“மகாராஜா இந்திரவர்மருக்கு பிறகு முடி சூட்ட பட்ட மகாராஜா நரேந்திரவர்மனாகிய நான் என் நாட்டு மக்களுக்கு என்னுடைய அனைத்து கடமைகளையும் புரிவேன். என் பெரிய தந்தை வராகசித்தரின் நல்லாசியுடனும், என் தந்தையின் வழிகாட்டுதலுடனும் என் மக்களுக்கு நல்லாட்சி புரிவேன் என்று உறுதி கூறுகிறேன். அதற்கு முதல் கட்டமாக  போரிடுதலை குறைக்க வேண்டும். அதே சமயம் இன்றில் இருந்து நம் நாட்டின் அனைத்து மக்களும் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் போர் பயிற்சி பெற வேண்டும். இது எதற்காகவென்றால் போரில் நாம் இழக்கும் உயிர்களை கண்டு என்னால் நிம்மதியாக இருக்க இயலவில்லை. போர்க்களத்தில் மடிந்து போகும் உயிர்களை எண்ணி எனக்கு வருத்தமாக உள்ளது.

அந்த ரத்த கரைகளும், உயிர் அற்ற சடலங்களும், கலவையான கூக்குரலும் என்னை பெரிதாக சிந்திக்க வைத்தது. அதனால் நாம் போர் புரிதலை குறைக்க வேண்டும். நம் நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அது நடை பெற வேண்டும் என்றால் நாம் போர் புரியாவிட்டாலும் நம் போர் திறமையை எதிரிகள் அறிய வேண்டும். அப்படி அவர்கள் அறிந்தால் தான் நம் மீது போர் தொடுக்க அச்சம் கொள்வார்கள். நம்முடைய படையை நாம் எவ்வளவு உறுதியாக்குகிறோமோ அவ்வளவு எதிரி நம்மை நெருங்க மாட்டான். இதுவே அரியணையில் அமர்ந்ததும் நான் எழுதிய முதல் சாசனமாகும்”, என்று நரேந்திரவர்மன் கூறியதும் மக்கள் அனைவரும் “மகாராஜா நரேந்திரவர்மர் வாழ்க வாழ்க, மகாராணி வான்மதி தேவி வாழ்க வாழ்க”, என்று கோஷமிட்டார்கள்.

பின் விருந்து நடை பெற்றது.

“மகளே ராமனை போன்று மணாளன் வேண்டும் என்று ஆசை கொண்டு அந்த ராமனை விட உத்தமனையே மணந்து கொண்டாயே. நீ கொடுத்து வைத்தவள் தான்”, என்றாள் அருந்ததி.

“தாங்கள் என்ன கூறுகிறீர்கள் அன்னையே?”, என்று கேட்டாள் வான்மதி. நடந்த அனைத்தையும் கூறினாள் அருந்ததி. வியப்பின் எல்லைக்கே சென்றாள் வான்மதி.


“நடந்து முடிந்து இத்தனை நாட்கள் ஆன பின்னும் நீ இதை அறிய வில்லையா வான்மதி?”, என்று கேட்டாள் அருந்ததி.

“இல்லை அன்னையே. போர் நடந்ததை அறிவேன். அந்த யுத்தத்துக்கு நான் தான் காரணம் என்பதும் நான் அறிந்ததே. செங்கல்வராயன், விசாகதத்தனுடன் இணைந்து போர் புரிய வந்ததால் இளவரசர்  தந்தையின் உதவியை நாடினார் என்பதும் நான் அறிந்தது தான். ஆனால் தாங்கள் கூறியதை நான் அறிய வில்லை அன்னையே. தாங்கள் மெய் தான் உரைக்கிறீர்களா?”, என்று பூரிப்புடன் கேட்டாள் வான்மதி.

“ஆம் வான்மதி. உன் தந்தை யுத்தம் முடிந்து வந்ததில் இருந்து இப்போது வரை மருமகனின் புகழை தான் பாடி கொண்டிருக்கிறார். அன்று நீ ராமன் போன்றவனை தான் மணந்து கொள்வேன் என்று கத்தியை கழுத்தில் வைத்து கொண்டு உரைத்தாயே? அப்போது எனக்கு உன் மீது பரிதாபம் தான் வந்தது. இது எப்படி நடக்கும் என்று எண்ணி உன்னை நினைத்து கவலை கொண்டேன் மகளே. உன் திருமணத்தின் போது இளவரசர் அனைவரின் முன்னிலையில் வாக்கு கொடுத்த போது கூட சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் மாற கூடும். அப்படி மாறும் போது என் மகள் வருத்தம் கொள்வாள் என்று எண்ணினேன்.  ஆனால் மகாராஜா இந்திரவர்மர் இளவரசரிடம்  விசாகதத்தன் மகளை மணக்க வற்புறுத்தி இருக்கிறார். இளவரசர் அதற்கு செவி சாய்க்க வில்லையாம்”

….

