தலைகீழ் நேசம்!

6

நாட்கள் வேகமாக கடந்தது. 

அன்று வரவேற்பில் எதோ காரணங்களை வைத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும் நடந்தது.. அவ்வளவுதான். அதன்பிறகு, இருவருக்கும் நேரம் இல்லை.. பார்த்துக் கொள்ள.. பேசிக் கொள்ள.. சேர்ந்து தங்களின் கனவுகளை காண என எதற்கும் நேரமில்லை. அவர்கள் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

நந்தித்தாவிற்கு, முதல் வாரம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.. கணவன் என்பவன் என்னை காண்பது கூட இல்லை என்று.. அவனுக்கு தன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என புரிந்துக் கொண்டாள். முன்பே தெரிந்ததுதான், ஆனால், இந்த மஞ்சள் கயிறு இருவருக்குள்ளும் மாயம் செய்யும் என நம்பினாள். இல்லை, அவருக்கு கட்டாயம்.. தனக்கும் கட்டாய கல்யாணம் என்றாலும்.. என்னோடு வாழ முயற்சிப்பான் என நம்பினாள். ஆனால், இப்படி முற்றிலும் தன்னை ஒதுக்குவான் என எதிர்பார்க்கவில்லை அவள்.

காலை காபி அவர்களின் இருப்பிடத்திற்கே வந்தது. எழுந்ததும் காபிக்கு என நேரமாக வந்து அவன் முன் அமருவாள்.. நந்தித்தா. பசுபதி எழுந்து சென்றுவிடுவான், அவளை பாராமல். முதல் இரண்டு நாட்கள்.. பொறுத்து பார்த்தவள் மூன்றாம் நாள்.. எப்படி அவனிடம் பேசுவது என.. தனக்குள் எண்ணிக் கொண்டே தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் பெண்.

ஆனால் இன்று பசுபதியை அங்கே காணோம்.. பால்கனிக்கு சென்று பார்த்தாள் அங்கேயும் இல்லை. அவன் அறையில் இருப்பதற்காக அறிகுறிகள் தெரிந்தது.

நந்தித்தாவிற்கு புரிகிறது.. அவனுக்கு தன்னை பார்க்க விருப்பமில்லை என. ஆனாலும் வருத்தம் அவளுள். மெதுவாக அந்த ஆரிப்போன காபியை குடித்துவிட்டு.. குளித்து கீழே வந்தாள். 

இப்போது, கீழே வந்தாள். தன் அத்தை பூஜை அறையில் இருப்பதை பார்த்தாள்.

நந்தித்தா “குட்மோர்னிங் அத்தை” என்றாள் புன்னகையோடு.

அமுதாவும் “குட் மோர்னிங் டா.. போ.. ஏதாவது குடி..” என்றார்.

நந்தித்தா அதன்படியே சோபாவில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்தாள். அவளின் மாமனார் வந்தார்.. நந்தித்தா ‘காலை வாழ்த்து சொல்லி.. என்ன குடிக்கிறீங்க மாமா’ என கேட்டு.. அவருக்கு தேவையானதை கொடுத்து.. என சின்ன சின்ன வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

பிரகதீஷ் வந்தான்.. காலை உணவு அவனுக்கு பரிமாறினாள். பிரகதீஷ் என்ன படிக்கிறான்.. எந்த கல்லூரி என கேட்டுக் கொண்டிருக்க.. அவன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் பசுபதி கீழே வந்தான். சந்தனநிறம்.. திடமான இருகிய உடல்மொழி..  கணக்கு பார்ப்பவனுக்கு கேசம் இருக்காது என்பர்.. இவனுக்கோ.. அடர் சிகை, அதை போலீஸ் கட் போல பக்கவாட்டில் எல்லாம் ஒட்டவெட்டி இருப்பான் எப்போதும், அவனின் திடகாத்ரமான உடல்மொழிக்கு.. இந்த கட் எடுப்பாக இருக்கும்.. மாரியாதையை கொடுக்கும்படி. கழுத்தில் ஒரு சின்ன ருத்ராட்சத்துடன் கூடிய தங்க செயின்..  வலது கையில் கருப்பு கயிறு.. விரலில் அன்று நந்தித்தா போட்ட மோதிரம். அலுவலகம் செல்ல பாந்தமாக போர்மல் உடையில் இறங்கி வந்தான். 

நந்தித்தா, அசைவுகள் தெரிய.. மாடி படி பார்க்க.. கணவனின் தரிசனம்.. பார்க்க கூடாது என நினைத்தாலும்.. கணவன் என்பதாலோ என்னமோ ஒருநொடி அவன்மேல் பார்வை நிலைத்துவிட்டது பெண்ணுக்கு.

