தென் பாண்டி மீனாள் 25 FINAL அண்ட் எபிலாக்

கந்தன் சிலைக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பில் மாளிகையே சந்தனத்தால் மணத்தது.

இன்னும் சில நிமிடங்களில் அதி சிறப்பான விழா ஒன்று மாளிகையில் நடந்தேறவுள்ளது.

காணும் இடமெல்லாம் தோரணங்கள், அலங்காரங்கள், மக்கள்!

அறிந்தவர், தெரிந்தவர் என்று ஒருவர் விடாமல் எல்லோருக்கும் அழைப்பு சென்றிருந்தது.

மொத்த மாளிகையும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க, மேற்பார்வை ஆட்கள் பரபரப்பாக ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர்.

மாளிகையினர் உள்ளுக்குள் பொங்கும் மகிழ்ச்சியை முழுதும் வெளிப்படுத்தாமல், அளவான புன்னகையுடன் விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்தனர்.

கஜலக்ஷ்மி, தனபாலன் தம்பதி வயதின் காரணமாக ஓரிடத்தில் இருக்க, எல்லாம் தேடி சென்று பேசினர்.

“நேரம் ஆச்சு பானு” என்று கஜலக்ஷ்மி மகளை அழைத்து சொல்ல,

“இதோ அவங்களே வந்துட்டாங்க” என்றார் தயாளன்.

வில்வநாதன் தன் சிறு குடும்பத்துடன் வர, தயாளன் மகனை எதிர்கொண்டு கை நீட்டினார்.

வில்வநாதன் அவரை அழுத்தமாக பார்த்து, தங்களின் இளவரசனை அவரின் கையில் கொடுத்தான்.

‘கார்த்திக்!’ தயாளனின் மூன்று வயது பேரன் தாத்தாவின் கழுத்தை கட்டி கொண்டான்.

தங்க ரதமாக ஜொலித்த மீனலோக்ஷ்னி கையை பற்றி கொண்ட வில்வநாதன், தாத்தா, பாட்டி முன் வந்து நின்றான்.

இருவரும் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க முனைய, “என் பேரன் அழகியே. என்ன பண்ற நீ?” என்று அவளை தடுத்து, தலையில் கை வைத்து வாழ்த்தினர் பெரியவர்கள்.

ஒன்பது மாத வயிற்றுடன், நிறைந்த அழகியாக கண்ணை கவர்ந்த மனைவியை அம்மாவிடம் ஒப்படைத்தான் கணவன்.

மீனலோக்ஷ்னிக்கான இரண்டாம் வளைகாப்பு தொடங்கியது.

அவர்கள் திருமணத்தை விட, முதல் வளைகாப்பு, மகனின் பெயர் வைத்தல் என எல்லாவற்றையும் விட, இரண்டாம் வளைகாப்பு தான் மிகவும் பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தது.

இவ்வளவு ஆட்களுக்கு மண்டபம் பார்க்கலாம் என்று பாட்டி சொல்ல, மறுத்து மாளிகையிலே வைத்தான் அவர்களின் ராஜா.

ஆடம்பரத்தை விரும்பாத மகன், இன்று காணும் எல்லாவற்றிலும் பணத்தை வாரி இறைத்திருக்க, பேரனுடன் மகனையே பார்த்திருந்தார் தயாளன்.

அவரின் மகனுக்கு மகன் வந்தாயிற்று. ஆனாலும் அவருக்கு அவரின் மகன் மீதான பாசம், ஏக்கம் குறைவதாக இல்லை.

வில்வநாதன் கைகளை கட்டி நடுநாயகமாக நின்றிருக்க, அவன் கண் பார்வையிலே மனைவிக்கு வளைகாப்பு ஆரம்பித்தது.

பாண்டி நாட்டு அழகிக்கு வளையல் இட  அவளின் கணவனை அழைத்தனர். கொஞ்சம் சங்கடத்துடன் அமர்ந்திருந்தவள் கணவன் வரவும் உர்ரென பார்த்து வைத்தாள்.

“என்னடி” என்றவன் சில்லென்ற சந்தனத்தை பூவாக கன்னத்தில் பூசி, கண்ணாடி வளையலை வலிக்காது மனைவியின் கைகளில் போட்டுவிட்டான்.

