தலைகீழ் நேசம்!

17

கெளவ்ரவிற்குதான், தன் மகன் மீது தீராத கோவம். ‘இப்போது என்ன அந்த பெண்ணோடு பேச்சு..’ என நந்தித்தா ஊர் சென்றதும் விசாரணை நடந்தது, மகனை கண்டதும்.

ஆனால், பசுபதி ஏதும் பேசவில்லை அப்போது.

தந்தை பேசி தீர்த்துவிட்டு சென்றதும், தன் அன்னையிடம்தான் சத்தம் போட்டான் “என்ன தெரியும்ன்னு இவர் பேசுகிறார். எல்லாம் எனக்கு தெரியும். அவங்க வேலையை மட்டும் பாருங்க” என பேசி சென்றான்.

ஆனால், அமுதா விடவில்லை.

மறுநாள் அமுதா மகனிடம் பேச எண்ணினார். மேலே, அவனிருக்கும் வீட்டிற்கு, சென்றார்.

திருமணத்திற்கு பிறகும் கூட வந்திருக்கிறார். ஆனால், இது போல.. க்ளம்சியாக இந்த இடம் இருந்ததில்லை என தோன்றியது.

வேலையாட்கள் வருகிறார்கள்தான்.. ஆனால், இடம் சுத்தமாக இல்லை. ஏன்? என எண்ணம் எழுந்தது.

நந்தித்தா வைத்திருந்த பால்கனி செடிகள் சிலது வாடி வந்தங்கி இருந்தது. டவல், டி-ஷர்ட்.. ஷாட்ஸ்.. என துணிகள் எல்லாம்.. ஹாலில்.. அவனின் அறையில் என சிதறிக் கிடந்தது. அவனுக்கு இரவில் வரும் உணவுகளை, உண்ட தட்டுகள் ஒருசிலது அங்கேயே இருந்தது. ஆக, பசுபதியின் குழம்பிய மனநிலை இதில் தெரிந்தது போல.. பசுபதி முன்போல.. நேர்த்தியாக இல்லையோ.. என எண்ணம்.

சுற்றிலும் அமைதியாக பார்த்துக் கொண்டே மகனின் அறைக்கு சென்றார்.

பசுபதி குளித்து கிளம்பிக் கொண்டிருந்தான்.

அன்னை “பசுபதி” என அழைத்துக் கொண்டே உள்ளே வந்தார்.

பசுபதியின் முகம் ஒரு புன்னகைக்கு கூட பஞ்சமானது போல.. தலையசைத்தான் வரவேற்ப்பாக. அவ்வளவுதான்.. தலை வாரிக் கொண்டே கண்ணாடியில் பார்த்துக் கொண்டே “என்ன அம்மா” என்றான்.

அன்னை “என்ன டா.. முகமே சரியில்லை.. ஏன் டா இப்படி இருக்க..” என்றார்.

பசுபதி “அம்மா, என்ன வேண்டும்” என்றான் சலித்துக் கொண்டே.

அன்னை “இல்ல டா, நந்தித்தா ஏன் இன்னும் வரலைன்னு உனக்கு புரியுதா” என்றார்.

பசுபதி திரும்பி அன்னையை பார்த்தான்.

அன்னை “அவளுக்கு திவ்யாவை பற்றி.. நீ ஏதும் சொல்லலையா.. அவளுக்கு அது தெரியனுமில்ல. இல்ல.. நீ இன்னமும் அவகூட பேசிட்டு இருக்கியா.” என்றார்.

பசுபதி அன்னையின் அருகே வந்து அமர்ந்தான்.. “அம்மா, அந்த திவ்யா” என நடந்ததை மறையாமல் சொன்னான். பின் “நான் பிளாக் பண்ணிட்டேன்.. அதெல்லாம் ஓவர். ஆனால், நந்துக்கிட்ட இன்னும் பேச டைம் வேண்டும்மாக இருக்கு ம்மா.. ப்ளீஸ், நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

அமுதா, இப்போதும் மகனை நம்பினார்.. “நீயேதான் ஹன்ட்ல் பண்ணனும். திவ்யாவை நீ இப்போ” என அன்னை தெளிவாக கேட்டார் இப்போது.

