தலைகீழ் நேசம்!

13

காலத்தின் வண்ணத்தில் இந்த சந்திப்பும் ஒரு அற்புதமான இடம்தான்.. தூர இருந்து பார்ப்பவர்க்கு. ஆனால், அதை எதிர்கொள்பவருக்கு.. மிகவும் கொடுமையானது. இப்போது பசுபதியை சோதிக்கிறதா.. இல்லை திவ்யாவை சோதிக்கின்றதா இந்த காலம் என தெரியவில்லை.

எனவே, இந்த நிமிடங்களை அனுபவிக்கும் நிலையில் இருவரும் இல்லை. முன்னாள் காதலர்கள். 

திவ்யாவிற்கு, பசுபதியின் அதிர்ந்த பார்வையை கொஞ்சம் ஆனந்தத்தை கொடுத்தது என்றாலும்.. அவன் திருமணமானவன் என்ற நிலை, அவளை தள்ளியே நிற்க சொன்னது.

பசுபதிக்கு, அதிர்ச்சி அதிர்ச்சி, அதிர்ச்சி மட்டுமே. எப்படி இவளால், இங்கே வர முடிந்தது.. என்ன செய்கிறாள் இவள் இங்கே, அதுவும் இப்படி.. தாலியில்லை.. பொட்டில்லை.. என்ன இது என அளவு கடந்த அக்கறை அவள்மேல் தளும்பி நிற்க.. அவனுக்கு தன் முன்னாள் காதலி என்ற எண்ணமும் தளும்பி நின்றது.. அவள் ஏன் இப்படி இருக்கிறாள் எனதான் எண்ணம்.

பசுபதி தன்னை சுதாரிக்க முயன்றுக் கொண்டிருந்தான்.. ஆனாலும் முடியவில்லை. அவனின் பார்வைகள் ஆயிரம் கேள்விகள் கேட்க்கிறது.. ஆனால், வார்த்தைகள் வரவில்லை.

திவ்யா அவனின் எதிரே அமர்ந்தாள்.. மெல்லிய புன்னகையோடு அவனை ஏறிட்டாள்.

அது ஒரு உரத் தொழிற்சாலை. MD அறை.

பசுபதிக்கு நிதானம் பறந்துக் கொண்டிருந்தது.. பேசவும் முடியவில்லை.. அவளை உதாசினபடுத்தவும் முடியவில்லை. அமைதியாக அவளின் எதிரே அமர்ந்தான்.

திவ்யா “க்கு..ம்.. எப்படி இருக்க பஷூபதி” என்றாள்.. குரலில் அத்தனை கமரல்.. கரகரப்பு.

பசுபதிக்கு அந்த குரலினை உள்வாங்கும் சக்தியே இல்லை.. கீழே குனிந்துக் கொண்டான் “ம்..” என்றான்.

திவ்யா “ரொம்ப ஹன்ட்சம்’மா இருக்கீங்க.. முன்ன விட.. க்கும்” என்றாள், கைநழுவிய பொக்கிஷத்தை மீண்டும் பார்த்த.. ஏக்கம் அதில் இருந்தது.

பசுபதி எழுந்துவிட்டான் “தேங்க்ஸ்.. பசங்களை பார்த்துட்டு வரேன்.. நா..ம.. அப்புறம் பேசலாம்” என அவளை பார்க்காமல் வெளியே சென்றுவிட்டான்.

திவ்யாவிற்கு கண்களில் கண்ணீர் வழிந்தது.

பசுபதி நேரே பார்க்கிங் சென்றுவிட்டான்.. மனது சமன்படவில்லை. தன் காரில் சாய்ந்து நின்றுக் கொண்டான்.. தன் புல்ஹன்ட் ஷர்ட் பட்டனை விடுவித்து.. அந்த ஷர்ட்’டினை தன் முழங்கை நோக்கி ஏற்றி விட்டுக் கொண்டான்.. இங்கும் அங்கும் நடந்தான்.. ‘ஏன் இந்த பெருமூச்சு.. ஐயோ அவளுக்கு என்ன ஆச்சு..’ என தன் நெற்றியை தேய்த்துக் கொண்டான். மூளை செயல்பட மறுத்தது. இதயம்.. அவளின் வார்த்தைகளையும் குரலையுமே.. தனக்குள் ஓட்டிக் கொண்டிருந்தது.

தனது ஜுனியரிடம் அலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு.. தான் தங்கியிருக்கும் இடம் வந்து சேர்ந்தான் பசுபதி.

