தென் பாண்டி மீனாள் 13 2 11905 “ண்ணா, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா முதல்ல?” என்று பானுமதி கேட்டு, அவர்கள் பதிலை நம்பாமல் உணவிற்கு ஏற்பாடு செய்தார். மறுத்தவர்களை விடாமல் வீட்டிற்குள் அழைத்து சென்று, உணவுண்ண வைத்தனர். “இப்போதான் கண்ணே தெரியுது” என்று வினய் இவளிடம் மெல்லிய குரலில் சொன்னான். “ரொம்ப பயந்துட்டீங்களா, சாரி என்னாலதான் எல்லாம்” என்று பெண் வருத்தம் கொள்ள, “மீனா. அந்தளவு பயம் எல்லாம் இல்லை. அதான் சார் வந்துட்டாரே. பிரேக் எடுக்காம ட்ராவல் பண்ணி வந்ததை தான் அப்படி சொல்றான்” என்ற அரவிந்தன், “நீ ஓகே தானே? ஏதா இருந்தாலும் சொல்லு” என்று அவளிடம் விசாரித்தான். அறிவழகனுக்காக தனக்குள் மறுகி போவாளே தவிர வாய் திறந்து சொல்ல மாட்டாள். “நான் ஓகே தான்” என்று பெண் சொல்ல, இருவரும் நிம்மதி கொண்டனர். “மீனாமா. இங்க வா. உட்காரு” என்று தனபாலன் அவளை தன் பக்கத்தில் அழைக்க, “இல்லை, வேணாம் தாத்தா. நான் நிக்கிறேன்” என்று மறுத்துவிட்டாள். “அவங்க அப்பா இருக்கார் இல்லை தாத்தா. அதான் மேடம் பம்முறாங்க” என்று வில்வநாதன் சொல்ல, “பாப்பா. ஏதும் வம்பு பண்ணியா நீ?” என்று அறிவழகன் கேட்டார். “இல்லைப்பா. அப்படி இல்லை” என்றவள் அவனை அடிக்கண்ணால் பார்த்து வைத்தாள். “சரிங்க பெரியப்பா நாங்க கிளம்புறோம்” என்று அறிவழகன் எழுந்துகொள்ள, மீனலோக்ஷ்னியின் உடமைகளும் அவர்களின் காருக்கு சென்றுவிட்டது. மீனலோக்ஷ்னி எல்லோருக்கும் தனி தனியே சொல்லி கொண்டாள். “அறிவழகா” என்று அவரை மட்டும் நிறுத்தினார் கஜலக்ஷ்மி. சிறியவர்கள் காருக்கு வந்துவிட, “மீனா பொண்ணு எக்ஸாம் முடியட்டும். நாங்க வீட்டுக்கு வரோம்” என்றார். அறிவழகனுக்கு அந்த நேரத்தில் வேறெதுவும் யோசனை வரவில்லை. “அவ எக்ஸாம்க்கு என்ன பெரியம்மா. நீங்க எப்போ வேணும்ன்னாலும் வாங்க” என்றார் அவர். “சரி அப்படி தான் வரோம். அதுவரை புள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் அது இதுன்னு ஆரம்பிச்சிடாத” என்றார். “சரி, சரி பெரியம்மா” என்று அவர் விடைபெற்று கொண்டார். வில்வநாதன் பாட்டியை பார்த்து கேலியாக சிரிக்க, “அவன் இப்போ நிலையா இல்லை ராஜா. அதான் புரிஞ்சுக்க முடியலை” என்றார் அவர். “ம்மா. நீங்க அறிவழகன் அண்ணாகிட்ட பேசிடுங்க” என்று பானுமதி சொல்ல, “பேசுங்க. ஆனா உங்க அழகியே, இந்த சம்மந்தத்தை வேணாம்ன்னு தான் சொல்லுவா” என்றான் வில்வநாதன் உறுதியாக. “அதை நாங்க பார்த்துகிறோம்” என்றார் பானுமதி. எனக்கென்ன என்று அவன் தோள்களை குலுக்கி கொண்டு மேலேறிவிட்டான். அதன் பின்னான நாட்கள் கொஞ்சம் வேகமாகவே சென்றது. எந்தவித மாற்றமும் இல்லை. “உங்க பாப்பா எப்படி இருக்கா? எல்லாம் ஓகே தானே?” என்று அரவிந்தனிடம் இடையில் கேட்டான் வில்வநாதன். “நல்லா இருக்கா சார்” என்று அரவிந்தன் சொல்ல, “குட், உன் விஷயம் என்னாச்சு?