இம்முறை கார்த்திக் நேரடியாக திருவிற்கு அழைத்திருந்தான். அவன் மறுமொழிக்கு காத்திருக்காமல், “பிருந்தாவோட மென்டார் நீங்க தான். இந்த டைம் கண்டிப்பா நீங்க பெங்களூர் வரணும். அவளை நேரடியா வாழ்த்தணும். வெளிய சொல்லாட்டியும் அவங்க மனசுக்குள்ள அந்த ஏக்கம் இருக்கும். தயவு செஞ்சி வந்துட்டு போங்க.’’ என ஏறக் குறைய இறைஞ்சி இருந்தான். 

ஆனாலும் திரு அந்த நிகழ்விற்கு செல்லவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவே வரவேற்ற விண்வெளி மங்கையை காணொளி மூலமே ரசித்துக் கொண்டான். திருவிற்கும், பிருந்தாவிற்கும் உண்டான பிணைப்பை உறவுகளில் அடக்க முடியாது. 

அவன் அவளுக்கு தாயுமானவனாய் இருந்தவன். தான் பூப் பெய்திய செய்தியை கூட அண்ணனிடம் முதலில் சொன்னவள். அப்படிப்பட்ட தங்கை ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்த புறப்படும் முன், தன்னை அழைத்து ஒரு வார்த்தை விடை பெற மாட்டாளா? என ஏங்கியவன் அவள் சொல்லாமல் சென்றதில் மனதிற்குள் பலமாய் அடி வாங்கி இருந்தான். 

‘என்னை விட அவள் கணவன் அவளுக்கு முக்கியமா?’ என்ற கேள்வி அடிமனதில் தேங்க, இனி அவளாக பேசாமல் அவளை பார்க்கப் போவதில்லை என்ற உறுதியை மனதிற்குள் திடமாக எடுத்துக் கொண்டான். 

பிருந்தாவின் பல சர்வதேச பத்திரிக்கைகள் பேட்டி கண்டன. பிருந்தா அணைத்து பேட்டிகளிலும் ஒரு வரி மாறாமல், “எனக்குள் விண்வெளி கனவை விதைத்தவர் என் அண்ணா. அவர் தான் என் வழிகாட்டி. முன் உதாரணம். நான் நிலவில் நடக்க காரணம் அவரே.’’ என சொல்லி இருந்தாள். 

கண்களில் கண்ணீர் கரை உடைக்க, அவளின் அந்த வார்த்தைகளை காலையும், மாலையும் ஏன் தோன்றும் போதெல்லாம் போட்டு  கேட்டுக் கொண்டிருப்பான் திரு. இதற்கிடையில் ஆதாராவின், ‘பால்வெளிக் கனவுகள்’ என்ற புதினம் வெளிவந்து ஒட்டு மொத்த இந்திய புத்தக விற்பனையில் முதலிடத்தை பெற்றது. 

அந்த புதினத்தில் பிருந்தாவின் குழந்தை பருவம் தொடங்கி, சிறு வயதில் சக பள்ளி தோழர்களால் தாக்கப்பட்டது, தாண்டி வந்த சவால்கள், கார்த்திக்குடன் காதலில் விழுந்து, குழந்தை பெற்ற பதினைந்தே நாளில் மீண்டும் விண்வெளி பயிற்சியில் தன்னை இணைத்து கொண்டது, விண்வெளியில் சந்தித்த சவால்கள், முதன் முதலில் நிலவில் கால் பதிக்கையில்  நெகிழ்ந்த தருணம், விண்வெளியில் இருந்து ரசித்த புவி, மீண்டும் மண் சேர்த்ததும் உணர்ந்த வெற்றியின் ஆரவாரம் என்ற அனைத்தும், புகைப்படங்களோடு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. 

 

அதில் திருவின் பாத்திரம் வாசிப்போர் நெஞ்சை ஆச்சர்யத்தில் வியக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. அவனின் மித்ரா அவனை எந்த அளவிற்கு உள்வாங்கி இருந்தால் என்பதை அந்த எழுத்து பிரதிபலித்தது. 

அவனின் நெடுநாள் கேள்விக்கான பதில்கள் அந்த புத்தகத்தில் அவனுக்கு கிடைத்தது. கார்த்திக் எப்படி தன் நாட்களை பிருந்தா தன் கனவை அடைவதற்காய் ஒப்பு கொடுத்தான் என்பது அந்த புதினத்தில் தெளிவாய் விளக்கப்பட்டிருந்தது. 

ஆறுமாத கருவை பிருந்தா சுமக்கையில் தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து விலகியவன், அவளின் இருப்பிடத்தில் போய் தங்கி கொண்டதும், இயற்கை பிரசவத்திற்கு அவளுக்கு உறுதுணையாய் நின்றதும், குழந்தை என் பொறுப்பு, நீ உன் கனவை துரத்து என அவளை மீண்டும் குழந்தை பெற்ற பதினைந்தே நாட்களில் உடல் பலத்தோடு மன வலிமையையும் கூட்டி பயிற்சிக்கு அனுப்பி வைத்ததும் விவரிக்கப்பட்டிருந்தது. 

