சுமிக்கு மாடியில் முரளி அறைக்கு, பக்கத்து அறையைத தங்கிக் கொள்ள குடுத்திருந்தனர். முரளி அன்று இரவு உணவிற்கு பிறகு மாடி ஹாலில் அமர்ந்திருந்தான். அப்போது சுமி அங்கே வர “சுமி உன்னோட கொஞ்சம் பேசணும்…” என்றதும் சுமி அவன் எதிரில் அமர்ந்தாள்.
முரளி “நான் உன்னை ஏர்போர்ட்ல பார்த்து அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். அது நீ என்ன நினைப்புல வந்திருக்கேன்னு எனக்கு தெரியாது. பாட்டி வேற நமக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாங்க. உன்னிடம் நேரடியா மறுப்பு சொல்ல வேண்டியதா இருந்திடுமோ இல்லை, நான் உன்கிட்ட சிரிச்சு பேசினா உனக்கு அது பால்ஸ் ஹோப் குடுதிடுமோன்னு நினைச்சி தான், நான் பேசாம இருந்தேன்…” என்று சொன்னதும்.
சுமி “தேங்க்ஸ் முரளி. உனக்கு நான் வந்தது பிடிக்கலையோன்னு நினைச்சேன்…” என்றாள்.
“எனக்கு உன்னை பிடிக்கும். இது உன்னோட மாமா வீடு. இங்க நீ எப்ப வேணா வரலாம். இது மாதிரி இன்னொரு தடவை பேசாத. அப்புறம் ஷ்ருதிய, பத்தி தப்பா நினைக்காத. அவ எங்க கல்யாணம் நடக்காதோன்னு பயத்தில இருந்தா. அதனால அப்படி நடந்துக்கிட்டா மத்தபடி அவ ரொம்ப நல்ல டைப், ரொம்ப ஜாலியா இருப்பா…” என்று முரளி ஷ்ருதிக்காக வக்காலத்து வாங்குவதை பார்த்து சிரித்த சுமி,
“முரளி ஐ நோ. பொசெஸ்சீவ்நெஸ் இருந்தா தான் அது லவ். நான் ஷ்ருதிய தப்பா நினைக்கல. நீ கவலைப்படாதே. நீ எப்ப டெல்லிக்கு போற..?” என்று கேட்க,
“நாளைக்கு போகலாம்னு நினைச்சேன், ஆனா போகல. நாளைக்கு நாம ரெண்டு பேரும் வெளிய போகலாம். எங்க போகலாம்னு நீயே சொல்லு…” என்றவன், குட் நைட் சொல்லி தூங்க சென்றான்.
முரளி இருந்த இரண்டு நாட்களும் சுமியோடவே வெளியே சென்று வந்தான். அவளுக்கு பிடித்த உடைகள், பட்டுப்புடவை என்று வாங்கி குடுத்தான். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அப்பத்தா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தான் நினைத்தது நடக்க போவதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தவர், அன்று இரவு உணவின் போது முரளி நாளை காலை டெல்லிக்கு கிளம்புவதாக சொன்னதும்,
அப்பத்தா தான் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று எல்லோரையும் ஹாலுக்கு வர சொன்னார். அவர் என்ன பேச போகிறார் என்று எல்லோருக்கும் தெரிந்ததால், எல்லோரும் டென்ஷனாக இருந்தனர். அப்பத்தா ராமமூர்த்தியிடம் முரளி, சுமி கல்யாணத்தை பற்றி பேச,
சுமி “என்னால இங்க வந்து இருக்க முடியாது பாட்டி. முரளி வந்து லண்டன்ல செட்டில் ஆகறதுன்னா நீங்க அதை பத்தி பேசுங்க…” என்றதும்,
அதிர்ந்த பாட்டி “என்ன சுமி இப்படி சொல்ற? அவன் எப்படி அங்க வருவான்?” என்றதும்,
“அப்ப நான் மட்டும் எங்க அம்மா அப்பாவ விட்டு வரணுமா. எனக்கு இந்த ஊரே பிடிக்கல. எங்க பாரு ஒரே கூட்டம். என்னால இங்க இருக்க முடியாது…” என்றாள் தெளிவாக,
அப்பத்தா “நான் என் பொண்ண வெளிநாட்டில இருக்கிற உங்க அப்பாவுக்கு கல்யாணம் செஞ்சு குடுத்தேன். அதனால என் பொண்ணுக்கு பொறந்த வீட்டு தொடர்பே இல்லை. அவளாலயும் இங்க வர முடியலை. இவங்களாலும் அவளை போய் பார்க்க முடியல. எதோ என்னால உங்களுக்குள்ள இந்த அளவுக்காவது நெருக்கம் இருக்கு. நானும் இல்லைனா, என்னோட பசங்களோட தொடர்பே விட்டுடும். அதனால தான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண நினைச்சேன்…” என்று சொல்லி அழ, அவர் அழுவது அங்கிருந்த எல்லோர் மனதையும் வருத்தியது.
