மருத்துவர் கூறிய விசயம் கார்த்திகையும் அதிர்ச்சியில் தான் தள்ளி இருந்தது. பிருந்தா தினமும் விண்வெளியில் பயணிக்க மேற்கொள்ளும் பயிற்சிகளை நன்கு அறிந்தவன். உடல்நலம் மிக்கவர்களையே அசைத்து பார்க்கும் திறனுள்ளது. இனி அவளால் எவ்வாறு பயிற்சியில் ஈடுபட முடியும் என்ற குழப்பம், குழந்தையின் நிலை, அடுத்து செய்ய வேண்டியது என அனைத்தும் அவன் மூளையில் காட்சி பிம்பமாய் தோன்றி அவனை அலைகழித்து கொண்டிருந்தது. 

ஏற்றப்பட்ட சலைன் கொஞ்சம் தெம்பை தர, எழுந்து அமர்ந்திருந்த பிருந்தாவிடமும், மருத்துவர் செய்தியை பகிர, மற்ற இருவரை விடவும் அவள் அதிகம் அதிர்த்து போனாள். ‘அந்த ஒரு நாள் தானே’ தனக்குள் எண்ணி குழம்பி போனவள், “நிஜமா பேபியா டாக்டர்?’’ என அவரிடம் தன் சந்தேகத்தை கேட்க, “ஒரு குட் நியூஸ் சொன்னா என்ஜாய் செய்யாம என்ன குடும்பமே உண்மையா உண்மையான்னு மாறி மாறி கேட்டுட்டு இருக்கீங்க. நான் பொய் சொல்ல மாட்டேன் போதுமா? வேணும்னா இன்னொரு ஓ.ஜி ரெபரன்ஸ் கொடுக்குறேன்.போய் கன்பார்ம் செஞ்சிட்டு வாங்க.’’ 

பாவம் அவரும் எத்தனை நேரம் தான் பொறுமையாக பேசுவார். இவர்கள் சூழல் அறியாத அவர், தன் குரலை உயர்த்த, பிருந்தா அவசரமாய், “சாரி டாக்டர். எங்க சூழ்நிலை அப்படி. இப்போ நாங்க பேபி எதிர்பார்க்கலை. அதனால தான்.’’ என்றவள் மன்னிப்பை வேண்டிவிட்டு, படுக்கையில் தலை சாய்த்து கொண்டாள். 

அவளின் வார்த்தைகளை உள்வாங்கிய மயூரி, “இட்ஸ் ஓகே மா. ஆனா குழந்தைகள் வாழ்கையில கிடைச்ச பெரிய வரம். வரும் போது உதாசீனப்படுத்தினா அடுத்து எப்போ கிடைக்கும்னு சொல்ல முடியாது. உனக்கும் சரியான வயசு தான். நல்லா ஹெல்தியா தான் இருக்க. அதனால பெருசா பிரச்சனை வர வாய்ப்பு இல்ல. சரி இந்த ட்ரிப் முடிஞ்சதும் உன்னை டிஸ்சார்ஜ் செய்றேன். மீதி விசயம் நீங்க வீட்ல கலந்து பேசிட்டு முடிவு செய்யுங்க.’’ என்றுவிட்டு அங்கிருந்து நடந்தார். 

அடுத்து என்ன செய்வது எனப் புரியாத கோபம் அவள் மனதை ஆட் கொள்ள, சோர்ந்திருந்த மூளை அத்தனை கோபத்தையும் கார்த்திக்கை நோக்கி திருப்பி இருந்தது. “இவரை யாரு என் பர்த்டே செலிபிரேட் செய்ய வர சொன்னது. எல்லாமே இப்போ போச்சு. அண்ணா முகத்துல எப்படி முழிக்க போறேன். இந்த கார்த்திக் என் வாழ்கையில வராம இருந்து இருந்தா இவ்ளோ பிரச்சனை எனக்கு வந்தே இருக்காது.’’ 