மித்ராவின் வார்த்தைகள், தூரிகையால் நிகழ்வை தத்ரூபமாய் வடிக்கும் ஓவியனின் திறன் பெற்றிருந்ததில் நடந்த சம்பவங்கள், வாசிக்க வாசிக்க அவன் கண் முன் விரிந்த உணர்வு. அதுவும் பதினைந்தே நாளான குழந்தையை தன் மார்பு சூட்டில் பொத்தி வைத்து, பிருந்தாவிடமிருந்து அவள் பணிக்கு கிளம்பும் முன் சேகரித்து உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை மீண்டும் அறை வெப்ப நிலைக்கு கொணர்து அவன் புகட்டிய காட்சிகள் எல்லாம் திருவை மெய் சிலிர்க்க வைத்திருந்தது.  

 ஆதாரவின் முதல் பிறந்த நாளுக்கு குடும்பமே திருவை அழைத்தது. ஆனால் பிருந்தா ஒரு குறுஞ் செய்தி கூட அனுப்பவில்லை. அதில் மனம் நொந்தவன், மருமகளுக்கு பரிசை அனுப்பி வைக்க, அது வழக்கமான பின் குறிப்புடன் அப்படியே திரும்பி வந்தது. 

இரண்டு வருடங்கள் சேலத்தில் பெரிய மைதானம் ஒன்றை தன் சொந்த செலவில் அமைத்த கார்த்திக், ஏழை எளிய மாணவர்களுக்கு  மட்டைப்பந்து இலவச பயிற்சி அளிக்க தொடங்கினான். அது அவனுக்கு வார்த்தைகளில் வடிக்க முடியாத மனநிறைவை தந்தது. . 

இரண்டு ஆண்டுகள் கழித்து மறுபடி டி ட்வண்டி உலக கோப்பையில் பங்கேற்றவன், எத்தனை நாள் கழித்து திரும்பி வந்தாலும், தன் திறமை மங்காது என்பதை அடுத்த அடுத்த போட்டிகளில் உறுதி செய்தான். 

விண்வெளி பயணம் முடித்து வந்த அடுத்த ஓராண்டில் பிருந்தா இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சியின் துணை தலைமை அதிகாரி பதவியை அலங்கரித்தாள். அவர்களின் மீதான புகழ் வெளிச்சம் திசை மாற நினைக்கையில், ‘பால்வெளிக் கனவுகள்’ புதினத்திற்கு கிடைத்த சாகித்ய அகாதமி விருது, மீண்டும் புகழ் வெளிச்சத்தை அக்குடும்பத்தின் மீது முழுவீச்சில் திருப்பி இருந்தது. 

ஆயிற்று ஆதாரா தன் மாமனை காணாமல் தன் இரண்டாம் பிறந்தநாளையும் கொண்டாடி முடித்தாள். மதுராவும், பால்கியுமே தற்சமயம் திருவின் ஒதுக்கத்தில் பயந்து போயினர். கார்த்திக் கூட, “நேர்ல வேணா போய் பார்த்துட்டு வாங்கப்பா. எத்தனை நாள் மித்ரா இப்படியே இருக்க முடியும்?’’ என்றான் கவலை குரலில். 

“தேவையில்லை.’’ என்ற இரு பெண்களின் குரலும் கணீரென ஒலித்தது. “பேசின வார்தைக்கு கார்த்திக்கிட்ட சாரி கேக்காம இங்க இருந்து யாரும் அவரை தேடி போக வேண்டாம்.’’ என்றான் பிருந்தா கடின குரலில். 

கார்த்திக்கை நோக்கி திரு வீசியிருந்த வார்த்தைகள் அவளை அத்தனை காயப்படுத்தியிருந்தது.  

“சார்…’’ திருவின் உதவியாளர் மாணிக்கத்தின் குரலில் திரு நடப்பிற்கு திரும்பினான். “மித்ரா மேம் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு எல்லாம் செஞ்சாச்சு சார். சி.எம் பிஏ உங்ககிட்ட பேசணும்னு சொல்லி இருந்தார். நீங்க ப்ரோகிராம் மினிட்ஸ் சரி பார்த்துட்டா… நாம மத்தவங்களுக்கு இன்பார்ம் செஞ்சிடலாம் சார்.’’ என்றார். 

திரு மெலிதாக தலை அசைக்க, தன் கையில் இருந்த கோப்பை திருவின் மேஜை மீது வைத்தவர், விடை பெற்று செல்ல, திரு தன் முன்னிருந்த நிகழ்ச்சி நிரலை எடுத்து வாசிக்க தொடங்கினான். மற்ற அரசு விழாக்கள் போலவே கடவுள் வாழ்த்து, குத்து விளக்கு ஏற்றதுதல் என அத்தனை நிகழ்ச்சிகளுக்குமான நேரத்தை நிமிடங்களில் திட்டமிட்டு இருந்தனர். 

