‘இவதான் ஏற்பாடு பண்ணினாளா? இல்லை பாட்டி எதுவும் இந்த வேலை செஞ்சு வெச்சாங்களா?’ என்ற குழப்பம் வேறு இடையில் வந்துவிட, ‘ம்ம் ஹ்ம்ம் பாட்டி இவ்வளவு ட்ரெண்டியா யோசிக்க மாட்டாங்க. கண்டிப்பா பூ, பால், பழம், ஊதுபத்தின்னு தான் யோசனை போயிருக்கும். சத்யாவும் என்கூடவே தான் இருந்தான். பூஜிதா இதை செஞ்சிருக்க வாய்ப்பில்லை. தாரா தான் அலக்கியாவை வழி அனுப்பிட்டு ஷாப்பிங் போகணும்ன்னு சத்யா கிட்ட சொல்லிட்டு இருந்தா…’ மனம் அவளைக் கண்டுகொண்டு குதூகலித்தது.
பார்வை அந்த அறையில் இல்லாத அவளைத் தேடித் தேடிச் சலித்தது. இனிமேல் வருவாளோ என்று அவசரமாக பூட்டிய அறைக் கதவை மீண்டும் திறந்து வைத்தான்.
ஒரு பெருமூச்சுடன், ‘இத்தனையும் செஞ்சுட்டு எங்கே ஒளிஞ்சிட்டு இருக்காளோ…’ என்று புலம்பியபடி குளிக்கச் சென்று விட்டான்.
குளித்து வந்தபிறகும் அவள் வந்த அறிகுறி இல்லை. ‘ஒருவேளை இதெல்லாம் ஏற்பாடு செஞ்சுட்டு அவளும் குளிச்சு ரெடி ஆகிட்டு வர போயிருக்காளோ?’ எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்திற்கும் நடுவில் கிடந்து அல்லாடினான். பொறுமை பறந்து மாடியில் இருந்த அறைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நோட்டம் விட எங்கும் அவள் இருப்பது போலத் தெரியவில்லை. சலிப்புடன் கீழே தேடப் போனவன், சட்டென்று நின்றான்.
யோசனையுடன் தங்கள் அறையைப் பார்த்தவன், உள்ளே சென்று பால்கனி கதவைத் திறக்க, நிலவொன்று முழு அலங்காரத்தில் ஜொலிப்பது போன்ற தோற்றத்தில் வான்நிலவை பார்த்தபடி நின்றிருந்தாள். அவளின் படபடப்பும் பதற்றமும் முகத்தில் தெளிவாக தெரிந்தது. தன்னருகாமையை உணர்ந்து இன்னும் பதற்றம் கூடிக் காணப்பட்டவளின் தோற்றத்தில் அவன் மூச்சுக்காற்றில் உஷ்ணம் ஏறியிருந்தது.
அவளை பாந்தமாகத் தழுவியிருந்த குங்கும வண்ண புடவை, அவள் அவ்வப்பொழுது உடுத்தும் புடவை ரகங்களில் இல்லை. அவள் கட்டியிருக்கும் விதமும் தான்! இன்றைய நாளுக்காகவென்று கொஞ்சம் தாராளமாகக் காட்டியிருந்த புடவையின் இடைவெளியில் தெரிந்த இடைப் பிரதேசம் அவனை பித்துகொள்ள செய்தது.
தலை முடியைப் பின்னி தலை நிறைய மல்லிகையைச் சூடியிருந்தாள். அந்த கூந்தலையும் மலர்களின் மணத்தையும் இப்பொழுது நுகர்ந்து பார்த்து விடேன் என்று அவனுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று உந்தித்தள்ள, அதைப் புறந்தள்ள முடியாமல் அவஸ்தைப் பட்டவன் பின்னந்தலையை இதழ் குவித்து ஊதியபடி வருடிக்கொண்டான்.
இன்னமும் இவனைப் பார்க்கும் மனதிடம் அவளிடம் வந்தது போலத் தெரியவில்லை. முன்பு நிலவில் பார்வையை நிலைக்க விட்டவள், இப்பொழுது பால்கனி கம்பிக்கு தன் பார்வையை மாற்றியிருந்தாள்.
மனைவியின் கோபத்தை, கேள்விகளை, ஏன் சிலபல அடிகளைக் கூட எதிர்பார்த்து வந்தவனுக்கு அவள் தந்த பரிசு ஆகப்பெரியது. ஒற்றை நொடியில் உலகை மொத்தமாகப் பரிசாகத் தந்தால் என்ன மாதிரியான மனநிலை இருக்குமோ அப்படியொரு மனநிலையில் இருந்தான்.
என்னவோ இதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை அவனால்! மெல்ல நெருங்கினான். அவள் உடல் மெலிதாக நடுங்கியது. சுவரின் அருகில் முட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.
