வில்வநாதனின் கோவம், மனைவியின் அணைப்பிலே அடங்கி போனது.
‘இந்த வில்லனை பிடிக்கும், இவர் மட்டும் தான் வேணும்’ என்றதில், இன்ப அதிர்வுக்குள்ளானான்.
உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மின்னல் வெட்டி சென்றது.
அவனின் விறைத்த உடல், இப்போது வேறு மாதிரி இளகி நின்றது.
கண்கள் மூடி அந்த சுக அவஸ்தையை முழுதாக அனுபவித்தான்.
பாண்டி நாட்டு அழகி, கணவனின் நெருக்கத்தை, அவன் ஸ்பரிசத்தை தனக்குள் மிச்சமில்லாது அணைகட்டி கொண்டாள்.
இருவருக்கும் விலகும் எண்ணம் எல்லாம் இல்லை. நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தனர்.
வில்வநாதன் மனைவியின் அணைப்பை இன்னும் நெருக்கி கொண்டவன், “இந்த வில்லன் என்னோட பாண்டி நாட்டு அழகிக்கு மட்டும் தான். ஆனா நான் மட்டும் தான் வேணும்ன்னு நீங்க சொல்ல முடியாது மேடம்” என்றான்.
மீனலோக்ஷ்னி வேறு உலகத்தில் இருந்தவள் கணவனின் வார்த்தையில் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனிடமும் அவ்வளவு இளக்கம், மயக்கம். அதிலும் அவன் கொண்ட உறுதி, பேச்சின் நிலைத்தன்மை மனைவியின் கண்களை விரிக்க தான் செய்தது.
“இந்த கண்ணை விரிச்சு நீ எவ்வளவு தான் என்னை மயக்கினாலும், என்னோட கவனம் மிஸ் ஆகாதுடி என் பொண்டாட்டி” என்றவன், அவளின் கண்களில் முத்தம் வைக்க போக,
“நான் மயங்கி நிக்கிறது என்னோட அழகியால. சோ நீங்க அவங்களுக்கு சொல்லுங்க என்னை மயக்கி முந்தானையில முடிச்சுக்க வேணாம்ன்னு” என்று கண்ணடிக்க,
மீனலோக்ஷ்னிக்கு கடுப்பு. அவளின் மூக்கை பிடித்து ஆட்டி விட்டவன், “வில்லனோட எல்லாம் உன்னையே சேரும். மாற்ற நினைக்காத” என்றான்.
அதில் கட்டளை போல் ஏதோ ஒன்று இருந்தது நிச்சயம்.
கணவனின் முடிவை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பது மனைவிக்கு நன்றாகவே புரிந்து போனது.
வில்வநாதனுக்கு மனைவியின் வார்த்தைகள் தந்த சுகம், அவன் வலுவான பிடியில் வெளிப்பட்டது.
மனைவியின் இடையை இழுத்து தன்னோடு இறுக்கி கொண்டவன், அவளின் முகத்தோடு முகம் வைத்து, “முந்தானையில் முடிஞ்சிக்க ரெடியா?” என்று கேட்க,
கூசி சிலிர்த்த பெண், சட்டென அவனிடம் இருந்து விலகி கொண்டாள். கணவனின் வேகம் அவளை அச்சறுத்தியது.
வில்வநாதனும் அவளை தடுக்கவில்லை. தலை முடியை அழுத்தமாக கோதியபடி, பால்கனி கதவு திறந்து சென்றுவிட்டான்.
மீனலோக்ஷ்னி நிற்க முடியாமல் கட்டிலில் அமர்ந்துவிட, வில்வநாதன் தோட்டத்தை பார்த்து நிதானத்துக்கு வர முயன்று கொண்டிருந்தான்.
காரணமே இல்லாமல் இருவருக்கும் மெலிதாக மூச்சும் வாங்கி கொண்டிருந்தது. மீனலோக்ஷ்னி முகம் மூடி, அமர்ந்த வாக்கிலே கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.
வில்வநாதன் மனைவியை திரும்பி பார்த்தவன், அவள் மேல் தனக்கும் இடம் கேட்ட நெஞ்சை தட்டி, திரும்பி கொண்டான்.
மதிய உணவுக்கு கஜலக்ஷ்மி அழைக்கும் வரை தனி தனியே இருந்தவர்கள், அதன் பின் ஒன்றாக இறங்கி வந்தனர்.
பேசிக்கொள்ள வேண்டும் என்ற தோன்றவில்லை. பிடித்தது. மௌனமும் பிடித்தது. இந்த இடைவெளியும் பிடித்தது.
அமைதியாக பரிமாறப்பட்ட உணவை எடுத்து கொள்ள, பெரியவர்கள் இருவரின் முகம் பார்த்து நிம்மதி கொண்டனர்.
மறுபடியும் அலுவலகம் செல்ல வேண்டும். உறுப்பினர்களுடன் சில விஷயங்களை கலந்தோலோசிக்க வேண்டும். உணவு முடித்து அவர்களும் காத்து கொண்டிருப்பார்கள்.
