பின் ஒரு முடிவிற்கு வந்தவன் போல, குமிழ் கைப்பிடியை திருகி உள் நுழைந்தவன், தனக்கு பின் கதவை பூட்டி விட்டு, வீட்டின் முக்கிய வாயிலை அடைந்தான். சற்றே தயக்கம் இருப்பினும் உறுதியாய் வாயில் மணியை அழுத்தினான்.

உள்ளே குயில் ஒன்று கீதம் இசைக்க, பால்கியின், “யாரு?’’ என்ற குரலை தொடர்ந்து, அவரின் காலடித்தடங்கள் மெல்ல நெருங்கி வருவதை உணர்ந்தான் திரு. அடுத்த சில நொடிகளில் தயக்கமாய் கதவை திறந்தவர், இவன் முகம் கண்டதும் விரிய கதவை திறந்து, “அடடே… வாப்பா திரு. வியாழக்கிழமை தான் வருவன்னு நினச்சிட்டு இருந்தேன். உள்ள வா.’’ என்று அவனை வரவேற்றார்.

உள்ள வந்தவன் கண்களால் மித்துவை தேட அவரோ, “இப்போ தான் எல்லாரும் சாப்பிட்டு போய் படுத்தோம். தக்காளி சட்னி சூப்பரா இருக்கு. சூடா உனக்கு ரெண்டு தோசை ஊத்தவா?’’ என்று கேட்டபடி வந்தவனுக்கு நீர் கொடுக்க அவர் சமையலறை நோக்கி நடந்தார்.

“மதுராம்மாவை கொஞ்சம் வெளிய வர சொல்லுங்க பால்கிப்பா.’’ என்றான் திரு. “அவளுக்கு நாளைக்கு காலைல காலேஜ் இருக்கு திரு. இப்போ தான் தூங்கினா. ஏதாச்சும் முக்கியமான விசயமா என்ன?’’என்றவர் குழப்பத்தோடு அவன் முகம் பார்த்தார்.

‘ஆம்’ என்று தலை அசைத்தவன், “அப்படியே மித்ராவையும் வர சொல்லுங்க” என்றான் திரு. அவனின் குரலில் இருந்தது என்னவென்றே உணரும் முன், வேகமாக மேல் தளத்திற்கு சென்றவன், மித்ராவின் அறையை தட்டிக் கொண்டிருந்தான்.

மித்ரா அறையை திறந்த அடுத்த நொடி மதுராவும் வெளியே வந்திருந்தார். உறக்க கலக்கம் பிரியாமல் விழிகளை தேய்த்து கொண்டவர், இரவு நேரத்தில் கேட்ட சத்தத்தில் வெளியே வந்திருந்தார்.

திருவை அந்நேரம் அங்கு எதிர்பார்க்காத மித்ரா அதிர்ந்து விழிக்க, அவளின் கரம் பற்றி தர தரவென்று அழைத்து சென்றவன், அவளின் பெற்றவர்கள் முன் அவளை நிறுத்தினான். மதுராவின் முகம் குழப்பத்தில் சுருங்க, பால்கியை நோக்கி, ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்பது போன்ற ஒரு பார்வையை செலுத்தினார்.

“என்ன ஆச்சு திரு உனக்கு?’’ என பால்கி அவனை கேட்க, வாய் வார்த்தையாய் எதையும் சொல்லாதவன், தன் சட்டை கால் சாராயினுள் இருந்த குங்குமத்தை எடுத்து மித்ராவின் நெற்றியில் வைத்தான்.

அவர்கள் இருவரும் என்ன இது என பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை வைத்தவன், “நான் மித்ராவை காதலிக்கிறேன் பால்கிப்பா. அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே கிடையாது. அவ தான் எனக்கு பொண்டாட்டி. என்னால அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. என் சட்டை பையில தாலி கூட இருக்கு. முதல்ல அதை தான் அவ கழுத்துல கட்ற வேகத்தோட வந்தேன். ஆனா எனக்கு உங்க எல்லாரோட மனப்பூர்வமான ஆசிர்வாதமும் வேணும்.’’ என்றவன் மித்துவை தன் கை வளைவில் நிறுத்தி வைத்தான்.

