தலைகீழ் நேசம்!

24

நந்தித்தா, இரவு வீடு வந்தாள்.. தன் அன்னை மாமியாரோடு.

காலை ஆறுமணிக்கு மேல் பிரகதீஷ் வந்து சேர்ந்தான் தன் அண்ணி வீட்டிற்கு.

நந்தித்தாதான் கதவு திறந்தாள். “வா பிரகதீஷ்” என்றாள்.

பிரகதீஷ் “என்ன அண்ணி, இப்படி ஆகிட்டீங்க.. உங்களை இப்படி பார்க்கவே நல்லா இல்ல” என்றான்.

நந்தித்தா தயக்கமான புன்னகையோடு என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் “அதெல்லாம் ஒண்ணுமில்ல. காபி கொடுக்கவா” என்றாள்.

பிரகதீஷ் அமர்ந்து வீட்டினை சுற்றி பார்வையை ஓட்டினான்.

அன்னையை காணோம்.. அமர்ந்துக் கொண்டே “எங்க அண்ணி.. அம்மா” என்றான்.

நந்தித்தா பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்படியே அண்ணியோடு பேசிக் கொண்டிருந்தான் எங்க வேலை.. எப்போது கிளம்புவீங்க.. என பொதுவான பேச்சுகள். 

பிரகதீஷ் காபி குடித்து முடித்த பிறகு “அண்ணி, அண்ணன் எவ்வளோ கஷ்ட்டபட்டான் தெரியுமா.. நீங்க போன பிறகு..” என்றான், உண்மையான குரலில்.

நந்தித்தாவிற்கு இந்த செய்தியை காதில் விழவும்.. என்ன பதில் சொல்ல முடியும் என எண்ணிக் கொண்டு நகர்ந்து செல்ல நினைத்தாள்.. பிரகதீஷ் “ஆனால், நீங்க இப்படி ஆவீங்கன்னு நான் நினைக்கலை அண்ணி.. ஏன் இவ்வளோ கஷ்ட்டப்படுறீங்க. நீங்க நல்லா இல்லைன்னு உங்களை பார்த்தாலே தெரியுது. ஏன் இவ்வளோ கஷ்ட்டபடுறீங்க.. நீங்க வந்திடுங்க அண்ணி நம்ம வீட்டுக்கு” என்றான் பாசமாக.

நந்தித்தா புன்னகைத்தாள்.. நேற்றுதான் கணவன் நடந்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தானே.. இப்போது, பிரகதீஷும் எதோ தன் கணவன் எல்லாவற்றையும் சரியாக செய்தது போல.. இப்போது நான் கஷ்ட்டபடுகிறேன் என்கிறானே.. என விரகத்தி புன்னகை.

பிரகதீஷ்க்கு அது புரிய “இல்ல, அண்ணி.. எனக்கு இதெல்லாம் எதோ புரியுது. அண்ணன் சைடு தப்பு இருக்குன்னு, அதுக்கு நீங்க ஏன் கஷ்ட்டபடுறீங்க.. உங்களை பார்க்கவே முடியலை.. என்னமோ மாதிரி டல்லா இருக்கீங்க.. எதோ ஏஜ்ஜிடு லுக் அண்ணி.. எனக்கு.. எங்களுக்கு உங்களை பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு.. அண்ணன் தப்பு பண்ணினான்.. ஆனால் அது.. அதுவாக வந்தது.. அவன் தேடி போகலை அண்ணி.. அவன் அப்படிப்பட்டவன் இல்லை. உங்களுக்கு தெரியும்.. ஆனாலும், சொல்லனும்ன்னு தோணிச்சு” என சொல்லி.. அண்ணியின் முறைப்பில் அமைதியானான்.

நந்தித்தா “நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.. பிரகதீஷ்” என்றவள் கிட்சென் சென்றாள்.

