காளியிடம் கோபமாக கத்திவிட்டு வந்த புகழேந்திக்கு என்ன முயன்றும் மனது ஆறவில்லை. அவனுடைய இந்த முப்பது வயதிற்கு இதுவரை எந்த பெண்ணின் பின்னாலும் சென்றவன் கிடையாது.
கல்லூரிக்காலத்தில் கூட படிப்பு, வேலை என்று அதைச் சுற்றியே சுழன்று பழகிக் கொண்டவன். அப்படிப்பட்டவனை எப்படி எல்லாம் பேசிவிட்டாள் என்று இன்னும் இன்னும் கோபம் ஏறியது அவனுக்கு. அவனது நிலையைப் பெரிதாக யோசித்துக் கொண்டவனுக்கு காளியின் நிலை புரியவே இல்லை.
அவனைச் சொல்லியும் குற்றமில்லையே. காளியின் குடும்ப சூழல் குறித்து பெரிதாக எதுவும் தெரியாதே அவனுக்கு. ஏதோ குடும்ப கஷ்டத்திற்காக சமையல் வேலைக்கு வருகிறாள் என்பது மட்டும்தான் தெரியும் அவனுக்கு. அவளின் தலைச் சுமைகள் அத்தனையும் அறிந்தால் ஒருவேளை அவளின் நிலை அவனுக்கு புரியுமோ என்னவோ..
வீட்டிற்கு சென்றால் நிச்சயம் அன்னை காளியைப் பற்றி துருவுவார் என்பதால், வீட்டிற்கு செல்லாமல் அருகில் இருந்த அவனது நண்பனின் முடி வெட்டும் கடையில் வந்து அமர்ந்து விட்டான் புகழேந்தி.
இங்கு புகழிடம் கத்திவிட்ட பின்னரே தனது தவறை உணர்ந்தாள் காளி. யாரோ செய்த தவறுக்கு இவனிடம் கோபாபட்டு விட்டோம் என்பது புத்தியில் உரைக்க, அவன் தன்னிடம் கோபப்பட்டதும் கூட சற்று ஆறுதலாக தான் இருந்தது.
அந்த கோபத்தில் நிச்சயம் நேர்மை இருப்பதாக தோன்றியது அவளுக்கு. அவனது பேச்சும், பார்வையும் எந்த விதத்திலும் அவளை குறுகச் செய்யவில்லையே. அவன் கண்களில் கயமை இல்லை என்பதை அவன் கத்திய பின்னர் உணர்ந்து கொண்டவள் அவனிடம் என்ன ஏதென்று கேட்கும் முன்னரே அவளை விட்டு வெகுதூரம் சென்று விட்டிருந்தான் அந்த அவசரக்காரன்.
‘கூப்பிட்டு என்னவென்று கேட்போமா’ என்று ஒரு நிமிடம் சிந்தித்தாலும், ‘போறான் போ. எதுக்கு வீண் வம்பு. இனி என் பின்னாடி வராம இருந்தா சரி’ என்று அவனை மறந்து வீட்டை அடைந்தாள் அவள்.
வீட்டில் இரவு உணவு நேரத்தில், அவள் அன்னை வழக்கம்போல, “கண்மணி போன் பண்ணி இருந்தா தங்கம்.” என்று தொடங்க, அருகில் அமர்ந்திருந்த நித்யாவும்,வினோத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
காளி எதுவுமே பேசாமல் அமைதியாக உணவில் கவனம் செலுத்த, “மாப்பிள்ளை எதுவும் வேண்டாம்னு தான் சொல்றாராம். ஆனா, அவங்க அம்மா தான் ..” என்று நிறுத்தி காளியின் முகத்தை கவனித்தார் மரகதம்.
காளி எதுவுமே பேசுவதாக இல்லை எனவும், “நம்ம முறைக்கு நாம ஏதாவது செய்யணும் இல்ல காளி. அவங்க கேட்கிறத தப்புன்னு சொல்ல முடியாதே” என்று மரகதம் முடிக்கவும்,
“எத்தனை சவரன் சேர்த்து வச்சிருக்கம்மா உன் பேரனுக்கு” என்று நிதானம் குறையாமல் காளி கேட்டிட,
“என்ன காளி நான் எங்கே போவேன்”
“அப்புறம் என்னை மட்டும் எங்கே போக சொல்ற”
“அதுக்காக அவளை அப்படியே விட்டுட முடியாதேம்மா”
“சரி என்ன செய்யலாம் சொல்லு”
“இல்லம்மா… பிள்ளைக்கு ஒரு தோடு, புதுத்துணியாவது எடுத்து கொடுக்கணும் இல்ல”
“ஏன் பெத்தவனுக்கு துணி எடுக்க கூடவா வக்கில்லாம இருக்கு” என்றுவிட்டாள்.
