அத்தியாயம் – 52-1

காலையிலிருந்து உணவு அருந்தாததால் ஒரு மாதிரி மயக்கம் கலந்த தூக்கத்தில் இருந்த வசந்தி, திடீரென எழுந்த பேச்சு சத்தத்தில் விழித்துக் கொண்டாள். டி வி சத்தம், குழந்தைகள் விளையாடும் சத்தத்தோடு இணைந்து போன குரல்களில் அவளைப் பற்றி தான் பேசுகிறார்களென்று அவளுக்கு தெரியவில்லை.  விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தவள் செவிகளில்,’எங்கே வசந்தி அண்ணி?’ என்ற வார்த்தைகள் விழ, உடல் முழுவது ஒரு பரபரப்பு உண்டானது. தன்னைத் தேடி யாரோ வந்திருக்கிறார்கள் என்று புரிய, அவர்கள் தான் தன்னை இந்த நரகத்திலிருந்து விடுவிக்க முடியும் என்று உரைக்க, படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினாள் வசந்தி.

எத்தனை கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது அவனது திட்டம். புது ஊர், வீடு, வேலை, தோற்றம் என்று பல லட்சங்களை முதலீடு செய்து, குழந்தைக்காக என்று அவன் செலவு செய்திருந்த பணத்தை பொறுமையாக தவணை முறையில் வசூலித்து, இப்போது கடைசி கட்டத்தில், அதாவது மீதிப் பணம் வந்ததும் மனைவி மீதும் அவளது குடும்பத்தினர் மீதும் சேற்றை வாரி இறைத்து அவனுக்கான புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தருவாயில், ஷண்முகவேல் ரூபத்தில் இடையூறு வருமென்று நினைக்கவில்லை வெங்கடேஷ். ஷண்முகத்தைப் பார்த்ததும் வந்த நொடி நேரப் பதட்டம் அவனது குடும்பத்தினரின் ஆதரவை பார்த்ததும் காணாமல் போயிருந்தது. 

அவனது திருமணத்தை முறிக்கும் முடிவு அவன் தான் எடுக்க வேண்டும், அவன் தான் அதை உலகத்திற்கு அறிவிக்க வேண்டுமென்று அந்த மூர்க்கன் திட்டமிட்டு இருந்தததால், அவனது மண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முகூர்த்த நாள் அன்றில்லை என்று முடிவு செய்து,”அவ வீட்லே இல்லை.” என்று முட்டாளதனமாக வசந்தியைப் பார்க்க வேண்டுமென்று கோரிக்கை வைத்த சினேகாவிற்கு பதிலளித்தான். 

உடனேயே,“உடம்பு சரியில்லாதவ வெளியே எங்கே போயிருக்கா?” என்று கேட்டான் ஷண்முகம்.

மகனது முட்டாள்தனமான பதிலில் பிரச்சனை பெரியதாகப் போகிறதென்று உணர்ந்த சீதா, காலையிலிருந்து ஜடம் போல் படுத்துக் கிடக்கும் வசந்தி அவளது விரலைக் கூட அசைக்க போவதில்லை, வீட்டினுள்ளே அவள் இருப்பது யாருக்கும் தெரியப் போவத்தில்லை என்ற இறுமாப்பில்,“உடம்பு சரியில்லாதவங்க வேற எங்கே போவாங்க..ஆஸ்பத்திரிக்கு தான்.” என்று மகன் சொன்ன பொய்யிற்கு சிமெண்ட் சேர்த்து அதை ஸ்டராங்க் ஆக்கினார் சீதா.

“எப்போ போனா, யாரோட போனா?” என்று அடுத்தடுத்து கேள்விகள் ஷண்முகவேலிடமிருந்து வர, அவனது வேகத்திற்கு சீதாவின் மூளை வேலை செய்ய மறுத்தது. வெங்கடேஷிற்கு லேசாக மிக லேசாக பயம் வந்தது. 

