அத்தியாயம் – 51

கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, கணவனின் தோள் மீது சாய்ந்து,”தூக்கமா வருது இன்னும் எத்தனை தூரம்?” என்று கேட்டாள் சினேகா.

அவனது கைப்பேசியில் கூகில் மேப்பை பார்த்துக் கொண்டிருந்தவன்,”வந்திடுச்சு..அஞ்சு நிமிஷம்னு மேப் சொல்லுது.” என்றான் ஷண்முகம்.

“அப்போ அரைமணி நேரமாகும்.” என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

விமான நிலையத்திற்கு கார் அனுப்ப மதன் முன்வந்த போது வேண்டவே வேண்டாமென்று மறுத்து விட்டான். ‘எதுக்கு வேணாம்னு சொல்லிட்டீங்க..அவங்க வண்டியே வந்தா நமக்கு நல்லது தானே..பிரச்சனையில்லாம போய் இறங்கலாம்.’ என்று சினேகா சொன்னவுடன்,’குந்தாபூர் வேற பெங்களூர் வேற..சிட்டிலே ஊபர், ஓலா டாக்ஸி வசதி இருக்கு..கூகில் மேப் இருக்கு..அவர் ஒரு மரியாதைக்காக கேட்கறார்..வேணாம்னு சொல்றது தான் நமக்கு மரியாதை.’ என்று சொன்னவனுக்குத் தெரியவில்லை வசந்தி விஷயத்தில் மதனின் உதவியைத் தான் நாடப் போகிறானென்று. 

ஏனோ சினேகாவினால் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆள்களுக்கு ஏற்றார் போல் மூகமுடி அணிவது, பல விதமாக நடந்து கொள்வது அவரது வேலைக்கான தேவையாக இருக்கலாம். ஆனால் அந்த வழக்கத்தை மதன் அவருடைய வாழ்க்கையிலும் பின்பற்றுபவர் போல் அவளுக்குத் தோன்றவில்லை. குந்தாபூரில் ஒரு நாளும் அவர்களை விருந்தாளியாக யாரும் நடத்தவேயில்லை. அந்த வீட்டை அவர்களின் வீடு போல் தான் உணர்ந்தார்கள். அங்கே வேலை செய்த அனைவரும் அவர்களை உணர வைத்தார்கள். எனவே, வண்டி வேண்டாமென்று சொன்னதற்கு காரணம் உயரதிகாரியான மதனை ஓர் எல்லையில் நிறுத்த நினைக்கிறான் கணவன் என்று அவளுக்குத் தோன்றியது சினேகாவிற்கு. அது சரியான கணிப்பும் கூட. காசியப்பனின் விஷயத்தில் மதனின் உதவியை நாடியிருந்ததால் அவர்கள் உறவை முடிந்தளவிற்கு ஓர் எல்லையில் வைக்க நினைத்து தான் வண்டியை மறுத்திருந்தான் ஷண்முகவேல்.

வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த பலமாடிக் கட்டிட வளாகத்தினுள் நுழைந்தது அவர்களின் டாக்ஸி. செக்யுரிட்டியில் மதனின் ஃபிளாட் எண்ணைச் சொன்னவுடன் விசாரணையை சுருக்கமாக முடித்துக் கொண்டு உள்ளே சென்றது வண்டி. அங்கே அவர்களின் பிளாக் வாயிலில் இவர்களுக்காக காத்திருந்தார் மதன், சாதாரண டீ ஷர்ட், டிராக் பேண்ட்டில் இருந்தவரை சட்டென்று அடையாளம் கண்டு கொண்டாள் சினேகா. பிரகதி மைதானத்தில் பிகாஸ் கடை வாசலில் அவரைப். பார்த்திருக்கிறாள். ‘ஓ..அன்னைக்கு இவரும் அங்கே இருந்தாரில்லே..அதான் இவங்க கண்ணாலே எச்சரிக்கை செய்தாங்க..அன்னைக்கு தானே இவங்க பெண் கேட்டு வீட்டுக்கு வந்தாங்க.’ என்று அன்றைய தினத்தை மனத்தில் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சினேகா.

