அத்தியாயம் -22(2)
“டைம் பன்னெண்டே கால் ஸ்ரீ. கால் அட்டெண்ட் பண்ணல நீ, கதவ தட்டியும் திறக்கல. பயந்து போய் ஸ்பேர் கீ வச்சு டோர் ஓபன் பண்ணியிருக்கோம். மேனேஜர் என்னை டவுட்டா பார்க்கிறார்” என ஓரளவு விளக்கினான் ஜெய்.
“இவர் என் ஹஸ்பண்ட்தான், நீங்க போங்க” என ஸ்ரீ சொல்லவும், “அப்பறம் ஏங்க ரெண்டு ரூம்?” என்றான் மேனேஜர்.
“ஹ்ஹான்… இவளுக்கு பயங்கரமா குறட்டை வரும், அந்த சவுண்ட்ல தூங்க முடியாதுன்னு ரெண்டு ரூம்ல தனித் தனியா தங்கினோம், போதுமா?” கடுப்பாக கேட்டான் ஜெய்.
அப்போதும் சந்தேக கண்ணோடே நின்றிருந்தான் மேனேஜர்.
“உங்க ஓட்டல் பிஸ்னஸ் டெவலப் ஆக ரெண்டு ரூம் எடுக்கிறதா சாமிக்கு வேண்டியிருந்தேன்” வார்த்தைகளை வெட்டி வீசினான்.
“எந்த சாமிக்கு ஸார்?” கெடு பிடியான மேனேஜரை வாரி விட்டு பேசும் ஜெய்யை பிடித்துப் போன பணியாளன் வம்பு பேச்சை வளர்த்தான்.
வீச்சரிவாள் போல கை சைகை செய்த ஜெய், “முனி சாமிக்கு” பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.
“ஹையோ துடியான சாமியாச்சே!” என்ற பணியாளனை முறைத்த மேனேஜர், “எதா இருந்தாலும் ரிசப்ஷனுக்கு கூப்பிடுங்க மேடம்” என ஸ்ரீயிடம் சொன்னான்.
“ஒரே எலித் தொல்லை, புடிச்சுகிட்டு போப்பா நீ” மேனேஜரை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே பணியாளனிடம் சொன்னான் ஜெய்.
‘சரியான கடுப்பெடுத்தவன்!’ மனதுக்குள் திட்டிக் கொண்டே பணியாளனோடு வெளியேறினான் மேனேஜர்.
“வர்றவய்ங்க பூரா இம்சைகளா இருப்பானுங்க போல” ஜெய் முணு முணுக்க, அவளோ அவனைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.
“மனுஷனை டென்ஷன் பண்ணி விட்டுட்டு என்னை எதுக்கு முறைக்கிற?” எனக் கேட்டான்.
“எனக்கு குறட்டை வருமா?” கோவப்பட்டாள்.
அத்தனை நேர படபடப்பு, பயம், எரிச்சல் எல்லாம் ஜெய்க்கு குறைந்து விட்டது. அவளின் அந்த கோவத்தில் லேசான சிரிப்பும் துளிர் விட்டது.
“சொல்லுங்க நான் குறட்டை விடுவேனா? நீங்கதான் இம்சை, உங்க கூடத்தான் பக்கத்துல நிம்மதியா தூங்க முடியாது, ஃப்ரீயா படுக்க விடாம நீங்கதான் ஆள அரைச்சு ஊதுவீங்க. மூச்சு கூட விட முடியாம போற அளவுக்கு…” என சொல்லிக் கொண்டிருந்தவள் அவனது கடினப் பார்வையில் வாயை மூடிக் கொண்டாள்.
நேற்றைய இரவில் அறைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவளுக்கு நல்ல வாந்தி, தலைவலியும் எடுத்திருந்தது. நேரம் சென்றுதான் உறங்கியிருந்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் எந்த ஓசையும் அவளின் காதில் விழுந்திருக்கவில்லை.
அவனுக்கு விளக்கம் சொல்லி விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள். சாப்பிடுகிறாயா என அவன் கேட்டதற்கு சற்று நேரம் உறங்க விடுங்கள் என்றாள்.
அவன் மீண்டும் அவனுடைய அறைக்கு செல்லவில்லை, அங்கேயே அமர்ந்து விட்டான். சற்று நேரம் அனுபவித்த பயம் அவளை விட்டு அகல முடியாத படி அவனை செய்து விட்டது.