“தங்கம்.. மாப்பிள்ளையை போய்.” என்று மரகதம் அதட்ட,
“ஆமா… ஊர்ல இல்லாத மாப்பிள்ளை. கல்யாணம் பேசுன நாள்ல இருந்து, எதுவும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லியே எல்லாத்தையும் வாங்கி வச்சிருக்கான் உன் மாப்பிள்ளை. அவனை தான் நீயும் உன் மகளும் தலைல தூக்கி வச்சு ஆடிட்டு இருக்கீங்க.”
“அப்படி எல்லாம் பேசாதம்மா.” என்று மரகதம் மீண்டும் குறுக்கிட,
“நான் எதுவுமே பேசலம்மா. நீயும், உன் பொண்ணும் என்கிட்ட எதுவும் பேசாம இருங்க. அது போதும் எனக்கு. என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்னு சொல்லிடு அவகிட்ட. நித்யாக்கு பீஸ் கட்டவே கந்தண்ணாகிட்ட தான் காசு வாங்கி இருக்கேன். திரும்ப என்னால எங்கேயும் போய் நிற்க முடியாது. என்னை விட்டுடுங்க” என்று கத்திவிட்டு பாதி உணவில் காளி எழுந்து சென்றுவிட,
“அது சாப்பிடும்போது கூட, நிம்மதியா விட மாட்டியாம்மா நீ” என்று வினோத் மரகதத்தை காய்ச்ச,
“உன் வேலையை பாருடா நீ. ஒழுங்கா 12 முடிச்சு நீ வேலைக்கு போய் இருந்தா, நான் ஏன் அவளை கேட்கப் போறேன்.” என்ற மரகதத்தை வெறுமையாக பார்த்தவன் ஏதும் பேசாமல் எழுந்து சென்றுவிட, நடந்த எதையும் பெரிதாக கண்டுகொள்ளாமல் தட்டில் குறைந்த உணவை இட்டு நிரப்பிக் கொண்டு உணவைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் நித்யா.
காளி அவள் அறையில் முடங்கிவிட, வினோத் வீட்டின் வெளித்திண்ணையில் படுத்து விட்டான். 12 ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவனை அவன் அன்னை வீட்டின் நிலையை காரணம் காட்டி வேலைக்கு அனுப்ப முற்பட, அந்த வீட்டில் அவனுக்காக பேசிய ஒரே ஜீவன் அவன் அக்கா தங்க காளிஸ்வரி தான்.
அவன் அன்னையிடம் போராடி அவனை கல்லூரியில் சேர்த்து, அவனுக்காக கல்லூரிச் செலவையும் சேர்த்து அவள் தலையில் ஏற்றிக் கொண்டிருக்கும் காளி, அதைபற்றி ஒருநாளும் எங்கும் பேசியது கிடையாது.
கண்மணிக்கு செய்வதற்கு கூட அவள் இதுவரை கணக்கு பார்த்தது இல்லை. இதுதான் முதல் முறை அவள் மறுப்பது. இப்போதாவது அக்கா வாய்திறந்து மறுக்கிறாளே என்று ஒருவகையில் நிம்மதி கொண்டாலும், அன்னையைப் பற்றி நன்கு அறிந்dதவன் என்பதால், முழுதாக மூச்சு விடவும் முடியவில்லை அவனால்.
எப்படியும் அழுது நடித்து ஒரு நாடகம் போட்டு, மகளுக்கு செய்ய வேண்டியதை செய்து விடுவார் என்பது புரிந்திருக்க, அக்கா பணத்திற்கு என்ன செய்ய போகிறாளோ என்று தான் தவித்தான் அவன்.
கூடவே, காளியின் மறுப்புக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று அந்த யோசனை வேறு. வெகுநேரம் உறங்காமல் அக்காவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவன் விடியும் வேளையில் உறங்கிப் போக, அவனது அலைபேசி அடுத்த ஒருமணி நேரத்தில் அவனை எழுப்பிவிட்டது.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்க சொல்லி உடல் கூறினாலும், அங்கே ஒருத்தி அலாரம் அடிக்காமலே எழுந்து வேலை செய்து கொண்டிருப்பாள் என்பதால் பட்டென எழுந்து விட்டான்.