“இப்போவும் நீங்க வில்லன் வேலை தான் பார்த்திருக்கீங்க” என்றாள் மனைவி மென்குரலில் குற்றம் சாட்டி.

“இருக்கட்டும். உனக்கு நான் வில்லன் தானே?” என்றவன், அவளின் உச்சியில் அழுத்தமாக முத்தம் வைத்து நகர்ந்தான்.

மீனலோக்ஷ்னிக்கு எல்லாம் பார்க்க இப்படியா என்று அடிக்கண்ணால் கணவனை முறைத்து, சிவந்த முகத்தை திருப்பி கொண்டாள்.

இரண்டாம் வளைகாப்பிற்கு இவ்வளவு அமர்க்களம் தேவையா என்ற அசவுகரியம் பெண்ணுக்கு. அது அவளின் வில்லனுக்கும் தெரியும். ஆனாலும் செய்வான். அதுதானே வில்லன்!

சிறு குறையும் இல்லாமல் எல்லா சடங்கையும் நிதானமாகவும், பொறுமையாகவும் செய்து முடிக்க, மீனலோக்ஷ்னியை அறைக்கு அழைத்து சென்றனர்.

மிகவும் ஆசுவாசத்துடன் அமர்ந்த மகளுக்கு சுஜாதா உணவை ஊட்ட, கார்த்திக் அப்பாவின் தோளுக்கு மாறியிருந்தான்.

தயாளன், அறிவழகன் முன்னின்று எல்லோரையும் உணவுக்கு அனுப்பி வைக்க, பந்தியில் அரவிந்தன், வினய் நின்றனர். வினய்க்கு திருமணம் முடிந்து, சகோதர்களுக்கு குழந்தையும் பிறந்திருந்தது.

ஓரளவு விருந்தினர்கள் குறைய, வீட்டினர் கொஞ்சம் ஓய்வாக அமர்ந்த நேரம். கஜலக்ஷ்மியிடம், “பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?” என்று அறிவழகன் தம்பதி கேட்டு கொண்டிருந்தனர்.

பானுமதி மகன் முடிவு தான் என்பதால் பேசாமல் நிற்க, கஜலக்ஷ்மிக்கு வேறு கவலை.

அப்போது அவர்களின் பங்காளிகள் உணவு முடித்து, “என்ன அத்தை. ஒருவழியா பாரம்பரியத்தை உடைச்சுட்டிங்க போல” என்று கேட்டு கொண்டே வந்தனர்.

“என்ன ரங்கசாமி கேட்ட?” என்று பாட்டி அழுத்தமாக கேட்டார்.

“அதான் பாட்டி. உங்க பாரம்பரியம் உடைஞ்சிடுச்சு இல்லை அதை கேட்டார் சித்தப்பா” என்றான் வேறு ஒருவன்.

“அதனால உங்களுக்கு எதுவும் கஷ்டம் இருக்கா?” என்று கேட்டபடி வில்வநாதன் வந்து நின்றான்.

மாளிகையின் ராஜாவின் தீர்க்கமான பார்வையில், “இல்லை தம்பி. நாங்க முதல்லே சொன்னோம். சும்மா பாரம்பரியத்தை புடிச்சுட்டு தொங்காதீங்கன்னு. உன் பாட்டியும், அம்மாவும் தான் கேட்கல” என்றார் பெரியவர் அடக்கி வாசித்து.

“ஆமா. இத்தனை தலைமுறையா ஆண் வாரிசு இல்லாம, அவங்க இந்தளவு காப்பாத்தினதே பெருசு” என்று ஒருவர் அதிகமாக சிரிக்க, மற்றவர்களுக்கும் அதில் இணைந்து கொண்டனர்.

கஜலக்ஷ்மி, பானுமதி இதை எல்லாம் அதிகமே கடந்து வந்திருக்க, சிரித்தவர்களை கொஞ்சம் நக்கலாகவே பார்த்து வைத்தனர்.

அதிலே பங்காளி உறவுகள் முகம் கருக்க, “நீங்க சொன்ன ஆண் வாரிசு நான் தான் பாரம்பரியத்தை உடைச்சிருக்கேன். நீங்க சிரிக்கிறீங்க?” என்று வில்வநாதன் ஆழ்ந்த குரலில் சற்று அதட்டியே கேட்டான்.

