தலைகீழ் நேசம்!

21

‘எத்தனை சுலமாக சொல்லிவிட்டாள்..’ என மனம் அவளையே சுற்றி வந்தது இந்த இரண்டு நாட்களும். வேறு யோசனைகளும் வரவில்லை. அலுவலகத்திற்கு, செல்லவில்லை பசுபதி. அவனால் மீளவே முடியவில்லை. 

முதல்முறை.. அவனுக்கு இந்த பிரிவு.. ஒரு நல்ல சிந்தனையை தந்தது.. அவளை நான் கவனிக்கவில்லையோ என்ற உண்மையை எடுத்து சொல்லியதால் ஒரே அழுத்தம் அவனுக்கு.  அவனில் வாழ்வில் நடந்த பெரிய நிகழ்வுகள் எல்லாம்.. மற்றவர்களால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை என எண்ணி இருந்தவன்.. மனையாளின் நிலையை சரியாக யோசித்தான். நான்தான் அவளை தனியாக விட்டுவிட்டேன் என உணர்ந்தான்.

அலுவலகம் செல்லவில்லை இந்த ரெண்டுநாளும்.. தோன்றும் போதெல்லாம் மனையாளுக்கு போனில் அழைத்தான். உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என்ற பதைபதைப்பு  வந்தது பசுபதிக்கு. 

ஆனால், அவனுக்கு இது உடனே.. அவளுக்கு இது எவ்வளவு காலம்.

நந்தித்தா, கோவை கிளம்பும் ஏற்பாட்டில், கணவனை கொஞ்சம் கண்டுக்கொள்ளவில்லை, கணவனை. பெண்ணவள் மனதில் இன்னும் அந்த ரணம் ஆரவில்லை. ‘யார் இல்லையென்றாலும்.. பதி என்னோடு இருந்திருக்க வேண்டாமா.. அதைவிட என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாமே.. நானும் கொஞ்சநாட்கள் காத்திருந்திருப்பேன் அல்லவா..’ என காயம் அவளிடம். அதனாலே, கணவனின் அழைப்பினை ஏற்கவில்லை.

வேதாந்தன், மறுநாளே.. பசுபதி வந்தது பற்றி.. கெளவ்ரவிடம் பகிர்ந்துக் கொண்டார். அத்தோடு நந்தித்தாவின் நடவடிக்கையும் மேலோட்டமாக சொல்லிவிட்டார்.

கெளவ்ரவிற்கு, மகன் வந்தது சந்தோஷம். அதே நேரம், மறுமகளின் நடவடிக்கை மேல் கோவம் வரவில்லை.. ‘உடனே இறங்கி வந்திருந்தால்தான் சந்தேகம் வரும் சம்பந்தி எனக்கு.. நந்து சரியாதான் செய்திருக்கிறாள்.’ என பாராட்டவே செய்தார்.

கெளரவ் “நந்தித்தா, கோயம்புத்தூர் போகட்டும். அப்போதுதான் என் பையனுக்கு புரியும் நந்துவை பற்றி. கொஞ்சநாள் இதை நந்துவின் விருப்படி செய்யலாம். நல்ல பாதுகாப்பான வீடு போல பார்த்திடலாம் சம்பந்தி. விடுங்க, எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நான் கோயம்புத்தூரில் விசாரிக்கிறேன். நீங்களும் விசாரிங்க. நல்ல வீடு பார்ப்போம்” என்றார் மருமகளுக்காக.

ஆக, அப்படிதான் சம்பந்திகள் இருவரும் சேர்ந்து.. நந்தித்தாவை கோவை அனுப்ப எண்ணினார்.

அப்படிதான் நேற்று நந்தித்தா, பெற்றோரோடு கோவை வந்தாள். கல்லூரிக்கு அருகிலேயே ஒரு அப்பார்ட்மெண்டில் வீடு. 

நந்தித்தாவின் அன்னை புலம்பி தீர்த்துவிட்டார்.. ‘எப்படி தனியா இருப்ப.. வேண்டாம்ன்னா கேட்க்குறியா..’ என இப்போதும் புலம்பல்தான். ஆனால் முன்போல, அது கோவமனதாக இல்லை.. அக்கறையில் இருந்தது.

நந்தித்தாவிற்கு, அன்னையை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. புன்னகையோடு அன்னையின் பேச்சை கேட்டும் கேட்க்காதவள் போல.. இருக்க பழகிக் கொண்டாள்.

