நந்தித்தாவிற்கு, ஒரே அறையில் கணவனோடு இருப்பது ஒருமாதிரி அன்ஈஸி பீலிங்தான். காலை எழுந்ததும் அவனின், புன்னகையில்லா முகத்தினை பார்ப்பது ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது அவளுக்கு. ஆனால், கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இந்த திருமணம் என்னை எந்த வகையிலும் மாற்றவில்லை என நிம்மதிதான் அவளுக்கு.
நந்தித்தாவிற்கு, ஆனந்தன் நினைவுகள் மனதில் இருக்கிறதா.. இல்லையா என அவளே அடிக்கடி இப்போதும் கேட்டுக் கொள்ளுகிறாள்தான். தாத்தாவோடு, பேசும் போது.. எங்கேனும் வெளிநாடு.. வேலை என்னும் பேச்சுகள் எழும்போது.. எப்போதேனும் அமுதா ‘உன் புருஷன் சாப்பிட்டானா. கிளம்பிட்டானா’ என பசுபதி குறித்து பேசும் போதும் கூட.. ஏன் சம்பந்தமேயில்லாமல்.. காதலனாக அவனின் நினைவுகள் வருகிறது அவளுக்கு. ஆனால், அதனை இப்போவெல்லாம் கடக்க.. தன் அத்தையோடு நேரம் செலவிட்டு.. தன் மாமனாரோடு ஷெட்டில் விளையாடி.. இப்படி மறக்க ஒதுக்க கற்றுக் கொண்டாள்.
முன்பே, திருமணம் என நிகழ்வுகள் தொடங்கியதும்.. முழு உண்மை புரிந்தது.. ஆனந்தன் தன்னை முழுதாக ஏமாற்றிவிட்டான் என. அவன் ஊருக்கு வந்தது.. சிறப்பாக தன் திருமணத்தை கொண்டாடுவது என.. எல்லாவற்றையும் கண்ணில் பார்த்துக் கொண்டுதானே அங்கே இருந்தாள், நந்தித்தா. அதனால், ஒரு வைராக்யம் அவனை நினைக்க கூடாது.. அவனை நினைத்து தன் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ள கூடாது என.. முடிவெடுத்துக் கொண்டாள், அப்போதே. வைராக்யத்தில்தான் இந்த வாழ்க்கையை அவள் வாழ்வது. அதில் எழுந்த எதிர்பார்ப்பு.. ஆனந்தனை மறந்து.. கணவனோடு வாழ்ந்திட மாட்டோமா என. இது சரியா தவறா என.. அவளுக்கு யோசனைகள் எல்லாம் இல்லை. திருமணம் ஆவிட்டது. ஆக, கணவனோடு வாழ்வது சரிதான் என முடிவெடுத்துக் கொண்டாள். ஆனாலும், பலநேரம்.. நினைவும் கனவும் அலைகழிக்கதான் செய்கிறது இன்னமும்.
ம்.. நந்தித்தா இயல்பாக தன்னை இங்கே பொருத்திக் கொண்டாள், என்ன.. கணவனோடு மட்டும் பொருந்த முடியவில்லை. காரணம் அவளுக்கு தெரிந்தது.. ‘நான் முன்பு ஆனந்தனை விரும்பியதை நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என அவளுக்கும் அனுமானம் உண்டு. கொஞ்சநாட்கள் தானே ஆகிறது.. எல்லாம் மாறும் என நம்பிக்கை இருக்க.. தன்னை இயல்பாக பொருத்திக் கொண்டாள்.. பெண். நெருக்கடி இல்லாமல் இந்த நாட்களை வாழ அவளுக்கு உதவியாகவும் இருக்கிறது, அவனின் ஒதுக்கம்.
பசுபதிக்கு குழப்பமான நாட்களாக கடந்தது. மனையாளின் இயல்பான முகம்.. எதிலும் தன்னை பொருத்திக் கொள்ளும் பாங்கு.. தான் பார்க்கவில்லை என்றாலும்.. அவள் வேலையை அவள் செய்வது.. காரணமில்லாமல் தன்னிடம் பேசுவதில்லை.. என எல்லாம் அவனுக்கு குழப்பம்தான்.