‘இப்போதைக்கு எழவே மாட்டேன்’ எனும் விதமாக உறங்கிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. மதிய சாப்பாட்டுக்கான நேரமே வந்து விட்டது. உணவை அறைக்கு வரவழைத்து சாப்பிட்டவனுக்கு அதற்கு மேல் எப்படி பொழுதை ஓட்டவென தெரியவில்லை.
அங்கிருந்த சோஃபா பெரிதாக இல்லை. படுத்தால் அவனது கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. அப்படியும் சில நிமிடங்கள் படுத்து பார்த்தான். மிகுந்த அசௌகரியமாக உணர்ந்தவன் ஸ்ரீயின் பக்கத்திலேயே படுத்து விட்டான்.
உட்கார்ந்திருந்த வரை ஏசி குளிர் அவ்வளவாக தெரியவில்லை. படுத்த பின் படுத்தி எடுத்தது. ஏசியின் அளவை குறைத்தால் எழுந்து கொள்வாளோ என நினைத்தவன் அவள் போர்த்தியிருந்த கம்பளியையே தனக்கும் போர்த்திக் கொண்டான்.
ஆனால் உறங்காமல் வெறுமனே கண்களை மூடி படுத்திருந்தான். விடியற்காலையிலிருந்து ஒய்வறை செல்லாதவளுக்கு அடி வயிறு முட்டியது. ஆனால் உறக்கமும் முழுதாக கலையவில்லை. புரண்டு புரண்டு அவளின் தலை கட்டிலின் கால் மாட்டுக்கு சென்று விட்டது.
போர்த்தியிருந்த கம்பளியையும் இழுத்து இழுத்து இன்னொரு பக்கம் தள்ளியிருந்தாள். குளிருக்கு இதமாக கைகளை கட்டிக் கொண்டவன் வேடிக்கை போல அவளை பார்த்திருந்தான். அவன் பக்கமாக புரண்டவள் காலை தூக்கி நச்சென அவளின் மார்பில் வைத்தாள்.
நொடி நேரம் அதிர்ந்தாலும் உடனே இயல்பாகி அவளின் காலை விலக்கி விடாமல் அப்படியே விட்டான். கால் விரலில் கிடந்த மெட்டியை பார்த்துக் கொண்டிருந்தான்.
லேசாக அசைந்தவள் மார்பில் கிடந்த காலை அடுத்து அவனது முகத்தில் போட்டாள். அவளின் கால் கொலுசின் திருகாணி போடும் பகுதி அவனது மூக்கை காயப்படுத்தியது. ஜெய்க்கு நன்றாக வலித்து விட்டது. சுள் என ஏறிய கோவத்தில் அவள் காலை பட்டென படுக்கையில் போட்டு எழுந்து கொண்டான்.
அவளுக்கும் காலில் அந்த இடம் கொஞ்சம் அழுந்திப் போயிருக்க ஜெய் காலை எடுத்து போட்டதில் லேசான வலி ஏற்பட்டது. கூடவே இயற்கை உபாதையும் படுத்த விழித்து விட்டாள்.
கண்களை கசக்கி நன்றாக அவள் பார்க்க மூக்கில் இரத்தம் வழிய நின்றிருந்தான் ஜெய். பதறிப் போய் எழுந்தவள், “என்னாச்சு?” எனக் கேட்டாள்.
“எம்மேல உள்ள கோவத்தை இப்படி தீர்த்துக்க நினைச்சியா?” எனக் கேட்டவன் மூக்கில் கை வைத்துப் பார்க்க இரத்தம் வந்து கொண்டே இருந்தது.
வாஷ் பேஷனில் அவன் கழுவிக் கொள்ள இவளும் அவனருகில் சென்று பார்த்தாள். மூக்கு நுனியில் சற்றே ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. வேகமாக ஓய்வறை சென்று வந்து பின் ரிஷப்ஷனுக்கு அழைத்து முதலுதவி பெட்டியை எடுத்து வர சொன்னாள்.
இந்த வினோத தம்பதியினரால் ஏதாவது அசம்பாவிதம் ஆகிப் போகுமோ என ஏற்கனவே பயத்திலிருந்தான் மேனேஜர். இப்போது முதலுதவி பெட்டியை கேட்கவும் பணியாளனோடு சேர்ந்து அவனும் சென்று விட்டான்.
