பால்வெளி – 21 

“பிந்து ப்ளீஸ்ங்க … எனக்கு டைம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல கிரவுண்ட்ல அசம்பிள் ஆகணும். ப்ளீஸ்ங்க… ப்ளீஸ்” என தன் அன்பு மனையாளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் கார்த்திக். நெடுந்தொடர் ஒன்றிற்காக அவர்கள் அணி தென் ஆப்ரிக்காவில் இருந்தது. 

அவள் பிறந்தநாளின் போது கிடைந்த நெருக்கம் அதன் பிறகு இருவருக்கும் வாய்க்கவே இல்லை. அவனுக்கு நேரம் கிட்டிய போதெல்லாம், பிருந்தா தன் ஆராய்சிகளின் முக்கிய கட்டத்தில் இருந்தாள். 

அவளுக்கு கிடைக்கும் ஓரிரு விடுமுறைகளில் அவன் தன் தொடர்களில் மூழ்கி இருந்தான். ஆனாலும் கிடைக்கும் சொற்ப நேரங்களில் இருவரும் அலைபேசியில் தங்கள் காதலை வளர்ந்துக் கொண்டிருந்தனர். 

இன்றைக்கு அவன் போட்டிக்கு போகும் முன், வழக்கம் போல அவளிடம் அலைபேசியில் காணொளி காட்சியின் வழியே பேசிக் கொண்டிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் இதே போல காணொளி காட்சியில் அவனிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவளின் பெரிய மாமன் மகன் புகழ் அரசுப் பணியில் இணைந்திருப்பதை குறிப்பிட விரும்பியவள், “புகழ் மச்சான் க்ரூப் 1  எக்ஸாம் கிராக் செஞ்சி கார்ப்ரேசன் கமிஷனர் போஸ்ட் வாங்கி இருக்கார். அம்மா பேசும் போது சொன்னாங்க.’’ என தெரிவிக்க, அவளை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். 

அவன் பார்வையின் அர்த்தம் புரியாதவள், “என்ன?’’ என்றாள். “இல்ல நீங்க புகழை என்ன சொன்னீங்க?’’ என்றான். “புகழை என்ன சொன்னேன். கார்பரேசன் கமிஷ்னர்னு சொன்னேன்.’’ என்றாள் பிருந்தா குழப்பமாய். 

“அது இல்லைங்க. அவரை ஏதோ முறை சொல்லி கூப்டீங்களே.’’ எனவும், “பெரிய மாமா பையன். எனக்கு மச்சான். மச்சானை பேர் சொல்லி கூப்பிட்டா அம்மா திட்டுவாங்க.’’ என்றாள். 

“நானும் உங்க மாமா பையன் தானே. என்னையும் மச்சான்னு கூப்பிடுங்க.’’ என்றான் ஆர்வமாய். அதுவரை இயல்பாய் இருந்த பிருந்தாவின் முகம் உடனே வெட்கத்தில் சிவக்க, “அதெல்லாம் உடனே வராது.’’ என்றாள் பார்வையை அவன் முகத்தில் பதிக்காமல். 

“ஏங்க வெட்கப்படுறீங்களா என்ன..? உங்க பேஸ் செமையா பிளஸ் ஆகுது. பிந்து என்னைப் பாருங்களேன்.’’ என்று அவன் கெஞ்சலில் இறங்க, “பேசி பேசியே என்னை ஒரு வழி பண்றீங்க. பாய். லேப்க்கு போகணும்.’’ என்றதோடு அன்றைக்கு அலைபேசியை துண்டித்து இருந்தாள். 

அது தொடங்கி இரு நாட்களாக பேசும் போதெல்லாம், தன்னை மச்சான் என அழைக்க சொல்லி கெஞ்சிக் கொண்டு இருக்கிறான் கார்த்திக். அவன் ஆசையை நிறைவேற்றாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருகிறாள் பிருந்தா. 

அவனை எப்படி சமாளிப்பது என புரியாது பார்த்தவள், “சரி இந்த டெஸ்ட் மேட்ச்ல நீங்க ஜெயிச்சா உங்களை மச்சான்னு கூப்பிடுறேன்.’’ என்றாள். உடனே முகம் ஏமாற்றத்தில் சுருங்க, “அடப் போங்க இது என்ன ஒன் டே மேட்சா. டெஸ்ட் மேட்ச். முடிய அஞ்சி நாள் ஆகும். ஆனாலும் நீங்க என்ன ரொம்ப காயப்போடுறீங்க பிந்து.’’ என்றான் சலித்தபடி. 

