அவள் அப்படி சொன்னதும், பாய்ந்து அவளை கட்டிக் கொண்டவன் “என் வாழ்கையில நீ வேணும்னு தான் என்னோட தகுதிகளை நான் உயர்த்திகிட்டேன் மித்து. பெரியவங்க மனசை கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு தான் முறைப்படி நீ என் வாழ்க்கையில வரணும்னு நினச்சேன். ஆனா நான் உன்ன காத்திருக்க வச்ச ஒவ்வொரு நிமிசமும், நீ இவ்ளோ வேதனைப்பட்டிருப்பனு நினச்சே பார்க்கல மித்து. எப்படி இருந்தாலும் நான் உன்னை இன்னொருத்தனுக்கு விட்டு தர மாட்டேன்னு உனக்கு தெரியும் தானே.’’ என்றான் கரகரத்த குரலில்.
இருவரும் தங்களுக்குள் போராட, இம்முறை எழுந்து நின்ற மதுரா கணவரை போல தொண்டையை கணைக்க, திரு தன் மீதிருந்த அவளின் பிடியை தளர்த்தினான். மகளை நேர் கொண்டு பார்த்தவர், “சும்மா அவனையே குறை சொல்லிட்டு இருக்கியே மித்து. உங்க அப்பா உன் கையை பிடிச்சு கூட்டிட்டு வந்தப்ப எனக்கு அவர் தான் வேணும்னு நீ எங்ககிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல.’’ என்றார் அழுத்தமாய்.
மித்ரா தாயின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் பார்த்திருக்க, “அப்போ அவன் பஸ்ட் டைம் மேரேஜுக்கு ஓகே சொல்லாதது, உங்க அப்பாவை விட உன்னை தான் அதிகம் பாதிச்சு இருக்கு. லவ்ல எப்பவும் ஈகோ பார்க்க கூடாது மித்து. அது வாழ்க்கைக்கு நல்லது இல்ல. உனக்காவது அப்பா காரில் ஏறினதும் உண்மையை சொல்லிட்டார். பாவம் அவன் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்னு யோசிச்சு பார்த்தியா?’’ என்று நிறுத்த அவள் கண்கள் மீண்டும் கலங்கியது.
அவர் மித்துவை வருத்துவது திருவிற்கு பிடிக்கவில்லை. உடனே, “விடுங்க மதும்மா. என்கிட்ட தானே உரிமையா எதிர் பார்க்க முடியும். நான் கோவில்லையே என் மனசை சொல்லி இருக்கணும். தப்பு என் பேர்ல தான்.’’ என தழைந்து போனான்.
திரும்பி பார்த்து அவனை முறைத்தவர், “உன்னை ரொம்ப பொறுப்பான பையன்னு நினச்சிட்டு இருந்தேன் திரு. நீயும் என்னை ஏமாத்திட்ட. உங்க மாமா உங்கிட்ட மேரேஜுக்கு கேட்டப்ப வேண்டாம்னு சொன்ன. அப்போ என்ன தான் சூழல் சரியில்லாம இருந்து இருந்தாலும் வெளிய காட்டிக்கிலையே தவிர மனுசன் தவிச்சு போயிட்டார். சரியா நாங்க கிளம்பி வந்த ரெண்டே நாள்ல ரெண்டு பேரும் லவ்வர்ஸ் ஆயாச்சு. அப்படித்தானே. நாங்களும் ஒரு காலத்துல இதெயெல்லாம் தாண்டி வந்தவங்க தான் திரு. என் பொண்ணு முகத்தை வச்சே, அவ மனசை படிக்கிற ஆளு. பால்கிப்பா பால்கிப்பான்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்ற நீ ஒரு வார்த்தை போன் போட்டு இப்படின்னு சொன்னியா? உன்னை நம்பி எங்க பொண்ணை அங்க ஆறு மாசம் தங்க வச்சோமே. அப்ப எங்க நம்பிக்கைக்கு என்ன மரியாதை?’’ என்றார் காட்டமாக.
திருவால் பதிலே சொல்ல முடியவில்லை. என்னதான் அவன் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டாலும், தங்களுக்குள் முகிழ்த்த காதலை அவர்களிடம் மறைத்தது பெரும் தவறு என்பதை உணர்ந்தவன், தலை குனிந்து நின்றான்.
