அத்தியாயம் 18

அன்று வம்சிக்கு மிகவும் உற்சாகமான நாள் என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் நண்பனோடு ஏற்பட்ட  சண்டை முடிவுக்கு வந்திருப்பது நிம்மதியாக இருந்தால், இன்னொரு பக்கம் தன்னுடைய அக்கா ரஞ்சிதம் கருவுற்று இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

ரஞ்சிதம் தலைகால் புரியாத உவகையில் இருந்தாள். மாமியார் வீட்டில் இத்தனை வருடங்களாக வாங்கிய பேச்சுக்கு எல்லாம் ஒரு முடிவு கிடைத்திருக்க, இரவே கணவனுக்கு கால் பண்ணி பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள்.

பவானிக்குமே ரஞ்சிதத்தின் மகிழ்ச்சியில் மனம் நிறைந்து போனது. மேலும் தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்ற கனவும் ஏற்படத் தொடங்கியது.

முல்லாய் குத்தும் ரஞ்சிதமே பவானியை கட்டிக்கொண்டு, “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பவானி… இதெல்லாம் நீ வந்த ராசி தான். என் தம்பி ரொம்ப குடுத்து வச்சவன்!” என்று மகள் சொல்லியதை விஜயா நம்ப முடியாமல் பார்த்தார். அவள் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகிறது என்றவர் அதிர்ந்து போய் நிற்க, பவானி தான்,

“அத்த அண்ணி எவ்ளோ பெரிய குட் நியூஸ் சொல்லி இருக்காங்க… ஏதாச்சும் ஸ்வீட் பண்ணலாம்!” என்று கூறி அவர் சிந்தனையை கலைத்திருந்தாள். வம்சி வீட்டுக்கு வந்ததும் விஷயம் தெரிந்து, நடந்த சண்டை அனைத்தையும் மறந்து, “வாழ்த்துக்கள் அக்கா மாமாக்கு போன் பண்ணி சொன்னியா?” என்று நல்ல முறையில் நடந்து கொள்ள ரஞ்சிதம் உடனே,

“சொல்லிட்டேன். நாளைக்கு நான் என் வீட்டுக்கு போறேன்… எப்ப பாரு நான் இங்க வந்தே இருக்கேன்னு சொல்லுவீங்கள? இனிமேல் அம்மா வீடுன்னு சீராட வர எனக்கு நேரமே இருக்காது. நீங்கதான் ஏன் இங்க வரவே மாட்றேன்னு என்கிட்ட குறைப்படுவீங்க! நான் என் பேபி கூட ஃபுல் டைம் பிஸி ஆயிடுவேன்!” என்று பெருமையாய் சொல்ல பவானிக்கு அவளின் உற்சாகத்தை பார்த்தும் சிரிப்புதான் வந்தது.

இரவு தூங்கும் போது வம்சி மனைவியை அணைத்தபடி, “நல்ல வேலைக்கு பாசிட்டிவா நடந்துருச்சு நான் கூட பயந்துட்டே இருந்தேன் தெரியுமா?” என்று கேட்க பவானி புருவம் உயர்த்தி, ஏங்க என்றாள். “நான் தான் சொன்னேனே வாணி ரஞ்சிதத்த புரிஞ்சுக்கவே முடியாதுௐ.. இன்னைக்கு அவை எதிர்பார்த்த ரிசல்ட் இல்லைனா உன்னய அத காரணம் சொல்லியே குத்தம் சொல்லுவா, அவ அப்படிதான்… அந்த குணத்தை மாத்த முடியாது!” என்று அலுக்க, பவானி அவன் கையை தட்டி கொடுத்து,

“விடுங்க! அண்ட் இனி அண்ணி வீட்ல எந்த பிரச்சனையும் இருக்காது இல்லையா?” என்று கேட்க வம்சி பெருமூச்சு விட்டான். “ஆமாடி! இவ்வளவு வருஷம் பாஸ்கர் மாமாவுக்கும் அக்காவுக்கும் பிராப்ளமே இதனாலதான் வரும்…. இப்ப குழந்தை வந்துருச்சுன்னா ரஞ்சிதம் சொன்ன மாதிரி அடிக்கடி இங்க வரமாட்டா. அவ வாழ்க்கைக்கும் அதுதான் நல்லது வாணி!” என்றவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு,