“ “தயாளன் சார் போன வாரம் பேசினார். கொஞ்சம் பாஸிட்டிவா இருக்கு” என்று மகிழ்ச்சியாக சொன்னான். “நல்லது மேன். சீக்கிரம் கல்யாண விருந்தை எதிர்பார்க்கலாம்” என்றான் வில்வநாதன். “எஸ் சார். அவங்க ஓகே சொன்னதும் நேரா கல்யாணம் தான்” என்றான் அரவிந்தன். அவன் ஆசைப்படி, காதலித்த பெண்ணின் வீட்டில் ஒரு வழியாக சம்மதம் சொன்னார்கள். அரவிந்தன் குடும்பத்தில் கல்யாண வேலையை உடனே ஆரம்பித்துவிட்டனர். நிச்சயம் என்று தனியே வைக்காமல், முகூர்த்தத்திற்கு முன்தினம் வைத்தனர். “காதல் கல்யாணம். நிறைய கேள்வி. எதுக்கு தொல்லைன்னு தான் பெரியம்மா” என்று அறிவழகன் பத்திரிக்கை வைக்கும் போது கஜலக்ஷ்மியிடம் சொன்னார். “மீனா பொண்ணு எப்படி இருக்கா?” என்று பாட்டி விசாரிக்க, “நல்லா இருக்கா. எக்ஸாம் போயிட்டிருக்கு” என்றார் சுஜாதா. அரவிந்தனின் பெற்றவர்கள் வெள்ளி தாம்பூலம் வைத்து பெரிய குடும்பத்தில் எல்லோரையும் மரியாதையாக அழைத்தனர். அரவிந்தன் அவனின் முதலாளிக்கு தனியே அழைப்பு விடுத்தான். அரவிந்தனின் திருமண நாளும் வந்தது. தாய்மாமா முறையில் அறிவழகன் அவரின் முறைகளை குறையில்லாமல் செய்தார். “என்னப்பா உன் பொண்ணை விட்டு, வேறெங்கேயோ போய் பொண்ணு கட்டுறாங்க. அவங்களுக்கு போய் வளைச்சு, வளைச்சு முறை செய்ற” என்று அவரின் பங்காளிகள் எப்போதும் போல் வம்பை ஆரம்பித்தனர். “அட நீ வேற என்னப்பா. நம்ம பொண்ணுக்கு பெரிய சம்மந்தம் காத்திட்டிருக்கு. இதை போய் பேசுற” என்று வேறொருவர் சொல்ல, ‘உங்களுக்குள்ள என்னவேனா பேசிக்கோங்க. என்னை விடுங்க‘ என்று அறிவழகன் நகர்ந்துவிட்டார். “பாரு பங்காளி கமுக்கமா போறாரு. சாதுவான மனுஷனா இருந்தாலும், சூதனமா இருக்கார்” என்றார்கள் அதற்கும். முன்தினம் நிச்சயம் நல்லபடியாக முடிந்தது. அரவிந்தன் கைப்பிடிக்கும் சுகன்யா எல்லோரிடமும் நல்ல முறையிலே பழகினாள். மீனலோக்ஷ்னிக்கு அவர்கள் வீட்டில், அவளின் வயதில் ஒரு தோழமை. அதுவே பெண்ணுக்கு மகிழ்ச்சி. முகூர்த்த நாளில், துணை பெண்ணாக, பட்டு பாவாடை தாவணியில் ஜொலித்தவளை கஜலக்ஷ்மி குடும்பத்தினர் பார்த்திருந்தனர். தயாளன், பெரியவர்கள் வருவார்கள் என்று நினைத்திருக்க, இப்படி மொத்த குடும்பமாக வந்தவர்களை, அறிவழகன் வீட்டினரே எதிர்பார்த்திருக்கவில்லை. வில்வநாதன் வரவை அரவிந்தன் அறிந்திருக்க, பானுமதி, கணவனுடன் வந்தது தான் பேசும் பொருளானது. உள்ளூர் விசேஷங்களுக்கு