ஒரு வாரம் சென்றிருக்க , சனியன்று கீத்து சஞ்சு வீட்டுக்கு வந்திருந்தாள் . சஞ்சு , மஞ்சு மற்றும் கீத்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க , சத்தம் கேட்டு வெளியே வந்த விவேக் , சோபாவில் அமர்ந்தான், பின் அவன் போனில், “சரணம் , சரணம் குருவே சரணம்…” என்று பாட்டை ஒலிக்க விட்டான்.
சஞ்சு உடனே முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள , உடனே கீத்து , “ஆன்ட்டி..” என்று அழைத்து , “எங்கள் நண்பன் பிரதாப் , நன்றாகச் சொல்லிக் கொடுப்பான், எத்தனை தடவை கேட்டாலும் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பான். மனதில் அப்படியே பதிந்து விடும் .ஒரு பந்தா இருக்காது , சிடுசிடுக்கவும் மாட்டான்…” என்று ராகமாய் இழுத்தபடி , விவேக்கை ஓரப்பார்வை பார்த்தாள் .
அவள் கேலியைப் புரிந்து கொண்டு, விவேக் புன்னகைக்க ,
“ஆனால் , ஒரு சிலர்..” என்று நிறுத்தி , தன் ஆள்காட்டி விரலை காண்பித்து , “ஒரே ஒரு ப்ரோகிராம் சொல்லிக் கொடுத்து விட்டு , செய்கிற பந்தா இருக்குதே அப்பப்பப்பா தாங்க முடியவில்லை…” என்று அபிநயம் பிடித்தாள் .
அவள் குறும்பை ரசித்தபடி , “அப்போ அங்கேயே கேட்க வேண்டியது தானே…” என்று விவேக் இழுக்க ,
இந்தக் கலாட்டாவை ரசித்த மஞ்சு , “ராஜா விடுடா…” என்று சமரசம் செய்ய முயன்றார் .
பின் விவேக் , “ப்ரோகிராம் புரிந்ததா கீத்து..?”
“ம்ம்…”
விவேக் புன்னகைத்தபடி , “சும்மா விளையாட்டுக்குத் தான் கேலி செய்தேன் . என்ன சந்தேகம் என்றாலும் கேள் கீத்து. சொல்லித் தருகிறேன்.”
கீத்துவும் குறும்பாக , இடுப்பு வரை குனிந்து , “நன்றி குருநாதா..” என்று வணக்கத்தைப் போட்டாள் .அந்த இடமே கலகலத்தது . இருவருக்குள்ளும் அழகான நட்பு பூத்தது .
அந்த வருடகுடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியா தழுவிய ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டிருக்க , பள்ளியில் இருந்து சஞ்சுவைத் தேர்ந்தெடுத்திருந்தனர் .
பாடம் தான் சுமாராகப் படிப்பாள் , ஓவியம் மிகவும் நன்றாக வரைவாள் . கைவேலைகள் சஞ்சுவிற்கு கை வந்த கலை . கண் பார்த்தால் கை செய்து விடும் என்று சொல்லும் அளவிற்கு திறமைசாலி
சின்ன வகுப்பில் தெர்மாகோல் பிராஜக்ட்டை மற்றவர்கள் எல்லாம் கடையில் வாங்க , சஞ்சு தானே செய்வாள். அத்தனை நேர்த்தியாக இருக்கும் , நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறாள் .
நம்ம கீத்துவிற்கு கை வேலைகள் சுட்டுப் போட்டாலும் வராது , பொறுமை என்ன விலை..? என்று கேட்பாள் .
சஞ்சு மகிழ்ச்சியாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தை வீட்டில் தெரிவிக்க , மஞ்சுவும் , விவேக்கும் பாராட்டினர் .
“தேர்வு நெருங்குகிறது , ஒழுங்காகப் படி , இதற்குச் செலவளிக்கும் நேரத்தைப் படிப்பில் காண்பித்தால் உருப்படுவாய். கல்லூரிக்கு டொனேஷன் எல்லாம் கொடுத்து செலவு செய்ய முடியாது . இதையெல்லாம் மூட்டை கட்டி விடு” என்றார் விஜயன் தீர்மானமாக .
அவருக்கு இதெல்லாம் வெட்டி வேலை என்ற எண்ணம் , பெரிதாக ஊக்குவிக்க மாட்டார். அதனால் வீட்டில் இதைப் பற்றிய பேச்சுகள் பெரிதாக இருக்காது . அடக்கியே வாசிப்பார்கள் .
சஞ்சு அழுது , “இந்த ஒரு தடவை மட்டும் அப்பா. ஒரு ஐந்து நாட்கள் செலவளித்தால் போதும்…” என்று கெஞ்சினாள் .
