பால்வெளி – 24 

பிருத்தா ஓய்ந்து போய் அந்த மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தாள். அவளின் மனதில் பல கட்டப் போராட்டங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவளுக்கு இப்போது யார் முகத்தையும் பார்க்க விருப்பமில்லை. வாழ்வில் முதன் முறையாக அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தும், குழம்பியும் போயிருந்தாள். 

திரு தன் நிச்சய உடையை கூட மாற்றவில்லை. இறுகிப் போய் அமர்ந்திருந்தான். கேட்ட செய்தி அவனை அத்தனை கோபத்தில் தள்ளி இருந்தது. இருத்த இடமும், சூழலும் அவன் வாயை கட்டிப் போட்டிருந்தது. 

தன் தோளில் ஒரு கரம் பதியவும், நிமிர்ந்து பார்த்தவன், அது பால்கியின் தோழர் கிருஷ்ணமூர்த்தி என்றதும் மரியாதை நிமித்தமாய், எழுந்து நின்றான். “உக்காரு திரு.’’ என்றவர் அவன் அருகில் தானும் அமர்ந்தார். 

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட திரு, “சொல்லுங்க சார்.’’ என்று அவரின் முகம் பார்த்தான். “இப்ப முடிவு எடுக்க வேண்டியது பிருந்தா தான். இதுல நாம செய்யிறதுக்கு எதுவும் இல்ல.’’ என்றார். 

புரிந்தது எனும் விதமாய் தலையை அசைத்தான். ஆனால் உள்ளுக்குள், எப்போதும் தான் காட்டிய பாதையில் நடந்து பழகிய தங்கை முதன் முறையாக தனியாய் நடந்து புதை குழியில் விழுந்து விட்ட உணர்வு. 

அவனுக்கு சற்று தள்ளி பிருந்தா அனுமதிக்கப்பட்டு இருந்த அறையின் வெளியே கார்த்திக் அமர்ந்திருந்தான். தன் அடையாளங்களை மறைக்கும் தொப்பியும் முக கவசமும் அணிந்திருந்தான்.   கிருஷ்ணாவின் தங்கை மயூரி மகப்பேறு மருத்துவர். 

அவரின் மருத்துவமனையில் தான் பிருந்தா அனுமதிக்கப்பட்டிருந்தாள். கையில் ஏற்றப்பட்டிருந்த குளுகோஸ் ஊசியை  செவிலி அகற்றியதும், அவளைப் பார்த்து புன்னகை முகமாய் நின்றிருந்த மயூரி, “யூ கேன் கோ ஹோம் டியர். கொஞ்சம் அனீமிக்கா இருந்து இருக்க. அதான் சடனா கிடியாயிட்ட. சப்ளிமென்ட்ஸ் ப்ரெஸ்கிரைப் செஞ்சி இருக்கேன். மத்தபடி நோ வொரீஸ். எங்க ஹீரோவை ரொம்ப பயம் காட்டிட்ட நீ.’’ என்றார். 

தானும் புன்னகைக்க முயன்றவள், உதட்டில் எட்டா முறுவலுடன், “தாங்க்யூ மேம்.” என்றுவிட்டு படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள். அவள் வெளியே வந்ததும் அவளுக்காய் காத்திருந்த கார்த்திக் அவள் அருகில் வந்து நின்றான். 

அவனை நிமிர்ந்தும் பார்க்காத பிருந்தா, வேகமாய் வெளிப்புறத்தை நோக்கி நடக்க துவங்க, திரு வேகமாய் முன்னே நடந்து தங்கையின் கை பற்றி நிறுத்தினான். “ரெண்டு நிமிஷம். பார்கிங்ல இருந்து கார் எடுத்துட்டு வந்துடுறேன்.’’ என்றுவிட்டு திரு முன்னால் நடக்க, கார்த்திக் அடிபட்ட முகத்துடன், பிருந்தாவை பார்த்துக் கொண்டிருந்தான். 