தன் கனவுகள் சிதைந்தை ஏற்க முடியாத மனம், ஒட்டு மொத்த இயலாமையையும் கார்த்திகை நோக்கி திருப்ப, பிருந்தா மொத்தமாய் தன் இயல்பை தொலைத்திருந்தாள். யாரையும் பார்க்க பிரியமற்று, நெருப்புக் கோழி நிலத்தில் தலையை புதைத்துக் கொள்வதை போல, தலையணையில் தன் முகம் புதைத்து கொண்டாள். 

“பிந்து…’’ அண்ணனின் குரலில் நடப்பிற்கு திரும்பியவள், தன் முன் மகிழுந்தின் கதவை விரிய திறந்த படி நின்ற கார்த்திக்கின் கரத்தை பார்த்தபடி அதிலிருந்து இறங்கினாள். வீட்டிற்குள் மூவரும் நுழைய, மற்ற மூவரும் மௌனத்தோடு அவர்களை பார்த்திருந்தனர். 

உள்ளே நுழைந்ததும், தங்கையை நோக்கி திரும்பிய திரு, “நீ மித்ரா ரூம்ல போய் ரெஸ்ட் எடு.’’ என்றான் கட்டளையாய். எதுவும் பேச பிரியமில்லாத பிருந்தா, ‘சரி’ என்று தலை அசைத்துவிட்டு அந்த அறை நோக்கி நடந்தாள். 

மித்ரா கைகளை பிசைந்தபடி பதட்டமாய் நிற்க, “நீயும் உள்ள போ மித்து’’ என்றான். அவளோ, “இல்ல நான் இங்கயே இருக்கேன்.’’ என்றாள் பிடிவாதமாய். ஏதோ பெரிதாக வரப் போகிறது என்று அவள் உள்ளம் அலறிக் கொண்டிருந்தது. 

ஒரு பெரு மூச்சை வெளியேற்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்ட திரு, “பால்கிப்பா… கிட்ட தட்ட ஆறு மாசமா உங்க பொண்ணு என் வீட்ல தான் என்னோட தனியா இருந்தா. அவளை உங்க பொண்ணாவே உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்து இருக்கேன். ஆனா உங்க பையன்…’’ என்றவன் கார்த்திக்கை நிமிர்ந்து பார்க்க, அவன் முன் வைக்க இருந்த குற்ற சாட்டை உணர்ந்தவனின் முகம் அவமானத்தில் சிவந்தது. 

அதுவரை பிடித்து வைத்திருந்த கோபம் கரை உடைக்க, பாய்ந்து சென்று அவன் சட்டையை கொத்தாக பற்றிய திரு, “உனக்கு நாங்க என்னடா துரோகம் செஞ்சோம். உன்னை வேண்டாம்னு சொன்ன பொண்ணு கழுத்துல கட்டாய தாலி கட்டினது பத்தாதுன்னு, தனியா இருந்த பொண்ணை பேசி, செட் யூஸ் செஞ்சி இருக்க. இந்த கல்யாணம் நிலைக்கணும்னு தானே வேக வேகமா அவ கூட வாழ்ந்து உன் குழந்தையை அவளை சுமக்க வச்சி இருக்க. என் தங்கச்சி என்கிட்ட சொல்லாம காலுக்கு செருப்பு கூட எடுக்க மாட்டா. உண்மைய சொல்லு. என்ன செஞ்ச நீ அவளை. உன்னை நம்பி உன் கூட தனியா வந்தப்ப எதாச்சும் ட்ரக்ஸ் கொடுத்து அவளை ரேப் செஞ்சியா சொல்லுடா… உன்னை நான் சும்மா விட மாட்டேன்… உண்மைய சொல்லு..’’ 

திருவின் அபாண்ட வார்த்தைகள் கார்த்திக்கை நின்ற நிலையிலேயே உறைய வைத்தது. தன் காதலுக்கு, காமத்தின் சாயம் பூசிய அவன் வார்த்தைகளை கேட்டதும் கார்த்திக் மொத்தமாய் உடைந்து போனான். 