சினேகாவைப் பார்த்ததும் மதனின் மூளையும் அவளை எங்கே பார்த்திருக்கிறோமென்ற தேடலில் இறங்கியது. ஆனால் வெகு சில நிமிடங்களுக்கு அவளைப் பார்த்திருந்ததால், அதுவும் அன்றைக்கு மைதனாத்தில் பல முகங்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்ததால் அவரால் சரியாக முகத்தையும் இடத்தையும் பொருத்த முடியவில்லை. 

வண்டியிலிருந்து இறங்கியதும்,”ஸர்..என்னோட வைஃப் சினேகலதா.” என்று மதனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் ஷண்முகம். 

”மேம், கன்கரசுலேஷன்ஸ்.” என்று சினேகாவிற்கு வாழ்த்து தெரிவித்தார் மதன்.

“தாங்க்ஸ் ஸர்.. கடல், நதி, மலை, காடுன்னு உங்க வீடு அகிலம், உண்மையாவே அகிலம் தான்.” என்றாள் சினேகா.

“எங்கம்மாவோட பெயர் அகிலா..அவங்க இப்போ இந்த உலகத்திலே இல்லைன்னாலும் அங்கே போனோம்னா அவங்களையும் உணர்வோம்..நீங்க சொல்ற மாதிரி எங்களுக்கு அந்த வீடு அகிலம் தான்.” என்றார் மதன்.

சினேகாவும் மதனும் பேசிக் கொண்டிருந்த போது டாக்ஸியிலிருந்து அவர்களின் பெட்டிகளை வெளியே எடுத்தான் ஷண்முகம். உடனே ஃபாயரில் இருந்து ஓர் ஆள் அந்தப் பெட்டிகளைத் தூக்கிச் செல்ல வர, அவனிடம்,”அண்ணன் வீட்டுக்கு எடுத்திட்டுப் போங்க.” என்றார் மதன்.

மிகப் பெரிதாக இருந்தது அந்த ஃபாயர். சர்வீஸ் லிஃப்ட் இரண்டு. அங்கே வசிப்பவர்களுக்காக நான்கு என்று ஆறு மின் தூக்கிகள் இருந்தன. ஒரு பக்கம் பெரிய திரையில் அன்றைக்கு நடக்க இருக்கும் மெய்ண்டனேன்ஸ் வேலை பற்றி தகவல் வந்து கொண்டிருந்தது. இடையிடையே எந்தப் பில் எப்போது டியு என்ற தகவல், குடியிருப்போர் சங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்று பெரிய திரை பிஸியாக இருந்தது. இதுவரை இதுபோன்ற குடியிருப்பிற்கு சென்றதில்லை சினேகா. அனைத்தையும் ஆச்சரியத்துடன் அவள் பார்த்துக் கொண்டிருக்க மதனோடு அவனின் அடுத்தகட்ட பயணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான் ஷண்முகம்.

மின் தூக்கியில் ஏறி ஆறாவது தளத்தை அவர்கள் அடைந்த போது வேறொரு மின் தூக்கி மூலமாக அவர்களின் பெட்டிகளும் அந்தத் தளத்தை அடைந்திருந்தன. அதை ஒரு ஃபிளாட்டின் வாசலில் வைத்து விட்டு அந்த நபர் செல்ல, பேண்ட் பேக்கெட்டிலிருந்து கீ கார்ட்டை எடுத்து மதன் காட்ட, கதவு திறந்து கொண்டது. 

