நன்பகல் பனிரெண்டு மணி.. குளித்தலை நோக்கி காரில் பறந்துக் கொண்டிருந்தான் பசுபதி. மனம் முழுவதும் சிந்தனை.. இல்லை கோவம்.
அதிகாலையில் வண்டி எடுத்தான்.. அதுவும் கோவத்தில்தான். ஆனாலும் இன்னமும் அந்த கோவத்தின் அளவு அடங்கவேயில்லை. கோவம் என்பது ஐந்து நிமிடம் இருக்கலாம்.. பத்து நிமிடம் இருக்கலாம்.. இவனால் மட்டுமே கோவத்தின் நேரத்தை நீட்டித்துக் கொண்டு.. இருக்க முடியும். வழி நெடுகிலும் தன் நண்பனை திட்டிக் கொண்டே இருந்தான்.. ‘இப்போது பேசும் இந்த அறிவு.. அப்போது எங்கே போகிற்று.. சுயநலவாதி.. திமிரெடுத்தவன்..’ என ஆனந்தினை திட்டிக் கொண்டே வந்தான். அவனை நேரடியாக திட்ட முடியவில்லை. சென்ற வாரம் இதே நாளின் அதிகாலையில், போன் செய்ததோடு சரி.. அதன்பின் அவன் போன் ஏதும் செய்யவில்லை.. ஏன் தன் அழைப்பினை கூட எடுக்கவில்லை.. அவன். பசுபதிக்கு இன்னும் கோவம்தான் வந்தது. ‘இன்நேரம் கல்யாணம் முடிந்திருக்கும்..’ என மனதில் ஓடுகிறது.
இப்போதும் தன் அலைபேசியை எடுத்து.. மீண்டும் தன் நண்பனுக்கு அழைத்தான். ஏனோ எடுக்கவில்லை அவன். மிகவும் இறுக்கத்தோடு.. வண்டியை செலுத்தினான்.
பசுபதி, விரட்டிக் கொண்டு வந்ததில் மதியம் இரண்டு மணிக்கு.. அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். காரினை பார்க் செய்து விட்டு, தன் உடலை நெட்டி முறித்துக் கொண்டு.. ரிசப்ஷன் வந்தான்.
அங்கே விசாரித்தான் “கந்தசாமி தாத்தா.. நேற்று நைட் அட்மிட் ஆனார்.. அவர் எந்த ரூம் எந்த வார்ட்.. “ என விவரம் கேட்டுக் கொண்டான்.
icu வந்து சேர்ந்தான். அங்கே இருந்த நர்ஸிடம் விவரம் சொன்னான். அவர் இப்போது பார்க்க முடியாது என்றார்.. அதனால், காத்திருக்க என அமர்ந்தான்.
அவனின் நினைவில்.. இந்த ஒருவாரமாக நண்பன் பேசியதில் பழைய நாட்கள்.. ஓடியது.
ஆனந்தன், பெற்றோரில்லை.. சொந்தமில்லை.. பணமில்லை.. இப்படி நிறைய இல்லைகளை கொண்டு, தாத்தா பேரன் என இருவர் மட்டுமேதான் இந்த இருபத்தேழு வருடமாக.
ஆனந்தனுக்கு ஒருவயது இருக்கும் போதே.. கந்தசாமியின் மகனும் மருமகளும்.. ஒரு விபத்தில் இறந்து போகினர். அதுமுதல் கந்தசாமிதான் ஆனந்தினை வளர்த்தது.
கந்தசாமியின் மகன், தொழில் செய்ய தெரியாமல்.. இருந்த நிலங்களை இழந்தார். சொந்த வீடு மட்டுமே. பெரியவர் விவசாயம் தெரிந்தவர். மகன் படிக்க தொழிலுக்கு என இருந்த சிறு நிலங்களையும் விற்றுவிட்டார்.
பேரன் ஆனந்தினை வளர்க்க சிரம்மப்பட்டார், கந்தசாமி. மகனை இழந்த துக்க.. தள்ளாமை.. என அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அத்தோடு, கௌரவம் தடுத்தது.. நிலம் வைத்து விவசாயம் செய்தவர்.. இந்த தள்ளாத வயதில் வேலைக்கு என செல்ல.. ஒருமாதிரி இருந்தது. வீட்டில் இருக்கும் நகைகளை விற்று.. பொருட்களை விற்று எனதான் பேரனை படிக்க வைத்தார்.