மேலும், இரவில் சற்று சங்கடப்பட்டான். AC முன்போல வைத்துக் கொண்டு உறங்க முடியவில்லை அவனால், அவளுக்கு AC ஒத்துக் கொள்ளுவதே இல்லை. அதனால் டைம் செட் செய்து வைத்துக் கொண்டான். உறக்கம் கொஞ்சம் அரைகுறையாகத்தான் இருந்தது பசுபதிக்கு. ஒருமாதிரி குழப்பம்.. வருத்தம் என நாட்கள கடந்தது.
அமுதா, அதன்பிறகு மகனையும் மருமகளையும் ஏதும் கேட்க்கவில்லை. இதுவரை இருவருக்கும் நிம்மதி.
நந்தித்தா M.Sc மத்ஸ் முடித்திருந்தாள். திருமணத்திற்கு முன்வரை.. பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கு மத்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள். அதை தவிர, மாலையில் டியூஷன் சென்டரிலும் கிளாஸ் எடுத்தாள். இப்போது வேலை ஏதும் செய்யாமல் ஒருமாதிரிஇருக்க, தானே தன் மாமனாரிடம் வேலைக்கு செல்லவா என கேட்கும் எண்ணத்தில் இருந்தாள். மறுநாளே.. ஊரிலிருந்து மாணவர்கள்.. அழைத்து ஜூம் வகுப்பு எடுத்து தருமாறு கேட்டனர். நந்தித்தா சந்தோஷமாக, மாலையில் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க தொடங்கினாள். வேலை செய்ய செய்ய மனது.. இந்த குழப்பங்களை தள்ளி வைத்தது.
பசுபதி, அன்று மதியமே வீடு வந்துவிட்டான். மாலையில் ஒரு கிளைன்ட் மீட். அதனால் ஒய்வு எடுத்துக் கொண்டு செல்ல வந்திருந்தான். மதியம் இவன் வருவது தெரியாது.. எனவே, மாமியாரும் மருமகளும் உண்டு கொண்டிருந்தனர். பசுபதி உள்ளே வந்தவன் “அம்மா.. எனக்கும் பசிக்குது” என சொல்லி கைகழுவிக் கொண்டு அமர்ந்தான்.. முகத்தில் எப்போதும் இருக்கும் இறுக்கம் குறைந்து.. புன்னகை சூழ்ந்திருந்தது.
நந்தித்தா, எழ முற்பட்டால் கணவனின் வருகை பார்த்து.. பசுபதி “நீ சாப்பிடு..” என்றவன் தானும் ஒரு ப்ளேட் எடுத்து அமர்ந்துக் கொண்டான், இயல்பு போல.
நந்தித்தாவிற்கு, அவனின் புன்னகை முகம்.. ஆச்சர்யத்தினை கொடுத்தது.. அத்தோடு தன்னிடம் இயல்பாக பேசுபவன் போல.. பேசியதும், ஒருமாதிரி இருக்க.. தனக்கு எதிரில் அமர்ந்தவனுக்கு.. மற்றொரு கையால் பரிமாறினாள் மனையாள்.
பசுபதி, அன்னையிடம்.. மாலையில் செல்ல வேண்டிய இடம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்.. பேச்சுகள் தொடர்ந்தது.
பசுபதி உண்டு மேலே சென்றுவிட்டான்.. இன்று ஒய்வு கிடைத்தது அவனுக்கு.. அதை வீணாக்காமல் உறங்க தொடங்கிவிட்டான்.
நந்தித்தா எப்போதும்.. மதியம் உறங்கமாட்டாள். மேலே தனக்கென உள்ள அறையில் சற்று நேரம் டிவி பார்ப்பது.. பாட்டு கேட்பது என இருப்பாள். இன்றும் அப்படியே.
மாலையில் பசுபதி எழுந்து கிளம்பி, கீழே வந்தான்.. வரவேற்பறையில் யாரும் இல்லை. பசுபதிக்கு என்ன குடிப்பதற்கு வேண்டுமென கேட்டு வேலையாட்கள் கொடுத்தனர்.
பசுபதிக்கு, ‘இப்படி என்ன யாருமே இல்லாமல் தன் வீடு இருக்காதே’ என தோன்ற.. “எங்கே எல்லோரும்” என்றான், அவரிடம்.
வேலையாட்களும் “பின்னாடி விளையாடுறாங்க” என்றார் ஒருவர்.