“மேம்..நீங்க” என்று சினேகாவை முதலில் உள்ளே அனுப்பினார் மதன். அவளைத் தொடர்ந்து பெட்டியோடு ஷண்முகம் வர, கடைசியில் வந்த மதன் கதவை அடைத்த போது சிறுவன் ஒருவன் சோஃபாவில் அமர்ந்து, மடிமீதிருந்த புத்தகத்தில் எதையோ வரைந்து கொண்டிருந்தான். இவர்கள் மூவரும் வீட்டினுள் நுழைந்த போது தலையைக் கூட உயர்த்தவில்லை. தீவிரமாக அவனது வேலையைச் செய்து கொண்டிருந்தான். 

”சுதன்” என்று மதன் அழைக்க, சட்டென்று எழுந்து வந்தவன், நேரே சினேகாவிடம் வந்து,”வெல்கம் டூ அவர் ஹவுஸ்.” என்று தட்டுத் தடுமாறி, திக்கி திக்கி ஒரு வழியாக வரவேற்று முடித்தான்.

ஒரு நொடி சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அடுத்த நொடி அவளிடம் பேசிக் கொண்டிருக்க, அவன் வார்த்தைகளைக் கோக்க எடுத்துக் கொண்ட நொடிகளில் எத்தனை முயன்றும் சினேகாவினால் அவளைச் சுதாரித்துக் கொண்டு பதில் அளிக்க முடியவில்லை. அவளது பதிலை எதிர்பார்க்காமல், அவளருகே நின்றிருந்த ஷண்முகத்திடம்,”ககக..கன்..கன்கிராட்ஸ்” என்று சில முயற்சிகளுக்குப் பின் அவனது வாழ்த்தை தெரிவித்தான். சிறுவனின் முகத்தில் லேசாகப் பயம், தயக்கம், வெட்கம், புன்னகை என்று பல உணர்வுகள் வந்து போக,”தாங்க்ஸ் சாம்ப்.” என்றான் ஷண்முகம்.

என்னுடைய வேலை முடிந்தது என்ற பாணியில் மீண்டும் சேஃபாவுக்கு சென்று அவனது வேலையைத் தொடர்ந்தான் அந்தச் சிறுவனின். சிறுவனின் நடவடிக்கை அவனது வயதொத்த சிறுவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தாலும் சினேகா, ஷண்முகம் இருவரும் அவர்கள் கண்டுகொண்டதை வெளிப்படுத்தவில்லை.

“அது சுதன்..என்னோட அண்ணன் பையன்..இவனுக்கு ஆட்டிஸம் (autism) திக்கி திக்கி தான் பேசுவான்..பேச ஆரம்பிச்சா நிறுத்த முடியாது..சோஷியல் ஸ்கில் நம்மளைப் போல கிடையாது..வீட்டுக்கு விருந்தாளிங்க வராங்கண்ணா அவனைக் கொஞ்சம் ப்ரிபேர் செய்யணும்..நீங்க வரப் போறீங்கண்ணு உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லி வைச்சேன்..அப்படி செய்தா தான் அவனுக்கு சௌகர்யமா இருக்கும்..அண்ணனும் அண்ணியும் க்ளினிக்லேர்ந்து கொஞ்ச நேரத்திலே வந்திடுவாங்க..’லன்ச் நான் தான் ஹோஸ்ட் செய்வேன்னு’ என்னோட அண்ணி ரொம்ப பிடிவாதம் செய்தாங்க..நீங்க இரண்டு பேரும் சுதனோட கம்பஃர்டபிலா இல்லைன்னா என் வீட்டுக்குப் போயிடலாம்..சாப்பாட்டை அங்கே அனுப்பி வைக்கறேன்னு சொன்னாங்க.” என்று அவர் சொன்னவுடன், ஷண்முகம், சினேகா இருவரும்,”நோ..எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்றனர்.

“தாங்க்ஸ்..இது அண்ணனோட ஃபிளாட்..இதுக்கு மேலே ஏழாவது மாடிலே தான் என்னோட ஃபிளாட் இருக்கு..தூக்கம் மட்டும் அங்கே..மற்றதெல்லாம் எனக்கு இங்கே தான்..இன்னைக்கு இவனோட ஸ்கூல்லே ஏதோ ஃபங்ஷன்..அதனாலே வீட்லே இருக்கான்..எனக்கு கம்பெனி கொடுக்கறான்.” என்றார்.