மதிய நேரம்.. என்ன செய்கிறோம் என உணராமல்.. ஹோட்டலில் உள்ள பார் சென்றான். மனது நீண்டநாள் சென்று.. மதுவை தேடியது. அவனால் எந்த சமாதானமும் சொல்ல  முடியவில்லை.. நன்றாக குடித்தான்.

உண்டு.. தன் அறைக்கு வந்து உறங்கிவிட்டான் நினைவில்லாமல்.. எப்போதும் போல.. திவி திவி என புலம்பிக் கொண்டே.

இரவு எட்டு மணிக்குதான் எழுந்தான்.

தனது ஜூனியர் வந்திருந்தனர். அவர்களிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

மனையாள் அழைத்தாள் பசுபதியை. 

பசுபதி உடனே அழைப்பினை ஏற்றான் “ஹலோ” என்றான்.. குரல் உள்ளே சென்ற பானத்தால் கரகரத்தது.

மனையாள் “பதி.. வொர்க் முடிந்தததா..” என்றாள்.

பசுபதியின் மனது சுட்டது முதல்முறை.. எப்போதும் அவளையே குற்றம் சொல்பவன் மனது முதல்முறை.. மனையாளின் பேச்சில் இருக்கும் அன்பில் சுட்டது மனம்.

கணவன் “ம்..” என்றான்.

மனையாள் “என்னாச்சு.. “ என்றாள்.

பசுபதி “என்ன” என்றான்.

மனையாள் “இல்ல, என்னமோ மாதிரி இருக்கீங்க.. என்னால் பீல் பண்ண முடியுது.. குரலும் வரலை.. என்னாச்சு” என்றாள், அக்கறையான குரலில்.

பசுபதி “க்கும்.. ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல.. வெதர் இங்க அப்படிதானே இருக்கும் அதான். “ என்றான், சமாளிப்ப்பாக.

நந்தித்தா “ம்.. இஞ்சி டீ குடிங்க” என்றாள்.

பசுபதிக்கு குலைநடுங்கியது.. ஒருமாதிரி.. அன்பினை எதிர்கொள்ள முடியாத நடுக்கம். தன்னவளிடம் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும்.. அவளின் அன்பிற்கு.. பழகிக் கொண்டுவிட்டான் பசுபதி. இப்போது, மீண்டும் திவ்யா.. எதிரே நிற்கிறாள். ஒன்றுமில்லாதவள் போல நிற்கிறாள்.. தானோ எல்லாம் பெற்று நிற்பதாக அவனுக்கே எண்ணம்.. அதில் வந்த குற்றவுணர்வு.. இப்போது மனையாளின் இயல்பான பேச்சுக்கு  கூட.. நடுங்கியது அவனுள். 

நந்தித்தா “எப்போ வரீங்க பதி” என்றாள்.

பசுபதி “க்கும்.. இன்னும் வொர்க் முடியலை நந்து” என்றான்.

நந்தித்தா “ம்.. சரி.. ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றாள் சின்ன குரலில்.

பசுபதி இயல்பு போல “டிராமா போடாத..” என்றான்.. அவனின் காதல் அப்படிதான்.

நந்தித்தா “போங்க உங்களுக்கு எப்போதான் புரியுமோ” என்றாள்.

பசுபதி “சரி,  டியூஷன் முடிந்ததா.. எப்போ எக்ஸாம்.. நீ வேணும்ன்னா.. ஊருக்கு போயிட்டு சொல்லி கொடுத்துட்டு வா..” என்றான் சம்பந்தமேயில்லாமல்.

நந்தித்தாவிற்கு ஏதும் மாற்றமாக தெரியவில்லை “அப்படியா.. இன்னும் டூ வீக்ஸ் இருக்கு.. நான் போயிட்டு வரவா..” என்றாள் குதூகலமாக.

பசுபதி ஏதும் பதில் சொல்லவில்லை.

மனையாள் “போயிட்டு வரவா..” என்றாள்.

பசுபதிக்கு கொஞ்சம் மூச்சு விட அவகாசம் வேண்டும் போலிருக்க.. “ம்.. அதான் சொல்லிட்டேனே..” என்றான்.

நந்தித்தா “எப்போ வரீங்க.. நீங்க வந்ததும் பார்த்துட்டு போய்கிறேன்.. சாப்பிட்டீங்களா” என்றாள்.

பசுபதி “இல்ல. இனிமேல்தான். சரி வைக்கட்டுமா” என்றான்.