“நெஜமாவே நீ ஒரு ஏஞ்சல் தாண்டி!” என்று சொல்ல பவானி இதழ் விரித்து, “ஏன்னாம் அப்படி?” என்றாள் சலுகையாய். “பின்ன நீ வந்ததுலயிருந்து எல்லாம் குட் நியூஸ்சா தான வருது?” என்றவன் அவள் மூக்கோடு மூக்கை உரச,

“அப்ப குட் நியூஸ் நடக்காட்டி நான் ஏஞ்சல் இல்லையா?” என்று செல்லமாய் முறைக்க, “இல்லாட்டியும் நீ என்னோட ஏஞ்சல் தான்!” என்றபடி இறுக்கமாய் தன்னவளை அணைத்துக் கொண்டவன் மறுநாள் நண்பர்கள் வரப்போவதை மொத்தமாக மறந்து இருந்தான்.

மறுநாள் சண்டே என்பதால், அனைவரும் லேட்டாகவே எழுந்திருக்க கிஷோர் ஃபோன் பண்ணிய பின்பே வம்சிக்கு அந்த ஞாபகம் வந்தது.

“மை காட் ரஞ்சிதம் மேட்டர்ல அதை மறந்துட்டோமே?” என்று நெற்றியை தட்டிக் கொண்டவன் விஜயாவிடம் சென்று, “அம்மா ஒரு பத்து பேருக்கு சமைக்க முடியுமா?” என்று கேட்க விஜயா வியப்பாய் பார்த்தார்.

“என்னடா திடுதிப்புன்னு வந்து சொல்ற? நேத்தே சொல்லி இருக்கலாம்ல்ல? யாரு வரா?” என்றவர் கேள்வி மேல் கேள்வி கேட்க நேற்று நடந்ததை கூறிய வம்சி,

“சுத்தமா மறந்துட்டேன்ம்மா!” என்று இழுக்க விஜயாவோ மகிழ்ச்சியாய், “அப்பாடா ஜீவனுக்கும் உனக்கும் ஒரு வழியா எல்லாம் சுமூகமா ஆகிடுச்சா? இப்பதாண்டா எனக்கு நிம்மதியா இருக்கு… எவ்ளோ நல்ல புள்ள? முன்னெல்லாம் அடிக்கடி வந்து போயிட்டு இருந்தான். அந்த பிரச்சனைக்கு அப்பறம் அவனை எப்பயாவது டிவில பார்த்தா தான் உண்டு!” என்று கூற வம்சியும்,

“ஆமா சார் தான் பெரிய போலீஸ் ஆபீஸர் ஆச்சே… ஆனா அவன் மாறவே இல்லமா. அதே மாதிரி தான் இருக்கான்… நேத்து நானும் அவனோட வீட்டுக்கு போயிட்டு தான் வந்தேன்!” என்று நிறைவாக சொன்னவன், திடீரென்று தாயின் முகம் மாறுவதைக் கண்டு என்னம்மா என்று கேட்க விஜயா உள்ளே போன குரலில்,

“நீயும் அன்னைக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருந்திருந்தா….?” என்று ஆரம்பிக்க வம்சி அவரை அழுத்தமான பார்வை பார்த்து அப்படியே வாயை மூட வைத்து விட்டான்.

“சரி சரி நான் ஒன்னும் சொல்லல. ஆனா என்னால அதை மறக்க முடியலடா!” என்றவர் தழுதழுக்க வம்சி அவருடைய கையை பற்றி கொண்டு, “முடிஞ்சதை பத்தி பேச வேண்டாமா… நான் இப்போ ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன். எனக்கு இந்த வாழ்க்கையே போதும்..  நான், பவானி, எங்களுக்கு வரப்போற குழந்தைகள்ன்னு கண்டிப்பா இதைவிட சந்தோஷமா  பியூச்சர்லயும் இருப்பேன் என்னை நம்புங்க!” என்று உறுதி அளித்தவன்,

“இப்ப சொல்லுங்க சமைக்க முடியுமா இல்ல வெளிய ஆர்டர் பண்ணிடுவோமா?” என்று கேட்க, “எதுக்கு வெளி ஆர்டர் பண்ண நாங்களே சமைக்கிறோம்!” என்றபடி பவானி உள்ளே வர விஜயா மறுத்தார்.