சுமி “நீங்க சொன்ன மாதிரி நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்னோட நிலைமையும் அது தான் பாட்டி. நானும் எங்க அம்மா, அப்பா, அண்ணனை விட்டு பிரிஞ்சு வரணும். எங்க அம்மாவுக்கும் நாளைக்கு உங்களோட நிலைமை தான். இது தேவையா நீங்களே சொல்லுங்க…” என்றதும்,
யோசித்த பாட்டி “சரி உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம்…” என்றார்.
அனைவரும் நிம்மதி அடைந்தனர். இப்போது முரளி ஷ்ருதி பற்றி பேசி, தனது அம்மாவை மேலும் வறுத்த விரும்பாத ராமமூர்த்தி, அது முரளி சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்ததும் பார்ப்போம் என்று வேறு விஷயங்கள் பேசி, தனது அம்மாவை சமாதனம் செய்து தூங்க சென்றார்.
முரளி அடுத்த நாள் காலை, விமானத்தில் டெல்லி கிளம்பி சென்றான். ப்ரியாவிற்கு அடுத்து வந்த முன்று நாட்களும் காலேஜ் கல்ச்சுரல்ஸ். அவள் கெளதமிடம் சொல்லி, சுமியும் தங்களுடன் காலேஜ் அழைத்து வர, கல்லூரி முதல்வரிடம் அனுமதி வாங்க ஏற்பாடு செய்தாள். அதனால் சுமியும் ப்ரியாவுடன் கல்லூரிக்கு வந்தாள்.
காலேஜ் கல்ச்சுரல்ஸ் என்பதால் கெளதமும், கார்த்திக்கும் காலையிலேயே காலேஜ்க்கு வந்துவிட்டனர். காவ்யா தனியாக அமர்ந்து சுந்தருடன் போன் பேசிக்கொண்டிருந்தாள். அதனால் மற்ற நான்கு பேரும் சேர்ந்து ஒன்றாக சுற்றினார்கள்.
கல்ச்சுரல்ஸ் கடைசி தினம் அன்று மிதுவும் இவர்கள் காலேஜ்க்கு வந்திருந்தாள். அன்று கெளதமிற்கு காலேஜ் லைட் மியூசிக் போட்டி இருந்தது, அதனால் அவன் அங்கு சென்றுவிட, கார்த்திக் மிதுவை அழைத்து கொண்டு கான்டீன் சென்று விட்டான்.
அப்போது சுமி ப்ரியாவிடம் “நீயும் கெளதமும் லவ்வெர்ஸ் தானே…” என்றதும்,
ப்ரியா “ஆமாம் உனக்கு எப்படி தெரியும், ஷ்ருதி பேசுனது வச்சு சொல்றியா..?” என்று கேட்க,
“இல்லை… கெளதம் பார்வையில இருந்து கண்டுபிடிச்சேன். அவங்க புது வீட்டுக்கு நான் வந்திருந்த போது. நான் உன்கூட தானே இருந்தேன். அப்ப கெளதம் ஒவ்வொரு தடவையும் வீட்டுக்குள்ள வரும் போதும், அவன் பார்வை உன் மேல தான் இருக்கும். அப்புறமா நான் அவன்கிட்ட பேசும் போது, அவனுக்கு என்னை தெரியவே இல்லை. எங்க பார்த்தா தானே தெரியும். அவன் கண்ணு உன்னை மட்டும் தான் பார்க்குது. நீ ரொம்ப லக்கி. ஹி லவ்ஸ் யு சோ மச்…” என்று சுமி சொல்ல,
ப்ரியா புன்னகையுடன் “எனக்கு தெரியும்…” என்றாள்.
அப்போது அங்கே கார்த்திக்கும், மிதுவும் வர நிகழ்ச்சியும் ஆரம்பித்தது.
மேடை ஏறிய கெளதம் தான் கல்லூரியின் கடைசி ஆண்டில் இருப்பதால் இன்று போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றும் எல்லோரையும் மகிழ்விக்கவே இப்போது பாடுவதாகவும் சொல்லி, பாட ஆரம்பித்தான்.
“காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க…” என்று பாடல் முடியும் போது அரங்கமே அமைதியாக இருந்தது.