நந்தித்தா “ம் “ என பேசி வைத்தாள்.

நந்தித்தா, சந்தோஷமாக கீழே வந்து தன் அத்தையிடம் விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.

இப்போது திவ்யா அழைத்தாள் பசுபதிக்கு. ட்ரு காலரில் “திவ்யா” என ஒளிர்ந்தது. 

பசுபதிக்கு, தடுமாற்றம்தான் வந்தது. மூளை ‘வேண்டாம் அழைப்பினை ஏற்காதே.. கிளம்பிடு இங்கிருந்து.. சென்னை போகிடு’ என்றது. மனது ‘பேசு.. அவளுக்கு என்னாச்சுன்னு கேட்க வேண்டாமா.. அவ்வளவு கொடுமைகரானா நீ.. நீ மட்டும் சந்தோஷமா இருக்க.. பாவம் அவ..’ என இறக்கம் கொண்டது. பசுபதி போராடினான். தலை வலித்தது. இப்போதும் பயமாக இருந்தது. மனையாளின் நிகழ்கால அன்பு பயமாக இருந்தது.. இப்போது திவ்யாவின்.. நிகழ்கால தோற்றம்.. பயம் கொள்ள வைத்து அவனை. 

2.. 3.. என அழைப்புகள் நீண்டது.

பசுபதி அவளின் அழைப்பினை ஏற்கவில்லை.

திவ்யா விடவில்லை, அவன் அழைப்பினை ஏற்கும் வரை.

பசுபதி அழைப்பினை ஏற்று “ஹலோ..” என்றான்.

திவ்யா “ஏன் பஷூபதி, உன்னை பிடிச்சிக்குவேன்னு பயந்துட்டியா” என்றாள், வார்த்தைகள் வேண்டுமானால் வதைக்கலாம்.. குரல் கதறியது.

பசுபதி “ஹேய்.. ஆஃப்ட்டர்நூன் அப்படியே வந்துட்டேன். அதான், பசங்ககிட்ட கொஞ்சம் பேசிட்டு இருந்தேன்.. சொல்லு திவ்யா” என்றான் இயல்புபோல.. கொஞ்சம் தேற்றிக் கொண்டான் இந்த நேரத்தில் எனலாம்.

மதியம் இருந்த அதிர்ச்சி இப்போது இல்லை.. என்ன ஆகிற்று என தெரிந்துக் கொள்ளும் நிலையில் இருந்தான்.

திவ்யா “டின்னெர் போலாமா” என்றாள்.

பசுபதி “உன் ஹஸ்பெண்ட் வருகிறாரா” என்றான்.

திவ்யா புன்னகையான குரலில் “ஓ.. என்கூட வரமாட்ட.. உன்னை அப்படியா மயக்கி கூட்டிட்டு போகிடுவேன்..” என்றாள்.. அந்த புன்னகையான குரலிலும் வலிதான் உணர முடிந்தது பசுபதியால்.

பசுபதி “திவ்யா..” என சலிப்பாக சொல்லியவன் “சரி, எங்க சொல்லு வரேன்” என்றான்.

திவ்யா இடம் சொன்னாள்.

பசுபதியும் கிளம்பி சென்றான்.

அமைதியான  ரூப்கார்டன் ஹோட்டல். 

இருவரும் மிகவும் போர்மலாக வரவேற்றுக் கொண்டனர். இருவரும் ஒரு வட்டம் போட்டுக் கொண்டனர், தங்களுக்கு தாங்களே.. எந்த வகையிலும் தவறு நடந்திட கூடாதென. அப்படியாயினும் சந்தித்து கொள்ள அவர்களின் மனம் ஆசை கொண்டுவிட்டது.. அங்கே தொடங்கியது அவர்களின் அபத்தம்.

திவ்யா “நைஸ் டீ-ஷர்ட்..” என்றாள்.

பசுபதி “தேங்க்ஸ்.. ஆர்டர் செய்திடலாமா” என்றான்.

திவ்யா தலையசைத்தாள். 

பசுபதி வெயிட்டரை அழைத்து.. உணவுகளை ஆர்டர் செய்தான். இயல்பு போல.. அவளுக்கு முன்பு பிடித்த உணவினை மறக்காமல் ஆர்டர் செய்தான் பசுபதி.

திவ்யாவும் அழுது.. கண்களை துடைத்துக் கொள்ளவில்லை.. ஒரளவு இருவரும் சுதாரித்திருந்தனரே.. உணர்ந்து மனதுள் ரசித்துக் கொண்டனர்.

