பசுபதி, அறைக்கு வந்ததும், அவளை தேடினான். அவள் அறையில் இல்லை என உறுதியாகியது. உடைகள் கொண்ட சின்ன பாக் எடுத்து வந்திருந்தான். உடைகளை மாற்றிக் கொண்டு.. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் வருவாள் என.
நந்தித்தா, கணவனை எதிர்கொள்ள முடியும் என தோன்றவில்லை. மேலே வந்துவிட்டாள். அமைதியாக ஒரு ஓரமாக அந்த மொட்டை வெயிலில்.. நிழல் பார்த்து நின்றுக் கொண்டாள். கொடுமையான உணர்வு இத்தனை நாள் தான் ஆசைப்பட்ட நிகழ்வுதான் நடக்கிறது. ஆனால் ‘நான் வேலைக்கு போறேன்னு, அப்பா சொன்னதும் வந்திருக்கார். அப்போ, அவர் கூப்பிட வந்திருக்கார் ச்ச.. நந்து என்ன டி வாழ்ந்த நீ.. நீ, அவனை யோசிக்க விடாமல் செய்திட்ட போல.. கடமைக்கு உன்கூட குடும்பம் நடந்திருக்கான் போல..’ என எண்ணிக் கொண்டாள். முதலில் இருந்த படபடப்பு குறைத்துக் கொண்டிருந்தது.
பசுபதி இப்போது மனையாளுக்கு போனில் அழைத்தான்.
நந்தித்தாவின் அலைபேசி அந்த அறையிலேயே ஒலிக்க.. பசுபதி அழைப்பினை கட் செய்துவிட்டு அமர்ந்துக் கொண்டான்.
அவனுக்கு இப்போது எந்த குற்றவுணர்வும் இல்லை.. ‘வந்துவிட்டேன்.. ஹப்பா டா.. என ஒரு பீல்.. எப்படி இருந்தாலும் இது எங்களுடைய வாழ்க்கை.. இதில் யாரும் தலையிட முடியாது.. சரியாகிடுவா.. வரட்டும்..’ என கண்ணாடி முன் நின்று தலை கோதிக் கொண்டான். முகம் அத்தனை பிரகாசமாக இல்லை போல.. தன் விரல்களால்.. கன்னம் தெட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போது, நந்தித்தா உள்ளே வந்தாள்.
பசுபதி, மனையாளை கண்ணாடியில் பார்த்துவிட்டு, திரும்பினான்.. நந்தித்தா எந்த உணர்வையும் காட்டாமல்..நின்றாள். பசுபதிக்கு, மனையாளை கண்டதும் என்னமோ சங்கடம் செய்தது.. அவளின் வாடிய தோற்றம் அப்பட்டமாக கண்ணில் தெரிந்தது.. பொறுக்க முடியவில்லை.. அவளின் அருகில் வந்து கைகள் நீட்டி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். பெண்ணவள்.. அணைக்க முற்படவில்லை.. கணவன் கண்மண் தெரியாமல்.. அவள் தலை நெற்றி என முத்தமும் வைத்தான். பார்க்கும் வரைதான் கோவம்.. தயக்கம்.. குற்றவுணர்வு எல்லாம்.. ப்ரியமானவளை கண்டபின்.. அன்பின் மொழி மட்டுமே அவனிடம்.
பெண்ணவளின் தேகம் நடுங்கியது.. மனம் கணவனின் மாய அணைப்பிலிருந்து விடுபட எண்ணியது, பெண்ணவளின் கைகள் டேபிள் மேலிருந்து.. வாட்டர் பாட்டிலை தொட.. அது கையில் அகப்படாமல்.. கீழே விழுந்தது.
கொஞ்சம் பசுபதி தளர்ந்தான்.. தன்னவள் தன்னில் அடங்கி நின்றதே ஒரு நிம்மதியை கொண்டுக்க.. சாந்தமாக அவளை விடுவித்து.. தள்ளி நின்றான்.
நந்தித்தா கண்ணாடியின் அருகே சென்று நின்றுக் கொண்டாள்.
