தீரன் மீனாட்சியுடன் பேசிய அடுத்த நாளே அஸ்வினை அழைத்து செய்ய வேண்டிய அனைத்தையும் சொல்லி “பார்த்து அவருக்கு எந்த சந்தேகமும் வர கூடாது” என்றுவிட்டு கிளம்பிவிட,
அஸ்வினோ ‘கடைசில எல்லாத்தையும் என் தலைலயே கட்டிட்டாரே. அந்த மனுஷன் பார்வையே நம்மள ஆராய்ச்சி பண்ற மாதிரி இருக்கும்.
அன்னைக்கு முதல் நாள் பேச போனப்பையே என்ன ஏன் செலக்ட்பண்ணுனீங்க. உங்களுக்கு என்னை எப்படி தெரியும்? மதுரைல இருந்து கோயம்பத்தூர் வந்து என்கிட்ட குடுக்க காரணம் என்னனு? ஆயிரம் கேள்வி கேட்டாரு. இப்போ அவர் முன்னாடி போய் நின்னா என்னன்ன கேட்பாருன்னு தெரியலையே’என்று புலம்ப,
“அவர் என்ன கேட்டாலும் நீ சமாளிச்சுதான் ஆகணும் நண்பா” என்ற ஸ்ரீயின் குரலில் அவளை முறைத்தவன் “நீ ஏன் சொல்ல மாட்ட. உன் புருஷன் நீ சொல்றதுக்கு எல்லாம் ஆடறாருல்ல அப்படிதான் பேசுவ. ஆனா இந்த கன்னி பையன் சாபம் உங்களை சும்மா விடாது சொல்லிட்டேன்”என்க,
ஸ்ரீயோ “அட என்னப்பா நீ ஒரு பழமொழி கேள்வி பட்டது இல்ல…”
“என்ன பழமொழி…”
“அதான்ப்பா ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா. தன் புள்ளை தானா வளரும்னு….”
“அதுக்கும் நீ செய்ய சொல்ற வேலைக்கும் என்னடி சம்மந்தம்” என்று கடுப்பாக கேட்க,
அவளோ “சொல்றேன்…சொல்றேன் அவசரப்படாத தம்பி. அது மாதிரி ஊரான் குடும்பத்தை சேர்த்து வச்சா. உன் குடும்பம் தானா சேரும்”என்றவளை மேலும் கீழும் கடுப்பாக பார்த்தவன் “உங்க கருத்துக்கு நன்றி இடத்தை காலி பண்ணுங்க” என்று சொல்ல,
ஸ்ரீயோ சீரியசான குரலில் “அஷு…. சத்யா வருவாருல்ல, பாவம்டா அவ…” என்று கேட்க,
அஸ்வினும் அவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுதனத்தை கைவிட்டு “எனக்கு தெரியாதா. நான் பார்த்துக்கறேன் விடு” என்க,
ஸ்ரீயும் நிம்மதி மூச்சுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
மூவரும் பிளான் செய்தப்படி அஷ்வின் சத்யாவிற்கு போன் செய்து “ஹலோ சார். ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ப்ரியா இருந்தா பேசலாமா” என்க,
“ம்ம்ம்….” என்ற பதில் மட்டுமே சத்யாவிடம் இருந்து வந்தது.
“அது சார். என் அண்ணா கம்பெனியும் நீங்க பார்க்கனும், அப்புறம் எங்க அண்ணி ஸ்கூல் நடத்திட்டு இருக்காங்க அதையும் பார்க்கணும்”.
“ஓகே. அவ்ளோதானே பைல் எல்லாம் மெயில் பண்ணுங்க. நான் பண்ணிடறேன். பை….” என்று போனை வைக்க போக,
அஸ்வினோ “சார்…. சார்…முன்னாடி எங்க கம்பெனிய பார்த்துட்டு இருந்த ஆடிட்டர் அங்கிள் உங்ககிட்ட பேசணும்னு சொல்றாரு. சில இம்போர்ட்டண்ட் விஷயம் சொல்லணும்னு….”
“இல்ல சார் என்னால வெளிய எங்கயும் வர முடியாது. அவரை எனக்கு போன்பண்ண சொல்லுங்க. இல்லை. அவர் நம்பர் குடுங்க நான் பேசிக்கறேன்”என்று சொல்ல,
தலையில் கை வைத்த அஷ்வின் ‘நாசமா போச்சு. இந்த மனுஷன இப்போ என்ன சொல்லி நான் வர வைக்கறது’என்று புலம்பி,
“சார் ஒருமுறை நேரில் பார்த்து பேசணும்னு சொல்றாரு’ என்று என்று கெஞ்சாத குறையாக பேசி சத்யாவை மதுரை வர சம்மதிக்க வைப்பதற்குள் அஷ்வின் நாக்கு தள்ளி போனான்.