மித்ரா அவனை விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் ஊறி இருந்தது. மதுரா திருவை கையை கட்டிக் கொண்டு பார்க்க, பால்கி முகத்தில் விரிந்து விட்ட சிரிப்போடு அடுத்து அங்கே நடக்க போகும் சம்பவத்தை எண்ணிப் பார்த்து கொண்டிருந்தார்.

சில நொடிகள் அப்படியே உறைந்து நின்ற மித்ரா, “என்ன தேடி வர உனக்கு ஐஞ்சி நாள் ஆகி இருக்கு. ராஸ்கல். ஏன்டா என் பின்னாடியே நான் தான் வேணும்னு வரல. ஏன் என்னை விட்டுக் கொடுத்துட்டு நின்ன… ஏன் உடனே வரல.’’ என்று சராமாரியாக திருவின் நெஞ்சில் குத்த தொடங்கினாள் மித்ரா.

முதலில் ஒன்றும் புரியாமல் திகைத்த திரு, அப்போது தான் மற்ற இருவரின் முகம் பார்த்து நடப்பை சற்றே ஊகித்தான். மதுரா, மற்றும் பால்கியின் முகத்தில் புன்னகை இருக்க, அதற்கு நேர்மாறாக மித்துவோ ஆத்திரம் கொப்பளிக்கும் முகத்தோடு அவனை அடி வெளுத்துக் கொண்டிருந்தாள்.

முதலில் அவளின் ஆக்ரோசமான அடிகளை ஏற்றுக் கொண்டவன், பிறகு அவளின் கரம் பற்றி தடுக்க முயற்சித்தபடியே, “பால்கிப்பா காப்பாத்துங்க.’’ என அலற தொடங்கினான். வாய் விட்டு சிரித்தவர், “நீ தனாப்பா நான் கேக்கும் போது இப்போ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்ன. நான் எப்படி உன்னை காப்பாத்துறது.’’ என்றுவிட்டு அருகில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தார்.

அவர் அருகில் சென்று அமர்ந்த மதுராவோ, “நீ கல்யாணம் வேண்டாம்னு சொன்னதை கூட மன்னிசிடுவேன்டா படவா… ஆனா ஆறு மாசமா என் பொண்ணை லவ் பண்ணிட்டு அதை எங்ககிட்ட சொல்லாம மறைச்ச பாரு. உனக்கு இது வேணும். நல்லா வாங்கு.’’ என்றார்.

அவள் கைகளில் இருந்து நழுவி ஓடியபடி, “ஐயோ மதும்மா… மித்து படிப்பு முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தேன். அது ஒரு தப்பா. என்னை காப்பாத்துங்க.’’ என்றவன் சோபாவை சுற்றி சுற்றி ஓட, “டேய் நில்லுடா…! இன்னைக்கு உன்ன கொல்லாம விட மாட்டேன். இப்போ ஓட்டின படத்தை நீ சிதம்பரத்துல ஓட்டி இருக்கணும். நான் உனக்கு அவ்ளோ ஈசியா போயிட்டேனா. எங்க ஓடுற நில்லு.’’ தானும் சோபாபை சுற்றி ஓடியபடி அவனை விரட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.

சிறியவர்களின் சண்டையை கண்டு பெரியவர்கள் பொங்கி சிரித்தனர். ஓடி ஒரு வளைவில் நின்றவன் தன் மீது வந்து மோதிய மித்ராவை அப்படியே தன் கைகளுக்குள் சிறை செய்தான். “என்னை விடு. போ… நாலு நாளா என்னை அழ வச்சிட்டு வந்த நீ எனக்கு வேண்டாம் போ.’’ என அவன் கைகளை உதற, “மித்து..’’ என்றவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.

“உனக்கு என்னை பிடிக்காதப்பவே உன்னை மட்டுமே நினச்சி வாழ்ந்தவன். உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் விட்டுடுவேனா. இந்த உலகமே எதிர்ந்து நின்னாலும் உன்னை தூக்கிட்டு போயிருப்பேன் மித்து. உன்னோட திரு அத்தானை நம்ப மாட்டியா நீ?’’ என்றான் இறங்கி விட்ட குரலில்.