பசுபதி “என்னாச்சு” என தயக்கமெல்லாம் வடிந்த குரலில்.. அவளை கண்டுவிட்ட காதலில்.. குரல் கரகரவென ஒலிக்க கேட்டான்.
அத்தோடு நிற்காமல் தன் தலையை இரு கைகளிலும் கோதிக் கொண்டு தன்னவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு.. மீண்டும் அருகில் வந்தான்.. அவனை பொறுத்தவரை.. என்னை அவள் புரிந்துக் கொள்வாள்.. எங்கே போய்விடுவேன்.. தெரியாதா என எண்ணிக் கொண்டே வந்தான்.
பசுபதி இந்த கேள்வியில் அப்படியே.. மனையாளை வெறித்து பார்த்தான். அவனை பொறுத்தவரை.. என்னை அவள் புரிந்துக் கொள்வாள் என்று ஸ்திரமாக நம்பினான் போல.. அவளின் நிலையை யோசிக்கவில்லை அவனிருந்த டிப்ரஷனில்.
பசுபதி தலையை கோதிக் கொண்டே, திரும்பி சென்று கட்டிலில் அமர்ந்தான் “என்ன சொல்லணும் நந்து..” என்றான்.
இப்படி கேட்பவனிடம் என்ன பேசுவது என எரிச்சல் வந்தது.. நந்தித்தா “சரி, எனக்கும் எதுவும் கேட்க்க இல்லை.. நீங்க கிளம்பிடுங்க, எனக்கு டியூஷன் போக டைம் ஆச்சு.” என சொல்லியவள், பாத்ரூம் சென்றுவிட்டாள்.
பசுபதி இப்படி நந்தித்தா பேசுவாள் என எதிர்பார்க்கவில்லை. சங்கடமாக போனது.. அமைதியாக இருந்தான்.. தன்மேல் அவளின் வாசனையை உணர்ந்தான்.. நீண்ட நாட்கள் ஆகிறதே அவளை தன் கைகளில் உணர்ந்து என எண்ணிக் கொண்டு.. அவளின் வாசனையை அனுபவித்தான். மனது அதிலேயே நின்றது.
நந்தித்தா வெளிய வந்தாள். கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டிருந்தாள். மெரூன் வண்ண டாப்.. பாட்டில்கிரீன் பாட்டம் சல்வார்.. தான் அணிவித்த தாலி.. நெற்றியில் பொட்டு. அவன் கண்ணாடியில் எதிரே அமர்ந்து அவளையே பார்க்க.. பெண்ணவள்.. எதையும் கேர் செய்யாமல்.. லேசாக மையிட்டுக் கொண்டு.. வகிடில் குங்குமம் வைத்துக் கொண்டு.. இயல்பு போல திரும்பி ஷால் அணிந்துக் கொண்டு.. அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்.
பசுபதி, அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.. அவள் செய்கைகள்.. ஒவ்வொரு நொடியும் அவனை வதைத்துக் கொண்டே இருந்தது. பார்க்க பார்க்க.. அவள் தன்னை கண்டுக் கொள்ளவேயில்லை என்பதே மறந்து போகிற்று. இதமாக இருந்தது.. அவள் கண்முன் இருப்பது. அவளின் பாராமுகம்.. அவனை எதோ செய்கிறது. ஆனாலும், அருகில் இருக்கிறாள்.. என் கண் காணும் தூரத்தில் இருக்கிறாள் என ஒரு புன்னகை அவனுக்கு.
மனையாள் சென்றதும் மனது பாரமானது. அவளை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும்.. என்ற எண்ணத்தில்தான் வந்தான். காரில் வரும் போதே அத்தனை யோசனை செய்துக் கொண்டு வந்தான்.. ‘அவள் என்னை முழுதாக ஏற்றுக் கொள்ளுவாள்.. போனதும் சாரி சொல்லிடனும்.. ஏன் பேசவில்லை என கேட்பாள்.. என் நிலையை அப்போது சொல்லிடனும்.. திவ்யாவை பற்றி சொல்லிடனும்.. முழுசா சொல்லிட்டாதான் என்னால் நிம்மதியா தூங்க முடியும். அவ புரிந்துக் கொள்ளுவாள்..’ என திட்டமிடுதலோடு வந்தான்.