பசுபதி “ம்மா, அப்படி எல்லாம் ஏதும் இல்லம்மா, அவளை எதோ பார்த்தேன், அப்படியே விட்டாச்சு. க்கும், நீ யோசிக்காத” என்றான்.

அமுதா மகனின் கைபற்றிக் கொண்டார் “நந்து எப்போடா.. வருவாள்” என்றார், ஆசையாக.

பசுபதி “தெரியலை ம்மா..” என்றான் அவனும் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லா குரலில்.

அமுதா “சின்னதாக இருக்கும் போதே, சண்டையை முடிச்சிடு டா, கல்யாணம் ஆகிய புதிதில் இந்தமாதிரி ஏதாவது நடக்கும். என் மகனாக.. குடும்ப தலைவனாக நீதான் சரி பண்ணனும்.” என்றார், புன்னகையோடு.

பசுபதி சுரத்தே இல்லாமல் தலையசைத்தான்.

இருவரும் கீழே வந்தனர், பசுபதி உண்டு அலுவலகம் கிளம்பினான்.

!@!@!@!@!@!@!@!@!@!

திவ்யாவிற்கு, பசுபதியின் நினைவுகள் தீரவில்லை.. அதிலும் அவன் தன்னை பிளாக் செய்ததை பொறுக்கவே முடியவில்லை. இருந்தும் அவனுக்கு திருமணமாகிவிட்டது என சிலநாட்கள் அமைதியாகதான் இருந்தாள்.

ஆனாலும், முடியவில்லை. பத்துநாட்களுக்கு மேல் அந்த பொறுமை நிற்கவில்லை, வேறு எண்ணிலிருந்து பசுபதிக்கு அழைத்தாள். பசுபதி ட்ரூ காலரில் கண்டு.. எடுத்தான். அதில் திவ்யா என காட்டவில்லை.

திவ்யா, பசுபதி எடுத்தும்.. அவனின் ஹலோ என்ற அழைப்பினை நான்குமுறை கேட்டுவிட்டு வைத்துவிட்டாள்.

பசுபதிக்கு யாரென தெரியாமல் திரும்பவும் அழைத்தான். ஆனால், அழைப்பு எடுக்கபடவில்லை. அவனும் விட்டுவிட்டான். சத்தியமாக, திவ்யாவின் நினைவு வரவில்லை இந்த நாட்களில் அவனுக்கு. திவ்யாவை அவன் மனத்தால் எண்ண கூட இல்லை.

அதற்காக மனையாளின் நினைவு வந்ததா என்றால்.. அதுவும் கேள்விக்குறிதான்.

பசுபதி, தன்னை மாற்றிக் கொள்ள எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால், அது எப்படி என அவனுக்கு தெரியவில்லை. அதில்தான், தான் செய்த உடற்பயிற்சி.. ட்ரிங்க்ஸ் என நல்ல கெட்ட பழக்கங்களை எல்லாம் மறந்துவிட்டான். ஒருமாதிரி ஒழுங்கில்லாமல் தான் இருப்பதாக உணர்ந்தான். அதை சரி செய்ய தெரியாமல்.. இருந்த நல்ல பழக்கங்களையும் தொலைத்து.. ஒருமாதிரி தனிமைக்கு சென்றுவிட்டான்.

அவ்வபோது.. திவ்யா அழைக்கவும் செய்தாள். அது யாரென தெரியாமலே.. பசுபதி ஏற்று ஹலோ என்க.. அந்தபக்கம் பேச்சுகள் வராமல் போக.. அழைப்பினை துண்டித்துவிடுவான்.

ஒருநாள், திவ்யா ஹலோ என சொல்ல.. பசுபதிக்கு அந்த குரல் யாரென்றே தெரியவில்லை.

திவ்யா “மறந்துட்டியா பஷூபதி” என்கவும் பசுபதி அரண்டு போனான்.. இன்னமும் அவள் தன்னை நினைக்கிறாளா என.