“நாங்க போயிட்டு வரோம். நீ ரெஸ்ட் எடு” என்று பானுமதி மகனுக்கு சொன்னார்.
“ஆமா ராஜா. உன்னோட ப்ரெசன்ட்டேஷன் பானுக்கு தெரியும். நாங்க பார்த்துகிறோம்” என்றார் கஜலக்ஷ்மியும்.
என்னமோ அவர்கள் வீட்டு ராஜாவின் முகம் புதிதாக இருந்ததுடன், மகிழ்ச்சியையும் கொடுத்தது.
வில்வநாதனுக்குமே அப்போது தான் நினைவிற்கு வர, பெரியவர்களை பார்க்க முடியாமல் புருவத்தை நீவி விட்டு கொண்டவன், “இல்லை. நான் வரேன் பாட்டி” என்றான் ஜுஸ் குடிப்பதில் கவனம் போல்.
சரி என்று அவர்கள் கிளம்பிவிட, “நீ போய் ரெஸ்ட் எடுமா” என்று தயாளன் மருமகளிடம் சொல்ல, அவளும் அறைக்கு சென்றாள்.
தந்தையிடம் பேச வேண்டும், அவரிடம் தொழில் பங்கு பற்றி சொல்ல வேண்டுமே!
“சொல்லு ராசாத்தி” என்று மகள் அழைக்கவும் அறிவழகன் போன் அழைப்பை ஏற்றார்.
“ப்பா. அம்மா இருக்காங்களா?” என்று கேட்டு கொண்டு இருவருக்கும் சொன்னாள்.
அறிவழகனுக்கு அதிர்ச்சி. இதென்ன இவ்வளவு சீக்கிரம் ஷேர்ஸ் எல்லாம் கொடுத்திருக்காங்க? என்று மனைவி முகம் பார்த்து கொண்டார்.
“இவ்வளவு சதவீதம்ப்பா” என்று மகள் மேலும் சொல்ல, திகைத்து போனார்கள் பெற்றவர்கள்.
பல நூறு கோடி மதிப்பு அது. அறிவழகன் மனம் உடனே கணக்கு போட்டுவிட, மிரண்டு போனார் மனிதர்.
“எனக்கும் தெரியலைப்பா. சர்ப்ரைஸ், கிப்ட்ன்னு சொல்லி காலையில ஆபிஸ்க்கு அழைச்சிட்டு போய், போர்ட் மீட்டிங்ல வைச்சு கொடுத்தார்ப்பா” என்றாள் மீனலோக்ஷ்னி.
அவளின் குரலிலே மகளுக்கு விருப்பமில்லை என்பது தாய், தந்தையருக்கு புரிந்து போனது. மகளை பற்றி அறியாதவர்கள் இல்லையே?
“உனக்கு சரின்னா எங்களுக்கும் சரி தான் பாப்பா. ஆனா? வற்புறுத்தி ஏதும் கொடுத்தாரா?” என்று கேட்க,
“இல்லைப்பா. கொடுத்திருக்கார். நான் எதுவும் செய்ய வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்” என்று மகள் திணறி பதில் சொன்னாள்.
“அதெப்படி பாப்பா எதுவுமே செய்யாமல் இருக்க முடியும்? விளையாட்டு காரியம் இல்லை இது. உனக்கு கொடுத்த பங்கோட மதிப்பு என்ன தெரியுமா உனக்கு?” என்று அவரின் கணக்கை மகளுக்கு சொல்லிவிட, அவளுக்குமே அச்சத்தில் கண்கள் விரிந்து போனது.
“எனக்கு தெரியாதுப்பா” என்றாள் உள்ளே போன குரலில்.
“அவங்களோட மொத்த சொத்து மதிப்பை முதல்லே பெரியம்மா என்கிட்ட சொல்லிட்டாங்க பாப்பா. நானே ரொம்ப யோசிச்சு தான் உன்னை அங்க கொடுத்தேன். இப்போ தொழில்ல பங்குன்னா? என்ன ராசாத்தி இது?” என்று மகளை நினைத்து கவலை கொண்டார்.
சிறு பெண், இப்போது தான் படிப்பை முடித்திருக்கிறாள். உடனே திருமணம். உலகம் அனுபவம் இல்லை. தொழில் பற்றி தெரியாது. இதற்குள் இவ்வளவு மதிப்பை அவள் தலையில் சுமத்த வேண்டுமா? தந்தையின் கவலை வேறு மாதிரி இருந்தது.
“மாப்பிள்ளை கொஞ்சம் கட் அண்ட் ரைட்டா தான் இருக்கார். உனக்கு அவரை சமாளிக்கிறது கஷ்டமா இருந்தா என்கிட்ட சொல்லு பாப்பா” என்று அறிவழகன் கேட்க,
“இதெல்லாம் பெரிய பொறுப்பு பாப்பா. உன்னை இவ்வளவு சீக்கிரம் உள்ள கொண்டு வரணும்ன்னு அவசியம் இல்லையே?” என்றார் அவர் அதிருப்தியுடன்.