“ஓ… அப்படியா… அப்போ அடுத்த மாசம் பெங்களூர் வரும் போது லீவ் போட சொல்லி இருந்தீங்க இல்ல. அதை வேணா கேன்சல் செஞ்சிடட்டுமா.’’ என அவனை போலியாய் மிரட்டினாள் பிந்து. 

“அச்சச்சோ… அதை நினச்சி தான் நாளை கடத்திட்டு இருக்கேன். இப்படி என் கனவுல மண்ணை அள்ளிப் போட பாக்குறீங்களே. இப்ப என்ன நீங்க என்னை மச்சான்னு கூப்பிட மாட்டீங்க அவ்ளோ தானே. ரைட்டு. நான் கிரவுண்டுக்கு கிளம்புறேன்.’’ என்றான். 

உடனே பிருந்தாவின் இதழில் அழகிய புன்னகை மலர, அதை அலைபேசியின் தொடு திரை வழி ரசித்தவன், “பாய் மிசஸ் கார்த்திக்.’’ என்றபடி அழைப்பை துண்டித்தான். கார்த்திக் எப்போதாவது தான் பிந்துவை, ‘மிசஸ் கார்த்திக்’ என அழைப்பான். 

அப்படி அழைக்கும் நேரங்களில், அவன் அவளை மிகவும் தேடுகிறான் என்பதை பிருந்தா புரிந்து கொள்ள தொடங்கி இருந்தாள். அவன் அழைப்பை துண்டிக்கவும், தன் குடியிருப்பில் இருந்த வர்ண தொலைக்காட்சியை உயிர்பித்து. அதில் விளையாட்டு பிரிவை வைத்தாள். 

அத்தனை நேரம் அவளிடம் கண்களில் காதல் பிரதிபலிக்க, விளையாடிக் கொண்டிருந்தவன், போருக்கு புறப்படும் ஸ்பார்ட்டா வீரனை போல நிமிர்ந்த நடையுடன் மைதானத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தான். 

அவன் வலது கரத்தை அவனை போல ஜெர்சி உடை அணிந்திருந்த குட்டிப் பெண் ஒருத்தி பற்றி இருந்தாள். இருநாட்டு வீரர்களும் எதிரெதிராக கூடினர். அவர்களுக்கு முன்னால் அவர்களை போல உடையணிந்த சிறுவர் சிறுமியர் நின்றிருந்தனர். 

முதலில் தென் ஆப்ரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட, பிருந்தா தானும் எழுந்து நின்றாள். தேசிய கீதம் முடிந்தவுடன், இரு நாட்டு கேப்டன்கள் தவிர மற்ற வீரர்கள் தாங்கள் அமருமிடம் நோக்கி நகர, கார்த்திக் தன் கை பிடித்து அழைத்து வந்த பெண் குழந்தையிடம் குனிந்து புன்னகையோடு ஏதோ பேசியபடி அழைத்து சென்றான். 

அந்த காட்சி காண்பதற்கு கவிதை போல இருந்தது. வருங்காலத்தில் தங்கள் குழந்தையை கூட அவன் இப்படித் தான் கொஞ்ச கூடும் என்ற எண்ணமே பிருந்தாவின் உடலெங்கும் ஒரு  இன்ப அலையை பரப்பியது. 

கிரிக்கெட் என்ற விளையாட்டின் அகராதி கூட அறியாதவள், இப்போதெல்லாம் கார்த்திக் விளையாடுகிறான் என்றாலே அந்த போட்டியை தவறவிடுவதில்லை. முழு போட்டியும் காண முடியாவிட்டால் கூட அவன் விளையாடும் பகுதிகளை இணைய வழி கண்டுவிடுவாள். 