பசுபதி ‘மனதுக்குள் என்ன விளையாடுறாங்களா’ என எண்ணிக் கொண்டு.. எழுந்து அவன் அதிகம் சென்றிராத கார்டன் ஏரியாவிற்கு வந்தான். பசுபதி, இந்த வீட்டில்.. இருப்பதே ஐந்து வருடங்களாகத்தான்.. மற்றபடி படிப்புகள் ட்ரைனிங் என எல்லாம் வெளியூரில்தான் அவனின் நாட்கள். இப்போது அலுவலகம்தான்.. அவன் அதிகம் செலவிடும் நேரம். வீட்டில் இருந்ததே இல்லை எனலாம். இதில் எங்கே, கிட்சேன்.. கார்டன் என அவன் நேரம் செலவிடுவது. அவனின் அன்னைதான் இந்த வீட்டினை முழுதாக பராமரிப்பது.. பார்த்து பார்த்து கார்டன் அமைத்து.. முன்பக்கம் முழுவதும் ஆரஞ்சு வண்ண தேன் பூக்கள் கொண்டு கார் பாதை அமைத்து பராமரிப்பது என எல்லாம் அவர்தான். பிரகதீஷ் இதையெல்லாம் ரசிப்பான்.. அன்னையை நர்சரி கூட்டி போவான்.. தோட்டத்திற்கு வேலைக்கு வரும் ஆட்களோடு சேர்ந்து, தானும் வேலை செய்து கொடுப்பது என எல்லாம் அவன்தான். பசுபதிக்கு இதையெல்லாம் கவனிக்கணும் என கூட தோன்றது.
பின்பக்கம்.. காம்பவுண்ட் ஒட்டி மரங்கள் நிறைந்த இடத்தில், இருபக்கமும்.. நெட் கட்டி.. பேட்மிட்டன் கோர்ட் போல இடத்தை தயார் செய்திருந்தனர். ஒருபக்கம் கெளவ்ரவ்.. அதான் தன் தந்தையும்.. மறுபக்கம் நந்தித்தாவும்.. தன் அன்னையும்.. கையில் பட்மிட்டேன் பேட்டோடு நின்று விளையாடிக் கொண்டிருந்தனர்.
கையில் காபி கப்போடு.. வந்து நின்றான் அங்கே பசுபதி. எதிர் வெய்யில் அவன் மேல்.. விழுந்தது, அவனின் நிறம் அதை உள்வாங்கி தங்கமென அவனை மின்ன வைத்தது இப்போது. கதவில் சாய்ந்துக் கொண்டு.. காபியை பருகிக் கொண்டே மூவரையும் பார்த்திருந்தான். முகத்தில் அலட்சியம்தான் நிறைந்து இருந்தது.
தந்தையை பார்க்க.. உற்சாகமாக இருந்தார்.
தந்தைதான் முதலில்.. அவனை கவனித்தார் போல.. மனையாளிடம் “அது யாரு.. குண்டூ’வா..” என்றார்.
நந்தித்தாவும் அமுதாவும் திரும்பி பார்த்தனர். நந்தித்தா, கணவனை பார்த்து கொஞ்சம் குளிர்ந்துதான் போனாள். பசுபதி படு ஸ்டைலாக நின்றிருந்தான்.. சட்டென பார்வையை கணவனிடமிருந்து திருப்ப முடியவில்லை. அலட்சியபாவத்தோடு.. காஸுவல் உடையில்.. அமர்த்தலான அவனின் தோற்றம், அவளை சற்று ஸ்தம்பிக்கவே செய்தது.
அமுதா கணவனிடம் ‘ஆம்’ என தலையசைத்தவர்.. மகனை நோக்கி “குண்டூ பேட்டா” என்றார் கிண்டல் குரலில்.. “வா விளையாடலாம்” என்றார்.
பின் அவனே “எத்தனை நாள் நான் அவரை ப்ராக்டீஸ் போக சொல்லியிருப்பேன்.. ஜிம் போக சொல்லியிருப்பேன்..” என்றான் குறைபடும் குரலில்.
அமுதா “நீ சொல்லமட்டுமே செய்த டா.. ஆனால், மருமகள் பாரு கூடவே விளையாடுறா..” என்றார் புன்னகையோடு.