வெயிட்டர் சென்றதும்.. திவ்யா “எங்க, உ..ன்.. வெட்டிங் போடோஸ் காட்டு” என்றாள்.

பசுபதி லேசாக புன்னகைத்தான் பதில் சொல்லவில்லை.

திவ்யா “என்ன பஷூபதி.. காட்டு” என்றாள். 

அவனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை எனவும்.. அவன் போன் டேபிளில் இருக்கவும் எடுத்தாள்.

பசுபதியின் முகத்தில் புன்னகை வாடி போனது.

திவ்யா, போன்  லாக் ஓபன் ஆகாமல்.. அவனிடம் நீட்டினாள் போனினை. 

பசுபதி ஒரு பெருமூச்சோடு தன் ரேகை வைத்து.. அனலாக் செய்தான்.

திவ்யா “பார்க்கலாமில்ல.. ஏதாவது ஏடாகூடமா இருக்காதே” என கேட்டுக் கொண்டே.. போனினை ஆராய்ந்தாள்.

நந்தித்தாவும் இவனும் எடுத்துக் கொண்ட.. மால்தீவ் செல்ப்பீ’ஸ் இருந்தது. திவ்யா புன்னகையோடு திறந்தவள்.. நந்தித்தாவை பார்த்தும் கொஞ்சம் வாடித்தான் போனாள். புன்னகை சட்டென மறைந்தது.. நந்தித்தா தமிழ்நாட்டு பெண்.. அவனுக்கு அப்படிதான் பிடிக்கும்.. என இவளுக்கும் தெரியுமே.. அத்தோடு, கண்கள் அவ்வளவு அழகாக இருந்தது.. ம்.. அவனுக்கு பிடிக்குமே.. என திவ்யா எண்ணிக் கொண்டே.. “ம்.. எப்படி போகுது.. சின்ன பெண்ணா இருப்பாங்க போல..” என சொல்லிக் கொண்டே.. இயல்பு போல.. போனினை  லாக் செய்தாள்.

பசுபதி சட்டென “ம்.. ஆனாலும், மெச்சூட். அதனால்தான் என்னை ஹென்ட்லே பண்றா..” என்றவன் போனினை எடுத்து தன் பக்கம் வைத்துக் கொண்டான்.

திவ்யாவின் முகம் புன்னகையை தொலைத்தது. பார்வையும் மாறியது.

பசுபதி “நீ எப்படி இருக்க சொல்லு” என கேட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

திவ்யா “என்ன சொல்றது தெரியலை. உன்னை பார்க்கும் போது, சந்தோஷமா இருக்கு.. ஆனால், அந்த சந்தோஷம் வேற எங்கும் வரலை” என்றாள்.. இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு.

பசுபதி தலை கோதிக் கொண்டு.. சுற்றிலும் பார்த்தான்.. யாரின் காதிலாவது விழ போகிறது என.

திவ்யா “சாரி” என்றாள்.

உணவுகள் வந்தது.. இருவரும் உண்ண தொடங்கினர். பசுபதி “இங்கே எப்படி நீ” என்றான்.. பொதுவானதை பேசலாம் என.

திவ்யா “பெங்களூர்க்கும் கிருஷ்ணகிரிக்கும் எவ்வளவு தூரம். அத்தோட.. பெங்களூர் எனக்கு செட் ஆகலை.. அதான் வந்துட்டேன். இது அண்ணனும் நானும் சேர்ந்து எடுத்திருக்கும் புது பிஸினெஸ். நீ ஆடிட்டர் தெரியும்.. சென்னையில்தான் இருப்ப தெரியும்.. தேடினேன்.. இருந்த. உங்க போம்மில், உங்க சீனியர்கிட்ட பேசியிருக்கேன். முதலில் வேற ஒருத்தர் பேர் சொன்னாங்க.. நான்தான் என் அண்ணனுக்கு உன்னை தெரியும்ன்னு சொல்லி.. நீ வருவியான்னு கேட்டேன்.. சொல்ல போனால்.. வரவேச்சேன், பார்க்கணும் போல இருந்தது.. அதான்.”  என்றாள். 

ஹப்பா.. சத்தமில்லாமல் தூக்கியிருக்கிறாள்.. ஏந்தான் தோன்றியது, பசுபதிக்கு. அவனுக்கு  ஏதும் பேச முடியவில்லை. அப்படியே உணவினை வைத்துவிட்டு எழுந்து.. சற்று தள்ளி நின்றான் வானத்தினை பார்த்துக் கொண்டு.

