கண் முன்னே நிகழும் காட்சியில் ஒன்றும் புரியாமல், அண்ணனை நோக்கி வந்த சத்யா, “அண்ணா இத்தனை நேரமும் உங்களைப் பார்க்கணும்ன்னு தான் அண்ணி வழி மேல விழி வெச்சு காத்திருந்தாங்க, இப்ப என்ன உங்களை கண்டுக்காம யாரையோ கட்டி பிடிச்சி கதறிட்டு இருக்காங்க…” என்று மெலிதான குரலில் குழப்பமாகக் கேட்டான்.
ஆதி பதில் சொல்லும் முன்பாகவே எதையோ யோசித்து பதறியபடி, “அண்ணா இன்னும் நம்ம குடும்ப ட்ரீயில மிஸ் ஆனவங்க நிறைய பேரு இருக்காங்களா என்ன? ஒவ்வொருத்தரா வந்து சேருவாங்களா?” என்று கொஞ்சம் அதிர்ச்சி கலந்து வேண்டுமென்றே கேட்க,
அவன் சொன்ன தோரணையில் சிரிப்பும் முறைப்புமாக, “நீ கிண்டல் செய்யறது மட்டும் அவ காதுல விழணும்டா. அப்பறம் இருக்கு உனக்கு?” என்று ஆதீஸ்வரன் தம்பியை செல்லமாக மிரட்டினான்.
“ஆமாம் ஆமாம் உங்களுக்கு அவ பெரிய பாராட்டு விழாவையே ஏற்பாடு பண்ணியிருக்கா. அதுல இருந்தே நீங்க எப்படி தப்பிக்கப் போறீங்களோ தெரியலை. நீங்க இத்தனை நாளும் அவளுக்கு போனே பண்ணலையாம். இதுல தென்னரசு அண்ணனுக்கு வேற ஸ்பெஷலா போன் பண்ணியிருக்கீங்க. அதோட உங்களோட நிறைய குட்டு வேற வெளிய வந்திருக்கு. உங்க மேல இருக்க கிரைம் ரேட்டுக்கு நீங்க என்னை கிண்டல் செய்றீங்க பாருங்களேன்” என்று சொல்லி ஆதியை கலவரப்படுத்த முயற்சிக்க,
அதற்கெல்லாம் அசராமல், ஆதி அப்பொழுதும் புன்னகையைச் சிந்தியவன், ‘அவளை சமாளிக்க எனக்குத் தெரியாதா?’ என்று மிதப்பாக எண்ணிக் கொண்டான்.
இன்னும் சில நிமிடங்கள் நீண்ட பிறகும் பெண்களின் நிலை மாறாது இருப்பதைப் பார்த்து, “இப்படி நீயும் உங்க அண்ணியும் வாசல்லயே தான் விருந்தோம்பல் செய்ய போறீங்களா? இல்லை கெஸ்டை உள்ளே விடற எண்ணம் எதுவும் இருக்கா?” என்று கிண்டலாகத் தம்பியிடம் கேட்டான்.
“ஐயோ! சாரி சாரிண்ணா… அவங்களையும் கூப்பிடு” என வேகமாகச் சொன்னவன், சிறு சிரிப்போடு இவர்களின் பிணைப்பையும் அலக்கியா, தாராவின் பிணைப்பையும் பார்த்தபடி நின்றிருந்த தான்பாபுவை பார்த்து, “வாங்க…” என்று சத்யா வரவேற்க, ஆதியும் திரும்பி, “ப்ளீஸ் கம்” என்று பாபுவை அழைத்தவன்,
தாராவிடமும் திரும்பி, “அவங்களை உள்ளே அழைச்சிட்டு வா தாரா” என்றான்.
கணவனின் குரலில் அவசரமாகக் கலைந்தவள், அசடு வழிந்ததபடி, “சாரி அலக்கி, ப்ளீஸ் கம்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு, தான்பாபுவையும் நோக்கி, “ஹவ் ஆர் யூ பாபு ப்ரோ, ப்ளீஸ் கம்” என்றாள் வரவேற்பாக.