பசுபதி முதல்முறை புன்னகையோடு மனையாளை இரண்டு நொடிகள் சுவாரசியமாக இமைக்காமல் பார்த்தான். அதில் அவ்வளவு நளினம்.. கண்டும் காணாத பாவம்.
நந்தித்தாவிற்கு அந்த பார்வையை எதிர்கொள்ள சட்டென ஒரு தடுமாற்றம் இருந்தாலும்.. கணவன் தன்னை காண்பதை உள்ளுக்குள் ரசித்தாள். மாமியாரை.. விட்டு, மாமனாரோடு விளையாட்டை தொடர்ந்தாள்.
பசுபதி காபி குடித்து முடித்ததும்.. அன்னையோடு பேசிக் கொண்டே சற்று நேரம்.. மனையாளும் தந்தையும் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினான்.
இரவில் தாமதமாகத்தான் வந்தான் பசுபதி. ட்ரிங்க்ஸ் செய்திருந்தான் போல.. அவன் உள்ளே வந்து நின்றதும்.. அன்னை “சாப்பிட்டியா பசுபதி” என்றார்.
மகன், தந்தை அங்கே இருப்பதை பார்த்து.. தலையசைத்து மேலே செல்ல எத்தனிக்க.. அதுவரை.. மகனை நிமிர்ந்து பார்க்காமல் உண்டு கொண்டிருந்தவர்.. மகனின் நிலையை உற்று பார்த்து.. “என்ன அமுதா.. பேசாமல் போறான்.. நிக்க சொல்லு அவனை.. என்ன ட்ரிங்க்ஸ் எடுத்திருக்கானா” என எழுந்தார், கோவமாக கேட்டுக் கொண்டே.
பசுபதி அவசர அவசரமாக மேலே சென்றுவிட்டான்.
கெளவ்ரவ்.. மனைவியிடம் “என்ன திரும்பவும்.. அவனுக்கு புத்தி கெட்டு போச்சா.. ஒழுங்கா, இருக்கிற வாழ்க்கையை வாழ சொல்லு. இதென்ன திரும்பவும் ட்ரிங்க்ஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டான்.. ஒழுங்கா வேலையை பார்க்கிறானா இல்லையா.. வேணுக்கு பேசு.. எப்படி இருக்கான் என்னான்னு கேளு.. அந்த பொண்ணு என்ன நினைக்கும். அறிவில்லை இவனுக்கு” என அவர்கள் தாய் மொழியில் திட்டி தீர்த்தார்.
அமுதா “இல்லங்க.. இன்னிக்கு அவன் எதோ கிளைன்ட் மீட்டிங் அப்படின்னு எதோ சொன்னான், அதனால் ஏதாவது ட்ரிங்க்ஸ் எடுத்திருப்பான். நீங்க இதையெல்லாம் யோசிக்காதீங்க. அவன் சரியாதான் இருக்கான்.” என சமாதானம் செய்தார்.
கெளவ்ரவிற்கு மகனை நினைத்து கவலையானது. எதோ உண்டு கிளம்பிவிட்டார்.
பசுபதி, கிளைன்ட் மீட்டிங் என்றது.. முழு பொய். நண்பர்களோடு ஒரு பார்ட்டி. அதாவது பேட்ச்சிலர் பார்ட்டி. கண்டிப்பாக வீட்டில் சொல்லிவிட்டு செல்ல முடியாது. அன்னையும் தந்தையும் விடமாட்டார்கள். அதனால், எதோ சொல்லி கிளம்பினான்.
நந்தித்தா உண்டு முடித்து மேலே வந்துவிட்டாள் முன்பே. பசுபதி வந்தது அவளுக்கு தெரியவில்லை.. பால்கனியில் நின்று தன் அன்னையோடு போன் பேசிக் கொண்டிருந்தாள். கணவன் வந்ததை கவனிக்கவில்லை.
போன் பேசி முடித்து.. உறங்குவதற்கு என.. தங்களின் அறைக்கு வந்தாள். அறையின் கதவினை திறந்ததும்.. அல்கஹால் ஸ்மெல்தான் அவளை வரவேற்றது.