“மாளிகையில நான் பிறந்து வந்து தான் எதையும் தூக்கி நிறுத்தணும்ன்னு இல்லை. என் நாலு தலைமுறை ராணிகளுமே நாப்பது தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைச்சிருக்காங்க”

“நீங்க எல்லாம் எனக்கு முந்தைய தலைமுறை இல்லை?” என்று புருவம் உயர்த்தி பார்க்க, கேட்டவர்களுக்கு வாய் திறக்க முடியவில்லை. அவர்களின் தொழில் எல்லாம் படுத்து, இவர்களின் டீலர்ஷிப் மூலம் தான் பலருக்கு வாழ்வாதாரமே!

“பாரம்பரியத்தை மட்டுமில்லை, பணத்தையும், அந்தஸ்தையும் கூட அவங்க சிறப்பாவே காப்பாத்திட்டாங்க. இனியும் என் அம்மா, பாட்டி பத்தி பேச்சு வந்தது மாளிகைகாரங்க சொந்தம் உங்களுக்கு இல்லைன்னு அர்த்தம். இப்போ கிளம்புங்க” என்று கை கூப்பிவிட்டான்.

உறவுகள் முகம் கறுத்து கிளம்பி செல்ல, “இவங்ககிட்ட எல்லாம் நம்ம நிலையில இருந்து இறங்கி பேச கூடாது ராஜா” என்றார் பாட்டி அனுபவத்தில்.

“பேசணும் பாட்டி. கோபுரத்தோட நிழலை அனுபவிக்க தெரிஞ்சவனுக்கு அதை கும்பிடவும் தெரியணும்” என்று வில்வநாதன் சொல்ல, தயாளனுக்கு மகனை கட்டி கொள்ளும் வேகம்.

பானுமதி இடறிய கல்லை மகன் உடைத்தே விட்டானே!

முந்தைய தலைமுறையினர் உழைப்பை கோபுரமாக்கி அழகு பார்த்த பேரனை, கஜலக்ஷ்மி உள்ளார்ந்த அன்போடு அணைத்து கொண்டார்.

அறிவழகனுக்கு மருமகன் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு மாதிரி தெரிந்தான்.

“எல்லோருக்கும் பதில் கொடுக்கணும்ன்னு தான் மாப்பிள்ளை இவ்வளவு விமரிசையா வளைகாப்பு வைச்சிருக்கார் போல” என்று சுஜாதா மருமகனை நினைத்து பூரித்து கொள்ள, மீனலோக்ஷ்னி புருவம் சுருங்கியது. அவளுள் பல கேள்விகள்.

கஜலக்ஷ்மி இவளை தேடி கொண்டு வந்தவர், “உனக்கு அம்மா வீட்டுக்கு போகணும்ன்னு இருக்கா மீனா பொண்ணு?” என்று கேட்டார்.

“அப்படி எல்லாம் இல்லை பாட்டி. ஏன் என்னாச்சு?” என்று அவள் அவரின் கை பிடித்து கேட்க,

“பேரன் ஜோடி இரண்டாவது பிரசவத்திற்கு எங்களோட இருக்கணும்ன்னு ஆசை” என்றார்.

அதன்பின் அறிவழகன் தம்பதியும் வற்புறுத்தவில்லை. முதல் பிரசவம் அவர்கள் தானே பார்த்தனர்.

அன்றிரவு வில்வநாதனிடம்,  “மாமாவையும் மனசுல வைச்சு தான் வளைகாப்பு கிராண்டா பண்ணீங்களா?” என்று கேட்டாள் மீனா பெண்.

“அவர் தான் முதல்ல” என்றான் தயாளனின் மகன் உடனே.

அவனின் அழகி அவனை முறைக்க, “அவர் தான் முதல் ஹிட் லிஸ்ட் மேடம். பொண்ணு வேணும்ன்னு என்னை விட்டு போனார் இல்லை” என்றான் இப்போதும்.

“உங்களுக்கே பையன் பிறந்து, உங்க நெஞ்சுல படுத்திருக்கான்” என்று மீனலோக்ஷ்னி கார்த்திக் முதுகை வருட,

“அதுக்காக நான் தயாளன் மகன் இல்லைன்னு ஆகிடுமா என்ன?” என்று கேட்டான் வில்லன்.