தலையசைத்து அனைவரும் வாயிலுக்கு செல்ல, “ஆரத்தி, பாராட்டு விழான்னு ஏதேதோ சொன்னதா ஞாபகம்…” என்று சத்யா கேலியாக தாராவிற்கு நினைவூட்டினான். அவள் இருந்த அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் அவளுக்கு உண்மையில் எதுவுமே நினைவில் இல்லை.
தாரா லேசாகத் தலையில் தட்டிக் கொண்டு, “அச்சோ மறந்தே போயிட்டேன். தேங்க்ஸ், தேங்க்ஸ்டா…” என படபடத்தவள், கணவனின் கையைப் பிடித்து வாசலில் நடுவில் அழைத்து வந்து நிற்க வைத்து தன் கையால் ஆலம் சுற்றி பொட்டு வைத்துவிட்ட பிறகே உள்ளே அனுமதித்தாள்.
இன்னும் ஒருவார்த்தை அவனிடம் பேசியிருக்கவில்லை.
கணவனின் குறுகுறு பார்வையும், சிரிப்பும் அவளை வெகுவாக தடுமாற செய்தாலும், அவனை ஏறிட்டுப் பார்க்கக் கூட முடியாமல் தவித்தாள். ஒருபுறம் ஏன் இந்தளவிற்கு தடுமாறுகிறோம் என்கிற காரணம் அவளுக்கே பெரிதாகப் பிடிபடவில்லை என்றாலும், மற்றொருபுறம் அவளின் கோபம் வேறு எங்கு ஒழிந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
அலக்கியா வேறு கிண்டல் குரலில், “உன்னோட வைப் வெர்சன் சூப்பரா இருக்கு தாரா. புடவை கட்டி, குங்குமம், பூ எல்லாம் வெச்சு சௌத் இந்தியன் கேர்ள் ட்ரெடிஷன்ல பக்கவா இருக்க. அதுவும் ஹஸ்பண்டுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்ததுல நான் ரொம்ப இம்பிரஸ் ஆகிட்டேன். சோ கியூட்” என்று சொல்ல,
அவளின் புகழாரத்தில் வெட்கம் வந்தாலும் அதை மறைத்து அவளின் கையில் அடி கொடுத்து, “ஸ்ஸ்ஸ் பேசாம வாடி” என்றாள்.
இருந்தும் அவளின் வெட்கத்தைக் கண்டுகொண்டு, “உன்னை இப்படி பார்க்க எப்படி இருக்கு தெரியுமா?” என்று சிலாகித்துப் பேசி அலக்கியா இன்னும் கேலி செய்ய, “அலக்கி ப்ளீஸ்” என்று தாரா வெட்கமும் தடுமாற்றமுமாகக் கெஞ்சும் நிலையாகி விட்டது.
அறிமுகம், வரவேற்பு எல்லாம் இனிதாக முடிந்து, விருந்தாளிகள் மனம் குளிரும் வண்ணம் இரவு விருந்தும் வைத்தாகி விட்டது.
ஆதீஸ்வரன் ஏழுமலையிடமும் பேசியிருந்தான். கடந்து வந்த துன்பங்களின் வலியை சிறிதும் காண்பிக்காமல் இன்முகமாகப் பேசியவரின் மீது அவனுக்கு பெரும் மதிப்பு கூடியது. தங்களால் தான் அவருக்கு இப்படி ஒரு நிலையோ என்று கொஞ்சம் குற்றவுணர்வாகக் கூட உணர்ந்தான். ஆனால், ஏழுமலை அவனிடம் மிகவும் நல்லபடியாகப் பேசினார். அவனின் வருத்தமோ குற்றவுணர்வோ அவசியமில்லை என்று சொன்னார். அவரின் பெரிய மனித தனத்தில் ஆதிக்கு மனம் நெகிழ்ந்து போனது.
