இருவருக்கும் எதாவது நடந்திருக்குமா? தன் ஆட்களிடம் விசாரிக்க, “ஏதோ சண்டை தான் ரவி, சட்டையை பிடிச்சுட்டு நின்னாங்க. நாங்க  விலக்கிவிட்டோம். காரணம் தெரியலை. செல்வா தான் கூட இருந்தான்” என்று பதில் வந்தது.

அடுத்து செல்வமும் அழைக்க, “உனக்கு என்னடா?” என்று ரவி கேட்டிருந்தான்.

“எனக்கு என்னன்னு சொன்னா செஞ்சிடுவியா? இல்லை என்னை தான் செய்ய விட்டுடுவியா?” என்று அவன் எகிறினான்.

ரவி போனை எடுத்து மீண்டும் காதுக்கு கொடுத்தவன், “உங்களை எல்லாம் நடுராத்திரி பேய் ஏதும் பிடிச்சிருச்சா?” என்று கேட்டான்.

“பேய் அறைஞ்சா எப்படி இருக்கும்ன்னு வாங்கி பார்த்துட்டு சொல்றியா?” என்று செல்வம் கேட்க,

“சரி தான். விஷயத்துக்கு வா. என்ன பங்காளிங்க ரெண்டு பேரும் சண்டை போட்டாங்களாமே?” என,

“உன் அப்பா என்ன அவ்வளவு நல்லவரா?”

“அவர் உனக்கு கண்டிப்பா நல்லவர் இல்லை தான்”

“அவளுக்கும் அவர் நல்ல அப்பா இல்லை தான்” என்றான் செல்வம்.

“ஏன் உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னதாலவா?”

“நீ கூட தான் சொல்ற. அதை அப்புறம் பார்ப்போம். அன்னைக்கு அண்ணாச்சி பேச்சை கேட்டு ஆடும் போது உன் அப்பாக்கு சுகமா இருந்துச்சா? இப்போ என்னமோ அவளோட பேர் உள்ள வரவும் அந்த குதி குதிக்கிறார்?

“நாச்சியா? அவ பேர் ஏன் அங்க வந்துச்சு?” அண்ணன் டக்கென சீரியஸ் ஆனான்.

“நான் அங்க இருந்ததுல வந்திருக்கும். செல்வம் இருந்தா கூட முத்துவும் இருக்கும் தானே” என்றான் இவன்.

“செல்வா” பல்லை கடித்தான். “விஷயத்தை சொல்லாம இதென்னடா?”

“போய் உன் அப்பாவையே கேட்டுக்கோ. அப்படியே பங்காளிங்ககிட்ட  இதையும் சொல்லு இன்னொரு முறை அவளை வைச்சு பேச்சு ஏதும் வந்துச்சு, அப்புறம் வேற செல்வாவை தான் அவங்க பார்க்க வேண்டி இருக்கும்”” என்று வைத்துவிட்டான்.

இன்னமும் மனதே ஆறவில்லை. முத்து பொண்ணை வைச்சு அரசியல்?

அங்கேயே தங்கி விட்டான். நடப்பது அவனுக்கு நல்லதாக தெரியவில்லை.

‘உன்னை பார்க்கணும் போல இருக்கு. ஊருக்கு போறதுக்குள்ள பார்க்கலாம்ன்னு சொன்ன, லீவ் முடியுது” என்று போனில் முத்து பெண்ணுக்கு தொடர்ந்து மெசேஜும் அனுப்பினான்.

‘என்னை பார்க்காம போன அங்கேயே வந்து நிப்பேன்’ என்ற மிரட்டல் விடுத்தான்.

‘நான் புதுக்கடையில தான் இருக்கேன்’ என்றும் தகவல் சொன்னான்.

உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்பு, எப்படியும் காலையில தான் கிளம்புவா. இங்க வருவா என்று

முத்து பெண் அவனுக்காக கொடுத்த கேபினில் அமர்ந்தான். பாஸ் சேர். நன்றாக வசதியாக இருந்தது.

சில பல நிமிடங்கள் தூங்கிவிட்டவன் முகத்தில் பிடிக்கா பாவனை. கனவிலும் பங்காளிகள் வந்து அடித்து கொண்டு அவனை எழுப்பிவிட்டனர்.

“ம்ப்ச்” நேரம் பார்த்து வாசலை பார்த்தான்.