காளியின் காலை நேரம் ஏற்கனவே தொடங்கி இருக்க, தம்பி உடன் இருப்பதால் வேலை சற்று வேகமாக நடந்தது. இருவரும் வேலையை முடித்து அவரவர் வேலைக்கும், கல்லூரிக்கும் கிளம்பிவிட, கோர்ட் வளாகத்தை அடைந்ததுமே, காளியின் மனம் புகழைத் தான் நினைத்தது.
எங்காவது தென்படுகிறானா என்று ஓர் நொடி கண்களை சுழற்றியவள், “இது வேண்டாத வேலை” என்று தன்னை கடிந்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்.
அதன் பிறகான நேரம் அதன் போக்கிற்கு பறந்து போக, மதிய வேளையில் ஏதோ அவசர வேலை என்று சாமி கிளம்பிவிட, அவருக்கு பதிலாக உணவு பொட்டலம் மடிக்கும் இடத்தில் வந்து நின்றாள் காளி.
பார்சல் கேட்டு வருபவர்களுக்கு உணவை மடித்துக் கொடுத்தபடி அவள் நின்றிருக்க, “ஒரு பிரிஞ்சி, ஒரு சாம்பார் சாதம்” என்று விகாரமாக சிரித்தபடி அவள் அருகில் வந்து நின்றான் மூர்த்தி.
அவன் சிரிப்பைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ஏற்கனவே கட்டி வைத்திருந்த பார்சலை எடுத்து அவள் நீட்ட, உணவுக்கான பணத்தை அவளிடமே நீட்டினான் மூர்த்தி.
“இல்ல, கல்லால கட்டுங்க” என்று அவள் நிற்க,
“ஏன்… நீ வாங்கி கொடுக்க மாட்டியா. என்ன ஜட்ஜ் வேலையா பார்க்கிற” என்றவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவள் கையை நீட்ட, அவள் இடது கையை அழுத்தமாக அவன் பிடித்து அழுத்த, “ச்சீ… கையை விடுடா.” என்று கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் காளி.
“யாரடி டா போட்டு பேசற” என்று கத்தியபடியே, அருகில் வடை, சமோசா அடுக்கி வைத்திருந்த தட்டை அவன் தட்டிவிட, ஒரே நொடியில் மொத்தமும் தரையில் கிடக்க, கூட்டமும் கூட தொடங்கிவிட்டது.
“தம்பி… தம்பி” என்று கந்தன் ஓடிவர, அதற்குள் காளியை நெருங்கி இருந்தான் அந்த மூர்த்தி.
“நீ கொஞ்சம் பேசாம இரேன் காளி” என்ற கந்தன், “யப்பா மூர்த்தி… விட்டுடுப்பா” என்று அந்த மூர்த்தியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, அவனோ காளியை விடுவதாக இல்லை.
கந்தனை தள்ளிவிட்டு அவன் காளியை நெருங்குவதற்கும், புகழ் மூர்த்தியின் பின் மண்டையில் ஒன்று வைப்பதற்கும் சரியாக இருந்தது. மூர்த்தி வலி தாங்காமல் திரும்பியவன் புகழைக் கண்டு இன்னும் ஆத்திரம் கொள்ள, அவனது ஆத்திரம் மொத்தமும் இப்போது புகழ் மீது திரும்பி இருந்தது.
அடி வாங்கிய ஆத்திரத்தில் அவன் புகழின் சட்டையைப் பிடிக்க, “சட்டையவா பிடிக்கிற” என்று புகழின் அருகில் நின்றிருந்த பிரபு மூர்த்தியின் கையைப் பிடித்து முறுக்கிவிட,வலி தாங்காமல் கீழே விழுந்தான் அவன்.
“யார் மேல கையை வைக்கிற” என்று பிரபு எகிற, புகழின் அருகில் நின்றிருந்த அவன் சகாக்களும் மூர்த்தியை முறைத்துக் கொண்டு நிற்க, அதற்குள் “என்ன தம்பி” என்று அந்த வளாகத்தில் இருந்த காவலர்கள் வேறு வந்துவிட, “ஒண்ணும் இல்ல அண்ணா… சும்மா பேசிட்டு இருக்கோம்” என்ற புகழ், மூர்த்தியை முறைத்து வைத்ததில் அவன் வாயைத் திறக்கவில்லை.
அந்த காவலர் சென்று விடவும், “இனி உன்னை இந்த கேன்டீன் பக்கமே நான் பார்க்கக்கூடாது” என்று புகழ் எச்சரிக்க, “உன்னை பார்க்கிற இடத்துல பார்த்துக்கறேன்டா” என்று முனகியபடியே எழுந்து சென்றான் மூர்த்தி.