நந்தித்தாவிற்கு, ‘எது சரி’ ‘எது தவறு’ என யோசித்து யோசித்து.. ஒருகட்டத்தில் அழுத்தம்தான் அதிகமாகியது. காரணம் அமுதாவும் அன்னையும், தான் செய்வது எல்லாம் தவறு.. நீ ரெஸ்ட் எடுக்கத்தான் போயிருக்க.. இதுதான் உன் வீடு என கொஞ்சி பேசினர்.. கெஞ்சி பேசினர்.. அன்னை கோவமாகவும் பேசினார். ஆனால், மாமனாரும் தந்தையும் ‘நீ உன் விருப்படி செய்டா’ என சரி தவறினை ஆராயாமல் ஆதரவு தந்தனர். அதனால் எதையும் ஆராய துணியவில்லை பெண்.

அவள் கோவை வந்த அன்று.. இரவு கணவன் அழைத்தான். அந்த அழைப்பினை ஏற்பதா வேண்டாமா என குழப்பம். தடுமாறிக் கொண்டே இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தாள்.

எப்போதும் போல  ஒருமுறை அழைத்துவிட்டு, விட்டுவிட்டான், பசுபதி.

முதல்நாள் வேலைக்கு, சென்றாள் பெண். அன்னை தந்தை முதல்நாள் உடன் இருந்து.. அவளுக்கு எல்லாம் பழக்கி ஊர் வந்து சேர்ந்தனர்.

நந்தித்தா கல்லூரியில் அலுவலக பணிக்குத்தான் சென்றாள். பரிட்சை எழுந்தும் போது.. மேற்கொண்டு விரிவுரையாளராகலாம். எனவே, அதுதான் தன் இலக்கு என எண்ணி அதில் கவனத்தை குவிக்க எண்ணினாள்.

மறுவாரம்.. மாமனார் மாமியார் இருவரும் வந்தனர் நந்தித்தாவை பார்க்க கோவைக்கு.

நந்தித்தவிற்கு, என்ன டா இது நாம் எதோ செய்ய நினைத்தால்.. இவர்கள் எதோ செய்கிறார்களோ என எண்ணம் வந்துவிட்டது. 

அமுதா நல்லவிதமாக பேசினார்.. தானே சமைத்தார். கெளவ்ரவிற்கு இந்த வீடு வசதியாக இல்லை.. சோபா இல்லை.. AC இல்லை.. என நிறைய இருந்தாலும் மாமனார் எந்த சுணக்கமும் இல்லாமல் மருமகளுக்காக வந்து இரண்டு நாட்கள் தங்கி சென்றார்.

இப்படியே நந்தித்தாவிற்கு, நாட்கள் கடந்தது. வாரம் ஒருமுறை யாரேனும் ஒரு  வீட்டிலிருந்து ஆட்கள் வருவர் இல்லை, இவள் ஊருக்கு செல்லுவாள். அத்தோடு சென்றது.. படிப்பும் சென்றது.

கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை சேர்த்தாள்.. தந்தை உதவினார்.

பசுபதிக்கு, திவ்யாவிடமிருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. அவள் பிழை செய்கிறாள் எனும் போது.. அவளோடு பேசுவது சரியல்ல என்பதால்.. வேறு எண்ணிலிருந்து அழைப்புகள் வந்தாலும் அமைதியாக இருந்தான். அந்த அழைப்புகளை எடுக்கவில்லை.

அதே நேரம் தானும்.. மனையாளுக்கு அடிக்கடி அழைத்தான். அவளும் தன் அழைப்பினை ஏற்கவில்லை எனவும் தோற்றுக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். 

அன்று அவளின் அருகாமையை உணர்ந்து வந்தவனுக்கு.. இப்போது இந்த தனிமை.. எதோ நரகம் போலிருந்தது. அதே அலுவலகம்.. அதே வீடுதான்.. ஆனால், எல்லாம் கசந்தது. உணவில் கூட நாட்டம் செல்லவில்லை. நண்பர்களோடு ட்ரிங்க்ஸ் எடுக்க கூடாது என வைராக்யமாக இருந்துக் கொண்டு.. தன்னிலேயே வாடிக் கொண்டிருந்தான் பசுபதி.

மீண்டும் அன்று, திவ்யாவிடமிருந்து அழைப்பு. இந்த முறை.. மதிய நேரம் அலுவகலத்தில் இருந்தான். கவனமில்லாமல் அழைப்பினை ஏற்றுவிட்டான் பசுபதி.

