காலிங்பெல் சத்தம் கேட்டு, கதவைத் திறக்க எத்தனித்த கால்களை சற்றே சிரமப்பட்டு நிறுத்தி வைத்தாள் காருண்யா. கலைந்த கவனத்தை மீண்டும் தொலைக்காட்சியில் ஒலித்த பாடலில் குவிக்க முயன்றாள்.
அவள் கவனத்தை மீண்டும் காலிங்பெல் கலைக்க, எழுந்தவள் மணியைப் பார்த்தாள். அது ஆறு மணியைத் தொட்டிருக்க, மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
சிலமுறை அலறிய காலிங்பெல்லை அலட்சியப்படுத்தியவள், டீவியைப் பார்க்க, அதிகம் சோதிக்காமல் கதவு தானே திறந்தது.
“பெல் அடிச்சா யாருன்னு வந்து பாக்கக் கூட முடியாதா…?” கேட்டபடி தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து கொண்டு வந்தான் கதிரவன்.
கதிரவன் காருண்யாவின் கணவன்…!
“வர்றது நீதான்னு தெரிஞ்சும் நான் எதுக்கு வந்து பாக்கணும்..?”
வழக்கமான பெருமூச்சோடு கையில் கொண்டு வந்திருந்த பால் பாக்கெட்டை சமையலறையில் வைத்தவன், குளியலறையில் புகுந்திருந்தான். குளிக்கிறான் என்பதை தண்ணீரின் சத்தத்தைக் கொண்டு அறிந்தவள், இன்னும் வாகாய் அமர்ந்தபடி சேனலை மாற்றிக் கொண்டிருந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் “ஓம் நமசிவாய…” என்று ஜெபிக்கும் கேஜே யேசுதாஸின் குரலில் கரைந்த, கதிரவனின் மனதை கலைக்கும் வகையில்,
“ஏ சாமி வாயா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி…” என்று சன் மியூசிக்கில் பாடலை அலறவிட்டுக் கொண்டிருந்தாள் காருண்யா.
தன்னை முறைக்கும் கணவனை ஏளனமாய் ரசித்தபடியே அதே பாடலை சத்தமாய் பாடியபடி எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.
ஆனால் வழக்கமாக நடக்கும் செயலுக்கு இன்று மட்டும் என்ன எதிர்வினை இருந்து விடப் போகிறது…
அதே ரீதியில் தான் கதிரவனின் மனநிலையும் இருந்தது.
தரையில் காலையில் அவன் வெளியே கிளம்பும் போது இருந்த குப்பைக் கோலம் அப்படியே இருந்தது. பால் பாக்கெட்டை வைக்கும் போது நேற்றிலிருந்து குவிந்திருந்த பாத்திரங்களில் ஒரு வித நெடி கிளம்பி முகத்தை சுளிக்க வைத்தது.
ஒரு பெருமூச்சோடு கடந்தவன் கைகூப்பி இறைவனிடம் என்ன கேட்டானோ, அவன் வந்து சோபாவில் அமரும் போது ‘நங்’ என்ற ஒலியோடு டம்ளரில் சூடாக ஒரு பானம் கிடைத்தது.
சுவைபாராமல் பெயர் சூட்ட முடியாத அளவில் இருந்த அந்த பானத்தை எடுத்து ருசித்தான் கதிரவன்.
பால் வாடை மாறாமல் ’டீ’ என்பதற்கான நிறமும் எட்டாமல் அரைகுறையாய் வந்திருந்த பானத்தில் திகட்ட திகட்ட இனிப்பின் சுவை.
பொறுமையை இழுத்துப் பிடித்தவன், “காருண்யா… உனக்கு டீ வைக்கத் தெரியலைன்னு நினைக்கிறேன், வா என் கூட…”
என்று அவளை கையைப் பிடித்து இழுத்து வந்திருந்தான் சமையலறைக்கு.
தனியாக ஒரு பாத்திரத்தில் மீதமிருந்த பாலை நன்றாக காயவிட்டு, மற்றொரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் டீத்தூளை, தட்டிய இஞ்சி ஏலக்காயோடு கொதிக்க விட்டு, காய்ந்த பாலை சேர்த்து கொதித்தபின் வடித்து அளவான சர்க்கரையோடு அவளுக்கும் தனக்குமாக இரு கோப்பைகளை எடுத்துக் கொண்டான்.
கொடுப்பதற்காக திரும்பி அவளைப் பார்க்க, செய்முறை விளக்கத்தோடு நீ கற்றுக் கொடுத்ததெல்லாம் காற்றிற்கு மட்டும் தான் என்பதைப் போல அவள் சோபாவில் அமர்ந்திருந்தாள்.