திரு அப்படி நிற்பதை பொறுக்க முடியாத மித்து, “என் படிப்பு முடிஞ்சதும் உங்ககிட்ட பேசுறதா தான் இருந்தார். முன்னாடியே சொன்னா அத்தான் குவாட்டர்ஸ்ல நீங்க என்னை தங்க வைக்க மாட்டீங்கன்னு நான் தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். நீங்க எதுக்கு இப்போ சம்மந்தம் இல்லாத கேள்வி எல்லாம் அவரை நிக்க வச்சி கேட்டுட்டு இருக்கீங்க.’’ என்று தாயிடம் சண்டைக்கு நின்றாள் மித்து.
பால்கி மனதிற்குள் மெலிதாக சிரித்துக் கொண்டார். அவர் மனமோ, ‘சபாஷ் சரியான போட்டி!’ என்று மனதிற்குள் விசிலடித்தது. இப்போது மித்துவின் பக்கம் திரும்பியவர், “நீ இன்னும் எங்களோட சின்ன மக இல்ல. நீ ஆசைப்பட்டது எல்லாம் நீ வாய திறக்காம உன் கைல கொண்டு வந்து சேர்க்க. உன்னோட விருப்பதை வெளிய சொல்லிப் பழகு. லவ்ல ஈகோ பார்த்தா வாழ்கையில தோத்து போக வேண்டி வரும். இப்போ என்னை கேட்ட இல்ல. நிக்க வச்சி அவரை ஏன் கேள்வி கேக்குறீங்கன்னு. கொஞ்சம் முன்னாடி நீயும் அதை தான் செஞ்சிட்டு இருந்த.’’ என்றார்.
அப்போது தான் தன் தவறு புரிந்தவளாக, “சாரிமா…!’’ என்றாள். மதுராவின் இளகிவிட்ட குரலில், “உனக்கு இப்போ கலெக்டரா உன் முன்னாடி நிக்குற திருவை தான் தெரியும். அதுக்கு முன்னாடி வாழ்கையில கஷ்டத்தை மட்டுமே தாங்கி, பார்ட் டைம் வேலை பார்த்து, ட்ரஸ் வாங்க கூட சிக்கனம் பார்த்து பிடிச்சதை படிக்காம, குடும்பத்துக்காக தன்னை வருத்திகிட்ட திருவை எங்களுக்கு தெரியும். நாங்க கொடுத்த பைக்கை வாங்கிக்கவே அவ்ளோ தயங்கினவன். உங்க பொண்ணை எனக்கு கொடுங்கன்னு எங்ககிட்ட எப்படி கேக்க முடியும் சொல்லு? அவனுக்கு உன்னை விட தயக்கம் அதிகமா இருக்கும் மித்து. இனி எப்பவும் திருவை கஷ்டப்படுத்தி பார்க்காத’’ என்ற தாயை ஆச்சர்யமாய் பார்த்தாள் மித்ரா.
திரு கலங்கிவிட்ட கண்களோடு அவர் கரம் பற்றி கொள்ள, “போடா…! நான் இன்னும் உன் மேல கோவமா தான் இருக்கேன். யு.பி.எஸ்.சி எக்ஸாம்ல ஸ்டேட் செகண்டா வந்தப்ப முதல்ல எனக்கு கால் செஞ்சி சொன்ன திரு தொலைஞ்சி போயிட்டான். நானும் அவரும் நீ ஒண்ணை கேட்டு இல்லைன்னு சொல்லிடுவோமா? எங்ககிட்ட உனக்கு என்ன தயக்கம்?’’ என்றார் கரகரத்த குரலில்.
முற்றாக உடைந்து போன திரு அவர் கரத்தில் முகம் புதைத்து, “சாரி மதுமா…” என்றான் கண்ணீர் குரலில். பால்கியின் நெஞ்சம் கூட நெகிழ்ந்திருந்தது. மனையாளோடு தன் தங்கை மகனுக்கு இருக்கும் பிணைப்பை பெருமிதத்தோடு பார்த்திருந்தார்.