பிரகதீஷ் “நாம சீரியஸா பேசினா ஒத்துக்கமாட்டாங்க போல” என முனகிக் கொண்டே சோபாவின் படுத்துக் கொண்டான்.

இப்போது, வீடே விழித்துக் கொண்டது. மருத்துவமனை செல்ல.. பிரகதீஷை கவனிக்க என வீடு அசதியாக தன் வேலையை தொடங்கியது. 

யாரும் யாருடனும் பேசவில்லை.. ஒரு மௌனம் நீண்டது, இரவு நேடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. ஆனால், அதிகாலையில் ஒரு சோகம் வந்து விட்டது எல்லோரிடமும்.

அமுதா, காலை உணவினை எடுத்துக் கொண்டு.. மருத்துவமனை சென்றிருந்தார்.

பிரகதீஷ் சற்று நேரம் உறங்கிவிட்டு இரண்டுமணி நேரம் சென்று எழுந்தான்.

நந்தித்தா தன் அன்னையோடு வாக்குவாதத்தில் இருந்தாள்.. அன்னையோ “என்ன நந்து இது.. அவங்க எல்லாம் இருக்காங்க.. நீ இருக்கணும். உனக்கே தெரிய வேண்டாமா.. மாப்பிள்ளையை பார்க்க வேண்டாமா.. உன்னை பார்க்கத்தானே வந்திருக்கார்..” என்றார்.

நந்து “சொல்லிட்டேன்.. நேற்றே லீவ் போட்டாச்சு.. இன்னிக்கு என்னால் முடியாது. அதெல்லாம், பிரகதீஷ் வந்துட்டாறாரே, அவங்க மேனேஜ் செய்துப்பாங்க” என்றாள்.

இப்போது மாமனாரும் தந்தையும் வர.. நந்தித்தா அவர்களுக்கு தேவையானதை கவனித்தாள்.

பெண் தயாராகி இருப்பதை பார்த்து தந்தை “என்ன ம்மா.. ஹாஸ்ப்பிட்டல் கிளம்பிட்டியா” என்றார்.

நந்தித்தா உள்ளே சென்றுக் கொண்டே “இல்ல பா, காலேஜ் போறேன். நேற்றே லீவ். இன்னிக்கு கண்டிப்பா நான் போகனும். நான் ஜஸ்ட் ட்ரைனி ஸ்டாப்” என்றாள்.. குரல் தந்தையிடம் கொஞ்சம் கடுப்பாகவே வந்தது.

ஒன்றும் பேசவில்லை அதன்பின் யாரும்.

நந்தித்தா கிளம்பிவிட்டாள் கல்லூரிக்கு.

அங்கே மருத்தவமனையில் பசுபதி, எழுந்து பணியாளரின் உதவியோடு தன் வேலையை பார்த்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான், அவனின் முழு எண்ணமும் மனையாள் எப்போது வருவாள் என்று மட்டுமே இருந்தது.

அன்னை, பால்.. காலை உணவு எடுத்து வரவும்.. கொஞ்சம் தளர்ந்து போனான். மனையாள் வருகிறாளா என எட்டி வாயில் பார்த்தான்.. வரவில்லை. நிறைய ஏமாற்றம்தான். காலை உணவு உண்டுவிட்டு மாத்திரைகள் எடுத்துக் கொண்டு சற்று சாய்ந்து அமர்ந்தான். உறங்கிவிட்டான்.

ஆனால், இப்போது அவனின் போனில் அழைப்புகள் வர தொடங்கிவிட்டது.

அவனின் அலுவலகத்திலிருந்து அழைப்புகள் அவன் உடல்நலம் விசாரித்து. அடுத்து நண்பர்கள் என மாறிமாறி அழைப்புகள்.. பசுபதி கண்களை மூடுவது.. மீண்டும் அழைப்பில் பேசுவது என நேரம் சென்றது.