“இன்னிக்கு நேரமே சரியில்லை” அலுத்துக் கொண்டே கதவை தட்டினான் மேனேஜர். பாதிக்கதவை திறந்த ஜெய் முதலுதவி பெட்டிக்காக கை நீட்டினான்.
“ஸார்… அந்த மேடம் எங்க? என்னாச்சு உங்களுக்கு? ரெப்யூட்டட் ஓட்டல் ஸார் இது, போலீஸ் கேஸ் ஏதாவது ஆனா நல்லா இருக்காது. எப்ப ஸார் கிளம்புறீங்க?” என்றான் மேனேஜர்.
ஜெய்க்கு கோவம் வந்து விட்டது, முழுக் கதவையும் திறந்து விடாமல், “உங்க அஃபிசியல் சைட்லா என்னென்னமோ கிறுக்கி வச்சிருந்தீங்க, இதுதான் உங்க தி பெஸ்ட் கஸ்டமர் கேர் லட்சணமா, உங்க ஓட்டலுக்கு அஞ்சு ஸ்டார் போட்டவன்லாம் யாரு உங்க ஆளுங்களேவா?” என அவனோடு வாக்குவாதம் செய்தான்.
“என்ன செய்றீங்க நீங்க, தேவையில்லாத சண்டை வேணாங்க. பிஹேவ் வெல்” பின்னாலிருந்து சொன்ன ஸ்ரீயை சுள் என பார்த்து வைத்த ஜெய், “அத கொடுத்திட்டு கிளம்புங்க” என்றான் மேனேஜரிடம்.
கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்து விட்ட மேனேஜர் ஸ்ரீ நன்றாக இருப்பதை பார்வையால் உறுதி செய்து, “ஓகேதானே மேடம் எல்லாம்?” என விசாரிக்க வேறு செய்தான்.
ஜெய்யின் கோவ மீட்டர் உயர்வதை கண்டு கொண்டவள் அவனிடம் சென்று அழுத்தமாக அவனது கையை பற்றிக் கொண்டாள். மனைவியின் இந்த திடீர் செய்கையில் சற்றே அமைதியடைந்தான் ஜெய்.
“இவருக்கு எப்படிங்க காயம் ஆச்சு?” என ஸ்ரீயிடம் கேட்டான் மேனேஜர்.
பொருத்தமாக என்ன பொய் சொல்வதென சட்டென அவளுக்கு புரிபடவில்லை. அவளின் அந்த தடுமாற்றம் மேனேஜரின் சந்தேகத்தை இன்னும் வலுப் படுத்தியது.
“இருந்திருந்து என் டூட்டி நேரத்துலயா இதெல்லாம் நடக்கணும்? உங்க சண்டையை உங்க வீட்ல போய் வச்சுக்கோங்க, அடிதடிக்கான இடம் இதில்லை, ப்ளீஸ் கிளம்புங்க நீங்க, இல்லைனா போலீஸ் கூப்பிடுவேன் நான்” என்றான் மேனேஜர்.
மனைவியை மீறிக் கொண்டு ஜெய் எகிறி வர, “என்னங்க ப்ளீஸ், அவர் மேல தப்பில்ல, இங்க நடக்கிறது அவருக்கு டவுட் உண்டாக்குது, செவனேன்னு இருங்க” என சொல்லி அவனை அணைத்து பிடித்துக் கொண்டாள் ஸ்ரீ.
மேனேஜர் முகத்தில் சங்கடமும் பயமும் அப்பட்டமாக தெரிந்தது.
“ஸார் இப்போ அரை மணி நேரத்துல கிளம்பிடுவோம் நாங்க. ப்ளீஸ் லீவ் அஸ் அலோன்” என சொல்லி மேனேஜரை அனுப்பி வைத்த ஸ்ரீ, ஜெய்யை விட்டு கதவை தாழிட்டு வந்தாள்.
“உனக்கு வேற ஓட்டலே கிடைக்கலியா?” அவளிடம் கோவமாக கேட்டான்.
ஜெய்யின் மூக்கிலிருந்து இரத்தம் கசிவது நின்றிருந்தது. அவனுக்கு பதில் சொல்லாமல் முதலில் முதலுதவி செய்தாள். மூக்கில் பிளாஸ்டர் போடப் பட்டிருக்க கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டவன், அவளை கடுப்பாக பார்த்தான்.