எவ்வளவோ காதல் பாட்டுகள் வந்திருந்தாலும், இன்னும் இந்த பாடலுக்கு இருக்கும் மயக்கம் குறையவில்லை என்பது எல்லோரும் பாடலை ரசித்து அமைதியாக இருந்ததிலேயே தெரிந்தது. பாடல் முடிந்துவிட்டது என்பதையே சில நொடிகள் கழித்து தான் உணர்ந்தார்கள், அதற்கு பிறகு தான் கை தட்டவே ஆரம்பித்தனர்.
கெளதம் வீட்டில் கார்த்திக்கிடம் “சுமிக்கு தீம் பார்க் போகணுமாம் நாளைக்கு போலாமா…” என்று கேட்டவன்,
கார்த்திக் “ஐ! நீ எதுக்கு கூப்பிடுறேன்னு எனக்கு தெரியாதா. நைசா எங்களோட சுமிய தள்ளிட்டு, நீ ப்ரியாவோட எஸ் ஆகிடுவ. நான் வரலைப்பா…” என்றான்.
கெளதம் “டேய்! நீ என்னை பத்தி…” என்று இழுதத்தவன், “கரெக்டா தான் சொல்ற. உன் நண்பனுக்காக நீ இந்த தியாகத்தை கூட பண்ண மாட்டியா. அதனால நீ கண்டிப்பா வர…” என்றதும்,
கார்த்திக் “நானும் எத்தனை நாள்டா தியாகியாகவே இருக்கிறது. வேண்டாம் கெளதம் என்னை வெறி ஆக்காத. நான் மிதுவோட வெளிய போலைன்னாலும், அவ எங்க வீட்டுக்கு வருவா. நாங்க எதோ தனியா பேசவாவது செய்வோம். உன்னோட வந்தா அதுவும் முடியாது. அதனால நான் வரலை…” என்றதும்,
“டேய்… நீ இன்னும் பேசிட்டு தான் இருக்கியா? நீயெல்லாம் என் ப்ரண்ட்னு வெளியே சொல்லாத…” என்று கெளதம் சொல்ல,
“உன்ன மாதிரி ப்ரிண்ட் கூட இருந்தா, நான் வேற என்ன செய்றது…” என்று கார்த்திக்கும் பதிலுக்கு பேச,
அதை கேட்ட ஷ்ருதி “டேய் என்னை வச்சிக்கிட்டு, ரெண்டு பேரும் என்னடா பேசுறீங்க..?” என்றாள்.
தலையில் அடித்த ஷ்ருதி “சரி நானும் வரேன், சுமிக்காக. நீங்க ரெண்டு பேரும் எக்கேடோ கெட்டு போங்க…” என்றாள்.
“தேங்க்ஸ் ஷ்ருதி…” என்று கெளதமும், கார்த்திக்கும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.
சுமியும், ப்ரியாவும் கிளம்பி கெளதம் வீட்டுக்கு வர, அங்கிருந்து எல்லோரும் காரில் தீம் பார்க் கிளம்பினார்கள். உள்ளே சென்றதும் முதலில் ரைட்ஸ் போவோம், மதியம் உணவிற்கு பிறகு வாட்டர் கேம்ஸ் போவோம் என்று முடிவு செய்தனர்.
அன்று வார நாள் அதனால் கூட்டம் இல்லை.
ரைட்ஸ் செல்லும் போது கெளதம் ப்ரியாவுடனும், கார்த்திக் மிதுவுடனும் அமர்ந்து கொள்ள, ஷ்ருதியும், சுமியும் ஒன்றாக அமர்ந்தனர். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், அவரவர் ஜோடி மீது தோளில் கை போடுவதும், கட்டி அணைப்பதுமாக கெளதமும், கார்த்திக்கும் எதற்கு வந்தார்களோ அந்த வேலையை சரியாக செய்தனர்.
மதியம் உணவு முடிந்து வாட்டர் கேம்ஸ்க்கு சென்றார்கள்.
சுமி தண்ணீரை பார்த்து தயங்க, கார்த்திக் “ஏன் குளிக்கிற? நாங்க எல்லாம் மனுஷங்க இல்லையா..?” என்று சொல்லி, அவளை நீருக்குள் தள்ளிவிட்டான்.
அங்கே எல்லோரும் சேர்ந்து நீரில் விளையாடினார்கள் பின்பு ரெயின் டிஸ்கோவில் ஆட்டம் போட்டவர்கள் பின்பு அங்கிருந்த வாட்டர் பால்ஸ் சென்றனர்.