சுதனையே சுற்றி வந்தது சினேகாவின் பார்வை. அவனோடு பொழுதைக் கழிப்பது பிரச்சனை இல்லை என்று சொல்லி விட்டாலும் எத்தனை முயன்றும் அவளது ஆராய்ச்சியை அவளால் கைவிட முடியவில்லை. ஷண்முகம், மதன் இருவரும் சோஃபாவில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க அவளது கவனம் முழுவதும் சுதனிடம் தான். அவனுக்கு அடுத்து இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த சினேகா, அப்படி எதை அவன் தீவிரமாக வரைந்து கொண்டிருக்கிறான் என்று அறிர்ந்து கொள்ள ஆர்வமானாள். இதே சாதாரணமான பிள்ளையாக இருந்திருந்தால் அவனருகே அதே சோஃபாவில் அமர்ந்து, என்ன, ஏதுயென்று விசாரித்திருப்பாள். அவனருகே அவள் சென்றால் அவனது எதிர்வினை எப்படி இருக்குமென்று பயம் இருந்ததால் அவளது ஆர்வத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். 

சில நொடிகள் கழித்து,”பெட்டியை மேலே என் வீட்லே வைச்சிடலாமா?” என்று ஷண்முகத்திடம் மதன் கேட்க, சினேகாவிடம் பார்வையால் அந்த கேள்விக்கான பதிலை ஷண்முகம் கேட்க, அவளது கவனம் சிறுவனிடம் இருந்ததால்,”சினேகா” என்று அவன் அழைக்க,”என்ன?” என்று அவள் கேட்க,

அதற்கு,“மேம், மேலே என் வீட்லே இந்த லக்கேஜை வைச்சிடலாமா?..நீங்க கிளம்பறத்துக்கு முன்னாடி ஃப்ரெஷ்ஷாக வசதியா இருக்கும்.” என்றார் மதன்.

உடனே,”இல்லை..லன்ச் முடிஞ்சதும் கிளம்பிடுவோமில்லே..பெட்டிலேர்ந்து எதுவும் எனக்குத் தேவைப்படாது.” என்ற சினேகா சொல்ல,

“அப்போ இங்கேயே வைச்சிடுங்க ஸர்..எதுக்கு மேலே கீழன்னு பெட்டியை எடுத்திட்டு அலையணும்.”” என்றான் ஷண்முகம்.

“எதுக்கு லன்ச் முடிஞ்சதும் கிளம்பற..இராத்திரி தானே ஃபிளைட்..இன்னும் கொஞ்ச நேரம் எங்க கூட ஸ்பெண்ட் பண்ணலாம்.” என்றார் மதன்.

“இல்லை சர்..என்னோட கஸின் ஸிஸ்டர் இங்கே பக்கத்திலே தான் அவங்க ஸிஸ்டர் இன் லா வீட்லே இருக்காங்க..ஹெல்த் இஷ்யூஸ்னாலே அவங்களாலே என் கல்யாணத்துக்கு வரமுடியலை..அவங்களோட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணிட்டு ஏன்போர்ட் போனா டிராஃபிக்லே மாட்டாம ஃபிளைட்டுக்குச் சரியா இருக்கும்.” என்றான் ஷண்முகம்.

“ஓ..எந்த ஏரியா?” என்று விசாரித்தார் மதன்.

அவனது அம்மாவிடமிருந்து வந்திருந்த முகவரியை அவருடன் பகிர்ந்து கொண்டான் ஷண்முகம். 