ஓய்ந்து போனான்.. உடல்வலிதான் அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிந்தது.. ஆனால், அவனுக்கு விடை வேண்டிய நேரத்தில்.. தன்னவளை காணவில்லை இன்னமும். நேற்றே எல்லாம் சொல்லிவிட்டேனே.. என மனது தன்னையும் அவளையும் எண்ணிக் கொண்டே இருந்தது. மீண்டும் அழைப்பு.

ச்ச.. நேற்று முழுவதும் முழு ஓய்வில் இருந்தேனே.. போன் பற்றி எண்ணமே இல்லையே..’ என சட்டென நினைவு வந்தது. எப்படி.. என.

ஆராய நேரமில்லை. உற்றநண்பன் அழைத்திருந்தான்.. “டேய்.. எந்த ரூம் டா..” என்றான் அழைப்பினை ஏற்றதும்.

யோசனையோடு அறையின் எண்.. தன் அன்னையிடம் கேட்டு சொன்னான். நண்பர்கள் மூவர் வந்துவிட்டனர், ஐந்து நிமிடத்தில்.

பசுபதிக்கு அவர்களை பார்த்ததும் முகம் தெளிந்தது. தன் சொந்தகதையை விட்டுவிட்டு.. சற்று நேரம் என்ன நடந்தது என பேச தொடங்கினான். கேலியும் கிண்டலுமாக பேச்சு சென்றது.

அப்போதுதான் “நேற்று உன் வைப்கிட்ட தான் பேசினேன். அப்போதான் தெரிந்தது. உனக்கு அக்ஸிடென்ட்’ன்னு..” என் சொல்லி கோர்வையாக பேச தொடங்கினான்.

பசுபதி நீண்ட நாள் சென்று.. தங்களின் உறவை ஒருவர் சொல்லி கேட்க்கிறான்… ஒருமாதிரி இதமாக இருந்தது.. ‘ம்.. என் வைப்.. ஆமாம், எனக்கு எதோ என்றால்.. அவள்தானே பார்க்கணும்..’ என ஆனந்தமாக எண்ணிக் கொண்டான்.

மீண்டும் ‘நானும் பார்த்திருக்கணும்..’ எனவும் குற்றவுணர்வு வந்தது. ஆனால், இப்போது ஒரு தெளிவு ‘இனி விட்டு இருக்கமாட்டேன்.. நல்லா பாத்துப்பேன்.’  என உறுதிக் கொண்டான் தனக்கு தானே. 

நண்பர்கள் பேச்சினை கவனிக்க தொடங்கினான்.

இப்போது தம்பி வந்தான் மதிய உணவோடு.

பிரகதீஷ் அண்ணன் அருகில் வந்தான்.. நண்பர்களை பார்த்து புன்னகைத்தான். அண்ணனிடம் “திருட்டுதனமா அண்ணியை சைட் அடிக்க வந்துட்ட.. இப்போ பாரு.. ஊரே சிரிக்குது. உனக்கு எதையும் ஒழுங்காவே செய்ய தெரியாதா” என்றான், திட்டுவது போல.

எல்லா அண்ணன்களும் சிரித்தனர்.. அதான் நண்பர்கள். தொடர்ந்து அவர்களும் “தேவைதான் உனக்கு இது. சின்ன பசங்க எல்லாம் பேசுறது போலதான் டா.. நீ நடக்கிற” என்றனர்.

பிரகதீஷ் “அண்ணியை நிம்மதியா இருக்கவே விடமாட்ட நீ ம்..” என சொல்லிக் கொண்டே.. “ப்ரோஸ் வாங்க, நாம சாப்பிட போலாம். இவனுக்கு இந்த உப்பு சப்பில்லா சாப்பாடுதான்.. நாம நல்ல ஹோட்டல் போலாம், வாங்க அண்ணா..” என வந்திருந்த மூவரையும் அழைத்துக் கொண்டு நடந்தான்.

