நேச சிறகுகள் 7

“கெட்டி மேளம்! கெட்டி மேளம்…!” என ஐயர் மந்திரத்தை உரக்க சொன்னார். மேள தாளங்கள் முழங்க, முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க, உற்றமும் சுற்றமும் மலர் தூவி வாழ்த்த, புது மஞ்சள் தாலியை மூன்று முடிச்சோடு பவானி கழுத்தில் சேர்பித்து தன் சரி பாதியாக ஏற்று கொண்டான் வம்சி.
இருவருக்குமே அந்த நிமிடம் மேஜிக்களாக இருந்தது.

பவானி முகம் கொள்ளா புன்னகையோடு இருக்க, வம்சிக்கும் அது தொற்றி கொண்டது. “வெல்… ஹாப்பி மேரீட் லைப் மிஸஸ் வம்சி!” என மெதுவாய் அவள் காதில் கிசுகிசுத்தவன் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட, அவன் முகமும் அகத்தில் இருப்பதை காட்டும் கண்ணாடியாய் பளிச்சென்று இருந்தது.

Advertisements

“மிஸஸ் வம்சி நான்!” என பவானி ஒருமுறை தனக்குள் சொல்லி பார்க்க அப்படியே எழுந்து நின்று கத்த வேண்டும் போல் இருந்தது. எல்லாருக்கும் கிடைத்து விடுமா, இது போன்ற அதிசயங்கள்…

மனதில் கொண்டவனே மணாளனாக கிடைத்து விட்டான். இதுக்கு மேல் வாழ்வில் என்ன இன்பம் இருந்து விட போகிறது என இன்ப சிகரத்தில் இருந்தாள் பவானி. நடப்பதை எல்லாம் மூன்றாம் மனுசியாக நின்று காயத்ரி வேடிக்கை பார்த்தாலும், தங்கை முகத்தில் இருந்த பூரிப்பு அவளை என்னவோ செய்தது.

அவளுக்கும் ஜாம் ஜாமென்று தான் திருமணம் செய்து வைத்தார்கள். ஆனாலும் அதில் என்னவோ குறையாக இருந்தது போல் பீல் ஆக, வீம்பாக நினைத்தாள். “ஆரம்பத்துல எல்லாம் நல்லா தான் இருக்கும். பின்ன வாழ்க்கை என்னன்னு புரியிறப்போ என் பேச்சை கேட்டு இருக்கலாம்ன்னு தோணும்!” காயத்ரி வன்மத்தோடு இருந்தால், ராகவன் யாருடனும் முகம் கொடுக்காமல் அடுத்தவர் வீட்டு விஷேசம் போல் அன்று காலையில் தான் வருகை புரிந்தான்.

அவனுக்கும் உள்ளே கடுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை. “வேலை இருந்துச்சு… தப்பா நினைச்சுக்காதீங்க!” என பேருக்கு காரணம் சொன்னான். ஆனால் காயத்ரியிடம் தனியாக,

“நான் போகலைன்னா நல்லா இருக்காது! அது இதுன்னு என்னை டார்ச்சல் பண்ணி ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துட்ட… அது போய் தொலையுது. ஆனா இன்னிக்கு என் கூட இப்படியே கிளம்புற. உன் தங்கச்சிய புகுந்த வீடு அனுப்பிட்டு வரேன். அது இதுன்னு காரணம் சொன்ன.. இப்படியே இங்க இருந்துக்கோ. டிவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறேன்!” என மிரட்டலாக சொல்ல, காயத்ரி அசரவில்லை.

“கொடுங்களேன். வாங்கிட்டு நிம்மதியாவாது இருக்கேன். உங்கள கட்டி என்னத்த அனுபவிச்சேன்…?” என்று குதர்க்கமாக சொல்ல, ராகவன் முறைத்தான்.

“முறைச்சீங்கன்னா எதுவும் இல்லைன்னு ஆகிடுமா… ஏதோ உங்கள ஒன்னும் இல்லாம கட்டிக்கிட்டு வந்தவ மாதிரியே ட்ரீட் பண்ணிட்டு இருப்பீங்க… கொஞ்சம் அங்க பாருங்க. என் தங்கச்சி வீட்டுகாரர் எல்லாம் ஒருகுண்டு மணி தங்கம் கூட வேணாம்ன்னு சொல்லிட்டாராம்…!” என்று குத்தி காட்ட ராகவன் கடுப்பாய் சொன்னான்.