திவ்யா “பஷூபதி” என அழுகையோடு அழைக்க.. இந்தமுறை அத்தனை கோவம் வந்தது கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு.

பசுபதி “என்ன செய்யணும் திவ்யா உனக்கு..” என்றான்.

திவ்யா “நீ என்கிட்டே பேச மட்டும் செய், பஷூபதி. ப்ளீஸ்” என கெஞ்சினால் அப்போதும்.

பசுபதி “எத்தனை நாளுக்கு திவ்யா. எனக்கு வாழ்க்கையிருக்கு திவ்யா. போதும், இத்தோட லாஸ்ட்.. இனி எனக்கு நீ கூப்பிட கூடாது” என சொல்லி, இன்னும் திட்டி அவளின் அழைப்பினை துண்டித்தான்.

அதே கோவத்தோடு உள்ளே வந்து வேலையை தொடர்ந்தான். 

இப்போதெல்லாம், திவ்யா அவனை இர்ரிட்டேட் செய்கிறாள்.. அவளின் அழைப்பில் பயம்தான் வருகிறது பசுபதிக்கு. ‘ஏன், வேண்டாம் என ஓடும் போது.. அதேயே இந்த வாழ்க்கை என்னுள் திணிக்கிறது’ என கேள்விதான் அவனுக்கு.

இந்த பிரபஞ்சம் எப்போதும் நம்ம சோதிக்கும்.. விரதம் இருக்கும் நாளில்தான்.. இனிப்புகள் இலவசமாக கிடைக்கும். பக்குவமே இல்லா பள்ளி வயதில்தான்.. ஆசிரியைகள் எல்லோரும் அழகாக தெரிவர்.. ஆக, இப்போதும் பசுபதியை பிரபஞ்சம் சோதிக்கிறது.

இரவு வீடு வந்தவன் உறங்காமல் மனையாளுக்கு அழைத்தான்.. இன்று கண்டிப்பாக பாவமன்னிப்பு கேட்டிட வேண்டும் என்ற எண்ணத்தோடு.

மன்னிப்பு கேட்க்க இவ்வளவு காலம் உனக்கே தேவைப்படும்போது.. மன்னிக்க வேண்டியவர்களுக்கு.. எவ்வளவு காலம் தேவைப்படும். உன்னவிட அதிக காயம் அவர்களுக்கக்தானே இருக்கும்.. என காலம் எண்ணிக் கொண்டு சாட்சியாக அவனோடு நின்றது.

ம்… பெண்ணவள் அழைப்பினை ஏற்கவேயில்லை இப்போதும்.

!@!@!@!@!@!@!@!

அன்னை தந்தை அவளின் தாய்மாமா குடும்பம் என ஒரு ஆறேழுபேர் வந்தனர் கோவைக்கு.. நந்தித்தாவின் வீட்டிற்கு.

நாளை, பிரசன்னாவிற்கு பெண் பார்க்கும் படலம். பிரசன்னா இரவு கிளம்பி காலை வருகிறான். ஆக, நந்தித்தாவின் அப்பார்ட்மென்ட் கலகலவென இருந்தது.

நந்தித்தாவிற்கும், நீண்டநாள் சென்று இவர்களை எல்லாம் பார்த்ததும் சந்தோஷம். எல்லோருடனும் பேசிக் கொண்டும் வேலைகளை செய்துக் கொண்டும் இருந்தாள்.

தந்தை “அம்மாடி லீவ் சொல்லிடு டா நாளைக்கு” என்றார்.

நந்தித்தாவின் முகம் வாடித்தான் போனது “எதுக்கு அப்பா” என்றாள்.

அன்னையும் அவளின் மாமியும் கடிந்துக் கொண்டனர் “அண்ணனுக்கு பெண் பார்க்க போகிறோம். என்ன பேச்சு இது.. நீயில்லாமல் எப்படி போவது. அதுவும் நீ இங்கதான் இருக்கேன்னு எல்லோருக்கும் தெரியும் போது” என்றனர் மாறி மாறி.

நந்தித்தா அன்னையை முறைத்தாள்.. ‘இந்த அம்மாதான், என்கிட்டே சொல்லாமல் ஏற்பாடு செய்தாங்க. இப்போ எதுக்கு என்ன கூப்பிடுறாங்க’ என எண்ணி முறைத்தாள்.

