சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையான சென்னை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தின் வளாகத்தில் அமைந்திருந்தது அந்த சிற்றுண்டிச் சாலை. வழக்கறிஞர்கள், குற்றவாளிகள் , காவல்துறையினர் , அரசியல்வாதிகள், சாதாரண பொதுமக்கள் என்று அத்தனைப் பேரும் நடமாடும் இடம் அது .
அந்த சிற்றுண்டிசாலையின் உரிமையாளர் கந்தனையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் பணியில் இருந்தனர் அங்கே. அந்த காலை வேளையில் கல்லாவில் அமர்ந்திருந்தாலும், அவ்வபோது கடுகடு முகத்துடன் வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் கந்தன்.
முன்னறிவிப்பு ஏதுமின்றி எடுபிடி வேலையில் இருக்கும் பாண்டி விடுமுறை எடுத்து விட்டிருக்க, அவனுக்கான வேலையும் சேர்த்து மற்றவர்கள் கவனிக்கும்படி ஆனதால், சற்றே கோபமாக காணபட்டார் கந்தன் .
அந்த நேரத்தில் அவரது அலைபேசி வேறு ஒலிக்க, அவசரமாக அவர் ஏற்கவும், “உள்ளே ஏழு டீ கொடுத்து விடு கந்தா” என்று ஆணையாக வந்தது குரல்.
“சரிங்கண்ணே.. தோ உடனே காளியை அனுப்புறேன்.” என்றவர் அலைபேசியை காதில் இருந்து எடுக்கும் முன்னே “காளி” என்று அந்த குட்டி சமையல் கூடத்தை பார்த்து குரல் கொடுத்தார்.
“சொல்லு கந்தண்ணா” என்றபடியே வெளியே வந்து நின்றாள் அவள்.
“கொஞ்சம் டீ கொடுத்துட்டு வந்துடும்மா.. அவனை அனுப்பினா, அங்கே போ இங்கே போ ன்னு நம்ம பொழைப்புல மண்ணை போட்டுடுவானுங்கோ.” என்று கெஞ்சுதலாக கேட்டார் கந்தன்.
“சரிண்ணா” என்றவள் மாஸ்டர் போட்டுக் கொடுத்த டீயை கையில் வாங்கிக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தாள் . நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் அமைந்திருந்த அறைகளில் ஒன்றில் நுழைந்து அங்கிருந்தவர்களுக்கு டீயை அவள் விநியோகிக்க, “பாண்டி எங்கேம்மா.. நீ ஏன் எடுத்துட்டு வந்த” என்றார் ஒரு வயதான வழக்கறிஞர்.
“அவன் லீவு அடிச்சுட்டான் ஐயா. அதான் என்னை கொடுத்துட்டு வர சொன்னாரு ஓனர்.” என்று காளி பதில் கொடுக்க,
“அறிவு கெட்டவன்” என்று கந்தனை திட்டியபடியே டீயை எடுத்துக் கொண்டார் அவர்.
அவருக்கு அருகில் நின்றிருந்தவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பாராமல் அவள் டீயை நீட்ட, “என்கிட்ட பேசணும்ன்னா மட்டும் வாய் வலிக்கும் இவளுக்கு” என்று அவளை முறைத்தபடியே டீயை எடுக்காமல் நின்றான் அவன்.
“டீ எடுத்துக்க புகழு” என்று மீண்டும் அந்த பெரியவரே கூறிவிட, அதற்குமேல் தாமதிக்க முடியாமல் டீயை எடுத்துக் கொண்டு அவளை விடுவித்தான் புகழேந்தி. அவனும் வழக்கறிஞர் தான். திறமையும், பேச்சு சாதுர்யமும் நிறைந்த தெளிவான அறிவாளி.
பெரியவர் சாம்பவமூர்த்தியின் கீழ் இருந்தாலும், அந்த நீதிமன்றத்தில் இருந்த முக்கிய வழக்கறிஞர்கள் அத்தனைப் பேருக்கும் தெரியும் அவனை. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்து விடுவான் என்று அவன் பெயர் வெகு பிரசித்தம் அங்கே.
இப்போதும் ஒரு கொலை வழக்கு குறித்த ஆலோசனையில் தான் இருந்தான். அந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஒரு அரசியல் வாதியாக இருக்க, ஜாமீனுக்கு முயற்சித்து கொண்டிருந்தான் அவன்.