“நீ கத்துக்கணும்னு சொல்லிக் கொடுத்தா இங்க என்ன பண்ற…?”
“நீயே இவ்ளோ நல்லா டீ வைக்கும் போது நான் எதுக்கு கத்துக்கணும்..? தினமும் இனி நீயே டீ வச்சிடு..” என்றபடி டீயை ரசித்து உறிஞ்சியவள் கண்கள் கதிரவனின் கண்களை சந்திக்கவே இல்லை.
திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆகிய தம்பதி தான் கதிரவனும் காருண்யாவும்.
எளிமையாக கோவிலில் இரு வீட்டு பெரியவர்களின் முன்னிலையில் மஞ்சள் நாண் பூட்டி மனைவியாக காருண்யாவை ஏற்றுக் கொண்ட கதிரவனின் மனம், அப்போது வெகு உற்சாகமாய் இல்லை என்றாலும் இனியேனும் ஒரு வித நிம்மதியும் சந்தோஷமும் தன் வாழ்வில் வரும் என்றெண்ணியே இந்த பந்தத்தை ஏற்றுக் கொண்டது.
பெண் பார்க்கும் படலமும் நிச்சயதார்த்தமும் பெரியவர்களின் கட்டாயத்தின் பெயரில் இவனை வலுக்கட்டாயமாக இந்த திருமண பந்தத்தில் நுழைக்கவே நிகழ்த்தப்பட்டதாய் பட்டது காருண்யாவிற்கு.
அந்த அளவிற்கு எந்த வித ஆர்வமோ ஈடுபாடோ இல்லாமல் அவளை பார்த்துவைத்தவனிடம் காருண்யாவிற்கும் பிடித்தம் இல்லை.
ஆனாலும் தலையை ஆட்டிவைத்தாள், எப்படியும் நடக்காது என்ற நம்பிக்கையில்.
கதிரவனின் குடும்பம் பெரியது. இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை என உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இரு பிள்ளைகளும் இருந்தனர்.
கதிரவனின் பெற்றோர் கிராமத்தில் விவசாயத்தை விட முடியாமல் அங்கேயே தங்கிவிட, மூத்த அண்ணன்கள் இருவரும் மும்பையில் பெரிய தொழில்களை நடத்தி அங்கேயே செட்டிலாகி இருந்தனர்.
அக்கா பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்க, தங்கை கணவனோடு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்தாள்.
சென்னையில் ஒரு நட்சத்திர தங்கும் விடுதியைத் துவங்கி தன் உழைப்பை முழு மூச்சாகப் போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரவனின் திருமணத்தை இவ்வளவு எளிமையாக நடத்த அவனின் உடன்பிறந்தவர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழியில்லாமல் நடத்தியிருந்தனர்.
தம்பியின் திருமணம் மட்டுமே கருத்தில் கொண்டவர்களுக்கு சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் தெரிந்தாள் காருண்யா. ஆனால் காருண்யாவின் நிலை அதற்கும் முற்றிலும் தலைகீழாக இருந்தது.
அதனாலேயே அவளைப் பார்த்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்து அதே வேகத்தில் அடுத்த நாளே அவர்களை தனிக்குடித்தனம் அமர்த்தி, அவர்களின் இனிமையான திருமண வாழ்வை துவக்கி வைத்திருந்தனர்.
சொந்தபந்தங்களின் எந்த கேள்வியோ, நோட்டமிட்டு அளவெடுக்கும் பார்வையோ அவளைத் தாக்கக்கூடாது என்றெண்ணிய கதிரவனுக்கும் இந்த தனிக்குடித்தனம் சரியென்று பட, தடங்கலின்றி ஏற்றுக் கொண்டான்.
இயல்பாகவே அமைதியான சுபாவம் கொண்டவன் கதிரவன். கோபம் வந்தால் சத்தம் போட்டு கத்தி சண்டையிடும் ரகமில்லை. மாறாக இன்னும் அமைதியாகியிடுவான். என்ன காரணம் எதற்காக கோபம் என்று அவனிடம் வாங்கிடவே முடியாது.
ஆனால் இரும்பிற்கும் உருகுநிலை உண்டு, பனிக்கட்டியாய் இருக்கும் நீருக்கும் கொதிநிலை உண்டல்லவா… அதேபோல் கதிரவனின் அமைதிக்கும் ஒரு எல்லை உண்டு. அதை தாண்டவைத்திடும் முழுவீச்சில் காருண்யா இருந்தாள்.