தந்தை “இங்க பாருடா.. உன்கிட்ட சொல்லாமல் இல்லை. இது, வேற இடம். அப்போ நடந்தது ஒத்து வரலை. இது வேற.. நீயில்லாமல் நான் ஏதும் செய்யமாட்டேன்.. உனக்கு புரியுதுல்ல” என்றார் சமாதானமாக.

நந்தித்தா தந்தையை பாவமாக ஏறிட்டாள் “பொண்ணு ஓகே ஆகட்டுமே அப்பா.. இப்போவே எதுக்கு நான். என்னால் ஏதாவது” என தொடங்க கூட இல்லை.

மாமி “நந்து” என்றார் அதட்டலாக.

அவளின் தந்தையே “இரு ம்மா” என அவரை நிறுத்தியவர் தன் பெண்ணை நோக்கி “உன்னால்.. என்ன உன்னால்.. நான் பார்த்துக்கிறேன். எங்க பெண்ணில்லாமல் நாங்கள் எப்படி போவது. அத்தோடு, கிட்டத்தட்ட எல்லாம் உறுதியான நிலைதான். உன் அண்ணனுக்கு பெண்ணை பிடித்திருக்கு. அவங்க சைடும் ஓகேதான். நீ கண்டிப்பா வரணும்” என்றார்.

நந்தித்தாவிற்கு கணவன் நினைவு வந்தது, சட்டென.

தந்தை தன் முகத்தையே பார்த்திருக்க.. நந்தித்தா “சரிப்பா.. ஈவ்னிங்தானே.. ஹல்ப்டே பெர்மிசன் போட்டுக்கிறேன்” என்றாள்.

தந்தை “காலையில்தான் போறோம்.. நாங் பார்த்துட்டு, மதியம் போல கிளம்பிடுவோம். பிரசன்னா நைட் ட்ரைன்னில் கிளம்புவான். அதனால், லீவ் சொல்லிடு டா” என்றார்.

நந்தித்தாவிற்கு மறுக்க முடியவில்லை. விடுமுறை எடுத்துக் கொண்டாள்.

அன்றைய மாலை நேரம் இனிமையாக சென்றது, பெண்ணுக்கு என பொடிவகைகள் எடுத்து வந்திருந்தார் அன்னை. அத்தோடு சில தொக்கு வகைகள் என.. அதெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தாள் பெண். இரவு, எல்லோரும் ஹாலில் படுத்துக் கொண்டனர். கதை பேசிக் கொண்டே.. நேரமும் கடந்தது.

மறுநாள் காலையில்.. பரபரப்பாக எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். 

பிரசன்னா வந்தான். தங்கையை விசாரித்தான் வேலை எப்படி இருக்கு.. வேறு ஏதாவது பார்க்கலாமா எனவும் கேட்டான். வீடு நன்றாக இருக்கு என்றான். நந்தித்தாவும் ‘உனக்கு ஓகேன்னு சொன்னாங்க.. பேசுறீயா..’ என சிலபலவற்றை கேட்டு தெரிந்துக் கொண்டாள்.

நேரமாகிறது என பெரியவர்கள் குரல் கொடுக்க நந்தித்தா கிளம்ப சென்றாள்.

நந்தித்தாவிற்கு என அவளின் பட்டு புடைவை எடுத்து வந்திருந்தார் அன்னை.

நந்தித்தாவிற்கு, அதை பார்த்ததும் மீண்டும் கணவன் ஞாபகம் வந்தது. அந்த புடவை, பதி வீட்டில் முதல்முதலில் ஹோமம் செய்யும் போது கட்டிக் கொள்ள என பதி வீட்டில் எடுத்து கொடுத்த பட்டு புடவை.. ‘எப்படி வந்தது’ என யோசனை. அத்தையும், நேற்று பேசவில்லை.. ஒருவேளை இவர்கள் வருவது தெரிந்திருக்குமோ?.. ஆமாம்.. அம்மா சொல்லியிருப்பார்.. எல்லாம் தெரிந்திருக்கும்.. என ஒரு பெருமூச்சோடு எண்ணிக் கொண்டு கிளம்பினாள்.

அழகாக ப்ரீப்ளீட் செய்து இருந்தது.. தோதான அணிமணிகள். எல்லாம் சென்னையில் இருந்தது..  பாந்தமாக இருந்தது அவளுக்கு.. முகத்தில் கொஞ்சம் பிரகாசம் மட்டும் இருந்திருந்தால்.. அன்று போலவே இருந்திருப்பாள் பெண். இப்போது, கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள்.. எதோ மாடல் போல.. ஒரு செயற்கை புன்னகையை வரவழைக்க முயன்றாள். ஓகே.. மெனக்கெடுதலில் அதுவும் வந்து சேர்ந்தது. அறையிலிருந்து வெளியே வந்தாள்.