கொலையானவரின் மனைவியும், மகளும் இவர்களை நாடியிருக்க, அந்த வழக்கை புகழேந்தியிடம் ஒப்படைத்து இருந்தார் சாம்பவமூர்த்தி. அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக இருக்க, ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கான அத்தனை வழிகளையும் தனது குருநாதருடன் வெகு தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவன் கூறிய தகவல்களையும், அவன் சேகரித்திருந்த ஆதாரங்களையும் பார்த்த மூர்த்தி, “இது போதும் புகழு. அசத்து நீ” என்றார் புன்னகையுடன்.
அதே புன்னகையை அவருக்கு பதிலாக கொடுத்து வெளியேறியவன் நேராக வந்து நின்றது தனது நண்பன் பிரபுவின் முன்னே.
“நீதான டீ சொன்னது” என்று மொட்டையாக கேட்டவனுக்கு, “ஆமா மச்சி. சூடு இல்லையா. அவனை” என்றவன் வார்த்தையை முடிப்பதற்குள் சூடாக ஒன்று கொடுத்தான் புகழேந்தி.
“டேய் ஏண்டா” என்று பிரபு பதற,
“கடையில ஆள் இருக்கா, இல்லையா எதுவும் கேட்காம டீ எடுத்துட்டு வர சொல்லுவியா. மன்னர் பரம்பரையாடா நீ. ஓசி டீ தானே, நேரா போய் குடிச்சா என்ன?” என்றபடியே இன்னொன்று கொடுத்தான்.
“டேய் மச்சான் அவன் ஆள் இல்லன்னு சொல்லவே இல்லடா.” என்று பிரபு எகிற,
“உன் அக்கா தங்கச்சி டீ கொண்டு வந்து கொடுத்தா தெரியும்டா உனக்கு” என்று புகழ் மீண்டும் பேச,
“காளியா கொண்டு வந்துச்சு” என்றான் பாவமாக. புகழ் முறைக்கவும், “அந்த நாய் சொல்லவே இல்லடா. என்ன தைரியம் இருந்தா தங்கச்சிகிட்ட கொடுத்து விட்டு இருப்பான்” என்று பிரபு கிளம்ப,
“மூட்றா.. அவன் டீ கொடுக்க வந்தா, அங்கே போ, இங்கே போ, இதை வாங்கு, அதை வாங்குன்னு அலைய விடுவீங்க. அவன் அதுக்கு பயந்து அவளை அனுப்பி வச்சிருக்கான்.” என்று முறைத்தான் புகழ்.
“மச்சான் தங்கச்சி டீ எடுத்துட்டு வரும்ன்னு நினைக்கலடா.” என்று மறுபடியும் பிரபு கூற, அவனை அமைதியாக ஒரு பார்வை பார்த்தபடியே கடந்து சென்றான் புகழ்.
யார் அப்படி வந்து நின்றிருந்தாலும், அவனுக்கு கோபம் வந்திருக்கும் தான். ஆனால்,வந்து நின்றது காளி என்பதால் தான் இந்த அளவு உக்கிரமாகிப் போனான். ஏனோ, இந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அவன் காலடி எடுத்து வைத்த இந்த ஓர் ஆண்டில் அவனுக்கு மிகவும் இன்றியமையாதவளாகிப் போனாள் காளி.
பெரிதாக பேச்சுக்கள் கூட கிடையாது. அவனாக சென்று பேசினாலும் ஒரு பார்வையுடன் மௌனமாக கடந்துவிடுவாள் அவள். அவனிடம் மட்டும் என்றில்லாது பார்க்கும் அத்தனை பேரிடமும் அவள் அப்படித்தான்.
அவள் அனுமதியில்லாமல் அவளிடம் பேசிவிடவே முடியாது. மீறிப் பேசினாலும் பதில் வராது. எத்தனை முறை கேட்டாலும், சட்டமாக மௌனம் சாதிப்பாள் என்பதும் புரிந்திருக்க, அவளை நெருங்கும் வழி புரியாமல் தான் அலைந்து கொண்டிருக்கிறான் வழக்கறிஞன்.
இவனை இப்படி அலைய விட்டவளோ, மனதார அவனை சபித்தபடி தான் கடையில் மாவரைத்துக் கொண்டிருந்தாள். கிரைண்டரில் வடை மாவு அரைபட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் அவள் வாயில் அரைபட்டுக் கொண்டிருந்தான் புகழேந்தி.