உரசியும் உரசாமலும் அவளின் அருகே நின்றவன், “என் பொண்டாட்டிக்கு கோபம் இல்லையா?” என்று கேட்டவனின் குரலில் அத்தனை மென்மை. பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. அங்கிருந்து நகரவும் வழியில்லை. எல்லாவற்றையும் ஆசையாக ஏற்பாடு செய்து விட்டாள் தான், ஆனால் இப்பொழுது நெஞ்சு அதிவேகமாக படபடத்துக் கொண்டிருந்தது. எங்கே மயங்கி அவன் மேலேயே சரிந்து விடுவோமோ என்னும் பதற்ற நிலையில் அவள்.
“தாரா பதில் சொல்லேன்…” என்றவனின் குரலில் குழைவு! இப்பொழுது அவனது மூச்சுக்காற்று அவளின் செவியில் உரசியது. அதை தாளமாட்டாதவள் போல அவளின் நெஞ்சு வெளிப்படையாகவே ஏறி இறங்கி, தன் உச்சபட்ச பதற்றத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தது.
அதை உணர்ந்தவன், “நான் கிட்ட மட்டும் தான்டி இருக்கேன். இன்னும் தொடக்கூட இல்லை. நீ இப்படி மிரண்டா பேசக்கூட தோணாது போல” என்றான் கிசுகிசுப்பாக.
அவள் பக்கென்று பதறி அவனை ஏறிட்டுப் பார்க்க, அவளின் முகத்தை மொய்ப்பது போல பார்த்தவன், “ரொம்ப அழகா இருக்கடி” என்றபடி அவளின் கன்னத்தை வருடினான்.
அவள் தேகம் அவன் தொடுகைக்கா இல்லை வெளிக்காற்றுக்கா என்று தெரியாமல் மெலிதாக நடுங்கியது. அவளது நடுக்கத்தை ரசனையுடன் அவதானித்தபடியே ஆதி அவளின் கன்னத்துத் தாடையிலிருக்கும் சிவப்பு மச்சத்தைக் கொஞ்சம் அழுத்தி வருட, அவன் பார்வை அவளைத் தடுமாறச் செய்ததில் அச்சமும் தவிப்புமாகக் கண்களை மூடிக் கொண்டாள். இப்பொழுது விரல் தீண்டிய மச்சத்தை அழுத்தமாக அவனது இதழ்கள் தீண்டியது. அங்கிருந்து மீள முடியாதவன் போல அங்கேயே தன் இதழ்களை ஆழ ஆழ பதித்துக் கொண்டிருந்தான்.
பெண்ணவளின் நடுங்கிய கரம் உயர்ந்து அவனின் சட்டையை இறுகிப் பற்றிக் கொண்டது. சொற்பமான நேரங்களில் உச்சியில் இதழ் பதித்திருக்கிறான். பதித்த வேகத்தில் விலகியும் கொள்வான். அன்று திரிபுரா செல்லும் நாளில் தான் முகம் முழுக்க ஆவேச முத்தம் பதித்ததே! அன்று ஒரு முத்தத்தை கூட அனுபவித்து கொடுக்காதவன், இன்று ஒற்றை முத்தத்தில் அவளைத் திணறச் செய்து கொண்டிருந்தான்.
கழுத்தை அவனுக்கு ஏதுவாக சாய்க்க முடியாமல் தாரா தளர்ந்து போய் அவன் தோளிலேயே சரிய, “இந்த மச்சம் இல்லாட்டி உன்னை என்னால கண்டுபிடிச்சிருக்கவே முடியாது தெரியுமா? உன்னைத்தேடி வர தைரியம் என்கிட்ட இல்லை, ஆனா நீயே என்கிட்ட வந்திருக்கவும் என்னால உன்னைத்தாண்டி எதுவும் யோசிக்க முடியலை தெரியுமா?” என்று சொன்னவனின் சொற்களிலிருந்த அர்த்தம் புரிய அவள் அதிர்ந்து விழி விரித்தாள்.
அதில் அவனிடமிருந்து மெல்ல விலகி, அவனை கேள்வியாகப் பார்க்க, மந்தகாச புன்னகையுடன் தன் நேசத்தை முதன்முதலாக மனையாளிடம் சொன்னான். எப்பொழுதிருந்து என்று அவனே அறியாத அந்த மாய மயக்கத்தை அவளை அணைத்தபடி கன்னத்தையும் காதையும் இதழ்களால் உரசியபடி சொல்ல, அவன் தீண்டல் தந்த சுக மயக்கத்தில் பாதிக் கதை அவளின் கருத்தில் பதியவே இல்லை.
அவளின் திணறல் நொடிக்கு நொடி அதிகரிக்க, எப்பொழுது கதையை நிறுத்தினான், எப்பொழது அவளை கைகளில் அள்ளி அறைக்கு அழைத்துச் சென்று, தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான் என்று பெண்ணவளே உணரவில்லை. மொத்தத்தில் அந்த இரவு அவர்களின் விழிகளுக்கு ஓய்வு கிடைத்ததா என்று தான் தெரியவில்லை. அவள் ரசித்த நிலவு வெகு நேரமாக அவளை ரசிக்க தேடிச் சலித்து தன் பயணத்தை தனிமையில் கழித்துக் கொண்டிருந்தது.