சுமி, ஷ்ருதி ரெண்டு பேருமே அங்கே கொட்டும் நீரை பார்த்து பயப்பட கெளதமும், கார்த்திக்கும் அவர்களை கையில் பிடித்து அழைத்து சென்று நீரில் விளையாட விட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் போதும் என்றதும் அவர்களை வெளியே அழைத்து வந்துவிட்டு, ஷ்ருதியிடம் அரை மணியில் வந்து விடுவதாக சொல்லி தங்கள் ஜோடியை அழைத்து கொண்டு மீண்டும் வாட்டர் பால்ஸ் சென்றனர்.
அங்கே இவர்கள் இரண்டு ஜோடி மட்டும் தான் இருந்தனர். இரண்டு ஜோடியும் நீரில் கொஞ்ச நேரம் நன்றாக ஆட்டம் போட்டு விட்டு இஷ்டமில்லாமல் அதிலிருந்து வெளியே வந்தனர். இரண்டு ஜோடிகளுக்கும் அன்றைய நாள் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
அப்பத்தா சுமி சொன்னதை அவர் மகள் வாசுகியிடம் சொல்லி வருத்தப்பட, அவர் விடுங்க அம்மா என்றவர், இங்கே சுமிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை லண்டனில் வேலை பார்ப்பதாகவும், அவர் அங்கேயே செட்டில் ஆக விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சுமிக்கு ஏற்கனவே அந்த பையனை தெரியும் அவளும் சரி என்று சொல்லிவிட்டாள், மாப்பிளையின் குடும்பம் சென்னையில் இருப்பதால் அவர்கள் வரும் ஞாயிறு அன்று அங்கே பெண் பார்க்க வருவதாகவும் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்ய சொல்ல,
அப்பத்தா சந்தோஷம் அடைந்தவர், சரி என்று சொல்லி போன்னை வைத்தார். அப்பத்தா ராமமூர்த்தியிடம் சொல்ல அவர் தனது தங்கையிடம் விபரம் கேட்டு ஏற்பாடு செய்தார். ஞாயிறு அன்று ப்ரியா தான் சுமியை ரெடி செய்தாள். ப்ரியா, முரளி சுமிக்கு எடுத்து குடுத்த புடவைக்கு ஜாக்கெட் தைத்து வாங்கி வைத்திருந்தாள்.
அந்த புடவையை கட்டி எளிமையான அலங்காரத்தில் சுமியை மிகவும் அழகாக மாற்றியிருந்தாள். சுமிக்கே தன்னை கண்ணாடியில் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. மாலையில் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அவர்களுக்கு சுமியை பார்த்ததும் பிடித்தது, அன்றே சுமிக்கு பூ வைத்து, மோதிரம் போட்டு நிச்சயம் செய்து, இன்னும் ஒரே மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்தனர்.
லண்டனில் இருந்து வாசுகியும் அவர் கணவரும் ஒரே வாரத்தில் கிளம்பி வர, ஆளுக்கு ஒரு வேலையாக செய்தனர். ராமமூர்த்தி அவர்கள் வருவதற்கு முன்பே பத்திரிகை அடித்து, வாங்கி வைத்திருந்தார். அவருக்கு எல்லா வேலைகளிலும் கிருஷ்ணகுமாரும், கெளதமும் உதவி செய்தனர்.
சுமியின் அண்ணன் அருணும், முரளியும் கல்யாணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு தான் வந்தனர். வந்தும் ஒன்றும் செய்யவில்லை அவர்களுக்கு, இங்கே ஒன்றும் தெரியவில்லை, கெளதம் தான் அதிக வேலை பார்த்தான்.
கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு கெளதம் கடைசியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து, அவன் அருகில் சென்ற சுமி “நீ யாருன்னே எனக்கு ஒரு மாசம் முன்னாடி தெரியாது. ஆனா நீ என் கல்யாணத்துக்கு இப்படி வேலை செய்ற. உனக்கு நான் எப்படி நன்றி சொல்றது…” என்று நெகிழ்ந்த குரலில் கேட்க,
“இதெல்லாம் ஒரு வேலையா? நீ எனக்கும், ப்ரியாவுக்கும் கல்யாணம் நடக்கும் போது கண்டிப்பா வந்திடனும். அது தான் நீ எனக்கு சொல்ற நன்றி…” என்று கெளதம் சொன்னதும்,
சுமி “கண்டிப்பா வரேன் கெளதம்…” என்றாள்.
திருமண நாளும் அழகாக விடிந்தது சுமி, அர்ஜுன் திருமணமும் இனிதாக நடந்தது.