கந்தன், “ரொம்ப நன்றி தம்பி” என்று புகழின் கையைப் பிடித்துக் கொள்ள, காளி வாயை திறக்கவில்லை.
“யார்கிட்ட என்ன பேசறோம்னு பார்த்து பேச சொல்லுங்கண்ணா” என்று கந்தனிடம் கூறிய புகழ் காளியை திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.
புகழ் அங்கிருந்து விலகியதும், “என்ன காளி நீ இப்படி பேசிட்ட. அவனுங்களை பகைச்சுட்டு நாம பொழைப்பு நடத்த முடியுமா?”
“அதுக்காக கையை பிடிச்சு இழுத்தாலும், அவன் கூடவே போக சொல்றியாண்ணா.” என்று கலங்கிய விழிகளுடன் காளி கேட்க,
“நான் அப்படி சொல்லலம்மா.”
“வேற என்ன சொல்றீங்க… கையைப் பிடிச்சு தடவிட்டு இருக்கவனுக்கு எப்படி மரியாதை கொடுக்க சொல்றீங்க.” என்று கண்ணீருடன் கேட்டு, சமையலறைக்குள் சென்று அமர்ந்துகொண்டாள்.
கந்தனுக்கு காளியின் நிலை புரிந்தாலும், அவரது வயிற்றுப் பிழைப்பையும் பார்க்க வேண்டுமே. எனவே,அதற்குமேல் காளியிடம் அவரும் பேச்சு கொடுக்கவில்லை.
அன்றைய வேலை நேரம் முடியும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் மாலையில் முகத்தைக் கழுவிக் கொண்டு கிளம்பிவிட, “நடந்தத மனசுல வச்சு வேலைக்கு வராம இருக்காத காளி. அதுதான் புகழ் தம்பி அவனை மிரட்டிட்டு போய்டுச்சு இல்ல. இனி உன் வழிக்கே வரமாட்டான் அவன்.” என்றார் கந்தன்.
அவரைப் பார்த்து விரக்தியாக சிரித்தவள், “உனக்கு உன் பிரச்சனை… எனக்கும் இந்த கடையை விட்டா வேற வழி இல்ல. நான் படிச்ச ஒன்பதாம் கிளாசுக்கு இதுக்கு மேல எவனும் கூலி கொடுக்கமாட்டான். வேலையை விட்டெல்லாம் நிற்கமாட்டேன். கவலைப்படாத.” என்று கூறிச் சென்றாள்.
எப்போதும் போல நேர்பார்வை பார்த்தபடி அவள் நடந்து செல்ல, “இவளுக்காக ஒருத்தனை போட்டு பொரட்டி இருக்கேன். கொஞ்சமாவது என்னை தேடறாளா பாரேன். மெஷினா இவ” என்று பொருமியபடியே அவள் கடந்து செல்வதை பார்த்திருந்த புகழ், “போடி” என்று தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
அதுவரை அவனை கவனிக்காதவள், அவன் வேகத்தில் அவனை கவனித்து நிற்க, அவன் எப்போதோ சென்று இருந்தான்.
காளி நின்றதும் ஒரு நொடி தான். அதற்குமேல் மனம் போன போக்கில் பேருந்து நிலையத்தில் சென்று நின்று கொண்டாள். வீடு வரும்வரை ஏதேதோ சிந்தனைகள். காலையில் நடந்த நிகழ்வும் சேர்ந்து அவளை மொத்தமாக சோர்வடையச் செய்திருக்க, எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது கூட தெரியவில்லை அவளுக்கு.
இதில் அவள் அன்னை வேறு மீண்டும் கண்மணியின் பேச்சை எடுக்க, “என்னை என்னதான் செய்ய சொல்றம்மா. என்கிட்ட பணம் இல்ல. நான் என்ன செய்யட்டும் சொல்லு” என்றவள் வெறுத்துப் போனவளாக, “எங்கேயாவது போனா தான் இனி பணம் கிடைக்கும். வேணும்னா சொல்லு. உன் மகளுக்காக அதையும் செய்றேன்” என்றுவிட,
“காளி” என்று அதட்டிய மரகதம் காளியை அடிப்பதற்கு கையை ஓங்கிட, “நேத்து நீயும் இதையே தான கேட்டம்மா. இப்போ நான் சொல்லும்போது வலிக்குதா உனக்கு. நீ இந்த அளவுக்கு கோபப்பட வேண்டாம். நான் அப்படி ஏதாவது செஞ்சு காசு கொடுத்தா கூட உன் மகளும், மாப்பிளையும் வாங்கிப்பாங்க” என்றவள், “போமா” என்று அன்றும் பாதி உணவில் எழுந்து விட்டாள்.