மகளின் விருப்பத்தை அறிந்த மஞ்சுவும் விஜயனிடம்,“பள்ளியில் இருந்து இவளை மட்டும் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மறுத்தால் நன்றாக இருக்காது…” என்று ஏதேதோ சமாதானம் பேச முயன்றார்.
“இந்த உருப்படாத விசயத்தையெல்லாம் , என் கிட்ட பேச வராதீர்கள் . வேண்டாம் என்றால் வேண்டாம் தான்” என்றபடி பேச்சு முடிந்தது என்பதற்கு அடையாளமாக எழுந்து அறைக்குள் சென்றார் .
“என்ன அம்மா இது? படம் தானே வரைந்து அனுப்ப வேண்டும் என்கிறேன். என் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பும்மா , நிச்சயம் பரிசு வாங்குவேன்” என்று அழுதாள்.
உடனே விஜயன் வெளியே வந்து , “சரி நீ , பரிசே வாங்குகிறாய் என்று வைத்துக் கொள்வோம் . அதனால் என்ன பிரோயஜனம்? அண்ணா பல்கலைகழகத்தில் சீட்டு கொடுத்து விடுவார்களா..?” என்றார் இளக்காரமாய். பின்,“படித்தால் தான் கிடைக்கும் . போய் படி” என்று உறுமி விட்டுச் சென்றார் .
சஞ்சுவிடம் மஞ்சுவின் எந்தச் சமாதானமும் எடுபடாமல் போனது. சஞ்சு இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தாள் .
பெண் வருத்தப்படுவது தாங்காமல், “போட்டியில் கலந்து கொள்வதற்கு இத்தனை போராட்டமா ?” என்று மனம் வெதும்பினார் .
பின் சஞ்சுவின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, என்ன ஒரு படம் தானே? அதுவும் வீட்டில் இருந்து தானே வரைந்து அனுப்பப் போகிறோம் என்று யோசித்து, தேர்வுக்குப் படிக்க , விடப்பட்ட விடுமுறையில் , அந்தக் காலைவேளையைப் பயன்படுத்தி , விஜயனுக்குத் தெரியாமல் படம் வரைந்து அனுப்ப முடிவு செய்தனர் .
படம் வரைந்து அனுப்புவது தானே, என்ன பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று அசால்டாக நினைத்து காரியத்தில் இறங்கி விட்டார் மஞ்சு . இதைப் பெரிய விசயமாகக் கருதாமல் விவேக்கிடமும் தெரிவிக்காமல் விட்டனர் .
நடைமுறை தேர்வு , திருப்புதல் தேர்வுகள் நெருங்க , கீத்து தயாராகிக் கொண்டிருக்க , சஞ்சு ஓவியப் போட்டியில் பிஸியானாள் .
சஞ்சுவோ மிகுந்த ஆர்வத்துடன் இணையத்தில் பல குறிப்புகள் எடுத்து , ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தாள்
சஞ்சு தீவிரமாகச் செய்து முடித்து அனுப்பினாள் . பின் கீத்து படிக்க உதவ , ஒரு வழியாக நடைமுறை தேர்வுகளை நல்லபடியாக முடித்து , பொதுத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் .
அத்தியாயம் 13
மெதுவாக இங்கொன்றும் அங்கொன்றுமாக , புதிய நோய் , இந்தியாவுக்குள்ளும் பரவத் தொடங்கியது . தொலைக்காட்சி , செய்தித்தாள்களில் இந்நோய் பற்றிய செய்திகள் வர ஆரம்பித்திருக்க , இப் புதிய நோய்க்கு கொரோனா என்று பெயர் சூட்டினர் .
தேர்வுகள் தொடங்கி சீராக நடந்து கொண்டிருந்த நேரம் , நோயின் தாக்கம் அதிகமாக , ஒரு நாள் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி , லாக்டவுனை (ஊரடங்கை) அறிவித்தார் .
லாக்டவுன் என்ற வார்த்தையையே அப்போது தான் முதன்முதலில் அறிந்தனர் . யாருக்கும் எதுவும் புரியவில்லை . அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பொருட்களுக்கு , பணத்திற்கு, தேவைகளுக்கு அடுத்த என்ன செய்வது ? என்று குழம்பிப் போய் நின்றனர்.
நல்ல வேளையாக , பொதுத் தேர்வுகள் சஞ்சுவிற்கும் , கீத்துவிற்கும் முடிந்திருந்தன .
அடுத்து அடுத்த நாட்களில் ஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் விசயங்களைக் கேள்விப்பட , பயத்தில் , பீதியில் உரைந்தனர் . இப்படி கூட நடக்குமா ? உலகம் செயல் எழுந்து நிற்குமா? என்று திகைத்தனர் .