“ரெண்டு நாள்ல சரியாகிடும். உங்க திங்ஸ் இருந்தா பேக் பண்ணனுங்க, நாம கிளம்பலாம்” என்றாள்.
“அவன் சொன்னா போகணுமா? இரு, நாளைக்கு கிளம்பலாம், என்ன பிடுங்கி கிழிக்கிறான்னு பார்க்கிறேன்” வீம்பாக சொன்னான் ஜெய்.
“நீங்க ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க, நான் போகணும், ஏற்கனவே அரேஞ் பண்ணியிருந்த கேப் வர சொல்லி போயிக்கிறேன்” என்றாள்.
“போடி போ!” என அவன் இரைந்தான்.
‘நீயெல்லாம் திருந்தவே மாட்டாய்’ என்பது போல பார்த்தவள் அடுத்து அவளின் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தாள்.
“ஒரு கோவத்துல சொன்னா நிஜமாவே கிளம்புவா. விட்டுட்டு போறதிலேயே குறியா இருக்கிறவ கல்யாணம் அன்னிக்கே முடியாதுன்னு போ வேண்டியதுதானே? தாலிய கட்டிகிட்டு வாழவும் செஞ்சிட்டு இஷ்டத்துக்கு போவா, கட்டிக்கிட்ட நான்…”
“ஆமாம் நீங்க இளிச்சவாய்தான்!” அவனது வாக்கியத்தை நிறைவு செய்தாள் ஸ்ரீ.
அவன் தாடை இறுக அவளை பார்த்தான். பெட்டியை மூடியவள் மாற்று ஆடை எடுத்துக் கொண்டு குளிக்க குளியலறை சென்று விட்டாள். அவள் வந்த பிறகு வரவழைத்திருந்த உணவை அவளிடம் சுட்டிக் காட்டினான். அவள் சாப்பிட அமரவும் அமைதியாக அவனது அறையை காலி செய்து வந்தான்.
சொன்னது போல வேறு கேப் அழைத்திருக்கவில்லை அவள். அவனுக்காகத்தான் காத்திருந்தாள்.
திருச்சியை நோக்கி அவர்களின் பயணம் அமைதியாக தொடங்கியது. இடையில் தேநீருக்காக இரவு உணவுக்காக என நிறுத்தினான். தேவையான பேச்சுக்கள் மட்டுமே.
நள்ளிரவில் திருச்சி வந்தனர்.
“அம்மா வீட்ல விடுங்க” என அவள் சொல்ல அமைதி காத்தான்.
“உங்ககிட்டதான் சொல்லிட்டு இருக்கேன்” என்றாள்.
எதுவுமே சொல்லாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான். எங்கு வேண்டுமோ செல்லட்டும், என்ன அடைத்தா வைக்க போகிறான் நானே போய்க் கொள்வேன் என நினைத்தவளும் அமைதியாகி விட்டாள்.
அவளின் அம்மா வீட்டிற்குத்தான் அழைத்து சென்றான். அவனே ஜோதிக்கு அழைத்து தகவல் சொன்னான். கதவு திறந்து கொண்டு வந்தவர் மகளை அணைத்துக் கொண்டார். கண்ணீரை அடக்க பெரும் பாடு பட்டார். ஸ்ரீயும் உணர்ச்சி மயமாக இருந்தாள்.
அம்மாவையும் மகளையும் கண்டு கொள்ளாமல் அவளது உடமைகளை வீட்டில் போய் வைத்தான்.
“ஹையோ தம்பிய வாங்கன்னு கூட சொல்லலை” என்ற ஜோதி மகளை விட்டு வீட்டிற்கு சென்றார். அவனை அழைத்தவர் அவனது காயத்தை பற்றி விசாரித்தார்.
“உங்க பொண்ணுதான், ஏற்கனவே மூக்க உடைச்சிட்டு போனது பத்தாதுன்னு திரும்பவும் உடைச்சிட்டா” என வேடிக்கையாக சொன்னான்.
கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ சலிப்பாக பார்த்தாள். ஜோதி என்ன சொல்ல என விழித்தார்.
“நான் வர்றேன் அத்தை” என்றவன் ஸ்ரீயை பார்த்தான். அவள் அவனை சந்திக்க மறுத்து தலையை குனிந்து கொண்டாள்.
சிறு ஏளன சிரிப்போடு வெளியேறி விட்டான் ஜெய்.