கடந்த பத்து நாட்கள் எப்படி பறந்து என்பதை மித்ரா அறியாள். அப்படி ஒரு மகிழ்வோடு ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருந்தாள். திரு வந்து தன் பிடித்ததை வெளிப்படையாய் அறிவித்த அடுத்த நாள் காலையே முழுக் குடும்பமும் பால்கியின் வீட்டில் குழுமிவிட்டனர்.
வெண்ணிலாவிற்கு அளவிட முடியா பேரானந்தம். அண்ணன் குடும்பத்திலேயே பெண் கொடுத்து, பெண் எடுப்பதில். திரு தான் கூச்சத்துடன் நடமாடிக் கொண்டிருந்தான். அந்த அளவிற்கு புகழும், இன்பனும் அவனை ஓட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அன்றைக்கு வீட்டுடன் பூச்சூடி, பெண்ணை உறுதி செய்தனர். அந்த நொடியில் காணொளி காட்சியின் மூலம், கார்த்திக்கும் பிருந்தாவும் வைபவத்தில் இணைந்தனர். “வாழ்த்துகள் அண்ணா” பெரிதாய் புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்த தங்கையை வெட்கத்துடன் பார்த்து தலை அசைக்க முடிந்தவனால், “என் தங்கச்சிகிட்ட மாட்டினதுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் மச்சான்.’’ என்று மகிழ்வுடன் வாழ்த்தியவனுக்கு மறுமொழி கொடுக்க முடியவில்லை.
அந்த நேரம் எதற்கோ அவனை அழைக்க, “எக்ஸ்கியூஸ் மீ” என்றவன் தன் கையில் இருந்த அலைபேசியை அருகில் இருந்த இனியனிடம் கொடுத்து சென்றான். கார்த்திக் இனியனை பார்த்து புன்னகைக்க, அவனோ பரிட்சையில் பிட் அடித்து மாட்டிக் கொண்ட மாணவன் ஆசிரியரை பார்ப்பதை போல ஒரு ஒவ்வாத முகபாவத்துடன் அவனைப் பார்த்தான்.
இனியன் ஏன் தன்னை இப்படிப் பார்க்கிறான் என்பதை கார்த்திக்கால் புரிந்து கொள்ள முடிந்தாலும், மேலும் அவனிடம் விளையாடி பார்க்கும் பொருட்டு, “இனி செல்லம். காலைல என்ன சாப்பிட்டீங்க?’’ என்று என்று குட்டிக் குழந்தையிடம் பேசுவதை போல விசாரிக்க, முற்றிலும் தடுமாறிப் போன இனியன், “என்னையும் கூப்பிடுறாங்க.’’ என்று உளறிக் கொட்டிவிட்டு அலைபேசியை அருகிருந்த சொகுசு நாற்காலியில் வீசிவிட்டு அங்கிருந்து ஓடினான்.
அதே இணைப்பில் தான் பிருந்தாவும் இணைந்திருந்தாள். கணவன் தன் மச்சானை ஓட விட்டதை கண்டவள், “என்ன வேலை பாக்குறீங்க. இனியன் மச்சான் பாவம்.’’ என்று கணவனிடம் சண்டைக்கு கிளம்பினாள்.
“ஏங்க நான் என்ன செஞ்சேன் உங்க இனியம் மச்சானை? அவர் தான் என்னை கண்டதும் ஏதோ பேய் பூதத்தை பார்த்த மாதிரி ஓடுறார். சொல்லப்போனா எனக்கு தான் இது தாங்க முடியாத அவமானம். என் ரசிகர்களுக்கு மட்டும் இங்க இப்போ நடந்தது தெரியணும்.’’ என்று கார்த்திக் பிந்துவிடம் போலியாக சண்டை பிடித்தான்.
“போதும் உங்க செல்ப் டப்பா. சரி எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன். உறுதி முடிஞ்சதும் அம்மா கால் செய்றேன்னு சொன்னங்க.’’ என்றவள் அழைப்பை துண்டிக்க முனைய, கார்த்திக் ஆழ்ந்த குரலில், “மிசஸ் கார்த்திக்.’’ என அழைத்தான்.