அமுதா உள்ளே வந்தார், மகனுக்கு உணவு கொடுத்தார். பசுபதி தன் வேலையை செய்துக் கொண்டான். வலிதான்.. அடிபட்ட கையை அசைக்க கூடாதுதான். அதனால், கதவு திறக்க.. செய்ய என உதவிகள் தேவை இருந்தது.

இப்போது இடது கையால்.. ஸ்பூனின் உதவியால் உண்டுக் கொண்டிருந்தான். மனையாள் கல்லூரி சென்றிருப்பாள் என கணித்துக் கொண்டான் தனக்குள்.

அன்னை இப்போது “நாளைக்கு, டிஸ்சார்ஜ் செய்திடுவாங்க.. நைட் சென்னை போயிடலாம் கண்ணா, உன் பொண்டாட்டி என்ன சொல்றான்னு கேட்டு சொல்லு. பாரு, காலேஜ் கிளம்பிட்டாளாம். எனக்கு கஷ்ட்டமா இருக்குடா.. என்னதான் என் பையன் அப்போது எதோ செய்திட்டான்னு.. இப்போ இவ செய்யலாமா.. என்னமோ போ..” என்றார் வருத்தமாக.

பசுபதி “அம்மா, நீயே இப்படி பேசலாமா.. அவளுக்கு என்ன வேலையோ” என்றான்.

அமுதா ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியானார்.

பசுபதி மருந்துகள் எடுத்து கொண்டு கண் அசந்திருந்தான்.

நண்பர்கள் எல்லோரும் உண்டு முடித்து வந்தனர். சற்று நேரம் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தனர்.

பசுபதி இரண்டுமணி நேரத்தில் விழித்துக் கொண்டான். பிரகதீஷ் உதவியோடு ஓய்வறை சென்று வந்தான். 

நண்பர்கள் மூவரும் வந்தனர். பேச்சுகள் தொடர்ந்தது.

மாலை நேரத்தில் கல்லூரி முடிந்து நேராக நந்தித்தா மருத்துவமனை வந்து சேர்ந்தாள். 

அமுதா வெளியே அமர்ந்திருக்கவும்.. அவரின் அருகில் வந்து அமர்ந்தாள் “சாப்பிட்டீங்களா அத்தை” என்றாள்.

அமுதாவிற்கு மருமகளை பார்க்க பாவமாக இருந்தது. மதியம் இருந்த கோவம் இப்போது இல்லை.. அசதியாக இருக்கிறாள் என தோன்ற.. “நேர இங்கே வந்துட்டியா.. மதியம் சாப்பிட்டியா” என்றார் அவர்.

நந்தித்தா “ம்.. ஆமாம் அத்தை. என்ன பண்றார் அவர்.. நான் போய் பார்த்துட்டு வரேன்” என்றாள்.

அமுதாவும் எழுந்து உள்ளே வந்தார் மருமகளோடு.

பசுபதிக்கு மனையாளை பார்த்ததும் ஒரு புன்னகை.. நண்பர்கள் எல்லோரும் அவனின் பெட்டில்.. எதிரே சேரில்.. அருகிலிருந்த இருந்த சின்ன பெட்டில் என அமர்ந்திருந்தனர். இப்போது எல்லோரும் சட்டென பசுபதியை விட்டு எழுந்து.. அந்த சின்ன பெட்டில் அமர்ந்தனர்.

அமுதா “இவங்க எல்லாம்.. பசுபதியோட பிரெண்ட்ஸ்.. இவன் கஃபே வைச்சிருக்கான்.. பேரு வினித், இவன், பசுபதியோடு வொர்க் பண்றான்.. கௌதம். இவன் சேலத்தில் இருக்கான்.. கிருபாகரன். எல்லாம் ஒன்றாக படிச்சாங்க. கல்யாணத்தில் பார்த்திருப்ப” என கைகாட்டி ஒவ்வொருவராக  அறிமுகம் செய்தார்.

