மாலை நேரத்தில் ஷேர் ஆட்டோவிற்காக கூட்டம் கூட்டமாக மக்கள் காத்திருக்க,“இந்தப் பக்கம் வந்திடு.” என்று வசந்தியின் கையைப் பிடித்து இழுத்து அவரின் இடதுப் பக்கம் அழைத்துக் கொண்டார் ஜோதி. கடந்த மூன்று மாதங்களாக வசந்தி தில்லிவாசியாகி இருந்தாலும் முதல் மாதம்முழுவதும் வீட்டை விட்டு நகரவேயில்லை. வீட்டு வேலைகள் செய்தபடி வீட்டிற்குள்ளேயே சுற்றி வந்தவளை சினேகா தான் கொஞ்சம் போல் வெளியே அழைத்துச் செல்ல ஆரம்பித்தாள். அவள் அலுவலகத்திற்கு சென்ற பொழுதுகளில் அந்தப் பொறுப்பை மாமியார், அம்மா இருவரிடமும் ஒப்படைத்தாள். அவர்களோடு செக்டர் மார்கெட், காய்கறி சந்தை வரை போய் வரப் பழகிக் கொண்டாள். கோவிலுக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது முடியவே முடியாதென்று மறுத்து விட்டாள். கடவுள் நம்பிக்கை முற்றிலும் போய் விட்டது போல் தான் விஜயாவிற்கு தோன்றியது. இவ்வளவு தான் அவளது வேலைகள் என்று வசந்தி நிம்மதி அடைந்த போது ஷிக்காவின் கடைக்கு அவளை அழைத்துச் சென்றார் ஜோதி.
வசந்தியைக் கவனிப்பது, கண்காணிப்பது என்று அவள் சம்மந்தப்பட்ட அனைத்தும் அனிதாவின் ஆலோசனையில் பெயரில் தான் நடைபெற்றன. அவளின் பெற்றோரும் சகோதரிகளும் அவளின் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் விவாகரத்து வேலைகளை ஆரம்பிக்க முடியவில்லை. அவர்கள் திரும்பி வரும் வரை வசந்தியை தில்லியில் அவருடன் வைத்துக் கொள்ளும்படி தங்கையிடம் சொல்லியிருந்தார் மகா. சிந்துவிற்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. ஸ்ருதி என்று பெயர் சூட்டி விட்டு சிந்துவை அவளது மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு மகா சென்னைக்கு வந்து சில நாள்களாகி விட்டது. சொந்த சகோதரிகளோடு பேச்சு வார்த்தை நின்று போய் விட்டதால் இந்த விவரமெல்லாம் வசந்திக்குத் தெரியவில்லை.
தனி மனுஷியாக புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்திருந்தவளுக்கு மற்றவர்களைப் பற்றி யோசிக்க நேரமிருக்கவில்லை. முக்கியமாக ஆர்வம் இருக்கவில்லை. அக்கா, தங்கையைப் பற்றி குறை சொல்லும் வசந்தி எங்கே சென்றாள் என்று வசந்திக்கே தெரியவில்லை. இப்போது ஒவ்வொரு ஷேர் ஆட்டோவையும் உற்றுப் பார்த்து, அவளின் ரூட் ஆட்டோ எது என்று கண்டு பிடிக்கவும் வேலையில் இருந்த வசந்தி அவளின் சகோதரிகளுக்கு அன்னியமாகத் தெரிந்திருந்திருப்பாள். அவளுடைய கையைப் பிடித்திருந்த ஜோதி இருந்த புரிதல், பரிவு அவளின் உடன்பிறப்புக்களிடம் இருக்கவில்லை. திருமணத்தை முறித்துக் கொள்ள முடிவு செய்தது பெரிய குத்தம் போல் ஜெயந்தியும் சிந்துவும் மாறி மாறி அவதூறாக பேசி அவளின் மனத்தையும் அவர்களுடனான உறைவையும் சிதைத்து விட்டனர்.
