“சாப்பாட்டை சொன்னேன். பாத்துட்டே இருந்தா போதுமா? சாப்பிடு” என்றாள் சிரிப்பை அதக்கி. சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு. ஆனாலும் கையில் இருந்ததை வாயில் அடைத்தாள். ஓர விழியால் பரதனை அவள் நோக்க, அவனும் அப்போதும் அவளைத்தான் பார்த்தான். மின்சாரம் தாக்கியதை போல விதிர்த்து சட்டென பார்வையை தழைத்துக்கொண்டாள்.
பரதனுக்கு இது புதிதாய் நன்றாக தோன்றியது. இதுநாள் வரை அவளை ‘மனைவி’ என்று யோசித்தது கூட இல்லை. பிடித்து தான் திருமணம் செய்தான். ஆனால் அந்த ‘திருமணம்’ அவன் மனதில் ஒட்டவில்லை. அண்ணாவின் விலகலில் அவன் திருமணம் கீழே போய்விட்டது. அவள் முகத்தை கூட சரிவர அவன் பார்த்தது இல்லை. ஒருவித பாரத்துடன் தான் உலாத்திக்கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது எல்லாம் சுமூகமாகிப்போக, அவள் பக்கம் பார்வையும் திரும்ப, அவள் பார்க்கும் பார்வை அவனை என்னவோ செய்தது. முதன்முதலாய் ஒரு பெண்ணின் பார்வை தன் மீது படியும் போது வரும் கூச்சம் கலந்த வெட்கம் அவனிடம் பரவியது. மறைத்துக்கொண்டான்.
அவளுக்கோ, அவனை காண காண தெவிட்டவில்லை. அவன் சிரித்து இன்றுதான் பார்க்கிறாள். அவள் பார்த்த பின் இருந்த பரதன் வேறு அல்லவா! அது தான் அவன் இயல்பு போல என்று நினைத்தவளுக்கு, இப்போது கேலி பேசி சிரிக்கும் பரதன் கவிதையாய் தெரிந்தான். ரசித்தாள்!!!
வாசலில் பைக் சத்தம் கேட்டதும், இவர்கள் பேச்சு நின்றது. உண்டு முடித்ததால் எல்லோரும் வெளியே வர, அங்கே வீரப்பன் நின்றிருந்தான். அவனை பார்த்ததுமே ஒரு எரிச்சல் முகத்தில் வர, “எதுக்கு வந்த?” என்றான் நந்தா.
“பேசணும்” வீரப்பன் ஆரம்பிக்கும்போதே, “ஒன்னும் தேவ இல்ல கிளம்பு” என்றான் பரதன்.
“நான் மதி கூட பேச வந்தேன்” அவன் திமிராக சொல்ல, அண்ணாமலை, “அவ கூட நீ எதுக்கு பேசணும்!?” என்றான் இறுக்கமாய்.
“பிஸ்னஸ் பேசுறேன்னு வச்சுக்கோவேன்” வீரப்பன் சற்று திமிராக தான் பேசினான்.
வீரப்பன் நேராக நிம்மதியிடமே, “உன்கிட்ட தனியா பேசணும் மதி, முக்கியமான விஷயம்” என்றான். திரும்பி அண்ணாமலையை பார்த்தாள் நிம்மதி. அவனிடம் முழு மறுப்பு. சற்று தயங்கியவள், “பேசலாம். ஆனா தனியா இல்ல. சொல்றதா இருந்தா இப்படியே சொல்லு” என்றாள்.
அவளை சுற்றிலும் நின்ற ஆட்களை ஒருமுறை பார்த்தான் வீரப்பன். மதியிடம் தனியாக பேசி ஒத்துக்கொள்ள வைப்பதே மலையை பிரட்டும் வேலை தான். இதில் முறைத்துக்கொண்டு நிற்ப்பவர்களை வைத்துக்கொண்டு விஷயத்தை முழுதாய் சொல்லக்கூட முடியாதே!? நிம்மதியை இப்போதெல்லாம் தனியே பிடிக்கவும் முடிவதில்லை என்பதால் தான் இங்கேயே தேடி வந்தான். வேறு வழி இல்லை. முடிந்தவரை முயலுவோம் என்று எண்ணி, “எங்க மேனேஜர் பேசுனாரு என்கிட்ட” என்றான் வீரப்பன்.
