காலை நான்கு மணிக்கு யாரும் எழுப்பத் தேவையில்லாமலே எழுந்து விடும் பழக்கமுள்ள குமுதா அதே பழக்கத்தை மரகதத்தின் வீட்டிலும் பின்பற்றினாள். எழுந்ததும் முகம் கழுவிக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவாள்.
தானும் நான்கு மணிக்கு எழுந்து விடும் மரகதம் மாடுகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, பால் கறக்க வரும் மன்னாருவிடம் முதல் நாள் பகலிலேயே சுத்தமாகக் கழுவி வெயிலில் காய வைத்து எடுத்து வைத்திருக்கும் பால் கேன்களைக் கொடுப்பார். பிறகு மன்னார் தன் பால் கறக்கும் வேலையைக் கவனிக்க மரகதம் அந்த வேப்ப மரத்துக் கட்டிலில் வந்து படுத்துக் கொள்வார்.
படுத்தாலும் உறங்க மாட்டார். இதையெல்லாம் தன் அறை ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டே குமுதா தன் பாடங்களைப் படிப்பாள்.
நேரம் ஐந்தரை ஆனதும் சமையல்கட்டுக்குச் செல்பவள் முதல் நாள் மரகதம் கருப்பட்டிக் காப்பி போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மறுநாளிலிருந்தே அந்த வேலையைக் கைவசப்படுத்தியிருந்ததால் அதே போல் காப்பியைப் போட்டு இரு குவளைகளில் ஊற்றி மரகதத்திடம் சென்று ஒன்றைக் கொடுத்து விட்டு தானும் அந்த சதுரக் கல்லில் அமர்ந்து காப்பியைக் குடிப்பாள்.
அவர்கள் காப்பி குடிக்கும் நேரத்தில் கோமதி வந்து வாசல் கூட்டித் தெளித்து முடித்திருக்க அவரிடம் கோல மாவுப் பாத்திரத்தை வாங்கி அழகான கோலமிடுவாள்.
பின் மீண்டும் சென்று சிறிது நேரம் படித்து விட்டுப் பள்ளிக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டுச் சென்று குளித்து வருவாள்.
மேல் வேலைகளுக்கு ஆட்கள் வைத்திருந்தாலும் சமையல் மட்டும் முழுதாக மரகதத்தின் கையில்தான். எனவே குளித்ததும் வேறு உடை அணிந்து வந்து சமையலறையில் மரகதத்துக்கு உதவி செய்பவள் எட்டு மணிக்கு மீண்டும் சென்று தலை பின்னி, சீருடைக்கு மாறி, உணவுண்ண வந்து அமருவாள்.
காலை உணவை முடித்துக் கொண்டு மதிய உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு மரகதத்திடம் சொல்லிக் கொண்டு பள்ளி கிளம்புபவள் அதன் பின் மாலை வரை பள்ளியோடு ஐக்கியமாகி விடுவாள்.
படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் வெளுத்து வாங்கிய அந்தப் புது வரவைப் பள்ளியில் எல்லோருக்கும் பிடித்து விட்டது. அவளுக்கு முன் நன்றாகப் படிப்பவர்கள் எனப் பெயர் வாங்கிய சிலரின் பொறாமைப் பார்வைகளும் அவள் மேல் படராமல் இல்லை. ஆனாலும் மொத்தத்தில் பழைய மன்னவனூர்ப் பள்ளியை விட இந்தப் பள்ளி அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. மகிழ்ச்சியோடு அந்த ஊரில் பொருந்திப் போனாள் குமுதா.
நேரம் இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க தன் வண்டியில் தொழிற்சாலையிலிருந்து வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான் அமுதன். அன்றோடு அவன் மரகதத்தைச் சென்று பார்த்துப் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டன.