தலை வலி தொடங்கியது. அப்போதே அழைப்பினை துண்டித்துவிட்டு.. அந்த எண்ணினையும் பிளாக்கில் போட்டான்.

தவறான வழியில் சென்றிடுவோமோ என எண்ணி.. தன்னை தானே நேர் செய்ய எண்ணுகிறான் போல.

அது முடியமா என தெரியவில்லை!.

இன்று நண்பர்கள், வீக்எண்டு என அழைக்க.. பார்ட்டிக்கு சென்றான். ஆனாலும், ட்ரிங்க்ஸ் ஏதும் எடுக்காமல் யோசனையோடு இருந்தான். இந்த திவ்யா என்பவள் ஏன் மீண்டும் வந்தாள்.. என யோசனை. இவள் வந்தபின் நான் மிகவும் பாவப்பட்டுவிட்டேன் அவளுக்காக.. என உள்ளே எண்ணம் சுழன்றது. 

அதிலும் நந்தித்தா தன் அன்னையோடு பேசுகிறாள்.. அவரை அழைக்கிறாள், என்னை அழைக்கவில்லை என.. ஒருமாதிரி உணர்ந்தான். தான் அவளுக்கு கெட்டவன் ஆகிவிட்டேனோ.. என எண்ணம், இந்த நாட்களில் வந்து சென்றது. அதை ஏற்க முடியவில்லை, அவனால். ஆனாலும், அவன் மனமே சொன்னது.. நீ செய்தது.. எவ்வளவு பெரிய தவறுகள் என. தன்னையே சபித்துக் கொண்டான். அதை மட்டுமே அவனால் செய்ய முடிந்தது இப்போது.

மனது மூளை இரண்டும் இப்போது.. உன்னோடு வாழ்ந்தவளை யோசிக்க மறந்தாய்.. உன்னையும் யோசிக்கவில்லை.. என இடித்துரைத்துக் கொண்டே இருந்தது.

தவறுதல் இயல்புதானே.. சரி செய்ய நினைப்பதும் இயல்புதானே. ஆனால், அதை சரிசெய்யும் வழியை யோசியாமல் இருக்கிறானோ?. 

!@!@!@!@!@!@!@!@!@!@!

நந்தித்தா, பள்ளியில் இருந்தாள் இன்று. 

பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருந்தது. நந்தித்தா, டியூஷன் எடுத்த பசங்களில் இருவர் சென்டம். அதனால், போட்டோ எடுக்க.. கொண்டாட என பள்ளிக்கு சென்றிருந்தாள், நந்தித்தா.

மிகவும் சந்தோஷமாக இருந்தாள். தன் சந்தோஷத்தினை அமுதா அத்தைக்கு அழைத்து சொல்லினாள்.

அமுதா வாழ்த்துகள் எல்லாம் சொல்லிவிட்டு, “நந்து, நம்ம வீட்டுக்கு வந்திடுடா.. எல்லாம் சரியாகிடும் டா..” என சமாதானம் சொல்லி பேசிக் கொண்டே, அன்று மகன்.. நீ அழைத்தபோது.. போன் திரையில் தெரிந்த உன் போட்டாவை பார்த்துக் கொண்டிருந்தான்.. என மகனின் எண்ணத்தை மருமகளிடம் பகிர்ந்தார்.

நந்தித்தாவின் மூட் அப்படியே ஆஃப் ஆனது.. கணவனை நான் நினைக்கவில்லை என பூசிமொழுகி.. மனதை மறைத்து வைத்திருந்தாலும்.. அதெல்லாம் ஒரே நிமிடத்தில் உடைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. கணவனின் முகம்.. மனகண்ணில் தெரிய.. ஏதும் சொல்ல முடியாமல் நின்றாள்.

அமுதாவிற்கு, அந்த மௌனம் தானே வேண்டும் “நந்தும்மா, நான் வைக்கட்டுமா” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டார்.