அதெல்லாம் அவனால் செயல்படுத்த முடியாமல் போகிற்று.. மனது சங்கடமாக உணர்ந்தது. மனையாளை புரிந்துக் கொள்ள முடியவில்லை என்ன பிரச்சனை.. ஏன் ஒருமாதிரி பேசுகிறாள்.. என எண்ணம். அவளுக்கும் சங்கடம் இருக்கும்.. ஆனாலும், நான்தான் வந்துவிட்டேனே. என்னிடம் எதுவாக இருந்தாலும் கேட்கலாமில்ல.. முகத்தை திருப்பிட்டு போறா.. என எண்ணம் சென்றது. இரவில் வரட்டும் பேசலாம் என எண்ணிக் கொண்டு நின்றான்.. உறங்க வேண்டும் என தோன்றவில்லை. தலை வலித்தது.. காபி குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்ற கீழே வந்தான்.
ஹாலில் யாருமில்லை.. டிவி போட்டு அமர்ந்துக் கொண்டான். சற்று நேரத்தில் அவனின் மாமியார் காபி கொண்டுவந்து கொடுத்தார்.. மகள் விட்டு சென்றிருப்பாளோ.. என எண்ணம். அவள் இன்னமும் வரவில்லை எனவும் கண்டுகொண்டார் அன்னை.
பசுபதி சற்று நேரம் என்ன செய்வது என தெரியாமல் டிவியை வெறித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் தாத்தா வீட்டுக்கு செல்லாலாம் என எண்ணி, அங்கே சென்றான்.
தாத்தா ஆனந்தமாக வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். ஆனந்தன் மனைவி கருவுற்றிருக்கிறாள்.. என்ற செய்தியை சொன்னார். சந்தோஷம் அவர் முகத்தில். வீடியோ காலில் தினமும் பேசும் அந்த பெண்.. என பெருமை பேசினார்.
பசுபதிக்கு, சற்று நேரத்திற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை. கிளம்பிவிட்டான்.
வீடு வந்தான் பசுபதி. ஆனால், இன்னமும் நந்தித்தா வந்திருக்கவில்லை.
அவளின் தந்தை வேதாந்தன்.. மாப்பிள்ளை வரவும்.. “ஏழு மணிக்கு டியூஷன் முடிந்திடும்.. வந்திடுவாள் மாப்பிள்ளை..” என பேசிக் கொண்டிருந்தார்.
பசுபதியின் மாமியார் சுட சுட பஜ்ஜி சட்னியும் எடுத்துக் கொண்டு வந்தார். ஆண்கள் இருவருக்கும் பரிமாறினார்.
வேதாந்தன் “அவளுக்கு அந்த டியூஷன் பிள்ளைகள் மேல் அவ்வளவு பாசம். நம்ம நந்து சொல்லிக் கொடுத்து.. இரண்டு பிள்ளைகள் செண்டம், தெரியுமா மாப்பிள்ளை” என்றவர், புன்னகையோடு மாப்பிள்ளையின் முகத்தை ஏறிட.. பசுபதி திரு திருவென விழித்துக் கொண்டு அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் தன் மாமனாரை.
பசுபதி ‘என்கிட்ட யாரும் சொல்லலை.. எனக்கு தெரியாது.. அப்படியா’ என அதிர்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
வேதாந்தன் சுதாரித்து விவரம் சொன்னார்.. பேப்பரில் வந்தது மாப்பிள்ளை.. என சொல்லிக் கொண்டிருந்தார். பின் ‘நீங்க படிச்சீங்களே.. அதே ஸ்கூல்தான் மாப்பிள்ளை.’ என நினைவுப்படுத்தினார். பசுபதிக்கு நிழலாக.. நந்தித்தாவின் பள்ளி பருவம் நினைவு வந்தது.. இரட்டை பின்னல் தோள் வரை.. நெற்றியில் சின்ன பொட்டு.. டிராக்ப்ளூ ஸ்கர்ட்.. ப்ளு ரெட் வைட் செக்டு ஷர்ட்.. ஒரு இடத்தில் நிற்காமல் அவள் சுற்றிக் கொண்டே இருப்பாள். ஸ்போர்ட்ஸ்.. மார்ச்பாஸ்ட்.. இன்டெர்ஸ்கூல் காம்படிஷன் என எல்லாவற்றிலும் கண்டிப்பாக நந்தித்தா இருப்பாள்.
