக்கம் போல நான் அங்கேயே வந்துடலாம்னு இருக்கேன்…” என்றவள்

“அப்புறம் செல்விம்மா, இது கண்டிப்பா யாருக்கும் தெரியவே கூடாது…” என்றும் சொல்ல,

‘சரி சொல்லு…’ என்று ரஞ்சிதம் ஊக்க “நீ.. நீ வந்தா போதும் பாப்பா…” என்றார் செல்வியும் மனதார.

“ஓகே ம்மா அடுத்து கால் பண்றேன்.. டா டா…” என்று பைரவி வைத்துவிட, ரஞ்சிதம் செல்வியிடம் “இங்க பாரு செலுவி, அவ இங்க வர்ற வரைக்கும் இந்த விஷயம் அவனுக்குத் தெரியவே கூடாது. வரட்டும் ரெண்டுல ஒன்னு என்னன்னு பாக்குறேன் நானும்…” என்றவர் கொண்டையை முடிந்துகொண்டே வீடு நோக்கி செல்ல,

செல்விக்கோ மனது திடுக் திடுக்கென்று அடித்துக்கொண்டது.