அமுதா, இப்படிதான் பேசும் போதெல்லாம் மகனின் நினைவை.. மருமகளின் மனதில் புகுத்திடுவார். மகனிடம் அன்று திவ்யா பற்றி பேசியதையும் முழுதாக சொல்லிவிட்டார் அமுதா. ஆக, நந்தித்தாவிற்கு, முழு சந்தேகம் இப்போது இல்லை.

ஆனாலும்.. ஏனோ மகன் இன்னமும் சென்று நந்தித்தாவை பார்க்கவில்லை என எண்ணம். மருத்துவமனையிலேயே சொல்லியாகிவிட்டது. மீண்டும் ஒருமுறை அவனிடம் கேட்டாகிவிட்டது.. ‘அவனோ நான் பார்க்கிறேன்’ என்றுவிட்டான். இன்னமும் எப்படி போய் பேசுவது மகனிடம்.. என அமைதியாக இருக்கிறார். 

ஆனாலு, மகன் உண்ணும் போது.. ஏதேனும் பேசுவார்.. நந்து பற்றி சொல்லுவார். இப்படியேதான் நாட்களும் மாதமும் கடந்துவிட்டது.

நந்தித்தாவிற்கு, இப்போது விடுமுறை முடியும் நேரம். அதனால் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு, ட்யூஷன் தொடங்கிவிட்டாள். அவளின் நாட்கள் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள கூடாது என்ற எண்ணத்தோடு தொடர்ந்தாள்.

இந்த நேரத்தில்தான், இவர்களின் திருமணநாள் வந்தது.

இரண்டு நாட்களாக, இந்த நாளை எண்ணி.. எண்ணி.. தடுமாறிக் கொண்டிருந்தாள். ஒரு தவிப்பு.. ‘எப்படி எல்லாம் என் வாழ்க்கையை சீராக்கி கொள்ளவேண்டும் என எண்ணினேன்.. ச்சு.. ஏதும் இல்லாமல் ஆகிவிட்டது. என் பதி எனக்காகவே இருப்பார் என எண்ணினேன்.. என் பெயரை சொன்னார்.. அப்போது..’ என அந்த நினைவில் சற்று கசிந்து கண்மூடிக் கொண்டாள், சற்று நேரம். ‘ஆனால், இந்த நிலையிலேயே நிற்கிறேன்.. நன்றாகத்தான் சென்றது எங்களின் வாழ்க்கை..’ என மீண்டும் கணவனோடு தேன்நிலவு சென்ற ஞாபகங்கள் அலை அலையாய் எழுந்தது அவளுள். 

‘என்னமோ ‘பதி’ மேல், முன்பிருந்த கோவமில்லை.. வருத்தமே இருக்கு. என்னால் கோவப்பட முடியவில்லை.’ என போனில் தங்களின் புகைப்படத்தினை எடுத்து பார்த்துக் கொண்டாள்.  ‘என்கிட்டே இன்னமுமா பேசனும்ன்னு தோணலை’ என கேள்வி கேட்டாள், நிழல்படமாக தெரியும் அவனிடம்.

அவளின் மனமும் அதே கேள்வியை கேட்டது ‘நீ ஏன் பேசலை’ என.

பெண்ணவள் ஞாயம் சொன்னாள்  ‘நான்தானே காயப்பட்டேன்.. நான் சொல்ல வந்ததை கூட கேட்க்கலை.. அத்தோட.. அந்த திவ்யா’ என தனக்கே சொல்லிக் கொண்டாள். ‘அவர், என்னோடு அப்படியா  இருந்தார்.. இன்னொரு பெண்ணின் நினைவிலிருப்பார் என  ஒரு ஷணம் கூட தோன்றவேயில்லை..’ என எண்ணிக் கொண்டே கணவனின் புன்னகை புகைப்படத்தினை இன்னமும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இன்னமும் அவரை நினைக்கிறேனே.. வெட்கம்கெட்டு’ என  கண்ணீர் பெருகியது. காதலும் பெருகியது. கண்ணீரை துடைத்துக் கொண்டாள் பெண். காதலை அப்படி துடைத்துவிட முடியவில்லை.