பிரசன்னா “நந்து, வா வா டைம் ஆச்சு..” என சொல்லிக் கொண்டே அவளை வெளியே கூட்டி வந்து கதவை பூட்டி இறங்க.. மாமா மாமி  அப்பா அம்மா.. என நால்வரும் அவர்கள் காரில் கிளம்பியிருந்தனர்.

நந்தித்தா அண்ணனோடு நிற்க.. இப்போது, எதோ புதுகார் வந்து நின்றது கால் டாக்ஸி என காத்திருந்தவளுக்கு அதிர்ச்சி. 

எலக்ட்ரிக் கார்.. சத்தமே இல்லாமல் வழுக்கிக் கொண்டு அவள் முன் வந்து நின்றது.

நந்தித்தா இரண்டடி பின் சென்றாள்.

பிரசன்னா புன்னகை முகத்தோடு நின்றான்.

அவளின் பதி அழகாக இறங்கி வந்தான்.. அந்த மெனகெட்டிருந்த புன்னகையும் காணாமல் போகிற்று அவளிடமிருந்து, இப்போது. 

தன் மைத்துனனை பார்த்து “பிரசன்னா, கல்யாண கலை வந்திடுச்சி.. வாங்க உட்காருங்க” என சொல்லிவிட்டு, தன் மனையாளிடம் திரும்பியவன் “நந்து.. வாவ்.. சூப்பர்..” என.. இமைக்காமல்.. ரசனையாக தன்னவளை பார்த்து சொல்லியவன்.. மீண்டுக் கொண்டவனாக  “எப்படி இருக்க” என்றான் புன்னகை முகமாக.

நந்தித்தாவிற்கு.. கோவம் அதிர்ச்சி.. குழப்பம்.. சின்ன சந்தோஷம்.. என எல்லாம் சேர்ந்த நிலை.. என்னாடா நடக்குது இங்க.. என வாயடைத்து நின்றாள்.

பிரசன்னா பின்பக்கம் அமர செல்ல.. பசுபதி “மாப்பிள்ளை.. நீங்கதான் இன்னிக்கு ஸ்பெஷல் நீங்க பிரென்ட்டில் உட்காருங்க.. என்ன நந்து.. சரிதானே” என்றான் நல்லவனாக.

நந்தித்தாவிற்கு நாற்ப்பது வகை உணர்வும் மறைந்து போய்.. ‘குடும்பமாக சேர்ந்து.. கோர்த்து விடுறாங்களா’ என கவுண்டர்தான் வந்தது எரிச்சலில்.

கணவன் முன்பெல்லாம் சொல்லுவது போல.. டிராமா போட வேண்டும்.. ‘இவரோடு வரமாட்டேன்’ என எண்ணினாலும்.. அண்ணனின் வாழ்க்கையை முடிவெடுக்கும் நேரம், இதில் என்ன சொல்லுவது என அமைதியாக காரின் பின்பக்கம் ஏறி அமர்ந்தாள் பெண்.

சொட்டக்கிடும் நேரத்தில் கூட .. வரங்கள் கிடைக்கலாம் தானே. பசுபதி அதை உணர்ந்தான் இப்போது. வாய்திறந்து தன் டென்ஷனை ஊதி தள்ளியவனாக.. டிரைவ் சீட்டில் அமர்ந்தான்.

பிரசன்னாவும் பசுபதியும் எதோ இந்த இரண்டு வருடமும்.. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என பாடிக் கொண்டே இருந்தவர்கள் போல.. ஒரே பேச்சும் சிரிப்புமாக வந்தனர்.

நம்மக்கு எதிரி எப்போதும் நம்ம கூட பிறந்ததுக தானே..(சும்மா) இப்போதும் அப்படியே.. அண்ணன் மேல் எரிச்சலாக வந்தது ‘ஒரு வார்த்தை சொல்லலை துரோகி.. என்ன மேட்ச் செய்ய நினைகிறானா.. அவனுக்கு வேனுங்கும் போது.. சேர்த்து வைக்க நினைக்கிறான்.. எல்லோரும் நல்லா விளையாடுறாங்க என் வாழ்க்கையில்’ என குமைந்துக் கொண்டே வந்தாள்.