‘கல்யாணத்தை முடிச்சுக்கிட்டு என்ன செய்யப் போற நீ? கைலே ஒரு பைசா இல்லை மாத்து உடுப்புக்கும் சாப்பாட்டுக்கும் யார் வீட்டுக்குப் போய் கையேந்த போற? உன்னாலே என் மாமியார் வீட்லே என் மானம் போகுது…நீயும் நானும் இரட்டை வேற..நீ செய்ததை நான் செய்த மாதிரி பேச்சு போயிட்டு இருக்கு..நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சொந்த வீடுன்னு மதிப்பா, மரியாதையா வைச்சிட்ட புருஷனை வைச்சு பிழைக்க தெரியலைன்னா தப்பு உன் பெயர்லே தானே..சம்பாதிக்கறது கைக்கும் வாய்க்கும் சரியாப் போகற ஆளை வைச்சுக்கிட்டு, ஒரே பையனைப் படிக்க வைக்க இங்கே அங்கேன்னு இரண்டு பக்கத்திலேயும் உதவி கேட்டுக்கிட்டு நான் வாழ்க்கையை ஓட்டலை..நீ என் கண் முன்னாடி வந்தா அவ்வளவு தான்.’ என்று அவள் பங்கிற்கு நஞ்சைக் கக்கினாள் ஜெயந்தி.
’தாலியைத் தூக்கி எறிஞ்சிருக்க..உனக்கு கல்யாணம் கூடி வரலையேன்னு அம்மாவும் அப்பாவும் எத்தனை கவலைப்பட்டாங்க..வருஷக்கணக்கா உனக்காக வரன் தேடினாங்க..உனக்கு கல்யாணம் நிச்சயமானதும் ‘வசந்திக்கு எப்படி இந்த மாதிரி மாப்பிள்ளை அமைஞ்சதுன்னு’ எத்தனை பேர் வயிற்றெரிச்சல் பட்டாங்க..இப்போ கூட எத்தனையோ பொண்ணுங்க கல்யாணம் நடக்கணும், கழுத்திலே தாலி ஏறணும்னு பிரார்த்தனை செய்யறாங்க.. விரதம் இருக்காங்க..நான் கூட தானே இருந்தேன்..என்ன நடந்தாலும் கணவன், மனைவி உறவுக்கு அடையாளமா இருக்கற அந்தத் தாலியைக் கழட்டி வீசுவேனா?‘உன் அக்கா எப்படி அப்படிச் செய்யலாம்? உன் அபிப்பிராயம் என்னென்னு?’ என் வீட்டுக்காரர் தினமும் கேட்டு குடைச்சல் கொடுக்கறார்..நீ செய்த வேலையை நானும் செய்திடுவேனோன்னு அவருக்கு சந்தேகம் வந்திடுச்சு..உன்னாலே என் வாழ்க்கை நரகமாகிடுச்சு.’ என்று சிந்து கண்ணீர் வடித்தாள்.
வசந்தியின் உடன்பிறப்புக்கள் அவளை வாட்டிக் கொண்டிருந்தது போல் விஜயாவின் உடம்புறப்புக்கள் அவரை வாட்டிக் கொண்டிருந்தனர். ‘அவளுக்கு புத்தி சொல்லாம அவ சொல்படி நீ ஆடிட்டு இருக்க..நீயும் அவளும் ஒண்ணு கிடையாது..புருஷன் இல்லைன்னாலும் உனக்கு புள்ளை இருந்தான்..இவளுக்கு யார் இருக்கா..அடிச்சாலும் உதைச்சாலும் அவனோட தானே இருக்கணும்.’ என்று மகாலக்ஷ்மி விஜயாவைக் கோபித்து கொள்ள,’உன்னோட முடிவு எங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் அப்பாவோட சப்போர்ட் உனக்கு இருந்திச்சு..வசந்தி செய்ததை அக்கா, மாமானாலே ஏத்துக்க முடியலை..விவாகரத்தெல்லாம் வேணாம்..நாங்க நேர்லே வந்து பேசறோம்னு வெங்கடேஷ் மாப்பிள்ளைகிட்டே தினமும் பேசி சமாதானம் செய்திட்டு இருக்காங்க..பெத்த அப்பா, அம்மாக்கு பிடிக்காத விஷயத்தை மக செய்யறா நீ அவளுக்கு நல்ல புத்தி சொல்லாம வேடிக்கை பார்த்திட்டு இருக்க..இது கொஞ்சம் கூட நல்லாயில்லை விஜயா.’ என்று விஜயாவின் அண்ணன் பழனி அவரது அதிருப்தியை வெளியிட்டார்.