மூவரும் வெவ்வேறு உணர்வுகளில் சிக்கி நிற்க, சற்றே நிதானத்தில் இருந்த பால்கி, “சரி சரி…! போதும் ரெண்டு பேரும் கொஞ்சினது. சாப்பிடாம கொள்ளாம வந்து இருப்பான். நீ வாடா உனக்கு தான் தோசை ஊத்துறேன். இன்னைக்கு மது தக்காளி சட்னி வச்சா. நல்லா கார சாரமா சூப்பரா இருந்தது. உனக்கு ஊத்துற சாக்குல நானும் மறுபடி ரெண்டு தோசை சாப்பிடுவேன்.’’ என்றார்.
கணவரை முறைத்த மது, “சுகர் நாளுக்கு நாள் கூட்டிட்டு போகுது. தோசை வேணுமாம் தோசை. ஒழுங்கா வந்து படுங்க. மித்து, திருவுக்கு தோசை ஊத்து போ. திரு சாப்பிட்டு நீ போய் கார்த்திக் ரூம்ல படு. உன்னோட ரூம்ல திங்க்ஸ் போட்டு வச்சிருக்கோம்.’’ என்றவர் அதோடு கணவரை இழுத்து கொண்டு தங்கள் அறைக்குள் சென்று மறைந்தார்.
“ரெப்ரஷ் ஆயிட்டு வாங்க. நான் தோசை ஊத்துறேன்.’’ என்றவள் அவன் முகம் பார்க்காது சமையலறைக்குள் நுழைய, அணிந்திருந்த முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டு, சமயலறையில் இருந்த குழாயில் கைகளை கழுவியவன், அவள் அடுப்பில் தோசைக் கல்லை ஏற்றவும், அவளை அப்படியே தூக்கி அருகிருந்த சமையல் திட்டில் தன் முகம் காணும் படி அமரவைத்தான்.
அவன் தன்னை சட்டென தூக்கியதும் மிரண்டவள், அப்போதும் அவன் முகம் காண மறுத்து தலை குனிந்து அமர்ந்திருக்க, அவள் உள்ளத்தை அறிந்தவன், “மதுமாவுக்கு தெரிஞ்ச திருவுக்காக நீ வருத்தப்பட வேண்டாம் மித்து. உனக்கு தெரிஞ்ச திருவை நீ லவ் பண்ணு. அவன் கூட சண்டை போடு. இதோ கொஞ்சம் முந்தி கேட்டியே, எப்படி என்னை போக விட்டன்னு, அதே மாதிரி உரிமையா சண்டை போடு. அதான் எனக்கு வேணும். என்னோட கோவக்காரி மித்து தான் எனக்கு வேணும்.’’ என்றதும் மித்ரா அவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள்.
“சாரி அத்தான்.’’ என அவள் தேம்பி அழ, “நீ எந்த தப்பும் செய்யல. நான் உன்னை போக விட்டது தான் தப்பு. இனி எப்பவும் எங்கயும் உன்னை விட்டு தர மாட்டேன் மித்து.’’ என்றவன் அவள் நெற்றி முட்ட, மித்துவும் அதே நிலையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
சில நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டவன், குளிர்பதன பெட்டியிலிருந்து அவள் வெளியே எடுத்து வைத்திருந்த மாவை தோசைக் கல்லில் ஊற்றி தோசை ஆக்கினான். முதல் தோசையை அவளுக்கு ஊட்ட கண்ணீர் வழியும் விழிகளோடு வாங்கிக் கொண்டாள்.
அவன் உண்டு முடித்ததும், அவன் தனக்கான தோசையை சுட, உட்கார்ந்திருந்த திட்டில் இருந்து எழுந்தவள், “நீங்க உக்காருங்க. நான் தோசை சுட்டு தறேன்.’’ என்று அவனுக்கான தோசையை சுட்டு கொடுத்தாள்.
இரவு உணவு முடிந்ததும், அவனை இழுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள். இரவில் விண்மீன்கள் ஒளிர்ந்து கொண்டிருக்க, அவனை வெறும் தரையில் தள்ளியவள், அவன் கையை தலையணையாக்கி நெடு நாட்களுக்கு பின் அந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தபடி உறங்கிப் போனாள்.
தனக்கு பிடித்த பால்வெளியையும், பருவப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தவன், முகத்தில் மலர்ந்த நிம்மதியோடு விழிகளை மூடினான். எல்லாமே சரியாகிவிட்டது என அவன் நிம்மதி கொள்ள, இன்னும் பத்து நாட்களில் தன் தமையனும், திருவும் பகையாளிகளைப் போல அடித்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதை அறியாத மித்துவும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தாள்.