அவன் குரலே அவளை எங்கெங்கோ இழுத்து செல்ல, “அதெல்லாம் அப்போ பார்க்கலாம் மிஸ்டர் பிருந்தா.’’ என்றவள் குழு காணொளி காட்சியில் இருந்து அழைப்பை துண்டித்து ஓடி விட, கார்த்திக்கின் வெடி சிரிப்பு அவன் அறை முழுக்க எதிரொலித்தது.
உறுதி முடிந்த மாலையே திரு கடலூர் திரும்பிட, இரண்டு குடும்பங்களும் இணைந்து நிச்சய வேலையில் இறங்க, மித்து கனவுலகில் சஞ்சரித்தபடி தன் ஆடை, அலங்காரம் முதலியவற்றிக்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்து வந்தாள்.
இரண்டு குடும்பத்திலும் விமரிசையாக நடக்கப்போகும் முதல் திருமணம். அதன் ஒவ்வொரு பகுதியையும் எந்த குறையும் இல்லாது, சிறப்பாக நடத்திவிட வேண்டும் என்று இரு பக்க சொந்தங்களும் முனைப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.
திருப்பதி கூட, இதுவரை வந்திராத தன் தம்பியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார். மதுராவின் சொந்தங்களுக்கு சற்றே வருத்தம் இருந்த போதிலும், திருவின் பதவி அவர்களின் வாயை அடைத்துவிட்டிருந்தது.
அதோடு பார்ப்பதற்கும் ராஜகுமாரன் தோரணையில் இருந்தவனை கண்டவர்களால் அவர்கள் மனதில் வந்த உறுத்தலை வெளியே சொல்ல முடியாது போயிற்று. ஜாடை மாடையாக மதுராவிடம் கேட்டதற்கு கூட, பால்கி வழியில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாயிற்று என சொல்லி அவர் முடித்துக் கொண்டார். அதற்கு மேல் யாரும் எதுவும் கேட்டகவில்லை.
நிச்சயதார்த்த விழாவிற்கு முதல் நாள் இரவே திரு சேலம் வந்தான். கிட்ட தட்ட அதே நேரத்தில் தான் பிருந்தாவும் பெங்களூரில் இருந்து சேலம் வந்து இறங்கினாள். பொதுவாக பயணப்படும் போதெல்லாம் திருவிற்கு ஒரு செய்தி அனுப்பிவிடுவது அவள் வழக்கம். இன்றைக்கும் அதே போல பெங்களூரில் இருந்து கிளம்பும் போது தமையனுக்கு செய்தியை அனுப்பிவிட்டே கிளம்பியிருந்தாள்.
கார்த்திக் தன் தொடர் முடிந்து அதி காலையில் தான் சென்னையில் வந்து இறங்கி இருந்தான். தனக்கான தனி விடுமுறைக்கு ஒப்புதல் பெற்று, தன் பகாடியாவில் மனைவியை பார்க்கப் போகும் உற்சாகத்தில் கிளம்பி இருந்தான் கார்த்திக்.
சேலம் பேருந்து நிலையத்தில், கார்த்திக் பிருந்தாவிற்கு புலன செய்தியை அனுப்பிவிட்டு, யார் கவனத்தையும் ஈர்க்காத வகையில் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு அவளுக்காய் காத்திருந்தான். அவனுக்கு அவளோடு ஜோடியாக வீட்டிற்கு செல்லும் பேராவல் கிளர்ந்திந்தது.
திருவும் தன் வாகனத்தை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தியவன், பிருந்தா அனுப்பி இருந்த பேருந்து வந்து நிற்கும் இடத்திற்கு சென்று அவளுக்காய் காத்திருக்க தொடங்கினான். பிருந்தாவின் தனியார் பேருந்து நிற்கும் இடத்திற்கு சற்று தொலைவில் வாகனத்தை நிறுத்தி, அந்த இடத்திலேயே பார்வையை பதித்திருந்த கார்த்திக்கின் முகம் குழப்பத்தை தத்தெடுத்தது.
