“சரி இனிமேல் உங்க பாடு தான். எங்களுக்கு என்ன”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.
இவன் தான் அவளுக்கு பிடித்தது போல ஒரு முறை யு எஸ் ல் வைத்து செய்து கொடுத்தது போல புட்டை செய்து கொடுக்க, அவளும் சாப்பிட தொடங்கினாள்.
அப்போது தான், “பாரேன், அவளுக்கு என்ன பிடிக்கும் ன்னு தெரிஞ்சு வச்சிருக்கான்”, என்று சொல்லி மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அதையே வினித்தும் முகேஷ்ம் பார்வையால் பரிமாறிக் கொண்டனர்.
அதன் பிறகு அவர்களுக்கான கலகலப்பான நேரத்தோடு, நேரங்கள் கழிய., மாலை உணவிற்கு பிறகு இருவரும் அவர்களிடம் திரும்ப வேண்டும் என்று சொல்லும் போது,
தாத்தா தான், “இங்கே இருக்கலாமேடா”, என்று கேட்டார்.
“நாளைக்கு அங்க ரிசப்ஷன் முடிச்சிட்டு, அதுக்கு அப்புறமா இங்க வர்றேன் தாத்தா, அப்புறம் ரெண்டு நாள் இங்க தான்”, என்று சொன்னான்.
“நாளைக்கு சாப்பாடு கொடுத்து விடவா”, என்று அவன் அம்மா கேட்டார்.
“நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே எல்லாருக்குமே ரிசப்ஷன் ஹால்ல தான சாப்பாடு., சோ காலைக்காக நீங்க அனுப்ப வேண்டாம், காலைல நாங்க ஆர்டர் பண்ணிக்கிறோம்”, என்று சொன்னான்.
பெரியவர்களும் சரி என்று சொல்லிவிட்டனர்.
அதன் பிறகான நேரங்கள் தர்ஷனாவிற்கு கண்ணிமைக்கும் நொடிகளில் கடந்து போனது போல தோன்றியது.,
“கண்மணி கண்மணி”, என்று அவனது அழைப்பும்., அவன் இவள் மேல் கொண்ட பாசமும் நேசமும் ஒவ்வொரு நொடியும் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தான், அல்லது அவளை உணர வைத்துக் கொண்டே இருந்தான்.,
இவளும் அந்த அன்பிற்கு கட்டுப்பட்டவளாக அவனுடனான நினைவுகளை ஒவ்வொரு நொடியும் தனக்குள் சேகரிக்க தொடங்கி இருந்தாள்.
மாலை ரிசப்ஷன் க்கு அத்தனை அழகாக அலங்கரித்து நிற்க., அவளோடு அவன் சேர்ந்து நிற்கும் போது தான் மதர் வந்து சேர்ந்தார்.
அவரிடம் இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள., அவருக்கு அத்தனை நிம்மதி.,
நிமிலனிடம், “உங்களை நம்பி தான் தனா வை தர்றேன்., பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்”, என்றார்,
“கண்டிப்பா என் கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துப்பேன்”, என்றான்.
அதே நேரம் தர்ஷனாவிடம், “தனா மா உன்ன ஒவ்வொரு நொடியும் பார்த்துக்கிட்டே இருந்த ஒரு ஆளு, உனக்காக இத்தனை வருஷம் அவரோட வாழ்க்கையில காத்திருந்திருக்காரு, சோ நீயும் அதுக்கு தகுந்தாப்ல இருக்கணும்., குடும்பனா பிரச்சனை இல்லாம இருக்காது, எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணி போக கத்துக்கணும்., கண்டிப்பா நீ அட்ஜஸ்ட் பண்ணுவ, எனக்கு நம்பிக்கை இருக்கு., அதுக்காக உன்னை அடிமையா போ ன்னு சொல்ல மாட்டேன்., அதே நேரம் எல்லா இடத்திலும் அதிகாரத்தை காட்டணும்னு நினைக்க கூடாது., கொஞ்சம் விட்டுக்கொடுத்தும் போகலாம்”, என்று சொன்னார்.
