தலைகீழ் நேசம்!

16

நந்தித்தாவிற்கு DNC செய்திருந்தனர்.  அசதியில் இருந்தாள் பெண்.

பசுபதி மருத்துவமனை வந்து சேர்ந்தான். அமுதா மகனிடம் எப்படி கேட்பது திவ்யாவை பற்றி என எண்ணிக் கொண்டே.. நந்தித்தாவிற்கு நடந்தவைகளை சொல்லினார்.

பசுபதிக்கு, அன்னையின் வாய்மொழியாக.. மனையாள் கருவுற்றிருந்தாள் என கேட்டதுமே நொந்து போனான்.. இந்த நேரத்தில்தான் எனக்கு பாப்பா வந்திருக்கனுமா. அவளை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை. எதோ செய்யக்கூடாத தவறை இழைத்துவிட்டதாக உணர்ந்தான்.

மருத்துவர்கள் சொன்னதும் நந்தித்தாவை பார்க்க.. அமுதா சென்றுவிட்டார்.

பசுபதி இருந்த குழப்பத்தில்.. ஏதும் பேச முடியாமல் தளர்ந்து அமர்ந்துக் கொண்டான். மீண்டும் இளைப்பாற நிழலில்லாதவன் போலானான் பசுபதி. அம்மாதான் எல்லாம் என இருந்தவனை.. அவர் இனி உனக்கானவர் மட்டுமில்லை நீ தள்ளி போ என விதி செய்தது. அடுத்து எனக்கு இவளிருந்தால் என் வாழ்வு வளமாகும் என எண்ணியிருந்தவளையும்.. குலம்.. அந்தஸ்த்து என பிரித்து வைத்தது இந்த காலம். எல்லாம் தாண்டி ஒருத்தி வந்தாள்.. எங்கோ தொலைத்ததை எல்லாம் எனகென மீண்டும் கடவுள் கொடுக்கிறா என யோசிக்கும் நேரத்தில் இப்படி அதையும் பறிக்க நினைக்கிறார் எனத்தான் அமர்ந்திருந்தான்.

சிலருக்கு நினைப்பதை உடனே பகிர முடியும். சிலருக்கு அந்த வரம் இல்லை. நினைப்பதை.. நல்லவிதமாக நினைப்பதை கூட சொல்ல முடியாது. சூழ்நிலை அவனை பேசவிடாது. இந்தநிலைதான் இப்போது பசுபதிக்கு. அவனாக திவியை தேடி செல்லவில்லை. இப்போது அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை அந்த திவி மேல். ஆனால், இதை சொல்ல அவனுக்கு வரம் இல்லை. மனதை சரியானபடி வெளிப்படுத்துவதும் வரம்தான்.

அமுதா, நந்தித்தாவின் பெற்றோருக்கு அழைத்து சொல்லினர், நந்துவின் உடல்நிலை பற்றி.

நந்தித்தாவை அறைக்கு மாற்றிவிட்டு சென்றனர். 

அமுதா “பசுபதி நீ போய் பாரு” என்றார்.

பசுபதி தலையசைத்து மாட்டேன் என அமர்ந்திருந்தான்.

நொந்து போனான். அவளை பார்க்க வேண்டும் போலவும் இருந்தது.. அதே நேரம் அவளை எப்படி எதிர்கொள்வது எனவும் வருத்தமாக இருந்தது. அவனை தடுப்பார் யாருமில்லை. சென்று மனையாளை பார்க்கலாம். ஆனால், அவனின் இயல்பு தடுக்கிறது. எதையும் வாய்திறந்து கேட்டதில்லை.. சொன்னதில்லை. முன்பே.. அவளோடு ப்ரியம் ஏற்பட்ட போதுகூட.. தன் கடந்தகாலம் பற்றி சொல்ல முடியவில்லை அவனால். எல்லாம் கடந்து வந்துவிட்டேன்.. இனி இவளிடம் சொல்லி சங்கடப்படுத்த கூடாது.. என எண்ணிக் கொண்டான். இப்படி அந்த திவி வந்து நிற்பாள் என நான் எண்ணவில்லை. அதிலும் இந்தமாதிரி நேரத்தில்.. அப்படியும், நந்து பேச வந்ததை கவனிக்காமல்.. திவியை.. பார்க்க சென்று.. ஐயோ.. இதென்ன வாழ்க்கையா இல்லை, சாபமா.. வெறித்து  அமர்ந்திருந்தான்.

மனையாளாகவே இருந்தாலும்.. எல்லா நேரமும் புரிந்துக் கொள்ள முடியாதே. காதலின் பிரபஞ்ச ரகசியம் என்பது.. முதலில் நிறைய பேசவேண்டும்.. சண்டை போட வேண்டும்.. ஒரு கட்டத்திற்கு மேல்.. கேள்வியே கேட்க்காமல் சரணடைந்தால் வேண்டும்.

