சமரசுவை நெருங்கிய ராஜசேகர் “உங்களை நம்பி தானே, என் ஆத்தா அப்பன் கிட்ட கூட விடாமல் இங்கே விட்டுட்டு போனேன். ஏதோ சிநேகிதமா பழகுறானேனு வீட்டுக்குள்ள விட்டா, உன் மகன் பண்ணின வேலைய பார்த்தியா” மச்சான் என்பதற்கு வேறு சொல்லை கூட தேடாதவர் இன்று வா போ என பேச, சமரசு கண்களை இறுக மூடி திறந்தார்.
“தாலி கட்டினதோடு விலகிட்டான்னு அப்படியே போறேன். மச்சானாச்சே மச்சானோட குடும்பமாச்சேன்னு பார்க்கேன். இல்லை இங்க நடக்குறதே வேற” என மகளிடம் திரும்பி
“எவனாவது வாலாட்டுனாலே ஒட்ட நறுக்கிடுவேன். இவன் இவ்வளவு செஞ்சிருக்கான். இத்தனை நாள் எங்க கிட்ட சொல்லாமல் நீ என்ன பண்ணிட்டு இருந்த? அறிவு வேணாம்? இவ்வளவு படிச்சு என்ன பிரயோஜனம்? இதில் வேலைக்கெல்லாம் வேற போற!” லாவான்யாவை இன்னமின்னும் திட்டியவர் “உன் நொண்ணன் ஊரில சீராடினது போதும். மரியாதையா, திண்டுக்கலுக்கு கிளம்புற வழிய பாரு. இனி நீ இங்க இருந்த என் கையால் தான் உனக்கு சாவு!” மிரட்டினார்
திரும்பி சமரசுவை பார்த்தவர் “மானம்னு ஒன்னு இருந்தா இனி என் வீட்டு வாசப்படிய எதுக்காகவும் மிதிக்காதீங்க” கொஞ்சமும் நிதானமில்லை அவரின் பேச்சில்.
ஒரு தந்தையாய் அவரது கொந்தளிப்பை தடுக்கும் சக்தி அவர்களிடத்தில் இல்லை.
சமரசு நிமிர்ந்து நாச்சியை ஒரு பார்வை பார்த்தவர் தான், அதன்பின் அவர் அங்கிருந்து வெளியேறிவிட, “வாடா” என தன் மகனையும் கைபிடித்து இழுத்து சென்றுவிட்டார் நாச்சி.
அவர்கள் சென்றதுமே போய் கதவை சாற்றியவர், மீனாவை நெருங்கினார். பயந்து போய் இவர் எழுந்து நிற்க, “இந்த விசயம் உனக்கு தெரிஞ்சிருக்கு, அதான் ஒரு வாராம என்னை பாடா படுத்தி விக்ரவாண்டிக்கு முடிக்க அவசரபட்டிருக்க? நீ பிளான் போட்டு தான் இன்னைக்கு உன் அண்ணன் குடும்பத்தையே கொண்டு வந்து நிறுத்திருக்க சரியா? தாலி கூட அவனா கட்டுனானா? இல்லை நீ கட்ட வச்சியா?” இவரே ஒவ்வொன்றுக்கும் முடிச்சு போட்டு பேச, ஒவ்வொரு கேள்விக்கும் இல்லையென்பதை தவிர அவரால் ஒன்றுமே பேச முடியவில்லை.
அடுத்து மகளிடம் திரும்ப, சுவரோடு சுவராய் பல்லி போல் ஒன்றி நின்றுவிட்டாள். “அவன் வலுக்கட்டாமாயா தாலி கட்டினதை நீ ஏன் என்கிட்ட சொல்லலை? தப்புனு தோனலையா? அவன் செஞ்சதை மறைச்சிருக்க? அப்போ நீ ஏதோ பண்ணிருக்க?” மகளின் புறமும் சந்தேகம் கிளம்பியது.
திக்கென இதயமே அதன் வேலையை நிறுத்தியது ஓரிரு நொடிகள். “அப்போ ஏதோ பண்ணிருக்க. சொல்லு என்ன பண்ண?” மெதுவாய் கேட்டவர் என்ன பண்ண?” குரலுயர்த்தி கத்த
“இல்லைப்பா.. இல்லைப்பா..” இந்த ஒரு வார்த்தையை விட்டு வேறு பேச முடியவில்லை இவளாலும்.
“வாய்ட்ட கேட்டா சொல்ல மாட்டீங்க” ஹேங்கரில் தொங்கி கொண்டிருந்த பெல்ட்டை கையில் சுருட்டியபடி அவளை நெருங்கினார்.
அப்போதைக்கு மிருகமாயிருந்தார்.
*********
வீட்டிற்கு வந்ததும் தான் தாமதம்.
