நள்ளிரவில் தன் அலைபேசிக்கு வந்த செய்தியில் தன் தூக்கம் தொலைத்து அமர்ந்திருந்தாள் மித்ரா. முதல் முறையாக நட்பு என்ற எல்லை கடந்து, திருவிடமிருந்து வந்த செய்தியை நம்ப இயலாது மறுபடி மறுபடி வாசித்து கொண்டிருந்தாள்.
‘காத்திருந்து அலுத்துவிட்டேன்
கண்மணி – உடைத்து வா நீ உன்
கருப்பு முக மூடி.’
அந்த கண்மணி என்ற ஒற்றை வார்த்தை மித்ராவின் தூக்கத்தை களவாடி இருந்தது. மித்ரா எப்படி கவிதை எழுதி அனுப்பினாலும், திரு நட்பை குறிக்கும் சொல்லாடல் தவிர்த்து வேறு எதையும் அவளிடம் பேசியதில்லை.
முதல் முறையாக கண்மணி என்ற அழைப்பு அவளுள் கலவரத்தை மூட்டி இருந்தது. அப்போது கூட திரு தன்னை அடையாளம் கண்டிருக்க கூடும் என்ற உண்மையை அவன் மீது காதல் கொண்டிருந்த மனம், பொறாமையை தூண்டி திசை திருப்பி இருந்தது.
நீண்ட நேரம் சிந்தனையில் இருந்தவள், அவனின் உள்ளம் அறிய விரும்பி, ஒரு பெண் ஆண் மீது கொள்ளும் கைக் கிளை காதலை ஒரு கவிதையாக வடித்து அனுப்பினாள். அதற்கு திரு என்ன பதில் அனுப்ப இருக்கிறான் என எண்ணி அவள் காத்திருக்க, அவனோ அவள் அனுப்பிய செய்தியை வாசித்த அடுத்த நொடி பதில் செய்தி அனுப்பி இருந்தான்.
“நாம் முதன் முதலாக நேரடியாக சந்தித்துக் கொண்டால் அந்த கணத்தில் நீ எப்படி உணர்வாய்…?’’ என கேள்வியை செய்தியாக்கி அனுப்பி இருந்தான். அவன் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதையே மறந்தவள், அவனை தான் ஒருதலையாய் காதலித்த அந்த நாட்களுக்கே சென்றிருந்தாள்.
உரைநடையில் உணர்வுகளை கொட்டி சில நிமிடங்களில் ஒரு குறுங்காவியம் படைத்தது, அவனுக்கு அலைபேசியில் அனுப்பி வைத்தாள். அதை வாசித்தவனின் நெற்றி ஆச்சர்யத்தில் உயர்ந்தது.
அதற்கு மேல் உரையாடலை வளர்க்க விரும்பாதவன் உறக்கத்தில் விழ, அவனிடமிருந்து ஏதேனும் செய்தி வரும் என காத்திருந்தவள், களைத்து போய் தானும் உறங்கினாள். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால், மித்ராவிற்கு சோம்பலாகவே விடிந்தது.
“குட் மார்னிங் மித்து. எழுந்து சீக்கிரம் குளிச்சிட்டு வா. நாம வெளிய போறோம்.’’ என்று உற்சாகமாய் அவளை எழுப்பிக் கொண்டிருந்தான் திரு. “இன்னைக்கு சண்டே. கொஞ்சம் தூங்கலாம்.’’ என்றவள் புரண்டு படுக்க, அவள் உள்ளங்காலில் திரு கிச்சு கிச்சு மூட்ட கிளுக்கி சிரித்தபடி எழுந்து அமர்ந்தாள் மித்து.
“ரொம்ப கூசுது. காலை விடுங்க.’’ என்றவள் சிரித்து முடித்த போது, அவளின் தூக்கம் முற்றிலும் கலைந்திருந்தது. அவளின் உச்சந்தலையில் தன் வலது உள்ளங்கை வைத்து விளையாட்டாக ஆட்டியவன், “போ… சீக்கிரம் குளிச்சிட்டு வா.’’ என்றான்.
வெண்மை நிறத்தில் முழுக்கை டீ ஷர்ட், மற்றும் வெளிர் ஊதா நிறத்தில் டெனிம் ஜீன்ஸ் அணிந்து இருந்தவன், கல்லூரி மாணவன் போன்ற தோற்றத்தில் இருக்க, மித்து அவனை ரசித்து பார்த்தாள்.
“சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க மேடம். இல்லை நான் தனியா கிளம்பி போயிடுவேன்.’’ என்றதும், “பத்தே நிமிஷம்.’’ என்றவள் குளியலறை நோக்கி ஓடி இருந்தாள். அவளின் துள்ளலை ரசித்தவன், வெகு நாட்களுக்கு பின் தன் ஹெர்லி டேவிட்சனை பயணத்திற்கு தயார் படுத்த கிளம்பினான்.
குளித்து முடித்த மித்ரா, வெள்ளை நிற குர்தாவும், திருவை போலவே வெளிர் நீல நிற ஜீன்சும் அணிந்து வெளியே வந்தாள். திரு அவளை புருவம் உயர்த்தி பார்க்க, அவன் கையில் அழுத்தமாய் கிள்ளியவள், “மேட்சிங் பின்ச். கிவ் மீ ய மன்ச்.’’ என்றாள்.
போலியாக அலறிய திரு, “சாக்லேட் வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க மேடம். எதுக்கு இப்படி கிள்ளி வைக்குறீங்க. என் கையில இருந்த அரைகிலோ சதையை காணோம்.’’ என்றான்.
உதட்டை சுளித்து அவனுக்கு பழிப்பு காட்டியவள், “எங்க போறோம்.’’ என்றாள் வாயிலை நோக்கி நடந்தபடி. “சர்ப்ரைஸ்’’ என்றவன் தன் ஹெர்லி டேவிட்சன் நோக்கி நடக்க, “டூ வீலர்லயா போறோம்.’’ என்றாள் மித்து ஆச்சர்யமாய்.
“மகாராணியார் மகிழுந்தில் மட்டும் தான் வீதி உலா வருவீர்களோ..?’’ என்றான் திரு குரலில் கேலியுடன். அவன் நெற்றி முடியை கலைத்து விளையாடியவள், “மனதிற்கு பிடித்த மன்னவனுடன் மண் குதிரை சவாரி என்றாலும் சரி தான்.’’ என்றாள் மித்து தோரணையாய்.
“அடிப்பாவி… என் டேவிட்சன் உனக்கு மண் குதிரையா?’ என்று அவன் தலையில் லேசாக குட்டினான் திரு. “அச்சோ அத்தான். என் மூளை வழுக்கி மூக்கு வழியா வெளிய வந்துடும் போல. எதுக்கு கொட்றீங்க.’’ என்றவள் தலையை தேய்க்க, மீண்டும் தன் உள்ளங்கை கொண்டு அவள் உச்சந்தலையை வேகமாய் ஆட்டிவிட்டவன், “கிளம்பலாம். டைம் ஆச்சு.’’ என்றுவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான்.
நகரத்தின் பரபரப்பை அரைமணி நேரம் கடந்த பின், மரங்கள் அடர்ந்த கிராமத்திற்குள் அவர்களின் பயணம் தொடர்ந்தது. பேச இயலா மௌனத்தில், மித்து அந்த நொடிகளை ரசித்து கொண்டிருந்தாள்.
செம் மண் சாலைகள் முடிந்து, வாகனம் கரடு முரடான மேட்டில் பயணிக்க, “அத்தான். எங்க போறோம்.’’ என்றாள் மித்து.
“வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரமில்லை. நீ வாராய்’’ என திரு பாட, அவன் முதுகில் விளையாட்டாய் குத்தியவள், “நானும் மந்திர குமாரி படம் பார்த்து இருக்கேன். இப்படியே பாடிட்டு இருந்தீங்க, அந்த ஹீரோயின் மாதிரி நான் உங்களை உருட்டி விட்டுருவேன்.’’ என்றவள் கலகலத்து சிரித்தாள்.
“ஹே நீ ஒரு டூகே கிட் தான. இந்த மாதிரி அதர பழைய படம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?’’ என்றான் திரு ஆச்சர்யமாய். “அதான் எங்க வீட்ல ஒரு சிக்ஸ்டீ கிட் இருந்தாங்களே. எங்க அம்மம்மா. அவங்க பழைய படம், பாட்டு இதெல்லாம் தான் விரும்பி பார்ப்பாங்க. சின்ன வயசுல நான் அதிக நேரம் அவங்க கூட தானே இருப்பேன். அதான் எனக்கும் இதெல்லாம் தெரியும்” என்றாள்.