பசுபதி தன் பாட்டி வீட்டில் வளர்ந்தான் அப்போது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.. பசுபதியின், அன்னை கர்பமாகினார். பசுபதியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லுபவர்கள். அதனால், கவனிக்க முடியவில்லை என.. இங்கே விட்டு விட்டனர். பசுபதி பாட்டி வீடு வந்தான். பசுபதி ஆனந்தன் என இருவரும் ஒரே பள்ளி. மெட்ரிக் பள்ளி.
ஆனந்தன் சின்ன பையன். பசுபதி ஐந்தாம் வகுப்பு. ஆனந்த் மூன்றாம் வகுப்பு. ஸ்கூல் பஸ்.. ஒருமுறை, பசுபதியும் ஆனந்தும் போட்டி போட்டு பஸில் ஏறும் போது.. பசுபதியின் வேகத்தில் ஆனந்தன் கீழே விழுந்து அடி. பசுபதி அதை கவனிக்கவில்லை.. மேலே ஏறி அமர்ந்துவிட்டான்.
ஆனந்தன் விழுந்ததில்.. தன் பற்கள் உதட்டில் பட்டு காயம்.. ஆனந்தன் அழுகையோ அழுகை.. பாவம் அவரின் தாத்தா தூரமாக நின்றிருந்தவர்தான், பதறி வந்தார். ஆனந்தனை.. மற்ற பெரிய மாணவர்கள் தூக்கி.. என்ன என பார்க்க.. ஆனந்தன் அழுது கொண்டே.. “அவன்தான் தள்ளி விட்டான்..” என பசுபதியை கைகாட்டிவிட்டு, இன்னமும் பெரிதாக அழுதான்.
எல்லா பெரிய மாணவர்களும்.. “யாரு பசுபதியா” என கேட்டு அவனை பார்த்தனர்.
தாத்தா “விடுங்க ப்பா சின்ன பையனை எல்லாம் கூப்பிட்டு கேட்டுகிட்டு, வா ஆனந்த், வீட்டுக்கு போகலாம்.. நாளைக்கு ஸ்கூல்க்கு போலாம்” என சொல்லி பேரனின் கையை பற்றிக் கொண்டார்.
பசுபதி அப்போதுதான் பார்த்தான், ஆனந்தின் நிலையை.. எல்லோரும் அவனை முறைப்பதையும் உணர்ந்தவன்.. கீழே இறங்கி வந்தான்.
பஸ் ஓட்டுனருக்கு, கந்தசாமியின் நிலை தெரியும் எனவே, “பெரியவரே, இருங்க..” என சொல்லி.. ஆனந்தனின் காயத்தினை ஆராய்ந்தார்.
ஆனந்தன் பசுபதியின் பேச்சில்.. அதுவும் சாரி என சொல்லவும்.. அமைதியாகினான்.
ஓட்டுனர் “பெரியவரே, ஸ்கூலில் மருந்து வைச்சிருப்பாங்க.. அவங்களே போட்டு விடுவாங்க.. நீங்க எங்க போய் அலைவீங்க, ஆனந்த் வாய் கொப்பளித்து விட்டு வா.. வலிக்காது. pt சர்கிட்ட சொல்லி மருந்து போட்டுக்கலாம்” என்றார்.
பசுபதி “ம்.. வா ஆனந்த்..” என சொல்லி கை பிடித்தான்.
ஆனந்தன் தாத்தாவை பார்க்க.. தாத்தா “சரி போ” என சொன்னார். பசுபதி, வேகமாக ஓடினான் அருகில் உள்ள கடைக்கு.. கடையில் மிட்டாய் வாங்கி அவன் கையில் கொடுத்தான். ஆனந்தனுக்கு வலி தெரியவேயில்லை.. வலியிலும், புன்னகையும் நட்பும் மலர்ந்தது.
பசுபதி ஆனந்தனை தனது அருகே அமர்ந்திக் கொண்டான். அவனின் உதடுகளை பார்க்க பார்க்க.. ஒருமாதிரி இருந்தது. அங்கே தொடங்கியது இருவரின் நட்பும்.
ஆனந்தன் சிலநேரம் அண்ணா என்றும் பலநேரம் கௌவ்பாய் என கேவலமாகவும் அழைத்து, கொடுமை செய்ய உரிமை கொண்டவனாக மாறிவிட்டான், பசுபதிக்கு.