“10 பேருக்கு இனிமேல் சமைக்க முடியாது பவானி, நீ ஹோட்டல்லையே ஆர்டர் குடுத்துடுடா. ரொம்ப நாள் கழிச்சு எல்லாரும் வராங்க இல்லையா? நல்லா கவனிச்சு அனுப்புவோம்!” என்க யார் வரா என்று பவானி ஆர்வமாய் கேட்டாள். அதற்கு அவளிடமும் விஷயத்தை சொன்ன வம்சி,

“உன்ன பார்க்கணும்னு எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க!” என்று கூற பவானிக்கு வியப்பாய் இருந்தது. “நீங்க பெருசா என்னவோ பில்டப் கொடுத்து வச்சிருக்கீங்க போலயே?” என்றவள் கலாய்க்க வம்சி சிரித்தபடி மறுத்தான்.

“அப்படியெல்லாம் இல்லடி… சும்மாதான் உன்ன பத்தி சொன்னேன்!” என்றவன் லெகுவாய் மனைவியிடம் நடந்து கொள்வதை பார்த்து விஜயாவுக்கு பூரிப்பாய் இருந்தது.

வெறும் வாய் வார்த்தைக்கு சொல்லாமல் உண்மையாகவே மகனும் மருமகளும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவர், இதைப் போன்றே அவர்கள் கடைசி வரை இருக்க வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொள்ள வம்சி என்னென்ன ஆர்டர் கொடுக்கலாம் என்று இருவரிடமும் கேட்டுவிட்டு வெளியே செல்ல வீட்டில் பாயாசம் மட்டும் வைக்கலாம் என்று விஜயா ஆரம்பிக்க பவானி சரியென்று அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.

நேற்று ரஞ்சிதம் சொன்னது போலவே பாஸ்கரன் 11 மணியளவில் வந்து மனைவியை தன்னோடு வா என்று அழைக்க ரஞ்சிதம் முகத்தில் பெருமிதம் தாங்கவில்லை. இருவரும் ஏதோ சண்டை போட்டு கோபித்துக் கொண்டுதான் ரஞ்சிதம் வந்திருந்தாள். ஆனால் குழந்தை வரப் போகிறது என்று தெரிந்ததும் பாஸ்கரன் தானே இறங்கி வந்திருக்க ரஞ்சிதத்திற்கு இறக்கை மட்டுமே முளைக்கவில்லை.

அவனுமே கருவுற்று இருக்கும் மனைவியை அந்த தாங்கு தாங்க இனிமேல் அந்த பக்கமே ரஞ்சிதம் வர மாட்டாள் என்று தோன்றியது.

விஜயா மகளுக்கு காய்கறி பழங்கள் என்று சிலவற்றை கட்ட பை நிறைய பேக் பண்ணி ஒரு வழியாக அவளை நிம்மதியாய் புருஷன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்க, ஒரு மணியிலிருந்து வம்சியின் நண்பர்கள் அனைவரும் வர ஆரம்பித்தார்கள். முதலில் க்றிஸ்டி தான் வந்திருந்தாள். அவளை விஜயா சில தடவை சந்தித்து இருப்பதால்,

“என் பையன் கூப்பிட்டா தான் வருவியாமா சென்னையில தான செட்டில் ஆயிருக்க அடிக்கடி வரலாம் தான?” என்று உபசரித்தபடி அன்பாய் குறைபட க்றிஸ்டியோ சிரித்து சமாளித்தபடி பவானியை தான் தேடினாள்.

“எங்கம்மா உங்க மருமக நேத்து உங்க பையன் அவங்கள பத்தி சொல்லி சொல்லி எங்க காதுல ரத்தம் வராதது தான் மிச்சம்!” என்றவள்  கிண்டல் செய்த நேரம், கரெக்டாக அங்கே வந்து அதைக் கேட்டு விட்ட பவானிக்கோ ஐயோ என்று இருந்தது.