மாலை நண்பனை பார்க்க வந்த ஸ்ரீயிடம் கட்டை விரலை தூக்கி காட்டியவன் “வர்றேன்னு சொல்லிட்டாரு. ஆனா எப்போ வர சொல்றது”
ஸ்ரீ, “ம்ம்ம்…. மீனாட்சி டியூ டேட்க்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. எப்போ வேணா அவளுக்கு வலி வரலாம். சோ அவர்கிட்ட இந்த வாரம் ஓகேவான்னு கேட்டுக்கோ. மத்தது கடவுள் விட்டவழி”என்க,
அஸ்வினும் சத்யாவிடம் பேசி ஒரு நாளை முடிவு செய்து. அவன் வருகைக்கு காத்திருக்க, சத்யா மதுரை வர காரில் ஏறவும், இங்கு மீனாவிற்கு இடுப்பு வலி வரவும் சரியாக இருந்தது.
மீனாவை அழைத்து கொண்டு உடனே அனைவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.
ஸ்ரீ அஷ்வினிடம் சத்யா கிளம்பிட்டாரா கேளு”என்று பர பரப்பாக கேட்க,
அவனும் போன் செய்து கேட்டுவிட்டு, “கிளம்பிட்டாராம். எப்படியும் அவர் இங்க வர அஞ்சு மணி நேரம் ஆகும். அதுவரை குழந்தை……”
ஸ்ரீ, “வரட்டும். இப்போ நார்மல் வலிதான் வருது. குழந்தை தலை இன்னும் சுத்தி வரல வெயிட் பண்ணுவோம்”என்று கூறிவிட்டு, மீனா அருகில் போய் நின்று அவளை சமாதானப்படுத்த துவங்கினாள்.
தந்தை வந்தால்தான் பூமியை தொடுவேன் என்று வீம்பு பிடித்து குழந்தையும் வராமல் இருக்க,
தீரன் குடும்பம் மொத்தமும் வெளியே அவளுக்காக பயத்துடன் காத்திருக்க துவங்கினர்.
ஸ்ரீ வெகுநாட்கள் உண்மையை மறைக்க முடியாது என்று அனைவரிடமும் மீனாட்சிபற்றிய எல்லா உண்மையும் சொல்லிவிட, அனைவரும் அவளுக்காக வருந்தினர்.
சீனி ஒரு படி மேலே போய் தனக்கு தெரிந்த காவல் அதிகாரியிடம் பேசி சென்னப்பனை உள்ளே தூக்கி வைப்பதாக சொல்ல அவரை தடுத்து நிறுத்துவதற்குள் அனைவருக்கும் போதும் போதும் என்றாகி போனது.
மீனாட்சி தீரன் குடும்பத்தின் மகளாகி போனாள். அனைவரும் அவளை அன்பாக பார்த்து கொண்டனர்.
சத்யா ஹாஸ்பிடல் வந்தவுடன் அஷ்வினை அழைத்து தான் வந்துவிட்டதாக சொல்ல, அவன் குழந்தையும் வெளிவர தயாராகியது.
வெளியில் வந்த ஸ்ரீ “இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை பிறந்திடும். சத்யா எங்க வர்றாருனு கேளுடா” என்க,
அவனோ “வந்துட்டாரு. வெளிய நிக்கறாரு”என்றவுடன்.
அவர்கள் அருகில் வந்த தீரன் “சரி நாம எல்லாரும் பக்கத்துல இருக்க ரூம்குள்ள போயிடலாம்,
அஷு நீ போய் அவரை இங்க கூட்டிட்டு வா. மத்ததை நிதி பார்த்துப்பா. என்ன நிதி ஓகேதான” என்று ஸ்ரீயை பார்த்து கேட்க, அவளும் சம்மதமாக தலையசைத்தவுடன் அனைவரும் பக்கத்து அறைக்குள் சென்று அங்கிருந்தே காரிடாரில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தனர்.
சத்யா மாஸ்க் அணிந்து கொண்டு அஷ்வினுடன் வந்தான்.