முதலில் அதிர்சியில் இருந்து வெளி வந்தது பால்கி தான். மகனின் சட்டையில் இருந்து திருவின் கரத்தை விடுவித்தவர், “திரு ரொம்ப அதிகமா பேசுற திரு. என் பையன் ஒண்ணும் அப்படிப்பட்ட கேடு கேட்டவன் கிடையாது. முதல்ல நடந்தது என்னன்னு உன் தங்கச்சிகிட்ட விசாரிச்சிட்டு என் பையனை பேசு. நான் ஒண்ணும் என் மகனை அப்படி வளர்க்கல.’’ என்றார் குரலில் கடினத்தை தேக்கி. 

இருவருக்கும் நடந்த முதல் சங்கமத்தை பால்கி அறிவார். அன்றைய தினம் உற்சாக மிகுதியோடு கார்த்திக் அந்த செய்தியை தந்தைக்கு கடத்தி இருந்தான். அவனை பொறுத்தவரை அவன் வாழ்வின் முதல் நண்பன் பால்கி தான். 

மகன் சொன்ன செய்தியில் மகிழ்ந்தாலும் லேசாக வெட்கப்பட்ட பால்கி, “டேய் இதெல்லாமா அப்பாகிட்ட சொல்லுவ உனக்கு வெட்கமே இல்லையாடா?’’ என்று கலாய்த்ததும், “உன்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்றது தகப்பா. என்னமோ ரொம்ப சந்தோசமா இருக்கேன். உன் பையன் ஹாப்பியா இருந்தா அது உனக்கு தெரிய வேண்டாமா.’’ என்று அன்றைக்கு அத்தனை மகிழ்வாய் பேசியவன், இன்று உடைந்து நிற்பதை காணப் பொறுக்கவில்லை பால்கிக்கு. 

“நீங்க உங்க பையனை எப்படி விட்டு தருவீங்க பால்கிப்பா. உங்களுக்கு உங்க பையன் முக்கியம்னா எனக்கு என் தங்கச்சியும் அவளோட கனவும் தான் முக்கியம். யார் என்ன சொன்னாலும் சரி. இந்த குழந்தை அவ வாழ்கையில கிடையாது. நாளைக்கு பெஸ்ட் கைனோ டாக்டர் பார்த்து அபார்ட் செய்ய போறேன். குழந்தை எப்போ வேணா பெத்துக்கலாம். ஆனா இப்போ அவளுக்கு கிடைச்சி இருக்க வாய்ப்பு எப்பவும் கிடைக்காது. இந்த விசயமாவது நமக்குள்ள முடிஞ்சிட்டா நல்லது. எங்க அம்மாவை வச்சி ஏதாவது ட்ராம செய்ய ட்ரை செய்யாதீங்க ப்ளீஸ்…’’ 

திரு முற்றும் முழுதாக தன் சமநிலையை இழந்திருந்தான். தங்கையின் கனவு சிதைந்துவிட்டது என்ற எண்ணமே அவன் மூளையை மழுங்கடித்திருந்தது. கார்த்திக் கடலில் இருந்து கரைக்கு வீசியெறியப்பட்ட மீனாய் பேச வார்த்தைகளற்று துடித்துப் போய் அமர்ந்திருந்தான். 

பேசுவது திரு தானா என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள் மித்ரா. கார்த்திக், பிருந்தா  திருமணத்தின் போது இதை விட வார்த்தையால் அனைவரையும் வாட்டிய திருவை அவள் அறிந்திருக்கவில்லை. 

உடைந்து அமர்ந்திருந்த கார்த்திக்கை கண்டதும், மித்ராவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிறுவயதில் இருந்தே அவனுக்கான அத்தனை கொடுமைகளையும் தான் செய்பவள், பெற்றவர்கள் ஒரு வார்த்தை பேசினால் கூட சிலிர்த்துக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு நிற்பாள். 