தன் அம்மா வழிப் பாட்டி பற்றி பேசிய அடுத்த நொடி, திருவின் உடல் இறுகுவதை பின்னால் அமர்ந்திருந்த மித்துவாய் உணர முடிந்தது. அப்போது தான் தன் பாட்டிக்கு எப்போதும் தன் தந்தை வழி உறவினர்களை பிடிக்காது என்பதே மித்துவிற்கு நினைவிற்கு வந்தது.
அதோடு எப்போதும், அவர்களிடம் நீ ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று சதா சர்வ காலமும் தன்னிடம் ஓதிக் கொண்டே இருந்ததும் நினைவிற்கு வர இப்போது ஏன் பாட்டி பற்றிய பேச்சை எடுத்தோம் என்று தன்னை தானே நொந்து கொண்டாள் மித்து.
அதன் பிறகு திரு அமைதியாய் வர, மித்து அவன் முதுகை சுரண்டி, “அத்தான். சாரி அத்தான்.’’ என்றாள். அவள் எதற்கு மன்னிப்பு கேட்கிறாள் என்று உணர்ந்தவனோ, “நடந்த எதையும் மாத்த முடியாது மித்து. மறந்துட முயற்சி செய்றேன்.’’ என்றான்.
குரலில் இருந்த இறுக்கமே, அவனின் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை அசைபோடுகிறான் என்பதை எடுத்தியம்ப, மித்து அதன் பிறகு அந்த மௌனத்திரையை கிழிக்க முற்படவில்லை.
அவர்களின் வாகனம் கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மேலேற, மித்துவால் தன் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. “ஹில் ஸ்டேசனா அத்தான் இது.’’ என தன் கேள்வியால் நெடிய மௌனத்தை உடைத்தாள்.
“சின்ன மலைக் கிராமம்.’’ என்றான் திரு. “எதாச்சும் ட்ரகிங் ப்ளான் செஞ்சி இருக்கீங்களா? முன்னாடியே சொல்லி இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி தயாராகி வந்து இருப்பேன் இல்ல.’’ என்றாள் மித்து.
“கொஞ்ச நேரம் அமைதியா தான் வாங்க என் வாயாடி மேடம்.’’ என்றான் திரு. “பெரிய ஜீ பூம்பா சீனி ரகசியம். போங்க அத்தான். இனி நீங்களா சொல்ற வரை நான் எதுவும் கேட்க போறது இல்லை.’’ என்றவள் மலையின் இருபுறமும் குடைபிடித்துக் கொண்டிருந்த மரங்களை ரசிக்க தொடங்கி இருந்தாள்.
தனக்கு பின்னால் அமர்ந்திருப்பவளின் முகபாவங்களை கணித்த படி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனின் முகம் புன்னகையில் கனிந்திருந்தது. ஏறத்தாழ இரண்டு மணி நேர பயணத்தின் முடிவில், அகமலை என்ற அந்த சிறிய மலைக் கிராமத்தை வந்தடைந்திருந்தனர் இருவரும்.
தன் முன்னிருந்த பெயர்ப்பலகையின் மூலம் தாங்கள் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியின் வாயிலில் நிற்கிறோம் என்பதை மித்து அறிந்து கொண்டாள். இவர்கள் சென்று இறங்கியதும், ஏற்கனவே அங்கு வந்து காத்திருந்த சில இளைஞர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.
அனைவரின் வயதும் பின் இருபதுகளில் இருக்கலாம். ஆண், பெண் இருவரும் சம அளவில் குழுவில் இருந்தனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில், மலைக் கிராம பள்ளிக் கூட வாயிலில் நமக்கு என்ன வேலை என மித்து குழம்பிக் கொண்டிருக்கும் போதே, அந்த இளைஞர்கள் தங்கள் வாகனத்தில் வைத்து கொண்டு வந்திருந்த பதாகைகளை எடுத்து அருகிருந்த மரங்களில் கட்ட தொடங்கினர்.
“மித்து, நீ அவங்களோட சேர்ந்து வொர்க் எல்லாம் கோ ஆர்டினேட் பண்ணு. எனக்கு எக்ஸ்பிரிமென்ட் சரி பாக்குற வேலை இருக்கு.’’ என்றவன் பள்ளிக்குள் சென்று மறைய, அங்கிருந்த குழுவினர் அவளிடமும் சில வேலைகளை சொல்லி தங்களுக்குள் ஒருத்தியாய் அவளை வார்த்துக் கொண்டனர்.