திரு மகிழுந்தை கொண்டு வந்து முன்னால் நிறுத்தவும், பிருந்தா அமைதியாய் அதில்  ஏறிக் கொள்ள மறுபுறம் கார்த்திக் ஏறிக் கொண்டான். மூவரும் வீட்டை அடைந்த போது மொத்த குடும்பமும், வரவேற்பறையில் அவர்களுக்காய் காத்திருந்தனர். 

பால்கிக்கு கிருஷ்ணா ஏற்கனவே விசயத்தை அலைபேசியில் அறிவித்திருக்க, அவர் சற்றே பதட்டத்துடன் மூவரின் வருகைக்காய் காத்திருந்தார். “ஸ்வீட் எடு கொண்டாடு.’’ என்று கொண்டாடப்பட வேண்டிய விசயம் தான் ஆயினும் சூழல் யாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டு இருக்கிறதே. 

திரு, மித்ரா நிச்சயம் அவர்களின் குல தெய்வ கோவிலில், சொந்தங்களின் முன்னிலையில் எந்த ஒரு குறையுமின்றி நடந்தேறியது. மித்ரா, திருவிடம் பெரிதாக இணக்கமாக நடந்து கொள்ளவில்லை. அதே சமயம் முகம் திருப்பவும் இல்லை. 

தமையனை வருத்தும்படி அவன் பேசியது அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதுகுறித்து தற்சமயம் பேசவும் அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அமைதியாக தன் வருத்தத்தை திருவிற்கு உணர்த்த முயன்றாள். 

கார்த்திக் பிருந்தாவின் புறம் கிஞ்சித்தும் திரும்பவில்லை. பிருந்தாவும் அவனை சமாதானம் செய்ய முற்படவில்லை. திருவிடம் முதல் நாள் நெடு நேரம் பேசிவிட்டு உறங்கியவளுக்கு அடுத்த நாள் விழாவிற்கு தயாராகவே நேரம் போதவில்லை. 

இந்த ஆர்பாட்டங்கள் சற்றே ஓய்ந்த பின் தமையனையும், கணவனையும் ஒன்றாக அமர்த்தி சில விசயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தவள், நிகழ்வில் முழுமனதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.      

ஆளுக்கு ஒரு மனநிலையில் இருந்த போதும், நிச்சயம் சிறப்பாக நடந்து முடிந்தது. வந்த உறவினர்கள், விருந்துக்கு பின் விடை பெற, பால்கியின் குடும்பத்தினரும் தங்கள் ஊருக்கு கிளம்பினர். 

திருவும், பிருந்தாவும் பால்கி குடும்பத்தினரோடு நின்றுவிட்டனர். இருவருக்கும் அங்கிருந்து தங்கள் பணியிடத்திற்கு கிளம்புவது தான் எளிது என்பதால் இருவரும் பால்கியோடு சேலம் வந்திருந்தனர். 

நிச்சய மக்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்ததும், காலையிலிருந்து வேலை பார்த்த சோர்வில் ஆளுக்கொரு புறம் முடங்கினர். மதுரா வீட்டு ஆட்களுக்கு பழசாறு தயாரிக்க செல்ல, பிருந்தாவும் அவருக்கு உதவ எழுந்து சமையலறை சென்றாள். 

இரண்டு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பாள். அதற்குள் அவளுக்கு மொத்த உலகமும் தட்டா மாலை சுற்ற, அருகில் இருந்த இருக்கையை பிடித்து கொண்டாள். இரண்டு நிமிடங்களில் பூமி சுழல்வது நிற்க, தலையை குலுக்கி தன்னை சமன்படுத்திக் கொண்டவள், மீண்டும் சமையலறை நோக்கி நடந்தாள். 

சரியாய் சமையலறை நிலைக் கதவை அடையும் போது, மீண்டும் தலை சுற்ற பிடிமானம் ஏதும் அருகில் இல்லாத பிருந்தா தடுமாறி கீழே விழுந்தாள். அவள் மயங்கி விழவும் திருவும், கார்த்திக்கும் பதறி அடித்துக் கொண்டு அவளின் அருகே ஓடினர். 