திருவின் அமில வார்த்தைகள் மித்ராவின் ஆத்திரத்தை அதிகமாய் தூண்ட வேகமாய், பிருந்தாவின் அறைக்குள் நுழைந்தவள், படுக்கையில் சாய்ந்திருந்தவளை கரம் பற்றி எழுப்பினாள். பிருந்தாவின் குழப்பமான, “என்ன ஆச்சு. என்ன?’’ என்ற கேள்விகளை பொருட்படுத்தாதவள், அவளை கிட்டத்தட்ட வரவேற்பறைக்கு இழுத்து சென்றாள். 

பிருந்தாவை அங்கே கண்டதும், அதுவரை கோபமாய் கத்திக் கொண்டிருந்த திரு, மௌனியானான். தன் கைகளை கட்டிக் கொண்ட மித்ரா, திருவை தீர்க்கமாய் பார்த்தபடி, பிருந்தாவிடம், “எங்க அண்ணா ட்ரக் கொடுத்து உங்களை ரேப் செஞ்சானா?’’ என்றாள். 

அவளின் கேள்வியில் அதிர்ந்து போன பிருந்தா, “இப்படியெல்லாம் எதுக்கு மோசமா கேள்வி கேக்குறீங்க? அதுவும் அத்தை, மாமா முன்னாடி.’’ என்றாள் சட்டென மூண்ட கோபத்துடன். மித்ராவை பார்த்து முறைத்த திரு, “இப்போ எதுக்கு பிருந்தாவை இங்க கூட்டிட்டு வந்த மித்ரா. ஸ்டே அவுட் ஆப் திஸ்.’’ என்றான் கடுமையாய். 

அவன் மீதே அலட்சிய பார்வையை நிலைக்க விட்டவள், “இங்க யாரும் யாரோட வாழ்க்கையையும் டிசைட் செய்ய கூடாது திரு. உங்க உலகம் தெரியாத தங்கச்சியை கூப்பிட்டு அவ மூஞ்சுக்கு நேரா யூ ஹேட் செக்ஸ் வித் அவுட் மை பர்மிசன்னு கேக்க துப்பில்லாம எங்க அண்ணன் உங்க அருமை தங்கச்சியை ரேப் செஞ்சி இருப்பான்னு அக்யூஸ் செய்றது எந்த விதத்துல நியாயம்?’’ என்றாள் கடுமையான குரலில். 

பால்கியும், மதுராவும் அவர்கள் பேசுவதை கேட்கவும் முடியாமல், அவர்களை தடுக்கவும் முடியாமல் திகைத்து போய் நின்றிருந்தனர். பால்கி தான் வேதனை நிரம்பிய குரலில், “போதும் மித்து. இதெல்லாம் எங்களால கேக்க முடியல. வார்த்தைகள் கூட வலிக்கும்னு இப்போ தான் புரியுது. நம்மை புரிஞ்சிக்காதவங்ககிட்ட நம்மை நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.’’ என்றார். 

“உங்க பையனை அடுத்தவங்க பேசினா நீங்க அமைதியா கேக்கலாம் அப்பா. என்னால முடியாது. சொல்லுங்க மிசஸ் பிருந்தா. எங்க அண்ணன் கூட உங்க உறவு நிலை என்ன? எங்க அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக உங்களை கல்யாணம் செஞ்சி இருந்தாலும், ஹீ லவ்ஸ் யூ ப்ரம் பாட்டம் ஆப் ஹிஸ் ஆர்ட். அது அவனுக்கு தெரியலைனாலும் எனக்கு தெரியும். சொல்லுங்க? எங்க அண்ணன் உங்களை போர்ஸ் செஞ்சானா? இல்ல செட் யூஸ் செஞ்சானா? இல்ல உங்க அண்ணன் சொன்ன மாதிரி ரேப் செஞ்சானா? இப்போ நான் சொன்ன எதையும் அவன் செஞ்சி இருக்க மாட்டான். அது எனக்கு தெரியும். அவனுக்கு யாரையும் ஹர்ட் செஞ்சி பழக்கம் இல்ல. ஏன் தன்னை மதிக்காத உங்க அண்ணனை கூட நேசிக்க மட்டும் தான் அவனுக்கு தெரியும்.’’ என்றவள் திரும்பி நின்று பெரிய மூச்சுகள் எடுத்து பொங்கி உடைய காத்திருந்த அழுகையை மட்டுப்படுத்தினாள். 