அங்கு நடக்க போவது என்ன எனப் புரியாமலேயே தனக்கு கொடுத்த பணிகளை செய்ய தொடங்கினாள் மித்து. பள்ளியின் திறந்த வெளி மைதானத்தில் சுற்றிலும் மர நீள் இருக்கைகளை கொண்டு வந்து வைப்பது, வண்ண காகிதங்களை அவர்கள் சொல்லிய வடிவில் வெட்டுவது என தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை கவனமுடன் செய்து கொண்டிருந்தாள் மித்து.
சரியாய் பதினோரு மணியளவில் மாணவ மாணவியர் அந்த மைதானத்தில் குவிய தொடங்கினர். சில ஆசிரியர்கள் கூட அங்கு வந்திருந்தனர். விழா தொடங்கும் முன், தலைமை ஆசிரியருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு உரையினை ஒரு இளம் பெண் தொடங்கி வைக்க, அடுத்து அறிமுக உரை வழங்க திரு வந்தான்.
வந்தவன் பிரபஞ்ச பெருவெடிப்பு முதல், ஆப்பிள் தலையில் விழுந்ததால் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்புவிசை முதல் அத்தனை வானியல் இயற்பியலையும் அந்த குழந்தைகள் புரிந்து கொள்ளும் படி வெகு எளிமையாக விளக்கினான்.
அவன் காட்டிய மேற்கோள் சில அங்கிருந்த அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. “என் தலையில அந்த ஆப்பிள் விழுந்து இருந்தா மார்னிங் ப்ரேக் பஸ்ட்டை கடவுள் அனுப்பி வச்சதா நினச்சிட்டு, அந்த மரத்துக்கு அடியில ரெண்டு செங்கல் வச்சி ஆப்பிள் அருளும் மாரியம்மன்னு ஒரு கோவிலை ஸ்டார்ட் செஞ்சி இருப்பேன். ஏதோ நியூட்டன் தலையில விழுந்ததால நாம இப்போ ஈர்ப்பு விதிகள் பத்தி படிச்சிட்டு இருக்கோம்.’’ என்றதும் அங்கே கிளம்பிய வெடிசிரிப்பு அடங்க வெகு நேரம் ஆகியது.
இப்படி அவன் தன்னையே கோமாளி ஆக்கி பல உதாரணங்களை வாரி வழங்க, கூட்டம் சிரித்துக் கொண்டே இருந்தது. மித்ரா அவனின் இந்த பரிணாமத்தை வியந்து ரசித்துக் கொண்டிருந்தாள். திரு தன் உரையை முடித்து கொள்ள, அடுத்து செயல்முறை விளக்க வகுப்பு ஆரம்பம் என்று அறிவித்தார்கள்.
முன்பு வரவேற்பு உரை வழங்கிய பெண்ணும், அவளோடு இன்னும் சில ஆண்களுக்கும் மைதானத்தை தயார்படுத்த துவங்கினர். சிறிய நெகிழிப் பைகள், சதுரமாக கிழிக்கப்பட்ட காகிதங்கள், காற்றடிக்கும் பம்ப், கண்ணாடி குப்பிகள் முதலியவற்றை அங்கு கொண்டு வந்து அடுக்கினர்.
ஒவ்வொருவரும் ராக்கெட்டின் இயற்பியல் விதிகளை மிக எளிதாக விளக்கியபடி, அது எவ்வாறு வானில் ஈர்ப்பு விதிகள் தாண்டி பறக்கிறது என்பதை செயல் முறையில் செய்து காட்டினர். மாணவிகள் மெய்மறந்து ராக்கெட் உலகில் நுழைந்து கொண்டிருந்தனர்.
அவர்களில் சில தன்னார்வலர்களை அழைத்து, தாங்கள் செய்து காட்டியபடி, அந்த சிறுவர், சிறுமியரையும் செய்ய சொல்ல, தரையை கிழித்துக் கொண்டு மேல் நோக்கி பறந்த வர்ண வர்ண காகிதங்களை கண்டு அவர்கள் முகத்தில் அளப்பரிய பெருமையும், மகிழ்வும் பொங்கி வழிந்தது.