அதற்குள் மதுரா ஒரு சொம்பில் நீரை கொண்டு வந்து மருமகளின் முகத்தில் தெளித்தார். மித்ரா அண்ணியின் கையில் நாடி பார்த்து அது பலமாக இருப்பதை உறுதி செய்தாள். சில நொடிகளில் கண் விழித்த பிருந்தா, சங்கடமாக எழுந்து அமர்ந்தாள். 

“எனக்கு ஒண்ணும் இல்ல. லேப்ல எர்த் க்ராவிட்டி நியூட்ரல் (புவிஈர்ப்பு விசையின்றி மிதக்கும் பயிற்சி) ப்ராக்டீஸ் போயிட்டு இருக்கு. அதனால இந்த மாதிரி தலை சுத்துறது எல்லாம் சகஜம் தான். காலைல ஒழுங்கா ப்ரேக் பாஸ்ட் வேற எடுக்கல. அதனாலயும் இருக்கலாம்.’’ என்றவள் சற்றே தடுமாறி எழுந்து அமர முயல, அவளின் கரம் பற்றி எழுப்பிய கார்த்திக் அருகிருந்த இருக்கையில் மனைவியை அமர வைத்தான். 

“உங்களை யாருங்க ஒழுங்கா சாப்பிடாம வேலை பார்க்க சொன்னது.  உங்க ஹெல்த் நீங்க தானே பார்த்துக்கணும்.’’ என்று பதட்டமாய் மொழிய தொடங்க, “இட்ஸ் ஓகே. எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லா தான் இருக்கேன்.’’ என்றாள் பிருந்தா சமாதானமாய். 

அதற்குள் திரு, “உங்க ஸ்பேஸ் ஹெல்த் டீம்கிட்ட வீடியோ கான்பிரன்ஸ் கால் போட்டு பேசுறியா பிந்து.’’ என்றான் கவலை குரலில். “அதெல்லாம் வேண்டாம் அண்ணா. டெஸ்ட் ஆரம்பிக்கும் போதே இதெல்லாம் சொல்லிட்டாங்க. மிடில் இயர் பேலன்ஸ் குறைஞ்சா இந்த மாதிரி கிடினஸ் வரலாம்னு. கொஞ்ச நாள்ல அதுவே சரியாயிடும்னு சொன்னாங்க. பெருசா எதுவும் பிரச்சனையில்ல.’’ என்றாள். 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே மதுரா மருமகளுக்கு ஆரஞ்சு சாறு பிழிந்து எடுத்து வந்திருந்தார். அதை அவள் கையில் கொடுத்தவர், “குடிமா. தலை சுத்துறதுக்கு புளிப்பா குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்.’’ என்றார். 

அதை கையில் வாங்கிய பிருந்தா, வறண்டிருந்த நாவின் உந்துதலில் மொத்த கோப்பையையும் ஒரே மடக்கில் காலி செய்தாள். புன்னகை முகமாய் கோப்பையை மதுராவிடம் கொடுக்கும் போதே, உள்ளே போன சாறு குமட்டிக் கொண்டு வெளியே வந்தது. எழுந்து நடப்பதற்கு கூட அவகாசமின்றி அவள் வரவேற்பறையில் வாந்தி செய்துவிட, மொத்த குடும்பமும் பதறிப் போனது.

“என்ன ஆச்சு. என்ன ஆச்சு..’’ என்று ஆள் ஆளுக்கு பதற, கிருஷ்ணாவிற்கு அலைபேசியில் அழைத்த கார்த்திக், அவரின் தங்கை மருத்துவமையில் பிருந்தாவை காண்பிப்பதற்கு வேக வேகமாய் முன்பதிவு செய்தான். 

அவள் முகம் துடைக்க மதுரா உதவிக் கொண்டிருக்க, “வாங்க பிந்து. எதுக்கும் போய் டாக்டரை ஒரு டைம் பார்த்துட்டு வந்திடலாம்.’’ என்று மனைவியின் கரம் பற்றி எழுப்பினான். “நானும் வறேன். என் கார்ல போகலாம்.’’ என்று திருவும் உடன் வர, மற்ற மூவரும் வீட்டில் தேங்கினர். 