அப்படி என்ன சொன்னாரு என்ற யோசனையோடு, “வாங்க அக்கா…. நான் தான் அந்த கேரக்டர்!” என்று சின்ன புன்னகையோடு இழுக்க, “அட நீங்கதான் அந்த ஏஞ்சலா எப்படி இருக்கீங்க? எப்படி உங்க புருஷனை சமாளிக்கிறீங்க?” என்று க்றிஸ்டி அவள் கையை பிடித்துக் கொண்டு பல நாள் பழகியவள் போல் பேச ஆரம்பித்துவிட,

“ஏய் என் பொண்டாட்டிய எதையாவது சொல்லி பயமுறுத்தி விட்றாத!” என்றபடி வந்தான் வம்சி. ஆர்டர் கொடுத்த உணவுகளை அப்பொழுதுதான் டெலிவரி பண்ணி இருந்ததால், அவன் பெரிய பெரிய சில்வர் கேரியரை உள்ளே தூக்கிவர பவானியும் அவனுக்கு சென்று உதவினாள்.

“ஏன்டா உன்ன பத்தின உண்மைய எல்லாம் சொல்லிடுவேன்னு பயமா இருக்கா?” என்று க்றிஸ்டி அவனை ஓட்டியபடி தானும் உதவி செய்ய ஆரம்பிக்க கரெக்டாக கிஷோரும் வந்து விட்டான். அவனும் வெளியே இருந்து ஆட்டோவில் வந்த சாப்பாட்டு கேரியரை எல்லாம் எடுத்து உதவி கொண்டிருக்க பவானியின் முகத்தை பார்த்ததுமே அவன் முகத்தில் சின்ன அதிர்வு தோன்றியது.

‘ஒருவேள நாம தான் தப்பா நினைக்கிறோமோ?’ என்றவன் யோசிக்க நேற்று வம்சி தன் மனைவியின் பெயர் வாணி என்று சொன்னதும் ஞாபகம் வந்தது.

“இல்ல இது அவங்களா இருக்க முடியாது!” என்றவன் தடுமாற்றத்தில் நின்ற நேரம் பவானி மீண்டும் வெளியே வந்து ஒரு கேரிகரை எடுக்க போனவள், “வாங்கண்ணா உள்ள வாங்க!” என்று உபச்சாரமாய் அழைத்து பொருட்களை எல்லாம் எடுத்து செல்ல, அவள் பின்னே வந்த வம்சியின் கையை பிடித்து கிஷோர் நிற்க வைத்தான்.

என்ன மச்சான் என்று வம்சி கேட்க, “உன்னோட ஒய்ஃப் முழு பேரே வாணிதானா?” என்றான் யோசனையாய்.

“இல்ல பவானி… ஏன்டா கேக்குற?” என்று வம்சி விசாரிக்க கிஷோர் முடிவே பண்ணி விட்டான்.

“அவங்களும் நம்ம படிச்ச காலேஜ்ல தான் படிச்சாங்களா?”

“ஆமா நம்ம ஜூனியர் தான். ஆனா எனக்கு தெரியவே தெரியாது…. பொண்ணு பாக்குறப்போ தான் சொன்னாங்க. ஆமா நீ ஏண்டா இத்தனை கேள்வி கேட்குற உனக்கு முன்னாடியே பவானிய தெரியுமா? நீ காலேஜ்ல பார்த்து இருக்கியா? ஆனா நான் பார்த்ததே இல்லடா… நேரத்தை பார்த்தியா? என் ஜூனியரையே பின்னாடி கல்யாணம் பண்ணி இருக்கேன்!” என்று வம்சி கேலியாய் சொல்லிக் கொண்டிருக்க பின்பே கிஷோர் முகம் சரி இல்லாமல் இருப்பதை கவனித்தான்.

“மச்சான் என்னடா… ஏதாவது சொல்லனுமா?” என்றவன் புரியாமல் கேட்க, கிஷோர் அவனுடைய தோளை பற்றி, “இது உனக்கு தெரியுமான்னு தெரியல… ஆனா நம்ம ஜீவன் காலேஜ்ல ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தான் நியாபகம் இருக்கா? டாலி டாலினு கூட சொல்லுவானே?” என்று கேட்க,

“ஆமா அடிக்கடி கிளாச கட் அடிச்சுட்டு அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருப்பான்னு சொல்லுவீங்களே… ஞாபகம் இருக்கு! அத எதுக்குடா இப்ப சொல்ற?” என்றான் வம்சி புருவம் உயர்த்தி.

“அந்த டாலியே, சிஸ்டர் தான். ஐ மீன் …. உன்னோட பொண்டாட்டி தாண்டா!” என்று கிஷோர் பட்டென்று விஷயத்தை உடைத்து விட வம்சியின் முகம் மொத்தமாய் மாறியது.