மீண்டும் அழுத்தமாய் திரும்பியவள், “அன்னைக்கு உங்க அண்ணன் கொண்டு வந்து கொடுத்துட்டு போன பணத்தை கூட அவங்க பேர்ல தான் ஷேர்ஸ்ல இன்வஸ்ட் செய்ய வச்சான். இதுவரைக்கும் உங்க யாரையும் அவன் எதிரியா பார்த்ததே இல்ல. ஆனா நீங்க? நீங்க யாரும் அவனை நம்பவே இல்லல. சொந்தக்காரனா இல்ல ஒரு மனுசனா கூட அவனை மதிக்க தயாரா இல்ல. என் அண்ணனை மதிக்காத எந்த ஒரு உறவையும் நானும் மதிக்கப் போறதா இல்ல. வாயை திறந்து பேசு பிருந்தா. எங்க அண்ணன் கூட உனக்கு இருந்த உறவு என்ன?’’ 

மித்ராவின் ஆத்திரம் யாரை உடைத்ததோ இல்லையோ, அதுவரை தன் கனவு தகர்ந்தது என்ற உணர்வில் மட்டும் சிக்கி இருந்த பிருந்தாவை பலமாய் உலுக்கியது. தன் அண்ணன் கார்த்திக்கின் மீது அப்படி ஒரு அவ சொல்லை வீசி இருக்க கூடும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பிருந்தா, சுக்கு நூறாய் உடைந்தாள். 

கண்களில் கண்ணீர் வழிய, “ஐ லவ் ஹிம். ஐ ட்ரூலி லவ் ஹிம். கார்த்திக் மாதிரி ஒரு பர்சனை என் வாழ்க்கையில நான் பார்த்ததே இல்ல. இந்த குழந்தை எங்க உண்மையான காதலோட அடையாளம். வேற எதுவும் இல்ல. ப்ளீஸ் யாரும் எதுவும் தப்பா பேசாதீங்க. தப்பா பேசாதீங்க.’’ என்றவள் அப்படியே மடங்கி  குலுங்கி அழ, அதுவரை சிலையாய் உறைந்திருந்தவன் நொடியில் தன் காதல் மனையாளை நெருங்கி இருந்தான். 

அவள் அருகில் முட்டி போட்டு அமர்ந்து, தோளோடு அவளை அணைத்துக் கொண்டவன், “ஷ்… ஷ்…. ஒண்ணுமில்லை. ஒண்ணுமில்லை பிந்து. நாம பாத்துக்கலாம். எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு வழி இருக்கும். உங்க ரெண்டு பேரையும் நான் பத்திரமா பாத்துப்பேன். உங்க ட்ரீமுக்கு எந்த பிரச்னையும் வராம நம்ம பேபியையும் சேர்த்து நான் பாத்துப்பேன். இப்போ நீங்க ஹேப்பியா இருக்கணும். எல்லாம் சரியாயிடும்.’’ என்றவன் அவன் உச்சந்தலையில் தன் இதழ்களை பதிக்க, பிருந்தா இருகரங்களாலும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்ட பிருந்தா, ‘சாரி… வெரி சாரி. என் மேல எனக்கு இருந்த கோபத்தை உங்ககிட்ட காட்டி இருக்க கூடாது. ஐயம் சாரி.. வெரி சாரி.’’ என்றவளின் கதறல் நிற்கவே இல்லை.   

திரு தங்கையை கண் கலங்க பார்த்துக் கொண்டிருக்க, மித்ரா பெருமை பொங்க, இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். பால்கியும், மதுராவும் இருவரையும் எழுப்ப முயல, திருவை ஒரு முறை அழுத்தமாய் பார்த்தவள், மெல்ல அவனிடமிருந்து உள்ளத்தாலும் விலகி தன் அறை நோக்கி நடந்தாள். 

பால்வெளி வளரும்.