இப்போது பசுபதியின் அருகே சத்தம் கேட்டது..
மாலை தொடங்கும் நேரத்தில்.. ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் வந்து சேர்ந்தார், கூடவே ஒரு பெண்ணும் வந்தாள். குழந்தையென முகம்.. பெரிய கண்கள்.. பளபளவென கன்னங்கள்.. பின்னிய கூந்தல்.. மெலிதான தேகம்.. என்னமோ அவளிடமிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை அவனால். பார்த்துக் கொண்டே எதோ சிந்தனையில் இருந்தான்.. நண்பனின் ஞாபகம் விடைபெற்று.. ‘எதோ படிக்கிறாள் போல’ என புதியவளை பற்றி சிந்தனை சென்றது அவனை அறியாமலே.
அந்த பெண் இடக்கையில் பணத்தை வைத்துக் கொண்டு.. தன் தந்தை சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு நின்றாள். அவளை எங்கோ பார்த்தது போல ஒரு எண்ணம்.
பசுபதி, நிமிர்ந்து கவனமாக அவளையே பார்த்தான்.
இப்போது அவள் சென்றுவிட்டாள்.
இவன் நிமிர்ந்து அமர்ந்தான், ஆனாலும் மனதில் யோசனை.. தீரவில்லை.
அந்த பெண் வந்து விட்டாள். கையில் எதோ ரிசிப்ட். அங்கே, அவளின் அருகே ஒரு நர்ஸ் வந்தார்.. மருந்துகளை அவளிடம் காட்டி.. விவரம் சொன்னார்கள், செவிலியர்கள். தலையை ஆட்டிக் கொண்டாள், இவளும்.
அவளுடன் இருந்த.. அந்த வயதான மனிதர் காணோம் இப்போது.
அந்த பெண்ணின் உடல்மொழி அவனுக்கு எதையோ ஞாபகப்படுத்தியது. பசுபதி, யார்… என ஆழ்ந்து செல்ல தனது சிந்தனையை தூண்டினான். பள்ளி பிள்ளையென.. சீருடையில் அவளின் முகம், நிழலாக வந்து நின்றது.. பளிச்சென இப்போது.
இப்போது, இவன் பார்க்க வந்தவரை.. அப்படியே ஸ்டேச்சரில் தள்ளி கொண்டே சென்றனர். அவள் பின்னாலே சென்றாள்.
அவளையே பார்த்து சிந்தனையில் இருந்தவனுக்கு.. இப்போது, தாத்தாவை பார்த்ததும்.. நினைவு மீண்டுக் கொண்டது. அவனும் அவர்களோடு சென்றான்.
நர்ஸ், அந்த பெண்ணிடம் எதோ அறையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
வெளியேவே காத்திருந்தான் பசுபதி. நர்ஸ் வெளியே வர, தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.. “இவரை பார்க்க வந்திருக்கேன்” என்றான்.
அவரும் என்ன ஏது என விசாரித்து தாத்தா பற்றிய விவரம் சொன்னார்.
இப்போது, உள்ளே வந்தான் பசுபதி.. அந்த பெண்ணிடம் “நீங்க” என்றான் யாரென தெரிந்துக் கொள்ளும் விதமாக. அவன் மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது.. அவள்தானா இவள் என தெரிந்துக் கொள்ள கேள்வி கேட்டான்.
அந்த பெண் ஒரு நொடி அவனை பார்த்தாள், ஆராயும் விதமாக.
பசுபதிக்கு, அவள் அப்படி பார்ப்பது பிடிக்கவில்லை.. ‘என்னை என்னான்னு நினைச்சு பார்த்துட்டு இருக்கா இவ..’ என எரிச்சலானது.
இப்போது கதவின் அருகே நிழலாடியது.. இரு ஆண்கள் வந்து நின்றனர். ஒருவர் அந்த பெண்ணோடு வந்தவர், மற்றொருவர் புதிதாக இருந்தார்.
புதிதாக இருந்தவர் பசுபதியை பார்த்ததும் “வாங்க தம்பி” என்றார்.
அடுத்து அந்த பெண்ணிடம் “நல்லவேல பாப்பா.. நீ இருந்த.. நன்றி ரொம்ப நன்றி” என்றார்.
அந்த பெண் கோவமாக “எங்க போனீங்க இவரை தனியே விட்டுட்டு, உங்களுக்கு தெரிய வேண்டாமா.. நான் பார்த்தனாலே ஆச்சு இல்லைன்னா..” என சத்தம் போட்டாள்.