“ஒன்னும் இல்லாதவனுக்கு எதுக்குடி அள்ளி கொடுத்து பொண்ணையும் கொடுக்கணும்? அவன் என்ன என்னை மாதிரி லட்ச லட்சமாவா சம்பாதிக்கிறான்? கவர்மென்ட் எம்ப்ளாயி தான! அதுலயும் உங்கப்பா இந்த விஷயத்துல ரொம்ப தெளிவு தான். உனக்கு பண்ணதுல பாதி கூட உன் தங்கச்சிக்கு பண்ணாம, தள்ளி விட்டா போதும்ன்னு காய் நகர்த்திட்டாறு!” என்று நக்கலாக சொல்ல, காயத்ரியும் விடவில்லை.

“அவங்க வேணாம்ன்னு சொல்லியும் எங்கப்பா சும்மா அனுப்பல… அது தான் எங்க அப்பா கேரக்டர். சும்மா அவர கொறை சொல்லிட்டு இருக்காதீங்க!”

பவானி தங்கள் விருப்பதை மீறி வேறு ஒருவனை கை பிடித்த ஆத்திரத்தில் இவர்கள் இருவரும் காரணமின்றி அடித்து கொண்டு இருந்தார்கள். இருவரில் ஒருவராவது அது அவளுடைய வாழ்க்கை என்று யோசித்திருந்தாலும் மனவுளைச்சல் மிஞ்சி இருக்கும்.

இங்கு இப்படி என்றால் இன்னொரு பக்கம் ரஞ்சிதத்தின் நாத்தனார் விஷாலி அவள் காதை கடித்தாள். “பொண்ணு நிறைய படிச்சிருக்கு… சிவப்பா அழகாவும்  இருக்கே… எப்படி இந்த இடத்த முடிச்சீங்க அண்ணி…?”

விஷாலி இப்படி சொன்னதும் ரஞ்சிதத்திற்கு மிதப்பானது. “என் தம்பிய யாருக்காவது பிடிக்காம போகுமா? கவர்மென்ட் வேலை, அவனும் வாட்ட சாட்டமா உறுத்தா இருக்கானே.  அதான் எங்க பவானிக்கு ரொம்ப பிடிச்சு போச்சு!” அவள் பில்டப்பாக சொன்னதை கேட்டு விஷாலி மனதில் கறுவினாள்.

விஷாலி  பாஸ்கரனின் ஒன்று விட்ட தங்கை. அவளுடைய சொந்தத்தில் தான் முதலில் வம்சிக்கு பெண் பார்த்தார்கள். ஆனால், “மாப்பிள்ளைக்கு வசதி வாய்ப்பு ரொம்ப கம்மி… உத்தியோகத்த மட்டும் வச்சிகிட்டு என்ன பண்ண முடியும்? அப்பனும் குடிகாரன். அம்மாவும் வேலைக்கு போகல…. அந்த வம்சியும் கூட சரியான முசுடு…!” என இல்லாத பொல்லாததை சொல்லி கை கூடி வந்த வரனை கெடுத்து விட்டு விட்டாள் விஷாலி. எல்லாம் ரஞ்சிதத்தின் மீது இருந்த வன்மம்.

இப்பொழுது தன் சதி திட்டங்கள் வீணாக போய் நல்ல குடும்பத்தில் பெண் கிடைத்ததும் பொறாமையாக பார்த்து கொண்டிருந்தாள்.

குறை சொல்லும்படியாக பவானியிடம் எதுவுமே இருக்கவில்லை. எதை சொல்லுவது என யோசித்தவள், “ஆனா கொஞ்சம் ஒல்லியா இருந்திருக்கலாம்… இன்னும் அழகா இருந்திப்பா!” என்று சொல்ல, ரஞ்சித்திற்கும் அந்த எண்ணம் இருந்தது.

“ஆமா… நானும் நினைச்சேன்!” என்றவள் வெளிப்படையாக ஒப்பு கொள்ள, விஷாலிக்கு ஊசியாய் குத்த ஒரு விஷயம் கிடைத்து விட்டது.