“நீ என்ன சொல்ற?” என்றவன் சீரியஸாய் மாற, “ஆமா சிஸ்டர் பின்னாடி தான் ஜீவன் சுத்திட்டு இருந்தான்!” என்று கிஷோர் உறுதியாய் சொல்ல பவானி கடைசி கேரியரை எடுத்துக்கொண்டு, “இரண்டு பேரும் உள்ள வாங்க எதுக்கு வெயில்ல நிக்கிறீங்க?” என்று கேட்க வம்சிக்கு உள்ளே என்னவோ உடைவது போல் இருந்தது.

காரணம் காலேஜில் ஜீவன் காதலித்த அந்த பெண், அவனையும் காதலிப்பதாய் மற்றவர்கள் சொல்வதை  கேட்டிருக்கிறான். அந்தப் பெண் ஜீவனை பார்ப்பதற்காக அடிக்கடி தங்களுடைய டிபார்ட்மெண்ட் பக்கம் வந்ததாகவும் மற்றவர்கள் கூறுவதை காதுப்பட கேட்டிருக்கிறான். அப்படி என்றால் அந்த பெண் தன்னுடைய மனைவி பவானி தானா? அப்படி இருந்தால் எதற்காக தன்னிடம் யாரையும் காதலித்தது இல்லை என்று பொய் சொல்ல வேண்டும் என திகைப்பாய் நின்று கொண்டிருக்க அவன் ரியாக்ஷனை வைத்தே வம்சிக்கு உண்மை தெரியாது என்று கிஷோருக்கு புரிந்து போனது.

கிறிஸ்டி மற்றும் சத்ய ஜீவன் இருவரும் ஜெர்னலிசம் படித்தவர்கள். கிஷோர் மற்றும் வம்சி எக்கனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட்! இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது காலேஜ் புட்பால் டீமில் ஒரேதாக விளையாட ஆரம்பித்த பின்பு தான். மேலும் எக்கனாமிக்ஸ் மற்றும் ஜர்னலிசம் டிபார்ட்மென்ட் அருகருகே இருந்ததால் அவர்கள் நட்பும் ஸ்ட்ராங்காக வளர்ந்து விட்டது.

சத்யஜீவன் வம்சிக்கு க்ளோஸ் ஆக இருந்தாலும் இந்த காதல், பெண்கள் பின்னாடி சுற்றுவது எல்லாம் வம்சிக்கு சுத்தமாக ஆகாது.

எனவே கிஷோர் தான் சைட் அடிப்பது வம்பு பண்ணுவது என்று சத்ய ஜீவனோடு அதிகமாய் சுற்றி இருக்கிறான். எனவே அவன் கூறுவது நிச்சயம் உண்மையாக தான் இருக்கும் என்று வம்சிக்கு உறுதியாக தெரிய, ஏனோ இதயம் கனப்பது போல் இருந்தது. பவானி காதலித்தே இருந்தாலும் அது அவனுக்கு பிரச்சனை கிடையாது.

ஆனால் அதை தன்னிடம் எதற்காக மறைக்க வேண்டும்? அதிலும் தன்னுடைய உயிர் நண்பனை காதலித்து விட்டு எதற்கு காதலே செய்யவில்லை என்று பொய் சொல்ல வேண்டும்? உண்மையை சொல்லி இருந்தாலும் தான் நிச்சயம் அவளை இதை வைத்து சந்தேகப்படவோ, அல்லது பிரச்சனை பண்ணப் போவதோ கிடையாது.

அவனுடைய ஆதங்கம் எல்லாம், அவள் தன்னை முழுவதுமாக நம்பவில்லையோ என்பதாக மட்டுமே இருக்க பேச்சின்றி நின்று விட்டான். ஆனால் கிஷோர் தான்,

“நான் இதை சொல்லி இருக்க மாட்டேன்டா… ஆனா இன்னைக்கு ஜீவனும் வரான். அவன் சிஸ்டரை பார்த்தா!” என்றவன் முடிக்காமல் விட வம்சிக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை.