பசுபதி அமர்ந்தான்.. மனையாள்தான் பரிமாறினாள். இருவருக்கும் தனிமை கொடுக்க என யாரும் அங்கே வரவில்லை. அவர்கள் என்னமோ தனித்தனியேதான் இருந்தனர், அது பெற்றோருக்கு தெரியவில்லை. நந்தித்தாவிற்கு.. ஒரு குறுகுறுப்பு.. ஏன் என்னை நிமிர்ந்தே பார்க்க மாட்டேங்கிறான்.. காலையிலும் காபிக்கு என வந்துவிட்டு அப்படியே போய்ட்டான்.. என எண்ணிக் கொண்டே.. பொறுமையாக பரிமாறினாள்.

பசுபதி போன் பேசிக் கொண்டே உண்டுக் கொண்டிருந்தான்.. மனையாளும் பேசி முடித்திடுவான்.. என்னை பார்ப்பான் என நின்றுக் கொண்டிருந்தாள்.. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.. பொறுத்து பொறுத்து பார்த்தவள்.. அவன் வேண்டாம் என கை நீட்டியும் கவனியாதவள் போல.. வேண்டுமென்றே.. சாம்பாரை அவன் விரல்களில் படுவது போல.. உற்றிவிட்டாள். 

அனிச்சையாய் நிமிர்ந்து மனையாளை பார்த்தான் பசுபதி.. கண்களை சுருக்கிக் கொண்டு.. நின்றாள். பசுபதி முறைப்பது போல பார்க்கவும்  ‘சாரி’ என்றாள் சின்ன குரலில்.

பசுபதி தன் பார்வையை விளக்கிக் கொண்டான். ஆனால், போன் பேசுவதை நிறுத்தவில்லை.

நந்தித்தா, அமைதியாக நின்றுக் கொண்டாள். தவறு செய்ததாக அவனின் பார்வை சொன்னது. அதை தள்ளி வைக்க முடியவில்லை.. விளையாட்டாகத்தான் செய்தேன்.. ஆனால், முறைக்கிறான் என.. மனது சோர்ந்து போனது பெண்ணவளுக்கு.

பசுபதி உண்டுவிட்டு கிளம்பிவிட்டான். அவளிடம் சொல்லிக் கொள்ளகூட இல்லை. கிளம்பிவிட்டான். 

பின் மாமனார் மாமியாரோடு உண்டாள்.. நந்தித்தா. அதன்பின் வேலையில்லை.. மேலே சென்றிடுவாள் நந்தித்தா. பனிரெண்டு மணிக்கு வருவாள். 

மாமியார்.. பசுபதிக்கு, மதிய உணவினை பேக் செய்துக் கொண்டிருப்பார். தானும் உதவுவாள்.. பின் இருவரும் சேர்ந்து எதோ பேசிக் கொண்டிருப்பார். கெளவ்ரவ் மதிய உணவு உண்ண வீட்டிற்கு வருவார். மூவரும் சேர்ந்து உண்பர்.  மீண்டும் மேலே சென்றிடுவாள் நந்தித்தா. பின் மாலை டீ டைம். 

அடுத்து இரவு.. ஆண்கள் எல்லோரும் எட்டு மணிக்கு முன் வீடு வந்திடுவார்.. இரவு உணவினை எல்லோரும் சேர்ந்துதான் உண்பர். அப்போதுதான் வீடு கொஞ்சம் கலகலப்பாக இருக்கும். அதில் பலசமயம் பசுபதி கலந்துக் கொள்ளமாட்டான். பெரிதாக பசுபதி குடும்பத்தாரோடு பேசி பார்க்கவில்லை இந்த நாட்களில் நந்தித்தா. தம்பியும் தந்தையும் அவனிடம் பேசுவதே குறைவு. அன்னை மட்டுமே ஏதாவது பேசுவார். மகனும் பதில் சொல்லுவான் அவ்வளவுதான். நந்தித்தாவிற்கு தோன்றிது.. ‘ஒ அதிகம் பேச மாட்டான் போல’ என எண்ணிக் கொண்டாள். அத்தோடு, காலையோடு, அவனிடம் நானாக பேச முயற்ச்சிக்கலாம் என்றெண்ணியதும்.. அவளின் நினைவிலிருந்து காணாமல் போனது. அவனின் அந்த புறக்கணிப்பை புரிந்துக் கொண்டாள் பெண். இருவருக்கும் இப்படிதான் நாட்கள் கடந்தது. எந்த பேச்சு வார்த்தைகளும் பார்வை பரிமாற்றங்களும் இல்லை. கடமையோ கட்டளையோ.. என இருவருக்கும் நாட்கள் நகர்ந்தது.

நாட்கள் கடந்தது. 

ஒருநாள் மாலையில், அமுதா தன் மருமகளிடம் “நந்திம்மா.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்” என ஆரம்பித்தார், திடமான குரலில் ஆரம்பித்தார்.