வெங்கடேஷ் மாமாவின் தங்கை வீட்டு முகவரியை பெரியப்பாவிடம் கேட்கலாமென்று தான் எண்ணியிருந்தான். ஆனால் கடைசி நொடியில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு,’அம்மா, வசந்தி அக்கா பெங்களூர் அட்ரெஸ் வேணும்..மாமா, பிரகாஷ் இல்லை ஜெயந்தி அக்கா, மூணு பேர்லே யார்கிட்டே இருக்கும்னு சொல்லுங்க.’ என்று விஜயாவிடம் கேட்க,”யார்கிட்டேயும் நீ கேட்க வேணாம்..நானே தேடிப் பார்க்கறேன் சாமி..என்னோட பை இங்கே அண்ணன் வீட்லே தானே இருக்குது..அதிலே இருக்கணும்..முக்கியமான உறவுக்காரங்களுக்கு  சிந்து கல்யாணப் பத்திரிக்கையை கூரியர் மூலம் அனுப்பி வைக்க நான் தான் ஒரு லிஸ்ட் போட்டேன்..அந்த நோட்லே அவங்க முகவரி இருக்கும்.’ என்று அவரது நோட்டு புத்தகத்திலிருந்ததை மகனுக்கு வீடியோவில் காட்ட அதைப் படம் பிடித்துக் கொண்டான் ஷண்முகம். 

அதைப் படித்தவர்,“பக்கத்திலே தான்..கால்மணி நேரத்திலே போயிடலாம்..அந்த ஏரியாலே டெக் பார்க் இரண்டு, மூணு இருக்கு..ஐடிலே வர்க் பணறவங்க தான் அங்கே குடியிருக்காங்க..இங்கேயும் சில பேர் இருக்காங்க..ஆனா பெங்களூர்லே டிராஃபிக்லே பிஸி அவர்ஸ்லே கால்மணி நேரப் பயணம் கூட ஒருமணி நேரம் ஆகிடும் அதனாலே முக்கால்வாசி பேர் வேலை செய்யற இடத்துக்குப் பக்கத்திலே தான் வீடு பார்த்துக்கறாங்க..என்னோட அண்ணன் க்ளினிக் பக்கத்திலே தான் இருக்கு..பத்து நிமிஷம்..சுதனோட ஸ்கூல் நடந்து போகற தூரம் தான்..

அண்ணன், அண்ணி இரண்டு பேரும் சோஷியல் டைப்..சுதன்னாலே அவங்க வாழ்க்கை முறைலே நிறைய மாற்றங்கள் வந்திடுச்சு..அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வர்றது ரொம்ப அபூர்வம்..அவங்களும் யார் வீட்டுக்கும் போகறதில்லை..உங்க இரண்டு பேரையும் என் வீட்டுக்குக் கூப்பிட்டு இருக்கேன்னு சொன்னதும் அண்ணிக்கு ஒரே கோபம்..

‘நீயே உன் வீட்லே தங்கி கிட்டதட்ட எட்டு மாசம் ஆகப் போகுது..இந்த மாதிரி உனக்கு அடிப்படலைன்னா இந்த வருஷம் முழுக்க இந்தப் பக்கமே வந்திருக்க மாட்ட..உன்னையும் அங்கே தங்க வேணாம்னு தான் சொன்னேன்..நீ கேட்கலை..இப்போ உன்னோட வீட்டுக்கு விருந்தாளிங்களைக் கூப்பிட்டு இருக்க..ஒரு ஜோடிக்கு விருந்து செய்து போட முடியாதா என்னாலே?’நு சண்டைக்கு வந்திட்டாங்க..சரி..உங்க இஷ்டம்னு சொன்னேன்..அதுக்கு ‘சுதன்கிட்டே அவங்களைப் பற்றி சொல்லிடு அவங்ககிட்டேயும் சுதனைப் பற்றி சொல்லிடு..எல்லோரும் கம்ஃபர்டபிலா இருக்கணும்னு’ சொன்னாங்க.

சுதன் ஓகே தான்னு தோணிச்சு அதான் உங்களை நேரே அண்ணன் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்..