“கல்யாணத்துக்கு பின்ன இன்னும் வெயிட் போடும் அண்ணி… பார்த்துக்க சொல்லுங்க. இப்போ எல்லாம் உங்கள மாதிரி ஒல்லியா இருக்க ஆளுங்களுக்கே குழந்தை வரம் கிடைக்க மாட்டிங்குது. இப்படி இருந்தா என்னன்னு சொல்றது?” என்றவள் ரஞ்சிதம் முகம் மாறுவதை திருப்தியாக பார்த்து விட்டு,

“சரி அண்ணி.. நான் என் வீட்டுகாரர்கிட்ட போறேன். இல்லாட்டி என்னை காணோம்ன்னு திட்டுவாரு!” என நாசுக்காக விலகி கொள்ள, இங்கே ரஞ்சிதாமோ வெடிக்க தயாராகும் வெடியை போல் டியூனாகி போனாள்.

பல பேரின் வாய்களுக்கு அவலாகி கொண்டிருந்த பவானி மற்றும் வம்சிக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இருவரும் இன்முகமாக வாழ்த்தி பரிசு கொடுத்தவர்களிடம் நன்றி கூறி போட்டோ எடுத்து கொண்டிருக்க, பவானியை கூரை புடவையை மாற்ற அழைத்தார்கள்.

அவர்கள் வழக்கப்படி தாலி கட்டிய பின்பு தான் பட்டு புடவை கட்ட வேண்டும். பவானி புடவை மாற்ற சென்ற சமயம், அவள் கல்லூரி தோழி கீர்த்தனா வர, நேராக மணமகள் அறைக்கே சென்று விட்டாள்.

பியூட்டி பார்லர் பெண்கள் மட்டுமே இருந்ததால் தோழியை வந்து கட்டி கொண்ட கீர்த்தனா, “பாவி பாவி ஒரு வார்த்தை சொன்னியாடி…!” என ஜாலியாக கன்னத்தை கிள்ள பவானிக்கு வெட்கமாய் இருந்தது.

“சொல்லலாம்ன்னு தான் பார்த்தேன். ஆனா சொல்லிட்டா சர்ப்ரைஸ் போயிடும்ல?” என கண்ணடிக்க, கீர்த்தனா கேலியாக சொன்னாள்.

“ஆனா ரொம்ப லக்கிடி நீ. அவரு பின்னாடி சுத்தோ சுத்துன்னு சுத்தி கடைசில அவரையே முந்தானைல முடிஞ்சிட்டேல… முதல்ல அவருக்கு தெரியுமா?”

“ஐயோ நான் சொல்லலப்பா… அவரு தப்பா நினைச்சுட்டா என்ன பண்ணறது?” என பவானி மறுத்தாள்.

“அப்போ எல்லாமே அரேஜ்டு தானா… நீ அவரு படிச்ச காலேஜ்ல தான் படிச்சேன்னாவது சொன்னியா…?” என்றாள் கீர்த்தனா.

“ம்ம்… அதெல்லாம் சொல்லிட்டேன். பட், அவரு முன்ன மாதிரி இல்லடி!”

“முன்ன மாதிரி இல்லைன்னா எப்படி…?” என்றாள் கீர்த்தனா புரியாமல்.

“அதான்! காலேஜ் படிக்கும் போது பார்த்த பீம் கேரக்டர். பொண்ணுங்கள எல்லாம் க்ரேசியா சுத்த விட்ட கேரக்டர். அந்த சார்ம், சர்காசம்!” என அடுக்கியவள்,

“அவரு என்கிட்ட சொன்ன முதல் விஷயமே என்னைய பீம்ன்னு கூப்டாதன்னு தான் தெரியுமா… ஆளே வேற யாரோ மாதிரி இருக்காரு. பட் ஸ்டில் ஐ லைக் ஹிம் சோ மச்…!” என பவானி தோழியின் கையை பிடித்து கொண்டு சிரிக்க, பார்லர் பெண்களுக்கு அவளை பார்த்து சிரிப்பாக இருந்தது.

கட்டிய கணவன் மீதே க்ரஸ் உள்ள பெண்ணை இப்பொழுது தான் பார்க்கிறார்கள்.