அத்தோடு, எப்போதும் நேர்த்தியாக இருக்கும் கணவனின் தோற்றம்.. இப்போது.. நிலைகுலைந்து இருந்ததைதான் பார்த்தாள். ஒழுங்கில்லாமல் படுத்திருந்தான்.. கலைந்த சிகை.. மாலையில் காஸுவல் உடையில் கிளம்பி ஸ்டைலாக நின்றவன்.. இப்போது கசங்கி.. பட்டென கழன்று.. குறிப்பாக சுயநினைவில்லாமல் இருக்கிறேன் எனும் விதமாக மெத்தையில் கோணல்மாணலாக கிடந்தான்.
நந்தித்தா, நேர்த்தியான கண்ணியமான கணவனை மட்டுமே இதுநாள்வரை பார்த்திருந்தவளுக்கு.. இந்த ஒழுங்கற்றவனை பார்க்க ஏனோ சட்டென கண்ணில் நீர். இந்த பெரியவர்கள் சொல்லுவது போல கண்ணிறைந்த கணவன் எனத்தான்.. தன் சொந்தங்கள் எல்லாம் சொல்லி சென்றது. திருமணத்திற்கு, வந்த சொந்தங்கள் எல்லோரும்.. தனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையா எனத்தான் வாய்பிளந்தனர். அதனாலோ என்னமோ பெண்ணவளுக்கு கணவனின் கண்ணியமும் நேர்த்தியும் கொஞ்சம் பிடிக்கும். இல்லை நிறையவே பிடிக்கும். இப்போது இந்த ஷணம்.. பெரிய நெருடல்.. அவள் மனதில்.
கதவை சட்டென சற்றிவிட்டாள்.. முதலில். பின்தான் அவர் யாரோ அல்ல.. என ஒரு எண்ணம்.
கதவினை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள்.. அவனை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. கொஞ்சம் நிதானித்து.. கணவனின் அருகில் வந்து.. பார்த்தாள். அவனின் கோணல்மாணல் உறக்கத்தை நேர் செய்ய எண்ணி.. கணவனின் தோளின் இருபுறமும் பற்றி.. அவன் எப்போதும் உறங்கும் பக்கமாக நகர்த்தினாள். இல்லை, நகர்த்த முயற்ச்சித்தாள். ஆனால், ஒரு இஞ்சு நகரத்த முடியவில்லை. நந்தித்தாவிற்கு புரிந்தது.. அப்படி எல்லாம் ஈசியாக அவனை புரட்டி அந்தபக்கம் போட்டிட முடியாது என உணர்ந்தவள்.. மெல்ல “பதி.. பதிதேவ்.. பதி” என அவனின் தோள் தொட்டு உலுக்கினாள்.
பசுபதிக்கு, அவள் தன்னை நகர்த்தியதே தெரியவில்லை. அப்புறம் எப்படி அழைத்தது தெரியும். அதிலும்.. இப்படி தட்டி கொடுப்பது போல.. தன்னை உலுக்குவதா தெரிந்து விட போகிறது. எனவே, அவனுக்கு விழிப்பு வரவில்லை. எதோ தாலாட்டும் உணர்வு அவனுக்கு.
அஹ.. பசுபதியின் பெரியம்மா.. அவரின் கணவரை இப்படிதான் அழைத்துக் கொண்டிருந்தார். அது அவளுக்கு அப்போதே பிடித்திருந்தது.. மனதின் ஓரத்தில்.. சின்ன ஆசையும் இருந்தது.. கணவனை அப்படி அழைக்க வேண்டுமென. அது இப்போது வெளிப்பட்டுவிட்டது, மீண்டும் அழைத்தாள் பெண்.
நந்தித்தா, கணவன் எழும் வழியில்லை என உணர்ந்ததும்.. மீண்டும் அவனின் தோள்களை பிடித்து நகர்த்தினாள்.
இந்தமுறை பசுபதி அரைகுறையாக விழித்தான். இமைக்க முடியாத விழிகள்.. நெற்றி சுருக்கி.. வராத நினைவுகளோடு ஒரு பார்வை.. நந்தித்தாவிற்கு வருத்தமாக இருந்தது அவனின் பார்வை.
பசுபதிக்கோ, கண்ணெதிரே.. ஒரு பெண்ணின் முகம்.. அதுமட்டும்தான் அவனுக்கு தெரிகிறது.. “ஹேய்.. எங்க.. எங்க திவி” என முனகியவன் “அவ வரமாட்டா” என எல்லாம் தெரிந்தவன் போல பதிலையும் சொல்லிக் கொண்டே.. திரும்பி படுத்தான். நந்தித்தாவின் முகம் அதிர்ந்தது ஒரு பெண்ணின் பெயர் கேட்டதும்.