லேசாக புன்னகை உதடுகளில் வந்தாலும்.. மாமனார் சொல்லிக் கொண்டிருந்த பேச்சில் அவன் மூளை நுழைந்தது.
பேச்சின் தொடர்ச்சியாக கோவையில் எந்த கல்லூரியில் வேலை பார்க்க போகிறாள் என சொன்னார். அத்தோடு சேர்ந்து கொஞ்சம் ரகசிய குரலில்.. பிரசன்னாவிற்கு.. பெண் பார்ப்பதால்.. நந்துவிற்கு இங்கே இருக்க சங்கடப்படுகிறாள்.. என மேலோட்டமாக ஒரு செய்தியை சொன்னார்.
பசுபதிக்கு மண்டைகாய்ந்தது.. இந்த நான்கு மாதங்களில் எத்தனை நிகழ்வுகள்.. நான் பெரும் தவறு செய்துவிட்டேனோ.. என யோசனை. குடும்பத்தின் நுணுக்கங்கள் இப்போதுதான் புரிந்தது பசுபதிக்கு.
பசுபதிக்கு தான் என்ற எண்ணம் முதல்முறை நழுவிக் கொண்டிருந்தது.
நந்துவின் அன்னை “என்னங்க இன்னும் நந்து வரலை.. மணி எட்டு” என்றார்.
வேதாந்தன் போன் எடுத்து.. மகளுக்கு அழைத்துக் கொண்டே “மாப்பிள்ளை இருங்க, நான் பார்த்துட்டு வரேன்” என சொல்லி.. கிளம்பினார்.
பசுபதி “இருங்க மாமா நான் போயிட்டு வரேன்..” என தன் பாக்கெட்டில் இருந்த கார் சாவி எடுத்தான்.
வேதாந்தன் “இல்ல மாப்பிள்ளை, நான் போயிட்டு வரேன்” என்றவர் வண்டி சாவியோடு கிளம்பினார்.
தந்தையின் அழைப்பினை ஏற்கவில்லை, பெண்.
பசுபதி மாமனார் கிளம்பியதும் வாசல் வந்து நின்றுக் கொண்டான். தானும் மனையாளுக்கு போனில் அழைத்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தான் தெருவில்.
சற்று நேரத்தில்.. மாப்பிள்ளைக்கு அழைத்த, வேதாந்தன் “மாப்பிள்ளை, நந்துவை டியூஷனில் காணோம். அவள் போன் ரிங் ஆகிட்டே இருக்கு.. நீங்க தாத்தா வீட்டில் இருக்காளா பாருங்க” என்றார்.
பசுபதியும் அப்படியே எதோ ஒரு காரணம் சொல்லி, தாத்தா வீட்டில் சென்று பார்த்து வந்தான்.
அங்கே இல்லை.. என்ன செய்வது என தெரியாமல்.. நடந்தே.. அந்த தெருவின் எல்லைக்கு சென்றான்.. தன்னவளுக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.
வேதாந்தன் வந்தார்.. மாப்பிள்ளையை வழியில் பார்த்துவிட்டு “எங்கும் போயிருக்க மாட்டா.. எங்காவது” என சுற்றிலும் பார்த்தவர்.. பிள்ளையார் கோவிலை பார்த்துவிட்டு.. “இருங்க மாப்பிள்ளை” என சொல்லிவிட்டு உள்ளே போனார்.
வேதாந்தன் எண்ணியது போல மகள் இங்கேதான் பிரகாரத்தில் அமர்ந்திருந்தாள். தந்தை, பெண்ணை பார்த்தும் ஆசுவாசம் ஆனவர்.. பெண்ணவளின் அருகே அமர்ந்தார்.
நந்தித்தா தந்தை என தெரிந்துக் கொண்டதும், அவரை உணராதவர் போல வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் எங்கோ.