‘ரொம்ப மாத்திட்ட மேன் நீ என்னை.’ என்று தனக்குள் புலம்பியவள், கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட்டை வாஞ்சையுடன் வருடினாள். “ஐ டூ மிஸ் யூ கார்த்திக்’’ என்று அந்த ப்ரேஸ்லெட்டை பார்த்து சொன்னவள், அதன் மேல் மெலிதாக முத்தமிட, கார்த்திக் தன் கன்னத்தில் பதிந்த குழந்தையின் ஈர உதடுகளை துடைத்து கொண்டு நிமிர்ந்தான். 

“டாஸ் நாம தான் ஜெயிச்சி இருக்கோம். கேப்டன் பஸ்ட் பேட்டிங் செலக்ட் செஞ்சி இருக்கார். சீக்கிரம் ரெடி ஆகலாம் வா.’’ என்று சக வீரன் அழைக்க, “எப்பவுமே கார்த்திக் ரெடி தான்.’’ என்றபடி தன் சீனியரை தொடர்ந்து உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தான்.  

  

“இப்போ எதுக்கு சும்மா மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க நீ.’’ என்று மித்ராவிடம் குரல் உயர்த்தி கொண்டிருந்தான் திரு. அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் பொருட்களை பைக்குள் அடைத்து கொண்டிருந்தாள் மித்து. 

“இப்போ பேசப் போறியா இல்லையா நீ?’’ என்று அவள் முன் வந்து நின்றான் திரு. “உங்களுக்கு மனசுல எந்த பீலிங்க்ஸ்ம் இல்ல அத்தான். அதான் நல்லா தெரியுதே. எங்க அப்பா சாயங்காலம் வந்து கூட்டிட்டு போக போறாங்க. ஸ்டடீஸ் முடிஞ்சது. அடுத்து கல்யாணம், அது இதுன்னு எங்க அம்மா வேற என்னை கடுப்பேத்திட்டு இருக்காங்க. உங்களுக்கு கொஞ்சமாச்சும் கவலை இருக்கா. நீ இருந்தா எனக்கு என்ன, இல்லைன்னா எனக்கு என்னன்னு உங்க வேலையை பார்த்துட்டு இருக்கீங்க.’’ என்றபோது அவள் குரல் லேசகா கரகரத்து விட்டிருந்தது. 

அவள் கரங்களை தனக்குள் எடுத்துக் கொண்டவன், “ஏய் லூசு. இப்போ எதுக்கு நீ இவ்ளோ எமோசனல் ஆகிட்டு இருக்க. உன்னோட பைனல் எக்ஸாம் முடிஞ்சி ஒன் வீக் ஆகிப் போச்சு. அவங்களுக்கும் உன்ன தேடும் இல்ல. கொஞ்ச நாள் டாட்ஸ் லிட்டில் பிரின்சஸா உங்க வீட்டை ரெண்டு பண்ணு. அவங்களே நீ செய்ய போற டார்ச்சர்ல என் பொண்ணை பிடிப்பான்னு உன்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு ஓடிருவாங்க.’’ என்றான் குறும்பாய். 

அவன் கரங்களில் இருந்து தன் கரத்தை உருவிக் கொண்டவள், “அப்போ கடைசி வரை நீங்க என்னை பொண்ணு கேக்கப் போறதில்லை. அப்படித் தானே அத்தான்.’’ என்றாள் வருத்தமாய். 

அத்தனை நேரம் குறும்பில் விரிந்திருந்த அவன் முகம் உடனே இறுகியது. ஒருமுறை அவரிடம் பெண் கேட்டு தான் அவமானப்பட்டது இன்னும் அவன் நெஞ்சில் பசுமையாய் இருந்தது. அதோடு அவர் வழிய வந்து கேட்ட போது, சூழல் காரணமாய் தான் மறுக்க நேர்ந்ததும் நினைவில் உலா வந்தது. 

மித்து அவனையே கேள்விக் குறியாய் பார்த்துக் கொண்டிருக்க, “மித்து. நீ கொஞ்ச நாள் அமைதியா இரு. நான் வீட்ல பேசி எங்க அம்மாவை பொண்ணு கேக்க சொல்றேன். எனக்கு மாமாகிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு.’’ என்றான். 

“என்னை விட உங்களுக்கு உங்க ஈகோ தானே பெருசா இருக்கு. எனக்காக யாரும் பேச வேண்டாம். நானே அப்பாகிட்ட பேசுறேன்.’’ என்றவள் கையில் வைத்திருந்த பொருட்களை வீசி விட்டு, அருகிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். 