விருந்து முடிந்து அலக்கியா, தான்பாபு தங்குவதற்கான ஏற்பாடுகளை ஆதி கவனிக்க, தாராவும் அவனோடு இணைந்து கொண்டாள். அண்ணியின் நண்பர்கள் என்று புரிந்ததிலும், அவர்களுக்குள் இந்த பிரிவு ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று உணர்ந்ததாலும், கூடவே அவர்களுக்குத் தனிமை அவசியம் என்று ஏதோ உள்ளுணர்வு சொன்னதாலும் சத்யா அவர்கள் நால்வருக்கிடையில் விருந்துக்குப் பிறகு போகவில்லை. பூஜிதாவையும் தடுத்திருந்தான்.
“அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதாவது உதவி செய்யலாம் தானே சத்யா?” என்று அவள் புரியாமல் கேட்க,
“அதெல்லாம் வேண்டாம். அண்ணாவும் தாராவும் பார்த்துப்பாங்க. அதோட அண்ணி அவங்களை லாங் கேப் அப்பறம் பார்க்கிறாங்க போல, நம்ம கூட இருந்தா அவங்களுக்கு ஒரு ஸ்பேஸ் இருக்காது” என்று எடுத்து சொல்ல,
பூஜிதா ஒப்புக் கொண்டவள், “பரவாயில்லை. அப்பப்ப கொஞ்சம் உருப்படியா யோசிக்கவும் செய்யறீங்க” என்று காலை வாரி விட்டாள்.
“உன்னை காதலிக்கும் போதே தெரியலையா எனக்கு எல்லாம் உருப்படியா யோசிக்க தெரியாதுன்னு” என்று அவன் பதிலுக்குக் காலை வாரிவிட, “உங்களை…” என்று சொல்லி அவனின் முதுகில் மொத்தினாள்.
அது பாட்டியின் கண்களில் விழுந்துவிட, அவள் பதறி விலகி நின்று கொண்டாள். “உன் படிப்பு முடியும் வரை உன்னை ஹாஸ்டல்லயே தான் வெச்சிருக்கணும் போல” என பாட்டி சொன்னபோது, அவள் தலையைக் கவிழ்ந்து சிரித்துக் கொண்டாள்.
இங்காவது வீடு என்று சத்யா கொஞ்சம் அடக்கி வாசிப்பான், தனியாக ஹாஸ்டலில் எல்லாம் இருந்தால், அவன் சேட்டை எப்படி இருக்கும் என புரிந்தவள், ‘உங்க பேரனைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியலை பாட்டி’ என்று மனதிற்குள் எண்ணியவள், “இந்த வாரம் ஹாஸ்டல் போயிடுவேன் பாட்டி” என்றாள் பொறுப்பாக.
“ஆமாம் ஆமாம். அது தான் சரியா இருக்கும்” என்று பாட்டி நிலவரம் புரியாமல் சொல்லி சென்றார். சத்யா கிண்டலாக சிரிக்க, “உங்களைப் பத்தி தெரியாம பாட்டி சொல்லிட்டு போறாங்க, தெரியும்போது இருக்கு உங்களுக்கு? எதுவும் வாலாட்டினா நான் தாராக்கா கிட்ட போட்டு தந்துடுவேன்” என மிரட்டியவளை பார்த்து பதிலுக்கு முறைத்தாலும், “உனக்கே என்னை பார்க்காம இருக்க முடியாது, நீயே என்னை தேடி வந்துடுவ, அப்பறம் எதுக்கு இப்படி வெட்டி பில்டப் சொல்லு” என்று அவன் சொன்னதும், அதன் உண்மைத்தன்மையில் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அறையில் தேவையானது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆதி சரிபார்க்க, அவனின் பின்னேயே தாராவும் சரி பார்க்கிறேன் என்று சுற்றிக் கொண்டிருந்தாள்.