அவரிடம் தலையாட்டி அவர் சொன்னதை கேட்டுக் கொண்டாள், பின்பு வினித், முகேஷ், அவர்கள் நண்பர்கள்., இவள் தோழமைகள், என வர, வரவேற்பு கலைகட்ட தொடங்கியிருந்தது.,
அதே நேரம் நிமலனின் தொழில் நிமித்தம் உள்ள நண்பர்கள், அவனுடைய கல்லூரி கால நண்பர்கள் என வந்து குவிந்திருக்க., அந்த இடமே ஆட்டம் பாட்டத்தோடு கலகலத்தது.,
அப்போது தான் இவள் கம்பெனியின் சிஇஓ வர., அவர்கள் இருவரும் சேர்ந்து பேசி கலாய்த்து கொண்டதோடு, இவளையும் சேர்த்து கலாய்த்து விட்டே சென்றான்.
இவள் திரும்பி நிமலனை முறைக்க, “அது அப்புறமா முறைச்சுக்கலாம்., இப்ப விடு”, என்று சொல்லி அவளோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
நிமலனின் தாத்தா தான், நிமலனின் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அவன் முகத்தை பாறேன், எவ்வளவு சிரிப்பு, இவன் சிரிப்புக்காக நான் கௌரவத்தை கொஞ்சம் விட்டுக்கொடுக்கிறதுல தப்பு இல்ல., அவனுக்கு வயசு தெரியல பாரு., இத்தனை வருஷம் நான் பயந்துட்டே இருந்தேன்.,
வருஷம் போகுதே, வயசு போகுதே., கல்யாணம் பண்ண மாட்டேங்கா ன்னு எவ்வளவு வேதனை பட்டேன்., ஆனா இந்த முகத்துல இத்தனை சந்தோஷமும், கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல அவன் முகத்தில் நாலு வயசு குறைந்ததற்கான தோற்றமும் தெரிகிறத பார்க்கும் போது., அவ்ளோ சந்தோஷமா இருக்கு., நல்லா இருக்கட்டும்., நல்லா தான் இருப்பான்டா”, என்று சொன்னார்.
நிமலன் அப்பா தான்., “இதுக்கு தாம்பா, நான் உன்கிட்ட கஷ்டப்பட்டு பெர்மிஷன் கேட்டேன்., அவனோட சந்தோஷமே அவ கிட்ட தான் இருக்கு., ஒவ்வொரு நாளும் அவளை பார்த்துட்டே இருந்தான்., அவனுக்கு தினம் போட்டோ வந்துரும்., ஒரு நாள் கூட போட்டோ வர்றதுக்கு லேட்டாகாது., அவன் அவளைப் பார்த்த அந்த நேரம் ஸ்கூலுக்குள்ள இருக்கும் போது மட்டும் தான் போட்டோ எப்பவாவது அவன் கைக்கு வரும்., ஏன்னா எடுக்கிறது கஷ்டம்னு., மத்தபடி அவ காலேஜ் சேர்ந்த அந்த ஃபர்ஸ்ட் நாளிலிருந்து அவன் அவளை மீட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்ன அந்த நிமிஷம் வரைக்கும்., அவளோட போட்டோஸ் அத்தனையும் அவன்ட்ட இருக்குப்பா”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
” சரிடா அவன் சந்தோஷமா இருந்தா சரி”, என்று சொல்லி அருகில் இருந்த தர்ஷனாவை பார்த்தவர்., “அப்படியே அவ அப்பா ஜாடை இல்லடா”, என்று கேட்டார்.
இவரோ பார்த்துக் கொண்டிருந்தவர், “இல்லப்பா கொஞ்சம் ஜாடை குறையுது, அவனோட சிரிப்பு, அவனோட கண்ணு, அவனோட கலர் ஹைட் எல்லாம் ஓகே, ஆனா கொஞ்சம் அவங்க அம்மா ஜாடையும் கலந்து இருக்குமோ., அப்படின்னு எனக்கு தோணும், சில நேரத்துல.,
ஆனா அத்தை வீட்ல, அத்தைக்கு அவங்க பையன் மாதிரி தான் இருக்குன்னு பீல் பண்றாங்க., ஆனா மாமா வந்து நான் சொன்னது தான் சொன்னாரு., கொஞ்சம் அவங்க அம்மா ஜாடை கலந்து இருக்குமோன்னு., நீங்க நல்லா பாருங்க, முகேஷ் அவ கூட நிக்கும் போது கொஞ்சம் ஜாடை ஓட்ற மாதிரி இருக்கும்”, என்று சொன்னார்.
இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே “இருக்கும்டா, சில பிள்ளைகள் எல்லாம் அம்மா அப்பா ஜாடை கலந்து தானே இருப்பாங்க, அவனும் இந்த அளவுக்கு, அந்த பொண்ண விரும்பி இருப்பான்னு யாருன்னு நினைக்கல இல்ல., கஷ்டப்பட்டு குடும்பத்தை எதிர்த்து கல்யாணம் பண்ணி இருந்தான்., நல்லபடியா ரெண்டு பேரும் வாழ்ந்து இருந்தாங்கன்னா., அது வேற அவ போய்ட்டா ன்னு, இப்படி பிள்ளையை விட்டுட்டு இவனும் போயிட்டானே”, என்று சொன்னவர்.,
“நான் தான் தப்பு பண்ணிட்டேனோன்னு ரெண்டு நாளா தோணுது டா., இந்த பிள்ளையை பர்ஸ்ட் இங்க கூட்டிட்டு வர நான் சம்மதிச்சி இருக்கணும்., அந்த லெட்டர உன் கண்ணுல காட்டி இருந்தா., நீ தான் ஃபர்ஸ்ட் போய் கூப்பிட்டு இருப்ப”, என்று சொன்னார்.
“ஒருவேளை நம்ம வீட்ல எடுத்து வளர்த்திருந்தா., அவளை இவனுக்கு கல்யாணம் பண்ற எண்ணம் வந்திருக்குமான்னு தெரியலப்பா., இதுவும் கூட ஒரு வகையில நல்லது நினைச்சுக்கோங்களேன்., வளர்த்து யாருக்கோ கல்யாணம் பண்ணி கொடுக்குறதுக்கு., அவ எங்கேயோ வளர்ந்தாலும்., இனிமேல் நம்ம வீட்டு மருமக., இதைவிட என்னப்பா வேணும்”, என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
இவர்களை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போதே., உள்ளுணர்வு தூண்ட அவர்களை திரும்பிப் பார்த்த நிமலன், “என்ன”, என்று சைகையில் கேட்டான்.
அவன் அப்பாவோ “ஒன்றுமில்லை” என்று சொல்லவும் ,சிரித்துக் கொண்டே திரும்பிக் கொண்டான்.
அந்த நேரத்தில் திவ்யா விடை பெறுவதற்காக கேட்க வந்தாள்., அன்று இரவு பிளைட்டில் கிளம்புவதாக சொன்னாள்.,
சில நண்பர்கள் கிளம்புவதோடு, அவளும் குடும்பத்தோடு கிளம்பினாள். அனைவரையும் வழியனுப்ப முகேஷ் வினித் சென்றனர்.
அதன் பிறகு அவன் சொன்னபடி., தாத்தா வீட்டில் வந்து ஒரு வாரம் இருந்து விட்டு., அதன் பிறகு ஒரு நாள் வினித் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தனர்.
அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
முதன் முதலாக தன் அப்பாவின் வீட்டிற்குள் காலடி வைத்து சென்றவளுக்கு அப்பாவின் நினைவுகளாக அவரது சில புகைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது,
முடிந்த அளவு வினித்தும் நிமலனும் அருகிலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.
அது போலவே முகேஷ் வீட்டிலும் அழைப்பு வர., முதலில் யோசித்தாலும், பின்பு அவன் தான் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான்.
“அப்பா வீட்டுக்கு வந்த இல்ல., அப்ப அம்மா வீட்டுக்கும் வரணும் இல்ல., எல்லார் சம்மதமும் வேணும்னு கேட்ட இல்ல, சம்மதம் கேட்க தெரிஞ்சவளுக்கு எல்லார் வீட்டுக்கும் போகவும் தெரியனும் வா”, என்று அழைத்துக் கொண்டு சென்றான்.