விருப்பம் இல்லை என்று சொல்லிடும் தைரியமும் இல்லாமல், மறுப்பதற்கு காரணமும் இல்லாமல் மண்டையை ஆட்டிவைத்தவளுக்கு, திருமணத்திற்கு பின்பு தான் கதிரவனின் குடும்பப் பின்னணியும் வசதியும் முழுமையாகத் தெரிந்தது.
சிறு சிறு ஆசைகளுக்குக் கூட ஏங்கித் தவித்தவளுக்கு இந்த வாழ்வின் ஆடம்பரத்தை எளிதில் விடவும் மனதில்லை. அதே நேரம் தன் வயதிற்கும் இளமைக்கும் ஏற்ற ஜோடியாக மனதைக் கவர்ந்தவனை மறக்கவும் முடியவில்லை.
கதிரவனே வெறுத்து தன்னை வேண்டாமென்று சொல்லிவிட்டால், நன்றாக இருக்குமே என்று அவளின் முட்டாள்புத்தி அறிவுரை கூற, அதை நடத்த என்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
திருமண தினத்தன்று…
தன் அன்னையின் பிடிவாதத்தின் பேரில் நடக்கும் ஏற்பாட்டில் கடமைக்குத் தயாராகி நின்றிருந்தான் கதிரவன். சராசரிக்கும் சற்றே உயரமாக இருந்த அவனிடம் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு. மாநிறத்தில் இறுக்கமான முகத்தில் முறுக்கப்படாத அடர்ந்த மீசையின் கீழிருந்த உதடுகளில் புன்னகைக்கு மட்டும் எப்போதும் வறட்சியே.
”கொஞ்சம் சிரிச்ச முகமாக இரேன் கதிரவா…” என்று சொன்ன தன் அக்காவை முறைத்த கதிரவன் அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததும் சாந்தமாகிவிட்டான்.
அலங்காரப் பதுமையாக இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவையில் அருகில் வந்து நின்றாள் காருண்யா. குலதெய்வக்கோயில் என்பதால் அம்பாளின் முன்னிலையில் பூசாரி சத்தமாக அம்மன் பாடலைப் பாடியபடி தாலியை எடுத்து அனைவர் முன்னும் ஆசீர்வாதத்திற்கு நீட்ட, இரு குடும்பத்தினரும் மணமக்களின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்ய, ”கெட்டிமேளம் கெட்டிமேளம்…” என்று உரக்ககூறிய பூசாரி அம்மனை வேண்டியபடி மங்கலநாணை கதிரவனிடம் கொடுக்க, அவன் மனதில் இருந்த அனைத்து சஞ்சலஞ்சங்களையும் உலகாளும் அன்னையின் காலடியில் வைத்துவிட்டு, நிர்மலமான மனதுடன் காருண்யாவை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.
கதிரவனை கண்டு பூரித்து போனதைவிட, அவள் கட்டியிருந்த பட்டுப்புடவையின் விலையும், அவள் அணிந்திருந்த வைர நகைகளும் காருண்யாவை அதிகம் பூரிக்க வைத்திருந்தது. திருமணம் நடந்த இடம் தான் கோவிலே தவிர, மற்ற எந்த வகையிலும் அவர்களின் திருமணம் எளிதாக இருக்கவில்லை.
மாப்பிள்ளைவீட்டார் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களின் வசதி, வந்திருந்த உயர்ரக கார்கள், தங்கமும் வைரமும், மினுமினுக்க, பெரும்பான்மையாக இருந்த பெண்வீட்டார் சற்றே யோசிக்கவே ஆரம்பித்தனர்.
”இவ்வளவு பெரிய சம்மந்தம் அதும் இந்த வேலப்பன் மகளுக்கா, நம்பவே முடியலையே… மாப்பிள்ளை வீட்டாருக்கு என்ன போதாத காலமோ, அந்த அங்காளம்மா தான் அவங்க குடும்பத்தைக் காப்பாத்தணும்…” வாய்விட்டே புலம்பிச் செல்பவர்களை பார்த்து கதிரவனின் தாய் காமாட்சிக்கு மனதின் ஓரம் ஒரு சலனம் வந்தாலும் ”தன் மகனின் நல்ல குணத்திற்கும், கலங்கமில்லா மனதிற்கும் அந்த அம்பாள் எந்த குறையும் வைத்துவிட மாட்டாள்…” என்றே நம்பியது.