அவர் தலை காட்டுவதில்லை. அதுவும் தயாளனுடன் வருவது இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறை. மண்டபத்தின் மொத்த கண்களும் இவர்கள் மேல்தான். மீனலோக்ஷ்னி அப்படி யாரை பார்க்கிறாங்க என்று கண்டுகொண்டு, முகம் மலர்ந்து போனாள். மேடையை விட்டு கீழிறங்கி இவர்களிடம் வர, அறிவழகன் வீட்டினர் அவர்களை வரவேற்று முதல் வரிசையில் அமர்த்தினர். “வாங்க பாட்டி, தாத்தா. வாங்க மாமா, அத்தை” என்று வரிசையாக வரவேற்றவள், வில்வநாதனை “வாங்க சார்” என்று வரவேற்றாள். “பெரியப்பா, பெரியம்மா மாங்கல்யம் எடுத்து கொடுக்க வாங்க” என்று மேடைக்கு அழைத்து சென்றனர். பாட்டி மீனலோக்ஷ்னி கையை பற்றி கொண்டார். முகூர்த்த நேரத்தில் அரவிந்தன் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. சுகன்யா குடும்பத்தினருக்கு அதுவரையிலுமான சிறு சிறு சுணக்கமும், பெரிய குடும்பம் வந்ததில் மறைந்து போனது. “எங்க பையன் சார்” என்று வில்வநாதன் மாப்பிள்ளையின் தோள் தட்ட, சுகன்யாவின் தந்தை முழுதாக மகிழ்ந்து போனார். பெரிய குடும்பத்தின் பரிசாக நகை வந்தது. குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்து கொள்ள, மீனலோக்ஷ்னி பாட்டி பக்கத்தில் நிற்க, அவளுக்கு பக்கத்தில் வில்வநாதன் நிற்கும்படி தனபாலன் பார்த்து கொண்டார். “அடங்க மாட்டீங்க தாத்தா நீங்க” என்றான் பேரன் சலிப்பாய். பானுமதி, தயாளன் தம்பதியராக நிற்க, மகனின் கண்கள் அவர்கள் மேல் படிந்து மீண்டது. இந்த நாள் அவனின் ஆழ்மனதின் வெப்பத்தை குளிர்வித்தது. “ரொம்ப சந்தோசம்மா” என்று பானுமதியிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் அறிவழகன். “நம்ம வீட்டு கல்யாணத்துக்கு நான் வராமலாண்ணா” என்றார் அவர். அது அடுத்த நொடியே மண்டபம் முழுதாக சுற்றி வந்தது. சுஜாதா இந்த பேச்சுக்களில் அதிகமே சஞ்சலம் கொண்டார். மகளை இப்படி சேர்த்து வைத்து பேசுவது அவளின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லையே? பெரிய குடும்பம் அடுத்து உணவுண்ணவும் அமர்ந்தனர். “நீ என்னோடவே இரு” என்று பாட்டி பெண்ணை விடவில்லை. பார்த்து, பார்த்து அவர்களை கவனித்தனர். கஜலக்ஷ்மி இலையில் இனிப்பு வைக்கப்பட, வில்வநாதன் பார்வையில், பாட்டி அதை எடுத்து மீனலோக்ஷ்னிக்கு ஊட்டிவிட்டார். “நீயும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுமா” என்று தயாளன் சொல்ல, “இருக்கட்டும் மாமா” என்றாள் பெண் தயக்கத்துடன். என்னமோ எல்லோரின் பார்வையும் இவர்களையே தொடர்வதில், பெண்ணுக்கு சங்கடம். திரும்ப அந்த பேச்சை ஆரம்பித்துவிட்டார்கள் என்பது புரிந்து போனது. உடனே கிளம்பாமல், சிறிது