இவர்கள் மருத்துவமனையை அடைந்தவுடன், மயூரி தானே முதல் உதவி சிகிச்சை பிரிவிற்கு வந்து வரவேற்றார். கார்த்திக்கின் பதட்டமான முகத்தை கண்ட அவர், “ஒண்ணும் இல்ல கார்த்திக். சின்ன வாந்தி மயக்கம் தானே. வைட்டல்ஸ் எல்லாம் ஸ்டேபிள்ளா தான் இருக்கு. எதாச்சும் புட் பாய்சன் ஆகி இருக்கும். நீ கொஞ்ச நேரம் பதறாம வெளிய இரு. நான் மத்த பேசிக் டெஸ்ட் எல்லாம் முடிச்சிட்டு உன்னை கூப்பிட்டு பேசுறேன்.’’ என்ற போது தெளிவில்லாத முகத்துடனே கார்த்திக் வெளியேறினான். 

தங்கையின் கரம் பற்றி, “ஒண்ணும் இருக்காது. பயப்படாத குட்டிமா. அண்ணன் வெளிய தான் இருக்கேன்.’’ என்ற திருவும் வெளியேற, முதல் உதவி சிகிச்சையாய் பிருந்தாவிற்கு சலைன் ஏற்றிய மருத்துவர், சிறுநீர் ரத்த பரிசோதனைகளை மேற்கொண்டார். 

அது காட்டிய விடையை மீயொலி (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்) மூலம் உறுதி செய்ய, தன் சந்தேகத்தை உறுதி செய்தவர், இருவரையும் தன் அறைக்கு அழைத்து பேசினார். “கங்கிராட்ஸ் கார்த்திக். உன்னோட கிரிக்கெட் விளையாட ஒரு குட்டி கார்த்திக் வரப் போறான்.’’ என்று அவர் முகம் எங்கும் புன்னகையோடு அந்த விசயத்தை பகிர, கார்த்திக் அதிர்ந்து போனான். 

திருவின் இதயத்திலோ சத்தமின்றி ஒரு அணு ஆயுதம் வெடித்தது. ‘இது எப்படி சாத்தியம்’ என தனக்குள் கேட்டுக் கொண்டவன், “டாக்டர்…ஆர் யூ ஸ்யூர்?’’ என்றான் தன் தவிப்பை கண்களில் தேக்கி. 

சந்தோசமாய் கொண்டாட வேண்டிய விசயத்தை ஏன் இவர்கள் இப்படி ஆராய்ச்சி கண் கொண்டு நோக்குகிறார்கள் எனப் புரியாத மருத்துவரோ, “நானே ஸ்கேன் பார்த்தேன். 50 டேஸ் க்ரோத் இருக்கு. ஈவன் ஹார்ட் பீட் கூட வந்துருச்சு. நீங்க ரெண்டு பேரும் ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க. இப்போ இருக்குற அட்வான்ஸ் சயின்ஸ்ல சைல்ட் பியரிங் எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல.’’ என்றார் அவர்களை தேற்றும் விதமாய். 

கார்த்திக் அவர் முன்னிலையில் தலையை மட்டும் அசைக்க, அதை கூட செய்ய வலுவற்று திரு அந்த அறையில் இருந்து வெளியேறினான். ‘தங்கையின் நெடு நாள் கனவு. சில மாதங்களில் கைக் கெட்டும் தூரத்தில். இப்போது இந்த குழந்தையால், அவள் பின் வாங்க நேரும். 

அவளின் வாய்ப்பு இன்னொருவருக்கு வழங்கப்படலாம். நிலவில் இரண்டாவதாக கால் பதித்த ஆல்ட்ரினையே நினைவு கூற விரும்பாத உலகம் இது. நிலவிற்கு போக வேண்டும் என சிறுவயதில் இருந்து கண்ட கனவு, இனி மற்ற சராசரி பெண்களைப் போல தன் குழந்தைக்கு நிலவை காட்டி உணவு கொடுப்பதில் வந்து முடியப் போகிறதோ?’ தனக்குள் போராடி ஓய்ந்தவன் அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் அங்கிருந்த இருக்கையில் சோர்ந்து அமர்ந்துவிட்டான்.