அண்ணன் முன்பு கேட்டதை மறந்து. கோவம் கண்ணை மறைத்துவிட்டது போல.

பெண் வீடு வந்து சேர்ந்தது. பிரசன்னா இறங்கிக் கொண்டான். அவனின் தாய் மாமா காத்திருந்தார். 

நந்தித்தாவும், அண்ணன்னோடு சென்றுவிட எண்ணினாள்.

பசுபதி சட்டென இறங்கி வந்து.. அவளின் அருகே நின்றுக் கொண்டான். அவசரமாக செல்ல எத்தனித்தவளின் கையை பிடித்துக் கொண்டான்.. “இரு நாம போலாம்” எனவும் ஒரு விண்ணப்பம் அமைதியான குரலில்.

அஹ.. நந்தித்தா அரண்டுதான் போனாள்.. யாரிது என் பதி’யா.. என முதல்நிலை அதிர்ச்சி.. என்ன செய்வது என ஏதும் பிடிபடவில்லை. கையை உதறினாள் அண்ணனின் முன்.

முடியவில்லை, அவளின் பதிக்கு எப்படி அவ்வளவு உறுதி வந்ததென தெரியவில்லை. பிடித்த பிடியை விடவேயில்லை.

ஒன்றும் செய்ய முடியாமல் பதியோடு உள்ளே சென்றாள்.

உள்ளே வந்ததும் கையை விட்டுவிட்டான். பிரசன்னாவோடு அமர்ந்துக் கொண்டான் பசுபதி.

முறையான அறிமுகம் நடந்தது. பெண் பார்க்கும் நிகழ்வுகள் தொடங்கியது. இருவீட்டாரும் பேசிக் கொண்டனர். நந்தித்தாவை பூ வைக்க சொல்லினர் பெண்ணுக்கு. உறுதியாகியது.

புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிரசன்னா கொஞ்ச நேரம் தனியாக பேசினான் பெண்ணிடம்.

நந்தித்தாவிற்கு, சிந்தனை எல்லாம் பதியிடம் குவிந்தது. அமைதியாக அன்னையின் அருகேயே அமர்ந்துக் கொண்டிருந்தாள். 

ஒரு கட்டத்தில் அன்னை அதட்ட தொடங்கினார் “என்ன நந்து.. பெண்ணிடம் பேசு.. ஏதாவது கேளு.. சும்மா முறைச்சிக்கிட்டு இதென்ன பழக்கம்” என்றார்.

நந்தித்தா “எப்படி அம்மா.. ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்க.. உனக்கு என்னை விட மருமகள்.. உன் மாப்பிள்ளைதான் முக்கியம்.. என்கிட்டே சொல்லவேயில்லையில்ல” என்றாள்.. அந்த நேரத்திலேயே.

அன்னை சந்தோஷமாக புன்னகைத்தார்.

மகளோ முறைத்தாள்.

பசுபதியின் கண்கள் தன்னவளிடம்தானே இருந்தது.. அதில் அவளின் கண்ணில் தெரிந்த முறைப்பு.. கோவம்.. வஞ்சம்.. எல்லாம் இப்போது இவனின் கண்கள் படம்பிடித்துக் கொண்டது. அருகே இருந்த போது.. அவன் கண்டிராத கோணம்.. இதெல்லாம். அவளின் காதல் மட்டுமே உணர்ந்திருந்தான்.. இதுதானே முக்கியம்.. காதலோடு கூடிய கோவம், அதிர்வு, வஞ்சம்.. முறைப்பு.. சலிப்பு.. என எல்லாம்தானே காதலை கரை சேர்க்க உதவும். அதனாலோ என்னமோ அவனுக்கு காதலே இப்போதுதான் புரிய தொடங்குகிறது.

அவள் கிசுகிசுவென பேசுவதும்.. கண்ணில் கோவதீ எறிவதும்.. உதடுகள் புன்னகையை மறப்பதும்.. முகம் இறுகி இருப்பதும்.. பார்க்க பார்க்க ரசனையாகவே இருந்தது. வருத்தம் இல்லை.. இப்போதாவது இதெல்லாம் உணர்ந்தேனே.. என ஒரு கிரக்கம்தான் அவனிடம்.

“தீ இல்லை புகையில்லை..

ஒரு வேள்வி செய்கிறாய் 

விழியிலே..

நூல் இல்லை.. தறி இல்லை..

ஒரு காதல் நெய்கிராய்..

மனதிலே”