லாஜிக்காக பேசுவதாக நினைத்து,”எங்கப்பாவோட போயிருக்கா..பிள்ளைங்களை விட்டிட்டு நான் எப்படி  அவங்க கூட போக முடியும்..அம்மா கூடப் போனா சமையல் வேலையை யார் செய்யறது?” என்று மிகப் பெரிய பொய்யை சொன்னாள் ராதிகா.

‘ஒருவேளை அப்படித் தான் இருக்குமோ? ஆஸ்பத்திரி சென்றிருப்பதால் தான் அம்மாவின் அழைப்புக்களை அக்கா ஏற்கவில்லையோ? என்று யோசித்தபடி அவனது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், வசந்தியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க, அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை. கைகள் அதன் பாட்டிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்க, மூளை அதன் பாட்டிற்கு முதலிருந்து வசந்தி அக்கா சம்மந்தப்பட்ட விஷயங்களை அலச ஆரம்பித்தது. கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சில நொடிகள் கழித்து, தலையை உயர்த்தி, ராதிகாவிடம்,

“உங்களுக்கு தான் உடம்பு சரியில்லை அதனால் தான் கல்யாணத்துக்கு வரமுடியாதுன்னு அக்கா மெஸேஜ் போட்டிருந்ததா அம்மா சொன்னாங்க..நீங்க ஆரோக்கியத்தோட இருக்கீங்க..உங்களுக்கு சேவை செய்திட்டு இருந்த என் அக்காக்கு எப்போ உடம்பு சரியில்லாமப் போச்சு..ஏன் நீங்க யாரும் அந்த விவரத்தை எங்க யாருக்கும் சொல்லை..பலமுறை அம்மாவும் பெரியம்மாவும் அக்காக்கு ஃபோன் போட்டிருக்காங்க..ஒருமுறை கூட ஒருத்தர்கிட்டே கூட அக்கா பேசவே இல்லை..இப்போ கூட அக்காக்கு தான் முயற்சி செய்திட்டு இருக்கேன்..அழைப்பை எடுக்க மாட்டேங்கறா..உங்கப்பா நம்பரைக் கொடுங்க..ஏன் என்னோட அழைப்பை எடுக்கலை, அக்காக்கு என்ன ஆச்சு, எந்த ஆஸ்பத்திரிலே இருக்காங்கன்னு அவர்கிட்டேயே விசாரிக்கறேன்.” என்று சொல்ல, யாரும் வாயைத் திறக்கவில்லை. வீடு படு அமைதியானது.

“சரி..நீங்க கொடுக்க வேணாம்…அக்கா நம்பரை ட்ரேஸ் செய்தா இப்போ அவ எங்கே இருக்கான்னு தெரிஞ்சிடப் போகுது” என்றான்.

அவர்கள் பின்னிய கதை அவிழப் போகிறது என்ற புரிய, அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல், அண்ணன், தங்கை இருவரும் அம்மாவை நோக்க, அச்சத்தில் வயிற் கலக்கி, சீதபேதி நிலைக்கு சென்றிருந்த சீதா, நிற்க கூட முடியாமல் தொப்பென்று சோஃபாவில் அமர,”என்ன ம்மா, என்ன ம்மா ஆகுது உங்களுக்கு?” என்று அவர் பெற்ற செல்வங்கள் இருவரும் இருபுறமும் அமர்ந்து அவரை விசாரிக்க,”முதல்லே உங்க வீட்லே விசாரிங்க..கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக் கொடுத்திருந்தா இதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிருக்கும்..உங்களுக்கும் எங்களுக்கும் உறவு இல்லாம போயிருக்கும்..தரேன், தரேன்னு சொல்லி ஏமாத்திட்டிருக்கற உங்க வீட்டு பெரியவர்கிட்டே விசாரிக்காம எங்க வீட்டுப் பெரியவரை எதுக்கு இழுக்கறீங்க..வீட்டுக்குள்ளே கூப்பிட்டு மரியாதையா பேசினா ட் ரேஸ் கீஸ்ஸுன்னு எங்களைப் பயமுறுத்தப் பார்க்கறீங்களா? என் மாமியாருக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன்.”என்று உரத்த குரலில் ஷண்முகத்தை மிரட்டினான் ராதிகாவின் கணவன்.