போகலாம் என நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு நெருடல். அங்கு சென்றால் குமுதாவைப் பார்க்க நேரிடும்.அல்லது குமுதாவைப் பார்க்கும் ஆசையில்தான் அங்கு செல்கிறானோ என அவன் உள்மனதில் ஒரு குரல் எழ அது உண்மையோ என்றும் தோன்றியது அவனுக்கு.
எப்போதும் அவன் மரகதத்தைப் பார்க்கச் செல்லாமல் நாட்கள் ஆகி விட்டால் அவர்தான் அலைபேசியில் அழைத்து ஏதாவது கேட்பது போல் நினைவுபடுத்துவார்.அதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார்.அவர் வீம்பு அவருக்கு…
கோபமாகவே இருப்பதாகக் காட்டிக் கொள்பவர் யார் வீட்டிலாவது விசேஷம் இருக்கிறது, வயலில் இந்தப் ப்ரச்சனை, அது இது எனப் பொதுவாக மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு வைத்து விடுவார்.
மரகதத்திடம் இருந்து அழைப்பு என்றாலே அது அவனுக்கு ஒரு நினைவூட்டல்தானே ஒழிய தன்னால் சமாளிக்க முடியாமல் எதற்காகவும் அவனை அழைக்க மாட்டார்.
அவனுக்கோ அவர் நினைவுறுத்தாமல் அங்கு செல்ல வேண்டும் என்ற நினைவே அறவே இருக்காது.அந்த அளவுக்கு வேலை வேலை என அதில் ஆழ்ந்து போய் விடுவான். ஆனால் அப்படி அவனைத் தேடும் அன்னை இந்த முறை பத்து நாட்களுக்கு மேலாகியும் அவனை அழைக்கவில்லை.
அவனுக்கோ குமுதாவைப் பள்ளியில் பார்த்துப் பேசி இரண்டே நாட்களில் தாய் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்க, இது என்ன வழக்கமல்லாத வழக்கம் என அந்த எண்ணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்து அன்றோடு பத்து நாட்கள் ஓடி விட்டன.
தன் அன்னையின் தனக்கான தேடலைக் குமுதாவின் வரவு அப்படியா மறக்கச் செய்து விட்டது என்று மனதின் ஒரு மூலையில் கோபம் வேறு. அப்போதே போய் விடலாமா என்று தோன்ற, இல்லை, இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடிகிறது பார்க்கலாம் என முடிவு செய்து கொண்டவன் தன் வீட்டை நோக்கி வண்டியைத் திருப்பினான்.
வீட்டை அடைந்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு தன் தனியறையைத் தஞ்சமடைந்தான்.
கடந்து போன ஒரு வருடமாக இந்த அறைதான் அவன் இளைப்பாற இடம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் அலமாரி முழுக்கப் புத்தகங்கள், இன்னொரு பக்கம் பெரிய பாடல் கேட்கும் கருவி (மியுசிக் சிஸ்டம்) அதனுடன் பல பாடல் குறுந்தகடுகள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு பெரிய மேஜை.
மேஜையின் அருகே, முதுகுப் பக்கத்திலும் உட்காரும் இடத்திலும் இன்னும் கைப்பிடிகள் மற்றும் கால் வைக்கும் இடத்தில் கூட குஷன் வைத்துத் தைக்கப்பட்ட கலைநயம் கூடிய அழகான ஆடும் நாற்காலி. நடுநாயகமாக ஒரு ஒற்றைக் கட்டில் என அவன் மனதுக்கு இதம் தரும் வகையில் அந்த அறையை அமைத்திருந்தான்.
சட்டையைக் கழற்றித் தாங்கியில் இட்டு விட்டு அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு தன் ஆடும் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
சில பக்கங்கள் வாசித்தவனுக்கு ஏனோ மனம் அதில் லயிக்கவில்லை. எழுந்து புத்தகத்தை வைத்து விட்டு ம்யூசிக் சிஸ்டம் இருந்த மேஜையை நோக்கிச் சென்றான்.