அஷ்வின், “சாரி உங்களை இந்த நிலமைல அலையவிடறோம். தப்பா எடுத்துக்காதீங்க ரொம்ப முக்கியமான வேலை. உங்களை தவிர வேற யாரும் அதை ஹண்டில் பண்ண முடியாது. அதான்……”
சத்யா, “இல்லை சார். நீங்க என்னை பெரிய ஆளா நினைக்குறீங்க. நான் இப்போதான் சின்ன சின்ன கம்பெனிய பார்த்து வளர்ந்துட்டு இருக்கேன். என்னால முடியலைன்னா, வேற யாரவது கண்டிப்பா பார்ப்பாங்க”.
அஷ்வின்,’ம்கூம்…. உன் புள்ளைய உன்னை தவிர வேற யாருப்பா வாங்குவா’என்று மனதில் நினைத்தவன் “ஈஈஈ…..” என்று இளித்து வைத்து மேலும் “ரொம்ப நன்றி சார். நான் கூப்பிட்ட உடனே வந்ததுக்கு”என்க,
சத்யாவோ “பரவால்ல சார். நானும் சில டவுட்ஸ் கேட்க வேண்டி இருக்கு. அதை கேட்டு கிளியர் பண்ணிக்கலாம்னுதான் வந்தேன்”
“ஆனா….. ப்ரோ சாரி ஆடிட்டர் அங்கிள் வீடியோகால்லதான் பேசுவாரு. அவருக்கு உடம்பு ரொம்ப முடியல. ட்ராவல் பண்ண கூடாதுனுதான்……”என்றவன் இழுக்க,
அவனை புருவம் சுருக்கி பார்த்த சத்யா “ஆனா….. சார். நீங்க அவரு வர சொன்னதாதானே சொன்னீங்க” என்று கேட்க,
சத்யா இப்படி கேட்கவும் என்ன சொல்லி சமாளிப்பது என்று திரு திருவென விழித்தவன் பேச்சை மாற்றும் பொருட்டு “அட என்னங்க ப்ரோ சார்…. மோர்ன்னுட்டு சும்மா அஷ்வின்னே கூப்பிடுங்க” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே மீனாட்சி இருக்கும் அறை பக்கம் அவர்கள் வந்துவிட,
அஷ்வின் போன் அடிக்க சத்யா பக்கம் திரும்பியவன் “ப்ரோ ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. முக்கியமான கால் இங்கயே இருங்க இப்போ வந்திடறேன்”என்று அவன் பேச இடம் தராமல் ஓடியவனை கண்டு சத்யா புரியாமல் நின்று கொண்டிருந்த சமயம், மீனாட்சி வலி தாங்க முடியாமல் அலறிய அலறல் அவன் காதில் விழ, இதயம் அவனுக்கு ஏனோ வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
அவனையும் அறியாமல் உடல் நடுங்க நிற்க முடியாமல் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தவனுக்கு முத்து முத்தாக வியர்க்க துவங்கியது.
தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் மகன் வருவதற்கு முன்பே தந்தையை ஆட்டி வைத்துவிட்டான்.
காரணமே தெரியாமல் தவித்து போய் நின்றிருந்தவன் காதில் ‘வீல்…….’என்ற அந்த பெண்ணின் குரலோடு ஒரு குழந்தையின் குரலும் கேட்க, அதன்பின்பே நிம்மதி ஆனவன் ஓய்ந்து போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.
அதே நேரம் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த ஸ்ரீ “ஹலோ சார். கங்கிராட்ஸ் இந்தாங்க உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்”என்று சொல்லி அவன் கையில் குழந்தையை கொடுத்தவள்,
“வெயிட் பண்ணுங்க இன்னொரு குழந்தையும் எடுத்துட்டு வரேன். ட்வின் பேபி அது பொண்ணு. உங்க வைப் உங்ககிட்டதான் குழந்தைய முதல்ல கொடுக்கணும்னு சொன்னாங்க” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட,
சத்யாவோ ஒன்றும் புரியாமல் விழிக்க ஆரம்பித்தான். ஸ்ரீ பேசி முடித்த பின் பேச வந்தவனை கண்டு கொள்ளாதவள் அடுத்த குழந்தையை எடுக்க சென்றுவிட,
கையில் வீறிட்டு அழும் குழந்தையை குனிந்து பார்த்த சத்யாவின் கண்களை கண்ணீர் மறைத்தது. தொலைந்து போன தன் வாழ்க்கையை எண்ணி பெரு மூச்சுவிட்டவன் தன்னையும் அறியாமல் குழந்தை நெற்றியில் முத்தமிட்டு நிமிர,
அவன் கண்ணீர் குழந்தை நெற்றியில் பட்டு தெரித்தது. இந்த அழகான காட்சியை தன் போனில் படம் எடுத்து கொண்ட தீரன் மனம் சத்யா மனம் படும் பாட்டை அறிந்ததுவோ.