“முட்டை கண்ணன்.. ஆந்தை மாதிரி முழிக்கிறான். என்னைக்கோ ஒருநாள் அவன் கண்ணு முழிய நோண்டி வைக்க போறேன். காளி யாருன்னு தெரியாம எங்கிட்ட வாலாட்டிட்டு இருக்கான் நெட்டை கொக்கு” என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் புகழை திட்டிக் கொண்டே அவள் மாவை வழித்தெடுக்க, “ஒரு மாவரைக்க சொன்னதுக்கா என்னை இப்படி அரைச்சுட்டு இருக்க. நானே கழுவிக்கறேன். நீ விடு காளி.” என்றார் சமையல் காரர் .
“அட ஏன்ய்யா… இந்த வேலைக்கு தான நாலு மணி அடிச்சதும் சம்பளம் வாங்கறேன். அப்புறம் உன்னை ஏன் நான் அரைக்கணும்.” என்றாள் காளி.
“வேற யாரை இப்படி போட்டு வாட்டிட்டு இருக்க. பொதுவா யாரையும் திட்ட மாட்டியே.”
“நான் இல்ல தாயே. என்னை ஆளை விடு.”என்று அவள் கையில் இருந்த மாவு வாளியை வாங்கிக் கொண்டு தெறித்து விட்டார் சாமி.
அவர் ஓட்டத்தில் சிரித்துக் கொண்டவள் அத்தோடு புகழேந்தியை மறந்துவிட்டு மதிய உணவுக்காக வெங்காயம் நறுக்க தொடங்கிவிட்டாள். கட்டை விரலில் ஒரு கிழிந்த துணியை சுற்றிக் கொண்டு மடமட வென அவள் வெங்காயத்தை நறுக்க, அரைமணி நேரத்தில் அவள் எதிரில் இருந்த கூடை காலியாகி இருந்தது.
உள்ளே எட்டிப் பார்த்த சமையல் மாஸ்டர், “வெங்காயத்தை நறுக்கிட்டியா காளி. நான் தாளிக்கிற வேலையை பார்க்கிறேன்.” என, அடுத்து பாத்திரம் கழுவ அமர்ந்தாள் அவள்.
கைகள் இரண்டும் மென்மை என்ற வார்த்தையின் அர்த்தம் உணராதவையாக காப்பு காய்ச்சி இருக்க, அதைபற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்று வேகமாக பாத்திரங்களில் அழுக்கெடுத்து கொண்டிருந்தாள் காளி.
காளி என்பவள் அப்படித்தான். எதற்கும் பெரிதாக அலட்டிக் கொல்லமாட்டாள். இன்றைய நிலைக்கு இருபத்தெட்டு வயது பெண். இன்று நேற்று என்றில்லாமல் பருவம் வந்த வயதில் இருந்தே அவள் அப்படித்தான். பெரிதாக ஆசைகளும் கிடையாது. நிறைவேறாத ஆசைகளினால் ஏற்படும் நிராசையும் கிடையாது.
வாழ்க்கையைப் பற்றி எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வாழ பழகிக் கொண்டவள் அவள். அதனால் தானோ என்னவோ, தாயை விட அதிகமாக பாசம் காட்டி வளர்த்த தந்தை இறந்து போன நொடிகளில் கூட அசையாமல் நின்றாள். அது மட்டுமா, அவளின் இளையவள் காளியைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் காதல் என்று வந்து நின்றபோதும் அவள் கவலைப்படவில்லை.
அதைவிடவும், அவளைப் பெற்ற தாயே நல்ல இடம் என்று வலிந்து சென்று தங்கையின் திருமணத்தைப் பேசி முடித்தபோதும் அவள் அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்தடுத்து தங்கையின் திருமணம், அதை தொடர்ந்த சடங்குகள், சீர் வரிசைகள், பூ முடிப்பு, வளைகாப்பு என்று அத்தனையும் அவள் கண்ணெதிரில் நடந்தபோதும், அத்தனையும் அவள் உழைப்பில் நடந்தபோதும் கூட பெரிதாக யாரையும் கைநீட்டி குற்றம் சுமத்தவில்லை அவள்.
மாறாக உறவுகளைப் பற்றிய புரிதலாக தான் எடுத்துக் கொண்டாள். இதோ இப்போதும் மீதம் இருக்கும் ஒரு தங்கை, தம்பி, தனது தாய் என்று அவர்களுக்காக தான் ஓடிக் கொண்டிருக்கிறாள். தந்தை விட்டுப் போன கடமையை தான் செய்வதாக சொல்லி தன்னையே தேற்றிக் கொள்பவள் அவர்களிடம் இருந்து பெரிதாக பாசத்தை எல்லாம் எதிர்பார்த்ததும் கிடையாது.