“உனக்கென்னடா அவசரம் போகுதுன்னு, ஆற பொறுக்காம கொட்டி கவுத்து வச்சிருக்க. வெண்ணைய் திரண்டு வர்ற நேரம் தாழி உடைச்ச கதையாட்டம் ஆகிப்போச்சு. இனி எப்படி அவங்க மூஞ்சில போய் முழிக்கிறது. ஒன்னா இருந்த குடும்பத்தை இரண்டா பிரிச்சு போட்டியே.. போலே, இனி அவ பின்னாடி போய் எங்களை அசிங்கபடுத்தாதலே” எவ்வளவு அடக்கியும் வழிந்த கண்ணீரை சேலை தலைப்பில் துடைத்துக்கொண்டு இவரும் அங்கிருந்து உள்ளறைக்கு செல்ல
“உம் பேரனுக்கு கொடுத்து வச்சது அம்புட்டுதேன். உம்பேத்தி அவனுக்கில்லை”
“எவன் சொன்னான் அப்படி? அந்த மிலிட்டரி காரனா? இல்லை பாரிஜாதம் பண்ற வேலையா? யார்னு செல்லு நான் போய் உண்டில்லை ஆக்கிபோடுறேன்” “எம்பேரனுக்கு பொண்ணு இல்லைம்பானா?” தடியை தூக்கி கொண்டு எழுந்தவரை,
“இருக்குற பிரச்சனையில் நீங்க வேற கிளம்பாதீங்க அத்த” இரண்டு வசவை போட்டு அவரை அப்படியே அமர வைத்த நாச்சி, சுவரோரமாய் தானும் சென்று அமர்ந்து விட்டார்.
காலையில் புது மாப்பிள்ளையாய் இருந்தவன், சில மணி நேரங்களிலேயே வாழ்வை வெறுத்து போய் அமர்ந்திருந்ததை என்ன சொல்ல.
சிறு சிறு விசயங்களுக்கு கூட கத்தி கோபத்தை காட்டி அன்றோடு மறந்து விடும் சமரசு கூட அமைதியாய் இருந்துவிட ‘இவர் நாலு அடி கூட அடிச்சிருக்கலாம்’ என தோன்றாமல் இல்லை.
எஞ்சி இருந்த தமையன்கள் விக்ராவை சுற்றி நிற்க, அடுத்தவர் விடும் மூச்சு காற்று கூட பலமாய் மற்றவர்க்கு கேட்கும் படி அப்படி ஒரு அமைதி நிலவியது. இவர்கள் அமைதியை கண்டு மினி, ஷினி, ஸ்கூபி கூட இவர்களை சுற்றி வாலாட்டியபடி அமைதியாய் படுத்து விட்டது.
சோபாவில் கண் மூடி படுத்தவனுக்கு லாவாவின் நினைவே!
******
“விக்ரா.. விக்ரா” நடைக்கு நான்கு முறை இவனை அழைத்தபடியே வந்தாள் லாவன்யா. இவள் அழைக்கையிலேயே “வந்துட்டா ராட்சசி, வீட்டில் வேற இன்னைக்கு இரண்டு கிழவிகளும் இருக்கு, மூனாவது கிழவி” நமட்டு சிரிப்போடு அறைக்குள்ளே இருந்தவன் காதை தீட்டினான்.
மகள் வயிற்று பேத்தியான லாவாவிற்கு ராதை சப்போர்ட் என்றால் மகள் வயிற்று பேரனான விக்ராவிற்கு பர்வதம் சப்போர்ட். இதன் பொருட்டே ராதைக்கும் பர்வதத்திற்கும் முட்டிக்கொள்ளும்.
பர்வதம் அடுத்த தெருவில் வசித்து வந்தாலும், உடல் நிலை முடியாமல் போகையில் எல்லாம் நாச்சியின் வீட்டிற்கு வந்துவிடுவார்.
இன்றும் வந்திருந்தார்.
“என்னடி, வரும் போதே என் பேரனை ஏலம் போட்டுட்டு வர்ற” பர்வதம் ஏக போகமாய் வரவேற்றார்.
“ஏலத்துல விட்டா கூட உன் பேரனை எவளும் வாங்க மாட்டா. சரியா பிராடு பய” சிலுப்பிக்கொண்டு இவள் செல்ல,
‘நானாடி பிராடு, நீயே பெரிய பிராடு’ பல்லை கடித்தான் விக்ரா.
“நீ் ரொம்ப நல்லவன்னா, வேற நல்லவனா பாத்து அவன் கூட சுத்துடி, என் பிராடு பேரன் எதுக்கு ஒனக்கு” ஒரண்டை இழுத்தார் பர்வதம்.
“பெறவு பிரண்டுக்கு ஒருத்தன், பெஸ்டிக்கு இன்னொருத்தனை தேடவா முடியும், கூறுகெட்ட கிழவி, ஏழு கட்டு புல்லு தின்னாளாம்” இவளும் சரி மல்லுக்கு நின்றாள்.
“ஏண்டி என்னைய வித்தார கள்ளி சொல்லுத, சாப்பாட்டுக்கு என்னை கூப்பூடு, மொய்க்கு எங்கண்ணன கூப்டுன்னு போய் திண்ணுட்டு வந்த குடும்பம் தானடி உன்னோடது, நீ என்னைய வித்தார கள்ளி செல்லுத” புல் பார்மில் இருந்தார் பர்வதம்.
“எல்லாந்தெரிஞ்சவ மாதிரி நீ பேசாதடி.. ஆடத்தெரியாதவ மேடை கோனல்னு னாலாம். வந்துட்டா ஆடிக்கிட்டு” என ராதையும்
“அப்படி தான்டி வருவேன் ஆட்டிகிட்டு உனக்கு மட்டும் எல்லாந்தெரியுமோ? அறுக்கமாட்டாதவளுக்கு அம்பத்திரண்டு அறுவாமனையாம்” என பர்வதமும்
“கோழிக்கு நேரஞ்சரியில்லைன்னா முனியாண்டி விலாஸ் முன்னாடி போய் முக்காபுல டான்ஸ் ஆடுமாம், அப்படி தேன் நீ என் முன்னாடி ஆடிகிட்டு கிடக்குத.. அடுச்சு கொழம்பு வச்சிபுடுவேன் பார்த்துக்க” என ராதையும்