முழங்கால்களில் முகம் புதைத்து அடம் பிடிக்கும் சிறுமியாய் அமர்ந்திருந்தவளை கண்டவனின் நெஞ்சம் நெகிழ, “அடியே பொண்டாட்டி.’’ என்றான். மித்து அவன் உதிர்த்த வார்த்தைகளில் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

“நீ எவ்ளோ தூரம் போனாலும், இங்க தாண்டி இருக்க போற. இப்போ எதுக்கு எண்ணையில போட்ட கடுகு மாதிரி குதிச்சிட்டு இருக்க.’’ என்றான் தன் நெஞ்சை தொட்டு காட்டி. அவன் அவள் அருகில் முட்டி போட்டு அமர்ந்திருக்க, பாய்ந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள், “உங்களை விட்டுட்டு போகணும்னு நினச்சாலே கஷ்டமா இருக்கு.’’ என்றாள் அழுகை குரலில். 

ஆம் கடந்த ஆறு மாதமாக இருவரும் ஒரே வீட்டில் உள்ளத்தால் இணைந்து இணையர் போல வாழ்ந்து பழகி இருந்தனர். காலை தேநீர் துவங்கி, இரவு தோட்டத்து உலாவல் முடித்து தனி தனி அறை புகும் வரை இருவரின் நேரமும் ஒரே நேர் கோட்டில் தான் பயணிக்கும். 

தன் காதலை பகிர்ந்த முதல் நாள் தவிர்த்து திரு அவளிடம் கண்ணியத்தை கடை பிடித்தான். மித்து எப்போதாவது அவனை அளவிற்கு அதிகமாக சீண்டினால் தன் தாபத்தை எல்லாம் பிரதிபலிக்கும் வகையில் அழுத்தமாய் கன்னத்தில் கடித்து வைப்பான். 

அதோடு மித்து தன் விளையாட்டுகளை  கைவிட்டு விடுவாள். காலை தேநீர் அவன் தான் அவளுக்கு போட்டு தருவான். பின் இருவரும் கரங்களை கோர்த்து கொண்டு, நாட்டு நடப்பு முதல் தங்கள் வீட்டு நடப்பு வரை பேசியபடி தோட்டத்தில் உலா வருவர். 

அதன் பிறகு திரு தன் அலுவலகத்திற்கும், மித்து தன் கல்லூரிக்கும் கிளம்பி செல்வாள். இரவு உணவை அவன் தான் மித்துவிற்கு ஊட்டி விடுவான். அதில் மட்டும் மித்து எவ்வித சமரச உடன்படிக்கையும் செய்து கொள்ள மாட்டாள். 

இரவு அவன் மடிக்கணினியில் ஏதேனும் வேலை பார்க்க, மித்து அவன் தோள் சாய்ந்து தன் பாடங்களை படித்துக் கொண்டிருப்பாள். இரவு உணவிற்கு பின் அவன் உச்சந் தலையில் அழுத்தி கொடுக்கும் முத்தத்தை பெற்ற பின்னே உறங்க செல்வாள். 

இப்படி அன்றில் போல் இணைந்தே இருந்தவளுக்கு திடீரென இந்த வீட்டில் நீ உடமைக்காரி இல்லை உறவுக்காரி என்று சொல்லாமல் சொல்வதை போல தேர்வுகள் முடிந்ததும் அடுத்த நாளே மதுரா மகளை கிளம்பி, சேலத்திற்கு வர சொன்னார். 

மித்து தான் தன்னுடையே தீசிஸ் வேலைகளை முடித்துவிட்டு வருவதாக  நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். மதுராவின் மனதில் என்ன தோன்றியதோ, இரு நாட்களுக்கு முன் மகளுக்கு அழைத்து, “இன்னும் ரெண்டு நாள்ல நானும் அப்பாவும் சிதம்பரம் வறோம். உன் திங்க்ஸ் எல்லாம் பேக் செஞ்சி ரெடியா இரு. இதுக்கு மேல எந்த தீசிஸ் வேலையா இருந்தாலும் அதை வீட்ல வந்து பாரு.’’ என்று கண்டிப்பாய் உத்தரவிட்டு தான் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்பதை தன் மகளுக்கு நிரூபித்தார்.