துணையாக வரும் என நினைத்த அவன் சொந்தங்கள் யாவும் தாய் உட்பட அவனைத் தனிமைச் சிறையில் தவிக்க விட்டுப் போன பின் நூல்களும் இசையுமே அவன் தனிமைக்குத் துணை.
நிகழ்ந்தவைகள் நிகழ்ந்தவைகளாக நின்று நிலைத்து, நிகழ்காலம் கடந்த காலமாகிக் கடந்து செல்ல முற்படும் வேளையில் பிழை புரிந்தது நீயா நானா என வாதிட்டால் காயங்கள்தான் மிஞ்சுமே ஒழியக் காலங்கள் திரும்பாது என்பதைப் புரிந்து கொண்டிருந்ததனாலேயே அவன் வாழ்வில் பல சங்கடமான தருணங்கள் நடந்தேறி மரகதம் அவனிடம் கோபித்துக் கொண்டு அவன் வீட்டை விட்டு வெளியேறித் தனியாகத் தங்கிக் கொண்ட போதும் அவன் எதையும் தடுக்க முயற்சித்தானில்லை.
குறுந்தகடுகளில் தேடியவன் ஏனோ எதையும் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறினான். வாழ்வில் இனிமேல் காதலோ கல்யாணமோ இல்லை எனத் தீர்மானித்திருந்தவன் காதல் தொடர்பான அனைத்துக் குறுந்தகடுகளையும் எடுத்து அடியில் இருந்த இழுப்பறையில் போட்டிருந்தான். மீதமிருப்பவை ஆன்மீகப் பாடல்களும் தத்துவப் பாடல்களுமே…ஆனால் அவன் இருந்த மனநிலைக்கு இதில் ஒன்றைக் கூடப் போட்டுக் கேட்க முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு.
சில நிமிடங்களிலேயே தன் தேடலில் தோற்றவன் அந்த இழுப்பறையை மூடி விட்டு, தயக்கத்துடனே அடியில் இருந்த இழுப்பறையைத் திறந்தான்.
அதிகம் தேடாமல் மேலாக இருந்த தொண்ணூறுகளில் வந்த பாடல்கள் என்ற குறுந்தகடை எடுத்துப் பொருத்தி விட்டுத் தன் நாற்காலியில் வந்து அமர்ந்தான்.
“குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய்ச் சிவந்ததென்னவோ”
கண்களை மூடியவாறே நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவன் செவிகளில் தேனருவியாய் நுழைந்து வழிந்த பாடலைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.
இந்த இயற்கைக்குக் கூடத் தன் மனநிலை புரியுமோ என்று எண்ணியவனுக்கு இதழ்க்கடையோரம் இளநகை முகிழ்க்க, புன்னகைத்துக் கொண்டே கண்களை மூடி அந்தப் பாடலில் தன்னை, தன் மனத்தைத் தொலைக்க ஆரம்பித்தான்.
காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்குச் சென்றவனுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் காத்திருந்தது.
தன் வழமையான பணிகளை முடித்து விட்டு மின்னஞ்சல்களைப் பார்க்க, அவற்றில் ஒன்று சென்னையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வந்திருந்தது.
கடிதத்தின் சாராம்சம் இதுதான்!
அவனது கடற்சுவை ஊறுகாய்களைத் திருநெல்வேலியில் ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து வாங்கிச் சென்றிருந்தார் அந்த மனிதர். அந்த வாரம் அவரது வீட்டில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்ட பல தரப்பட்ட மக்களையும் ஈர்த்து விட்டது அந்த ஊறுகாய்களின் சுவையும் தரமும்.
ஒருவர் பாக்கியில்லாமல் அவரிடம் வந்து விசாரித்துச் சென்று விட்டனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அரபு தேசத்தில் வசிக்கும் தமிழர் ஒருவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டிருக்க அவர் தனது ஊரில் நடத்தி வரும் உணவகத்துக்காக மொத்தமாகக் கிலோக் கணக்கில் ஊறுகாய் தயாரித்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அந்த நபரின் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், அவரது உணவகத்தின் விலாசம் என அனைத்தும் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருந்தன.