எங்காவது சென்றுவிட வேண்டும்.. அப்பா அம்மா.. ஊராரின் கண்ணில் படவே கூடாது என எண்ணம்தான். எல்லோரும் வாழ்த்து சொல்ல பேச என வந்துவிடுவர் என எண்ணத்தோடுதான் இருந்தாள். 

அப்படிதான் நடந்தது.. இன்று நந்தித்தா, காலையில் எழுந்ததே.. தன் மாமனார் மாமியாரின் அழைப்பில்தான்.

இனிமையான வாழ்த்துகள் அவர்களிடமிருந்து.. ஆனால், நந்தித்தாவிற்கு அழுகையும் புன்னகையும் சேர்ந்தே வந்தது.

கெளரவ் “எப்போ வர.. நந்தித்தா மா” என்றார், எப்போதும் இதே கேள்வியைத்தான் கேட்ப்பார்.

நந்தித்தா எப்போதும் பதிலே சொன்னதில்லை.

இன்று அப்படியே “நந்தித்தா.. பசுபதியை வர சொல்றேன்.” என்றார், சங்கடமான குரலில்.

நந்தித்தா “மாமா, அதுமட்டும் வேண்டாம் மாமா. நீங்க வாழ்த்து சொன்னதே போதும் மாமா. கண்டிப்பா வரேன். நானும் கொஞ்சம் தேறிக் கொண்டு வரேன் மாமா” என்றாள்.

கெளவ்ரவிற்கும் தெரியும்.. நாம் இப்படி அவளை வர சொல்ல கூடாது.. மகனிடம் மட்டுமே புத்தி சொல்ல வேண்டும் என. ஆனால், திவ்யா இன்னமும் அவனோடு தொடர்பில் இருக்கிறாள் என தெரிந்ததும்.. அவருக்கு மகன் மேல் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் காணாமல் போனது. அதனால், மகனை மதிப்பதேயில்லை. தன் மனைவியிடம் சொல்லிவிட்டார்.. ‘எப்போது, அவன் நந்தித்தாவை கூட்டி வந்து வாழ்கிறானோ.. அப்போது அவனை மதிக்கிறேன்.. திமிரெடுத்தவன்’ என்றார்.

அமுதா மகனிடம் அதைபற்றி பேசி விசாரித்திருந்ததை கணவனிடம் சொல்லினார்தான் ஆனாலும், கெளரவ், மகனை நம்பவில்லை. 

பேசி முடித்து வைத்தனர்.

அடுத்து அண்ணன் அழைத்தான்.. வாழ்த்துகள் என சொல்லவில்லை.. பொதுவாக பேசிக் விட்டு வைத்துவிட்டான்.

இவள் குளித்து கீழே வந்ததும்.. அன்னையும் தந்தையும் அவளின் முகத்தை முகத்தை பார்த்துவிட்டு ஒருவழியாக “கோவிலுக்கு போயிட்டு வந்திடு.. நந்துவோட பானு” என்றார் தன்  மனையாளிடம் வேதாந்தன்.

நந்தித்தாவிற்கு, ஏதும் சொல்ல முடியவில்லை. தன் அத்தையும் அதையேதான் சொல்லியிருந்தனர். ஆக, பெரியவர்கள் முடிவு என தலையாட்டினாள்.

உண்டு முடித்து அன்னையும் மகளும் கோவிலுக்கு சென்று வந்தனர்.

டியூஷன் பிள்ளைகள் எல்லாம் மெசேஜ்ஜில் வாழ்த்தினர்.

ஆனால், ‘கொண்டவன்’ மட்டும் இன்னும் ஏதும் சொல்லவில்லை. பெண்ணும்க்கும் வெட்கம்கெட்ட மனது போல.. இன்று வெட்டிங்டே கண்டிப்பாக அழைப்பான் என ஒரு நப்பாசையா.. நியாயமான ஆசையா.. என தெரியவில்லை.. கணவனை தேடினாள் இப்போதும்.