வேதாந்தன் தன் மாப்பிள்ளைக்கு அழைத்து “நீங்க கிளம்புங்க மாப்பிள்ளை, நந்து இங்கதான் இருக்கா.. நான் கூட்டிட்டு வரேன்” என்றார்.
பசுபதி “அங்கே இருக்காளா மாமா” என்றவன்.. நேராக கோவிலுக்கு வந்தான்.
வேதாந்தன் மாப்பிள்ளை வருகிறான் என உணர்ந்துக் கொண்டவர். அமைதியாக பெண்ணருகே இருந்தார்.
தந்தை “நீங்க ரெண்டுபேரும் வீடு வந்திடுங்க..” என்றவர் எழுந்துக் கொண்டார், பசுபதி வண்டி சாவியை அவரிடம் கொடுத்தான். வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்.
நந்தித்தா சட்டென எழுந்துக் கொண்டாள்.
வேதாந்தன் மகளை என்ன செய்வதென தெரியாமல் பார்த்தார்.
பசுபதி “நந்தித்தா, உட்கார்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு” என்றான்.
நந்தித்தாவின் மனதில் ‘எத்தனை நாள் எதிர்பார்த்திருப்பேன் இந்த குரலுக்காக.. எனக்கு தேவைப்பட்ட போது கிடைக்காத குரல், இது. என்னை பற்றி எண்ணிய பார்க்காதவனாக இருந்துவிட்டு.. இப்போ வந்து நின்றதும்.. நான் பேசிட வேண்டும்.. அவனின் நிலையை கேட்டிட வேண்டும். ஹம்..’ என எண்ணிக் கொண்டே நின்றாள்.
பசுபதி “உனக்கு, இங்கு நான் வந்தது பிடிக்கலையா.. நான் போயிடுறேன். ஆனால், இப்போ உட்கார் பேசணும்” என்றான் கடினமான குரலில்.
வேதாந்தன் பெண்ணை முறைத்தார்..
நந்தித்தா அமைதியாக தலை தாழ்ந்து நின்றுக் கொண்டாள்.
வேதாந்தன் கிளம்பினார்.
நந்தித்தா அமர்ந்தாள்.
பசுபதி எப்படி பேசுவது என தெரியாமல் இருந்தான். வார்த்தைகளை கோர்க்க தடுமாறினான்.. மனம் முழுவதும் இந்த ஷணம் அவள்தான்.. ‘மனைவி என இவளை நான் கவனிக்கவேயில்லை.. என் குழந்தையை தாங்கியவளை நான் கண்டுகொள்ளவேயில்லையே..’ என உள்ளே எடுத்து சொல்லியது. திணறிக் கொண்டிருந்தான், அவளிடம் பேசுவதற்கு.
நந்தித்தா சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.. கணவன் பேசவில்லை என்பதால்.. போனினை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பசுபதி, அவள் போன் வைத்திருந்த கையினை பற்றினான்.. போனினை எடுத்துக் கொண்டு.. அவளின் விரல்களை இறுக்கமாக பிணைத்துக் கொண்டான். தனக்கு அப்போதாவது தைரியம் வருமா என.
நந்தித்தாவிற்கு மனது தகித்துக் கொண்டுதான் இருந்தது.. விரல்களை அவனுக்கு கொடுக்கவேயில்லை.. ஆனாலும், தன் வலிமையால் அவளின் விரல்களை பற்றிக் கொண்டான். கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது.
நந்தித்தாவிற்கு, கண்கள் கலங்கத்தான் செய்தது.. பசுபதி “என்ன டி, உனக்கு பிரச்சனை. என்னை நீ மன்னிப்பேன்னு நினைச்சிட்டேன்” என்றான்.
நந்தித்தா “க்கும்.. சாரி, எனக்கு இதெல்லாம் தேவையேயில்லை. நீங்க கிளம்புங்க.. உங்க வேலையை பாருங்க. எனக்கும் வேலையிருக்கு.. நீங்களும் நிம்மதியா இருங்க.. நானும் நிம்மதியா இருக்கேன்” என்றவள்.. தன் கையை உருவிக் கொள்ள எண்ணினாள்.