உடனடியாக அலைபேசியில் அழைத்துப் பேசியவன் அவரது சங்கிலித் தொடர் உணவகங்களுக்காக அவர் கேட்ட ஊறுகாயின் அளவைக் கண்டு மலைத்து ஒருகணம் நின்று விட்டான். மறுகணமே சுதாரித்தவன்,
“அனுப்புறதுல ப்ரச்சனை இல்லைங்க.ஆனா எங்க ப்ராண்டுப் பேரோடதான் அனுப்புவோம்.நீங்க ஒவ்வொரு மேஜையிலயும் ஒவ்வொரு பாட்டில்னு வச்சுக்கிடலாம்.அப்பிடி இல்லாம மொத்த வெலைக்கின்னு கொடுக்கிறது பழக்கமில்லங்க”
முதலில் கொஞ்சம் யோசித்தவர் அவனது நிபந்தனை நியாயமாக இருக்கவே ஒத்துக் கொண்டார். அவரிடம் மற்ற விவரங்களையும் பேசி முடித்து அலைபேசியை வைத்தவனின் ஆனந்தத்தை அளவிட முடியவில்லை.
முதலில் இதை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்ற, வினாடியில் குமுதாவின் முகம் அவன் மனக்கண்களில் மின்னி மறைய அவன் வெகுவாகத் திகைத்துப் போனான்.
‘இது என்ன உணர்வு?அவள் சிறு பெண்.’
‘உனக்கு மட்டும் கிழவன் வயதா ஆகி விட்டது? அவளை விட ஏழு வயது மூத்தவன்.அவ்வளவுதானே!’ என ஒரு மனம் இடித்துரைக்க, இல்லை! இது தவறு! அவனுடன் அவளை இணைப்பது எவ்விதத்திலும் சரிவராது எனத் தறிகெட்டோடும் எண்ணங்களுக்குக் கடிவாளமிட்டவன் உடனே மாணிக்கத்தை அழைத்து மின்னஞ்சலின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டான். அவரும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த,
“ஏற்கனவே இது மாரித் தேவைப்படும்னுதான் எல்லாத்துக்கும் மெசினுக்கு ஆர்டர் போட்டிருக்கேன்.காய வைக்குதது மொதக்கொண்டு இஞ்சிப்பூண்டு அரைக்குறது வரை இனி எல்லாத்தையும் மெசினு பார்த்துக்கும். வெளியூருக்குப் போறதுக்கு மாத்திரம்தான் இது.மத்தபடி மத்த வேலைக தொடர்ந்து நடக்கட்டும்.இனி நிக்க நேரமில்ல வாங்க” என்றவன் அவரையும் அழைத்துக் கொண்டு பணிகளைப் பார்க்க விரைந்தான்.
அன்று பள்ளிக்குச் சென்ற குமுதா ஆசிரியர்களின் அறையில் மாணவியரின் கட்டுரை நோட்டுப் புத்தகங்களை வைக்கச் செல்ல, அங்கே அமர்ந்திருந்த உயிரியல் ஆசிரியை சுமித்ரா,
வகுப்புத் தோழிகளிடம் பழைய பள்ளியில் தோழிகள் அழைப்பது போலத் தன்னை ‘மலர்’ என்று அழைக்கும்படி அவள் சொல்லியிருக்க இப்போது அவள் பள்ளியில் சேர்ந்து பதினைந்து நாட்களாகி விட்ட நிலையில் அனைவருமே அவளை ‘மலர்’ என அழைக்க ஆரம்பித்திருந்தனர்.
“சொல்லுங்க மிஸ்!”
“இப்பிடி வா!” என்று அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்துக் கொண்டவர் அவரருகே அமர்ந்திருந்த மற்றொரு ஆசிரியையிடம் “இவதான் நான் சொன்ன மலர்விழி.டென்த்ல கணக்கு, சயன்ஸ் ரெண்டுலயும் சென்டம்.இவ மட்டும் ப்ளஸ்டூல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துட்டான்னா நம்ம ஸ்கூலோட பேரு எங்கேயோ போய்டும்.என்ன மலர்? வாங்கிடுவேல்ல?”