நந்தித்தா புன்னகைத்தாள் “எப்போ வந்தீங்க..” என விசாரிக்க தொடங்கினாள். 

அவர்களும் பதில் சொல்லினர்.. 

பிரகதீஷ் “அண்ணி உட்காருங்க” என்றான்.

அமுதா சேரில் அமர்ந்திருந்தார்.. எல்லோரும் சின்ன கட்டிலில் அமர்ந்திருந்தனர். எங்கே அமருவதென தெரியாமல் “பரவாயில்ல பிரகதீஷ்.” என்றாள்.

பசுபதி “இங்க வா.. நந்து” என தன் கால்களை நகர்த்தி இடம் காட்டினான், தன் பெட்டில்.

மனையாள் “இல்ல.. நீங்க ப்ரீயா இருங்க..” என்றவள்.. “பேசிட்டு இருங்க, நான் அப்பாகிட்ட சொல்லிட்டு வரேன்” என போனோடு வெளியே சென்றாள்.

எல்லோரும் பேச தொடங்கினர்.

நந்தித்தா போன் பேசிவிட்டு உள்ளே வந்தாள்.. தனியாக தன் அத்தையை கூட்டி சென்றவள் “அத்தை நீங்க.. இவங்க எல்லோரும் வீட்டுக்கு போங்க அத்தை அம்மா டிபன் செய்கிறேன்னு சொல்றாங்க..” என்றாள்.

அமுதா “வேண்டாம் டா.. அம்மா எவ்வளோ வேலை செய்வாங்க.. அதெல்லாம் நான் பேசிக்கிறேன்.. நீ போ.. எல்லோருக்கும் வேலை இருக்கே. டயர்ட்டா இருக்கோமில்ல.. நீ இரு நான் பேசிட்டு வரேன்” என்றவர் வெளியே சென்று போன் பேச தொடங்கினார்.

பசுபதி மனையாளை பார்த்தான் வேலைக்கு சென்றுவிட்டு அப்படியே வந்திருக்கிறாள்.. சொகுசாக இல்லை அவள்.. உழைப்பில் அவளின் முகம் ஒட்டி உலர்ந்து இருந்தது.. உடல் கச்சிதமாக இருக்க.. அசதி அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.. மனையாளை அருகில் அழைத்து “நந்து ஏதாவது சாப்பிட்டியா” என்றான்.

மாலை மூன்று மணிக்கு டீ குடித்தது.. என எண்ணிக் கொண்டு “ம்.. “ என்றாள்.

கணவன் “பார்த்தால் அப்படி தெரியலையே.. இரு” என்றவன் பிரகதீஷை அழைத்து “டிபன் வாங்கிட்டு வா.. நெய் தோசை வாங்கிக்க..” என்றான்.

பிரகதீஷ் முறைத்துக் கொண்டே எழுந்தான்.. அவனோடு கெளதம் எழுந்தான்.. “டேய் பசு உனக்கும் சேர்த்து வாங்கிட்டு வரோம்” என சொல்லி கிளம்பினர்.

மற்ற இருவரும் “நாங்களும் இதோ வரோம்” என சொல்லி வெளியே சென்றுவிட்டனர்.

ஆக, கணவன் மனைவி இருவரும் மட்டும்தான். பசுபதி “டயர்டா இருக்க.. வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுத்திருக்கலாமில்ல” என்றான்.. ஆனாலும் கண்கள் அவளையேதான் பார்த்திருந்தது.

நந்தித்தா “பரவாயில்லை. உங்களுக்கு வலி எப்படி இருக்கு.. டாக்டர் என்ன சொன்னாங்க” என்றாள்.