இருக்கிற கடுப்புக்கு இவளை பார்த்தா தான் சரியாவேன்!

வராம போயிடுவாளா? எழுந்து கொண்டவன், அவளுக்கு அழைத்தேவிட்டான்.

“என்னங்க” என்றாள் அவள் எடுத்து கிசுகிசுப்பாக.

செல்வத்திற்கு அந்த அதிகாலை நேரம் சிலிர்த்து போனது. “எப்போ வர என்னை பார்க்க?” என்று அவளை போலவே கேட்டான்.

“அங்கவா?” என்றவள் பார்வை கதவுக்கு வெளியே போனது. நாச்சியுடன் யார் செல்வது என்று ரவியும், அவளின் அப்பாவும் பேசி கொண்டிருந்தனர்.

வரலை என்று சொல்ல முடியாமல் நின்றாள். “கிளம்பிட்டியா?” செல்வம் கேட்க,

“ம்ம்ம்” என்றாள்.

“வா. டீ போட்டு வைக்கிறேன். என்னோட ஸ்பெஷல் டீ” என்று வைத்தான்.

ரவி தங்கையுடன் கிளம்புவது என்று முடிவாக, இருவரும் கார் எடுத்தனர். “ண்ணா. டீ குடிக்கலாமா?” நாச்சி கேட்டாள்.

“எப்போவும் போற கடைக்கு போலாம் நாச்சி” அவன் சொல்ல,

“இல்லைண்ணா. அவர் கடைக்கு”

“வேண்டாம்” ரவி உடனே மறுத்துவிட்டான்.

“எனக்கு போகணும்ண்ணா” நாச்சி கொஞ்சம் பிடிவாதமாகவே சொன்னவள், காரை செல்வம் கடை பக்கம் விட்டாள்.

“இதுக்கு தான் நீ கார் எடுத்தியா? என்ன பண்ணிட்டிருக்க? அப்பாக்கு மட்டும் தெரிஞ்சா நாம காலி. ஏற்கனவே மனுஷன் நைட்டெல்லாம் தூங்காம தான் நடந்திட்டு இருந்தார்”

“ஏன் என்னாச்சு?”

“இப்போ கேளு. எனக்கே தெரியல, செல்வமும் சொல்ல மாட்டேங்கிறான்”

“சொல்லுவார்ண்ணா. நான் கேட்கிறேன்” என்றவள் காரை செல்வம் கடை முன் நிறுத்தினாள்.

“நாச்சி என்னை கோவப்படுத்தாத” என்று அண்ணன்காரன் சத்தமிட, அவளோ இறங்கியும் கொண்டாள்.

ரவி தான் வேறு வழி இல்லாமல் காரை பின்பக்கமாக நிறுத்த சென்றான். ஆட்களின் தலை அங்கங்கு தெரிய ஆரம்பிக்க, நாச்சி நிமிர்ந்து கடையை பார்த்தாள்.

நிறைவாக இருந்தது. ஒற்றை லைட் மட்டும் பளிச்சென வெளிச்சம் கொடுக்க, நாச்சி கவனமாக வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.

காரின் சத்தத்தில் உள்ளிருந்து வந்த செல்வம் அவளையே பார்த்திருக்க நேரே அவன் முன் சென்று நின்றாள்.

“அடுத்த முறை நாம இரண்டு பேரும் ஒண்ணா உள்ள வரணும்” என்றான்.

“நடக்கும்” பெண் நம்பிக்கையாக சொல்ல,

“என்ன நடக்கும்?” என்று கேட்டபடி வந்தான் ரவி.

“என்னடா இன்னும் வில்லனை காணோம்ன்னு பார்த்தேன்” செல்வம் உர்ரென்று சொன்னான்.

“வில்லனா? நானா? அப்போ சார் யார், ஹீரோவா?” ரவி கேலியாக கேட்க,

“அவளுக்கு நான் ஹீரோ தான்டா” என்றவன், முத்து பெண்ணுக்கு மட்டும் டீ எடுத்து வந்தான்.

“எனக்கு?” ரவி கேட்க,

“வில்லனுக்கு எல்லாம் டீ கொடுக்கிறதில்லை” என்றவன் நாச்சியின் முகத்தையே ஆர்வமாக பார்த்திருந்தான்.

அவள் ஒரு சிப் குடித்து, சுவையில் கண்களை மூடி திறந்தவள், “சூப்பர்” என்றாள்.