“அதனால் கோபம் கொண்ட இந்திரவர்மர் யுத்தத்தில் தோல்வியை தழுவுவது உறுதி. நம் நாட்டு மக்களைக் காக்க  விசாகதத்தனிடம் அமைதி தூது அனுப்ப போவதாக கூறினாராம். அது மட்டும் அல்லாமல் அவருடைய இளையராணியின் மகனை அரியணையில் ஏற்றி அந்த விசாகதத்தன் மகளை மணம் முடித்து வைக்க போகிறேன் என்றாராம். இளவரசர் அந்த பெண்ணை மணந்தால் தான் போரையும் நிறுத்த முடியும். அரியாசனமும் கிடைக்கும் என்ற நிலை வந்து விட்டது. அப்போது கூட எனக்கு அரியாசனம் வேண்டாம். போரில் என் மீது தங்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது இந்த படைத்தலைவன் பதவியும் வேண்டாம். எனக்கு என் வான்மதி தான் வேண்டும் என்று இளவரசர்  கூறி விட்டாராம். அதை கேட்டு உன் தந்தைக்கு அளவில்லாத மகிழ்ச்சி வான்மதி”

“எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது அன்னையே”, என்று கூறியவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“நீ மிகவும் கொடுத்து வைத்தவள் வான்மதி. என் மகளுக்கு இப்படி பட்ட பாக்கியம் கிடைத்திருப்பதை எண்ணி எனக்கு உள்ளமெல்லாம்  பூரிக்கிறது. எந்த பிறவியில் நீ செய்த பாக்கியமோ இந்த பிறவியில் உன்னை உயிராக என்னும் மணாளன் கிடைத்துள்ளார். இதை விட ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும்? பட்டத்து ராணியாக இருந்தாலும், பல மாளிகைகளுக்கும் விலைமதிப்பில்லாத ஆபரணங்களுக்கு சொந்த காரியாக இருந்தாலும் அதில் நிம்மதி வந்து விடுமா என்ன? ஒரு தாய் தன் மகளிடம் கூற முடியாத விஷயம் தான். ஆனாலும் உரைக்கிறேன். மகாராணியாக நான் இருந்து கொண்டு அடைந்த வருத்தங்கள் பல வான்மதி”

….

“என் துயரத்தை நீ அறிந்திருப்பாய் தான். உன் தந்தை மணந்து வரும் இளைய ராணிகளை இரு கரம் கொண்டு வரவேற்கும் துயரம் தான் இருப்பதிலே பெரும் துயரம் மகளே. என் மணாளனை மற்றொரு பெண்ணிடம் அனுப்பி வைத்து விட்டு அவருக்காக காத்திருக்கும் கொடுமை நெஞ்சை கசக்கி பிழிவதை போல வலிக்கும். அப்படி பட்டவராக இளவரசர் இல்லை. அவர் எல்லா மகாராஜாக்களிடம் இருந்தும் தனியே தெரிகிறார். இன்று நீயும் அவரும் ராஜா, ராணியாக முடி சூட்ட பட்ட போது என் கண்ணே பட்டு விட்டது வான்மதி. இருவருக்கும் அவ்வளவு பொருத்தம். உடல் பொருத்தம் மட்டும் அல்ல, மனப்பொருத்தமும் கூட. உன் மீது நேசத்தை பொழியும் அவருக்காக நீ ஒன்றே ஒன்று செய்ய வேண்டும் வான்மதி. அவருடைய அனைத்து வெற்றிகளுக்கும் நீ பக்க பலமாக இருக்க வேண்டும். இதுவே உன் அன்னையின் அறிவுரை. கேட்பாயா மகளே?”

“கேட்பேன் அன்னையே. அவருக்கு மற்றொரு கையாக தான் இருப்பேனே தவிர,  ஒரு போதும் அவருக்கு தடை கல்லாக இருக்க மாட்டேன்”

“நல்லது மகளே, அவர் உனக்காக காத்து கொண்டிருப்பார். நீ அவரை காண செல்”

“தாங்கள் விருந்துண்ணவில்லையே. தங்களுடன் சேர்ந்து உண்டு விட்டு செல்கிறேன் அன்னையே”

“வேண்டாம் வான்மதி. நீ அவருடன் தான் இருக்க வேண்டும். நான் பிறகு பசியாறி கொள்கிறேன். இப்போது பசி இல்லை. வயிறும் மனமும்  நிறைந்து இருக்கிறது. நீ போ மகளே”

“அப்படியே ஆகட்டும். மறக்காமல் உண்ணுங்கள் அன்னையே”, என்று கூறி விட்டு அவனை தேடி துள்ளி குதித்து ஓடினாள் வான்மதி. அவள் மனது பறவையை போல சிறகடித்து பறந்தது.