மாலையில் தாத்தாவும் வாழ்த்து சொல்லி.. இரவு உணவு.. அவளோடு உண்டார்.

நந்தித்தா, பாரமான மனதோடுதான் உறங்க வந்தாள்.

என்னமோ.. ‘அன்று போல இன்றும் செய்தி அனுப்புவான்’ என ஆழ்மனம் அவளுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது.

மதியம், திருமணமானது முதல் மதியம் சற்று நேரம் உறங்குவாள். இப்போதெல்லாம் மதியம் உறங்குவதேயில்லை. இரவிலேயே சரியாக உறக்கம் வருவதில்லை.. இதில் பகலில் உறங்கி.. அதுவேற ரோதனை.. என. மேலே தங்களின் அறைக்கு வருவதே இரவு உறங்க மட்டும்தான்.

இன்று, விழித்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள். அதேபோல கணவனின் செய்தி வரும் என விழித்துதான் இருந்தாள்.

காதலர்களின் ஆழ்மனம் பொய் சொல்லாது தானே. அதேதான் இப்போதும்.. பசுபதியின்  செய்தி வந்து சேர்ந்தது பனிரெண்டு மணிக்கு முன் “ஹாப்பி அனிவேசரி நந்தும்மா.. மிஸ் யூ லாட்..” எனதான் இருந்தது. எண்ணி எண்ணி வார்த்தைகள்தான். ஆனால், எண்ணிலடங்கா உணர்வுகள் அதில்.

அதை பார்த்தவளுக்கு, நெஞ்சுகுழியில் புதுரத்தம் பாய்ந்த உணர்வு.. இதயம் படபடவென அடிக்க.. கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க.. தேகத்தின் உணர்வெல்லாம்.. சரிந்து மண்டியிட்டு நின்றது அவனின் செய்திக்கு முன்.

என்னை அவன் தேடுவான் என நினைப்பது காதல்தான்.. அதன்வழி அவனும் தேடி நின்றது பெருங்காதல்தானே. இத்தனை பெரிய நம்பிக்கையை.. தாலி.. சம்பர்தாயம் என எல்லாம்தான்  கொடுத்தது என இப்போது யாராவது சொன்னால்.. கண்டுகொள்ள வேண்டாம். அவர்கள் காதலை உணராதவர்கள்.

நேசத்தின் அடிப்படையே.. மனதால் உணர்ந்து.. ஒவ்வொரு அணு தோறும்.. தன்னவர்களை நிரப்பி.. தங்களுக்கு இருக்கும் உலக அறிவை விட்டு.. மனதால் இணைதல்தான் நேசம். உண்மையான நேசம்.. அறிவை கொண்டு.. தம்மவர்களை எடைபோடது. இப்போதும் இந்த ஷணம்.. இருவருக்கும் மூளை என்பதே காணமல் போனது போல.. வெட்கம் ஈகோ என எல்லாமும் காணாமல் போனது போல.. புன்னகையும் கண்ணீருமாக நந்தித்தா அந்த செய்தியை படித்துக் கொண்டே இருந்தாள்.

பசுபதிக்கும் அதே நிலைதான்.. அவள் உடனே எடுத்து தன் செய்தியை பார்த்து ஆனந்தம். தலையை கோதிக் கொண்டே பதில் அனுப்ப மாட்டாள் என எண்ணிக் கொண்டிருந்தான்.

 நதியின் அடியில் இருக்கும் கூழங்கற்கள் போல.. குத்தி கிழிக்கும் அவனின் கோவமான பேச்சு.. அலட்சியமான வார்த்தைகள் எல்லாம்.. மெல்ல மெல்ல மெருகேறிக் கொண்டிருந்தது போல.. நந்தித்தாவின் நினைவுகளால்.

“இலை வடிவில் அதுவும் இருக்கும் 

மலை வடியில் அதுவும் கணக்கும்..

சிரித்து சிரித்து சிறையிலே

சிக்கிக் கொள்ள மனம் துடிக்கும்..”