இப்போது வாசலில் நின்றிருந்த அந்த பெரியவர்.. “நந்தித்தா” என்றார் அதட்டலாக.
பசுபதி அவளின் அதிகார குரலிலேயே முடிவு செய்துவிட்டான்.. இப்போது இந்த பெயரை கேட்டதும் ‘நினைத்தேன்.. அவள்தான் இவள். இங்கேதான் இருக்காளா’ என தோன்றிவிட்டது.
பெண்ணவள் அமைதியானாள்.
புதியவர் “இல்ல, நந்தி பாப்பா.. எனக்கு முக்கிய வேலை.. எட்டு மணிக்கு வந்திடலாம்ன்னு நினைச்சேன்” என சொன்னார்.
நந்தித்தா “சரி விடுங்க, எனக்கு நேரமாகுது.. இந்தாங்க, இந்த மாத்திரை..” என மாத்திரைகளின் விவரம் சொன்னவள்.. பின் “பில் இதுவரைக்கும் பே பண்ணிருக்கோம்..” என விவரம் சொன்னவள், சின்ன குரலில் “பொம்முண்ணா, ஆனந்துக்கு சொல்லிட்டியா” என்றாள். அவள் கேட்டது அவரின் காதுகளுக்கே கேட்டதோ என்னமோ.. விழித்தார்.
இந்த உரையாடலில் பசுபதி ஊன்று கவனித்தான்.. மீண்டும் நந்தித்தா “ஆனந்தனுக்கு சொல்லிட்டியா” என்றாள், அழுத்தம் திருத்தமாக.
இப்போதுதான் பொம்மு “இல்ல பாப்பா..” என எதோ சொல்ல.. மீண்டும் முறைத்தாள்.
இப்போது அந்த பொம்மு “இல்ல நந்தித்தா.. போனே போகலை.. உங்க அப்பன் வேற இருக்கான்..” என்றவர்.. “சரி நான் பார்த்துக்கிறேன். ரொம்ப நன்றிங்க.. பணம் ஆனந்த் தம்பிக்கிட சொல்லி போட்டுவிட சொல்றேன்” என்றார்.
அவர் தலையசைத்தார்.
நந்தித்தா “அப்பா போலாம்.. என்னை டியூஷன் சென்டரில் விட்டுடுங்க” என பேசிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.
பசுபதிக்கு, முகம் எரிச்சலை காட்டியது.. ‘அதே ஆட்டிடியூட்’ என தன்போல எண்ணிக் கொண்டான்.
அவர்களே வெளியே சென்றதும்.
பொம்மு “தம்பி நீங்க உட்காருங்க” என்றார்.
பசுபதி அமர்ந்தான்.
பொம்மு தளர்ந்து அமர்ந்து தன் முதலாளியை பார்த்தார். முதலாளி என இல்லை.. அவரை பார்த்துக் கொள்பவர்.. ஒருவகையில் நண்பர்.. ஆனந்தன் கல்லூரிக்கு என சென்னை சென்ற பிறகு, மொம்முதான் வீட்டில் எல்லாம்.. விசுவாசி.. இப்படி பல பெயர்கள்.. பொம்மு அண்ணாவிற்கு.
கந்தசாமி, நல்ல உறக்கத்தில் இருந்தார்.. முகம் நிர்மலமாக இருந்தது.
பொம்மு அதை பார்த்து ‘தூங்குவதேயில்லை.. கவலைதான்.. பேரனை பார்க்க முடியவில்லையே என்ற கவலை.. திருமணம் எப்போது செய்துக் கொள்வான்.. என கவலை.. அதை செய்து வைத்துவிட்டு போய்விடமாட்டனா என கவலை..’ என எண்ணிக் கொண்டு அவரின் கையை வருடினார்.
சற்று நேரம் சென்று “பசுபதி, தொந்திரவு செய்திட்டனோ.. தம்பி எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க” என பேச்சினை தொடங்கினார்.
பசுபதி, பதில் சொன்னான்..
பொம்மு “ஆனந்தன் தம்பி போன் எடுக்கலை ப்பா, என்னான்னு தெரியுமா.. ஒரு வாரம் ஆச்சு பேசி.. அண்ணன் ரொம்ப கவலை படுறார்..” என்றார்.