“ஏங்க, இப்போ எதுக்கு அவளை குழப்புறீங்க?” என்று சுஜாதா கணவரை கண்டித்தவர், “பாப்பா. மாப்பிள்ளை உனக்குன்னு விருப்பப்பட்டு கொடுக்கும் போது ஏன் சங்கடபட்டுக்கிற” என்றார்.
என்னமோ மீனலோக்ஷ்னிக்கு கண்கள் கலங்கி போனது. “ம்மா” என்றாள் மகள்.
சுஜாதாவிற்கு அவள் கலக்கம் கண்டுகொள்ள, கணவரை முறைக்கவே செய்தவர், “மீனா. மாப்பிள்ளை அவ்வளவு பெரிய தொழில் எடுத்து நடத்துறார். அவருக்கு எல்லாம் தெரியும். யோசிச்சு தான் செஞ்சிருப்பார். நீ அப்பா பேச்சை எல்லாம் கேட்டு மனசை குழப்பிக்காத” என்றார் மகளிடம் திட்டவட்டமாக.
“சரிம்மா” என்று மகள் கேட்டுக்கொள்ள, மேலும் சில நிமிடங்கள் பேசியே பெற்றவர்கள் வைத்தனர். அப்போதும் அறிவழகன் சுணங்கியே வைக்க, மகளுக்கு அவ்வளவு கலக்கம்.
பங்கு, சொத்து, பணம் எல்லாம் பின்னுக்கு போய் கணவன் பற்றி தந்தை சொன்னதே மனதில் நின்றது.
அப்பாக்கு இவர் மேல் ஏன் இப்படி ஓர் அபிப்ராயம்? மனம் தாங்கவில்லை.
அப்பாவே சொன்னாலும் அதை ஏற்று கொள்ள முடியா அளவா கணவனை பிடித்திருக்கிறது!
ஜன்னல் பக்கம் நின்று வெளியே பார்த்தவளுக்கு ஏதேதோ எண்ணம். வில்வநாதன் அவளிடம் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும், மிகவும் உள்ளார்ந்து தான் சொல்லியிருக்கிறான் என்பது நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
“என் அப்பா மேல எனக்கிருக்க கஷ்டம் உனக்கு நல்லா தெரியும். வேற ஒருத்தரை பார்த்து அவங்களுக்கு என்னை புரிய வைச்சு, என் அப்பா பத்தி சொல்லி எல்லாம் பெரிய வேலை” என்று சொல்லியிருக்கிறான்.
அது உண்மை. அவனை புரிந்ததால் தானே, பங்கு விஷயத்தில் அவனிடம் கோவம் கொள்ள முடியவில்லை.
கணவனை அணைத்து கொள்ள தானே தவித்து நின்றாள்!
எனக்கு அவரை புரியும். ஆனா அப்பாக்கு எப்படி அவரை சொல்வேன்? பெரிய கலக்கம்.
மீனலோக்ஷ்னியின் சுழன்ற கண்கள் ஓரிடத்தில் நின்றது. தயாளன் அந்த குடிலில் அமர்ந்திருந்தார்.
காலை அவர்களுடன் அலுவலகம் வரும் போது மட்டும் அதற்கேற்றாற் போல் கோட், சூட்டில் இருந்தவர், இப்போது அந்த வேஷத்தை கலைத்து விட்டேன் என்பதாய் அவருக்குரிய வேஷ்டி, டீஷர்ட்டில், புத்தம் படித்து கொண்டிருந்தார்.
அறையில் இருக்க முடியாமல் அவரை தேடி சென்றாள் மருமகள். “வாம்மா. ரெஸ்ட் எடுக்கலையா?” என்றபடி புத்தகத்தை மூடி வைத்தார் மாமனார்.
“இல்லை மாமா. உங்களை பார்த்தேன்” என்றவள் வெளிக்காற்றை சுவாசிக்கவும் கொஞ்சம் முகம் தெளிந்தாள்.
“டீ கொண்டு வர சொல்லவா?” என்று தயாளன் கேட்க,
“நானே சொல்றேன் மாமா” என்றவள், அங்கிருக்கும் போன் மூலம் பேசி வைத்தாள்.
இருவரும் பொதுவாக பேசியபடி டீ குடிக்க, கஜலக்ஷ்மி தம்பதியும் வந்துவிட்டனர்.
“பானுவும், ராஜாவும் பின்னாடி வராங்க” என்று தகவல் சொல்லி அமர, அவர்களுக்கும் குடிக்க கொண்டு வர சொன்னாள் மீனலோக்ஷ்னி.
“மீனம்மா. தாத்தா உன்கிட்ட ஒன்னு கேட்பேன். உண்மையை சொல்லணும்” என்று தனபாலன் ஆரம்பித்தார்.
“சொல்லுங்க தாத்தா” என்று பேத்தி உறுதியளிக்க,
“உனக்கு ஷேர்ஸ் கொடுத்தது பிடிக்கலையாம்மா” என்று கேட்டார். காலையில் இருந்து அவருக்கு அது உறுத்தல்.
மீனலோக்ஷ்னி நிமிடம் எடுத்து, “எனக்கு அது வேண்டாம்ன்னு தோணுச்சு தாத்தா” என்றாள்.