பசுபதிக்கோ.. முதலிலேயே தகராறு. அவன் அவளை பற்றியோ தன்னை பற்றியோ பேசவில்லை. பின் சண்டையில்லை.. அதன்பின்தானே சரணடைதல்.

ஆனால், நந்தித்தா, அவனிடம் நிறைய பேசினாள். அவனின் அன்பிற்காக சண்டையிட்டால்.. அதில் கொஞ்சம் வெற்றியும் கொண்டாள். ஆனால், சுதாரித்திருந்தால்.. எங்கோ அவர்.. காயம்பட்டிருக்கிறார் என.. ஆனால், அதுபற்றி கணவனிடம் கேட்டு சண்டையிடும் உரிமையை அவள் பெறவில்லை. ஆக, நந்தித்தாவும் இரண்டாம் நிலையிலேயே நின்றுக் கொண்டாள். நேசமும் தூரமாகவே நின்றுக் கொண்டது.

“சந்தர்ப்பமே தீமை செய்தால்

சந்தோஷமே ஏது..

சல்லடையில் தண்ணீர் அள்ளி 

தாகம் தீராது..”

கெளரவ் முதலில் சென்றார், அமுதாவும் அவரோடு சென்றார்.

ஏதும் ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை. ஒருமாதிரி இறுக்கமான சூழல்.. கெளரவ் “நந்தும்மா.. நீ எதையும் யோசிக்க கூடாது. எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நீ ரெஸ்ட் எடுத்து உடம்பை பார்த்தக்கனும்” என்றார்.

நந்தித்தாவிற்கு, அழுகை இன்னும் அதிகமாகியது.

அமுதா மருமகளின் கையை பற்றிக் கொண்டார் இறுக்கமாக.

கெளரவ் வெளியே வந்து மகனை முறைத்தார்.

பசுபதி தலைகுனிந்து அமர்ந்திருந்தவனுக்கு… தந்தையின் நகராத காலடிகள் தெரிய நிமிர்ந்து பார்த்தான். 

‘தனக்காக வாழ்க்கையை தேடிக்கொள்ளவும் தெரியவில்லை. அதுவாக தேடி வந்த வாழ்க்கையையும்.. வாழ தெரியவில்லை..’ என எதோ ஈனபிறவியை பார்ப்பது போல பார்த்துவிட்டு.. அந்தபக்கம் சென்றார், தந்தை.

நந்தித்தாவின் பெற்றோர்.. பிரசன்னாவிற்கு அழைத்து சொல்லியிருந்தனர். எனவே, நந்தித்தாவின் அண்ணன்.. மருத்துவமனைக்கு வந்துவிட்டான் இப்போது.

எல்லோரும் நின்றிருந்தனர். கெளரவ் பிரசன்னாவோடு பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்.

பிரசன்னா “அம்மா அப்பா கிளம்பி வந்திட்டு இருக்காங்க மாமா..” எனவும் சொன்னான்.

பசுபதியிடம் சென்றான் பேசுவதற்கு. பசுபதி எந்த ஆவலும் காட்டவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தான். வருத்தமாக இருக்கிறார் என எண்ணி பிரசன்னா, ஏதும் பேசாமல் வந்துவிட்டார் கெளரவ்விடம்.

தங்கையை பார்த்து வந்தான்.. நந்தித்தா உறங்கிக் கொண்டிருந்தாள். அதனால், அமைதியாக பார்த்து வந்துவிட்டான்.

மதியம், பசுபதியை தவிர மற்ற எல்லோரும் உண்டு வந்தனர்.

நந்தித்தா உணவு உண்டு மாத்திரைகள் எடுத்துக் கொண்டு.. படுத்திருந்தாள்.

அமுதா வந்தார், அறையின் உள்ளே.

மருமகள் நிதானமாக இருப்பதால்.. அமுதா “அம்மா அப்பா கிளம்பி வந்துட்டு இருக்காங்க.. நந்து” என்றார்.

நந்தித்தா “ம்” என கேட்டுக் கொண்டாள்.

பின் “அத்தை, நான் ஒன்னு கேட்பேன்.. உங்களுக்கு தெரிந்தால் என்கிட்டே உண்மையை சொல்லணும்..” என பீடிகையோடு ஆரம்பித்தாள்.

அமுதாவிற்கு மனது பாரமானது.. ஆனாலும், மருமகள் குழப்பத்தில் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. என எண்ணி “சொல்லுடா “ என்றார்.

நந்தித்தா “அத்தை திவ்யா அப்புறம் பசுபதி.. பற்றிய உண்மையை சொல்லுங்க அத்தை” என்றாள்.

அமுதா “ஏன் டா, மனதை குழப்பிக்கிற..” என அவளின் தலை கோதினார்.