நந்தித்தா “என்ன அத்தை” என்றாள் இயல்பான குரலில்.

அமுதா “என் மகன் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறான்” என்றார், குரல் மாறாமல்..

நந்தித்தாவிற்கு, படபடப்பானது.. இப்படி நேரடி கேள்வியை எதிர்பார்க்கவில்லை அவள்.. தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அமுதா “இதை.. நான் கேட்க்க கூடாது.. தலையிட கூடாதுதான். ஆனால், நீங்க முன்போல தனிநபர்கள் இல்லை.. குடும்பம்.. இது புரியும். நான் கவனித்த வரை.. நீங்க இன்னும் வாழ்க்கையை தொடங்கலை. ம்..” என கேட்டு நிறுத்தினார்.

நந்தித்தா இன்னமும் அவரை பார்க்கவில்லை.

அமுதா தன்மையான குரலில் “யார் சொல்லியும் எதுவும் மாறிடாது. புரியுது. ஆனால்.. நான் அவன்கிட்டவும் பேசுகிறேன். பேசி பழகுங்கள்.. எங்காவது வெளியே போயிட்டு வாங்க.. நீங்களே உங்களை சரி செய்துக்கோங்க.” என்றார்.

நந்தித்தாவின் மனது சத்தமில்லாமல் ஆனந்தனை நினைத்துக் கொண்டது இப்போது. இதுநாள்வரை, ஆனந்தன் எண்ணம் வரவில்லை அவளுக்கு. கணவன் என்பவன் அவனின் உரிமையை கோரவில்லை. இவளும் அருகில் சென்று நிற்கவில்லை.. இப்போது தன் அத்தை சொல்லுவதை கேட்டதும்.. மனது கணவனை நினைக்கவில்லை. ஆனந்தனைதான் நினைத்தது. 

நந்தித்தாவிற்கு, தன் மேல்தான் கோவம் வந்தது ‘அவன் உன்னை எண்ணாமல் சென்றவன்.. அசிங்கமா இல்லை.. அவனை இன்னமும் நினைக்க உனக்கு’ என தன்மீதே கோவம் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அமுதா “நந்திம்மா” என்றார் அவளின் தலையசைப்பை எதிபார்த்து.

நந்தித்தா, நிமிர்ந்து அத்தையை பார்த்தாள்.. கண் கலங்க..

அமுதா “என்ன டா..” என்றார்.

நந்தித்தா “நான் என்ன செய்யணும் அத்த..” என்றாள் குழந்தையென. யாருக்கும் பதில் தெரியவில்லையே. ஏன் அமுதாவிற்கும் பதில் தெரியவில்லை. காலம் கடமையை செய்யும் என அமைதியாக இருப்பதா.. இல்லை, நாமே இவர்களிடம் பேசி.. புரியவைப்பதா என மருமகளின் பார்வையிலும்.. பேச்சிலும் தடுமாறினார்.

நந்தித்தா எழுந்து மேலே சென்றுவிட்டாள்.

அமுதாவிற்கும், கெளவ்ரவிற்கும்.. மகன் மருமகள் பற்றி சந்தேகம் இருந்தது.. இன்று, வேலைக்கு என மேலே சென்ற.. வீட்டின் மூத்த வேலைக்கார அம்மாதான் அமுதாவிடம் சொல்லியிருந்தார்.. இருவரும் வேறு அறையில்தான் இருக்கிறார்கள் என. அதனை கொண்டு.. இந்த பேச்சுகள்.

அமுதா அத்தோடு விடவில்லை இதை. இரவு, காத்திருந்து மகன் வந்ததும்.. மருமகளை அழைத்து  உணவு பரிமாற செய்தவர்.. இருவருக்கும் பொதுவாக “நீங்க ரெண்டுபேரும் இன்னமும் சின்ன பிள்ளைகள் இல்லை. கல்யாணம் ஆகிடுச்சி. நாலுபேர் கேள்வி கேட்பது போல வைத்துக் கொள்ள கூடாது. இரண்டு பேரும் ஒரே ரூமில் இருங்க.. இதுபோல இனி என்னை ஏதும் பேச வைக்க கூடாது.. நந்திம்மா.. நீ அவன் ரூமில்தான் இருக்கணும். கொஞ்சம் பொறுப்பை உணர்ந்து நடந்துக்கோங்க.. சொல்லிட்டேன். டேய்” என மகனை அழைத்தவர்.. “இனி, நைட் எவ்வளவு நேரமானாலும் வீட்டில் வந்துதான் சாப்பிடனும். மதியம் வர பாரு.. நான் வேணு அண்ணாகிட்ட பேசுறேன்..” என்றார், சற்று மிரட்டலாகவே இருந்தது இந்த குரல்.