இதில் அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளின் தம்பி வினோத். அவளிடமும் அன்பு காட்டும் ஒரு அரிய உறவு அவன். அவள் வீட்டின் மூன்றாவது வாரிசு. தற்போது கல்லூரிப் படிப்பில் இருக்க, “நீ கவலைப்படாதக்கா. நான் இருக்கேன் உனக்கு. நான் படிச்சு முடிச்சுட்டு உன்னை ராணி மாதிரி வச்சு பார்த்துப்பேன்க்கா.”என்று அடிக்கடி அவளை சிரிக்க வைப்பவன் அவன்.
அவன் செய்வானா இல்லையா என்பதெல்லாம் தெரியாது காளிக்கு. ஆனால், அவளைப் பொறுத்தவரை அவை மந்திரச்சொற்கள். அவளை மறந்து புன்னகைக்க வைக்கும் அவன் வார்த்தைகள்.
அவள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவளுடனே தான் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பான் வினோத். இதோ கடையில் நான்கு மணிக்கு வியாபாரம் முடிந்து, நாளைய உணவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை எல்லாம் முடித்து வைத்துவிட்டு நாலரைக்கு அன்றைய கூலியை வாங்கிக்கொண்டு அவள் வெளியேவர, சற்று தூரத்தில் நின்றபடி அவளைத்தான் பார்த்திருந்தான் புகழேந்தி.
அலுத்து களைத்து போய் இருந்த அவள் முகம், வேறொரு முகத்தை நினைவூட்ட, எப்போதும் போலவே இப்போதும் வலித்தது அவனுக்கு. ஆனால், அதற்காக அவளை நெருங்கி பேசவும் தைரியம் வரவில்லை.
உண்மையில் அவனுக்கு தைரியம் இல்லை என்பது தான் சரியாக இருக்கும். வாய் ஜாலம் நிறைந்த வழக்கறிஞர் தான். எதிரில் இருப்பவர்களை பேசியே கவிழ்த்துவிடுவான் எனும் அளவிற்கு திறமை கொண்டவன் தான். ஆனால், காளியிடம் இது எதுவும் இதுவரை எடுபடவில்லை.
பார்வையே ‘தள்ளி நில்’ என்று எச்சரிப்பதாக இருக்க, அதை மீறி அவளை நெருங்கும் துணிவு இதுவரை வரவே இல்லை. எப்போதும் போலவே இன்றும் தள்ளி நின்று பார்த்துக் கொண்டவன் அவள் பார்வையையும் உணர்ந்து தான் இருந்தான்.
“இவ பார்வையே இதானா? இல்ல, என்னை மட்டும் இப்படி முறைக்கிறாளா?” என்று வழக்கம் போல புலம்பியபடி அவன் நிற்க, அவனைக் கடந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள் அவள்.
பள்ளி முடியும் நேரம் என்பதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிய, அதைக் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் தானும் அந்த கூட்டத்தில் கலந்து மறைந்து கொண்டாள் காளி.
அருகே இருந்த ஆவின் பாலகத்தில் தனது வண்டியில் நின்றிருந்தவனோ, அந்த பேருந்து கிளம்பும் வரையும் கூட அவளைத்தான் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். பேருந்து கிளம்பவும், அதன் பக்கவாட்டில் தனது வண்டியை செலுத்தியபடியே அவ்வபோது அவளை பார்த்தபடி அவன் தொடர, அவனை ஏதும் செய்ய முடியாத ஆத்திரத்தை முகத்தில் தேக்கியபடி பேருந்தில் நின்றிருந்தாள் காளி.
அவசரத்திற்கு வியாசர்பாடி வழியாக செல்லும் பேருந்தில் ஏறி இருக்க, இப்போது mint பேருந்து நிலையத்திலேயே இறங்கி கொண்டாள் காளி. சாலையை கடந்து எதிர்புறம் மாறி நின்றவள் அடுத்த பேருந்தில் ஏறும் வரையிலும் கூட எதிரில் இருந்த அந்த பேருந்து நிலையத்தில் தான் நின்றிருந்தான் புகழேந்தி.
அவன் நிற்பது கண்ணில் பட்டாலும், அவனை கண்டு கொள்ளாமல் வந்த பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் காளி.