தனக்கு மிஞ்சி எதுவும் கிடையாது என்று கொக்கரித்த மானுட இனத்தைச் சம்மட்டியால் அடித்தது போல் இயற்கை தன்னுடைய கோரதாண்டவத்தைக் காட்டியது .
பல அரசியல் குழப்பங்களும் நடந்தேற , உயர்ந்த மற்றும் மத்தியதர வகுப்பினர் சமாளிக்க , ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டனர் . வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர் .
அரசுகள் தடுமாறியது. நமது குறைபாடுகள் பட்டவர்த்தனமாகப் பல் இளித்தது . பெரிதாக மாற்று ஏற்பாடுகள் எதுவும் யோசிக்காதிருந்த நிலையில் அனைவரும் வீட்டில் முடங்கினர்.
பெண்களுக்கான மூச்சாறல்கள், இளைப்பாறல்கள் காணாமல் போயின . அவர்களுக்கான ‘ நேரங்கள் ‘ இல்லாமலே போயின . ஒவ்வொரு நிமிடங்களும் வேலைப் பளுவும் , மனச் சோர்வும் அழுத்தியது . ஒவ்வொரு செயல்களும் விமர்சிக்கப்பட்டன . மொத்தத்தில் பெண்கள் பெரிய மன அழுத்தத்திற்கு ஆளானார்கள் . எப்போதும் ஒரு பதட்டத்திலே இருந்தனர் . வீட்டுப் பெண்கள் மூச்சுத் திணறினர்.
மற்ற வீடுகளே இப்படியென்றால் மஞ்சுவின் நிலைமை அந்தோ பரிதாபம். எந்த நேரமும் வீட்டு வேலையே ஆக்கிரமித்தது . காய்கறி பழங்களை மஞ்சள் நீரில் கழுவுவது , கசாயம் போடுவது , வெளியே போய் வருபவர்கள் துணிகளைத் துவைப்பது ,அவர்கள் தொட்ட இடங்களைச் சுத்தப்படுத்துவது , சத்தான உணவுகளைக் கொடுப்பது என்று எப்போதும் ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருந்தது .
விஜயன் வீட்டில் இருப்பதால் , இயல்பான பேச்சு வார்த்தைகளே இல்லாமல் போனது . அதையும் மீறி ஏதேனும் பேச்சு வார்த்தை நடந்தால், அது சண்டையாக முடிந்தது . வழக்கம் போல் விஜயன் சுண்டு விரலை கூட அசைக்க வில்லை. மஞ்சுவிற்கு மூச்சு முட்டியது .
வெளி வேலைகளை விவேக் எடுத்துக் கொண்டது மட்டுமே மஞ்சுவிற்குச் சற்று நிம்மதியைத் தந்தது . ஆயிரம் பத்திரம் சொல்லி மகனை அனுப்பி வைப்பார் .
சஞ்சு, சின்ன பிள்ளையாகவே இருந்தாள் . அவ்வப்போது விவேக் திட்டி , சஞ்சுவை வேலை வாங்குவான் .
சஞ்சு முணங்கிக் கொண்டே செய்வாள் .
அம்மாவிடம், “அண்ணா ரொம்ப மோசம் , என்னை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறான்..” என்று புகார் வாசிப்பாள் .அதன் மூலம் தனக்கு அண்ணன் மீது இருக்கும் வருத்தத்தை வெளிப்படுத்தினாள் .
மஞ்சு இவ்விசயத்திற்கு பெரிய முக்கியதுவம் கொடுக்காமல் , விவேக்கின் நல்ல எண்ணங்களைச் சரியாக விளக்காமல் விட்டு விட்டார் .மஞ்சு மட்டும் இதைச் சரியாகச் செய்திருந்தால் , பின்னால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால், அதற்குப் பதிலாக சஞ்சு குறித்து விவேக்கிடம் விளக்க முயல்வார் . “ நம் வீட்டில் இருக்கும் வரை தான் இந்தச் செல்லம் , சுதந்திரம் எல்லாம் ராஜா…” என்று இழுக்க,
“ரொம்ப செல்லம் கொடுக்கிறீர்கள் அம்மா…” என்று குற்றம் சாட்டினான் .
“விடுடா , சின்னப் பெண் , சரியாகி விடுவாள்…” என்று சமாதானம் பேசினார் .
“உங்களுக்கு வேலை கூடுகிறதே , காய்களை கழுவி வைப்பது , வாஷிங் மெஷின் போடுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய சொல்லுங்கள் அம்மா…”
“சரிடா, சொல்கிறேன்…” என்று அப்போதைக்குப் பிரச்சனையை முடித்தார் .