திவ்யா எதோ உணவுதான் முக்கியம் போல உண்டாள் பொறுமையாக.

பசுபதி சற்று நேரம் சென்று வந்து அமர்ந்தான்..

திவ்யா “அருண்னை, அவர்தான் என் ஹஸ்பன்ட்.. என்னமோ எங்க ரெண்டுபேருக்கும் ஒத்துவரலை.. ம்ஹூம்.. உன்னை என்னால் மறக்க முடியலை போல.. அவரை நான்.. நினைக்கவேயில்ல. உன்போல.. என்னால்.. மாத்திக்க.. ச்சு… தெரியலை” என்றாள்.

பசுபதிக்கு இரண்டு நிமிடம் சென்றுதான் அவள் சொல்லாமல் விட்டதன் வார்த்தைகள் புரிந்தது போல.. ஓய்ந்து போய் சேரில் சாய்ந்து கண்மூடிக் கொண்டான். ‘என்ன சொல்லுகிறாள்.. நான் மாறிவிட்டேன் என்றா’ என எழுந்தது.

பசுபதி அவளையே பார்த்தான்.

திவ்யா “ஹேய் நீ ஒன்னும் நினைக்காத.” என்றவள்.. டேபிள் மேலிருந்த அவனின் விரல்களை பற்றினாள்.

பசுபதி கையை அனிச்சையாய் இழுத்துக் கொண்டான்.

திவ்யா “சாரி பஷூபதி.. என்னால், அவனின் நிழலை கூட தொட முடியலை.. என்னால் முடியலை. எனக்கு இப்பவும் உன்னைத்தான்.. ப்..” என கடைசி வார்த்தையை விழுங்கிக் கொண்டு குரல் உடைந்தாள்.

பசுபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அவனும் உடைந்து போனான்.. உருகி உருகித்தான் காதலித்தான்.. இப்போதும் அவள் வாயிலிருந்து.. உன்னை மறக்க முடியவில்லை என்று கூறுகிறாள்.. ‘ஐயோ, இத்தனைநாள் காத்திருந்தவன்.. இப்போது அவள் வரும் நேரம்.. இப்படி மாறி போனேனே.. யாருக்கும் உண்மையாக இல்லாமல் போனேனே..’ என உடைந்தான். ‘என்னையே நினைத்துக் கொண்டு ஒருத்தி இத்தனை வருடம் இருந்திருக்கிறாள்.. தெரியாமல்.. இன்னொருத்தியை காக்க என போய் நின்றேனே.. நான் துரோகி.. யாருக்கும் உணமையில்லாதவன்..’ என உடைந்து போனான்.

திவ்யா “சாரி பஷூ.. எனக்கு தெரியலை.. உன்னை பற்றி.. என்னை மாதிரியே நீயும் இருப்பேன்னு நினைச்சேன்.. சாரி டா.. நான் உன்கிட்ட இதெல்லாம் சொல்ல கூடாதுதான். ஆனால்..” என இரு கைகளையும் கும்பிட்டபடி வைத்தவள் “என்னால் முடியலை டா.. லவ் யூ டா.. லவ் யூ.. மிஸ் யூ டா.. சாரி டா..” என சொல்லி விசும்பினாள்.

பசுபதி அவளின் கும்பிட்ட கைகளை பற்றி இறக்கினான்.. திவ்யா அவனின் கைகளிலேயே தலை சாய்ந்துக் கொண்டாள்.. “ஏன் டா.. என்னை விட்டு போன.. நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன்.. நமக்கு ஏன் இவ்வளோ பெரிய தண்டனை..” என்றாள் விசும்பளோடு.

பசுபதி அவளின் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தான். திவ்யாவை இயல்பாக தோள் சாய்த்துக் கொண்டான். 

திவ்யா “என்னால் உன்னை போல இருக்க முடியலை டா..” என அவனையே குற்றம் சொல்லி அவனின் குற்றவுணர்வை அதிகமாக்கினாள்.

பசுபதி அவளை சமாதானம் செய்யும் வகையறியாமல்.. தானும் அவளுள் கரைந்து போனான். தோள் சாய்த்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டான்.

சற்று நேரம் சென்று.. உணர்வு வந்தவள் போல.. வெடுக்கென எழுந்தாள் திவ்யா.. “ஹேய்.. போடா.. போடா.. ஏன் டா, வந்த.. நீ சந்தோஷமா இருக்க.. நான் எப்படி ஆகிட்டேன் பாரு” என்றாள்.