“கேஸ் குடுத்துருக்கீங்களாம். பாதிக்கப்பட்டவங்களுக்காக ரொம்ப வருத்தப்பட்டாரு. சின்ன கவனக்குறைவுல தான் இப்படி எக்ஸ்பைரி நாள் நெருங்குன பொருள் வியாபாரம் செய்யப்பட்டுருக்குன்னு சொன்னாரு. இங்க நேர்லயே வந்து பேசுறேன்னு சொன்னாரு, ஆனா நீங்க ரொம்ப கோவமா இருப்பீங்கன்னு தயங்குறாரு” என்றதும், “இப்ப என்ன செய்யணும் அவருக்கு? கேஸ் போட்டதும் பயந்துட்டாரா?” என்றான் பரதன்.
கோவத்தை காட்டாமல், “நம்ம ஊரு ஆசுரமம் ஓட்டு வழி கட்டிடமா இருக்கு, அதை மச்சு கட்டடமா மாத்தி தரேன்னு சொல்லிருக்காரு. கட்டில், மெத்தை, மருத்துவ செலவுக்கு காப்பீடுன்னு நிறைய செஞ்சு தரேன்னு சொல்லிருக்காரு. இன்னும் ஐம்பது பேர் சேர்ந்தா கூட சௌகர்யமா தங்க முடியும் அங்க.
அதுமில்லாம எங்க முதலாளியம்மா நடத்துற ட்ரெஸ்டே ஆசுரம குழந்தைகளுக்கான படிப்பு செலவை பாத்துக்கும்” என்று சொல்ல,
“ஓஹோ… லஞ்சமா?” என்றான் நந்தா வெகு அலட்சியமாய்.
பல்லைக்கடித்த வீரப்பன், “இது லஞ்சம் இல்ல. அவர் பக்கம் நடந்த சின்ன தப்புக்காக மனசு வந்து அவரா செய்றது இது. நீங்க போட்ட கேசுக்கு ஒன்னும் பயப்படல” அவன் சொல்ல, “ஹான், தெரியுது தெரியுது” என்றான் ஐயப்பன் நக்கலாய்.
“நீங்க நம்புன நம்புங்க, இல்லன்னா விடுங்க… இங்க பாரு மதி, உனக்கு புரியுதா? நீங்க போட்ருக்க பெட்டி கேசுக்கு அஞ்சு பைசா கிடைக்காது, தீர்ப்பும் உங்க பக்கம் வரப்போறது இல்ல. இதே நீங்க கேசை வாபஸ் வாங்கிட்டா நான் சொன்னது எல்லாம் கிடைக்கும். இன்னும் என்ன வேணுமோ சொல்லுங்க, பாத்து செஞ்சுக்கலாம்” என்றான் வீரப்பன்.
அண்ணாமலை அத்தனையும் கேட்டுவிட்டும் வாய்திறக்கவில்லை. நிம்மதியிடம் தானே பேச வேண்டும், பேசிக்கொள் என்று நின்றுவிட்டான். உள்ளுக்குள் கோவம் இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
நிம்மதியோ, “நீயே சொல்ற பெட்டி கேசு பைசா பெறாதுன்னு… அதுக்கு எதுக்கு இப்படி லட்ச கணக்குல உங்க மேனேஜர் செலவு செய்யணும், சொல்லு!?” என்றிட, “அதான் சொன்னேனே, பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதலா பண்றாரு” என்று வீரப்பன் சொன்னதும்,
“அதை ரெண்டு வாரம் முன்னவே தானே செஞ்சுருக்கணும்? கேஸ் போட்டு சம்மன் கைக்கு வந்த பிறகு தான் தோணுச்சா என்ன?” என்றாள் நிம்மதி. வீரப்பனும் யோசித்தான்.