விளையாட்டை நிறுத்தி விட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்த அப்பாவை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர் பிள்ளைகள் இருவரும். அவளது அறை வாசலிருந்து வரவேற்பறையில் இருந்த தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தியின் கண்களிருந்து பொல பொலவென்று கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்களுக்கு வேலுடன் ‘யாமிருக்க பயமேன்’ முருகனாக தம்பி ஷண்முகவேல் காட்சி கொடுக்க, பல நாள்களாக கலங்கியிருந்தவளின் மனம் தெளிவடைந்தது. மெல்ல அடி மேல் அடி வைத்து வந்தவளை முதலில் பார்த்தது சினேகா தான். வசந்தியின் தோற்றத்தைப் பார்த்து வார்த்தைகள் வராமல் தடுமாறிய சினேகா, கணவனின் கையைப் பற்றி இழுத்து, கண்களால் வசந்தியைக் காட்ட, அடுத்த நொடி அக்காவை ஆதரவாக அணைத்து நின்றிருந்தான் தம்பி.

“குழந்தை பிறக்கலைன்னா நான் என்ன டா பண்னுவேன்..எத்தனை முறை சிகிச்சை செய்துக்க முடியும்..உடலும் மனசும் புண்ணாகிடுச்சு டா..இனி முடியாதுன்னு சொன்னதும் இன்னொரு கல்யாணம் செய்துக்க முடிவெடுத்திருக்கார் டா..எனக்காக செலவழிச்ச காசை அப்பாகிட்டே கேட்டு இருக்கறார்….என்கிட்டே எதுவும் சொல்லாம அப்பாவும் இவர் கேட்டதை கொடுக்க ஒத்துகிட்டிருக்கார் டா..கொஞ்சம் பாக்கி இருக்குதாம்..அதை அப்பா கொடுத்ததும் எனக்கு விவாகரத்து கொடுத்து விரட்டி விட்டிடுவார் டா..எனக்கு இங்கே இருக்கவே வேணாம் டா..இவங்க முகத்தையும் பார்க்க வேணாம் டா..காசு கொடுக்காம எப்படி டா இங்கேயிருந்து வெளியேறுவேன்..இவங்க விட மாட்டாங்களே டா.” என்று அழுகையினுடே தம்பியிடம் புலம்பினாள் தமக்கை.

துர் நாற்றம் வீசிய உடல், எண்ணெய், சீப்பை பார்த்திராத கூந்தல், அழுக்கு நைட்டியில் அநாதரவான நிலையில் அழுது புலம்பிய வசந்தி ஷண்முகவேலை உக்கிர வேலாக மாற்றியிருந்தாள்.

அக்காவை அவனோடு இறுக அணைத்து, வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து,”நான் உன்னை என்னோட கூட்டிட்டுப் போறேன் க்கா.” என்று வசந்திக்கு வாக்குறுதி அளித்தவன், கையைப் பிடித்து அவளை மெதுவாக வரவேற்பறைக்கு அழைத்து வந்து, நிதானமான குரலில் ராதிகாவின் கணவனிடம்,”என்ன டா பண்ணுவ?” என்று கேட்டான்.

அதைக் கேட்டு அதிர்ச்சியில் வாயைப் பிளந்தவனிடம்,”வீட்டு உள்ளே ஆளை வைச்சுக்கிட்டு வெளியே போயிருக்காண்ணு பச்சை பொய் சொன்ன எல்லோரையும் உள்ளே தள்ளப் போறேன்..என் அக்காவை இந்த நிலைக்கு ஆளாக்கினவங்களுக்கு உடந்தையா இருந்த இந்த வீட்டு சொந்தக்காரனான உனக்கு அதிகப்பட்ச தண்டனை கிடைக்கற மாதிரி செய்யப் போறேன்..உன் பொண்டாட்டியும் அவளோட அம்மாவும் சீருடைலே சோத்துத் தட்டை ஏந்திட்டு லைன்லே நிற்கற அழகான காட்சியை என் அக்கா  கண் குளிர பார்க்கற வரை நான் ஓயவே மாட்டேன் டா.” என்று சூளுரைத்தான் ஷண்முகவேல்.