‘திரு எதற்காக இங்கே வந்து காத்திருக்கிறான்’ என குழம்பிய கார்த்திக் உடனே அலைபேசியின் வாயிலாக பிருந்தாவிற்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்றதும் வேகமாக காதில் வந்து மோதிய ஒலிப்பான்களின் ஒலி, அவள் மாநகரத்தை சமீபித்து விட்டதை அறிவுறுத்தியது.
“ஏங்க உங்க அண்ணன் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கார். எதாச்சும் கொண்டு வந்து தர சொல்லி இருந்தீங்களா?’’ என்றான் கேள்வியாய். ‘என்னது அண்ணா வந்திருக்கிறாரா?’ என குழம்பியவள், “நான் கிளம்பின டைம் வழக்கம் போல மெசேஜ் போட்டு விட்டேன். ஆனா அண்ணா வறேன்னு என்கிட்ட எதுவும் சொல்லலையே. ஒரு நிமிஷம் கார்த்திக். நான் அவர்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்.’’ என்றவள் அழைப்பை துண்டிக்க, கார்த்திக்கின் நெற்றியிலும் குழப்ப ரேகைகள்.
பிருந்தா தன் தமையனுக்கு அழைக்கவும், ஒரே ரிங்கில் அழைப்பை ஏற்றவனோ, “பிந்துமா… நான் பஸ் ஸ்டாண்ட்ல தான் இருக்கேன். ரெண்டு பேரும் ஒண்ணா வீட்டுக்கு போயிடலாம். இப்போ எங்க வந்துட்டு இருக்க.’’ என்றான்.
அழைக்கும் அண்ணனிடம் என்ன சொல்வது என திகைத்தவள், “அண்ணா… அம்மா நேரா அத்தை வீட்டுக்கு வர சொன்னாங்க?’’ என்றாள் தயங்கி. கார்த்திக் இவளுக்கு அனுப்பும் பரிசுகள், அவனோடு கொண்டாடிய பிறந்த நாள் என அனைத்தையும் அவ்வப்போது திரு பேசும் போது பகிர்ந்திருக்கிறாள் தான் என்றாலும், “அம்மாவுக்காக ரொம்ப எல்லாம் அவனை அட்ஜஸ்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை பிந்து. உன்னால டாலரேட் செய்ய முடியாட்டி சொல்லு. நானே வீட்ல பேசுறேன்.’’ என்று கடுமையாய் பேசும் அண்ணனிடம் அதற்கு மேல் கார்த்திக் குறித்து பிருந்தா விவாதித்ததில்லை.
அதற்கு முதல் காரணம், மருத்துவமனையில் இருந்து கிளம்பும் முன் இந்த திருமணம் நிலைக்காது என்றும், கார்த்திக்கின் மீது தனக்கு பெரிதாய் நட்டமில்லை என்றும் இரண்டு வருடங்களில் அவனை சட்டப்படி பிரிந்துவிடுவேன் என்றும் பிருந்தா திருவிடம் பகிர்ந்து இருந்தாள்.
அவனோடு வெளியே கிளம்பிய அன்று கூட திருவிற்கு அழைத்தவள், “அம்மா அடிக்கடி என்னை வந்து பார்கலைன்னு அவரை ரொம்பவே டார்ச்சர் பண்றாங்க போல அண்ணா. நான் போய் ஒரு ஹாய், பாய் சொல்லிட்டு வந்துடுறேன்.’’ என்று சொல்லியிருக்க தாயிற்காய் அவனை சந்திக்க செல்கிறாள் என்று எண்ணியவனும், தங்கையின் உறுதியில் நம்பிக்கை கொண்டு, “பார்த்துப் போயிட்டு வா.’’ என்றதோடு நிறுத்திக் கொண்டான்.