மரகதம் அவள் பேச்சில் கண்ணீர் விட்டபடி அமர்ந்துவிட, பாவமாக இருந்தாலும், “தேவைதான்” என்று எண்ணியபடியே வினோத்தும் எழுந்து சென்றுவிட்டான்.
நித்யா அன்னையின் கண்ணீரை கண்டு கொள்ளாமல் உண்டு முடித்து எழுந்து விட, “ஏன்டி பெத்தவ ஆழறேனே. ஏன் என்னன்னு ஒரு வார்த்தை கேட்கமாட்டியா.” என்றார் மரகதம்.
“எதுக்கு நீ என்கிட்ட பணம் கேட்கவா. என்னை ஆள விடு தாயே” என்று கையெடுத்துக் கும்பிட்டபடியே ஓடிவிட்டாள் அவள்.
மரகதத்திற்கு காளி பேசியதை நினைத்து வருத்தம் ஒருபுறம் என்றால், இரண்டு நாட்களில் வந்து நிற்கும் பேரனின் காதுகுத்து மற்றொரு பக்கம், காளியிடம் இதற்குமேல் பேச முடியாது என்பது தெரிந்துவிட, பணத்திற்கு என்ன செய்வது என்று அந்த கவலையிலேயே அமர்ந்துவிட்டார்.
காளி அவரது கவலையை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அடுத்த நாளும் வேலைக்கு கிளம்பிவிட, அதற்கு அடுத்த நாளும் அதுவே தொடர்ந்தது.
இதற்கிடையே கண்மணி வேறு அலைபேசியில் அழைத்து பேசியிருக்க, காளி பணம் கொடுக்கமாட்டாள் என்று கூறவும், அலைபேசியிலேயே அழுது கத்தி அவள் பங்கிற்கு அவள் ஒரு ஆட்டம் ஆடியிருந்தாள்.
புகுந்த வீட்டில் அவளது கௌரவம், மரியாதை என்று வரிசையாக அவள் பேசி வைத்ததில் எப்போதும் போல, மகள் சொல்வதும் நியாயம் தானே என்ற முடிவுக்கு வந்துவிட்டார் மரகதம்.
இறுதியாக அவர் கழுத்தில் இருந்த சங்கிலியை கழட்டி அடகு கடையில் வைத்து பணம் புரட்டியவர் பேரனுக்கு அவர் நினைத்தது போல கம்மல் வாங்கிவிட, காளி அதற்கும் வாய் திறக்கவில்லை.
ஆனால், எப்படியும் அவள் தான் மீட்க வேண்டி வரும் என்பதும் தெரிந்திருக்க, எதுவும் சொல்வதாக இல்லை அவள். “என்னவோ செய்து கொள்” என்று அவள் ரவிக்கை ஒன்றின் கொக்கியை கட்டிக் கொண்டிருக்க, “காலையில ஆறு மணிக்கு கிளம்பனும் காளி” என்று வந்து நின்றார் மரகதம்.
“என்னம்மா விளையாடிட்டு இருக்கியா. நாளைக்கு வேலை இருக்கு எனக்கு. நீ போய்ட்டு வா” என,
“ஏன்டி இப்படி பண்ணிட்டு இருக்க. அவ அங்கே மரியாதையா வாழறது பிடிக்கலையா உனக்கு.”என்றுவிட்டார் மரகதம்.
உணர்வில்லாத பார்வையால் காளி அவரை நோக்க, “புரிஞ்சிக்க காளி. ஏற்கனவே அந்தம்மா இல்லாத பேச்சு எல்லாம் பேசும். இன்னும் நீ வராம போனா, அதுக்கும் சேர்த்து அவளைத்தான் பேசி வைக்கும். போய்ட்டு வந்திடுவோம். ஒருநாள் லீவு சொல்லு” என்று அவர் கவலையை மட்டும் யோசித்தபடி பேசி முடித்தவர் அங்கு நிற்காமல் நகர்ந்துவிட்டார்.
என்ன செய்தாலும் போகாமல் இருக்க முடியாது என்பது காளிக்கும் புரிந்து தான் இருந்தது. ஆனாலும், ஒரு முயற்சியாக தான் அவள் மறுத்து பார்த்தது.
மரகதம் எப்போதும் போல அவளை யோசிக்காமல் முடிவெடுத்துவிட, “உன் தலையெழுத்து நீ போய் தான் ஆகணும்” என்று அவளுக்கு அவளே கூறியபடி படுத்துவிட்டாள் காளி.