பசுபதி “இரு.. இரு” என்றான் முதல்முறை பொறுமையாக. ஆனால், நந்தித்தாக்கு அந்த பொறுமை வர கூடாது என.. வேண்டுமென்றே.. கணவனை விட்டு தள்ளி செல்ல நினைத்தாள்.
பசுபதி “இரு நந்து. கொஞ்சம் கேளேன்..” என்றான்.
நந்தித்தா “என்னை கேட்கலையே.. நான் உங்களுக்கு எப்படி தெரிகிறேன்னு தெரியவேயில்லை. ஜட பொருள் மாதிரி.. என்னை நீங்க ட்ரீட் பண்ணீட்டீங்க.” என்றவள், வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு “என்ன சாபமோ தெரியலை.. என்னோட அன்பினை எல்லோரும் உதாசீனம் செய்யறாங்க.. எனக்கும் ல.. லவ்க்கும் ஆகாது போல..” என வெடுக்கென எழுந்துக் கொண்டவள்.. தன் கையினையும் அவனிடமிருந்து விலகிக் கொண்டு.. “நீங்க போயிடுங்க, உங்களுக்கு நிறைய வேலையிருக்கும்” என்றவள் நிற்காமல் நடந்துவிட்டாள்.
பசுபதிக்கு தான் செய்ததின் வீரியம் புரிந்தது. காலகடந்து விட்டதோ.. ஏன்? எனக்கு மட்டும் இப்படி.. என்னால் ஏன் ஒரு உறவினை பிடித்து வைக்க முடியவில்லை.. இல்லை, அது எனக்கு இல்லை போல.. அம்மா திவ்யா.. நந்து.. என் குழந்தை.. என ஏதும் எனக்கென வந்தவை இல்லையா.. என தலையை பிடித்துக் கொண்டான்.
நந்தித்தா வீடு வந்தாள்.
தந்தை “மாப்பிளை எங்க ம்மா” என்றார்.
நந்தித்தா “அப்பா, ப்ளீஸ் அவருக்கு நம்பிக்கை கொடுக்காதீங்க.. போயிட சொல்லுங்க, நான் கண்டிப்பா இவர் கூட போகமாட்டேன்” என்றவள் மேலே சென்றுவிட்டாள்.
மாப்பிள்ளையை அழைத்து வர, வண்டியோடு சென்றார் மாமனார்.
பசுபதி கோவிலிலேயே அமர்ந்திருந்தான்.
வேதாந்தன் கூட்டி வந்தார் வீட்டுக்கு. உண்பதற்கு அழைத்தார். பசுபதி ஏதும் சொல்லாமல் உண்பதற்கு வந்து அமர்ந்தான். இரண்டு வகை டிபன்.. கேசரி.. என சின்ன விருந்தாக ஏற்பாடு செய்திருந்தார் மாமியார். ஆனால், பசுபதிக்கு ஏதும் தொண்டையில் இறங்கவில்லை. உண்ண முயன்றான்.
உண்டு முடித்தவன்.. மேலே சென்றான். அறையின் கதவினை திறக்க முடியவில்லை. என்னமோ உடைந்து போனான். ‘என்னடா வாழ்க்கை இது..’ மனம் சலித்து போனது.
தட்டவோ.. உடைக்கவோ.. தோன்றவில்லை போல.. கீழே வந்தவன்.. “மாமா கிளம்புகிறேன்” என்றான்.
மாமனார் மாமியார் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். பெண்ணின் கோவம் தந்தையாக வேதாந்தன் அறிந்ததுதான். ஆனாலும், மாப்பிள்ளை இறங்கி வந்ததாக ஒரு எண்ணம். ஏதும் அவரிடம் இனி சொல்ல முடியாது என எண்ணியவர் தலையசைத்தார்.
பசுபதி வருவித்துக் கொண்ட புன்னகையோடு கிளம்பினான், அன்று மனையாள் கிளம்பிய அதே வேதனையோடு.. அதே அழுத்தத்தோடும். உடல்வலி மட்டும்தான் இல்லை. மனதால் அவள் அனுபவித்த அத்தனை வலியும்.. இப்போது கணவன் அனுபவித்தான்.