திருமணம் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு கிளம்பியவர்கள், சென்னையில் அவர்களுக்கென சகலவசதிகளுடன் வாங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்களை முதலிரவிற்கு தயார்படுத்திவிட்டு தனிமையை பரிசாக கொடுத்துவிட்டு கிளம்பியிருந்தனர்.
காலையில் இருந்து தனக்கு பழக்கமில்லாத உடையில் தவித்தவன், அவர்கள் கிளம்பியதும், முதலில் சென்றது குளிக்கத்தான்.
குளித்துமுடித்து இலகுவான இரவு உடையில் வெளியே வந்த கதிரவன், நேரே பூஜையறைக்குச் செல்ல, காருண்யா ஏற்றிவைத்திருந்த விளக்கு தூண்டிவிடப்படாமல் அணையப்போக, விளக்கை தூண்டிவிட்டு எண்ணை ஊற்றி, அது பிரகாசமாக எரிவதை பார்த்து திருப்திஆனான்.
மனதினுள் நினைத்தாலே முக்தி தந்திடும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தியானித்தவன், நெற்றி நிறைய திருநீறை அள்ளி பூசிக்கொண்டான். கதிரவன் ஒரு தீவிர சிவபக்தன், சிவமே தன் தந்தை தாயென வாழ்பவன், அவன் வயதிற்கும் அவன் கொண்டிருக்கும் பக்தியின் அளவிற்கும் யாராலும் சம்மந்தப்படுத்தி பார்க்க முடியாது.
சாமி கும்பிட ஆரம்பித்தவனுக்கு, பூஜை அறையை விடு வெளியே வந்தபின் தான் தன்னையன்றி, இன்னுமொரு ஜீவன் இந்த வீட்டில் இருக்கிறது என்ற நினைவே வந்தது.
சட்டென அவளைத் தேடி அறைக்குப் போய் பார்த்தால், அவள் இன்னும் அந்த பட்டுப்புடவையிலேயே இருந்தாள். அப்படி என்ன தான் செய்கிறாள்..? என்று உற்று நோக்கினால், அவளுக்கென கதிரவனின் அன்னை வாங்கி வைத்திருந்த ஆடைகளையும் , நகைகளையும் பார்த்து வியந்து கொண்டிருந்தாள்.
அவள் நினைத்தே பார்க்கமுடியாத வாழ்வு அவளுக்கு கிடைத்திருந்தது. உண்மையில் வசதிக்காக சொல்லவில்லை, கதிரவனின் குடும்பமும், அவனின் குணநலன்களும் யாருக்கும் எளிதில் வாய்க்காது.
வைரக்கல்லான கதிரவனை பாராமல், கண்ணாடிக்கற்களை ரசித்துக் கொண்டிருந்தாள் காருண்யா. பொருத்து பொருத்துப் பார்த்தவன், “காருண்யா… காருண்யா..” என்று அழைக்க,
அப்போது தான் நடப்பிற்கு வந்திருந்தாள். “இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே நிப்ப, போய் ப்ரெஸ் ஆயிட்டு வா..” என்று கதிரவன் சொன்னபிறகே அவனை நினைவிற்கு கொண்டு வந்தாள். அதுவரை அப்படி ஒருவன் இருப்பதையே மறந்து போயிருந்தாள்.
குளித்து முடித்து மெலிதான காட்டன் குர்தியில் வந்தவளுக்கு, சூடான காபி கோப்பையை கொடுத்தான் கதிரவன். மனதில் நினைத்து முடிப்பதற்குள் கையில் கிடைத்திட்ட காபியை ருசித்தபடியே, அவன் பின்னே செல்ல, அந்த கண்ணாடிக் கைப்பிடிசுவர் போட்ட பால்கனியில், மங்கலான வெளிச்சத்தில், மழையை ரசித்தபடி அமர்ந்துகொண்டான் கதிரவன்.
அருகில் அமர்ந்து அவளும் ரசித்தபடி ருசிக்க, இதமாக இருந்தது தருணம். ஒரு பக்கம் கடல்காற்று, மறுபக்கம் ஒளிரும் நகரம், நடுவில் தன் வாழ்க்கைத் துணை என கவிதை போலிருந்தது அந்த நொடி.
வழக்கமாகவே அதிகம் பேசாதவன் கதிரவன், புதியவளுடன் என்ன பேச என்று அறியாமல், அமைதியாக அமர்ந்திருந்தான். அவளோ தேவலோகத்தில் இருப்பது போன்று மிதப்பில் இருந்தாள்.