“நிச்சயமா மிஸ்!”
அந்த இன்னொரு ஆசிரியையும் அவளைக் கனிவுடன் பார்த்தாள். அதைக் கண்ட குமுதா,
“இவக யாருன்னு சொல்லலையே மிஸ்!”
“ஆமால்ல. மறந்தே போய்ட்டேன்.இவங்கதான் இனி உங்களுக்கு கெமிஸ்ட்ரி எடுக்கப் போறாங்க.ஏற்கனவே இருந்த கிருஷ்ணவேணி மிஸ்ஸுக்கு உடம்புக்கு முடியலைல்ல.”
“ஓ! வணக்கம் மிஸ்!” என்று வணக்கம் வைத்தவள் “சரி மிஸ்! நான் போகட்டுமா?” எனக் கேட்க
“ம்ம்ம். உன் அத்த மரகதம் நல்லா இருக்காங்களா?” என வினவ
“நல்லா இருக்காக மிஸ்! நீங்க விசாரிச்சீகன்னு சொல்லுதேன்.” என்றவள் தற்செயலாக அந்த வேதியியல் ஆசிரியையின் மீது பார்வையைச் செலுத்த அவர் முகம் முன்னர் கண்டதற்கு மாறாகச் சுருங்கி இருந்தது.
“ஏய் சுமி! மரகதம்னா அந்தப் பண்ணையார் அமுதனோட அம்மாவா?”
“அட ஆமா! உனக்கெப்படித் தெரியும்?”
“தெரியும்.அவங்க வீட்டுப் பொண்ணா இது?” என்று குமுதாவை அவள் இப்போது பார்த்த பார்வையில் மிதமிஞ்சிய ஏளனம் இருந்தது.
“ம்ம்ம்.ஏதோ தூரத்து உறவு போல…” என்றவள் “நீ கெளம்பு மலர்! க்ளாசுக்கு நேரமாச்சுல்ல.” எனவும் குமுதாவும் “சரிங்க மிஸ்!” என்றவண்ணம் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
ஆனால் கதவு தாண்டியதும் ஏதோ மனத்தை உந்த உடனே சென்று விடாமல் கதவுக்குப் பின் நின்று கொண்டாள்.
“அதெல்லாம் என்னிக்கோ நடந்து முடிஞ்ச விஷயம். இப்ப என்னத்துக்கு?”
“என்னிக்கு நடந்தாலும் தப்பு தப்புத்தானே!”
“இதெல்லாம் உனக்கு எப்பிடித் தெரியும்?”
“அவங்க துரத்தி விட்டாங்களே வேதவல்லி, மரகதத்து வீட்டுக்கு வாழ வந்த மருமக. அந்த அமுதனுக்குப் பொண்டாட்டி. அவ என் கூடத்தான் ஸ்கூல்ல படிச்சா”
வெளியில் நின்று ஒரு வார்த்தை விடாது கேட்டுக் கொண்டிருந்த குமுதாவுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.அதிர்ச்சியில் அவளால் அங்கிருந்து எட்டெடுத்து வைக்கக் கூட முடியவில்லை.
“சரி! அடுத்த க்ளாஸ் என்ன உனக்கு?” என அந்த சுமித்ரா பேச்சை மாற்றியதுடன் அவர்கள் வெளியேறவும் தயாராக, சுரணை வந்தவளாக விடுவிடுவென நடந்து அடுத்த திருப்பத்தில் மறைந்தாள் குமுதா.
ஒரு வழியாக வகுப்பறைக்கு வந்து சேர்ந்தவள் தன்னிடத்தில் போய் அமர்ந்து பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாய்க்குள் சரிக்க அருகே அமர்ந்திருந்த செல்லக்கிளி,