ஸ்ரீ அடுத்த குழந்தையோடு வெளியில் வந்தவள் அதையும் அவனிடம் கொடுத்து “இவங்க பொண்ணு சார்…”என்று சொல்ல,
மூவரும் அழகிய ஓவியமாக தீரன் போனில் புகைப்படமாக பதிந்தனர்.
சத்யா பேச முடியாமல் உணர்ச்சி பிளம்பாக நின்றிருக்க, அப்போதுதான் அங்கு வருவது போல் வந்த அஷ்வின் “ஹேய் வாட் ப்ரோ போன் பேசிட்டு வரதுக்குள்ள ரெண்டு பேபிக்கு அப்பா ஆகிட்டீங்க” என்று கிண்டலாக கேட்க,
ஸ்ரீ பதறியவள் போல் நடித்தாள் “அஷு இவரை உனக்கு தெரியுமா. இவரு இந்த குழந்தைங்களோட அப்பாதானே….”என்று சந்தேகம் போல் கேட்க,
அஷ்வினோ, “அட என்ன நித்தி நீ. இவர் நம்ம ஆடிட்டர் சார். என்னோட ரூம் போக இந்த வழியா வந்தோம். எனக்கு போன் வந்ததுன்னு பேச போனேன் அதுக்குள்ள.. நீ….”என்றவன்
“சாரி ப்ரோ தப்பா நினைச்சுக்கதீங்க. இவ என் பிரண்டு அண்ட் அண்ணி…”என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அங்கு வந்த தீரன்.
“குழந்தையை என்கிட்ட குடுங்க சார். சாரி கேன்டீன் போயிட்டு வரலாம்னு போனேன். அதுக்குள்ள உங்ககிட்ட குழந்தையை குடுத்துட்டாங்க.
என் மருமக புள்ளைங்கள என்கிட்ட குடுங்க”என்று குழந்தைகளை வாங்க கையை நீட்ட,
சத்யா மனம் குழந்தையை கொடுக்க வேண்டுமா என்ற கவலையில் ஆழ்ந்தது.
அவர்கள் குழந்தை கொடுத்துதான் ஆக வேண்டும் என்று மனதை தேற்றி கொண்டவன் தீரனிடம் கொடுக்கும் முன் “சார் ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா” என்று கேட்க,
தீரனோ “சொல்லுங்க….” என்க,
“என் போன்ல இவங்க ரெண்டு பேர் கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா. ப்ளீஸ்……”என்று யோசியாமல் கேட்க,
தீரனும் சம்மதம் தெரிவித்தவுடன் போனை எடுத்து கொடுத்தவன் குழந்தையை இரு கையில் தூக்கி வைத்து கொண்டு போஸ் கொடுக்க, போட்டோ அழகாக வந்தது.
அதன்பின் அஷ்வின் சத்யாவை தன் அறைக்கு அழைத்து சென்று வீடியோ காலில் ஆடிட்டரிடம் பேச வைக்க,
அவனும் தனக்குள் எழுந்த சந்தேகங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு, மனதில் எழுந்த உற்சாகத்துடன் கோயம்புத்தூர் கிளம்பிவிட்டான். அதன்பின் மதுரைக்கு வரும் வேலை அவனுக்கு இருந்தது இல்லை.
அதனால் தீரன் யார்? குழந்தைகள் யார்? ஸ்ரீ யார்? என எதுவும் அவன் தெரிந்து கொள்ளவில்லை. எதுவும் சந்தேகம் என்றால் அஷ்வின்க்கு கால் செய்து கேட்பவன் மற்றவர்களைபற்றி அறியாமல் இருப்பது, அவர்களுக்கும் நல்லதாகி போனது.
அஷ்வின் பைலை சரியாக மெயிலில் அனுப்பிவிட, அவனும் அங்கிருந்தே எல்லா வேலைகளையும் முடித்துவிடுவான்.
சத்யா யார் கம்பெனி, யார் ஸ்கூல் என்று எதுவும் தெரியாமல் அவர்களுக்கு செய்ய வேண்டிய வேலையை கரெக்ட்டாக செய்து கொண்டு இருந்தான்.
மயக்கத்தில் இருந்து கண் விழித்த மீனாவிடம் சத்யா குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை காட்ட அதை தொட்டு தொட்டு பார்த்தவள் கண்கள் கண்ணீரை வடிக்க துவங்கியது.