பார்த்தவங்களையே பார்த்துக்கிட்டு செய்தததையே திரும்ப செய்துகிட்டுன்னு அண்ணன், அண்ணியோட தினசரி வாழ்க்கை ஒரு ரோட்டினை பின்பற்றி தான் நடக்கும்..அதை மாற்றினா சுதனுக்குக் கஷ்டமாகிடும்..புது இடம், புது ஆள்கள், அடவன்சர் பயணங்கள்னு புதுசை முயற்சி செய்து பார்க்க அவங்க இரண்டு பேருக்கும் ரொம்ப பிடிக்கும்..அது தான் அவங்க இரண்டு பேரையும் ஜோடி சேர்த்து வைச்சது..இப்போ அந்த மாதிரி எங்கேயும் போகறதில்லை, எதையும் செய்யறதில்லை..ஒருத்தர் வெளியே போனா இன்னொருத்தர் கண்டிப்பா வீட்லே இருப்பாங்க..சுதன் வீட்லே இருந்தா யாராவது ஒருத்தர் அவனோட இருக்கறது வழக்கம்..

இன்னைக்கு நான் இருக்கறதுனாலே இரண்டு பேரும் க்ளினிக் போயிட்டாங்க..விருந்துக்கு தேவையானதையெல்லாம் ஏற்பாடு செய்து வைச்சிட்டு அண்ணி லேட்டாதான் போனாங்க..இப்போ வந்திடுவாங்க…உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்றது அவங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்னு நினைச்சேன்..நேத்துலேர்ந்து நாங்க மூணு பேரும் உங்களோட வருகைக்காக இவனைத் தயார் செய்திட்டு இருக்கோம்..முன்பின்னே தெரியாத ஆள்களை இவனாலே ஹேண்டில் செய்ய முடியாது..ஸ்கூல், க்ளாஸ் ரூம், டீச்சர்ஸ், ஆயா, டிரைவர்ன்னு எல்லோரும் இவனுக்குத் தெரிஞ்சவங்களா இருந்தா தான் இவனுக்கு கம்ஃபர் டபிலா இருக்கும்..புது விஷயத்துக்கு இவனோட எதிர்வினை என்னவா இருக்கும்னு ஒரு பயம் எங்களுக்கு இருந்திட்டே இருக்கும்.”என்று சொன்னவர், சுதனின் புறம் பார்வையைத் திருப்பி,

”இவன் எங்கேயும் வெளியே போகறதில்லை..இவனைப் ப்ரிபேர் செய்து அழைச்சிட்டுப் போகற அளவுக்கு எந்த இடமும் இல்லை..அதாவது கூட்டமில்லாத, இரைச்சல் இல்லாத இடம்..இவனுக்குப் பிடிச்ச இடம் அகிலம் தான்..இவனை அழைச்சிட்டு வீக் எண்ட்லே போயிட்டு வர்றது நடக்காத காரியம்..ஸ்கூல் வெகேஷன் போது தான் அங்கே போயிட்டு வருவாங்க.” என்றார் மதன்.

அவனைப் பற்றி தான் பேசுகிறார்களென்ற பிரக்ஞை இல்லாமல் அவனது வேலையைச் செய்து கொண்டிருந்தான் சுதன்.

மதன் சொன்ன தகவல்களை கோத்து பார்த்த சினேகாவிற்கு மதனின் அண்ணன் குடும்பத்தைப் பற்றி ஒரு வரைபடம் கிடைத்தது. கணவன், மனைவி இருவரும் மருத்துவர்கள். காதலித்து மணம் புரிந்தவர்கள். சொந்தக் க்ளினிக் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஒரே மகன் ஓர் அசாதாரணக் குழந்தை. எத்தனை கற்பனைகளோடு கல்யாண வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார்கள் அது அத்தனையும் இடிந்து இப்படியொரு இடியை எப்படித் தாங்கிக் கொண்டு எப்படி இயல்பாய் வாழ்க்கையை வாழ முடிகிறது என்று ஆச்சரியமானது சினேகாவிற்கு.