நேராக அவனை காண செல்லாமல் மற்றொரு அறைக்கு சென்றவள் அங்கு மாட்ட பட்டிருந்த ஓவியத்தை கையில் எடுத்து கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தாள். அந்த ஓவியத்தில் கம்பீரமாக புன்னகைத்தவாறு இருந்தான் நரேந்திரவர்மன்.

ஆணழகான அவன் மீது மையல் கொண்டாள் வான்மதி. “எனக்காக அரியாசனத்தை துறந்தீர்களா சுவாமி? தங்களின் காதல் கிடைக்க நான் என்ன தவம் புரிந்தேன்? சாதாரண புரவி வீரனாக எனக்கு அறிமுகமாகி இப்போது என் முகவரியே தாங்கள் ஆகி விட்டீர்களே? தங்களுக்காக நான் என்ன செய்தேன்? அப்பழுக்கற்ற உமது காதலுக்காக என் உயிரையே தந்தாலும் அதற்கு ஈடாகுமா? என் மனதை ஆட்சி செய்யும் நாதா, இப்போது என் மனதில் ஒரு சபதம் எடுக்கிறேன். ஒப்பற்ற காதலை என் மீது வைத்த தங்களின் கடைசி மூச்சு இருக்கும் வரை இந்த வான்மதி இந்த மண்ணில் வாழ்வாள். தாங்கள் இந்த பூவுலகில் இல்லை என்று அறிந்த அடுத்த நொடி என் வாழ்வை முடித்து கொண்டு  தங்களுடனே வந்து விடுவேன்”, என்று கண்ணீருடன் கூறியவள் அந்த ஓவியத்தில் இருந்த அவனுக்கு முத்தம் பதித்தாள்.

பின் அவனுக்கு பிடித்த மாதிரி அலங்காரங்கள் செய்து அவனை காண விரைந்தாள்.


அவர்களுடைய அரண்மனையின் மேல்மாடத்தில் வானத்து மதியை நோக்கி கொண்டே உலாவி கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்.  அவன் மனதில் அவனுடைய வாண்மதியே நிறைந்திருந்தாள்.

அப்போது “மகாராஜா, தங்களை காண அனுமதி வேண்டும்”, என்று புன்னகையுடன் கேட்டு கொண்டே அங்கு நின்றான் சுதமன்.

“சுதமன் இத்தனை நாள் இளவரசே என்று அழைத்து என்னை வெறுப்பேத்தினாய். இப்போது மகாராஜா என்கிறாய்”, என்று சலித்து கொண்டான் நரேந்திரவர்மன்.

“தாங்கள் இப்போது மகாராஜா அல்லவா?”

“அல்ல, உனக்கு எப்போதும் நான் உன் நண்பன் நரேந்திரன் தான். அவ்வாறே அழை சுதமன்”

“அப்படியே ஆகட்டும் நரேந்திரா, சரி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“என்ன செய்வது? என் தேவியின் தரிசனத்துக்காக காத்து கொண்டிருக்கிறேன்”

“மகாராணி சடங்கில் ஈடு பட்டிருக்கிறார். உன்னை காண வர சிறிது தாமதமாகலாம்”

“ஆம், நான் அறிந்தது தான். சரி நீ இன்னும் உன் வீட்டுக்கு செல்ல வில்லையா? சாந்தா தனியாக இருப்பாளே”

“அந்த கொடுமையை ஏன் கேட்கிறாய்? ஊரில் இருந்து என் மாமன் வீட்டில் இருந்து உறவினர் வந்திருக்கிறார்கள்?”

“அப்படியா? அப்படி என்றால் முன்னமே சென்றிருக்கலாம் அல்லவா?”

“ஏன் முன்னமே சென்று என் தலை உருளவா?”

“ஏனடா அவ்வாறு கூறுகிறாய்?”

“உறவினர்கள் இங்கிருந்து செல்லும் வரை என் பாடு திண்டாட்டம் தான். என் மாமன் மகள் என்னை ஓர பார்வை பார்க்கிறாள். அதை அறிந்தும் அறியாதவன் போல நடந்து கொள்கிறேன் நான். ஆனால் சாந்தாவோ அவளை ஒரு வழி செய்கிறாள். அவள் கணவனான நான் அவளுக்கு மட்டும் தான் சொந்தமாம். வேறு பெண் என்னை பார்க்க கூடாதாம் என்று சண்டை இடுகிறாள்”, என்று புன்னகையுடன்  கூறினான் சுதமன்.