பசுபதி என்ன சொல்லுவது, உண்மையை சொல்லுவதா வேண்டாமா என தெரியாமல்.. “நானும் ட்ரை செய்தேன்.. எனக்கும் பேச முடியலை.. வாய்ஸ் நோட் போட்டிருக்கேன்… கண்டிப்பா பேசுவான்..” என சமாதானம் செய்தான்.
பின் “பில்லிங் கேட்டுட்டு வரலாமா” என்றான்.
பொம்மு “இப்போதானே நந்தி பாப்பா கட்டிட்டு போயிருக்கு.. ஆனந்த்கிட்ட சொல்லி போட்டுக்கலாமே” என்றார்.
பொம்மு சரியென பசுபதியோடு சென்றார். விவரம் கேட்டுக் கொண்டு.. வந்தனர். பொம்முவிடம் நந்தித்தாவின் எந்த பேங்க் விவரமும் இல்லை. அமைதியாக அமர்ந்தான் பசுபதி.
கண்விழித்தார் கந்தசாமி. இருவரும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர். ஒன்றுமில்லை ஸ்ட்ரெஸ்தான் என மருத்துவர்கள் சொல்லியிருந்தனர்.
மறுநாள், டிஸ்சார்ஜ் ஆகினார். மதியம் உணவினை கடையில் வாங்கிக் கொண்டு ஆண்கள் மூவரும், வீடு வந்தனர்.
மாலையில், எழுந்து அமர்ந்திருந்தார் கந்தசாமி. பசுபதியிடம் தன் பேரனை பற்றிய விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.. பசுபதிக்கு, எல்லா விவரமும் தெரியும். ஆனாலும் ஏதும் சொல்லாமல் ‘நல்லா இருக்கான். எதோ வேலை அதனால எடுக்கலை.. பேசிடலாம்..’ என சமாதான பேச்சுகள் சென்றது.
இப்போது நந்தித்தா வந்தாள், அங்கே.
கந்தசாமி “வா மா, உனக்குத்தான் சிரமம் கொடுத்திட்டேன்” என்றார்.
நந்தித்தா “அதெல்லாம் இல்லை தாத்தா, எப்படி இருக்கீங்க.. ரொம்ப வீக்காக இருக்கீங்கன்னு டாக்டர் சொன்னார். நல்லா சாப்பிடுங்க. என்ன முகம் பிரகாசமா இருக்கு… ஆனந்த் பேசிட்டானா” என்றார்.
தாத்தா “பசுபதி டா.. ஆனந்த் பிரெண்ட்.. உனக்கு ஞாபகம் இல்லையா” என்றார்.
நந்தித்தாவின் முகம்.. யோசனை செய்வது போல மாறியது.
பசுபதி அவளையே பார்த்தான்.
நந்தித்தா “தெரியலை தாத்தா” என்றாள், கொஞ்சமும் அவனை பொருட்படுத்தாமல்.
பசுபதி “சரி தாத்தா, அந்த பெண்ணோட அக்கௌன்ட் நம்பர் கேளுங்க.. அவங்க ஹாஸ்ப்பிட்டலில் கட்டிய தொகையை கொடுத்திடுறேன்.. ஆனந்த்கிட்ட நான் வாங்கிக்கிறேன்” என்றான்.. இருவருக்கும் பொதுவாக.
நந்தித்தா, பசுபதியை முறைத்தாள்.. பட்டவர்த்தனமாக.
பசுபதி விழித்தான்.
நந்தித்தா “தாத்தா, நான் ஆனந்த்கிட்ட பேசிக்கிறேன். வாங்கிக்கிறேன்.” என்றாள் பற்களை கடித்துக் கொண்டு.
பசுபதி “ஐயோ.. உங்களுக்கு..” என எதோ சொல்ல வந்தவன், சுதாரித்து “பசங்க நாங்க.. எப்படியோ வாங்கிப்போம்..” என எதோ பேச..
நந்தித்தா எழுந்து உள்ளே சென்றாள்.. ஏதும் பேசாமல்.. பொம்மு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார்.. இரவு உணவுக்கு தயார் செய்துக் கொண்டிருந்தார்.
அவளிற்கு, கோவம்.. அதென்ன இவன் வாங்கிக் கொள்ளுவனா.. நான்தானே.. கட்டியிருக்கேன். எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்.. இவன் யாரோ.. என்னமோ.. என முனகிக் கொண்டே தக்காளியை எடுத்து கட் செய்ய தொடங்கினாள்.