அவன் மீது பெரிதாக என்ன கோபங்கள் அவளுக்கு இருக்கப் போகிறது? அப்படியே அவள் தேக்கி வைத்திருந்தாலும், அவளின் கோபங்களையும் மனக்குறைகளையும் இந்த மாயவன் போக்கி விடமாட்டானா என்ன? கோபங்கள் குறையும் முன்பே அவனில் மயங்கித் தொலைத்தவள், அந்த காவியத்தலைவனுக்கு ஏற்ற சரிபாதி ஆயிற்றே!
தன்மை (ஒரே நிலைப்பாட்டுடன் இருப்பது), நிறை (தொடங்கிய செயல்களை வெற்றிகரமாக முடிப்பது), ஓர்ப்பு (செய்யும் செயலில் ஈடுபாட்டுடன் இருப்பது), கடைப்பிடி (ஒரு நெறியையோ, ஒழுக்கத்தையோ தொடர்ந்து கடைப்பிடிப்பது) என ஆண்மகனுக்கு இலக்கணமான அத்தனை குணங்களையும் நிறைவாகப் பெற்று நாட்டின் நலனுக்காகவும் வீட்டின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணிக்கும் ஆதீஸ்வரன் காவியத் தலைவன் தானே!
இவர்கள் வாழ்வில் இனி என்றென்றும் வசந்தமும் மகிழ்ச்சியும் பொங்கும் என்று நம்பிக்கையில் நாமும் இவர்களிடமிருந்து விடைபெறுவோம். நன்றி!
*** சுபம் ***
((என்ன சொல்ல, ரொம்ப சந்தோசம் மக்களே! பெரிய கதை, ஒரு வழியா போராடி முடிச்சுட்டேன். குழந்தைகள், குடும்பம், வேலை இதுக்கு இடையில கதை எழுதறது எல்லாம் எனக்கு பெரிய டாஸ்க் தான்! அதுதான் ஆன்லைன்ல எழுதி வாசகர்களை disappoint பண்ண வேணாம்ன்னு magazine க்கு எழுதி அனுப்பறதோட ஒதுங்கியே இருந்துப்பேன்.
மல்லி அக்கா தான் ஒரு பெரிய கதை எழுத சொன்னாங்க, என்னால முடியுமான்னு தெரியலை. சரி எழுதி பார்ப்போம், நம்ம முப்பது கதைகள் கிட்ட முடிச்சிருந்தாலும், பெரிய கதை நாலு கூட எழுதி இருக்க மாட்டோமேன்னு தான் இந்த கதையை தொடங்கினேன். வழக்கம்போல ஆறு மாசம் இழுப்பேன் போலன்னு நினைச்சு நான் தொடங்க, இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பால் பத்து மாசம் ஆயிடுச்சு.
இருந்தும் என்கூட பொறுமையா பயணிச்ச உங்க எல்லாருக்கும் என்னோட நிறைய லவ் டியர்ஸ்… உங்களோட இந்த அன்பு மட்டும் தான், என்னை மாதிரி எழுத்தாளர்களுக்கு ஊக்க சக்தியே!
என்னால மத்த எழுத்தாளர்கள் மாதிரி dedicated ஆ கதை தர முடியறதில்லைங்கிற குறை எனக்கு நிறைய இருக்கு (வாரம் ஒரு எபியாவது போட முடியாம தவிக்கிற நான் எங்கே வாரம் ரெண்டு, மூணு, அஞ்சுன்னு எல்லாம் தரது). அதுதான், கமெண்ட்ஸ், லைக்ஸ் கம்மியா வந்தாலும் பெருசா எடுத்துக்க மாட்டேன். ஆனா என்னை நீங்க வாட விடலை. கதை நல்லா இருக்குன்னு தொடர்ந்து பயணிச்சு சொல்லிட்டே இருந்து என்னை தேங்க விடாம எழுத வெச்சீங்க. உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்ய? முடிஞ்சவரை பெரிய கதைகளை ஆன்லைனிலும் எழுத பார்க்கிறேன்.
வேற என்ன சொல்ல? உங்களுக்கே தெரியும், என் கதைகளில் எபிலாக் கான்செப்ட் இருக்காது. இந்த கதைக்கும் கேட்காதீங்க பிளீஸ். எதையும் மிஸ் பண்ணியிருந்தா சொல்லுங்க, லாஸ்ட் எபியில் எடிட் பண்ணி சேர்த்துடறேன்.
கதையை படிச்சிட்டு உங்க மனசுல பட்ட கருத்துக்களை (நிறை, குறை எல்லாத்தையும்) மறக்காம சொல்லிட்டு போங்க. அடுத்த கதையோட சீக்கிரம் சந்திப்போம். நன்றி! நன்றி! நன்றி!))