தீரன், “நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டேன். இனி எதுக்கும் நீ அழ கூடாது. சரியா”என்க,
அவளும் கண்ணீருடன் சரி என்று தலையாட்டியவள் “அக்கா அவரு எதாவது சொன்னாரா” என்று கேட்க,
அஷ்வினோ “அடடா…. உன் பீலிங்குக்கு அளவில்லாம போகுது மீனாட்சி. இந்தா உன் புருஷன் பீலிங்கு புல்லா போன்ல வீடியோ எடுத்துருக்கேன். நல்லா கண்ணு குளிர பாரு”என்று போனை கொடுத்தான்.
அதை வாங்கி பார்த்தவள் முகத்தில் பல நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சி தெரிந்தது.
அடுத்து ஒரு மாதம் மட்டுமே மீனா வீட்டில் இருந்தாள். யார் சொல்வதையும் காதில் வாங்கிகொள்ளாமல் அடுத்த மாதமே பள்ளிக்கு செல்ல துவங்கினாள்.
ஸ்ரீ திட்டி பார்த்து சோர்ந்தவள் முனிஷை வர வைத்து குழந்தைகளை பார்த்து கொள்ள வைத்தாள்.
பழைய நினைவுகளில் இருந்து தப்பிப்பது போல் வேலை வேலை என்று எப்போதும் பிசியாக தன்னை மாற்றி கொண்டாள் மீனா.
இரவு நேரங்களில் இரண்டு குழந்தைகளின் காலடியில் அமர்ந்து கொண்டு கணவனை எண்ணி வருந்துவாள். இப்படியே அவள் வாழ்க்கை செல்ல,
ஸ்ரீக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பேரன் பிறந்தவுடன் நந்தன் மகளுடன் அதிக நாட்கள் தங்க துவங்கினார்.
மீனா வார இறுதியில் குழந்தைகளுடன் மதுரை சென்றுவிடுவாள்.
இரண்டு வருடங்களாக இவர்களது வாழ்க்கை இப்படிதான் செல்கிறது.
கடந்த காலத்தில் மூழ்கி இருந்த மீனா தோளில் கை வைத்து நிகழ் காலத்திற்கு அழைத்து வந்த ஸ்ரீ
“என்னாச்சு மீனும்மா? இன்னும் உன் ஹஸ்பண்ட் பேசுனதையே நினைச்சுட்டு இருக்கியா? எல்லாம் சரியாகும் கவலைப்படாத. வா போகலாம்”என்க,
அவளும் பெரு மூச்சுடன் மருத்துவமனைக்குள் சென்றாள்.
உள்ளே நந்தனுக்கு ஆப்ரேசன் நடந்து கொண்டு இருந்தது. மைனர் ஆப்ரேசன் என்பதால் அனைவரும் சாதாரணமாகவே இருந்தனர்.
அப்போது அங்கு வந்த அஷ்வின் ஸ்ரீயிடம் “ஆப்ரேசன் நல்ல படியா முடிஞ்சுது. ஒன்னும் பிரச்சனை இல்லை”என்க,
ஸ்ரீக்கு அப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. பெரிய ஆப்ரேசன் இல்லை என்றாலும் அவளுக்கு மனதில் பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.
மனைவி அருகில் வந்த தீரன் அவள் கையை ஆறுதலாக பிடிக்க, அவன் தோளில் சாய்ந்து கொண்ட ஸ்ரீ அமைதியாக இருக்க,
“பயந்துட்டியா நிதி…”
“ம்ம்…. ரொம்ப”
“சரி. நீ போன வேலை என்ன ஆச்சு?”.
“ம்கூம்…. நாம எதிர் பார்த்தது மாதிரிதான் நடந்திருக்கு. அவரு மீனா மேல பயங்கர கோபமா இருக்காரு.யாரோ போல பேசிட்டு போறாருனு வரும்போது ஒரே அழுகை”.
“ம்ம்…. சரி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். இப்போ நீ போய் பையன பாரு. அவன் ரொம்ப நேரமா உன்னை காணாம தேடிட்டு இருந்தான்”என்க,
அவளோ “அப்பாவை பார்த்துட்டு போறேன்”என்றுவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டாள்.
மீனா வாழ்க்கை சரியாகுமா. தீரன், ஸ்ரீ முயற்சி வெற்றி பெருமா?… தான் கையில் வாங்கியது தன்னுடைய உயிரணுவில் உருவான உயிர்கள் என்பதை தெரிந்து கொண்டாள் சத்யா நிலை என்ன?
அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்…