நந்தித்தா “இல்ல அத்த, குழப்பமே இல்ல.. இப்போ, நான் முடிவு எடுத்துட்டேன். ஆனால்” என சொல்லி, கண் கலங்கியவள்.. “இந்த மாதங்களில் என்ன வாழ்ந்தேன் என புரியலை அத்தை.. அவர் எ.. எதையும், அவர் சம்பந்தப்பட்ட ஏதும் எனக்கு தெரியவேயில்லை. நான்.. எனக்கு எதுவுமே தெரிந்துக் கொள்ளாமல்.. அவரை வற்புறுத்தி..” என சொல்லி நிறுத்திக் கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது. மற்றபடி முகத்தில் என பாவனையும் இல்லை.

அமுதா கண்ணீரை துடைத்துவிட்டார்.. “நந்து.. இது எப்போவோ நடந்து முடிந்த விஷயம். திவ்யா அவன் காலேஜ் பெங்களூர்ரில் படிக்கும் போது பழக்கமான பெண். 

அவன், CA படிக்கவென டெல்லி போய் படிக்கும் வரை.. கல்யாணம் செய்து ஆசைப்பட்டு பழகினாங்க. திவ்யா பெங்களூர்ல MBAவோ.. ஏதோ படித்தாள். அது முடித்து அவளுக்கு திருமணத்திற்கு பார்த்தார்கள்.

அப்போது அந்த பெண் பசுபதி பற்றி சொல்லியிருக்காங்க, அவங்க வீட்டில்.

என்ன என அவர்கள் பசுபதி பற்றி விசாரித்ததில்.. நம்ம குடும்பம் பற்றி தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு நாம்.. நமது குலம்.. அது இது என ஏதும் பிடிக்கவில்லை.

அவர்கள்.. நேராக இங்கே நம்ம மாமா ஷோவ்ரூம்க்கு வந்து மிரட்டல். ஒரு வேன் நிறைய ஆட்களோடு வந்துட்டாங்க.

அதன்பிறகு.. நம்ம கிட்ட வேலை செய்கிற ஆட்கள் அவர்களை அங்கேயே மறித்து.. வீடு அழைத்து வந்தனர்.

பேச்சு வார்த்தையே இல்லை.. எங்க குடும்பம் இப்படி அப்படி  பெரிய தலைக்கட்டு நாங்க.. நீங்க எப்படி எங்க வீட்டில் பெண் எடுக்க முடியும் என.. மிரட்டல். வேலை செய்பவர்கள்தான் அவர்களை கட்டுபடுத்தினர். அப்படி ஒரு பேச்சு.

உங்க மாமாக்கு இந்த அடாவடி எல்லாம் ஆகாதே. என்னை, பசுபதியிடம் பேச சொன்னார். அவனும் “ஆமாம் நான் திவியை விரும்புகிறேன்.. எனக்கு அவள் வேண்டும்” என்றான்.

ஆனால், அவர்களின் பேச்சும் செய்கையும்.. நமக்கு பிடிக்கலை. அதன்பின், என் மகனை வேண்டான்னு சொல்பவர்களை.. நாம என்ன செய்ய முடியும். அது சரியாக இல்லையே.. நான்தான் பசுபதியிடம் பேசி சரி செய்தேன்.

அவன் வந்து தனக்கும் திவ்யாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக் கொடுத்து சென்றான், இரண்டுநாள் சென்று.

இது பெரிய விஷயமே இல்லை டா.

பசுபதி வேகமாகவே தேறிக் கொண்டான் நந்து. அவன் நல்ல ஸ்கோர் செய்தான் எக்ஸாம்மில். என்னமோ எனக்கு பெருமையாக இருந்தது. அவனை நான் ஏதும் அதன்பின் கேள்வியே கேட்கவில்லை. தனியாகவே இருந்தான்.. நல்லாத்தான் இருந்தான். என்ன ஆகிட்டான் என் பையன். பாரு ஜம்முன்னு உன்னை கல்யாணம் செய்து எப்படி இருக்கான் பாரு” என்ற மருமகளின் கன்னம் வருடினார்.

நந்தித்தா அத்தையை.. குருகுருவென்றே பார்த்திருந்தாள்.. ‘பெரியம்மா சொன்னது போல.. அதன்பின்தான் வந்திருக்கிறார்.’ என எண்ணிக் கொண்டாள்.

அமுதா மருமகளின் குருகுருப்பினை தாங்க முடியாமல் “அவனாகவே வீடு வந்தான்.. தானாக மேலே கட்டிக் கொண்டான். அவன் விருப்பம் போல நடந்தது. அப்புறம் ஒரு தேவதை மாதிரி நீ வந்த.. அவனை அப்போதும் நாங்க கேட்க்கலைதான். ஆனால், மேஜிக் நடந்தது.” என சொல்லி இப்போது நடந்ததை பற்றி பேசாமல் அமைதியானார்.

நந்தித்தாவிற்கு தன் அத்தை எல்லாவற்றையும் மறைத்து.. பெரிவர்களுக்கு நடந்த நிகழ்வுகளை மட்டும் சொல்லுகிறார் என எண்ணம். ஆனாலும், தன் கணவன், வாழ்வில் திவ்யா இருந்தாள்.. என எண்ணம் வலுபெற்றது.