ஷண்முகத்தின் கோபத்தைப் பார்த்து பயந்து போன குழந்தைகள் இருவரும் சோஃபாவில் அமர்ந்திருந்த ராதிகாவின் மடியில் ஏறி, அவளைக் கட்டிக் கொண்டு அழ, ராதிகாவும் சத்தமாக அழ ஆரம்பித்தாள். சீதாவின் நிலையோ கவலைக்கிடமான நிலையிலிருந்து ஆபத்தான நிலைக்குப் பயணப்பட்டது.

அவன் போட்ட திட்டம் தகர்ந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல்,”எல்லாம் உன்னாலே தான் டீ..பிட்ச்” என்று வசந்தியை நோக்கி வெங்கடேஷ் பாய்ந்து வர, வசந்தியினுள் ஏதோ ஒன்று வெடித்துச் சிதற, பல நாள்களாக படுக்கையில் இருந்தவளுக்கு எங்கேயிருந்து தான் சக்தி வந்ததோ, பாய்ந்து வந்தவனின் சட்டையைப் பிடித்து,”மருமக கண்ணெதிரே மகனைப் புது மாப்பிள்ளைன்னு சிலாகிச்ச உன் அம்மா குலவிளக்கு..நான் உயிரோட இருக்கும் போது உனக்கு புது ஜோடியைத் தேடின உன் தங்கச்சி குத்துவிளக்கு..தாலி கட்டி, முறையா, மனைவியா உன்னோட கூடி, குடித்தனம் நடத்தி, குழந்தைக்காகன்னு நீ கூட்டிட்டுப் போன இடத்துக்கெலாம் வாயைத் திறக்காம வந்து, விரதம், பூசைன்னு என் உடம்பை கெடுத்துகிட்ட நான், கண்ட நாயும் அசிங்கம் பண்ற தெருவிளக்கா.” என்று குமுறியவள், அவனைப் பிடித்து உலுக்கி,”வேசியா..வேசியா டா நான்..அப்போ என்கூட படுத்ததுக்குக் கணக்கு போட்டு செட்டில் பண்ணு டா பொறுக்கி நாயே.” என்று கத்தியவள், கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியை வேகமாக கழட்டி, அவன் மீது விட்டெறிந்து அவளது திருமணப் பந்தத்தை தடபுடலாக முடித்துக் கொண்டாள் வசந்தி.

அவளது செய்கையில் அரண்டு போன வெங்கடேஷும் அவனது குடும்பத்தினரும் விதிர்விதிர்த்துப் போயிருக்க,“ஷண்முகம், ஒவ்வொரு ராத்திரிக்கும் கணக்கு போட்டு பணத்தை வாங்கினா பிறகு தான் இவனுக்கு விவாகரத்துக் கொடுக்கப் போறேன்.” என்று தம்பியிடம் சொன்னாள் வசந்தி. 

“ஸுப்பர் க்கா..ஒரு பைசா பாக்கி இல்லாம பைசல் செய்யற வரை இவனைக் கண்காணிப்புலே வைக்கறேன் க்கா.” என்று அக்காவிற்கு வாக்குறுதி அளித்தான் தம்பி. அவளது திருமணப் பந்தத்தை அக்கா முடித்த வைத்த பாணியைப் பார்த்து அவளின் தீவிர ரசிகனாகியிருந்தான் தம்பி. 

அழுக்கு நைட்டியில் அலங்கோலமாக இருந்தவளைப் பிரமிப்புடன் பார்த்திருந்த சினேகாவிற்கு, நிமிர்ந்த தலை, நேரான பார்வை, பிசிரற்ற குரலில்,“போகலாம் டா ஷண்முகம்.” என்று கணவனிடம் சொன்ன வசந்தியை மிகவும் பிடித்துப் போனது.