நல்லவேளை உறவினர்கள் யாரையும் நேரில் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாமல் பெங்களூரிலிருந்து நேரடியாக தில்லிக்கு வந்து விட்டாள் வசந்தி. நான்கு நாள்கள் கழித்து மதன் வீட்டிலிருந்து அவள் புறப்பட்ட போது உலகம் புதியதாக தெரிந்தது. கொடூரமான பிறவிகளிடமிருந்து அவளைக் காப்பாற்றி அழைத்து வந்த தம்பி அவள் கண்களுக்குக் கடவுளாக தெரிந்தான். மதன் வீட்டில் கழித்த முதல் இரவில் திடீரென்று அலறலோடு அவள் விழித்துக் கொள்ள, அவளைச் சமாதானம் செய்ய அவள் அருகில் வந்த சினேகாவை அடையாளம் தெரியாமல், பயந்து போய் மேலும் அலற, அறையினுள்ளே வந்த ஷண்முகத்தை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் வசந்தி. இதுபோல் ஏதாவது நடக்கலாம் என்று தான் மதனின் அண்ணன் கிஷோர் அந்த இரவை மதனின் வீட்டில் கழிக்க ஏற்பாடாகியிருந்தது. ஷண்முகத்தின் கை வளைவில் இருந்த வசந்திக்கு ஊசி மூலம் மருத்தை ஏற்றினார் கிஷோர்.
வசந்தி உறங்கிய பின்னும் அவளை விட்டு அகலவில்லை ஷண்முகம். அடுத்த நாள் காலையில் அவனுடைய அம்மா வந்த பின் தான் வசந்தியை விட்டு விலகினான். அடுத்து வந்த நாள்களில் சினேகா, ஷண்முகம், விஜயா மூவரும் மாறி மாறி வசந்தியைப் பார்துக் கொண்டனர். வசந்தியின் உடலும் மனதும் தேற நான்கு நாள்களானது. தில்லிக்கு அவர்கள் புறப்பட்ட நாளன்று அவருடைய அண்ணன் வீட்டிற்கு அனைவரையும் அழைத்துச் சென்றார் மதன். சுதனை ஓர் அதிசயம் போல் பார்த்துக் கொண்டிருந்தனர் விஜயாவும் வசந்தியும். அவனைப் பற்றிய சில விவரங்களை ஏற்கனவே சினேகாவும் ஷண்முகமும் பகிர்ந்து கொண்டிருந்தனர். பெற்றோராக அனிதா, கிஷோர் செய்யும் முயற்சிகளைப் பார்த்து அவர்கள் மீது பெரும்மரியாதை ஏற்பட்டது வசந்திக்கு. குழந்தையை ஏன் வரம் என்று சொல்லுகிறோம் என்று சுதனைப் பார்த்த போது தான் வசந்திக்கு புரிந்தது. திருமணத்தைப் பற்றி முதல் சந்திப்பில் அனிதா பேசிய அனைத்தும் ஆழமாக அவளுள் பதிந்து போனது.
சிந்தனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை “வா வசந்தி..இவன் உங்க வீட்டுப் பக்கம் தான் போறான்.” என்று ஜோதி மீட்டெடுக்க,”எத்தனை கேட்கறான் மாமி?” என்று அவரிடம் விசாரித்தாள்.
“இருபது ரூபா.” என்றார்.
“அதிகமா இருக்குதே.” என்று அவள் சொல்ல, அதை அவனிடம் ஜோதி சொல்ல, அவன் பதில் கொடுக்க,
“நான் அங்கேயே இறங்கிக்கறேன் மாமி.’ என்று ஆட்டோவில் ஏறி அமர்ந்து விட்டாள்.
“ஜாக்கிரதை.” என்று அவளிடம் சொன்னவர், அப்படியே ஆட்டோகாரனிடம் வசந்தியை சந்திப்பில் இறக்கி விடும்படி சொன்னார்.