விண்வெளியில் மிதந்து, நிலவில் நடத்து வந்தவளும் ஒரு தமிழ் பெண். அதை வார்த்தையில் வரைந்து காவியமாக்கி பரிசு பெற்றவளும் ஒரு தமிழ் பெண் என்பதால், தமிழக அரசு இரு பெண்களையும் ஒரே மேடையில் அமர்த்தி கௌரவிக்க இருந்தது. 

இன்னும்  இரு வாரங்களில் சேலத்தில் உலக தமிழர் மாநாடு தொடங்க இருந்தது. அதில் ஒரு பகுதியாக ‘விண்வெளியில் சாதித்த தமிழ் மகள்’ என்ற நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் தான் மித்ராவும், பிருந்தாவும் ஒரு சேர கௌரவிக்கப்பட இருகின்றனர். 

உலக தமிழ் மாநாட்டின் தொடக்க நிகழ்வாக இது அமையப் பெற்றதால் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கவனம் ஈர்க்கும் நிகழ்வை ஆட்சியர் என்ற முறையில் கட்டமைக்க வேண்டிய பொறுப்பில் இருந்தான் திரு. 

நீண்ட நெடிய மூன்று வருடங்களுக்கு பின் தன் இதயம் சுமப்பவளையும், தான் இதயத்தில் சுமப்பவளையும் காணப் போகும் பரவசம் அவனை ஆட் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ஒரு பதட்டமும் ஓடிக் கொண்டிருந்தது. 

மீண்டும் ஒரு முறை மித்ராவின் கண்களில் புறக்கணிப்பை சந்திக்கும் வலுவை திரு இழந்திருந்தான். பிருந்தாவுடனான அவன் பிணைப்பு மொழிகளில் கட்டமைக்கப்பட்டதில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் எண்ண அலைகளில் உணர்பவர்கள். 

பிருந்தாவின் எண்ணவோட்டம் என்ன என்பதை திரு அறிவான். அவனுக்குமே கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவும் மித்ராவின் ‘பால்வெளிக் கனவுகளை’ வாசித்த பின் அதன் அவசியம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. 

ஆனால் மித்ரா, ‘விளக்கமே தேவை இல்லை. நீ விலகிக் கொள்.’ என அவனை தள்ளி நிறுத்தியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘என் அண்ணனிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வார்த்தைகளால் கூட அவள் வலியுறுத்தவில்லை. 

ஒரே பார்வை. ‘என் அண்ணன் குறித்த உன் எண்ணம் இது தானா?’ என ஒரே பார்வை பார்த்தவள் அதன் பின் மொத்தமாக அவனிடமிருந்து விலகி போனாள். அவனாக பேச முயற்சித்த போது, விலகி சென்று மேலும் அவன் மனதை உடைத்தாள். 

ஒரு கட்டத்திற்கு மேல், ‘உனக்கு நான் வேண்டாம்னா எனக்கும் நீ வேண்டாம் போடி’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், அதன் பிறகு அவளிடம் தொடர்பு கொள்ள முயற்சிப்பதை முற்றிலும் நிறுத்தினான். 

ஆனாலும் நேசம் கொண்ட மனதின் நினைவுகளை எதை சொல்லி நிறுத்தி வைப்பது. நிகழச்சி நிரலில்,மித்ரா என்ற பெயரை மென்மையாக வருடி கொடுத்தான். முன்பொரு நாள் அவள் கூந்தலில் விரல் நுழைத்து, இதழ்களில் இளைப்பாறிய தருணம் நினைவிற்கு வர நினைவுலகில் அவளில் தொலைய தொடங்கினான். 

“பேர் கூட குடும்பம் நடத்தி, ரெண்டு பெரும் புத்தகத்துல புள்ளை பெத்துக்க போறீங்களா?’’ என்ற கார்த்திக்கின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவன் முன் வழக்கமான தன் அடையாளங்கள் மறைக்கும்    தொப்பி மற்றும் முக கவசத்தோடு நின்றிருந்தான். 

“இப்போ நான் திருப்பி கொடுக்க வந்திருக்கேன்.’’ என்ற கார்த்திக்கின் வார்த்தைகள் அழுத்தமாக வெளி வர, ‘விட்ட வார்த்தைகளுக்கு வாங்கும் நேரம்.’ என உணர்ந்தவன், வருவதை ஏற்றுக் கொள்வோம் என்ற நெஞ்சுரத்தோடு தயங்காமல் அவனின் துளைக்கும் பார்வையை எதிர் கொண்டான் திரு.  

பால் வெளி வளரும்.