பெண்ணவள் கொஞ்சம் நெகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாள். அவளது ஆழ் மனதில் அலக்கியா எங்கிருக்கிறாள் என்கிற கவலை நிறைந்து இருந்தது! தன் தோழி எப்படி இருக்கிறாளோ என்கிற தவிப்பு அடங்குவதாக இல்லை! ஒருமுறையேனும் அவளை நேரில் காண வேண்டும், என்ன செய்து கொண்டிருக்கிறாள், அவளது வாழ்க்கை எப்படி போகிறது என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என எத்தனையோ நாட்கள் ஏங்கியிருக்கிறாள். அந்த ஏக்கத்தை வாய் வார்த்தையாக வெளிப்படுத்தாத போதும், தீர்த்து வைத்த கணவனின் அன்பில் அவள் வெகுவாக பிரமித்துப் போனாள். தந்தையைச் சிறையிலிருந்து வெளியே எடுக்க நினைத்த விஷயத்திலும் கிட்டத்தட்ட இதுவே தான் நடந்திருந்தது என்ற போதிலும், அப்பொழுது அவளுக்கு அவன்மீது நிறைய கோபங்கள், மனத்தாங்கல்கள் இருந்ததால் எதுவும் கருத்தில் படவில்லை. ஆனால், இன்று அவன் தனக்காக செய்திருப்பது?
மிச்சம் மீதியிருந்த கொஞ்ச நஞ்ச கோபத்தையும் கற்பூரத்தைக் காற்று கரைப்பது போல கரைத்து விட்டிருந்தான் அவனது அளவில்லாத நேசத்தில்!
அந்த நெகிழ்ச்சியோடு, அவனோடு கிடைத்த தனிமையை… முட்டி மோதிக்கொண்டு தொண்டைக்குழியில் சிக்கியிருக்கும் வார்த்தைகளோடு அவள் அவஸ்தையுடன் அனுபவித்துக் கொண்டிருக்க, அவனோ இவள் ஒருத்தி அங்கிருக்கிறாள் என்கிற எண்ணம் கூட இல்லாமல், அறையில் அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அலக்கியா, தான்பாபுவை அழைத்து வர அறையை விட்டு வெளியே சென்றான்.
செல்லும் அவனையே தாரா பரிதாபமாகப் பார்த்து வைக்க, அவளுக்கு முதுகு காட்டி சென்று கொண்டிருந்த ஆதியின் முகத்தில் மந்தகாச புன்னகை!
ஏற்கனவே வேலைக்காரர்கள் சரிப்படுத்தி வைத்திருந்த அறையில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அவனுக்கு என்ன இருக்கிறது? அவனுடைய கரகாட்டக்காரியின் கால்கள் அவனைத் தொடர்ந்து வருகிறதா என்று தானே அவன் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்?
தெரிந்துகொண்ட திருப்தியோடு அவன் சென்று பாபு, அலக்கியாவை அந்த அறைக்கு அழைத்து வர, கட்டிலில் அமர்ந்த வண்ணம் தோழிகள் இருவரும் பேச தொடங்கிவிட, தான்பாபுவும் ஆதியும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
இத்தனை நேரம் பொறுமை காத்த தாராவால் இதற்குமேல் பொறுமை காக்க முடியாது என்னும் நிலை! அதனால் வரிசையாகக் கேள்விகளை அடுக்கத் தொடங்கி விட்டாள். அலக்கியாவும் தோழியின் அருகிலேயே அமர்ந்து பொறுமையாக அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இப்பொழுது அலக்கியாவும் தான்பாபுவும் திருமணம் செய்து கொண்டு, இருவருக்கும் துளியும் சம்பந்தமே இல்லாத ஒரு மாநிலத்தில் இருக்கும் சிறு நகரத்தில் வசிக்கிறார்களாம். அங்கு அலக்கியா சிறியதாக கிளினிக் ஒன்றைத் தொடங்கியிருக்க, தான்பாபு வீட்டில் இருந்தபடியே ட்ரேடிங் செய்து வருகிறானாம்.