லேசாக கையசைத்து அவரிடமிருந்து விடைபெற்று கொண்டு வண்டியில் அமர்ந்து கொண்டாள் வசந்தி. அந்த வண்டியில் இருந்தவர்களில் பெரும்பாலோர் தினக் கூலிகள். சாப்பாடு பையோடு வேலைக்கு தேவையான கருவிகள் கொண்ட பெரிய பைகளும் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை சொந்தக் காரில் சென்று வந்தவள் இன்று சராசரிகளை விட கீழ் நிலையில் இருக்கும் மக்களோடு சரி சமமாக ஷேர் ஆட்டோவில் அமர்ந்து பயணம் செய்வதை நினைத்து ஆதங்கத்திற்கு பதிலாக ஆச்சரியம் தான் ஏற்பட்டது. வாழ்க்கை வெகு விசித்திரமானது என்பதற்கு தன்னுடைய வாழ்க்கை தான் உதாரணம் என்று வசந்திக்குத் தோன்றியது. சுற்றுலா பயணியாகதில்லிக்கு வர ஆசைப்பட்டவள் இன்று ஷேர் ஆட்டோவில் அதே தில்லியை சுற்றி வருகிறாள். திடீரென்று வாழ்க்கைப் பயணம் வேறு பாதையில் மாறிப் போனதை நினைத்து மனம் சோர்வடையும் போதெல்லாம் இந்தப் பயணத்தில் அவளோடு சேர்ந்து பயணம் செய்பவர்களை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ளும். இப்போதும் அது போல அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்த போது அவளது கைப்பேசி ஒலி வசந்தியை நிகழ்விற்கு அழைத்து வந்தது. அழைப்பை ஏற்றவள்,
பின்னணியில் எக்கசக்கமான சத்தம் இருந்ததால்,“வந்திட்டு இருக்கேன் சித்தி..ஆட்டோவிலே ஏறிட்டேன்.” என்று அவருக்குத் தேவையான தகவலை மட்டும் கொடுத்தாள்.
“சமோசா கடை வாசல்லே நான் காத்திருக்கேன்.” என்று விஜயா சொல்ல,
“வேணாம்..வேணாம்..நானே வந்திடறேன்.” என்று சொல்லி விட்டு அவர் அதை மறுக்கும் முன் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
கைப்பேசியை இறுக்கமாக பற்றியிருந்த வசந்தியின் கண்களில் நீர்ப்படலம். அவளுடைய அம்மா, சகோதரிகள் செய்ய வேண்டியதை விதவையான ஜோதி, விவாகரத்தான விஜயா, கலப்புத் திருமணம் செய்து கொண்ட ஷிக்கா, திருமணப் பந்தத்தின் அரிச்சுவடியைக் கூட அறிந்திராத சினேகா செய்து கொண்டிருந்தனர். மூத்த தலைமுறை பெண்கள் இருவரும் வெளியுலகம் அவளைப் பாதிக்காத விதத்தில் அடைக்காக்க, இளைய தலைமுறை பெண்கள் இருவரும் வெளியுலகத்தை எதிர்கொள்ள தைரியத்தை அளிக்க, நால்வரின் துணையோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டாள் வசந்தி.
‘மோட், மோட் (சாலை சந்திப்பு) ‘ என்று டிரைவர் சத்தம் எழுப்பியது காதில் விழ, கையில் சுருட்டி வைத்திருந்த இருபது ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டு இறங்கிக் கொண்டாள் வசந்தி. அங்கேயிருந்து கால்மணி நேர நடைபயணத்திற்கு பின் ஷண்முகத்தின் ஃபிளாட் இருந்த காம்ப்ளெக்ஸை அடைந்தாள். ரிக்ஷா பிடித்து கூட வந்திருக்காலம்.அப்படிச் செய்ய அவளுக்கு விருப்பமிருக்கவில்லை. நடந்து வந்தால் மனமும் உடலும் சற்று உற்சாகமாக உணர்வதால் அந்த வழக்கத்தை கைவிட தோன்றவில்லை.