பசுபதி “நான் நல்லா இருக்கேன்னு சொன்னார். நாளைக்கு வீட்டுக்கு போய்டலாம்ன்னு சொன்னார். நெக்ஸ்ட் வீக் செக்கப் வந்தால் போதுமென சொல்லியிருக்கார். பொண்டாட்டி கூடவே இருங்க.. சீக்கிரம் சரியாகிடும் சொல்லியிருக்கார்..” என்றான் வசிகரமான புன்னகையோடு.. காயங்கள் ஆங்காங்கே இருக்க.. அந்த புன்னகை.. கொஞ்சம் வலியாகவே இருந்தது.

மனையாள் ஏதும் பேசவில்லை.. லேசாக புன்னகைப்பது போல தோன்றியது.. பசுபதி “உட்கார்” என்றான்.

மனையாள் சேரில் அமர்ந்துக் கொண்டாள்.

பசுபதி “அம்மா அப்பாவை சென்னை கிளம்ப சொல்ல போறேன். நான் இங்கதான் இருக்க போறேன்.. உ..உனக்கு ஒன்னும்..” என சொல்லி நிறுத்தினான். மனையாள் தன் முகத்தை பார்க்கவில்லை என்பதால், அவளின் தாடை பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தியவன் “பிரச்சனையில்லையே” என்றான்.. தன்னவளின் கண்களை பார்த்துக் கொண்டு.

நந்தித்தா “எனக்கு தெரியலையே.. எல்லோரும் என்ன சொல்லுவாங்களோ” என்றாள்.

கணவனோ “இங்க பாரு.. யாரும் ஏதும் சொல்லமாட்டாங்க.. நீ என்ன சொல்ற..” என்றான், கண்ணில் யாசகத்தின் சாயல்.. காலையிலிருந்து பதில் வேண்டி நின்றவனின் நிலை இது.. எப்படியாவது சொல்லிட மாட்டாளா.. இருக்கலாம்.. இனி சேர்ந்தே இருக்கலாம் என சொல்லிட மாட்டாளா என எண்ணம்.

மனையாளுக்கு  அவனின் பார்வை புரியாமலில்லை.. ஆனாலும் தயக்கம்  “நான் காலேஜ் போயிட்டா நீங்க எப்படி இருப்பீங்க.. நான் எத்தனைநாள்  லீவ் போட முடியும்..”  என்றவள் அவன் விரல்களிலிருந்து தன்னை விலக்கிக்  கொண்டு “யோசிங்க.. எனக்கு என்னான்னு தெரியலை” என்றாள்.

பசுபதி “இல்ல நந்து, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நானென்ன குழந்தையாக.. நான் பார்த்துப்பேன் என்னை. நீ என்ன சொல்ற.. எனக்கு உன்கூட இருக்கணும்” என்றான் அடமான குரலில்.

என்ன சொல்லுவது என தெரியவில்லை.. கணவனின் இந்த குரல்.. அடம்.. எல்லாம் அவளை உருகி கரையவே செய்கிறது.. பிடிக்கிறது. ஆனால், பழைய ஞாபகங்கள் வராமல் இல்லை.. அதை எப்படி ஒதுக்குவது என தெரியவில்லை.. இப்போது, கணவனின் அன்பு புரிந்தாலும்.. மனதில் இப்போது சின்ன பயம்.. ‘மீண்டும் திவ்யா வந்துவிட்டால்’ என புதிதான பயம். அதை நினையாமல் இருக்க முடியவில்லை. இப்போதும் அதே.. எதோ கணவனின் இயல்பான விருப்பமும் ஆசையும் கூட.. அவன் தன் மீது அதிகமாக அன்பு காட்டுவதாக தோன்றுகிறது.. அது மீண்டும் புறக்கணிப்பில் முடியுமோ என பயம்.. இந்த இன்செக்யூரிட்டி காதலின் முதல்நிலை.. அதை தாண்டாமல்.. காதலை நேசத்தினை அனுபவிக்க முடியாதே.

“காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்

உன்னையன்றி யாரை தேடும்..

விலகி போகாதே தொலைந்து போவேனே..

நான் நான் நான்..”