மழை நின்று மெல்ல குளிர்காற்று வீச, அடித்த சாரலோ அவளை மெல்ல நடுங்க வைத்திட, பின்புறமாக கன்னத்தில் விரல்கள் உரச, நாணத்தில் சிவந்த முகத்தை தோளோடு சேர்த்துக் கொண்டாள். காதோரம் கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கியபடி திரும்பி கதிரவனை எதிர்பார்க்க, அங்கு காற்றில் ஆடிய திரையே உரசி நிற்க, சப்பென்று ஆனது காருண்யாவிற்கு.
பெண்பார்த்துவிட்டு கதிரவன் கிளம்புகையில், காருண்யாவின் தோழிகள் காதில் கிசுகிசுத்தது நினைவில் வந்தது அவளுக்கு.
“மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயசு அதிகம் போல, என்ன பிரச்சனையோ, அவ்வளவு வசதியாம், இவளை வந்து ஏன் கட்ட போறாங்க… எதுக்கும் நல்லா விசாரிச்சுக்கோ டி… ஆனா மப்டில வந்த போலீஸ் மாதிரி கட்டுசெட்டா செமையா இருக்கார்… ஜிம் பாடி தான்…”
’திடீரென்று ஏன் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது..?’ என்று யோசித்தவளுக்கு பதில் தான் தெரியவில்லை. கதிரவனை தேடியவள் அவன் சமையலறையிலிருந்து வெளியே வரவும்,
’ஒருவேள பசிக்குதோ…’ என்று மனதில் நினைத்தவள், வாய்விட்டு கேட்டும் விட்டாள்.
“ஏன் உனக்கு பசிக்குதா..?” என்று அவன் கேட்ட கேள்வியில், ‘இதென்ன கேள்வி கேட்ட பதில் சொல்லாம திருப்பி கேள்வியே வருது..’ என்று யோசித்துக் கொண்டிருக்க, அவன் அவளை கடந்து சென்றிருந்தான்.
சமையலைறை உள்ளே சென்று பார்த்தால், காபி தயாரித்து குடித்த சுவடே இல்லாமல் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அவன் பின்னே சென்றவள், “இதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க..? வேலை செய்ய ஆள் வரமாட்டாங்களா..?” என்றாள்.
“என் வேலையை நானே செஞ்சுக்குவேன் இதுவரைக்கும் அப்படியெல்லாம் பழக்கம் இல்ல..”
“இவ்வளோ வசதியா இருக்கீங்க, இப்படி கஞ்சத்தனமா இருக்கீங்க…”
“இது கஞ்சத்தனம் இல்ல, சுய ஒழுக்கம்…”
சற்றும் யோசிக்காமல் வந்த வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து விழித்தவளை சட்டை செய்யாமல் அவன் சென்று உறங்கிவிட, அதன் பிறகு தான் அவளுக்கு நினைவு வந்தது அவர்களுக்கு இன்று முதலிரவு என்பது.
தன்னை கண்ணே மணியே என்று கொஞ்சுவான், தன் கடைக்கண் பார்வைக்காக தவம் இருப்பான், தனக்காக எதையும் செய்வான், தன் கால்கள் தரையில் படாமல் தாங்குவான் என்றெல்லாம் கற்பனையில் வந்தவளுக்கு, காற்று போன பலூன் போலானது முகம்.
அவளின் அரைவேக்காட்டுத் தோழிகளின் அன்றைய பேச்சுகள் நினைவில் வந்தது. “ஹே காரு, உன்னைத் தேடி வந்து, நீதான் வேணும்னு கட்டிக்க போறாங்க… பாரேன் உன்ன தாங்கு தாங்குன்னு தாங்க போறாங்க… செம காசுபார்ட்டி வேற… இனிமே நீ கால் மேல கால் போட்டுகிட்டு ஜாலியா இருக்கலாம் டி..”
உறங்கும் கதிரவனையே பார்த்துக் கொண்டு இல்லைல்லை, முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே உக்கார்ந்து இருப்ப, லைட்ட ஆப் செய்திட்டு படு…” என்று கண்களைத் திறவாமல், முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் பேசியவனை திடுக்கிட்டுப் பார்த்தவள், ‘இவனுக்கு கண்ணு மூடியிருந்தாலும் பார்வை தெரியுமோ…’ என்று யோசித்துக் கொண்டே, விளக்கை அணைத்துப் படுத்தவளுக்கு இன்று வரை இரவுகள் இப்படித்தான் சென்று கொண்டிருந்தது.