அவன் ஒன்றும் கெட்டவன் அல்லவே. அண்ணாமலையை பிடிக்காது, அவனுக்கு எதிராக இருக்க வேண்டும், கூடவே தான் வேலை செய்யும் இடத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு. மேனேஜர் சொன்னதை அப்படியே நம்பி இவர்களிடம் வந்து நின்றான்.
“போ வீரா, போய் உங்க கடைல உண்மையிலேயே என்ன நடக்குதுன்னு கவனி, தப்பு நடக்குதா இல்லையான்னு தெரியும்! ஒருவேளை எல்லாம் சரியா தான் இருக்குன்னா சொல்லு, நாங்க மாறிக்குறோம்” என்று நிம்மதி சொன்னதும், யோசனை தீராமல் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவன் பேசிய விஷயத்தை பற்றிய முனுமுனுப்புகள் அங்கே பலமாய் இருக்க, “சரி நாங்களும் கிளம்புறோம்” என்ற நிம்மதி அண்ணாமலையை பார்த்தாள்.
முறைத்துக்கொண்டே நின்றவன், வண்டியை உயிர்ப்பிக்க, இவள் அமர்ந்ததும் வீடு சென்று சேர்ந்தனர். உள்ளே வந்ததும் வராததுமாக, “இன்னமும் அவன் உன்னை எப்படி பாக்குறான் பாத்தியா?” என்று எரிந்தான் அண்ணாமலை.
“நீ எப்ப என்னை ரூட்டு விட ஆரம்பிச்சியோ, அப்ப ஆரம்பிச்சுது எனக்கும் அவனுக்கும். நீ கிழவியே ஆனாலும் விட மாட்டான் போல, ச்சை” என்றவன், “அவனையே கட்டி தொலைச்சுருக்க வேண்டியது தானே!” என்றான் சலிப்பாக.
“என்ன?” என்றவள் தலையை தூக்கி பார்க்க, “அவனையே….” என்று ஆரம்பித்தவன் அவள் பார்த்த பார்வையில் மேற்கொண்டு பேசாமல் நிறுத்திவிட்டான். அவள் முறைப்பு நீண்டது.
“சரி சரி தூங்கு!” என்றுவிட்டான் சரணாகதியாய்.
***
கோர்ட்டின் வெளியே போட்டிருந்த மரமேசையில் அமர்ந்திருந்த அண்ணாமலையை இழுத்துக்கொண்டிருந்தாள் மதி.
“நான் வரல மதி, எனக்கு இதெல்லாம் புரியாது, பொறுமையும் கிடையாது. எல்லாம் படிச்சவனுங்க! அவனுங்க வாடையே ஆவாது நமக்கு” என்றுவிட்டான் முடிவாக.
ஒன்றுமே சொல்லாமல் நின்றாள் அவள்.
“நீங்க வாங்க மேடம், நேரம் ஆச்சு” என்று வக்கீல் சிவப்ரகாசம் அழைக்க, முறைப்புடனே ஆஸ்ரம நிர்வாகியுடன் உள்ளே சென்றாள். உள்ளே முன்னமே சைலேஷ் இருக்க, இவள் சென்று நின்றாள். அது ஒரு சாதாரண அறை தான். விசாரணை கூண்டு போன்ற அமைப்பெல்லாம் இல்லை. இருவரும் எதிரெதிராய் இருந்தனர். விசாரணை தொடங்கியது.
பெஞ்சில் இருந்த அண்ணாமலை எழுந்து வெளியே சென்றான். நிறைய மரங்கள் இருந்த இடமாய் சென்று உலவினான். நேரம் சென்றுக்கொண்டிருந்தது. என்னவோ இதில் எல்லாம் அவனுக்கு நம்பிக்கை இல்லை. நிம்மதியின் நேர்முறை அணுமுறை பேச்சுக்காக அவள் போக்கிற்கு போய்க்கொண்டிருக்கிறான்.
அரைமணி நேரம் கடந்த நிலையில் அரவம் உணர்ந்து பார்க்க, எல்லோரும் வெளியே வந்தனர். நிம்மதிக்கு எதிரே நின்று ஏதோ காரசாரமாய் பேசிக்கொண்டிருந்தார் சைலேஷ். இவன் வேகமாய் அவர்களை நெருங்குவதற்குள் அவர் அலட்சிய முறைப்புடன் அங்கிருந்து நகர்ந்து தன் காரில் ஏறிவிட, “என்ன ஆச்சு?” என்றான் அவன் தவிப்பாய்.