நண்பன் காதலித்த பெண் தன்னுடைய மனைவி. இது நண்பனுக்கு தெரிந்தால் என்றவன் அதிர்ச்சியில் நின்ற நேரம், “ஹாய் மச்சான்?” என்ற பின்னால் சத்ய ஜீவனின் குரலும் கேட்க வம்சிக்கு மேலும் சோதனையானது.

“வர்ற வழியில சரியான டிராபிக்டா… ஆமா எதுக்கு வெளிய வெயில்ல நிக்கிறீங்க? வாங்க உள்ள போகலாம்!” என்று சத்யஜீவன் முன்பு அங்கு வந்தால் எப்படி இருப்பானோ அதேபோன்றே வம்சியை இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல கிஷோர் வம்சியை கலக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாடா… எங்க உன் பொண்டாட்டிய காணோம்?” என்று கிரிஷ்டி அவனை கலாய்த்துக் கொண்டிருக்க விஜயா அவர்கள் பேச்சை சிரித்தபடி பார்த்து, “அம்மாவ மறந்துட்டேல்ல… உனக்கும் இவனுக்கும் பிரச்சனைன்னா நாங்க என்ன பண்ண முடியும்? டிவில மட்டும்தான் உன்ன பாத்துட்டு இருந்தேன். சாருக்கு இப்பதான் வீட்டுக்கு வழியும் தெரிஞ்சிருக்கு!” என்று முறைப்பாக கேட்க,

“சாரிம்மா என்னோட தப்பு தான்… இந்த மெண்டல் கூட சண்டை போட்டு இருந்தாலும் நான் இங்க வரப்போக இருந்திருக்கணும். இந்த அடியனை மன்னித்து விடுங்கள்!” என சத்யஜீவன் பேசிக் கொண்டிருந்த நேரம் சரியாக பவானியும் கிச்சனுக்குள்ளிருந்து வர அவளுக்கு சத்யஜீவன் யார் என்று நன்றாகவே அடையாளம் தெரிந்தது.

அவனை பலமுறை நியூசில் பார்த்திருப்பதால், ‘இவரும் நம்ம வீட்டுக்காரரோட பிரண்டா? பாருடா நம்மாளு பெரிய ஆளு தான்!’ என்று நினைத்தவள், “வாங்கண்ணா!” என்று வாய் நிறைய சத்ய ஜீவனை அழைத்த நேரம் அவனும் கரெக்டாக பவானியை திரும்பி பார்த்தான்.

அடுத்த நிமிடம் அவன் பேய் அறைந்தது போல் மாறிவிட, “நீங்களும் இவரோட தான் படிச்சீங்களா? உங்களோட எல்லா இன்டர்வியூசும் நான் பார்த்திருக்கேன்… நீங்க பொண்ணுங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற சேஃப்டி மெஷர்மென்ட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும் அண்ணா!” என்றவள் படபடவென்று பேச சத்ய ஜீவனோ பேச்சு வராமல் எச்சில் விழுங்க, அவள் மூச்சுக்கு 300 தடவை அண்ணா அண்ணா என்று சொன்னது தான் வம்சியை ஒரு மாதிரியாக்கியத.

நண்பனை காதலித்தும் விட்டு தற்பொழுது எப்படி அசால்ட்டாக அண்ணா என்று கூறுகிறாள்? ஒருவேளை அவன் தன்னுடைய நண்பன் என்று தெரிந்து விட்டதாலா?

முதலில் தன்னுடைய நண்பன் என்று எப்படி தெரியாமல் இருக்கும்? என்றவன் அத்தனை குழப்பத்தில் நிற்க முதலில் சுதாரித்தது சத்யஜீவன் தான். அர்த்தமாய் கிஷோரை திரும்பி பார்த்தவன், “தே… தேங்க்ஸ்ம்மா!” என்று உள்ளே போன குரலில் சொல்ல அவன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவே இல்லை.

அவனும் என்ன செய்வான்? இதுவரை ஒரு முறை கூட காலேஜில் இருந்த பொழுது பவானியிடம் அவன் பேசியது கிடையாது. ஒருவேளை அவள் தன்னை மறந்து விட்டாளோ என நினைத்தாலும் அவளுடைய நெற்றியில் இருந்த குங்குமமும், கழுத்தில் இருந்த தாலியும் அவள் தான் நண்பனின் மனைவி என்பதை புரிய வைத்து விட வம்சியை தன்னையும் அறியாத வலியோடு திரும்பி பார்த்தான்