நேரம் மண்டபத்தில் அமர, ஆட்கள் பேச வந்தனர். “நீங்க போங்க” என்று அறிவழகனை அனுப்பிவிட்ட கஜலக்ஷ்மி, பெண்ணை மட்டும் விடவில்லை. “பாட்டி. உங்க உள்ளூர் அழகியை கொஞ்சம் விடுங்க. அவங்க வீட்டு விஷேஷம் இது” என்றான் பேரன் கண்டிப்புடன். மீனலோக்ஷ்னி அவனை நன்றியுடன் பார்த்தவள், பாட்டி விட்டதும் ஓடிவிட்டாள். மனமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, அவர்களுடன் சாப்பிட்டு வந்தாள். மண்டபத்தில் நெருங்கிய உறவுகள் மட்டுமிருக்க, ஓய்வாக அமர்ந்தனர். “அடுத்து மீனா கல்யாண சாப்பாடு தான்” என்றார் ஒருவர். “முகூர்த்தம் எப்போ அறிவழகா? நாள் பார்த்துட்டீங்களா?” என்று கேட்டார் மற்றவர். “மாப்பிள்ளை பார்க்காம, நாள் எப்படிங்கண்ணா பார்க்க?” என்று அறிவழகன் சொல்ல, “என்னப்பா? இன்னுமா மறைக்க பார்க்கிற? பங்காளிக்குள்ள வெளிப்படையா சொல்ல என்ன இருக்கு?” “அதானே. ஊரெல்லாம் தெரிஞ்ச விஷயத்தை போய்“ “ண்ணா. நாம இதை அப்புறம் பேசலாம்” என்று அறிவழகன் நிறுத்தினார். “பெரியம்மா நீங்களாவது சொல்லுங்க. நாங்க கேட்டதுல தப்பிருக்கா? எங்களுக்கு தெரிஞ்சுக்க உரிமையில்லையா” என்றனர். “பங்காளிங்க உங்களுக்கு தெரியாமலயா? அறிவழகன் முறை தெரிஞ்சவன், உங்ககிட்ட சொல்லுவான். அதுவரைக்கும் பொறுங்க” என்று முடித்துவிட்டார் கஜலக்ஷ்மி. எல்லாம் முணுமுணுத்து செல்ல, “மன்னிச்சுக்கோங்க பெரியம்மா. என்ன நடக்குதுன்னு எனக்கு புரியலை” என்றார் அறிவழகன் சங்கடத்துடன். “என்ன போய் நடக்குது அறிவழகா? என் பேரனுக்கு, மீனலோக்ஷ்னியை ஜோடி சொல்றாங்க. ஏன் அதுல தப்பிருக்கா என்ன?” என்று அதிரடியாய் கேட்டார் தனபாலன். “பெரியப்பா” என்று அவர் அதிர, மற்றவர்களும் இதை எதிர்பார்க்காமல் நின்றனர். மீனலோக்ஷ்னியை கவனித்திருந்த வில்வநாதன், அவள் சிலையாக சமைந்துவிட்டத்தில், உதட்டுக்குள் புன்னகைத்து கொண்டான். “என்ன அறிவழகா. என் பேரனுக்கு மீனா பொண்ணை கொடுக்க மாட்டியா? சொல்லு. எப்போ பொண்ணு கேட்டு உன் வீட்டுக்கு வரட்டும்?” என்றார் கஜலக்ஷ்மி உரிமையாக. “பெரியம்மா. நான்” என்று அறிவழகன் திணற, சுஜாதாவும் திகைத்த நிலையில் தான் இருந்தார். “மச்சான். என்ன அப்படியே நிக்கிறீங்க? எப்போ வேணும்ன்னாலும் வாங்கன்னு சொல்லுங்க” என்றார் அரவிந்தனின் அப்பா. “வாழ்த்துக்கள்ப்பா” என்று மீனலோக்ஷ்னியின் தோளோடு அணைத்து கொண்டாள் சுகன்யா. அவளோ இன்னமும் நம்ப முடியா அதிர்ச்சியில் வில்வநாதனை பார்க்க, அவன் விரிந்த புன்னகையுடன், “என்ன?” என்று புருவம் உயர்த்தினான். ‘இந்த முரட்டு ராஜா எனக்கா? ஆத்தாடி. நான் இல்லை!’ என்று மயங்கி விழும் நிலையில் நின்றாள் பெண்.