பசுபதி “இல்ல டா.. திவி.. அப்படி இல்ல திவி.. நீ சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சேன் திவி.. எனக்கு தெரியாது திவி” என்றான் தானும் எழுந்து நின்று.

திவ்யா “போடா.. நான்தான் லூசு.. உன் வாழ்க்கையையும் கெடுக்கிறேன். என்னால் முடியலையே.. முடியலையே.. எனக்கே என்னை பிடிக்கலையே.. பாரு அடுத்தவன் புருஷனோட.. இப்படி புலம்பிட்டு இருக்கேன்னு.. போடா நீயாவது சந்தோஷமா இரு..” என்றவள்.. கார் சாவியை எடுத்துக் கொண்டு திரும்பினாள்.

பசுபதி அவளின் கைபற்றி நிறுத்தினான் “ஹே.. திவி நில்லு.. இரு.. அமைதியா இரு.. பேசலாம். இரு, நீ இரு திவி..” என்றான், அவள் எங்காவது சென்று ஏதாவது செய்துக் கொள்வாளோ என பயம் பசுபதிக்கு.

திவ்யா அவனின் கையை உதறினாள். நடுநிசி. யாருமில்லை அங்கே.

பசுபதி அவளின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு.. அவளின் தோள் தொட்டு.. சேரில் அமர்த்தினான்.

திவ்யா “சாரி.. பஷூ..” என்றாள்.

பசுபதிக்கு ‘நிகழ்காலம் ஏன் இவ்வளவு நீள்கிறது’ என தோன்றியது இப்போது. ஊசி மேல் நின்றான்.. எந்த மனிதனுக்கும்.. இந்த இக்கட்டு வரகூடாது.. என எண்ணினான். நிதானமாகவே இருந்தான்.

சற்று நேரம் அவளின் கைபிடித்து அமர்ந்திருந்தவன்.. அவளுக்கு பருக தண்ணீர் தந்தான். சற்று நேரம்.. அவளின் தலை கோதினான்.

திவ்யா “பஷூ..” என அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள். அப்பட்டமான ஏக்கம்.. அவளின் பார்வையில். 

திவ்யா இருக்கும் நிலையை உணர்ந்து புன்னகைத்தான்.. சங்கடமாக. கண்ணில் வலி.. காதலியின் ஏக்கமான பார்வையை எந்த ஆண்மகனால் தாங்க முடியும். தாங்கினான் பசுபதி.

திவ்யாவும் முயன்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

பசுபதி “ஒகே வா.. எல்லாம் சரியாகிடும் திவி. சரி செய்துக்கலாம். ம்.. இப்போ எப்படி இருக்க” என்றான், தலைகோதி.

திவ்யா “சாரி.. நிறைய ஸ்ட்ரெஸ்.. யார்கிட்ட ஷேர் பண்றது தெரியலை.. அதான் எமோஷன் ஆகிட்டேன்.. சாரி. “ என்றாள்.

இப்போதுதான் அவளின் தோளிலிருந்து கையை எடுத்தான் பசுபதி.

திவ்யா இப்போது புன்னகைத்தாள். காலையில் பார்த்த அழுத்தமெல்லாம் இல்லை முகத்தில்.. இளக்கம் குடிகொண்டது.. வாஞ்சையாக “மறந்திடு இதை.. எதோ பைத்தியம்.. அப்படின்னு நினைச்சிக்கோ பஷூ..” என்றாள்.

முன்னாள் காதலனின் மனது.. அவளின்  வாஞ்சை.. அவனை வாட்டியது. யாருமில்லாமல் இப்படி நிற்கிறாளே என இப்போதுதான் பாரம் ஏறிக் கொண்டது, அந்த புன்னகையில். அப்படியே இமைக்காமல் பார்த்தான்.

இப்போது ஹோட்டாலினை லாக் செய்ய வேண்டும் என பணியாளர்கள் வந்து நின்றனர்.

இருவரும் விடைபெற்று கிளம்பினர். திவ்யா நிதானத்தோடும்.. பசுபதி பாரத்தோடும்.

பசுபதி, அங்கே தங்கவில்லை.. இரவே சென்னை கிளம்பினான், பாரமேரிய மனதோடு.

“இது என்ன உலகமென்று தெரியவில்லை..

விதிகள் வழிமுறைகள் புரியவில்லை..

இதய தேசத்தில் கலந்து போகையில் 

இன்பம் துன்பம் எதுவுமில்லை..”