பசுபதி திரும்பியதில்.. பெண்ணவளின் மேல் உராய.. நந்தித்தா வெடுக்கென நிமிர்ந்துக் கொண்டாள்.. அவனின் உளறலிலும்.. தன்னை உரசியதிலும்.
பசுபதி, எதையும் உணராமல் திரும்பி படுத்துக் கொண்டு விட்ட உறக்கத்தை தொடர்ந்தான்.
நந்தித்தாவின் முகம் இறுகியது. குழப்பமும் பயமும் அவளை சூழ்ந்துக் கொண்டது. கணவன் சற்று தள்ளி படுத்ததில்.. அவளுக்கான இடம் இருக்க.. உறங்க முற்பட்டாள் பெண்.
விடியலில்தான் உறக்கம் அவளை சூழ்ந்தது.
மறுநாள், எப்போதையும் விட நேரமாக எழுந்துக் கொண்டான் பசுபதி. தன்னிலையை குனிந்து பார்த்தான்.. பார்ட்டிக்கு அணிந்துக் கொண்டு சென்றிருந்த அதே உடை.. வாட்ச் கூட கழற்றி வைக்கவில்லை.. தன்னையே நொந்துக் கொண்டு எழுந்தான். நேற்று நடந்தவைகளை யோசித்தான்.. காரில் தன்னை நண்பர்கள் ட்ரோப் செய்தது.. மேலேறி வந்தது வரை நினைவு இருக்கிறது. ஆக, அப்படியே தூங்கிட்டேன்.. என எண்ணிக் கொண்டு டவலோடு பாத்ரூம் சென்றான்.
நீண்ட நேரம் சென்றுதான் வெளியே வந்தான்.
தெளிவான நிலையில் காபி எடுத்து குடித்தான்.. பேப்பர் கொண்டு வர சொல்லி படித்தான்.
இப்போதுதான் நந்தித்தா எழுந்து வந்தாள். ஹாலில் அவன் அமர்ந்திருப்பது பார்த்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
பசுபதி ஏதும் கண்டுக்கொள்ளவில்லை.
நந்தித்தா.. ரெப்ரேஷ்ஷாகி வந்தாள். தனக்கான காபியை எடுத்துக் கொண்டாள். இன்று படிப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பசுபதி எழுந்துக் கொள்ளவில்லை. அப்படியே அமர்ந்திருந்தான்.
நந்தித்தா காபி கப்போடு அங்கேயே அமர்ந்துக் கொண்டாள். நேற்று நடந்தது எல்லாம் அவள் மனதில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது.. கேட்கனும் கண்டிப்பா கேட்கனும் என தோன்ற.. “என்னங்க.. க்கும் பசுபதி சர்..” என்றாள்.
பசுபதி லேசாக பேப்பரினை மடக்கிக் கொண்டு ‘என்ன’ என பார்த்தான்.
நந்தித்தா “எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க எப்போதும்.. இப்படி முறைச்சிட்டேதான் இருப்பீங்களா” என்றாள்.
பசுபதி எரிச்சலாக “என்ன வேண்டும் உனக்கு” என்றான்.
நந்தித்தா “நேற்று.. அதைவிடுங்க, நீங்க என்னை ஒதுக்குறீங்களா.. இல்லை, என்கிட்டேயிருந்து ஒதுங்கி போறீங்களா? புரியலை.” என்றாள்.
பசுபதி “ரெண்டும்தான்..” என்றவன் மீண்டும் பேப்பரில் கவனமானான்.
நந்தித்தாவிற்கு, இரவின் குழப்பம் இப்போது இல்லை.. ‘ம்.. இதுவும் நம்ம கேஸ்.. லவ் ப்பெலியர்’ என தெளிவாக தெரிந்தது. வருத்திமில்லை.. சந்தோஷம்தான் அவளின் மனதில். எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டாள் காபியோடும் புன்னகையோடும். என்ன முயன்றும் அந்த உதடுகள் வளைவதை நிறுத்த முடியவில்லை அவளால். ‘அவனின் புலம்பல் எனக்கு சந்தோஷமா’ என தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்தான். ஆனால், அதற்கும் பதில் புன்னகையாகதான் இருந்தது.