“லைக் ஹிம்மா… கேர்ள்! அவரு இப்போ உன் புருஷன். புருஷனை லவ் தான் பண்ணனும். லைக் பண்ண கூடாது!” என கீர்த்தனா கலாய்க்க, பவானி அலுத்தாள்.

“அவரு இப்போ கூட ரெண்டு நிமிஷம் என்னை தொடர்ந்து பார்த்தா பேச்சு வர மாட்டேங்குதுடி. எல்லாம் பிளாங்கா மாறிடுது. எனக்கு மறுபடியும் இப்போ தான் மறுபடியும் வாழுற பீலே வருது தெரியுமா… இனி நான் பொறுமையா அவரை சைட் அடிச்சு, லவ் பண்ணி, ப்ரொபோஸ் பண்ணி, கரெக்ட் பண்ணி!” என பவானி உணர்ச்சிவசப்பட கீர்த்தனாவுக்கு தோழியை பார்த்து சிரிப்பாக இருந்தது.

பவானிக்கு நிறைய தோழிகள் இருந்தாலும் கீர்த்தனாவும் அவளும் தான் க்ளோஸ். எனினும் திருமணம் ஆன பின்பு பெண்களின் நட்பு தொடருவது அத்தனை சுலபம் இல்லையே.

கீர்த்தனாவும் திருமணம் செய்து கொண்ட பின்னால் குழந்தை குட்டி என செட்டில் ஆகி விட்டாள். பவானியோடு முன்பு போல் அடிக்கடி பேசும் வாய்ப்பும் இருந்ததில்லை. இருந்தும் அவளுக்கு திருமணம் என்றதும் உரிமையாக கிளம்பி வந்து விட்டாள்.

“மேடம இனிமேல் கைல பிடிக்க முடியாது. அன்ட் நீ பண்ணதும் நல்லது தான். கடைசி வரைக்கும் உனக்கு அவரு மேல ஒரு அபெக்சன் இருந்த விஷயத்தை அவர்கிட்ட சொல்லவே சொல்லாத!” என்று கூற பவானி புரியாமல் பார்த்தாள்.

“ஏன் அப்படி சொல்லுற… நான் பின்னாடி சொல்லலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேனே…?”

“ம்ஹும். அந்த தப்ப மட்டும் பண்ணிடாத. ஆம்பிளைங்க இருக்காங்களே… அவங்களுக்கு ஒரு பொண்ணு நம்ம மேல பைத்தியமா இருந்திருக்கான்னு தெரிஞ்சா, ஈசியா ஊறுகாய் ஆக்கிட்டு போயிடுவாங்க. அப்பறம் ரிலேஷன்ஷிப்ல இருக்க த்ரில்லே போயிடும். ஹஸ்பன்ட் அன்ட் வொயிப் உறவுல புஸ் அன்ட் புல் பேக்டர் இருக்கனும் பவா… அது மட்டும் இல்ல… அந்த உறவு ரொம்ப கசப்பாக்கிடும்!”

தோழியின் அறிவுரையை கேட்ட பவானியோ, “ஏய்… பீம் அப்படி கிடையாதுடி. உனக்கு தெரியாதா…? இப்போவே என்னோட விருப்பத்துக்கு எவ்ளோ மதிப்பு கொடுப்பாரு தெரியுமா…? எல்லாமே என்கிட்ட கேட்டுட்டு தான் பண்ணுவாரு!” என்று பெருமையாக சொல்ல, கீர்த்தனா உடனே,

“அது கடைசி வரைக்கும் நிலைக்கணும்ன்னா வாய வச்சிட்டு சும்மா இரு. நீ போய் காலேஜ் கதைய எல்லாம் சொன்ன, அவ்ளோ தாண்டா இவன்னு இளக்காரமா போயிடும். ஆம்பிளைங்க சைகாலஜியே அப்படி தாண்டி. அதுல பீம் அண்ணாவும் அடக்கம் தான்!” என்று பவானியை மொத்தமாக திசை திருப்பி விட்டாள் கீர்த்தனா.

அவள் நல்லது பண்ணுகிறேன் என்று பண்ணி வைத்த வேலையால் தான் தன் வாழ்க்கை மாற போகிறது என்று அறியாத பவானியும், இந்த விஷயத்தை வம்சியிடம் இறுதி வரை சொல்லவே கூடாது என முடிவெடுத்து விட்டாள்.