அவர்கள் வீட்டின் வாசலில் அவளது தங்கை மகன் விளையாடிக் கொண்டிருக்க, காளியைக் கண்டதும், “பெரிம்மா..” என்றபடியே கைகளை நீட்டிக்கொண்டு அருகே வந்தான்.
அந்த குட்டி நண்டு நடந்து வரும் அழகில் தன்னைத் தொலைத்து அவள் நிற்க, ஓடிவந்து அவள் காலை கட்டிக் கொண்டான் மூன்று வயது அருண். காளி குனியவும் அவள் முகத்தில் முத்தமிட்டவன் “சாக்கி வாங்கலாம் பெரிம்மா” என, அவனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்றவள் அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தபின்பே வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவளுக்கான வேலைகள் தயாராக இருக்க, காலையில் அரைத்து வைத்துவிட்டு சென்ற தோசை மாவை அதற்கான பெரிய பாத்திரத்தில் மாற்றி வீட்டிற்கு வெளியே எடுத்து வந்து வைத்துவிட்டு அவள் அமர்ந்து கொள்ள, அவளுக்கு அருகில் தானும் வந்து அமர்ந்து கொண்டான் அருண்.
அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவனை மீண்டும் அழைக்க, “எங்க பெரிம்மா பாவம்டா. நான் ஹெல்ப் பண்றேன்.” என்றவனை கண்டு சிரித்துவிட்டு,
“டேய் ஆழாக்கு. போய் விளையாடு. பெரியம்மாக்கு பெருசா வேலை இல்லை.” என்று காளி கூற,
“அப்ப போவா” என்று மீண்டும் அவளிடம் கேட்டு நின்றது வாண்டு.
“போடா” என்று அவள் விளையாட்டாக கையை உயர்த்த, அதுவே போதும் என்று ஓடிவிட்டான் அருண்.
அவள் அன்னை வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தவர், “நீ போ தங்கம். நான் மாவு போடறேன்” என்று அவள் கையில் காபியை திணிக்க, அதை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தாள் காளி.
காலையிலிருந்து உழைத்த உடல் ஓய்வு கேட்டு கெஞ்சி நிற்க, கையிலிருந்த காபியை ஜன்னல் திண்டில் வைத்துவிட்டு அந்த அறையில் இருந்த ஒற்றைக்கட்டிலில் விழுந்தாள். அடுத்த அரைமணி நேரம் அவளைச் சுற்றி என்ன நடந்து இருந்தாலும் தெரிந்திருக்காது அவளுக்கு.
இந்த உறக்கம் மட்டும்தான் கடவுள் அவள் கேளாமலே அவளுக்கு கொடுத்த வரம். எப்படிபட்ட மன உளைச்சலில் இருந்தாலும் படுத்த நிமிடம் உறங்கிவிடுவாள். அவள் உழைப்பு அதற்கு முக்கிய காரணம்.
காலை நான்கு மணிக்கு தொடங்கும் அவளது நாள் ஒருசில நாட்களில் இரவு இரண்டு மணிக்கு கூட முடியும். இத்தனைக்கும் வீட்டு வேலை என்று ஒன்றையும் தொட மாட்டாள்.
அவளின் மாவு கடைக்கு மாவு அரைத்து வைப்பது, அதன் பின்னர் கிடைக்கும் நேரத்தில் ஒரு ஆடை நிறுவனத்திற்கு இரவு உடைகள் தைத்துக் கொடுப்பது, அதன்பின்னர் கிளம்பி வேலைக்கு செல்வது, மீண்டும் மாலையில் மாவு வியாபாரம், அருகிலிருக்கும் பெண்களின் உடைகளை தைக்கும் வேலை என்று நிற்க நேரமில்லாமல் தான் ஓடிக் கொண்டிருக்கிறாள் அவளும்.
காதல் என்று நின்றவளுக்கு கௌரவமாக திருமணம் முடித்து, வீட்டின் பெயரில் அவர் தந்தை வாங்கி வைத்திருந்த கடனை அடைத்துக் கொண்டு, வீட்டின் அன்றாட செலவுகள், தம்பி தங்கையின் படிப்பு செலவு என்று அத்தனைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல்பட்டு கொண்டிருக்கும் அவளுக்கு இந்த வேலைகள் போதாத நிலைதான் இதுவரையும்.
அடுத்த நிமிடம் குறித்து கூட உறுதி அளிக்காத வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறாள் அவள்.