பால்கி எழுந்து நின்று கணைக்க தன் கைகளை தளர்த்தினான் திரு. மகளிடம் நெருங்கி நின்றவர், “அவனும் நாலு நாளா எல்லா முயற்சியும் எடுத்துட்டு தான் பாப்பா இருந்தான். நாங்க தான் அவனுக்கே தெரியாத கோட்டை போட்டு அவனை தள்ளி நிறுத்தி வச்சோம். இன்னைக்கு கார்த்திக்கிட்ட கூட கெஞ்சி இருக்கான். எல்லாமே உன் மேல இருக்க பாசத்துல தான். போன போகட்டும் அவனை மன்னிச்சிடு.’’ என்றார்.

‘அதெல்லாம் முடியாது டாடி. நீங்க எனக்கு வேற மாப்பிள்ளை பாத்தாச்சுன்னு சொல்றீங்க. அதை கேட்டுட்டு மரம் மாதிரி நிக்கிறார். என் பொண்டாட்டிக்கு எப்படி நீங்க வேற மாப்பிள்ளை பார்பீங்கன்னு உங்ககிட்ட சண்டைக்கு வந்து இருக்க வேண்டாம். பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி என்னை உங்க கூட அனுப்பி வச்சிட்டு அப்படியே தேவதாஸ் மாதிரி லுக் விட்டா நான் அமைதியா இருக்கணுமா? அப்படி அனுப்பி வச்சவர் அடுத்தநாளே பதறிட்டு வந்து இங்க நின்னு இருக்க வேண்டாம். அதை விட்டு தென்றல் விடு தூது, அணில் விடு தூதுன்னு ஒவ்வொருத்தரா தூதுக்கு பிடிச்சிட்டு இருக்கார். நான் நம்பரை ப்ளாக் பண்றேன், அப்பவும் அசராம இருக்கார். இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’’ என மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க வேகமாக அவன் மீதான குற்றப் பத்திரிக்கையை  தாக்கல் செய்து கொண்டிருந்தாள் மித்ரா.

திரு இவளுக்கு தன்னை எப்படி புரிய வைப்பது என  அயர்ந்து போய் நிற்க, “நீங்க என் கையை பிடிச்சு வேலைய கூட்டிட்டு வரும் போதே, அவ என்னோட மித்துன்னு உங்ககிட்ட இவர் சொல்லி இருக்கணும் அப்பா. என்னை விட்டுக் கொடுத்துட்டார். நாலு நாளோ, நாப்பது நிமிசமோ என்னை விட்டுக் கொடுத்துட்டார்.’’ என்ற மித்ராவின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்து அவளின் கன்னம் நனைத்தது.

அப்போது தான் இந்த நான்கு நாட்களும் அவள் தனக்குள் எத்தனை போராடி இருக்கிறாள் என்பதை திரு உணர்ந்தான். “மித்து…’’ கரகரத்த குரலில் அவன் அவளின் கண்ணீர் துடைக்க வர, கை உயர்த்தி வேண்டாம் என மறுத்தவள், “எனக்கு எங்க அப்பா  பார்த்த மாப்பிள்ளை நீங்க தான். கார்ல ஏறின அடுத்த நிமிஷம் அப்பா அதை என்கிட்ட சொல்லிட்டார்.’’ என்றவள் கண்களை மூடி தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

“அந்த சந்தோசத்தை கூட என்னால முழுசா அனுபவிக்க முடியல திரு. எப்பவும் எங்க அப்பா தான் எனக்காக உங்க முன்னாடி வந்து நிக்குற பீல். அந்த நிமிச தயக்கம் இருந்தாலும், அடுத்த ஒரு மணி நேரத்துல நீங்க என்னை தேடி பின்னாடியே வருவீங்கன்னு நம்பினேன். என் நம்பிக்கை தேஞ்சி போச்சு. நீங்க அன்னைக்கு மட்டும் இல்ல. அடுத்த ரெண்டு நாளும் வரல. நிலா அத்தை போன் செஞ்சி நீங்க என்னை பொண்ணு கேக்க சொன்னதை சொன்னப்ப கூட எனக்கு மனசு சமாதானம் ஆகல. உங்களுக்கு நான் வேணும்னா நீங்க தானே வரணும். என்னை காதலிக்கிறதை ஒத்துகிறது அவ்ளோ கஷ்டமா இருக்கா?’’ என்றாள்.