அவன் மீது நேசம் பிறந்த பிறகு, அதை திருவிற்கு கடத்த நினைத்து, பிருந்து கார்த்திக் குறித்த பேச்சை எடுத்தாலே, “ரொம்ப எதாச்சும் டிஸ்டர்ப் செஞ்சா சொல்லு பிந்து பார்த்துக்கலாம். மத்தபடி பிரண்ட்லியா பழகின நீயும் பேசு. என்ன இருந்தாலும் அவன் பால்கிப்பா பையன். அவன் வேண்டாம்னு நீ உறுதியா இருந்தா உன்னை மீறி எதுவும் நடக்காது.’’ என பேசி பிருந்தாவின் வாயை பூட்டிவிடுவான்.
திருவின் நிச்சயத்திற்கு கிளம்பும் போதே, வார்த்தையால் சொல்ல முடியாத நேசத்தை, தன் செயல்கள் மூலம் தமையனுக்கு உணர்த்திட எண்ணியவள், அவனின் நிச்சயத்தின் போது, இருவரும் தம்பதிகளாய் நிகழ்வில் பங்கேற்று, கார்த்திக் மீதான தன் விருப்பத்தை தமையனுக்கு உணர்த்த எண்ணி இருந்தாள்.
ஆனால் திரு அவள் வரைய இருந்த காதல் கோலத்தின் ஆரம்ப புள்ளியை அவளை அழைத்து செல்ல வந்தே நீரூற்றி கலைத்திருந்தான். பிருந்தா மேலும், “அண்ணா…’’ என இழுக்க, “பிந்து உன்னோட லேப் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் ஷேர் செஞ்சிக்கணும்னு சீக்கிரம் வந்தேன். இதுக்கு மேல உனக்கு எப்போ லீவ் கிடைக்குமோ. இன்னைக்கு நைட் நீ நம்ம வீட்டுக்கு தான் வர. நம்ம பேவரிட் மொட்டை மாடில உக்காந்து லேப் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் ஷேர் செய்ற.’’ என்றான் ஆவல் நிறைந்த குரலில்.
தன் அண்ணனுக்கு விண்வெளித்துறையில் உள்ள ஆர்வம் அறிந்தவள் ஆகையால் தற்சமயம் என்ன பதில் சொல்வது என பிருந்தா தயங்க, திருவோ, “என்ன பிருந்தா. எதாச்சும் பிரச்சனையா?’’ என்றான்.
“இல்ல அண்ணா. பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்ல. இருங்க ஒரு நிமிஷம். மது அத்தை அங்க என்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. அவங்களுக்கு ஒரு போன் செஞ்சி சொல்லிட்டு உங்க கூட வறேன்.’’ என்றவள் தமையனின் அழைப்பை துண்டித்து விட்டு கார்த்திக்கிற்கு அழைத்தாள்.
மறுபக்கம் கார்த்திக் அழைப்பை ஏற்கவும், “நீங்க வீட்டுக்கு கிளம்புங்க கார்த்திக். நான் அண்ணா கூட நாளைக்கு நேரா மண்டபத்துக்கு வந்துடுறேன்.’’ என்றாள். பிருந்தா அப்படி சொன்னதும் தன் “ஏன் பிந்து? என்ன ஆச்சு?” ஏமாற்றத்தை வெளிக்காட்டும் குரலில்.
“அண்ணா கூட பேசி ரொம்ப நாள் ஆச்சு அதான். நான் நாளைக்கு காலைல சீக்கிரம் வறேன் கார்த்திக். இப்போ நீங்க கிளம்புங்க.” என்றாள். முதலில் ஏமாற்றத்தில் சுருங்கிய மனம் தற்சமயம் கோபத்தில் சீற்றமுற, “நானும் தான் உங்களை நேர்ல பார்த்து பேசி ரொம்ப நாள் ஆச்சு பிருந்தா.’’ என்றான் கடுப்புடன்.