செல்வம் அவளுக்காக அவனின் பாஸ் சேரை எடுத்து போட, “இதெல்லாம் ஓவர்டா” என்றான் ரவி கடுப்பாக.

“இருந்துட்டு போகட்டும்” என்றவன், “கடை எப்படி இருக்கு?” என்று அவனின் முத்து பெண்ணுக்காக எல்லா லைட்டையும் போட்டு வெளிச்சமாக காட்டினான்.

“ரொம்ப நல்லா இருக்கு” அவள் குடித்தபடி கடையை சுற்றி பார்க்க, அவளின் பின்னால் போக பார்த்த செல்வம் கையை பிடித்து நிறுத்தினான் ரவி.

“ச்சு ஏண்டா?” செல்வம் கோவப்பட,

“கைட் வேலை பார்க்க எல்லாம் இங்க ஒண்ணுமில்லை. அவளே பார்த்துட்டு வரட்டும். நீ என்னோட இரு. இல்லை எனக்கு டீ போட்டு எடுத்துட்டு வா” என்றான்.

“முடியாது. அவளுக்கு மட்டும் தான் என்னோட கையால டீ” என்றான் நண்பன்.

“இதுக்காகவே அவளை உனக்கு கொடுக்க கூடாதுன்னு தோணுதுடா”

“மச்சான்” புரிந்த செல்வம், பாய்ந்து அவனை கட்டி கொண்டான்.

“டேய் விட்றா. விடு முதல்ல, டேய்” ரவி அவனை விலக்கி தள்ளினான்.

ரவி அவனின் மனதை மாற்ற முயற்சிக்கிறான் என்பதே செல்வத்திற்கு மிக பெரிய மகிழ்ச்சி.

நாச்சி ஆர்வமாக இருவரிடம் வந்தவள், “என்ன, ஏன் அண்ணாவை கட்டி பிடிச்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“இவனுக்கு வேற வேலை இல்லை” என்ற ரவி கிட்சன் உள்ளே செல்ல,

“உன்னை கட்டி பிடிக்க தான், அவனை கட்டிப்பிடிக்கிறேன்” என்றான் செல்வம் இமைசிமிட்டி.

பெண் புரியாமல் பார்க்க, அவளை கை பிடித்து அவனின் இருக்கையில் அமர வைத்தவன், “உன் அண்ணன்  நமக்காக யோசிக்கிறான். சீக்கிரம் ஓகே சொல்லிடுவான் நினைக்கிறேன்” என்றான்.

நாச்சிக்கும் மகிழ்ச்சி. “உண்மையாவா சொல்றீங்க?” என்று கேட்டவள், “தேங்க்ஸ்ண்ணா” என்றாள் சத்தமாக.

ரவிக்கு ஆயிரம் யோசனைகள் இருந்தாலும், இவர்களின் மகிழ்ச்சி அவனின் முகத்திலும் புன்னகையை கொண்டு வந்தது.

“அப்போ சீக்கிரம் நாள் பார்த்திடலாம்” செல்வம் சொல்ல,

“அப்பா” என்றாள் பெண் அவரை நினைவுபடுத்தி.

செல்வத்தின் மனநிலை அப்படியே மாறிப்போக, “அவரை பத்தி பேசாத” என்றான்.

“ஏன்? அண்ணா கூட ஏதோ சொல்லிட்டிருந்தான்”

“பேசாதன்னு தானே சொன்னேன். திரும்ப திரும்ப கேட்டுட்டு”

“எதுக்கு சட்டுன்னு இவ்வளவு கோவம்?”

“வருது. இப்போ என்ன? நீ முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நாள் பார்த்திடலாமா?” என்று கேட்டான். அதில் கொஞ்சம் அடமும் இருந்தது.

“நடக்கிறதை பேசுங்க” அவள் அங்கிருந்து எழ முயல,

அவள் தோள் தொட்டு திரும்ப அமர வைத்தவன், “ஏன் நடக்காது?” என்று கேட்டான்.

“அப்பா விட மாட்டார். இன்னும் சில விஷயங்கள் அப்டியே தான் இருக்கு” என்றாள் முத்து பெண்.

“அவர் என்ன விடுறது? நீ அவர் பொண்ணா இருந்தது போதும். செல்வத்தோட பொண்டாட்டியா மாறினா தான் எல்லாம் சரியாகும்” என்றான் தீவிரமாகவே.