“மறுநாள் அந்த கறியை சூடு செஞ்சு சாப்பிட்டதுல தான் உடம்பு கெட்டுடுச்சாம். மத்தபடி அவங்க பக்கத்துல எந்த தப்பும் இல்ல, அதுக்கு ரெய்ட் ரிபோர்ட்டே சாட்சின்னு சொல்லிட்டாங்க. கூடவே, சமைச்ச கறியை ஒருநாளுக்கு மேல வச்சு சாப்பிடுறது எல்லாம் தப்புன்னு நமக்கு அட்வைஸ் வேற!” என்றாள் நிம்மதி.
“கடக்குது போ, பாத்துக்கலாம் அவனை” என்ற அண்ணாமலை, “என்ன பேசுனான் உன்கிட்ட?” என்று கேக்க, “அது ஒன்னு…” அவள் ஆரம்பிக்கும்போதே, “மிரட்டுறான் அண்ணா” என்றார் சித்தப்பா.
“எது? மிரட்டுறானா?” அண்ணாமலைக்கு நொடியில் நரம்புகள் சூடானது. அவன் போன திக்கை அத்தனை கோவமாய் வெறித்தான்.
‘இதுக்கு தான் வேண்டாம்ன்னு சொன்னேன்’ அருகே இருந்த சித்தப்பாவிடம் முனகியவள், “யோவ், அவன் ஏதோ பயத்துல பேசுறான், விடு” என்றுவிட்டு அவனை அங்கிருந்து அழைத்து சென்றாள்.
அண்ணாவின் கோவம் எங்கே அடிதடியில் சென்றுவிடுமோ என்ற பயம் தான் அவளுக்கு. வீட்டில் இருந்த நால்வரும் வேறு ‘அவன் மிரட்டினான்’ என்ற வார்த்தைக்கே குதிக்க, அவர்களை அடக்கி வைக்கவே அந்த பொழுதே ஓய்ந்தது நிம்மதிக்கு.
ஆனால், மறுநாள் அவள் நிம்மதி எங்கேயோ போயிருந்தது.
வார கடைசி என்பதால் நேரமே வேலைகளை ஆரம்பித்திருந்தாள் நிம்மதி. கம்பெனி முழுக்க விடுமுறையில் இருக்கும் நண்டு சிண்டுகளுடன் அம்மாக்களும் சேர்ந்து வேலை செய்ய, பிஸ்கட்டின் கமகம மணத்தோடு வேலை சுறுசுறுப்பாய் நடந்துக்கொண்டிருந்தது.
“அக்கா, சீக்கிரம் அடுக்கி முடிங்க க்கா… லோடு அனுப்பனும்” என்ற நிம்மதி, தேன்மொழி நீட்டிய டீயை வாங்கி முதல் மிடறை ஆர்வமாய் பருகினாள்.
அதே நேரம் அங்கே வந்த காவலர் வண்டி அவர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. நிம்மதி வாசலுக்கே வர, வண்டியில் இருந்து இறங்கினர் காவலர்கள், உடன் ஒரு பெண் காவலருடன்.
“நீங்க தான் நிம்மதியா?” பெண் காவலர் கேட்டிட, “ஆமா” என்றாள்.
“குழந்தை தொழிலாளர்கள் வச்சு தொழில் நடத்துற குற்றத்துக்காக உங்களை கைது செய்றோம் ம்மா” என்றவர், அவளை யோசிக்கக்கூட விடாமல், இழுத்துக்கொண்டு வண்டியில் ஏற்றினார்.
கேட்டை விட்டு தாண்டிய வண்டியை தடுக்க முடியாது, “அக்காஆஆ” என அலறிய தேன்மொழி, வெறும் பாதங்கள் வெயிலில் சுட, தலை தெறிக்க ஓடினாள் அண்ணாவை தேடி.